01 ஆகஸ்ட், 2008

பேரா சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்!

மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு.சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு,


வணக்கம்.


தமிழகத்தின் மிகச்சில சுயசிந்தனையாளர்களில் ஒருவர் நீங்கள். பெரியாரியத்தையும், மார்க்சியத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சீரிய பணியி்ல் தாங்கள் இருக்கிறீர்கள் என்பதும் உண்மையே.

தமி்ழ் ஆர்வலர்கள் பலரும் பழந்தமிழ் பெருமை பேசி செம்மாந்தும், செயலற்றும் இருக்கையில், நீங்கள் நடைமுறை வாழ்க்கை குறித்த பல அம்சங்களை பேசுவதும், செயல்படுவதும் மிகவும் வரவேற்கத்தக்கது.

இலக்கியம் என்பது காலத்தைப் போக்கவே என்பதை ஏற்காத நீங்கள், சமூக மாற்றத்திற்காக மட்டுமே பேசியும் எழுதியும் வருகிறீர்கள் என்பதையும் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.


மனித உரிமைகளுக்காகவும் தாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை நாடு நன்கு அறியும். மனித உரிமைகள் என்னும்போது சிறைக்கைதிகளின் உரிமைகளுக்காகவும் நீங்கள் கொடுத்த குரல் ஆனந்த விகடன் இதழில் அது ஒரு பொடாக்காலம் என்ற பெயரில் இலக்கியமாகவே பதிவாகி உள்ளது. இடையில் பல்வேறு காரணங்களுக்காக அந்தத் தொடர் நிறுத்தப்பட்டாலும், உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை நீங்கள் மிகச்சரியாகவும், நியாயமாகவும் பயன்படுத்தியதாகவே பலரும் நம்புகின்றனர்.


தற்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஆகஸ்ட் 2ம் தேதியன்று மரண தண்டனை ஒழிப்பு கோரிக்கை மாநாடு நடத்துவதும், அதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தோழர்கள் தொல். திருமாவளவன், சி. மகேந்திரன், கொளத்தூர் மணி, சீமான், தியாகு போன்றவர்களும் கலந்து கொண்டு உரையாற்றுவதும் மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.

மரண தண்டனைக்கு எதிராக உலகளாவிய அளவில் நடக்கும் பிரசாரத்தின் குரல் தமிழ்நாட்டிலும் தங்கள் மூலம் உரத்து ஒலிப்பதில் பெரும் மகிழ்ச்சியே.

இந்த நல்ல நேரத்தில் தங்கள் கவனத்திற்கு மேலும் சில அம்சங்களையும் கொண்டுவர விரும்புகிறேன்.


நமது கண்டனத்திற்குரிய மரண தண்டனை என்பது சட்டரீதியாக நடைபெறும் ஒரு வன்முறையாக உள்ளது. எனினும் இந்த வன்முறையில் பலியாகும் நபர் மீது சட்டப்படி குற்றம் சாட்டப்படுகிறது. அது முறையான ஒரு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது.


பின்னர் அது தானாகவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. உச்சநீதிமன்றமும் அந்த தண்டனையை உறுதி செய்தபின்னர் குடியரசுத்தலைவரிடம் கருணை காட்டும் மனு அளிக்கப்படுகிறது. அந்த கருணை மனுவும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.


இந்த நடைமுறைகள் அனைத்தும் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதாக யாரும் உறுதி அளிக்க முடியாது ஆனால் பெயரளவுக்காவது சட்டரீதியான ஒரு விசாரணை நடப்பதை யாரும் மறுக்கவும் முடியாது.


ஆனால் இந்தமாதிரி குறைந்த பட்ச விசாரணைகூட இல்லாமல், எந்த நீதிமன்றமும் தண்டனை விதிக்காமல், மேல்முறையீட்டுக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் யாருடைய கருணையும் இல்லாமல் நாட்டில் பல படுகொலைகள் என்கவுன்டர் என்ற பெயரில் நடப்பதை நீங்களும் அறிவீர்கள். நாடும் அறியும்.

என்கவுன்டரில் கொல்லப்படுபவர்மீது எந்த அக்கறையும் இல்லாதவர்கள்கூட, அவர்கள் கொல்லப்படும் முறையை ஏற்க மாட்டார்கள். இவ்வாறு கொல்லப்பட்ட ராஜாராம் என்ற நபருடன் சிறைக்கொட்டடியில் தாங்கள் நேரடியாக பழகியவர். அந்த ராஜாராம், விசாரணைக்காக நீதிமன்றம் (வழக்குமன்றம்?) –த்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பியோட முயன்றதாகக்கூறி காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணம் தங்களையும் கடுந்துயரில் ஆழ்த்தியது.


இந்த சம்பவத்தால் மனம் வெதும்பிய நீங்கள், இதனையும் அது ஒரு பொடாக்காலம் தொடரில் சித்திரமாக தீட்டியுள்ளீர்கள்.

உங்கள் மீது தொடரப்பட்ட பொடா வழக்குகள் திரும்பப்பெறப் பட்டுவிட்டாலும் தமிழகத்தில் பாவப்பட்ட சிலர் மீதான பொடா வழக்குகள் தொடர்ந்து நடந்து வருவதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அதைப்பற்றி இப்போது பேசவில்லை.


ஆனால், தங்கள் ஆதரவைப் பெற்ற தற்போதைய ஆட்சியிலும், என்கவுன்டர் மூலமாக 16 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. இவற்றை சட்ட அடிப்படையிலோ, கோட்பாடு அடிப்படையிலோ ஆதரிக்க முடியாது என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்றே நம்புகிறேன்.


இத்தகைய மோதல் மரணங்கள் குறித்து பல காலமாக நாட்டில் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த மரணங்களை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் 1993ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே அறிவுறுத்தி உள்ளது.


தற்போதைய தமிழக அரசும், தேசிய மனித உரிமை ஆணைய அறிவுறுத்தலை ஏற்று கடந்த 08-08-2007 அன்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இதனை அமல்படுத்துவதில்தான் காவல்துறை அதிகாரிகளுக்கு இயலாத காரியமாகி விடுகிறது.


தற்போதைய ஆட்சியாளர்களுடன் நல்லுறவுடன் இருக்கும் தாங்கள், இந்த என்கவுன்டர் படுகொலைகளுக்கு எதிராகவும் களம் இறங்கி பணியாற்றினால் நாம் அனைவரும் வெறுக்கும் என்கவுன்டர் படுகொலைகளுக்கும் முடிவு கட்டமுடியும் என்று நான் உளமாற நம்புகிறேன்.

சட்டரீதியாக நடைபெறும் மரண தண்டனைக்கு எதிராக உரத்து குரல் எழுப்பும் நீங்கள், சட்டவிரோதமாக நடைபெறும் இந்த என்கவுன்டர் படுகொலைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.


மிகுந்த நம்பிக்கையுடன்,


சுந்தரராஜன்