23 மே, 2008

மக்கள் பார்வையில் செய்தி ஊடகங்கள் – ஒரு சிறப்புப்பார்வை

இலங்கையைச் சேர்ந்த துஷாரா பீரிஸ் என்ற இயக்குனரின் “பிரபாகரன்” என்ற திரைப்படம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியது நினைவிருக்கலாம். சிங்கள இனவெறி அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ‘பிரபாகரன்’ என்ற பெயருடைய தமிழ்ச் சிறுவன் விடுதலைப்புலிகளிடம் சிக்கி, அவனுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும்கூட கட்டாயத்தின் பேரில் ஆயுதமேந்துவதாக கதை செல்கிறது. சராசரி வாழ்வில் ஈடுபடவிரும்பும் தமிழ் இளைஞர்களுக்கு இலங்கை அரசு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்குவதைப் போலவும், அதை விடுதலைப்புலிகள் தடுத்து அவர்களை ஆயுதப்போராட்டத்தில் திணிப்பதுபோலவும் ஒரு போலித்தோற்றத்தை ஏற்படுத்துவதே இந்த திரைப்படத்தின் நோக்கம். சிங்கள மொழிப்படத்தை தமிழாக்கம் செய்ய இப்படத்தின் இயக்குனர் சென்னை வந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து செய்திகள் வந்துவிட்டன.
.
ஆனால் விடுதலைப்புலிகள் மீதான உளவியல் போரின் ஒரு அம்சமாக இலங்கை அரசு மேற்கொண்ட மற்றொரு முயற்சி அதிக அளவில் கவனிக்கப்படவில்லை. இலங்கை அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் கடந்த 2007 டிசம்பரில் LTTE in the Eyes of Tamil Nadu என்ற நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சுமார் 250 பக்கங்களை கொண்ட இந்த நூல் மிகவும் தரம் உயர்ந்த தாளில் பல வண்ண புகைப்படங்களுடன் மிகவும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ளது.
.
தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் “தி ஹிந்து”, “இந்தியன் எக்ஸ்பிரஸ்”, “டெக்கான் கிரானிக்கிள்”, “நியூஸ் டுடே”, “பிரண்ட்லைன்”, “தினத்தந்தி”, “தினமலர்”, “தினமணி”, “தினகரன்”, “மக்கள் குரல்”, “மாலைமலர்”, “மாலைச்சுடர்” போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த தலையங்கங்கள் மற்றும் செய்திகளைத் தொகுத்து இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
.
இந்த நூலின் முன்னுரை மட்டுமே இலங்கை அரசால் எழுதப்பட்டுள்ளது. ஒரே பக்கத்தில் உள்ள இந்த முன்னுரையில், இலங்கையின் வடபகுதியில் சிங்கள மற்றும் இஸ்லாமிய மக்களை விடுதலைப்புலிகள் இனப்படுகொலை செய்வதாகவும், இலங்கையில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பல்வேறு மனித உரிமை மீறல்களில் புலிகள் ஈடுபடுவதாகவும் மேற்கண்ட பத்திரிகைச்செய்திகளின் அடிப்படையில், அந்நூலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
.
இலங்கை அரசின் சொந்த சரக்கு இந்த ஒரு பக்க முன்னுரை மட்டுமே. இதைத்தவிர மீதமுள்ள சுமார் 250 பக்கமும் தமிழகத்தில் உள்ள பத்திரிகையாளர்களின் கைகளைக் கொண்டே விடுதலைப்புலிகளின் கண்களைக் குத்துவதற்கு இலங்கை அரசு முயன்றுள்ளது.
.
மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த நூலின் முதல் பகுதியில் செய்தித்தாள்களின் தலையங்கங்கள் இடம் பெற்றுள்ளன. “லங்கா ரத்னா” விருது பெற்றவர் நடத்தும் “தி ஹிந்து”, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உரையை விமர்சிக்கும் போக்கில் இலங்கையில் பிரபாகரனும் அவரது படையினரும் மட்டுமே ஆயுதம் தாங்கி இருப்பதுபோல் ஒரு காட்சியை தீட்ட முயற்சிக்கிறது. இந்த ஆயுதங்கள் தமிழ்நாட்டிலும் பிரசினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று மற்றொரு தலையங்கம் எச்சரிக்கிறது. ஏறத்தாழ இதே தொனியில் “இந்தியன் எக்ஸ்பிரஸ்”, “டெக்கான் கிரானிக்கிள்”, “நியூஸ் டுடே”, “தினமணி” முதலிய ஏடுகளும் தலையங்கம் தீ்ட்டியுள்ளன.
.
அடுத்தப் பகுதியில் ஆங்கில ஏடுகளில் வெளியான, விடுதலைப்புலிகளுக்கு எதிரான செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என குற்றம் சாட்டப்பட்டோர் கைது செய்யப்பட்ட செய்திகளும், ‘ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை காங்கிரஸ் மன்னிக்காது’ என்பது போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களின் “வீர” வசனங்களும் இடம் பெற்றுள்ளன (தற்போது, ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்காவும், ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நளினியும் சந்தித்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள காமராஜர் ஆட்சி “கனவா”ன்கள் என்ன பேசுவார்கள் என்பது சுவாரஸ்யமான புதிர்!).
.
இடையில் தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகள் கடத்தியதாகவும், பின் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் செய்திகள் இடம் பெற்றுள்ளன. விடுவிக்கப்பட்ட மீனவர்களில் ஒருவரைத்தவிர மற்றவர்கள் யாரும் செய்தியாளர்களிடம் பேசுவதற்கு ஏனோ அனுமதிக்கப்படவில்லை என்பது மட்டும் இந்தச் செய்திகளில் இடம் பெறவில்லை. அந்த மீனவர்கள் கடத்தல் சம்பவம் குறித்து எப்போது, யாரிடம், என்ன பேசினாலும் கைது செய்யப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டு வாயடைக்கப்பட்டதும் இடம்பெறவில்லை.
.
இறுதிப்பகுதியாக, தமிழ் ஏடுகளில் வெளியான செய்திகள் பகுதியும் இவ்வாறாகவே தொகுக்கப்பட்டுள்ளது. இதில் பார்ப்பன பத்திரிகைகள் மட்டுமே அவ்வாறு செய்தி வெளியிட்டது என்ற பாகுபாடில்லாமல் பார்ப்பனர் அல்லாதவர்கள் நடத்தும் பத்திரிகைகளும்கூட இவ்வாறே செய்தி வெளியிட்டுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்புவரை திமுகவின் தீவிர எதிர்ப்பு நிலையிலிருந்த “தினத்தந்தி”, அரசுக்கு இணக்கமான நிலை என்ற அதன் வழக்கமான நிலையில் நின்று, தமிழக மீனவர்கள் கடத்தப்பட்டச் செய்திகளில்கூட சிரித்த முகத்துடன் கூடிய முதலமைச்சரின் புகைப்படத்துடன் செய்திகளை வெளியிட்டுள்ளது.
.
முற்றுப்புள்ளி எங்கே வரவேண்டும்; கால்புள்ளி எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதுகூட தெரியாத தமிழ் பத்திரிகையான “தினமலர்”, வழக்கம் போல செய்தி என்ற பெயரில் கருத்துத்திணிப்பை மேற்கொண்டுள்ளது. ‘நடுநிலை’ப் பத்திரிகையான தினமணியும், தலையங்கத்தில் மட்டுமல்லாது, செய்திகளிலும் இதே பாணியை தொடர்ந்துள்ளது.
.
தமிழ் ஊடக உலகில், விடுதலைப்புலி எதிர்ப்பாளர்களின் பிதாமகனாகிய ‘சோ”வின் “துக்ளக்” இதழில் வெளிவந்த செய்திகள் இந்த வெளியீட்டில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த முரண் ஆகும்.
.
LTTE in the Eyes of Tamil Nadu என்ற இந்தப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்துச் செய்திகளும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான செய்திகளே என்பதை தனியாகக் கூறத் தேவையில்லை.இலங்கை அரசால் தமிழர்களும், தமிழக மீனவர்களும் தாக்கப்பட்ட - கொல்லப்பட்ட சம்பவங்களும் தமிழகத்தின் செய்தித்தாள்களில் இடம் பெறவேயில்லை என்று கூறமுடியாது.
.
ஆனால் அந்தச் செய்திகள் வெளியான விதத்தைக் கூர்ந்து கவனித்தால், கடந்த சில காலமாக இலங்கைப் பிரச்சினை குறித்து வெளியாகும் செய்திகளில் பல புதிய பரிமாணங்கள் இருப்பது தெளிவாகும். குறிப்பாக, தமிழர்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானால் உடனடியாக அந்தச்செய்தி குறித்த இலங்கை அரசின் மறுப்பு அல்லது எதிரொலியும் வெளியாகிறது.
.
எடுத்துக்காட்டாக, செஞ்சோலைப் படுகொலை உட்பட பல நிகழ்வுகளில் தமிழர்கள் தாக்கப்பட்ட, கொல்லப்பட்ட செய்திகள் வெளியான உடனேயே, அந்தச் செய்திகள் குறித்த இலங்கை அரசின் கருத்தும் வெளியாகி வருகின்றன. செஞ்சோலையில் தமிழ் மாணவர்கள் தங்கியிருந்த பள்ளி வளாகத்தில் இலங்கை அரசால் குண்டுவீசி கொல்லப்பட்டனர் என்று செய்தி வெளியானால், இலங்கை அரசுத்தரப்பில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ராணுவப்பயிற்சி மேற்கொண்டிருந்த குழந்தைப்போராளிகள் என்ற வாதமும் உடனடியாக வலிந்து பரப்பப்படுகிறது.
.
எந்த ஒரு செய்திக்கும் இரண்டு பக்கங்கள் உண்டென்பதையும், அந்த இரண்டு பக்கங்களையும் எடுத்துக்கூறுவதே செய்தி ஊடகங்களின் நடுநிலையைக் கூறும் அளவுகோல் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த “நடுநிலை” எந்த அளவுக்கு, எந்தெந்த விவகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது; எந்தெந்த விவகாரங்களில் நடுநிலை தவிர்க்கப்படுகிறது என்று கூர்ந்து பார்த்தால் பல விவரங்கள் வெளிவரும்.
.
குறிப்பாக சென்னையில் இலங்கையின் துணைத்தூதராக “பச்சைத்தமிழர்” திருவாளர். அம்சா அவர்கள் பொறுப்பேற்ற பின்பே இலங்கை அரசுத்தரப்பு வாதங்கள் தமிழ்நாட்டு ஊடகங்களில் மிகப்பரவலாக இடம்பெறுகின்றன.

இவர் சென்னையில் உள்ள துணைத்தூதர் அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தது முதல், இலங்கை அரசின் சார்பில் தமிழகத்தில் செய்தியாளர்கள் சந்திப்புகள் நடைபெறுகிறது. செய்தியாளர்கள் சந்திப்புக்கே உரிய “அனைத்து” அம்சங்களுடன் இவை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
.
இந்த சந்திப்புகளில் இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்துவதாக கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து இலங்கை அரசுத்தரப்பு வாதங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக எடுத்துவைக்கப்படுகின்றன.
.
தமிழ்ப்போராளிகள் தரப்பு செய்திகளை வெளியிடும் தமிழக செய்தியாளர்களின் உரிமையை இலங்கை அரசு மிகவும் மதிப்பதாகவும், ஆனால் நடுநிலையான தமிழக செய்தியாளர்கள் இலங்கை அரசுத்தரப்பு வாதங்களையும் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
.
இத்தகைய செய்தியாளர்கள் சந்திப்புகளில் அறிமுகமாகும் செய்தியாளர்களிடம் பின்னர் தனிப்பட்ட முறையிலும் உறவு பேணப்படுகிறது. இதைத்தொடர்ந்து இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகள் சற்றுக்கூடுதலாகவே தமிழ்நாட்டு ஊடகங்களில் இடம் பெறுகி்ன்றன.
இவ்வாறு வெளியான செய்திகள்தான் LTTE IN THE EYES OF TAMILNADU என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.
.
தமிழர்கள் விரலை எடுத்து தமிழரின் கண்ணையே குத்துவது போன்ற இந்த செயலுக்கு துணைபோவதை எத்தனை தமிழ்ச்செய்தியாளர்கள் உணர்ந்துள்ளனர் என்பது கேள்விக்குறியே.
.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்து மட்டுமே தமிழக ஊடகங்களிலும், தமிழக மக்களிடமும் நிலவுவதாக ஒரு தவறான கருத்தைத் திட்டமிட்டு பரப்ப இலங்கை அரசின் இந்த வெளியீடு மிகவும் உதவும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
.
உளவியல் ரீதியான இந்த யுத்த தந்திரம், ராஜதந்திரம் என்ற பெயரில் உலகில் உள்ள அனைத்து அரசுகளும் மேற்கொள்ளும் ஒரு வழக்கமான உத்திதான்.
இதன் மூலம் அரசு அமைப்புகள் அனைத்தும் மக்களுக்கு நலம் பயக்கும் விதத்தில் மட்டுமே செயல்படுவது போலவும், விடுதலைப்புலிகள் போன்ற போராளிகள் மட்டுமே மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது போலவும் ஒரு தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது.
.
இலங்கை அரசுக்கு எதிரான செய்திகளின்போது, அரசுத்தரப்பின் விளக்கத்தையும் வெளியி்ட்டு “நடுநிலை” பேணும் ஊடகங்கள், விடுதலைப்புலிகளுக்கு எதிரான செய்தி வெளியிடும்போது இந்த ‘நடுநிலை’ குறித்து கவலை கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.
பொது மக்களின் உளவியலில் மிக அதிகமான ஆதிக்கம் செலுத்தும் மீடியா உலகத்தினர், இதுபோன்ற விவகாரங்களை கையாளும்போது மிகவும் கவனமாக கையாளவேண்டும். ஏனெனில் இதுபோன்ற அரசு சார்பு செய்திகளை வெளியிடும்போது, அரசு சார்பு ஆயுதப் படையினர் ஈடுபடும் அராஜக செயல்பாடுகளும், மனித உரிமை மீறல்களும் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. அரசு அமைப்புகளும், அரசின் ஆயுதப்படையும் சட்டப்படியும், நியாயப்படியும் நடப்பதுபோன்ற பாவனைகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன.
.
நடுநிலை என்ற பெயரில் தவறான அல்லது அதற்கு எந்த விதத்திலும் குறைவில்லாத மிகைப்படுத்தப்பட்ட அல்லது அரைகுறையான தகவலை செய்தியாக வெளியிடுவது எந்த வகையிலும் பத்திரிகை தர்மத்தில் அடஙகாது என்பதை செய்தியாளர்கள் உணர வேண்டும்.
*************
இவ்வாறு நடுநிலை தவறிய செய்திகளும், தவறான புரிதலில் / கண்ணோட்டத்தில் வெளியாகும் செய்திகளும் இலங்கை தொடர்பான செய்திகளி்ல் மட்டுமே வெளியாவதில்லை.
.
உள்ளூர் செய்திகள் முதல் உலகச்செய்திகள்வரை அனைத்து செய்திகளும் இவ்வாறு பழுதுபட்ட அல்லது அரைகுறைப் பார்வைகளுடன்தான் வெளியாகின்றன. இதில் காட்சி ஊடகமான தொலைக்காட்சியும், அச்சு ஊடகமான பத்திரிகை உலகமும் போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுவதாகவே கூறலாம்.
.
தொலைக்காட்சி ஊடகம் என்பது காட்சி வழியே செய்தியை உணர்த்தும் மிக நவீன வடிவமாகும். ஆனால் இந்த வடிவம் “செய்தி” என்ற கருத்தின் உள்ளடக்கத்தையே மாற்றிவிட்டது. காட்சிகளுடன் வரும் தகவல்களே தொலைக்காட்சி ஊடகத்தின் செய்திகளாக உருவாக்கப்படுகின்றன. கருத்தியல் ரீதியான அம்சங்கள், அவை எவ்வளவு முக்கிய அம்சமாக இருந்தாலும், அவற்றிற்கு செய்தி என்ற அந்தஸ்து மறுக்கப்படுகிறது.
.
இதன் விளைவாகவே நாடு முழுவதும், விவசாயிகள் தற்கொலை போன்ற முக்கிய நிகழ்வுகள் செய்தியாக ஒளிபரப்பப்படும் அந்தஸ்தை இழந்து விடுகின்றன. உலகமய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்டபின் கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் ஒன்றரை லட்சம் விவசாயிகள் (கடன் தொல்லை காரணமாக) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அரசின் தேசிய குற்ற ஆவண மையம் (National Crime Records Bureau) தெரிவித்தாலும் அது நமது செய்தியாளர்களுக்கு முக்கிய நிகழ்வாகப் படுவதில்லை.
.
கடந்த 2006ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 112 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒரு தற்கொலை நிகழ்வதாக தெரிய வருகிறது. அதே 2006ம் ஆண்டில் தமிழ்நாட்டிலும் 12 ஆயிரத்து 381 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் சுமார் 75 சதவீதம் பேர் பத்தாம் வகுப்புவரைகூட படிக்கும் வாய்ப்பு இல்லாதவர்கள். விவசாயம் உள்ளிட்ட சுயதொழில் செய்தவர்கள். வறுமை காரணமாக குடும்பத் தேவைகளையும், மருத்துவ தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாமல் மனமொடிந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றெல்லாம் புள்ளிவிவரங்களை அரசுத்துறைகளே அளித்தாலும், இதற்கான பின்புலங்கள், காரணங்கள், தீர்வுகள் குறித்து தமிழ்நாட்டு தொலைக்காட்சி ஊடகங்கள் விமர்சனங்களையோ, விவாதங்களையோ முன்வைப்பதில்லை.
.
மாறாக இந்தத் தொ(ல்)லைக்காட்சி செய்திகளின் தினசரி காட்சிகளில் தங்கத்தின் விலையும், பங்கு மார்க்கெட் ஏற்ற, இறக்கங்களும் இடம் பெறுகின்றன. தொலைக்காட்சி பார்க்கும் மக்களில் சுமார் சுமார் 90 சதவீதம் பார்வையாளர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாத அம்சங்களை ஒலிபரப்பும் இந்த தொலைக்காட்சி செய்திகளில், மக்களின் அன்றாடத் தேவைகளான உணவுப்பொருட்களும், மருந்துப் பொருட்களும் தாறுமாறாக விலை ஏறினாலும் அது குறித்து எந்தவிதமான செய்தியோ, விமர்சனமோ, சிறப்புப்பார்வையோ இடம் பெறுவதில்லை.
.
அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுகூட வானிலை செய்தியைப்போல மிகவும் சாதாரணமாக மக்களிடம் எடுத்து வைக்கப்படுகிறது. அதற்கு பின்னால் உள்ள அரசியல் குறித்த விவாதங்கள் எழுப்பப்படுவதில்லை. அதற்கு மாறாக சில ஊடகங்கள் அந்த விலையேற்றத்தை நியாயப்படுத்தவும் முனைகின்றன.
பெருவாரியான மக்களின் அன்றாட வாழ்க்கைத்தேவைகள் அவர்களுக்கு எட்டாக்கனியாகி வருவது திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அம்மக்களின் சிந்தனையை தங்கம் நோக்கிய கனவுகளாக திசைதிருப்பும் முயற்சிகள் வெற்றிகரமாக நடந்தேறி வருகின்றன.
.
தொலைக்காட்சி ஊடகங்களின் இந்த அறமற்ற போக்கிற்கு அச்சு ஊடகங்கள் எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. அவையும் அவற்றின் வாய்ப்புக்கேற்ற வகையில் பலவித தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டே வருகின்றன.
குறிப்பாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களையும், பல்வகை அநீதிகளில் பாதிக்கப்படும் குழந்தைகளையும் சமூகத்திற்கு அடையாளம் காட்டும் வகையில் அவர்களின் புகைப்படங்களையும் பிரசுரிக்கக் கூடாது என்று நீதிமன்றங்கள் வலியுறுத்தினாலும் இந்த பத்திரிகைகள் அவற்றை கண்டுகொள்வதில்லை. இது போல அச்சு ஊடகங்கள் ஈடுபடும் மேற்கொள்ளும் நெறிமுறை மீறல்களை பட்டியலிட்டால் இந்த இதழ் நிறைந்து விடும் அபாயம் உள்ளது.
.
தொலைக்காட்சி ஊடகம், அச்சு ஊடகம் மற்றும் எலக்ட்ரானிக் மீடியா எனப்படும் நவீன இணையதள ஊடகங்கள் ஆகிய அனைத்துமே கூட்டாக சில தவறான கண்ணோட்டங்களையும், கருத்துகளையும் திட்டமிட்டு பரப்பி வருகின்றன.
.
இவை குறிப்பாக சமூகம் சார்ந்த செய்திகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக அரசியல்வாதிகள் ஈடுபடும் பெரும் ஊழல்களை அடக்கியே வாசிக்கும் இந்த ஊடகங்கள், பிரேமானந்தா (பெண்களை ஏமாற்றுதல்), டாக்டர் பிரகாஷ் (ஆபாசப்பட வழக்கு), சிவகாசி ஜெயலட்சுமி (மோசடி வழக்கு), செரீனா (கஞ்சா வழக்கு), நடிகை பத்மா (ஆபாசப்படம் எடுத்து மிரட்டுதல்) முதலியவர்கள் தொடர்புடைய செய்திகளில் தங்கள் கற்பனைச் சிறகுகளை விரித்துக்கொண்டு செய்தி வெளியிடுகின்றன.
.
காவல்துறையினரும் செய்தியாளர்களின் இந்தக் கற்பனைத்திறனுக்குத் தேவையான மூலக்கருவை வழங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு செய்வதன்மூலம் பொதுமக்களிடம் குற்றம் சாட்டப்பட்டவர் மீது கோபத்தை ஏற்படுத்த முடியும். பெருவாரியான மக்களின் கருத்திற்கு ஏற்ப நீதிமன்றமும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிவிடுகின்றன. இதன்மூலம் காவல்துறையினருக்கு மக்களிடம் நல்லெண்ணம் ஏற்படுத்தும் முயற்சியாக இத்தகையப் போக்கு கையாளப்படுகிறது.
.
ஆனால் இந்த “மீடியா டிரையல்” எனப்படும் பத்திரிகைகளின் மோசடியில் சிக்கிய அப்பாவிகளுக்கு நிவாரணம் வழங்க எந்த ஏற்பாடும் இல்லை. இதன் கோரமான உதாரணமாக ராஜீவ் காந்தி கொலை வழக்கை கூறலாம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் எதிராக சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை குறிப்பிடலாம். பொதுமக்களின் கருத்தில் குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டவர்கள் மீது நீதிமன்றமும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருப்பதாலேயே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருககும் மிக அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் மேல்முறையீட்டின்போது, மிக நீண்ட போராட்டங்களின் பயனாக, பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 19 பேர் விடுவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
.
இதுபோன்ற போக்கே காவல்துறையினர் மற்றும் ராணுவத்துறையினர் கையாளும் மோதல் கொலைகளிலும் கையாளப்படுகிறது. இதுபோன்ற போலி மோதல்களை நியாயப்படுத்தும் நோக்கில் கொல்லப்பட்டவரை தீவிரவாதியாக சித்தரிப்பதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகவே நிகழ்கிறது.
.
குஜராத் மாநிலத்தில் நடந்த "சொராப்தீன்" என்கவுண்டர் சம்பவமும் முதலில் இப்படித்தான் செய்தியாக வெளிவந்தது. பின்னர் அவரது குடும்பத்தினரின் பெரும் போராட்டத்திற்கு பின்னரே என்கவுன்டரில் கொல்லப்பட்ட சொராப்தீன் தீவிரவாதி அல்ல என்ற “உண்மையான உண்மை”யை ஊடகங்கள் வெளிப்படுத்தின.
.
அரசுத்தரப்பு செய்திகளையும், அரசியல் தலைவர்களின் செய்திகளையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் இந்த ஊடகங்கள் அரசின் கொள்கையையோ, அரசியல் தலைவர்களின் கொள்கைகளையோ விமர்சனம் செய்பவர்களின் வாதங்களை எந்த அளவுக்கு வெளியிடுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.
.
ஊடகங்களின் இந்தப்போக்கினால்தான் உலகமய பொருளாதாரம், அணுசக்தி, மரபணுமாற்ற வேளாண்மை, கட்டற்ற நகரமயம் போன்ற சமூகத் தீங்குகளை மக்கள் எந்தவிதமான விமர்சனமும் இன்றி ஏற்க வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது.
***************
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் மத்தியில் செய்தி ஊடகங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தமிழ் (மட்டும்) அறிந்தவர்கள் “தினத்தந்தி” உள்ளிட்ட செய்தித்தாள்களில் வந்த அனைத்து செய்திகளையும், அதன் பார்வைகளையும் எந்தக் கேள்வியுமின்றி நம்பியது வரலாறு. அதேபோல் ஆங்கிலம் அறிந்தவர்களும் “ஹிந்து”-லயே போட்டிருக்கான் என்று பேசியதும் உண்டு.
.
ஊடகங்கள் அனைத்தும் ஏதோ ஒரு அரசியலை வரித்துக் கொண்டு அதன் சார்பிலேயே இயங்கி வந்தாலும் ‘நடுநிலைமை’ என்ற முகமூடி அணிந்தே பல ஊடகங்கள் இயங்கின. அரசியல் கட்சியின் பிரசார சாதனங்களாக இருந்த சில ஊடகங்கள் மட்டுமே வெளிப்படையாக அரசியல் பேசின.
.
ஊடகங்கள் நடுநிலை வகிப்பதாக மக்கள் கொண்டிருந்த குருட்டுத்தனமான - தவறான நம்பிக்கையைத் தகர்த்து, மக்களின் இந்த பகுத்தறிவையும், சிந்தனை ஆற்றலையும் அதிகரிக்கச் செய்ததில் “சன் டிவி”யும், “ஜெயா டிவி”யும் முக்கிய இடம் வகித்தன. ஒரே செய்தியை இரு டிவி சேனல்களும் எதிரும்புதிருமான கோணத்தில் வெளியிட மக்கள் முதலில் திகைப்படைந்தனர். பிறகு மீடியாக்களின் அரசியலை புரிந்து கொள்ள ஆரம்பித்தனர்.
.
இந்த போக்கு தற்போது நன்கு வளர்ச்சி அடைந்து ஒரு குறிப்பிட்ட செய்தியை எந்தெந்த பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் எவ்வாறு செய்தியாக வெளியிடும் என்று சாதாரண வாசகனும் யூகிக்கும் அளவுக்கு வாசகனின் அறிவு விசாலமடைந்துள்ளது. சமூகப் பிரசினைகளின்போது இந்த தொலைக்காட்சிகளில் பேட்டியளிக்கும் படிப்பறிவற்ற சாமானிய மக்கள்கூட பேட்டி எடுக்கும் தொலைக்காட்சியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்ப பேட்டி கொடுக்க தயார் நிலையில் உள்ளனர்.
.
இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக சன் டிவிக்கும், ஜெயா டிவிக்கும் மீடியா விமர்சகர்கள் அனைவரும் நன்றி கூற வேண்டும்.
.
ஊடகங்களின் பார்வையாளர்கள் மற்றும் வாசகர்கள் இந்த அளவுக்கு விழி்ப்புணர்வு அடைந்துள்ள நிலையிலும், ஊடகங்களின் பொறுப்பற்றப்போக்கு தனிநபர்களுக்கு மட்டுமே எதிராக இருக்கும்வரை யாருடைய கவனத்தையும் அவ்வளவாக கவருவதில்லை. ஆனால் அது ஒரு சமூகத்திற்கே எதிராக மாறும்போதும் மக்களின் எதிர்விளைவு சாதாரணமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது; அவ்வாறு எதிர்பார்க்கவும் கூடாது.
.
சமூகத்தில் ஒடுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளவர்களும் சமூகவிழிப்புணர்வு அடைந்து வரும் இன்றைய நிலையிலும் ஊடகங்கள் இன்றைய மோசமான போக்கினை தொடர்ந்தால் பெரும் விபரீதங்களை சந்திக்க நேரிடலாம்.
எனவே ஊடகத்துறையினர் இதனை புரிந்து கொள்வதற்கும், தங்களைத் தாங்களே சுயவிமரிசனம் செய்து கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பமாகவே LTTE IN THE EYES OF TAMIL NADU என்ற புத்தகத்தை பார்க்க வேண்டும்.
.
நன்றி:
மே, 2008

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நண்பர் ஒருவர் அனுப்பிய சுட்டியின் மூலம் இந்த பதிவை படிக்கக் கிடைத்தது.

உளவியல் ரீதியான இதுபோன்ற பார்வைகள் தமிழகத்தில் அரிதாகி வருகின்றன.

எனினும் பல விடயங்களுக்கும் உளவியல் ரீதியான புரிந்துணர்வுடன்கூடிய தீர்வுகள் மட்டுமே நிலைத்து நிற்கும்.

தொடர்ந்து எழுதுங்கள், மனம் தளராமல்.

வாழ்த்துகள் நன்றி.

Suresh சொன்னது…

What ever you have explained clearly shows that your thoughts and action are partial towards one specific group. It is also seen that you are telling that the entire media world is fool and try to cheat the people and people like you are the only intelligent in the world. But i believe the contrary might be true.

கருத்துரையிடுக