18 மே, 2011

கல்பாக்கம் – ஒரு செய்தியாளனின் அனுபவம் (மீள் பதிவு)

திருச்சியில் நாளேடு ஒன்றில் சுறுசுறுப்பான செய்தியாளனாக ஊர்சுற்றி வேலை செய்த அனுபவத்தில், சென்னைக்கு வந்து தொலைக்காட்சி ஒன்றில் பணிக்கு சேர்ந்தால், துணை ஆசிரியராக டெஸ்க்கில் உட்கார வைத்தார்கள்.

ஓடிப்பழகிய கால் நிற்பதற்கு சங்கடப்படவே மூத்த உதவி ஆசிரியர் ஒருவரிடம் புலம்பியதில், கல்பாக்கம் அணு உலையின் ஆபத்துகள் குறித்து ஒரு செய்தி தயாரிக்க முடியுமா? என்று கேட்டார்.
சென்னைக்கு வந்து சில நாட்களே ஆன நிலையில், கல்பாக்கம் எங்கிருக்கிறது என்பதுகூட தெரியாதபோதும், அணுசக்தி மீதும், அதன் தேவை என்று அரசு கூறிய கருத்துகள் மீதும் நான் கொண்டிருந்த சந்தேகம் ஒன்றை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு என் தேடலை தொடங்கினேன்.
இறுதியில் அணுமின் நிலையத்தில் சாதாரண தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றிய ஒருவர் மூலம் சில விஞ்ஞானிகளின் அறிமுகம் கிடைத்தது. அணுசக்தி விவகாரத்தில் உலக அளவில் நடைபெறும் விவகாரங்களை கூறிய அவர்கள், அணு ஆற்றல் என்பது மலிவானதோ, நம்பகமானதோ அல்ல என்று உறுதியாக கூறினார்கள். வேறு நோக்கங்களுக்காகவே அணு ஆற்றல் பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் கூறினர். அந்த விஞ்ஞானிகள் பேசியது எனக்கு முழுமையாக புரியாவிட்டாலும், அணுசக்தி குறித்த என் சந்தேகங்கள் நியாயமானவை என்பது மட்டும் புரிந்தது.
அணுசக்தி குறித்து எனது அறிவின்மையையும், ஆர்வத்தையும் பார்த்து பரிதாபப்பட்ட அந்த விஞ்ஞானிகள், என்னை அப்பகுதியில் மருத்துவத்தை உண்மையாகவே சேவையாக செய்து வந்த மருத்துவர் புகழேந்தியிடம் அறிமுகம் செய்து வைத்தனர். 
மருத்துவர் புகழேந்தி அவருடைய சக்திக்கேற்ற வகையில் எனக்கு அணுசக்தி குறித்த புரிதலை ஏற்படுத்த முயற்சித்தார். அவர் கூறுவதைப் புரிந்துகொள்ள நான் தடுமாறுவதைப் பார்த்து வெறுத்துப்போன மற்றொரு நண்பர், எழுத்தாளர்ஸ்வகோஷ் (தற்போதைய ராசேந்திர சோழன்) எழுதிய அணு சக்தி மர்மம் என்ற எளிமையான தமிழில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான புத்தகத்தை கொடுத்தார். அந்தப் புத்தகம் எனக்கு அணுசக்தி குறித்த புரிதலை ஓரளவு ஏற்படுத்தியது.

இதற்கிடையில் நான் சுமார் 10 முறை கல்பாக்கம் சென்று வந்திருப்பேன். அனைத்தும் எனது ஓய்வு நேரத்திலும், சொந்த செலவிலுமாக.

அப்போது நான் பணிபுரிந்த நிறுவனத்தின் ஆங்கில செய்திப்பிரிவின் தலைவராக இருந்த திரு. ஏ.எஸ். பன்னீர்செல்வம், அணுசக்திக்கு எதிராக பல கட்டுரைகளை அவர் முன்னர் பணியாற்றிய அவுட்லுக் இதழில் எழுதியதை படித்திருந்ததால் அவரிடமும் நேரில் விவாதித்தேன். அவரும் தேவையான விளக்கங்களை கொடுத்தார். பிறகு கல்பாக்கம் அணுமின் நிலையத்தை படம் எடுக்க சிறந்த வழி படகு மூலம் கடலில் சென்று எடுப்பதுதான் என்று வழியைக்கூறிய அவர், ஆனால் நான் பிடிபட்டு அணுசக்தி சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டால் ஆயுளுக்கும் வெளியே வர முடியாது என்றும் எச்சரித்தார்.

அப்போது மாலை நேர சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நான், என் சிலபஸில் இல்லாத அணுசக்தி சட்டத்தை முழுமையாக படித்தேன். அதன் பயனாக தேவையற்ற ரிஸ்க் எடுப்பதில்லை என்று முடிவெடுத்தேன்.

பலரிடமும் பேசிய தகவல்களை ஒரு செய்தியாக கொடுக்க முடியும் என்று நம்பிக்கை வந்த நிலையில் படபிடிப்புக்கு தயாரானேன். எனக்கு அதுவரை படபிடிப்பு விவகாரங்களில் அனுபவம் இல்லை என்பதால் பெண் செய்தியாளர் ஒருவர் எனக்கு உதவி செய்ய முன்வந்தார். ஒரு வழியாக இரு இரவுநேர பணிக்கு இடையேயான ஒரு பகல் நேரத்தில் படபிடிப்புக்கு கிளம்பினோம்.
ில சந்திப்புகளிலேயே நண்பராகிவிட்ட மருத்துவர் புகழேந்தி, கோவை மருத்துவர் ரமேஷையும் கல்பாக்கத்திற்கு வரவழைத்திருந்தார். அவர்கள் இருவரும் வைத்திருந்த லேப்-டாப்பில் அணுசக்தி குறித்த ஏராளமான தகவல்களை வைத்திருந்தனர்.

ஏதோ ஒரு கலர்ஃபுல்லான விழா அல்லது நிகழ்ச்சிக்கு செல்கிறோம் என்று நினைத்து என்னோடு வந்த ஒளிப்பதிவாளர், மக்களின்  (சுவாரசியமற்ற) பிரசினைகளைத்தான் பதிவு செய்யப்போகிறோம் என்று தெரிந்தவுடன் ஒளிப்பதிவு உதவியாளரிடம் கேமராவை ஒப்படைத்துவிட்டு, தம்மை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு தூங்க ஆரம்பித்தார்.

இதற்கிடையில் மருத்துவர்கள் புகழேந்தியும், ரமேஷும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் பாதிக்கக்கூடிய இடங்களை அவர்கள் வைத்திருந்த கம்ப்யூட்டரில் வரைபடமாகவும் காட்டினர். எனக்கு வயிற்றை கலக்கியது. காரணம், நான் பணியாற்றிய அலுவலகம் மற்றும் நான் தங்கியிருந்த திருவல்லிக்கேணி மேன்ஷன் அனைத்தும் அந்த அபாய வளையத்திற்குள் இருந்தது. அந்த தகவல்களையும், வரைபடங்களையும் எங்கள் கேமரா மூலம் படம் பிடித்துக்கொண்டு களப்பணிக்கு கிளம்பினோம்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தை படம் எடுக்க முடியாது என்பதால் அதன் பெயர்ப்பலகையை படம் எடுக்க முடிவு செய்தபோது காவலர் ஒருவர் ஓடிவந்து தடு்த்து விசாரித்தார். விபரம் சொன்னபிறகு உரிய முறையில் அனுமதி பெற்று வந்தால்தான் பெயர் பலகையைக்கூட படம் எடுக்க முடியும் என்று சொன்னார். அணுசக்தி சட்டத்தின் கீழ் சிறைபுகும் உத்தேசம் இல்லாததால் அந்த எண்ணத்தை கைவிட்டு வேறு பகுதிகளை பார்வையிட கிளம்பினோம்.

கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காண்பித்த மருத்துவ நண்பர்கள், அணுமின் உலை அமைந்துள்ள பகுதியிலும் கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பதையும், இதன்மூலம் அணுமின் உலையின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனர்.
அடுத்து மீனவ கிராமத்தில் உள்ள சிலரை பெயர் சொல்லி அழைத்த மருத்துவர் புகழேந்தி, மேலும் சிலரை அழைத்து வருமாறு கூறினார். அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் பெரும்பாலும் 10 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகளாக இருந்தனர். அவர்களுடைய கைகளிலும், கால்களிலும் 6 விரல்கள் இருந்தன. சிலருக்கு இரு விரல்களுக்கு இடையேயான பிளவு மிக அதிகமாகவும், சிலருக்கு இரண்டு அல்லது மூன்று விரல்கள் ஒட்டியும்கூட இருந்தன. அனைவருமே இயல்பாக இருப்பதில் சிரமம் இருப்பதாக கூறினர்.
ஏதாவது ஒரு கையிலோ, காலிலோ ஒரு விரல் மட்டுமே கூடுதலாக இருந்ததை ஏற்கனவே பார்த்திருந்தாலும், இரு கைகளிலும், கால்களிலும் கூடுதலாக ஒவ்வொரு விரல்கள் இருந்ததை பார்த்த எனக்கு இது இயல்பானதல்ல என்பது மட்டும் புரிந்தது.
பிறகு மருத்துவர் புகழேந்தி விளக்கினார். பாலிடாக்டிலி (POLYDACTYLY) என்ற நோய், குழந்தை கருவில் இருக்கும்போது ஏற்படும் சூழ்நிலைக் கோளாறுகளால் ஏற்படுவது என்றும், கதிரியக்க பாதிப்பு காரணமாக கல்பாக்கம் பகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு இந்த நோய் பாதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கதிரியக்க பாதிப்புகளால் ஏற்படும் பல்வேறு நோய்களில் இந்த நோய் மட்டுமே உடனடியாக அடையாளம் காணக்கூடிய நோய் என்றும், இது மட்டுமல்லாமல் புற்றுநோய், ஆண்மைக்குறைவு, கருச்சிதைவு உள்ளிட்ட பல நோய்கள் கதிரியக்க பாதிப்பால் ஏற்படும் என்றும் புகழேந்தி தெரிவித்தார்.

கல்பாக்கம் பகுதியில் மீன்வளம் குறைந்து விட்டதாகவும், அணுமின் நிலையத்திற்கு இடம் கொடுத்த பலருக்கும், அரசுத்தரப்பில் உறுதி அளித்தபடி வேலை வழங்காததால் அவர்களின் வாழ்வே கேள்விக்குறியாக இருப்பதாகவும் அப்பகுதி மீனவ மக்கள் தெரிவித்தனர்.

புற்றுநோய் காரணமாக மரணம் அடையும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஆனால் மரணத்திற்கான காரணம் புற்றுநோய் எனக் குறிப்பிடுவதை தவிர்த்தால் வாரிசுகளுக்கு வேலை உட்பட பல்வேறு உதவிகளை செய்வதால் பல பணியாளர்களின் மரணத்திற்கான உண்மையான காரணம் திட்டமிட்டு திரிக்கப்படுவதாக கல்பாக்கம் அணுமின் நிலைய பணியாளர்கள் தெரிவித்தனர்.
கல்பாக்கம் அருகே கடலில் கலக்கும் பாலாற்றை சுட்டிக்காட்டிய மருத்துவர்கள், பாலாற்று மணலிலும் கதிரியக்க பாதிப்புகள் இருக்கக்கூடும் என்றும், பாலாற்று மணலே சென்னை நகரத்தில் கட்டடம் கட்ட முதன்மையாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறினர். அதனால் என்ன பிரசினை என்ற என் கேள்விக்கு, அந்த கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறி மீண்டும் என் வயிற்றை கலக்கினார்.

அணுமின் உலையில் ஒப்பந்த அடிப்படையில், அருகே உள்ள பகுதிகளில் வசிக்கும் கல்வி அறிவற்ற மக்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதாகவும், அவர்களுக்கு புரியும்விதத்தில் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்காமலே அந்த சாமானியர்களை கதிரியக்கப் பொருட்களை கையாள அணுமின் உலை அனுமதிப்பதாகவும் அங்கு பணியாற்றுபவர்கள் தெரிவித்தனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அம்மக்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னர் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்படுவது நிச்சயம் என்றும், ஆனால் காரணம் தெரியாமலே அந்த மக்கள் இறந்துபோகும் நிலை உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

ஓரளவிற்கு படபிடிப்பை முடித்துக்கொண்ட நான் தேவையான சில பேட்டிகளையும் பதிவு செய்து கொண்டு நண்பர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றேன்.

மாலைவேளையில் திரும்பும்போது சதுரங்கப்பட்டினம் உட்பட பல பகுதிகளில் மின்விளக்குகள் மிகக்குறைந்த வெளிச்சத்துடன் அழுதுவடிந்து கொண்டிருந்தது. விசாரித்தபோது குறைந்த மின் அழுத்தம் காரணமாக டியூப் விளக்குகள் அப்பகுதியில் எரியாது என்றும், மற்ற பல்புகளும் மிகக்குறைவான வெளிச்சத்தையே தரும் என்றும் தெரிய வந்தது.

மின்தேவையை பூர்த்தி செய்வதற்காக இயங்கும் அணுமின் நிலையத்தின் அருகே வசிக்கும் மக்களுக்கே, தேவையான மின்சாரம் வழங்க முடியாத அரசுக் கொள்கைகளை நினைத்து வருந்திக்கொண்டே சென்னை திரும்பினோம்.
அலுவலகத்தில் நான் எடுத்து வந்திருந்த படக்காட்சிகளை பார்த்த தொழில் நுட்ப பணியாளர்கள், மிகவும் வறட்சியான ஒரு செய்தியை கொண்டு வந்திருப்பதாக அதிருப்தி தெரிவித்தனர்.

தனிப்பட்ட நட்பு மூலம் என்னை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்த ஒரு நண்பர் மட்டும் ஆதரவாக பேசி உதவி செய்ய முன் வந்தார். மேலும் கல்பாக்கம் அணுஉலை நிர்வாகத்தின் அனுமதியுடன் ஏற்கெனவே எடுக்கப்பட்டு இருந்த படக்கோப்புகளை (file-shot) தேடித்தந்தும் உதவினார்.

இதற்கிடையில் மீண்டும் திரு. ஏ.எஸ். பன்னீர்செல்வம் அவர்களிடம் ஆலோசித்துவிட்டு செய்திக்கான ஸ்கிரிப்டை எழுதி கொடுத்தேன். பல நாட்கள் ஆகியும் அது குறித்த முடிவு தெரியாத நிலையில், இந்த பணியை என்னிடம் கொடுத்த மூத்த துணை ஆசிரியரிடம் கேட்டபோது, மாநிலத்தில் நம் ஆட்சி நடக்கவில்லை என்றாலும் மத்திய ஆட்சியில் நம் நிறுவன அதிபர்தான் தொழில்துறை அமைச்சராக உள்ளார். எனவே அரசுக் கொள்கைகளை விமர்சிக்கும் விதமாக செய்தி வெளியிட முடியாது. அதே செய்தியை வேறு கோணத்தில் மாற்றிக்கொடுத்தால் வெளியிடுவது குறித்து யோசிக்கலாம் என்று கூறினார்.

உடனடியாக அணுசக்தியை விமர்சிக்காமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பார்வையில் அந்த செய்தியை திருத்தி எழுதினேன். அதற்கு தேவைப்பட்ட சில புதிய பேட்டிகளும் பல சிரமங்களுக்கு இடையில் பதிவு செய்தேன். அதை ஸ்கிரிப்டு எழுவதோடு நிறுத்தாமல் அதை குரல் மற்றும் படப்பதிவும் செய்து ஒலி/ளி பரப்புக்கு தயாரான நிலையில் அந்த மூத்த துணையாசிரியரிடம் சமர்ப்பித்தேன்.

புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்ட அவர், மேலும் சில நாட்களுக்கு அமைதி காத்தார். மீண்டும் விசாரித்தபோது இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் நம் கட்சி அமைச்சர்தான் இருப்பதால் இதை ஒலி/ளி பரப்ப முடியாது என்றும் எனவே வேறு ஏதேனும் புதிய கோணத்தில் இந்த செய்தியை தயாரித்தால் ஒலி/ளி பரப்புவது குறித்து ஆலோசிக்க முடியும் என்றும் உறுதி(!) கூறினார்.

அணுசக்தி பிரசினையை நாட்டின் அரசின் பெருமையாக கூறும் பக்குவம் எனக்கு இல்லாததால், அந்த செய்தியை முழுவதுமாக மறந்து விட்டேன்.

***********


சில வாரங்கள் சென்ற பின் கல்பாக்கத்திற்கு என்னுடன் வந்த பெண் செய்தியாளர், கல்பாக்கம் குறித்த செய்தி தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டதாகவும், அதை பார்த்த திரு.மாலன் மற்றும் அவருடன் அந்த செய்தி குறித்த விவாதத்தில் பங்கேற்ற மருத்துவர் செ. நெ. தெய்வநாயகம் ஆகியோர் தங்கள் பாராட்டுகளை தெரிவித்ததாகவும் கூறினார்.

அப்போது திரு. மாலன் அந்த தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராக பணி ஆற்றினார். மேலும் இரவு 8.30 மணிக்கு அன்றைய சிறப்பு செய்தி குறித்த ஒரு விவாதத்தையும் நடத்தி வந்தார். வேறு முக்கிய செய்திகள் இல்லாத நிலையில் என் தோழி, சாமர்த்தியமாக கல்பாக்கம் செய்தி குறித்து அவரிடம் எடுத்துக்கூறி அன்றைய செய்தியில் இடம்பெற வைத்தார் என்று பிறகு தெரிய வந்தது.

நான் பார்க்காத அந்த செய்தித்தொகுப்பை திரும்ப பார்க்க முடியுமா என்று என் தொழில் நுட்ப நண்பரை கேட்டபோது அவர் கம்யூட்டரில் புதைபொருள் ஆராய்ச்சி செய்து அந்த செய்தியை போட்டுக்காட்டினார்.

கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உருவம் சிதைந்து பிறந்திருப்பதை படங்கள் மூலம் அறிந்திருந்த நான், நான் எடுத்த செய்தியும் அதே போன்ற உருவமில்லா உருவத்துடன் வெளியானதை உணர்ந்தேன்.

எனினும் அதற்கு முயற்சி எடுத்து வெளியிட்ட அந்த தோழி, அந்த செய்தியை புரிந்து கொண்டதோடு மனம் திறந்து பாராட்டிய திரு. மாலன், மருத்துவர். செ. நெ. தெய்வநாயகம் ஆகியோருக்கு நன்றியும் கூறினேன், மானசீகமாக.ஆனால், அந்த செய்தியை எடுக்க உதவி செய்து, துரதிர்ஷ்டவசமாக அந்த செய்தியை பார்த்துத் தொலைத்துவிட்ட நண்பர்களை இப்போது எதிர்கொள்ளும்போதும் வெட்கமும், வேதனையும் வெளிப்படுகிறது, அவர்கள் என் நிலையை புரிந்துகொண்டு மன்னித்துவிட்ட போதிலும்...!

(2008 நவம்பர் மாதம் வெளியான பதிவு.  தேவை கருதி மீள் பதிவு செய்யப்படுகிறது )

22 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தீபாவளி சமயத்தில் சன் நியூஸ் டிவியில் ஒரு செய்தி வெளியானது, கல்பாக்கம் அணு உலையால் கதிர் வீச்சு அபாயம் என்பது வெறும் பீதி என்று.

குட்டிபிசாசு சொன்னது…

நான் போன வருடம் இது பற்றிய ஒரு கட்டுரை எழுதினேன்.

http://kuttipisasu.blogspot.com/2007/05/1.html

http://kuttipisasu.blogspot.com/2007/05/2_29.html

rapp சொன்னது…

அருமையா சொல்லிருக்கீங்க. நான் இதுப்பத்தி மூணு மாசம் முன்ன எழுதினேன்.http://vettiaapiser.blogspot.com/2008/07/blog-post_13.html

ஆனா சிலப்பேருக்கு புரியமாட்டேங்குது. தியரிட்டிக்கலா இருக்கிற சில விஷயங்களை வெச்சுக்கிட்டு வாதாடுகிறார்கள். பிராக்டிக்கலா இவைகள் நடைமுறையில் உதவுதான்னு பாக்க மாட்டேங்குறாங்க:(:(:( மிக மிகப் பயனுள்ள கட்டுரை.

பெயரில்லா சொன்னது…

அருமையா சொல்லிருக்கீங்க.
ஆனா சிலப்பேருக்கு புரியமாட்டேங்குது. தியரிட்டிக்கலா இருக்கிற சில விஷயங்களை வெச்சுக்கிட்டு வாதாடுகிறார்கள். பிராக்டிக்கலா இவைகள் நடைமுறையில் உதவுதான்னு பாக்க மாட்டேங்குறாங்க:(:(:( மிக மிகப் பயனுள்ள கட்டுரை.

Repeatey!

பெயரில்லா சொன்னது…

I heard that Mr.A.S.PanneerSelvan is a Nuclear Scientist by qualification.

So he wrote many wonderful articles criticising the Nuclear Energy.

I think he later changes his mind and wrote articles in favour of nuclear deal in Nakkeeran.

Who -or- what changes his stance?

சுந்தரராஜன் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குட்டிபிசாசு மற்றும் rapp. அனானிகளுக்கும் நன்றி. பெயருடன் எழுதினால் மேலும் நன்றி சொல்வேன்.

லக்கிலுக் சொன்னது…

அந்த செய்தியின் முக்கியத்துவம் குறைந்துபோனதை விட, செய்தியாளனின் முக்கியத்துவம் குறைந்துபோனது தான் உடனடி வேதனை தருகிறது :-(

பெயரில்லா சொன்னது…

எந்த ஒரு நல்ல விஷயம் வரும்போது சிறு பாதிப்புகள் வருவது சகஜம்தான்.

சிறுசிறு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெரிய விஷயங்களை கோட்டை விட முடியாது.

பெயரில்லா சொன்னது…

I heard that Mr.A.S.PanneerSelvan is a Nuclear Scientist by qualification.
:).He never claimed so.

சுந்தரராஜன் சொன்னது…

கருத்திற்கு நன்றி, லக்கிலுக்.

அனானிகள் ஏதாவது ஐடியுடன் வந்தால் அதைக்குறிப்பிட்டு பதில் கூறவோ, விவாதிக்கவோ வசதியாக இருக்கும்.

superlinks சொன்னது…

hai

பெயரில்லா சொன்னது…

Your post shows the other side of the media. Now the commercial media has no ethics.

To expose the media arrogance and ignorance write more.

It may kindle the hearts of young generation journalists.

ராஜ நடராஜன் சொன்னது…

படங்கள் முக்கியமாக அதிக விரல்கள் தியரி பயமுறுத்துகிறது.ஆனால் இது கல்பாக்கம் பகுதிக்கு மட்டும் என்று அறுதியிட்டுக் கூற இயலுமா?

எந்தக் கொள்கையிலும் உள்ள இருபக்கத்தின் ஒரு பக்கத்தைக் காட்ட முயற்சி செய்துள்ளீர்கள்.நாம் வாழும் காலங்கள் மாறிவிட்டது.எனவே இனி முன் எடுத்து வைத்த காலைப் பின்னெடுத்து வைக்க நினைப்பது எனக்குச் சரியாகப் படவில்லை.

உண்மைத்தமிழன் சொன்னது…

அருமையான செய்திக் கட்டுரை பிரதர்..

அரசியல் என்பது எதற்காக என்பதனை லேசாக கோடு போட்டுக் காட்டியிருக்கிறீர்கள்.

நன்றி..

அணுமின் சக்தி பற்றிப் பேசுமளவுக்கு எனக்கு அறிவு கம்மிங்கோ..

ஆனால் அதன் பயன்களைவிட பக்க விளைவுகள் அதிகம் என்பதை மட்டும் படித்திருக்கிறேன். பார்த்திருக்கிறேன். இங்கேயும் பார்த்தேன்..

நாட்டிற்காக இதையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அப்பாவிகளுக்கு மட்டுமே உண்டு என்பது நமது ஜனநாயகத்தில் ஒரு கேலிக்கூத்தான பக்கம்.

கல்பாக்கத்தில் அணு உலை கட்ட இடம் கொடுத்தவர்களே இழப்பீடு கேட்டு இன்னமும் அலைகிறார்களாம்..

கொடுமை.. கொடுமை.. கொடுமை..

சுந்தரராஜன் சொன்னது…

//படங்கள் முக்கியமாக அதிக விரல்கள் தியரி பயமுறுத்துகிறது.ஆனால் இது கல்பாக்கம் பகுதிக்கு மட்டும் என்று அறுதியிட்டுக் கூற இயலுமா?//

கல்பாக்கம் பகுதியில் அசாதாரணமான அளவில் இந்த நோய் தாக்குதல் உள்ளது. அணுமின் உலைகள் அமைந்துள்ள மற்ற இடங்களின் நிலை நமக்குத் தெரியவில்லை.

//எந்தக் கொள்கையிலும் உள்ள இருபக்கத்தின் ஒரு பக்கத்தைக் காட்ட முயற்சி செய்துள்ளீர்கள்.நாம் வாழும் காலங்கள் மாறிவிட்டது.எனவே இனி முன் எடுத்து வைத்த காலைப் பின்னெடுத்து வைக்க நினைப்பது எனக்குச் சரியாகப் படவில்லை.//

முன்னெச்சரிக்கை இல்லாமல் ஒரு காலை வைத்தாகிவிட்டது. முழு உடலும் வெந்து தணியும் முன் வைத்த காலை எடுக்கக்கூடாதா, ராஜநடராஜன்?

...........

உணர்வுகளை பகிர்ந்து கொண்ட உண்மைத்தமிழனுக்கு நன்றி.

Natty சொன்னது…

நல்ல தகவல்.... பயம் அளித்தாலும், விழிப்புணர்வும் அளிக்கிறது. அமெரிக்காவில் கடந்த 3 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன்... இது வரை ஒரே ஒரு முறை தான் மின் வெட்டை சந்தித்தேன்... அதுவும் 20 அல்லது 30 வினாடிகளுக்கு.... அதே போல ஒரு வசதியை இந்தியாவிலும் தர அணு சக்தி ஒரு நல்ல மாற்றாக இருக்கும் என்றே நம்பியிருந்தேன்... ஆனால் மக்கள் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில் இருக்கமானால், இது கட்டாயாமாக எதிர்க்கப்படவேண்டிய ஒன்று...

ஆனால், எதிர்க்கப்படுவது, பாதுகாப்பற்ற அணு சக்தி தயாரிப்பே. ஒட்டு மொத்த அணு ஆயுத தயாரிப்பை எதிர்ப்பது தவறு என்பது என்னுடைய கருத்து...

நல்ல பதிவுகள்... இத்தகைய விழிப்புணர்வூட்டும் பதிவுகள் தொடரட்டும். வளம் சிறக்க வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

//கல்பாக்கத்தில் அணு உலை கட்ட இடம் கொடுத்தவர்களே இழப்பீடு கேட்டு இன்னமும் அலைகிறார்களாம்.. //

It is the case with all govt projects like Neyveli Lignite Corporation or Salem steel plant.

You mentioned about the palar sand used in construction in Chennai. Do they excavate sand very close to the place near Kalpakkam? I thought it was done much upstream near Vellor, Vaniyambadi, Kanchipuram.

பெயரில்லா சொன்னது…

தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்களின் நிலையை அப்பட்டமாக வெளிக்காட்டும் நல்ல பதிவு.

தொடர்ந்து எழுதுங்கள்.

பெயரில்லா சொன்னது…

http://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/


அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் வால் முளைக்குது, ஏழாம் விரல் முளைக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது அறிஞர்களின் கோமாளித்தனம். புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிக் எறிந்து விட்டு சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம். கல்பாக்கத்தில் அணு உலை கட்டும் முன்பு அத்தகைய நோய்களால் துன்புற்றோர் அல்லது செத்தவர் எத்தனை பேர் ? அப்போது அங்கு வாழும் நபருக்கு எத்தனை விரல்கள் இருந்தன என்று எண்ணிப் பார்த்தவர் யார் ? அணு உலைகள் கட்டிய பின் இயங்கும் போது எத்தனை பேர் புற்று நோயில் செத்தனர், மற்ற நோயில் மடிந்தனர் என்ற எண்ணிக்கைகள் தேவை. அப்படி அதிகமானால் அந்த தொகை கூறப்பட வேண்டும். அப்போதுதான் அணு உலையால் மனிதருக்கு ஏழாம் விரல் முளைத்த விந்தைகளைப் பற்றிப் புகாரிடலாம்.


உலகத்திலே இயங்கி வரும் (435+284+220) 939 அணு உலைகளுக்கு அருகில் வாழ்வோர் யாராவது புற்று நோயுற்றுத் செத்தால் அங்குள்ள பராக்கிரம யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டுவிடுமா ? அவர்களைச் சிறையிலிட்டு பெருத்த நட்ட ஈடைப் பிடுங்கி விடும். நான் இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் யுரேனிய எரிசக்தி ஊட்டும் யந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றி யிருக்கிறேன். இப்போது பொறியியல் படித்த என் புதல்வி கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறாள். அவளது கணவரும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் எஞ்சினியராகப் பணி செய்கிறார். எனக்கோ, அவர்களுக்கோ அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ எவருக்கும் ஏழாவது விரல் முளைக்க வில்லை. ஆகவே அசுரன் போன்ற அணுசக்திப் பொறி நுணுக்க வாதிகள், ஞாநி போன்ற எழுத்தாளர்கள், டாக்டர் புகழேந்தி போன்ற மருத்துவர்கள் ஆதாரமற்ற மூன்றாவது நபர் கருத்துக்களைப் பாமர மக்களுக்கு ஊட்டிப் பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.


ஜெயபாரதன்.
http://jayabarathan.wordpress.com/

கூடல் பாலா சொன்னது…

வணக்கம் lawyer sir .ரொம்ப நல்ல பதிவுதான் .ஆனால் ஒரு சின்ன தவறு பண்ணிட்டீங்க .வேறு ஒன்னும் இல்ல இந்த அணு உலைக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும்போது அது அணுமின் நிலையங்களில் வேலைசெய்பவர்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாது .அது அவர்களுக்கு பிடிக்காது ஏன் என்றால் அதன் மூலம் அவர்கள் அடையும் பலன் ஏராளம் .10 th படித்துவிட்டு வேலையில் சேர்பவர்கள் கூட ஒரு பொறியியல் பட்டதாரி பெறும் வசதிகளை விட அதிக வசதிகளும் சலுகைகளையும் பெறுகிறார்கள் .எப்போதாவது அணுமின் நிலைய ஊழியர்கள் சம்பளம் கேட்டு போராடியதை கண்டதுண்டா . அவர்களுக்கு அத்தனை சலுகைகளும் வழங்கப்படுவது எதனால்
என்பது அவர்களில் சிலபேருக்கே தெரிந்திருக்கும் .கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இயக்குனர் திரு .அகர்வால் அவர்கள் சமீபத்தில் திடீர் உடல் நல குறைவால் இறந்தது ஏன் என்று சக ஊழியர்கள் சிந்திப்பார்களா?

சுந்தரராஜன் சொன்னது…

மரியாதைக்குரிய அணுவியல் அறிஞர் திருமிகு ஜெயபாரதன் அவர்களுக்கு, வணக்கம்!

அணுஆற்றல் விமர்சகர்களை உங்களைப்போன்றவர்கள் எதிர்ப்பதன் அரசியல் அனைவரும் அறிந்ததுதான்.

ஆனால் அந்த விமர்சகர்கள் அனைவரும் மக்கள் மீதுள்ள பற்றினால்தான் அந்த விமர்சனத்தை முன் வைக்கிறார்கள் என்பதை நாங்கள் நம்புகிறோம்.

நீங்கள் குறிப்பிடுவதைப்போல அது நையாண்டி அல்ல. நையாண்டி செய்வது நீங்கள்தான்!

அணுஉலைகள் அனைத்தும் முழுமையான பாதுகாப்பு கொண்டவை என்பதை நிரூபிக்கும் கடப்பாடு அணுஉலை நிர்வாகிகளுக்கும், உங்களைப் போன்ற அதன் பங்குதாரர்களுக்குமே உண்டு.

ஆறாவது விரல் என்பது மருத்துவரீதியாக ஒரு நோய் என்பதும், அணுக்கதிரியக்கம் அந்த நோயை தூண்டிவிடும் முக்கிய காரணி என்பதும் மருத்துவ மாணவர்களுக்கான பாடநூலில் கூறப்பட்டுள்ளது. இதேபோல புற்றுநோய்க்கான முக்கியகாரணிகளில் ஒன்றாக அணுக்கதிரியக்கம் மருத்துவ நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த மருத்துவ நூல்களின் ஆசிரியர்கள் அனைவரும் அணுஆற்றலின் எதிரிகளோ, விமர்சகர்களோ அல்ல.

அடுத்து நீங்கள் குறிப்பிடும் "பராக்கிரம" யூனியன்களை முடக்குவது எப்படி என்பது உலகில் உள்ள அனைத்து வணிக கழகங்களுக்கும், அரசு அமைப்புகளுக்கும் தெரியும். அது உங்களுக்கும் தெரியும்.

எங்கள் மக்களை எச்சரிக்கும் தார்மீக கடமை எங்களுக்கு உண்டு.

GENIUS IS THE ONE who having GRATITUDE சொன்னது…

truth alone triumph

கருத்துரையிடுக