18 ஜூன், 2008

கிரிக்கெட்டும், பெரியாரின் சீடர்களும்...!

சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின், பிரபல உறுப்பினரும், பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவரும், 1934ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அமைத்த சுப்ரீம் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினருமான மெக்காலே பிரபு நான்காண்டுகள் நமது நாட்டை சுற்றிப் பார்த்துவிட்டு ஆங்கிலேய அரசுக்கு எழுதியது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LORD MACAULAY’S ADDRESS TO THE BRITISH PARLIAMENT 2 FEBRUARY, 1835

I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief, such wealth I have seen in this country, such high moral values, people of such caliber, that I do not think we would ever conquer this country, unless we broke the very back bone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that foreign and English is good and greater than their own, they will loose their self esteem, their native culture and they will become what we want them, a truly dominated nation.(நான் இந்திய நாடு முழுக்க சுற்றிப்பார்த்ததில் ஒரு பிச்சைக்காரரையோ, திருடனையோ பார்க்கமுடியவில்லை. அத்தகைய வளம் மிகுந்த இந்நாட்டின் அறம் சார்ந்த மக்களை நாம் வெற்றி கொள்ள வேண்டுமானால் அவர்களது ஆன்ம-கலாச்சார பாரம்பரியத்தை உடைத்தாக வேண்டும். அதற்கு இந்தியாவின் பழமையான மற்றும் பாரம்பரிய கல்விமுறையை அகற்றிவிட்டு அவற்றைவிட மேலைநாட்டு விஷயங்களும், ஆங்கிலமும் உயர்ந்தது என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமாக அவர்கள் தன்னம்பிக்கையையும், சுய கலாச்சார அடையாளங்களையும் இழந்து, நாம் விரும்புவதைப்போல நம்மால் ஆளப்படும் மக்களாக மாறிவிடுவார்கள்!)


சில வாரங்களுக்கு முன் புதுவையில் பெரியார் திராவிடர் கழகத்தின் நிர்வாகிகள், அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு நடத்திய பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. உலக மயமாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து உரையாடப்போன நமக்கு, புதுவையில் அமையவிருந்த துறைமுகத்தை துரட்டியடித்த அந்த தோழர்களின் அனுபவம் பாடமாக அமைந்தது.

அதேபோல சேலம், மேட்டூர் பகுதியில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், மரபணு மாற்று வேளாண்மைக்கு எதிரான தங்கள் போராட்டங்களைப் பற்றிக்கூறினர்.

இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையில் தமிழக முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்களின் 85வது பிறந்த நாள் அமர்க்களமாக வந்துபோனது.
இந்த நன்னாளை ஒரு மாத காலத்திற்கு கொண்டாட தி.மு.க.வின் இளைஞர் அணி முடிவெடுத்து, சென்னையின் பல விளையாட்டு மைதானங்களில் மின்னொளியில் கிரிக்கெட் போட்டி நடத்தி வருகிறது. சுமார் 1358 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகளில் 15,000 வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுவதாக பிரமாண்டமான பிளக்ஸ் பேனர்கள் கூறுகின்றன.

கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி பல்வேறு அரசியல் கருத்துகள் உண்டு.

எந்த ஒரு நடவடிக்கையையும் அரசியல் கண்ணோட்டத்திலேயே பார்த்த, பார்க்கத்தூண்டிய பெரியாரின் மாணவர்கள், விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க முடியாது. அதன் பின் உள்ள அரசியலையும் பார்த்தே ஆக வேண்டும்.

17ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மாடு மேய்க்கும் சிறுவர்களின் விளையாட்டாக ஆரம்பித்த கிரிக்கெட் பின்னர், நிலப்பிரபுக்கள் மட்டுமே விளையாடும் “ஜென்டில் மேன்” விளையாட்டாக மாறிப்போனது. மாடு மேய்க்கும் சிறுவர்கள் அந்த விளையாட்டை தொடரமுடியாதவாறு அதன் விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானது வெள்ளை ஆடை.

இவ்வாறாக ஆரம்பித்த கிரிக்கெட் வரலாறு ஒலிம்பிக் போட்டிகளிலும் இடம் பெற முயன்று, சில போட்டிகளில் மட்டுமே இடம் பெற்று, ஒலிம்பிக்கில் இடம் பெறும் தகுதியை இழந்தது.

இந்த கிரிக்கெட் விளையாட்டை இன்று விளையாடும் பல நாடுகள் முன்பொரு காலத்தில் இங்கிலாந்து நாட்டிடம் அடிமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே கிரிக்கெட் விளையாட்டை “அடிமைப்புத்தியின் நீட்சி” என்றும் சொல்லலாம்.

ஐக்கிய நாடுகள் அவையின் அங்கீகாரம் பெற்ற நாடுகள் 192 இருக்கையில், வெறும் 12-13 நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட்டில் “உலகப்போட்டி” நடத்தும் நகைச்சுவை நம்மில் பலருக்கும் புரியாமல் போனது தமாஷான புதிர்தான்.

இந்திய கிரிக்கெட் அணிக்கும், இந்திய அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது இப்போதும் பலருக்கும் தெரியாது. அதேபோல இந்த வீரர்(!)களுக்கு மத்திய-மாநில அரசுகள் வீடு உள்ளிட்ட பரிசுகளை அளிப்பது எந்த அடிப்படையில் என்பதும் யாருக்கும் தெரியாது.

இந்த இந்திய அணியும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் அடிமைகளாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த அடிமைகளின் விளையாட்டை மையப்படுத்தி பல சூதாட்டங்கள் நடைபெறுவதும் அனைவரும் அறிந்ததே.

வணிகமயமாகிப்போன இந்த விளையாட்டின் நிர்வாகிகளாகவும், தூதர்களாகவும் நடிகர்கள் மாறிப்போனதும், கவர்ச்சி அம்சங்கள் சேர்க்கப்பட்டதும் அண்மைக்கால வரலாறு.

ஆனாலும், இந்த கிரிக்கெட் விளையாட்டின் ரசிகன் நான் என்று கூறிக்கொள்வதில் அரசியல் தலைவர்கள் யாரும் தயக்கம் காட்டுவதில்லை. தமிழகத்திலோ ஆளுனரும், முதல்வரும் இணைந்து சென்று இந்த “வீர” விளையாட்டை துவக்கியும் வைப்பார்கள்.

இந்த விளையாட்டுப் போட்டி நடைபெறும்போது ஏற்படும் உற்பத்தி இழப்பு குறித்து யாருக்கும் கவலையில்லை. சொல்லப்போனால் இந்த விளையாட்டையும் சேர்த்துப்பார்த்து மக்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ளத்தான் “இலவச வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி” வழங்கப்பட்டது.

“மானாட மயிலாட” நிகழ்ச்சி பார்த்து அறிவை வளர்த்துக் கொண்ட பெண்கள் வீட்டில் அதனை ஆடிப்பார்க்கலாம். அதேபோல கிரிக்கெட் போட்டி பார்த்து அறிவை வளர்த்துக் கொண்ட ஆண்கள் அதனை ஆடிப்பார்க்க ஒரு வாய்ப்பு வேண்டுமல்லவா? அதற்குத்தான் இந்த இரவு நேர கிரிக்கெட் போட்டிகள்.

நாட்டின் இறையாண்மையை அரசுத்தலைவர்களை கூறுபோட்டு விற்கும் நிலையில், மக்களின் நாட்டுப்பற்று கிரிக்கெட்டில் மட்டுமே உயிர்வாழ்கிறது. நம்புங்கள்! இளைய தலைமுறையின் பகுத்தறிவை வளர்க்கும் நோக்கில் தான் இந்த கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இந்த போட்டியில் வீழ்த்தப்படும் விக்கெட்டுகள்: சுயமரியாதை, சமூக சிந்தனை, பகுத்தறிவு!
பெரியார் திராவிடர் கழக பயிற்சி வகுப்புக்கு வந்த ஒரு தோழரிடம், “கிரிக்கெட் பார்ப்பீர்களா?” என்று கேட்டபோது, “நான் பெரியாரின் மாணவன். கிரிக்கெட்டை ஒழிக்கும் வழியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கிரிக்கெட் குறித்த உங்கள் பதிவுகளின் புகைப்படங்கள் அருமையாக இருந்தது

ஆண்ட்ரு சுபாசு சொன்னது…

அருமை..

பெயரில்லா சொன்னது…

சிந்திக்க வேண்டிய அருமையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். நிறைய எழுதுங்கள்.

படங்களுடன் எழுதுங்கள்.

பட்டிக்காட்டான் சொன்னது…

அந்த விளையாட்டை ஒழிக்க முழு முயற்சி மேற்கொள்ள உறுதியேற்போம்.

கருத்துரையிடுக