09 செப்டம்பர், 2016

இரண்டாவது மனைவியின் மகனுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்குமா?

ரே மாதிரியான பிரச்சினைகளுக்கு வெவ்வேறு நீதிபதிகள் வெவ்வேறான தீர்ப்புகளை சொல்வதுண்டு. நீதிபதிகளின் தனிப்பட்ட நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த தீர்ப்புகளில் எதிரொலிக்கும். அத்தகைய உதாரணம் ஒன்றை பார்ப்போம்.

தூத்துக்குடியைச் சேர்ந்த மலையப்பன் என்பவர் காவல்துறை துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 08.04.2008 அன்று ஒரு விபத்தில் மரணம் அடைந்தார். இவருக்கு இரண்டு மனைவிகளும், இரண்டாம் மனைவி மூலம் பிறந்த ஒரு மகனும், இரு மகள்களும் இருந்தனர். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால், அவரது சம்மதத்துடன் அவரது சகோதரியையை திருமணம் செய்திருந்தார்.

தற்போது குடும்பச்சுமையை சுமக்க வேண்டிய நிலையில் இரண்டாவது மனைவி மூலம் பிறந்த மகன் முத்துராஜ், காவல்துறையில் தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது தந்தை செய்து கொண்ட இரண்டாவது திருமணம் “செல்லாத் திருமணம்” ஆகும் என்பதால் இந்த திருமணம் மூலம் பிறந்த மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க முடியாது என்று காவல்துறை தெரிவித்தது.

இதையடுத்து தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி முத்துராஜ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு (W.P. (MD) No.3502/2011) தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்து திருமணச் சட்டத்தின் படி சட்டமுறையில் நடைபெறாத திருமணம் மூலம் பிறந்த வாரிசுகளுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு உள்ளது. இதன் அடிப்படையில் தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது.

ஆனால் அரசுத்தரப்பில் இந்த வாதம் மறுக்கப்பட்டது. சில மதங்கள் பல தார திருமணத்தை அனுமதித்தாலும் கூட தமிழ்நாடு அரசு “ஒருவருக்கு ஒரு வாழ்க்கைத்துணை” என்ற கோட்பாட்டை அரசின் கொள்கை முடிவாக அறிவித்துள்ளது. தவிர்க்க இயலாத சூழ்நிலையில் இரண்டாம் திருமணம் செய்யும் நபர்கள் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். மேலும் கருணை அடிப்படையிலான வேலை என்பதை சொத்தாக கருத முடியாது. எனவே இந்த மனுதாரருக்கு கருணை அடிப்படையில் காவல்துறையில் பணி வழங்க முடியாது என்று அரசுத் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா கடந்த 27.04.2016 அன்று அரசுத் தரப்பு வாதங்களை அங்கீகரித்து வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

***

சென்னையைச் சேர்ந்த சுரேஷ் பாபு என்பவர் அவரது தந்தையாரின் இரண்டாவது மனைவி மூலம் பிறந்த மகனாவார். சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய அவரது தந்தையார் இறந்துவிடவே தமக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று அவர் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தார். சுரேஷ் பாபுவிற்கு சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தில் பணி வழங்குவதில் தங்களுக்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று அவரது தந்தையாரின் முதல் மனைவி மூலம் பிறந்த வாரிசுகளும் ஒப்புதல் கடிதம் அளித்திருந்தனர். ஆனால் இரண்டாம் மனைவி மூலம் பிறந்த வாரிசுக்கு பணி வழங்க முடியாது என்று சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

இதையடுத்து சுரேஷ்பாபு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு (W.P.9010/2013) தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு, மனுதாரரின் தந்தை காலமான நிலையில் அவரது முதல் மனைவியோ, அவரது வாரிசுகளோ உரிமை கோராத நிலையில் மனுதாரருக்கு பணி வழங்குவதில் பிரச்சினை இல்லை. எனவே மனுதாரர் சுரேஷ்பாபுவுக்கு சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் பொருத்தமான வேலை வழங்க வேண்டும் என்று 07.02.2014 அன்று தீர்ப்பளித்தார். ஆனால் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் இந்த தீர்ப்பை கண்டுகொள்ளவில்லை. எனவே மனுதாரர் சுரேஷ்பாபு, சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் சார்பில் சீராய்வு மனு (Review Application No.105 of 2015) பதிவு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு, தாம் முன்னர் அளித்த தீர்ப்பை உறுதி செய்து சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை (W.A. No.1764/2015) சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் பதிவு செய்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ் மற்றும் எம். வி. முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 18.07.2016 அன்று தீர்ப்பளித்தது.

தந்தையை இழந்த சுரேஷ்பாபு அவரது தாயாரையும் மற்ற குடும்பத்தினரையும் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளார். குடும்பத்தலைவரை இழந்துள்ள குடும்ப உறுப்பினர்களை பராமரிக்கும் நோக்கத்தில்தான் கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இந்தப் பணி வழங்கப்படும் நபர் இறந்தவரின் சட்டப்பூர்வமான மகன்தானா என்பதைவிட, அவருக்கு பணி வழங்கப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்திற்கு மறுவாழ்வு கிடைக்குமா என்பதை பரிசீலிப்பதே முக்கியம்.

இந்த வழக்கில் மனுதாரர் சுரேஷ்பாபுவிற்கு பணி வழங்குவதில் அவரது தந்தையாரின் முதல் மனைவிக்கோ, அவரது வாரிசுகளுக்கோ தடை ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுரேஷ்பாபுவுக்கு பணி வழங்குவதில் சிக்கல் ஏதுமில்லை. இந்த முடிவிற்கு ஆதரவாக பல்வேறு முன்மாதிரி தீர்ப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் உள்ளன. எனவே சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.


தந்தையை இழந்த சுரேஷ்பாபுவிற்கு சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் பணி வழங்க வேண்டும் என்று நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. 


***

றத்தாழ ஒரே மாதிரியான பிரச்சினையில் ஒரே நீதிமன்றத்தைச் சேர்ந்த இரு நீதிபதிகள் வெவ்வேறான முரண்பட்ட நிலைப்பாட்டை எடுப்பது சட்டத்துறை சாராதவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம். சட்டக் கோட்பாடுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பார்வை அவர்கள் சார்ந்த சமூகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலிருந்தே உருவாகிறது. எனவே இதுபோன்ற முரண்பட்ட பார்வைகள் ஏற்படுவது மிகவும் இயல்பான அம்சமே!

அதேபோல நாட்டில் உள்ள அனைத்துச் சட்டங்களையும், பல்வேறு நீதிமன்றங்கள் வழங்கும் அனைத்து முன்மாதிரி தீர்ப்புகளையும் உடனுக்குடன் படித்து தெரிந்து வைத்துக்கொள்வது நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் சாத்தியமல்ல. வழக்குத் தொடுப்பவரின் வழக்கறிஞர் குறிப்பிட்ட வழக்குப் பிரச்சினை குறித்து செய்யும் ஆய்வுகளும், மேற்கோள் காட்டும் முன்மாதிரி தீர்ப்புகளுமே சரியான தீர்ப்பை வழங்குவதற்கு நீதிபதிக்கு உதவி செய்யும்.


இந்நிலையில் முதலில் பார்த்த வழக்கு, மேல்முறையீடு செய்யப்படும்போது உரியமுறையில் சரியான முன்மாதிரித் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிடும்போது நல்ல தீர்ப்பு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. 

பந்த் நேர பயணத்தில் கண்ணை இழந்தவருக்கு 10 இலட்ச ரூபாய் இழப்பீடு – 15 ஆண்டுகளுக்கு பின்னர்...

கோவையில் வசிக்கும் எஸ். கிருஷ்ணசாமி மதுரையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். வார இறுதியான சனிக்கிழமை இரவு கோவை சென்று குடும்பத்தோடு தங்கிவிட்டு திங்கள்கிழமை அதிகாலை மதுரைக்கு திரும்பிச் செல்வதை வழக்கமாக்கி வைத்திருந்தார்.

கடந்த 30-06-2001 சனிக்கிழமை அன்று இரவு கிருஷ்ணசாமி வழக்கம்போல சொந்த ஊரான கோவைக்கு சென்றுவிட்டார். 2ம் தேதி திங்கட் கிழமை காலையில் அவர் பணியில் இருக்க வேண்டும். எனவே 01-07-2001 அன்று இரவு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.இதற்கிடையில் திமுக தலைவர் மு.கருணாநிதி  கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து 02-07-2001 அன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அரசுத் தரப்பிலோ குறிப்பிட்ட நாளில் பேருந்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் தடையின்றி இயக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இது பரவலாக செய்தி ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.

கோவை பேருந்து நிலையத்திற்கு 01-07-2001 அன்று மாலை 6 மணியளவில் வந்து சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, திமுக அழைப்பு விடுத்துள்ள போராட்டத்தால் பயணம் பாதிக்கப்படுமா என்று அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “பயப்பட தேவையில்லை” என்ற பதில் கிடைத்துள்ளது. இதையடுத்து பேருந்து ஓட்டுனரின் இருக்கைக்கு பின்புறமுள்ள இருக்கையில் அமர்ந்து பயணத்தை துவக்கினார் கிருஷ்ணசாமி. அவர் திட்டமிட்டபடி பயணம் நிறைவடைந்திருந்தால் நள்ளிரவு 12 மணியளவில் மதுரையில் உள்ள அவரது அறைக்கு சென்றிருப்பார்.

ஆனால் மதுரைக்கு செல்லும் வழியில் உள்ள பரவை என்ற இடத்தை பேருந்து கடந்தபோது ஒரு கல் பறந்து வந்து அவரது முகத்தை கடுமையாக தாக்கியது. இதில் கிருஷ்ணசாமியின் இடது கண் கோளம் முழுமையாக வெளியே வந்து விழுந்தது. மேலும் முகத்தில் சில எலும்புகள் முறிவடைந்தன. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கிருஷ்ணசாமியின் இடது கண் அடுத்த நாள் அதாவது 02-07-2001 அன்று அகற்றி எடுக்கப்பட்டது. மேலும் முகத்தில் ஏற்பட்ட பல்வேறு எலும்பு முறிவுக் காயங்களுக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது.

வயதான பாட்டி மற்றும் கணவரை இழந்த தாய், மனைவி,  இரு குழந்தைகள் ஆகியோருக்கான ஒரே ஆதாரமாக விளங்கிய கிருஷ்ணசாமி 44 வயதிலேயே முடங்கிப் போனார். தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவரால் தொடர்ந்து வழக்கம் போல பணியாற்ற முடியவில்லை. மருத்துவ செலவுகளும் சமாளிக்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய நிவாரணமாக 25 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு (W.P. No.40800/2002) தொடர்ந்தார்.

திமுக முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாலும், மாநிலத்தில் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்படும் என்று அரசு உறுதி அளித்திருந்தது. மேலும் அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகளும் பாதுகாப்பான பயணத்திற்கு உறுதி அளித்திருந்தனர். ஆனால் அரசுதனது கடமையை – பொறுப்பை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது. இதன் காரணமாகவே தாம் ஒரு கண்ணை இழந்துவிட்டதாகவும், மருத்துவ செலவுகளுக்காக சுமார் 5 லட்ச ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும், ஆதரவற்ற பாட்டி, தாய் ஆகியோருடன் மனைவி மற்றும் இரு குழந்தைகளை பராமரிக்க வேண்டிய நிலையில் அன்றாட வேலைகளைக்கூட சுயமாக செய்யும் நிலையில் தாம் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய கிருஷ்ணசாமி தனக்கான இழப்பீடாக 25 லட்ச ரூபாயை  எதிர்மனுதாரர்களான தமிழ்நாடு அரசும், அரசுப் போக்குவரத்துக் கழகமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஆனால் தமிழ்நாடு அரசின் உள்துறை மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் பயணிகளின் சொந்தப் பொறுப்பிலேயே பயணம் மேற்கொள்ளப்பட்டது என்று கூறினார். பயணத்தின் இடையே பிரச்சினைகளோ, விரும்பத்தகாத நிகழ்வுகளோ ஏற்பட்டால் அதன் விளைவுகளை பயணிகளே சந்திக்க வேண்டும் என்று கூறப்பட்டதாகவும், பாதுகாப்பற்ற பயணத்தை பயணிகளே தேர்வு செய்ததாகவும் குறிப்பிட்டார். போக்குவரத்துக் கழகம் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர், பயணிகளின் வேண்டுகோள் காரணமாகவே பேருந்து இயக்கப்பட்டதாகவும், எதிர்பாராத சம்பவத்திற்கான இழப்பீட்டை போக்குவரத்துக் கழகம் ஏற்க முடியாது என்றும் வாதிட்டார். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் (பல்வேறு நீதிபதிகள்) கேட்ட பின்னர் கடந்த 02.08.2016 அன்று நீதிபதி எம். சத்யநாராயணன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த தீர்ப்பில், வழக்கிற்கு மூலகாரணமான கல்லெறிதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள் என்று கருதப்படும் இருவர் மீது சமயநல்லூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு (எண்:159/2001) தொடரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏதோ காரணங்களுக்காக இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

பந்த் நாளன்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என்று அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகள் உரியமுறையில் நிறைவேற்றப்படும் என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதை நம்பி பேருந்துப் பயணம் மேற்கொண்ட மனுதாரர், கல்லெறிதல் சம்பவத்தில் கொடுங்காயம் அடைந்ததுடன், ஒரு கண்ணையும் இழந்துள்ளார். தாடை எலும்புகள் உடைந்து பல்வறு மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆட்பட்டுள்ளார். இதன் காரணமாக உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் பெரும் இழப்பை சந்தித்துள்ளார். இந்நிலையில் தமக்கும், குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் 25 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். அவரது கோரிக்கையை பரிசீலித்த இந்த நீதிமன்றம் அவருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தமிழ்நாடு அரசின் உள்துறைக்கு உத்தரவிடுகிறது. இந்த வழக்கு தொடரப்பட்ட நாளிலிருந்து 7.5 சதவீத வட்டியோடு கூடிய இழப்பீட்டுத் தொகையை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். மேலும் இழப்பீடு தேவைப்பட்டால் உரிய உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுவதற்கு மனுதாரருக்கு உள்ள உரிமை இந்த தீர்ப்பால் பாதிக்கப்படாது.

இந்த வரவேற்கத் தக்க தீர்ப்பின் வரவேற்க இயலாத ஒரு அம்சம், இந்த வழக்கு நிறைவடைய எடுத்துக்கொண்ட கால அவகாசம்! வழக்கு தொடர்ந்து சுமார் 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 15 ஆண்டுகளை திரு. கிருஷ்ணசாமியின் குடும்பத்தினர் எவ்வாறு கடந்தனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த துயர அனுபவங்களாக இருக்கலாம்.