01 ஆகஸ்ட், 2008

பேரா சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்!

மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு.சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு,


வணக்கம்.


தமிழகத்தின் மிகச்சில சுயசிந்தனையாளர்களில் ஒருவர் நீங்கள். பெரியாரியத்தையும், மார்க்சியத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சீரிய பணியி்ல் தாங்கள் இருக்கிறீர்கள் என்பதும் உண்மையே.

தமி்ழ் ஆர்வலர்கள் பலரும் பழந்தமிழ் பெருமை பேசி செம்மாந்தும், செயலற்றும் இருக்கையில், நீங்கள் நடைமுறை வாழ்க்கை குறித்த பல அம்சங்களை பேசுவதும், செயல்படுவதும் மிகவும் வரவேற்கத்தக்கது.

இலக்கியம் என்பது காலத்தைப் போக்கவே என்பதை ஏற்காத நீங்கள், சமூக மாற்றத்திற்காக மட்டுமே பேசியும் எழுதியும் வருகிறீர்கள் என்பதையும் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.


மனித உரிமைகளுக்காகவும் தாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை நாடு நன்கு அறியும். மனித உரிமைகள் என்னும்போது சிறைக்கைதிகளின் உரிமைகளுக்காகவும் நீங்கள் கொடுத்த குரல் ஆனந்த விகடன் இதழில் அது ஒரு பொடாக்காலம் என்ற பெயரில் இலக்கியமாகவே பதிவாகி உள்ளது. இடையில் பல்வேறு காரணங்களுக்காக அந்தத் தொடர் நிறுத்தப்பட்டாலும், உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை நீங்கள் மிகச்சரியாகவும், நியாயமாகவும் பயன்படுத்தியதாகவே பலரும் நம்புகின்றனர்.


தற்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஆகஸ்ட் 2ம் தேதியன்று மரண தண்டனை ஒழிப்பு கோரிக்கை மாநாடு நடத்துவதும், அதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தோழர்கள் தொல். திருமாவளவன், சி. மகேந்திரன், கொளத்தூர் மணி, சீமான், தியாகு போன்றவர்களும் கலந்து கொண்டு உரையாற்றுவதும் மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.

மரண தண்டனைக்கு எதிராக உலகளாவிய அளவில் நடக்கும் பிரசாரத்தின் குரல் தமிழ்நாட்டிலும் தங்கள் மூலம் உரத்து ஒலிப்பதில் பெரும் மகிழ்ச்சியே.

இந்த நல்ல நேரத்தில் தங்கள் கவனத்திற்கு மேலும் சில அம்சங்களையும் கொண்டுவர விரும்புகிறேன்.


நமது கண்டனத்திற்குரிய மரண தண்டனை என்பது சட்டரீதியாக நடைபெறும் ஒரு வன்முறையாக உள்ளது. எனினும் இந்த வன்முறையில் பலியாகும் நபர் மீது சட்டப்படி குற்றம் சாட்டப்படுகிறது. அது முறையான ஒரு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது.


பின்னர் அது தானாகவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. உச்சநீதிமன்றமும் அந்த தண்டனையை உறுதி செய்தபின்னர் குடியரசுத்தலைவரிடம் கருணை காட்டும் மனு அளிக்கப்படுகிறது. அந்த கருணை மனுவும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.


இந்த நடைமுறைகள் அனைத்தும் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதாக யாரும் உறுதி அளிக்க முடியாது ஆனால் பெயரளவுக்காவது சட்டரீதியான ஒரு விசாரணை நடப்பதை யாரும் மறுக்கவும் முடியாது.


ஆனால் இந்தமாதிரி குறைந்த பட்ச விசாரணைகூட இல்லாமல், எந்த நீதிமன்றமும் தண்டனை விதிக்காமல், மேல்முறையீட்டுக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் யாருடைய கருணையும் இல்லாமல் நாட்டில் பல படுகொலைகள் என்கவுன்டர் என்ற பெயரில் நடப்பதை நீங்களும் அறிவீர்கள். நாடும் அறியும்.

என்கவுன்டரில் கொல்லப்படுபவர்மீது எந்த அக்கறையும் இல்லாதவர்கள்கூட, அவர்கள் கொல்லப்படும் முறையை ஏற்க மாட்டார்கள். இவ்வாறு கொல்லப்பட்ட ராஜாராம் என்ற நபருடன் சிறைக்கொட்டடியில் தாங்கள் நேரடியாக பழகியவர். அந்த ராஜாராம், விசாரணைக்காக நீதிமன்றம் (வழக்குமன்றம்?) –த்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பியோட முயன்றதாகக்கூறி காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணம் தங்களையும் கடுந்துயரில் ஆழ்த்தியது.


இந்த சம்பவத்தால் மனம் வெதும்பிய நீங்கள், இதனையும் அது ஒரு பொடாக்காலம் தொடரில் சித்திரமாக தீட்டியுள்ளீர்கள்.

உங்கள் மீது தொடரப்பட்ட பொடா வழக்குகள் திரும்பப்பெறப் பட்டுவிட்டாலும் தமிழகத்தில் பாவப்பட்ட சிலர் மீதான பொடா வழக்குகள் தொடர்ந்து நடந்து வருவதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அதைப்பற்றி இப்போது பேசவில்லை.


ஆனால், தங்கள் ஆதரவைப் பெற்ற தற்போதைய ஆட்சியிலும், என்கவுன்டர் மூலமாக 16 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. இவற்றை சட்ட அடிப்படையிலோ, கோட்பாடு அடிப்படையிலோ ஆதரிக்க முடியாது என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்றே நம்புகிறேன்.


இத்தகைய மோதல் மரணங்கள் குறித்து பல காலமாக நாட்டில் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த மரணங்களை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் 1993ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே அறிவுறுத்தி உள்ளது.


தற்போதைய தமிழக அரசும், தேசிய மனித உரிமை ஆணைய அறிவுறுத்தலை ஏற்று கடந்த 08-08-2007 அன்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இதனை அமல்படுத்துவதில்தான் காவல்துறை அதிகாரிகளுக்கு இயலாத காரியமாகி விடுகிறது.


தற்போதைய ஆட்சியாளர்களுடன் நல்லுறவுடன் இருக்கும் தாங்கள், இந்த என்கவுன்டர் படுகொலைகளுக்கு எதிராகவும் களம் இறங்கி பணியாற்றினால் நாம் அனைவரும் வெறுக்கும் என்கவுன்டர் படுகொலைகளுக்கும் முடிவு கட்டமுடியும் என்று நான் உளமாற நம்புகிறேன்.

சட்டரீதியாக நடைபெறும் மரண தண்டனைக்கு எதிராக உரத்து குரல் எழுப்பும் நீங்கள், சட்டவிரோதமாக நடைபெறும் இந்த என்கவுன்டர் படுகொலைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.


மிகுந்த நம்பிக்கையுடன்,


சுந்தரராஜன்

9 கருத்துகள்:

கரிகாலன் சொன்னது…

தமிழர்களின் தன்மானப் போராட்ட வரலாற்றில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் பங்களிப்பை யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியது. அப்படிச் செய்யவும் கூடாது.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு பொதுக்கூட்டங்கள் மாநாடுகளில் தோழர் சுப.வீரபாண்டியன் அவர்களின் உரையை தவறாமல் கேட்டவர்களில் நானும் ஒருவன்.

தற்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியைப் பற்றி எனக்கு முழுமையான புரிதல் ஏற்பட காரணமாக இருந்தவர்களில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர்.

இந்நிலையி்ல் தோழரின் கருணாநிதி ஆதரவு கொள்கை என்னை வியக்க வைக்கிறது.

ஆதுபோல் கனிமொழி அவர்களையும் தமிழின உரிமையை மீட்க தயாராக இருப்பவராகவும் மனித உரிமைப் போராளியாகவும் பேராசிரியர் அவர்களால் சித்தரிக்கப்படுவதும் விசித்திரமாக உள்ளது.

மரியாதைக்குரியவர்களை விமர்சிக்க வருத்தமாகத்தான் உள்ளது... இருந்தாலும் என்ன செய்ய...

பதவி ஆசை, சபலம், சலனம், நம்பி மோசம் போவது, எதிரிக்கு அடிமையாக இருப்பது, தகுதியற்றவனிடம் யாசகம் செய்வது, துரோகிகளுக்கு பல்லக்குத்தூக்குவது, தகரத்தை தங்கமென நினைப்பது போன்றவை தமிழின வரலாற்றுக்கு புதியது அல்ல...

பெயரில்லா சொன்னது…

அடடே!

பெயரில்லா சொன்னது…

//.தமிழர்களின் தன்மானப் போராட்ட வரலாற்றில் //

கரிகாலன் அய்யா,

தமிழர்களின் தன் மானப் போராட்டம் முடிந்து விட்டதா அல்லது இன்னும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோமா?போராட்டம் முடிந்து விட்டால் சுப.வீ போன்றவர்கள் வேலை இல்லாத கும்பலில் சேர்ந்து விடுவார்களா?விளக்கமா சொல்லுங்கய்யா.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

உங்களின் மனிதாபிமானத்திற்கு நான் தலைவணங்குகின்றேன்.
என்கவுண்டர் எனும் முறையில் கொல்லப்படுவோர்க்கு நீங்கள் குரல் கொடுக்கின்றீர்கள், குற்றம் செய்வது கொடுரனே ஆனாலும் அவர்கள் உயிர் இப்படி எல்லாம் பறிக்கப்படக் கூடாது எனும் உங்கள் மனிதாபிமானம் பாராட்டத்தக்கது. வெறுமனே பாராட்டமட்டுமே தக்கது.

என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்படுபவர்கள் எல்லாம் யார்? அவர்களையெல்லாம் கைது செய்து, காவலில் வைத்து, வழக்கு போட்டு, நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, அவர்களது குற்றங்களை நிரூபித்து தண்டணை வாங்கிக்கொடுத்து சிறையிலடைக்க எவ்வளவு காலம் ஆகும்? அதற்கு ஆகும் செலவு ஆகும்? அப்படியே சிறையிலடைத்தாலும் அங்கு மட்டும் அவர்கள் உண்மையான தண்டணையையா அனுபவிக்கின்றார்கள்? சிறை கூடத்தையே சிற்றின்ப கூடாராமாக்கி வாழ்க்கையை அரசாங்கத்தின் பாதுகாப்பிலும், செலவிலும் அனுபவிக்கின்றார்கள்.

ஒன்று சட்டத்தை கடுமையாக்குங்கள். அல்லது இது போன்ற உடனடி தண்டணைகளை கண்டும் காணாமல் இருங்கள்.

இந்த குற்றவாளிகள் எல்லாம் ஒரு காலத்தில் நமது காவல் துறையினராலோ, அரசியல்வாதிகளாலோ அல்லது இருவருமாலோ ஆதரிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டவர்களத்தான் இருப்பார்கள். ஏதோ ஒரு சில காரணங்களுக்காக கொல்லப்படுகின்றார்கள். இதை பார்த்தாவது எந்த அரசியல்வாதியையும், காவல்துறையினரையும் நம்பி ரவுடித்தனத்தில் இறங்க யாராவது அஞ்சுகின்றார்களா? இல்லையே தன்னையும் ஒரு நாள் காவல்துறையின் என்கவுண்டர் தேடிவரும் என்று தெரிந்தும் இவர்கள் தவறு செய்கின்றார்கள் என்றால் அவர்கள் எல்லாம் விளக்கை தேடிப்போகும் விட்டில் பூச்சிகள் தானே? விட்டில் பூச்சிகளுக்கு ஏது நீடிய ஆயுள் ? அவற்றின் இறப்பிற்கு யாராவது புலம்ப முடியுமா?
என்கவுண்டர் என்ற ஒரு பயமாவது இருக்கட்டும் அந்த ரவுடிகளுக்கு. அதையும் எதிர்த்து போராட வேண்டாம்.

சுந்தரராஜன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
....இந்த குற்றவாளிகள் எல்லாம் ஒரு காலத்தில் நமது காவல் துறையினராலோ, அரசியல்வாதிகளாலோ அல்லது இருவருமாலோ ஆதரிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டவர்களத்தான் இருப்பார்கள். ஏதோ ஒரு சில காரணங்களுக்காக கொல்லப்படுகின்றார்கள்....//

தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பால்ராஜ்.

ஆனால், நீங்கள் கூறிய "குற்றவாளி"களை உருவாக்கி, வளர்த்தெடுத்து, பயன்படுத்தி, லாபம் சம்பாதித்து பின் பிளாஸ்டிக் கப்பைப்போல விட்டெறியும் காவல்துறையினரையும், அரசியல்வாதிகளையும் யார் என்கவுன்டர் செய்வது?

அவர்கள் விசாரணைக்கோ, நீதியின் நடவடிக்கைக்கோ அப்பாற்பட்டவர்களா? அவர்களை தண்டிக்க என்ன வழி?

அதற்கும் ஒரு வழி சொல்லுங்கள்.

Jayakumar சொன்னது…

//என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்படுபவர்கள் எல்லாம் யார்? அவர்களையெல்லாம் கைது செய்து, காவலில் வைத்து, வழக்கு போட்டு, நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, அவர்களது குற்றங்களை நிரூபித்து தண்டணை வாங்கிக்கொடுத்து சிறையிலடைக்க எவ்வளவு காலம் ஆகும்? அதற்கு ஆகும் செலவு ஆகும்? அப்படியே சிறையிலடைத்தாலும் அங்கு மட்டும் அவர்கள் உண்மையான தண்டணையையா அனுபவிக்கின்றார்கள்? சிறை கூடத்தையே சிற்றின்ப கூடாராமாக்கி வாழ்க்கையை அரசாங்கத்தின் பாதுகாப்பிலும், செலவிலும் அனுபவிக்கின்றார்கள்.//

இவர்கள் எல்லாம் உண்மையில் குற்றவாளிகள் என நமக்கு எப்படி தெரியும்? போலிஸ் சொல்லிவிட்டதாலா? நமது போலீசாரின் நம்பகத்தன்மை அந்த அளவிற்கு உள்ளதா?

இருப்பினும்...

The trouble with fighting for human freedom is that one spends most of one's time defending scoundrels. For it is against scoundrels that oppressive laws are first aimed, and oppression must be stopped at the beginning if it is to be stopped at all.
- H. L. Mencken (1880 - 1956)

கார்க்கிபவா சொன்னது…

//ஆனால், நீங்கள் கூறிய "குற்றவாளி"களை உருவாக்கி, வளர்த்தெடுத்து, பயன்படுத்தி, லாபம் சம்பாதித்து பின் பிளாஸ்டிக் கப்பைப்போல விட்டெறியும் காவல்துறையினரையும், அரசியல்வாதிகளையும் யார் என்கவுன்டர் செய்வது?//

அதற்கு வழியில்லை என்பதற்காக இவர்களையும் விட்டு விட வேண்டும் எனபதில் என்ன நியாயம் இருக்கிறது நண்பரே?உங்கள் வீட்டில் யாரவது ஒருவர் இது போன்ற ரொளடிகளால் பாதிக்கபட்டிருந்தால் புரியும்.

எனக்கு தெரிந்து அப்பாவிகளை என்கவுன்டர் செய்ததாக தெரியவில்லை.அப்படி நடந்தால் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.

பெயரில்லா சொன்னது…

நண்பர் ஒருவர் கூறியதால் இந்தப் பதிவை படித்தேன். நல்ல கருத்துகள்.

முந்தைய பதிவுகூட (கிரிக்கெட் குறித்த)ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

எனினும் இதுபோன்ற அர்த்தமுள்ள பதிவுகள் தேவையான அளவில் விவாதங்களை எழுப்பாதது, தமிழர்களின் சிந்தனை ஆற்றல் குறித்த ஐயங்களை எழுப்புகிறது.

ராஜ நடராஜன் சொன்னது…

மனிதன் ஒரே திசை நோக்கிப் பயணிக்க வேண்டியதில்லை என்பதற்கும் தனிமனித சமூக அழுத்தங்கள்,அரசியல் சார்புகளின் தேவைகளால் மனம் மாறுவதற்கும் சமீபத்து உதாரணம் சுப.வீரபாண்டியன்.

சட்டவியல் வல்லுனர்கள் சிலர் பதிவுலகில் முகம் காட்டுவது மகிழ்ச்சியை தருகிறது.அதே போன்று இது போன்று காவல்துறையைச் சார்ந்தவர்களும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளின் அனுபவங்களை பொதுவுக்கு வைப்பது புரிதலுக்கும் சமூக மாற்றத்திற்கும் வழி வகுக்கும்.

கருத்துரையிடுக