23 மே, 2008

மக்கள் பார்வையில் செய்தி ஊடகங்கள் – ஒரு சிறப்புப்பார்வை

இலங்கையைச் சேர்ந்த துஷாரா பீரிஸ் என்ற இயக்குனரின் “பிரபாகரன்” என்ற திரைப்படம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியது நினைவிருக்கலாம். சிங்கள இனவெறி அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ‘பிரபாகரன்’ என்ற பெயருடைய தமிழ்ச் சிறுவன் விடுதலைப்புலிகளிடம் சிக்கி, அவனுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும்கூட கட்டாயத்தின் பேரில் ஆயுதமேந்துவதாக கதை செல்கிறது. சராசரி வாழ்வில் ஈடுபடவிரும்பும் தமிழ் இளைஞர்களுக்கு இலங்கை அரசு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்குவதைப் போலவும், அதை விடுதலைப்புலிகள் தடுத்து அவர்களை ஆயுதப்போராட்டத்தில் திணிப்பதுபோலவும் ஒரு போலித்தோற்றத்தை ஏற்படுத்துவதே இந்த திரைப்படத்தின் நோக்கம். சிங்கள மொழிப்படத்தை தமிழாக்கம் செய்ய இப்படத்தின் இயக்குனர் சென்னை வந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து செய்திகள் வந்துவிட்டன.
.
ஆனால் விடுதலைப்புலிகள் மீதான உளவியல் போரின் ஒரு அம்சமாக இலங்கை அரசு மேற்கொண்ட மற்றொரு முயற்சி அதிக அளவில் கவனிக்கப்படவில்லை. இலங்கை அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் கடந்த 2007 டிசம்பரில் LTTE in the Eyes of Tamil Nadu என்ற நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சுமார் 250 பக்கங்களை கொண்ட இந்த நூல் மிகவும் தரம் உயர்ந்த தாளில் பல வண்ண புகைப்படங்களுடன் மிகவும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ளது.
.
தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் “தி ஹிந்து”, “இந்தியன் எக்ஸ்பிரஸ்”, “டெக்கான் கிரானிக்கிள்”, “நியூஸ் டுடே”, “பிரண்ட்லைன்”, “தினத்தந்தி”, “தினமலர்”, “தினமணி”, “தினகரன்”, “மக்கள் குரல்”, “மாலைமலர்”, “மாலைச்சுடர்” போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த தலையங்கங்கள் மற்றும் செய்திகளைத் தொகுத்து இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
.
இந்த நூலின் முன்னுரை மட்டுமே இலங்கை அரசால் எழுதப்பட்டுள்ளது. ஒரே பக்கத்தில் உள்ள இந்த முன்னுரையில், இலங்கையின் வடபகுதியில் சிங்கள மற்றும் இஸ்லாமிய மக்களை விடுதலைப்புலிகள் இனப்படுகொலை செய்வதாகவும், இலங்கையில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பல்வேறு மனித உரிமை மீறல்களில் புலிகள் ஈடுபடுவதாகவும் மேற்கண்ட பத்திரிகைச்செய்திகளின் அடிப்படையில், அந்நூலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
.
இலங்கை அரசின் சொந்த சரக்கு இந்த ஒரு பக்க முன்னுரை மட்டுமே. இதைத்தவிர மீதமுள்ள சுமார் 250 பக்கமும் தமிழகத்தில் உள்ள பத்திரிகையாளர்களின் கைகளைக் கொண்டே விடுதலைப்புலிகளின் கண்களைக் குத்துவதற்கு இலங்கை அரசு முயன்றுள்ளது.
.
மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த நூலின் முதல் பகுதியில் செய்தித்தாள்களின் தலையங்கங்கள் இடம் பெற்றுள்ளன. “லங்கா ரத்னா” விருது பெற்றவர் நடத்தும் “தி ஹிந்து”, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உரையை விமர்சிக்கும் போக்கில் இலங்கையில் பிரபாகரனும் அவரது படையினரும் மட்டுமே ஆயுதம் தாங்கி இருப்பதுபோல் ஒரு காட்சியை தீட்ட முயற்சிக்கிறது. இந்த ஆயுதங்கள் தமிழ்நாட்டிலும் பிரசினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று மற்றொரு தலையங்கம் எச்சரிக்கிறது. ஏறத்தாழ இதே தொனியில் “இந்தியன் எக்ஸ்பிரஸ்”, “டெக்கான் கிரானிக்கிள்”, “நியூஸ் டுடே”, “தினமணி” முதலிய ஏடுகளும் தலையங்கம் தீ்ட்டியுள்ளன.
.
அடுத்தப் பகுதியில் ஆங்கில ஏடுகளில் வெளியான, விடுதலைப்புலிகளுக்கு எதிரான செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என குற்றம் சாட்டப்பட்டோர் கைது செய்யப்பட்ட செய்திகளும், ‘ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை காங்கிரஸ் மன்னிக்காது’ என்பது போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களின் “வீர” வசனங்களும் இடம் பெற்றுள்ளன (தற்போது, ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்காவும், ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நளினியும் சந்தித்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள காமராஜர் ஆட்சி “கனவா”ன்கள் என்ன பேசுவார்கள் என்பது சுவாரஸ்யமான புதிர்!).
.
இடையில் தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகள் கடத்தியதாகவும், பின் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் செய்திகள் இடம் பெற்றுள்ளன. விடுவிக்கப்பட்ட மீனவர்களில் ஒருவரைத்தவிர மற்றவர்கள் யாரும் செய்தியாளர்களிடம் பேசுவதற்கு ஏனோ அனுமதிக்கப்படவில்லை என்பது மட்டும் இந்தச் செய்திகளில் இடம் பெறவில்லை. அந்த மீனவர்கள் கடத்தல் சம்பவம் குறித்து எப்போது, யாரிடம், என்ன பேசினாலும் கைது செய்யப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டு வாயடைக்கப்பட்டதும் இடம்பெறவில்லை.
.
இறுதிப்பகுதியாக, தமிழ் ஏடுகளில் வெளியான செய்திகள் பகுதியும் இவ்வாறாகவே தொகுக்கப்பட்டுள்ளது. இதில் பார்ப்பன பத்திரிகைகள் மட்டுமே அவ்வாறு செய்தி வெளியிட்டது என்ற பாகுபாடில்லாமல் பார்ப்பனர் அல்லாதவர்கள் நடத்தும் பத்திரிகைகளும்கூட இவ்வாறே செய்தி வெளியிட்டுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்புவரை திமுகவின் தீவிர எதிர்ப்பு நிலையிலிருந்த “தினத்தந்தி”, அரசுக்கு இணக்கமான நிலை என்ற அதன் வழக்கமான நிலையில் நின்று, தமிழக மீனவர்கள் கடத்தப்பட்டச் செய்திகளில்கூட சிரித்த முகத்துடன் கூடிய முதலமைச்சரின் புகைப்படத்துடன் செய்திகளை வெளியிட்டுள்ளது.
.
முற்றுப்புள்ளி எங்கே வரவேண்டும்; கால்புள்ளி எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதுகூட தெரியாத தமிழ் பத்திரிகையான “தினமலர்”, வழக்கம் போல செய்தி என்ற பெயரில் கருத்துத்திணிப்பை மேற்கொண்டுள்ளது. ‘நடுநிலை’ப் பத்திரிகையான தினமணியும், தலையங்கத்தில் மட்டுமல்லாது, செய்திகளிலும் இதே பாணியை தொடர்ந்துள்ளது.
.
தமிழ் ஊடக உலகில், விடுதலைப்புலி எதிர்ப்பாளர்களின் பிதாமகனாகிய ‘சோ”வின் “துக்ளக்” இதழில் வெளிவந்த செய்திகள் இந்த வெளியீட்டில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த முரண் ஆகும்.
.
LTTE in the Eyes of Tamil Nadu என்ற இந்தப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்துச் செய்திகளும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான செய்திகளே என்பதை தனியாகக் கூறத் தேவையில்லை.இலங்கை அரசால் தமிழர்களும், தமிழக மீனவர்களும் தாக்கப்பட்ட - கொல்லப்பட்ட சம்பவங்களும் தமிழகத்தின் செய்தித்தாள்களில் இடம் பெறவேயில்லை என்று கூறமுடியாது.
.
ஆனால் அந்தச் செய்திகள் வெளியான விதத்தைக் கூர்ந்து கவனித்தால், கடந்த சில காலமாக இலங்கைப் பிரச்சினை குறித்து வெளியாகும் செய்திகளில் பல புதிய பரிமாணங்கள் இருப்பது தெளிவாகும். குறிப்பாக, தமிழர்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானால் உடனடியாக அந்தச்செய்தி குறித்த இலங்கை அரசின் மறுப்பு அல்லது எதிரொலியும் வெளியாகிறது.
.
எடுத்துக்காட்டாக, செஞ்சோலைப் படுகொலை உட்பட பல நிகழ்வுகளில் தமிழர்கள் தாக்கப்பட்ட, கொல்லப்பட்ட செய்திகள் வெளியான உடனேயே, அந்தச் செய்திகள் குறித்த இலங்கை அரசின் கருத்தும் வெளியாகி வருகின்றன. செஞ்சோலையில் தமிழ் மாணவர்கள் தங்கியிருந்த பள்ளி வளாகத்தில் இலங்கை அரசால் குண்டுவீசி கொல்லப்பட்டனர் என்று செய்தி வெளியானால், இலங்கை அரசுத்தரப்பில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ராணுவப்பயிற்சி மேற்கொண்டிருந்த குழந்தைப்போராளிகள் என்ற வாதமும் உடனடியாக வலிந்து பரப்பப்படுகிறது.
.
எந்த ஒரு செய்திக்கும் இரண்டு பக்கங்கள் உண்டென்பதையும், அந்த இரண்டு பக்கங்களையும் எடுத்துக்கூறுவதே செய்தி ஊடகங்களின் நடுநிலையைக் கூறும் அளவுகோல் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த “நடுநிலை” எந்த அளவுக்கு, எந்தெந்த விவகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது; எந்தெந்த விவகாரங்களில் நடுநிலை தவிர்க்கப்படுகிறது என்று கூர்ந்து பார்த்தால் பல விவரங்கள் வெளிவரும்.
.
குறிப்பாக சென்னையில் இலங்கையின் துணைத்தூதராக “பச்சைத்தமிழர்” திருவாளர். அம்சா அவர்கள் பொறுப்பேற்ற பின்பே இலங்கை அரசுத்தரப்பு வாதங்கள் தமிழ்நாட்டு ஊடகங்களில் மிகப்பரவலாக இடம்பெறுகின்றன.

இவர் சென்னையில் உள்ள துணைத்தூதர் அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தது முதல், இலங்கை அரசின் சார்பில் தமிழகத்தில் செய்தியாளர்கள் சந்திப்புகள் நடைபெறுகிறது. செய்தியாளர்கள் சந்திப்புக்கே உரிய “அனைத்து” அம்சங்களுடன் இவை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
.
இந்த சந்திப்புகளில் இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்துவதாக கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து இலங்கை அரசுத்தரப்பு வாதங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக எடுத்துவைக்கப்படுகின்றன.
.
தமிழ்ப்போராளிகள் தரப்பு செய்திகளை வெளியிடும் தமிழக செய்தியாளர்களின் உரிமையை இலங்கை அரசு மிகவும் மதிப்பதாகவும், ஆனால் நடுநிலையான தமிழக செய்தியாளர்கள் இலங்கை அரசுத்தரப்பு வாதங்களையும் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
.
இத்தகைய செய்தியாளர்கள் சந்திப்புகளில் அறிமுகமாகும் செய்தியாளர்களிடம் பின்னர் தனிப்பட்ட முறையிலும் உறவு பேணப்படுகிறது. இதைத்தொடர்ந்து இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகள் சற்றுக்கூடுதலாகவே தமிழ்நாட்டு ஊடகங்களில் இடம் பெறுகி்ன்றன.
இவ்வாறு வெளியான செய்திகள்தான் LTTE IN THE EYES OF TAMILNADU என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.
.
தமிழர்கள் விரலை எடுத்து தமிழரின் கண்ணையே குத்துவது போன்ற இந்த செயலுக்கு துணைபோவதை எத்தனை தமிழ்ச்செய்தியாளர்கள் உணர்ந்துள்ளனர் என்பது கேள்விக்குறியே.
.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்து மட்டுமே தமிழக ஊடகங்களிலும், தமிழக மக்களிடமும் நிலவுவதாக ஒரு தவறான கருத்தைத் திட்டமிட்டு பரப்ப இலங்கை அரசின் இந்த வெளியீடு மிகவும் உதவும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
.
உளவியல் ரீதியான இந்த யுத்த தந்திரம், ராஜதந்திரம் என்ற பெயரில் உலகில் உள்ள அனைத்து அரசுகளும் மேற்கொள்ளும் ஒரு வழக்கமான உத்திதான்.
இதன் மூலம் அரசு அமைப்புகள் அனைத்தும் மக்களுக்கு நலம் பயக்கும் விதத்தில் மட்டுமே செயல்படுவது போலவும், விடுதலைப்புலிகள் போன்ற போராளிகள் மட்டுமே மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது போலவும் ஒரு தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது.
.
இலங்கை அரசுக்கு எதிரான செய்திகளின்போது, அரசுத்தரப்பின் விளக்கத்தையும் வெளியி்ட்டு “நடுநிலை” பேணும் ஊடகங்கள், விடுதலைப்புலிகளுக்கு எதிரான செய்தி வெளியிடும்போது இந்த ‘நடுநிலை’ குறித்து கவலை கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.
பொது மக்களின் உளவியலில் மிக அதிகமான ஆதிக்கம் செலுத்தும் மீடியா உலகத்தினர், இதுபோன்ற விவகாரங்களை கையாளும்போது மிகவும் கவனமாக கையாளவேண்டும். ஏனெனில் இதுபோன்ற அரசு சார்பு செய்திகளை வெளியிடும்போது, அரசு சார்பு ஆயுதப் படையினர் ஈடுபடும் அராஜக செயல்பாடுகளும், மனித உரிமை மீறல்களும் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. அரசு அமைப்புகளும், அரசின் ஆயுதப்படையும் சட்டப்படியும், நியாயப்படியும் நடப்பதுபோன்ற பாவனைகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன.
.
நடுநிலை என்ற பெயரில் தவறான அல்லது அதற்கு எந்த விதத்திலும் குறைவில்லாத மிகைப்படுத்தப்பட்ட அல்லது அரைகுறையான தகவலை செய்தியாக வெளியிடுவது எந்த வகையிலும் பத்திரிகை தர்மத்தில் அடஙகாது என்பதை செய்தியாளர்கள் உணர வேண்டும்.
*************
இவ்வாறு நடுநிலை தவறிய செய்திகளும், தவறான புரிதலில் / கண்ணோட்டத்தில் வெளியாகும் செய்திகளும் இலங்கை தொடர்பான செய்திகளி்ல் மட்டுமே வெளியாவதில்லை.
.
உள்ளூர் செய்திகள் முதல் உலகச்செய்திகள்வரை அனைத்து செய்திகளும் இவ்வாறு பழுதுபட்ட அல்லது அரைகுறைப் பார்வைகளுடன்தான் வெளியாகின்றன. இதில் காட்சி ஊடகமான தொலைக்காட்சியும், அச்சு ஊடகமான பத்திரிகை உலகமும் போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுவதாகவே கூறலாம்.
.
தொலைக்காட்சி ஊடகம் என்பது காட்சி வழியே செய்தியை உணர்த்தும் மிக நவீன வடிவமாகும். ஆனால் இந்த வடிவம் “செய்தி” என்ற கருத்தின் உள்ளடக்கத்தையே மாற்றிவிட்டது. காட்சிகளுடன் வரும் தகவல்களே தொலைக்காட்சி ஊடகத்தின் செய்திகளாக உருவாக்கப்படுகின்றன. கருத்தியல் ரீதியான அம்சங்கள், அவை எவ்வளவு முக்கிய அம்சமாக இருந்தாலும், அவற்றிற்கு செய்தி என்ற அந்தஸ்து மறுக்கப்படுகிறது.
.
இதன் விளைவாகவே நாடு முழுவதும், விவசாயிகள் தற்கொலை போன்ற முக்கிய நிகழ்வுகள் செய்தியாக ஒளிபரப்பப்படும் அந்தஸ்தை இழந்து விடுகின்றன. உலகமய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்டபின் கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் ஒன்றரை லட்சம் விவசாயிகள் (கடன் தொல்லை காரணமாக) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அரசின் தேசிய குற்ற ஆவண மையம் (National Crime Records Bureau) தெரிவித்தாலும் அது நமது செய்தியாளர்களுக்கு முக்கிய நிகழ்வாகப் படுவதில்லை.
.
கடந்த 2006ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 112 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒரு தற்கொலை நிகழ்வதாக தெரிய வருகிறது. அதே 2006ம் ஆண்டில் தமிழ்நாட்டிலும் 12 ஆயிரத்து 381 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் சுமார் 75 சதவீதம் பேர் பத்தாம் வகுப்புவரைகூட படிக்கும் வாய்ப்பு இல்லாதவர்கள். விவசாயம் உள்ளிட்ட சுயதொழில் செய்தவர்கள். வறுமை காரணமாக குடும்பத் தேவைகளையும், மருத்துவ தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாமல் மனமொடிந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றெல்லாம் புள்ளிவிவரங்களை அரசுத்துறைகளே அளித்தாலும், இதற்கான பின்புலங்கள், காரணங்கள், தீர்வுகள் குறித்து தமிழ்நாட்டு தொலைக்காட்சி ஊடகங்கள் விமர்சனங்களையோ, விவாதங்களையோ முன்வைப்பதில்லை.
.
மாறாக இந்தத் தொ(ல்)லைக்காட்சி செய்திகளின் தினசரி காட்சிகளில் தங்கத்தின் விலையும், பங்கு மார்க்கெட் ஏற்ற, இறக்கங்களும் இடம் பெறுகின்றன. தொலைக்காட்சி பார்க்கும் மக்களில் சுமார் சுமார் 90 சதவீதம் பார்வையாளர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாத அம்சங்களை ஒலிபரப்பும் இந்த தொலைக்காட்சி செய்திகளில், மக்களின் அன்றாடத் தேவைகளான உணவுப்பொருட்களும், மருந்துப் பொருட்களும் தாறுமாறாக விலை ஏறினாலும் அது குறித்து எந்தவிதமான செய்தியோ, விமர்சனமோ, சிறப்புப்பார்வையோ இடம் பெறுவதில்லை.
.
அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுகூட வானிலை செய்தியைப்போல மிகவும் சாதாரணமாக மக்களிடம் எடுத்து வைக்கப்படுகிறது. அதற்கு பின்னால் உள்ள அரசியல் குறித்த விவாதங்கள் எழுப்பப்படுவதில்லை. அதற்கு மாறாக சில ஊடகங்கள் அந்த விலையேற்றத்தை நியாயப்படுத்தவும் முனைகின்றன.
பெருவாரியான மக்களின் அன்றாட வாழ்க்கைத்தேவைகள் அவர்களுக்கு எட்டாக்கனியாகி வருவது திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அம்மக்களின் சிந்தனையை தங்கம் நோக்கிய கனவுகளாக திசைதிருப்பும் முயற்சிகள் வெற்றிகரமாக நடந்தேறி வருகின்றன.
.
தொலைக்காட்சி ஊடகங்களின் இந்த அறமற்ற போக்கிற்கு அச்சு ஊடகங்கள் எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. அவையும் அவற்றின் வாய்ப்புக்கேற்ற வகையில் பலவித தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டே வருகின்றன.
குறிப்பாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களையும், பல்வகை அநீதிகளில் பாதிக்கப்படும் குழந்தைகளையும் சமூகத்திற்கு அடையாளம் காட்டும் வகையில் அவர்களின் புகைப்படங்களையும் பிரசுரிக்கக் கூடாது என்று நீதிமன்றங்கள் வலியுறுத்தினாலும் இந்த பத்திரிகைகள் அவற்றை கண்டுகொள்வதில்லை. இது போல அச்சு ஊடகங்கள் ஈடுபடும் மேற்கொள்ளும் நெறிமுறை மீறல்களை பட்டியலிட்டால் இந்த இதழ் நிறைந்து விடும் அபாயம் உள்ளது.
.
தொலைக்காட்சி ஊடகம், அச்சு ஊடகம் மற்றும் எலக்ட்ரானிக் மீடியா எனப்படும் நவீன இணையதள ஊடகங்கள் ஆகிய அனைத்துமே கூட்டாக சில தவறான கண்ணோட்டங்களையும், கருத்துகளையும் திட்டமிட்டு பரப்பி வருகின்றன.
.
இவை குறிப்பாக சமூகம் சார்ந்த செய்திகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக அரசியல்வாதிகள் ஈடுபடும் பெரும் ஊழல்களை அடக்கியே வாசிக்கும் இந்த ஊடகங்கள், பிரேமானந்தா (பெண்களை ஏமாற்றுதல்), டாக்டர் பிரகாஷ் (ஆபாசப்பட வழக்கு), சிவகாசி ஜெயலட்சுமி (மோசடி வழக்கு), செரீனா (கஞ்சா வழக்கு), நடிகை பத்மா (ஆபாசப்படம் எடுத்து மிரட்டுதல்) முதலியவர்கள் தொடர்புடைய செய்திகளில் தங்கள் கற்பனைச் சிறகுகளை விரித்துக்கொண்டு செய்தி வெளியிடுகின்றன.
.
காவல்துறையினரும் செய்தியாளர்களின் இந்தக் கற்பனைத்திறனுக்குத் தேவையான மூலக்கருவை வழங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு செய்வதன்மூலம் பொதுமக்களிடம் குற்றம் சாட்டப்பட்டவர் மீது கோபத்தை ஏற்படுத்த முடியும். பெருவாரியான மக்களின் கருத்திற்கு ஏற்ப நீதிமன்றமும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிவிடுகின்றன. இதன்மூலம் காவல்துறையினருக்கு மக்களிடம் நல்லெண்ணம் ஏற்படுத்தும் முயற்சியாக இத்தகையப் போக்கு கையாளப்படுகிறது.
.
ஆனால் இந்த “மீடியா டிரையல்” எனப்படும் பத்திரிகைகளின் மோசடியில் சிக்கிய அப்பாவிகளுக்கு நிவாரணம் வழங்க எந்த ஏற்பாடும் இல்லை. இதன் கோரமான உதாரணமாக ராஜீவ் காந்தி கொலை வழக்கை கூறலாம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் எதிராக சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை குறிப்பிடலாம். பொதுமக்களின் கருத்தில் குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டவர்கள் மீது நீதிமன்றமும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருப்பதாலேயே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருககும் மிக அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் மேல்முறையீட்டின்போது, மிக நீண்ட போராட்டங்களின் பயனாக, பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 19 பேர் விடுவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
.
இதுபோன்ற போக்கே காவல்துறையினர் மற்றும் ராணுவத்துறையினர் கையாளும் மோதல் கொலைகளிலும் கையாளப்படுகிறது. இதுபோன்ற போலி மோதல்களை நியாயப்படுத்தும் நோக்கில் கொல்லப்பட்டவரை தீவிரவாதியாக சித்தரிப்பதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகவே நிகழ்கிறது.
.
குஜராத் மாநிலத்தில் நடந்த "சொராப்தீன்" என்கவுண்டர் சம்பவமும் முதலில் இப்படித்தான் செய்தியாக வெளிவந்தது. பின்னர் அவரது குடும்பத்தினரின் பெரும் போராட்டத்திற்கு பின்னரே என்கவுன்டரில் கொல்லப்பட்ட சொராப்தீன் தீவிரவாதி அல்ல என்ற “உண்மையான உண்மை”யை ஊடகங்கள் வெளிப்படுத்தின.
.
அரசுத்தரப்பு செய்திகளையும், அரசியல் தலைவர்களின் செய்திகளையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் இந்த ஊடகங்கள் அரசின் கொள்கையையோ, அரசியல் தலைவர்களின் கொள்கைகளையோ விமர்சனம் செய்பவர்களின் வாதங்களை எந்த அளவுக்கு வெளியிடுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.
.
ஊடகங்களின் இந்தப்போக்கினால்தான் உலகமய பொருளாதாரம், அணுசக்தி, மரபணுமாற்ற வேளாண்மை, கட்டற்ற நகரமயம் போன்ற சமூகத் தீங்குகளை மக்கள் எந்தவிதமான விமர்சனமும் இன்றி ஏற்க வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது.
***************
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் மத்தியில் செய்தி ஊடகங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தமிழ் (மட்டும்) அறிந்தவர்கள் “தினத்தந்தி” உள்ளிட்ட செய்தித்தாள்களில் வந்த அனைத்து செய்திகளையும், அதன் பார்வைகளையும் எந்தக் கேள்வியுமின்றி நம்பியது வரலாறு. அதேபோல் ஆங்கிலம் அறிந்தவர்களும் “ஹிந்து”-லயே போட்டிருக்கான் என்று பேசியதும் உண்டு.
.
ஊடகங்கள் அனைத்தும் ஏதோ ஒரு அரசியலை வரித்துக் கொண்டு அதன் சார்பிலேயே இயங்கி வந்தாலும் ‘நடுநிலைமை’ என்ற முகமூடி அணிந்தே பல ஊடகங்கள் இயங்கின. அரசியல் கட்சியின் பிரசார சாதனங்களாக இருந்த சில ஊடகங்கள் மட்டுமே வெளிப்படையாக அரசியல் பேசின.
.
ஊடகங்கள் நடுநிலை வகிப்பதாக மக்கள் கொண்டிருந்த குருட்டுத்தனமான - தவறான நம்பிக்கையைத் தகர்த்து, மக்களின் இந்த பகுத்தறிவையும், சிந்தனை ஆற்றலையும் அதிகரிக்கச் செய்ததில் “சன் டிவி”யும், “ஜெயா டிவி”யும் முக்கிய இடம் வகித்தன. ஒரே செய்தியை இரு டிவி சேனல்களும் எதிரும்புதிருமான கோணத்தில் வெளியிட மக்கள் முதலில் திகைப்படைந்தனர். பிறகு மீடியாக்களின் அரசியலை புரிந்து கொள்ள ஆரம்பித்தனர்.
.
இந்த போக்கு தற்போது நன்கு வளர்ச்சி அடைந்து ஒரு குறிப்பிட்ட செய்தியை எந்தெந்த பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் எவ்வாறு செய்தியாக வெளியிடும் என்று சாதாரண வாசகனும் யூகிக்கும் அளவுக்கு வாசகனின் அறிவு விசாலமடைந்துள்ளது. சமூகப் பிரசினைகளின்போது இந்த தொலைக்காட்சிகளில் பேட்டியளிக்கும் படிப்பறிவற்ற சாமானிய மக்கள்கூட பேட்டி எடுக்கும் தொலைக்காட்சியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்ப பேட்டி கொடுக்க தயார் நிலையில் உள்ளனர்.
.
இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக சன் டிவிக்கும், ஜெயா டிவிக்கும் மீடியா விமர்சகர்கள் அனைவரும் நன்றி கூற வேண்டும்.
.
ஊடகங்களின் பார்வையாளர்கள் மற்றும் வாசகர்கள் இந்த அளவுக்கு விழி்ப்புணர்வு அடைந்துள்ள நிலையிலும், ஊடகங்களின் பொறுப்பற்றப்போக்கு தனிநபர்களுக்கு மட்டுமே எதிராக இருக்கும்வரை யாருடைய கவனத்தையும் அவ்வளவாக கவருவதில்லை. ஆனால் அது ஒரு சமூகத்திற்கே எதிராக மாறும்போதும் மக்களின் எதிர்விளைவு சாதாரணமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது; அவ்வாறு எதிர்பார்க்கவும் கூடாது.
.
சமூகத்தில் ஒடுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளவர்களும் சமூகவிழிப்புணர்வு அடைந்து வரும் இன்றைய நிலையிலும் ஊடகங்கள் இன்றைய மோசமான போக்கினை தொடர்ந்தால் பெரும் விபரீதங்களை சந்திக்க நேரிடலாம்.
எனவே ஊடகத்துறையினர் இதனை புரிந்து கொள்வதற்கும், தங்களைத் தாங்களே சுயவிமரிசனம் செய்து கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பமாகவே LTTE IN THE EYES OF TAMIL NADU என்ற புத்தகத்தை பார்க்க வேண்டும்.
.
நன்றி:
மே, 2008

22 மே, 2008

பன்னாட்டு நிறுவனங்களிடம் கேள்விக்குறியாகும் இந்தியாவின் இறையாண்மை !

நாட்டில் நிலவும் வறுமை, வேலையின்மை, பஞ்சம் உள்ளிட்ட பிரசினைகளை தீர்க்கப்போவதாகக்கூறி இன்றைய பிரதமரும், அன்றைய நிதியமைச்சருமான மன்மோகன் சிங்கால் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் ஆகிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப் பட்டன.
.
நாடாளுமன்றம் – சட்ட மன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களில் வருடக்கணக்கில் விவாதம் (மட்டுமே) நடத்திவரும் நமது அரசியல்வாதிகள், நாடாளுமன்றத்திலோ, வேறு எந்த அவையிலோ எந்த விதமான விவாதமும் நடத்தாமல் உலக வர்த்த கழகத்தில் இந்தியாவை உறுப்பு நாடாக பதிவு செய்தனர். உண்மையில் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் எம்.பி.க்களுக்கே தெரியாமல், அதிகாரிகளே இதற்கான (டங்கல்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதற்கான அனுமதியை அளித்தவர் அன்றைய நிதியமைச்சர் மன்மோகன் சிங்.
இந்த கொள்கைகளுக்கு அன்று எதிர்ப்புகளும் இருந்தன. ஆனாலும் இதிலிருந்து விலகினால் பொருளாதார ரீதியாக பேரழிவுகள் ஏற்படும் என்றும், நாட்கள் செல்லச்செல்ல இந்த புதிய பொருளாதார கொள்கைகள் நல்ல பலன்களை கொடுக்கும் என்றும் மன்மோகன் சிங், சிதம்பரம் வகையறாக்கள் சமாதானம் கூறினர். இதையடுத்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் பொருளாதார சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டது. வர்த்தகம் சார்ந்த ஏற்றுமதி-இறக்குமதி, வரிச்சட்டங்கள், வங்கிச்சட்டங்கள் உள்ளிட்ட பல சட்டங்கள் படிப்படியாக மாற்றியமைக்கப்பட்டன.
.
அறிவுச்சொத்துரிமை சட்டங்களில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டன. அறிவுச்சொத்துரிமை சட்டங்களில் உள்ள மக்கள் சார்பு அம்சங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவான அம்சங்கள் அமல்படுத்தப்பட்டன.
.
இவை இந்தியர்களின் விவசாயம், தொழில், மருத்துவம் உள்ளிட்ட அம்சங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. மருத்துவம் என்பது சேவை என்ற நிலை மாறி தொழிலாக ஆக்கப்பட்டுள்ளது. எந்தத் தொழிலும் கொள்ளை லாபம் ஈட்டுவதையே இலக்காக கொண்ட பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் ஆக்கிரமித்ததால் இந்தியர்களின் நல்வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.
.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம், ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் என்ற மருந்தை கிளிவெக் (GLIVEC, GLEEVEC) என்ற வணிகப்பெயரில் தயாரித்து வருகிறது.
இம்மருந்தை தயாரித்து விற்பனை செய்வதற்கான பிரத்யேக சந்தை உரிமை (EXCLUSIVE MARKETING RIGHT)யை காப்புரிமை சட்டம் மூலம் இந்த நிறுவனம் கடந்த 2003-ம் ஆண்டு பெற்றது. ஆனால் இம்மருந்தை வேறு செய்முறைகளில், வேறு பெயர்களில் சில நிறுவனங்கள் தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்தன.
.
இதை தடை செய்யக்கோரி சென்னை மற்றும் மும்பை ஆகிய உயர்நீதிமன்றங்களில் நோவார்டிஸ் வழக்கு தொடர்ந்தது. அன்று வழக்கறிஞராக பணியாற்றிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அந்த நிறுவனம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நோவார்டிஸ் நிறுவனத்தை தவிர வேறு யாரும் அந்த மருந்தை தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என்ற தடை உத்தரவை பெற்றார். ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் இதே வழக்கை வேறு கோணத்தில் பார்த்தது.
.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைப்பதை தடை செய்யும் பிரத்யேக சந்தை உரிமை, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானது என்று கூறி மும்பை உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
.
இந்த இரு தீர்ப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
.
இதற்கிடையில், பிரத்யேக சந்தை உரிமைக்கு அடுத்த கட்டமான காப்புரிமையை இந்த மருந்துக்கு வழங்கவேண்டும் என்று நோவார்டிஸ் நிறுவனம், சென்னையிலுள்ள காப்புரிமை கட்டுபாட்டாளரிடம் மனு செய்தது. ஆனால் இந்தியாவிலுள்ள காப்புரிமை சட்டவிதிகளின்படி இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்க முடியாது என்று கூறி இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
.
இந்த முடிவை எதிர்த்து நோவார்டிஸ் நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இந்த மேல் முறையீட்டில் அந்த நிறுவனம் வெற்றி பெற்றால் பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். தற்போதைய நிலையில் பல நிறுவனங்கள் ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் மருந்தை தயாரித்து விற்பனை செய்வதால் இம்மருந்து சுமார் 50 ரூபாய் விலையில கிடைக்கிறது. ஒரு நோயாளி ஒரு நாளைக்கு நான்கு மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.
.
நோவார்டிஸ் நிறுவனத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டுவிட்டால் மற்ற நிறுவனங்கள் அம்மருந்தை தயாரிக்க முடியாது. அனைத்து ரத்தப்புற்று நோயாளிகளும் மருந்திற்கு அந்த நிறுவனத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். காப்புரிமை பெற்ற மற்ற நாடுகளில் நோவார்டிஸ் நிறுவனம் அம்மருந்திற்கு இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது. அதே விலைக்கு மருந்து வாங்க ஒரு நோயாளிக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். இது எத்தனை இந்தியர்களுக்கு சாத்தியம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
.
நோவார்டிஸ் நிறுவனத்தின் இமாடினிப் மெஸிலேட் மருந்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டால் அதை பின்பற்றி காப்புரிமை கேட்பதற்கு ஏற்கனவே சுமார் 9,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே மருத்துவம் என்பதே இந்தியர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்.
.
எனவே இந்த வழக்கை நோவார்டிஸ் நிறுவனம் திரும்பப்பெறவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உட்பட உலகின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்திய மக்களைப்பற்றி இந்திய அரசுக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்குமே அக்கறை இல்லாதபோது, கொள்ளை லாபமே இலக்காகக் கொண்ட நோவார்டிஸ் நிறுவனம் வழக்கை திரும்ப பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம்.
.
மேற்கண்ட செய்திகள் அரசின் கொள்கைகளை மட்டுமே நமக்கு உணர்த்தவில்லை. மக்களின் நன்மதிப்பை பெற்ற சில நபர்களின் தன்மைகளையும் உணர்த்துகிறது.
.
காப்புரிமை சட்டத்தில் ஒரு பொருள் தயாரிக்கும் முறைக்கு மட்டுமே சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டது. பின்னர் வர்த்தகம் சார்ந்த அறிவுச்சொத்துரிமைக்கான ஒப்பந்தத்தில் (Trade Related Intellectual Property RightS Agreement) இந்தியா கையொப்பம் இட்டதை தொடர்ந்து பொருள் செய்யும் முறைக்கு மட்டும் அல்லாமல் மருந்துப் பொருளுக்கே காப்புரிமை வழங்கும் முறை அமலுக்கு வந்தது.
.
இதன்படிதான் நோவார்டிஸ் நிறுவனம் ரத்தப்புற்று நோய்க்கான மருந்துக்கு காப்புரிமை கோருகிறது. இதற்காக நம் நாட்டின் காப்புரிமை சட்டம் – 1970 ல் திருத்தம் செய்து ஒரு அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
.
இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட நாள்: 2004 டிசம்பர் 26! ஆம். சுனாமி பேரலை தாக்கி உலகின் பல பகுதிகளும் சோகத்தில் மூழ்கியிருந்தது.
இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஈடு செய்ய உலகின் பல நாடுகள் முன்வந்தன. அந்த நாளில்தான் அன்றைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், மற்ற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு மக்கள் விரோதமான/ பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமான அந்த அவசர சட்டத்தில் யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி கையெழுத்திட்டார்.
.
அவரைத்தான் நமது நகைச்சுவை நடிகர்கள் முதல் நாடோடிகள்வரை வானளாவ புகழ்ந்து வருகின்றனர்.
.
அடுத்து இந்த விவகாரத்தில் மிக முக்கிய நபர் டாக்டர் மஷேல்கர் என்பவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆசிபெற்ற இவர் வேதித்துறை பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் இந்திய அரசிலும், உலக சுகாதார நிறுவனத்திலும் மிக முக்கிய பதவிகளை வகித்தவர்.
காப்புரிமை சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் (காலம்கடந்து) நடைபெற்ற விவாதத்தை தொடர்ந்து, டாக்டர் மஷேல்கர் தலைமையில் வல்லுனர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்தது என்பதை சொல்லத் தேவையில்லை.
எனவே இந்த அறிக்கையின்படி தமது மருந்துகளுக்கு காப்புரிமை வழங்கவேண்டும் என்று நோவார்டிஸ் நிறுவனம் வாதாடியது என்பது குறிப்பிடத்தக்கது
.
இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள இன்டலக்சுவல் பிராபர்டி இன்ஸ்டிடியூட்-ல் டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் ஷாம்நாத் பஷீர் என்ற மாணவரின் கட்டுரையை திருடி அதனையே அறிக்கையாக தயாரித்து டாக்டர் மஷேல்கர் அளித்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. டாக்டர் பட்ட ஆய்வு மாணவர் ஷாம்நாத் பஷீர், நோவார்டிஸ் உள்ளிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நிதி உதவியுடன் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அந்த கட்டுரையை எழுதியதாகவும், அதை டாக்டர் மஷேல்கர் வார்த்தைக்கு வார்த்தை திருடி விட்டதாகவும் கூறியுள்ளார்.
.
மாணவரின் அறிவைத்திருடி பன்னாட்டு நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையை பாதுகாக்க டாக்டர் மஷேல்கர் மேற்கொண்ட முயற்சி அம்பலமானதை தொடர்ந்து அந்த “வல்லுனர்(!) குழு அறிக்கை” திரும்ப பெறப்பட்டது.மாணவரின் அறிவுச்சொத்தை “வல்லுனர் மஷேல்கர்” திருடியது உலக அரங்கில் அம்பலமானாலும், அவருக்கு தண்டனையோ கண்டனமோ கிடையாது.
.
அவாளுக்கெல்லாம் தண்டனை கொடுக்க கருட புராணத்திற்கு அதிகாரம் கிடையாது. மனுதர்மம்தான்!
.
இந்த விவகாரத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவும் செய்யுமா? என்று எதிர்பார்ப்பவர்கள், இதுபோன்ற விவகாரங்களை இந்தியாவிற்கு கொண்டுவந்தவர்களே உலக வங்கியின் ஏஜென்டுகளான மன்மோகன் சிங், சிதம்பரம் வகையறாதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமானால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இந்த விவகாரத்தில் ஏதும் செய்யமுடியுமா? என்று வேண்டுமானால் கேட்டுப்பார்க்கலாம்.
.
புதிய பொருளாதாரக்கொள்கை இந்தியர்களின் வாழ்வை மருத்துவத்துறையில் மட்டுமல்ல, விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தலைகீழாக மாற்றி வருகிறது.
.
இதெல்லாம் இப்போதுதான் தெரியுமா? அப்போதே எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அப்போதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன. டங்கல் பரிந்துரைகளை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஏ.தேசாய், சின்னப்ப ரெட்டி, வி.ஆர். கிருஷ்ணய்யர், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஆகியோர் பரிசீலித்தனர். பின்னர் அவர்கள் அளித்த அறிக்கை மிக முக்கியமானது.
.
“சந்தைக்கு இணக்கமான பொருளாதாரம், தாராளமயமாக்கல், உலகப் பொருளாதாரத்துடன் இணைத்தல், பெருமளவு அன்னிய முதலீட்டுடன் கூடிய தனியார் மயமாக்கல் முதலியன இந்திய தொழில்களின் வளர்ச்சி, இந்திய அரசியல் சட்ட விதிகள் 14, 19, 21-ன் கீழான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை ஆகும்.”
.
“இந்திய அரசியல் சட்டம் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களுக்கென சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டவிதி 13, 14-ன் கீழ் மத்திய அரசுக்குக் கிடைக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இந்த கூட்டாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் எதுவும் இல்லை” என்று அந்த அறிக்கையில் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது.
.
மன்மோகன் சிங் மத்திய நிதி அமைச்சராகவும், சிதம்பரம் நிதித்துறை இணையமைச்சராகவும் இருந்தபோதுதான் இத்தகைய மாற்றங்கள் தொடங்கின. மாநில சுயாட்சி முழக்கத்துடன் அரசியலுக்கு வந்தவர்கள் துணையுடன்தான் இந்த மாற்றங்கள் முழுவேகத்தில் நடைபெறுகின்றன.
.
இதற்கு என்ன தீர்வு என்பது தனிநபர்கள் எடுக்கும் முடிவுகளில் இல்லை. இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் எடுக்கும் முடிவுகளும், உங்களின் செயல்பாடுகளும்தான் உங்கள் வாழ்க்கையை, உங்கள் சந்ததிகள் வாழ்க்கையை பாதுகாக்கும்.

நன்றி:

செப்டம்பர் 2007.

கிரெடிட் கார்டு - ஒரு அரசியல் பார்வை

நாடுகளை அடிமைப்படுத்த தற்போது அணு ஆயுதங்களோ, ராணுவப்படைகளோ தேவை இல்லை. அடிமைப்படுத்த வேண்டிய நாட்டின் மக்களை உளவியல் ரீதியாக, கலாச்சார பண்பாட்டு ரீதியாக, பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்தி்னாலே போதுமானது.

உதாரணமாக, இங்கிலாந்திடம் அடிமைகளாக இருந்த சுமார் 16 நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட்டில் "உலகக் கோப்பை" போட்டி நடத்தி அடிமை மனோபாவத்தை வளர்த்தெடுக்கலாம். "அழகிப்போட்டி" என்ற பெயரில் ஆபாச கூத்துகளை நடத்தி பெண்களை பாலியல் சின்னங்களாக வெளிப் படுத்தலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளான கம்ப்யூட்டர், தொலைக்காட்சி உள்ளிட்ட கருவிகள் மூலம் பகுத்தறிவுக்கு எதிரான அனைத்து அம்சங்களையும் பரப்பலாம். இவற்றின் மூலம் எந்த நாட்டு மக்களையும், அவர்களின் கலாச்சார, பண்பாட்டு அம்சங்களுக்கு எதிராக சிந்திக்க, செயல்பட வைக்க முடியும். இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் பொருளாதாரத்தையும் சுரண்டி அந்நாட்டை சீர்குலைக்க முடியும்.

இந்த செயல்திட்டத்தின் அடிப்படையில்தான் நுகர்வு கலாசாரம் இந்தியா போன்ற நாடுகளின் மீது திட்டமிட்டு திணிக்கப் படுகிறது. நமக்கு தேவையோ/ இல்லையோ, விளம்பரம் செய்யப்படும் அனைத்து பொருட்களையும் வாங்கி குவிக்க வேண்டும் என்ற கருத்து உளவியல் ரீதியாக நம்மீது திணிக்கப் படுகிறது.
நமது இன்றைய வருமானம், இந்த தேவைகளுக்கு ஈடுகொடுப்பதாக இல்லாவிட்டாலும், கடன் பெற்றாவது அந்த பொருட்களை வாங்கி அனுபவிக்க வேண்டும் என்ற வெறி நம்முள் எழுப்பப் படுகிறது. இதற்கான கடனும் பர்சனல் லோன், கிரெடிட் கார்டு என்பது போன்ற கவர்ச்சியான பெயர்களில் நம்மிடம் திணிக்கப் படுகிறது.

விவசாயிகளோ, சிறு வியாபாரிகளோ தங்கள் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் தொழிற்கடன்களை கேட்டால் விரட்டியடிக்கும் வங்கிகள், ஊதாரித்தனமான செலவுகளுக்கு பல்வேறு பெயர்களில் கடன்களை வாரிவாரி வழங்குகின்றன.

எனவே நியாயமான காரணங்களுக்கு பணம் தேவைப்படும் பலரும் நியாயமான வட்டியில் கடன் கிடைக்காத நிலையில், அநியாய வட்டி என்று தெரிந்தும் இத்தகைய பகல் கொள்ளைக்காரர்களின் பிடியில் சிக்க நேரிடுகிறது.

நேர்மையாக வாழ்ந்து வரும்/வாழ விரும்பும் எந்த ஒரு நபரும் இத்தகைய மாய (கடன்) வலையில் சிக்காத வரையில் தங்கள் நேர்மையை காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால், எந்த காரணத்திற்காகவோ இந்த கடன் பொறியில் சிக்கிவிட்டால் அவர் விரும்பினாலும் நேர்மையுடன் வாழ முடியாது. இதற்கு காரணம், இந்த கடனுக்கு வங்கிகள் விதிக்கும் அநியாய வட்டியே காரணமாகும். வட்டியே அதிகம் என்ற நிலையில், இந்தக் கடன் தவணையை உரிய காலத்தில் கட்டத்தவறும் பொது மக்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை, பகல் கொள்ளை என்ற வார்த்தையில் கூட அடக்க முடியாது.

இந்த விவகாரத்தில் அரசு என்ன கடமை ஆற்றுகிறது என்று பார்த்தால், வங்கிகள் அடிக்கும் கொள்ளைக்கும் 4 சதவீத சேவை வரி விதித்து, மத்திய அரசு தனது இறையாண்மையை பாதுகாத்துக் கொள்கிறது.இவ்வாறு அரசு அங்கீகாரத்துடன் மக்களை கொள்ளை அடிக்கும் வங்கிகள், மக்களிடம் கடன் வசூல் நடத்தும் விதம், வெள்ளையர் காலத்தில் நடந்த வரி வசூலே மேல் என்று கூறத்தக்க விதத்தில் உள்ளது. வங்கிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ரிசர்வ் வங்கியோ கிரெடிட் கார்டு வணிகத்தில் வங்கிகள் செய்யும் அனைத்து முறைகேடுகளையும் கண்டறிந்து, அவற்றை தவிர்க்கக் கூடிய விதிமுறைகளையும் வகுத்துவிட்டு, அவற்றை நடைமுறைப் படுத்துவதோ, கண்காணிப்பதோ தனது வேலையில்லை என்று ஒதுங்கி விடுகிறது.
எனவே, இந்த விவகாரங்களை கையாள வேண்டிய பொறுப்பு மக்களிடமே உள்ளது. அதற்கு முன்னதாக அந்த கிரெடிட் கார்டு வணிகத்தின் பின்னுள்ள பொருளாதார அரசியல் விவகாரங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பல வங்கிகள் கிரெடிட் கார்டு வணிகத்தில் ஈடுபட்டாலும். இந்த வணிகத்திற்கான மூலதன நிதி அமெரிக்கா போன்ற நாடுகளின் முதலீடாகவே உள்ளது. எனவே, இந்த முதலீட்டிற்கான (அநியாய) வட்டியும் அந்த நாடுகளுக்கே செல்கிறது.

மேலும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொதுமக்கள் வாங்கிக் குவிக்கும் பெரும்பாலான பொருட்களும் அந்நிய நாட்டுப் பொருட்களே!உலகமயம்! தனியார் மயம்! தாராள மயம்! என்ற பெயரில் உள்ளூர் கோலி சோடாவிலிருந்து, தொலைக்காட்சி/கம்ப்யூட்டர் வரையிலான அனைத்து உயர்நுட்ப தொழில்களையும் இழுத்து மூடிவிட்டு அந்நிய தயாரிப்புகளே இந்திய சந்தையில் விற்கப்படும் நிலையில், கிரெடிட் கார்டு மூலமாவும் அந்நிய தயாரிப்புகளே நமது தலையில் கட்டப்படுகிறது என்பதை சொல்லத் தேவையில்லை.

இதற்கேற்ற வகையிலேயே, செய்தி மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்களும் இந்திய மூளைகளை முடமாக்கி, இந்திய மக்களையே நுகர்வுப் பொறிகளாக்கி அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. உலக வங்கி என்ற பெயரில் வளரும் நாடுகளின் அரசுகளை கொள்ளையடிக்கும் சக்திகளே, அந்நாட்டு மக்களையும் கொள்ளையடிக்கவே இதுபோன்ற நூதன, மோசடித் திட்டங்களை வகுக்கின்றன.

போலிப்பகட்டற்ற எளிமையான வாழ்க்கை, யதாரத்த நிலையை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம், எதையும் தெளிந்தறியும் அறிவியல் மனப்பான்மை உள்ளிட்ட மனநிலையை பெறுவதே இத்தகைய சமூக, பண்பாட்டு, கலாசார, பொருளியல் தாக்குதல்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவும் அம்சங்களாகும். அதன் மூலமே சுயசிந்தனை, உண்மையான பகுத்தறிவு, சமூக நோக்கு உள்ளிட்ட குணாதிசயங்களை நாம் பெற முடியும்.
நம்மை அடிமைப் படுத்தும் சமூக, பண்பாட்டு, கலாசார, பொருளியல் சீரழிவுகளுக்கான நுழைவுச் சீட்டே இந்த "கிரெடிட் கார்டு" என்பதை புரிந்து கொள்வதே இத்தகைய பிரசினைகளை தவிர்க்கும் வழியாகும்.

இந்த புரிதல் மூலமாகத்தான் கிரெடிட் கார்டை நமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதா? அல்லது கிரெடிட் கார்டின் கட்டுப்பாட்டில் நாம் வாழ்வதா? என்ற கேள்விக்கு விடை காண முடியும். இது தனிநபர் பிரசினை அல்ல என்பதையும், இந்த விவகாரம் இந்திய இறையாண்மைக்கே சவால் விடுவதையும் புரிந்து கொண்டால்தான் இந்த மாயவலையை அறுத்தெரியும் பாதை அமைக்க முடியும்.

நன்றி: உண்மை ஏப்ரல் 16-30, 2007