09 டிசம்பர், 2008

வி.பி. சிங்குக்கு அஞ்சலி: "இந்தியா டுடே"வை செருப்பால் அடி!

சமூக சீரழிவை கொண்டு வந்தவர் வி.பி. சிங் என்று வக்கிரமாக எழுதிய இந்தியா டுடேவை செருப்பால் அடிப்போம் என்று தோழர் எழுத்தாளர் பாமரன் குறுந்தகவல் அனுப்பி இருந்தார்.

அவருடைய கோபத்திற்கு காரணமான இந்தியா டுடே இதழ், மறைந்த வி.பி.சிங் அவர்களுக்கு செலுத்திய அஞ்சலியை வாசகர்களுக்காக கீழே தருகிறேன்.


அஞ்சலி / வி.பி.சிங் 1931-2008


மண்டல் நாயகனான இவர் இந்தியாவின் அரசியலில் மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவர்.


அலகாபாத்தில் கங்கைக்கரையில் நவம்பர் 29ம் தேதி எரிந்த சிதை இந்திய அரசியலின் மிக சாகசமிக்க ஒருவரின் வாழ்வை முடித்து வைத்தது. அந்தத் தீயின் அர்த்தத்தைப் புரி்ந்துகொள்ள கடந்த நூற்றாண்டின் கடைசி காலங்களில் கொழுந்துவிட்டெரிந்த இன்னமும் இருக்கும் தீயின் நாவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.


பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சமூகத்தை சீரழித்த செயலும் அதன் விளைவாக பிறந்த மக்களை மிக மோசமாக பிளவு படுத்திய மண்டலுக்கும் எதிர்வினையாக வந்ததுதான் தில்லி பல்கலைக்கழக மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நெருப்பு யுத்தம். அவரது தியாகம் தடுக்கப்பட்டது.


அரசு வேலைகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவேன் என்று 1990 சுதந்திர தின உரையில் வி.பி.சிங் உறுதிபூண்டது ஒரு மாபெரும் புரட்சிகர நடவடிக்கைதான்; வெகுஜனங்களை மயக்குவதற்கான அரசியல் நாடகம். சிறுபான்மை அரசை நடத்திச்சென்ற முதல் பிரதமரான வி.பி.சிங், ஜாதியை முன்னிறுத்தி, தகுதியை புறந்தள்ளிய மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் சமூக அடுக்கு முறையை குலைத்தார்.


அவர் பதவியிலிருந்த 11 மாதங்களில் அவருடைய திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம். எனினும் மண்டல் கமிஷன் இந்திய அரசியலின் கட்டமைப்பையே மாற்றி அமைத்தது. ஜாதி செயல் திட்டத்துடன் பல அரசியல் தலைவர்கள் அதிலிருந்து பிறந்து வந்தார்கள். அரசியல்வாதியாக வி.பி.சிங் கொள்கைகளின்படி வாழ்ந்தார். அந்தக் கொள்கைகளின் பின்னணியாக என்ன இருந்தது என்பது என்பது வேறு கதை.


அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்த அவரின் இறுதிக்காலத்தில் மதசார்பின்மையின் இஷ்டதெய்வமாகவும் கண்ணுக்கு தெரியாத ஆலோசகராகவும் அவர் இருந்தார். சமூகநீதி அரசியல் என்ற பெயரில் இந்தியாவை உலுக்கிய மனிதர் இறுதியில் நிஜ அரசியலுடன் தொடர்பில்லாமல், கவிதை, ஓவியங்களால் ஆறுதல்பட்டவராக இருந்தார்.


-எஸ். பி.


இந்த அஞ்சலியை பார்த்தவுடன் உண்மையைத்தானே சொல்லி இருக்கிறார்கள் என்ற ஆச்சரிய உணர்வே மேலோங்கியது.


மாமனிதர் வி.பி.சிங் அவர்கள் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல் படுத்தியதன்மூலம் பார்ப்பனிய/பனியா என்ற ஆதிக்க சமூகங்களில் மிகப்பெரும் சீரழிவை ஏற்படுத்தினார் என்பதை யார்தான் மறுக்க முடியும்.


மனுதர்மத்தின் துணை கொண்டு இந்தியாவின் அனைத்து துறைகளிலும் கோலோச்சிக் கொண்டிருந்தவர்களை, மக்கள் நலம் சார்ந்து அனைத்து சமூகத்தவர்களும் இந்திய அரசியலின் அனைத்து தளங்களிலும் பங்குபெற செய்வதன்மூலம் சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொன்னது நிஜம்தானே?

பல நூற்றாண்டுகளாய் இந்து மதத்திலும், இந்து மதத்தின் தாக்கம் பெற்ற மற்ற மதங்களிலும் சமூகத்தின் கடைசி கட்டுமானத்தில் பிறந்து உயிருடன் எரிக்கப்பட்டவர்களுக்கும், ஜீவசமாதி அடைந்தவர்களுக்கும் சாந்தி செய்யும்விதமாக அவர்களின் சந்ததிகள் வாழ வழிகாட்டியபோது, பன்னெடுங்காலமாக பிறவி ஒன்றையே தகுதியாகவும், திறமையாகவும் கொண்டாடி ஆதிக்கம் செலுத்தியவர்கள் சற்று வீழ்த்தப்பட்டது உண்மைதானே?


அதுவரை ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் எதிரியாக இருந்தவர்களை புரிந்து கொள்ளாமல், தெய்வத்தின் குரல் எழுதிய தெய்வத்தின் வாரிசு தெய்வங்களை நம்பி தம்முள்ளேயே அடித்துக்கொண்டு கிடந்தவர்களை பொது எதிரியை அடையாளம் காட்டியதன்மூலம் ஒற்றுமைப்படுத்தி, சாமானிய மனிதர்களுக்கும், தெய்வப்பிறவிகளுக்கும் இடையை பிளவை ஏற்படு்ததி தெய்வங்களுக்கு மோசமான நிலையை திரு.வி.பி.சிங் ஏற்படுத்தியது வாஸ்தவம்தானே?

திரு.பி.பி. மண்டல் 1980ம் ஆண்டிலேயே அப்போதைய உள்துறை அமைச்சர் திரு.ஜெயில் சிங்கிடம் வழங்கிய அறிக்கையை பத்து ஆண்டுகள் கழித்தும் மறந்துவிடாமல் தூசிதட்டி எடுத்து, அமல் படுத்தி சாமானிய மக்களுக்கு திரு.வி.பி.சிங் வாழ்வு அளித்தது உண்மைதானே?


போரில் உயிரிழக்கும் ராணுவப்படையினருக்கு சவப்பெட்டியைக்கூட உள்நாட்டில் தயாரிக்க வக்கின்றி வெளிநாட்டில் வாங்கி, அதை வாங்குவதில்கூட ஊழல் புரியும் நாட்டில், அரசியல் எதிரிகள்கூட விமர்சனம் செய்ய வழியின்றி வி.பி.சிங் வாழ்ந்து மறைந்தது சிறப்பானதுதானே?

பதவி வெறி பிடித்து மகாபாரதத்தையும் மிஞ்சும் அரசியல் சூழ்ச்சிகள் நடைபெறும் நாட்டில் தனக்கான பணி முடிந்தது என்று பதவிக்கு அலையாமல் சமூகப்பணியும், இலக்கியச்சுவையும் போதும் என்று முடிவெடுத்தது பெருமைதானே?


இது அனைத்தும் தெரிந்த இந்தியா டுடே இதழ், அதற்கே உரிய பாணியில் அஞ்சலி செலுத்தியது. என்ன, அந்த இதழின் உரிமையாளர்களும், அவர்களின் உறவினர்களும் சமூகத்தின் மீது செலுத்தி வந்த ஆதிக்கத்தை தகர்த்த மனிதரைப்பற்றி நினைக்கும்போதே இயல்பாக வரும் வயிற்றெரிச்சல் சற்று அவர்களின் கட்டுப்பாட்டை தளர்த்தி அவர்களின் சுயமுகத்தை காட்டிவிட்டது, அவ்வளவுதான்.

இந்தியா டுடே இதழின் தரம் குறித்து அனைவருக்குமே தெரிந்திருக்கும். அவ்வபோது பாலச்சந்தர் திரைப்பட பாணியில் கருத்துக்கணிப்பு நடத்தி விற்பனையை தக்க வைத்துக் கொள்வதும், அதன்மூலம் போலி மருத்துவக்கல்வி நிறுவனங்களுக்கு விளம்பரம் வெளியிட்டு பொருளீட்டுவதும் அதற்கு புதிதல்ல.


**********


341 நாட்கள் பதவியிலிருந்த வி.பி.சிங் நாத்திகர் அல்ல. ஆனாலும் மதம் என்பதை அரசியலோடு இணைத்துப்பார்க்க மறுத்தவர். எனவேதான் அயோத்தியில் கரசேவை செய்வதற்காக பாரதிய ஜனதாவும், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளும் ரதயாத்திரை சென்றபோது ராணுவத்தை வைத்து அடக்கினார். அதன் விளைவாக பதவியை இழந்தார். அப்போதும் அவர் கம்பீரமாக சொன்னார்:

ஆம்... நான் தோற்கடிக்கப்பட்டுவிட்டேன். ஆனாலும், பலகோடி பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக வந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசியலின் செயல்தி்ட்டத்தில் சேர்த்த பின்னர்...!


அரச குடும்பத்தில் பிறந்தாலும் சாமானிய மக்கள் மீது பேரன்பு கொண்டவராக விளங்கிய வி.பி.சிங் அரசியலிலிருந்து விலகினாலும், சமூகத்தோடு தொடர்புடையவராகவே இருந்தார். நாட்டில் பயங்கரவாதம் பெருகிவருவதாக அவரிடம் கருத்து கேட்டபோது அவர் கூறினார்: உயர் தொழில் நுட்ப நகரங்களின் பேராலும்... சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பேராலும்... லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ஒவ்வொரு முதல்வரும் அள்ளி வீசுகிறார்கள். ஒவ்வொரு தொழில் அதிபரும் தனது பொருளுக்கான விலையாக அரசு இவ்வளவு தந்தாக வேண்டும் என அரசுக்கு ஆணையிடுகிறார்கள். ஆனால்... உனது விலை பொருளுக்கான விலையை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று விவசாயிகளிடம் ஆணை பிறப்பிக்கிறது அரசாங்கம். இந்த மக்களின் குரலுக்கு நீங்கள் செவிமடுக்க மறுத்தால், நாளை அவர்கள் ஆயுதம் ஏந்துவதை எவராலும் தடுக்க முடியாது. உண்மையில் நான் மாவோயிஸ்ட் ஆகவே விரும்புகிறேன். ஆனால், அதற்கு என் உடல்நிலை மட்டும்தான் தடையாக இருக்கிறது.


பின்குறிப்பு: இதைப்படித்த பிறகும் இந்தியா டுடே-வை செருப்பால் அடித்தே தீருவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு ஒரு தகவல். இந்த தலையங்கம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, தமிழில் மொழி பெயர்ப்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டபோதே சென்னை அலுவலகத்தில் இந்த இரங்கலுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு வரும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனாலும் டெல்லி தலைமையகம் தனது "கொள்கை முடிவி"ல் உறுதியாக இருந்துள்ளது. எனவே தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க விரும்புபவர்களுக்கு வசதியாக டெல்லி அலுவலக முகவரி, இதோ:

Prabhu Chawla,

Editor,

India Today & Group Editorial Director,
F-14/15, Connaught Place,

New Delhi 110 001.

Tel: 011-23315801-04 (board).

மின்னஞ்சல்: RATNAM@intoday.com

44 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Vannakam Sir,
only few of % of people in our country they make all the false information about lower cast people welfer only they worry they are not have own land in india.
thanks for your article and I sent mail the above said address for their false statement.

siva.

ரவி ஸ்ரீநிவாஸ் சொன்னது…

I dont agree with the article as it does not expose V.P.Singh in the right way. He used Mandal to consolidate his position.He did not prevent Advani's Rath Yatra in the beginning.
He was a loyalist to India Gandhi family and
owed his raise to Sanjay Gandhi.Mandal resulted in giving a boost to caste politics. He talked so much about Bofors and ended up supporting
corrupt politicians.He tried to balance between competing interests when he was P.M. He pleased BJP by appointing Jag Mohan as governor of J&K.
He toed the party line in Sha Bano controversy
and proved that he was a pseudo-secularist.He is
not a corrupt politician, nor did he try to become a P.M again. You should read Krishna Ananth's article on V.P. Singh in EPW.An article that shatters myths about V.P.Singh.

K.R.அதியமான் சொன்னது…

மத்திய அரசு வேலைகளில் பிற்பட்டோருக்கான 27 % இட ஒதுக்கீட்டில் உச்ச நீதி மன்ற ஆணைபடி, கிரிமி லேயர்கள் கழிக்கப்பட்டு வருகிறது. மிக அருமையான செயல். பார்க்க :

http://ncbc.nic.in/html/creamylayer.htm

இதே போன்ற நீதி தமிழகத்திலும் இதர மானிலங்களிலும் வரும் காலத்தை எதிர்னோகுகிறேன். அனைத்து இடங்களிலுன் கிரிமி லெயர்களுக்கு ஆப்பு காத்திருக்கிறது. வரட்டம் அந்த பொன்னாள். பிறகு இட ஒதுக்கீட்டின் அளவு பற்றி விவாதம் தொடங்கும். திரு.கீ.வீரமணி அவர்களுக்கு நான் பல ஆண்டுகளுக்கு முன் அனுப்பிய ஒரு மின்மடல் : பார்க்க :

http://athiyaman.blogspot.com/2006/01/reg-creamy-layer-misusing-reservation.html

உண்மைத்தமிழன் சொன்னது…

நானும் என் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்..

அண்ணா..

எதிர்ப்பைக் காட்டுவோம். கண்டனக் குரல் எழுப்புவோம்..

ஆனால் செருப்பு, அது, இது என்று வேண்டாமேண்ணா..? நமக்கென்று சில தகுதிகள் உண்டல்லவா..?

ரவி ஸ்ரீநிவாஸ் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சுந்தரராஜன் சொன்னது…

மேலே உள்ள கருத்துரையை வலைபதிவு நிர்வாகி நீக்கவில்லை. எந்த கருத்துரையும் நீக்கப்படாது. அந்த கருத்துரைக்கு, அதை எழுதியவர்களே பொறுப்பாவார்கள்.

பெயரில்லா சொன்னது…

//அனைத்து இடங்களிலுன் கிரிமி லெயர்களுக்கு ஆப்பு காத்திருக்கிறது. வரட்டம் அந்த பொன்னாள். //

அது சரி அதியமான் அவர்களே.

அப்படி என்றால் இடப்பங்கீடு வேண்டும் என்று நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா

பெயரில்லா சொன்னது…

இத்தகைய கொடூரமான கட்டுரையை எழுதியதன் மூலம் , சாமான்ய மக்களின் உணர்வுகளை வெகுஜனப் பத்திரிக்கைகள் கண்டு கொள்வதே இல்லை என்பது மீண்டும் நீருபனமாகியிருக்கிறது.....

இவர்களின் புரட்டுக்களை உடைத்தெறிவோம்......உங்கள் அனுமதியிருந்தால் இதே கட்டுரையை என் பதிவிலும் மீளாக்கம் செய்ய விருப்பம் ....அதிக மக்களை சென்றடையுமல்லவா?

பெயரில்லா சொன்னது…

நானும் என் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்..

அண்ணா..

எதிர்ப்பைக் காட்டுவோம். கண்டனக் குரல் எழுப்புவோம்..

ஆனால் செருப்பு, அது, இது என்று வேண்டாமேண்ணா..? நமக்கென்று சில தகுதிகள் உண்டல்லவா..?///

இறந்த ஒரு தலைவனை சமூகத்தை சீரழித்தவன் என்று பட்டம் கட்டுவது மட்டும் தகுதிக்கு உட்பட்டதா உண்மைத் தமிழன் அவர்களே???

suvanappiriyan சொன்னது…

நானும் என் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்..

Athisha சொன்னது…

எனது கடும் கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்..

பெயரில்லா சொன்னது…

This article shows that still social rights are been killed and it says some brammins dominations are in our society
and once again india today publishers
shows thier true and thier own&real colour

Ramkumar Muthurangam

பெயரில்லா சொன்னது…

Its a planned brutal act, by India Today.I strongly condemned this.VP Singh is one of the few statesman in Indian politics, who has concern over India and its Gross roots.We should express our concern, by forwarding this article to our friends.

அக்னி பார்வை சொன்னது…

இந்தியா டுடேவிற்க்கு என் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்...

விடுங்க சார்...காசு கொடுத்த அவனுங்க கழுதை ஜெயிக்கும் கருத்து கணிப்பு வெளியிடுவானுங்க....

Kailash, Hyderabad சொன்னது…

உண்மைத்தமிழன் போன்ற மிதவாதிகளுக்கு விவேகானந்தரின் வரிகளையே பதிலாகத் தர விரும்பிகிறேன்:-

'ஏழையின் கண்ணில் நீர் வழிந்தால் எவருடைய நெஞ்சில் உதிரம் கொட்டுகிறதோ, அவரே உண்மையான மனிதன்' என்றார்.

மேலும் இளைய சமுதாயத்துக்கு அவர் சொன்ன அழுத்தமான வார்த்தை:

"உனக்கு கனவுகள் வேண்டாம்; வாழ்கையை பூஞ்சோலையாய் எண்ணும் உனது மனப்பான்மையை விட்டொழி. வாழ்கையை ஒரு போர்களமாகக் கருது. ஆற்றல் உனது உடலெங்கும் பரவட்டும்; உயிர்சக்தி உனது நாடி நரம்புகளில் பொங்கி வழியட்டும். இரும்புத் தசைகளும் எஃகு நரம்புகளும் உனக்கு வாய்க்கட்டும். இடியோசைபோல் உனது குரல் முழங்கட்டும். கீதை படிப்பதை விட, கால் பந்து விளையாடுவதில் கவனம் செலுத்து. மெல்லிசையில் மனதைப் பரிகொடுக்காதே; மாறாக, தாரை தப்பட்டைகளின் பெரு முழக்கத்தை கேள் செம்மறியாட்டுதனத்தை உதறித்தள்ளு; சிங்கம் போல பொங்கி எழு"

என்னும் பெங்காளத் தோழனின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுங்கள் உண்மைத் தமிழரே !

கைலாஷ் - ஹைதராபாத்

பெயரில்லா சொன்னது…

please change your font color. It is very diffcult to read.

thamizhparavai சொன்னது…

இந்தியா டுடேவிற்க்கு என் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்...

Viswa சொன்னது…

எதிர்ப்பைக் காட்டுவோம். கண்டனக் குரல் எழுப்புவோம்..

பெயரில்லா சொன்னது…

I condemn 'India Today' for this atrocious article

- ragu

ஜோ/Joe சொன்னது…

இந்தியா டுடேவிற்க்கு என் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்

Gopalan Ramasubbu சொன்னது…

// He used Mandal to consolidate his position.He did not prevent Advani's Rath Yatra in the beginning.//

Facts of history, however, do not corroborate this view. For, V.P. Singh had taken the lead to implement the Mandal report when he was the Chief Minister of Uttar Pradesh. There was little doubt that he was convinced about the historical necessity to implement the report. In all probability, he would have implemented it at greater leisure if the rath yatra had not been launched. The Advani yatra divested V.P. Singh of the leisure and perhaps a more organised and structured pace of implementation.

http://flonnet.com/stories/20081219252512400.htm

மோகன் கந்தசாமி சொன்னது…

இவர்களுக்கு வி பி சிங் வைத்த ஆப்பை இன்னும் இறுக்கமாக இறக்கவேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

சுந்தரராஜன் சொன்னது…

கருத்துரை அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

சமூக நீதிக் காவலர் திரு.வி.பி.சிங் நினைவு அஞ்சலிக் கூட்டம் &
வி.பி சிங்கை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட பார்ப்பன “இந்தியா டுடே”விற்கு கண்டனக் கூட்டம்


நினைவுகளைப் பகிர்வோர்:

விடுதலை இராசேந்திரன்
இரா.அதியமான்
அ.மார்க்ஸ்
ஞாநி
ஆதவன் தீட்சண்யா
ஓவியா
அழகிய பெரியவன்

நாள்: டிசம்பர் 14, 2008, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5:30 மணி
இடம்: புக் பாயின்ட் அரங்கம், ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில், அண்ணா சாலை, சென்னை

நமது ஒளிக்காகத் தன்னைக் கரைத்துக் கொண்ட ஓர் உயிருக்கு அஞ்சலி செலுத்த அனைவரும் வாருங்கள்!!

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: கீற்று.காம் (www.keetru.com)

இரணியன் சொன்னது…

பிழைப்புவாதி பாமரனின் சந்தர்ப்பவாதம்!!!
பார்ப்பன / இந்து பயங்கரவாதத்தை கடைவிரிக்கும் பத்திரிக்கையான இந்தியா டுடே மீதான விமர்சனங்களும் எதிர்விணைகளும் இன்னும் இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடும். அதிலும் இடஒதுக்கீடு குறித்து வி.பி.சிங் மீதான தமது விமர்சனத்தின் மூலம் பார்ப்பன வெறியை துல்லியமாக பதிவிட்டிருக்கும் அந்த மஞ்சள் பத்திரிக்கையினை தடை செய்யவும் ஒருங்கிணைந்த போராட்டங்கள் அவசியம் என்பதும் உண்மையே.

"இந்தியா டுடே வை செருப்பால் அடி" என்கிற முழக்கத்தை இப்போது உச்சரித்திருப்பது பாமரனின் வாய் என்பதால் இதனை வேறொரு கோணத்திலும் பார்க்கவேண்டியுள்ளது. சண்டே இந்தியன் என்கிற பத்திரிக்கை இடஒதுக்கீட்டுக்கு எதிரான சிறப்பு மலரே கொண்டுவந்து வெளியிட்டிருந்தபோது எந்த எதிர்ப்பும் காட்டாது 'அவையடக்கத்துடன்' நடந்து கொண்ட பாமரன், குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பார்ப்பன ஏடுகளில் இடஒதுக்கீட்டைக் கிண்டல் செய்து எழுதப்பட்ட எதற்கும் பொங்கிவெடிக்காத பாமரனுக்கு இப்போது இந்தியாடுடேவின் மீது மட்டும் ரோசம் பொங்குகிறது என்றால் அதற்கான காரணத்தை நம்மால் சகித்துக் கொண்டிருக்கவில்லை.

பார்ப்பன பத்திரிக்கைகளில் எழுதுகிற வாய்ப்பைப் பெறுவதற்காக பார்ப்பன எதிர்ப்பைக் கைவிட்ட பாமரனுக்கு இந்தியாடுடே பத்திரிக்கையில் எழுதுவதற்கான வாய்ப்பு மட்டும் கிட்டவில்லை என்பதுதான் அவரது இந்த திடீர் ரோசத்துக்கு காரணமாக இருக்கிறது. தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்வதற்காக சினிமாக் கழிசடைகளுடன் கொஞ்சிக் குலாவும் இந்த சந்தர்ப்பவாதிக்கு இருக்கும் சமூகப் பொறுப்புணர்வு பற்றி நாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறோம்.

இப்படியிருக்க தனக்கு எழுத வாய்ப்பளிக்கும் பத்திரிக்கைகள் செய்யும் தவறை மூடிமறைப்பதும் அதுகுறித்து கண்டும் காணாமல் இருந்துவிட்டு அதே தவறை தனக்கு எழுத வாய்ப்பளிக்காத பத்திரிக்கை செய்யும்போது மட்டும் எகிறிக் குதிப்பது கேவலமான பிழைப்புவாதமன்றி வேரென்ன?

பாமரனின் சீடனாக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் யுவன்பிரபாகரன் என்பவர் இங்கே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை தேசிய அடையாளம் காட்டி கீழ்த்தரமாக விமர்சித்தது இதே அரங்கத்தில் வேரொரு இழையில் காட்சிக்கு இருக்கிறது. அம்பேத்கரை 'இந்து தேசிய வாதி' என்று அடையாளப்படுத்தி விமர்சிக்கும் அந்நபர் அதேநாள் வேரொரு இழையில் வி.பி.சிங் நினைவு கருத்தரங்கத்துக்கு அனைவருக்கும் அழைப்புவிடுத்திருந்ததை நாம் பார்த்திருக்கிறோம். வி.பி.சிங் என்ன தமிழ்த் தேசியத்திற்காக போராடியவரா? அம்பேத்கரை தேசியச் சிக்கலில் அடைக்கத்துடிக்கும் இவர்களின் தேசிய உணர்வு வி.பி.சிங் விசயத்தில் அம்பலமானது போல்தான் இந்தியாடுடேயை எதிர்ப்பதன் மூலம் பாமரனின் சந்தர்ப்ப வாதத்தையும் அம்பலப்படுத்துகிறது.

பிழைப்புவாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் மட்டுமே தமது அரசியலாகக் கொண்டிருக்கும் இந்த பாமரன் தலைமையிலான கும்பல், தமது தனிப்பட்ட காழ்புணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்காக அக்கும்பலை நாம் எதால் அடிப்பது?

இரணியன்.
eraniyann@gmail.com

பெயரில்லா சொன்னது…

இனி இந்தியா டுடேயில் எழுதமாட்டோம்,வாங்க
மாட்டோம் அப்படின்னு இந்தக் கூட்டத்தில
பேசறவங்க உறுதிமொழி தருவாங்களா?
திட்ட ஒரு மேடை, எழுத இந்தியா டுடேயும்
இன்னொரு மேடைன்னு பிழைப்பை கவனிப்பாங்களா?

பெயரில்லா சொன்னது…

மான உணர்வோடு “இந்தியா டுடே” என்ற பார்ப்பன- பார்ப்பனிய ஏட்டை முடக்க அனைவரும் செயலாற்றுவோம்.

பெயரில்லா சொன்னது…

இந்திய டுடேயை செருப்பால் அடிக்க வேண்டுமாயின் பல காரணங்களும், சந்தர்ப்பங்களும் உண்டு.

வாஸந்தியின் கட்டுரைகள் ஈழத் தமிழர்களை கொடிய விலங்குகளாகச் சித்தரித்தது.

வி.பி சிங் 27% ஒதுக்கீடு இந்திய சமூகத்திற்கு சுதந்திரமடைந்தபோதே செய்திருக்க வேண்டியது.
சுதந்திரத்தை ஒதுக்கப்பட்ட மக்கள் அனுப‌விக்க நேரு தவறிவிட்டார்.


குறுகிய காலப் பதவியில் அவரது செயல் நீண்ட கால ஒடுக்குமுறைக்கு நல்ல தீர்வைத் தந்திருக்கின்றது.

ஒரு ஈழத்துத் தமிழன்

தமிழ் ஓவியா சொன்னது…

பார்ப்பன பத்திரிக்கைகள் பார்ப்பனரல்லாதாரைப் பற்றி கொச்சைப்படுத்தி எழுதுவதே வாடிக்கையாகிவிட்டது.

பார்ப்பன பத்திரிக்கைகளை காசு கொடுத்து வாங்குவதில்லை என்ற முடிவை ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் உறுதி எடுத்துக் கொண்டு அதன்படி நடந்தால் மட்டுமே அவர்களின் கொட்டம் அடங்கும்.

செய்வீர்களா? செய்யவேண்டும்.

நன்றி.

Unknown சொன்னது…

//பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சமூகத்தை சீரழித்த செயலும் அதன் விளைவாக பிறந்த மக்களை மிக மோசமாக பிளவு படுத்திய மண்டலுக்கும் எதிர்வினையாக வந்ததுதான் தில்லி பல்கலைக்கழக மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நெருப்பு யுத்தம். அவரது தியாகம் தடுக்கப்பட்டது.//

தியாகம் தடுக்கப்பட்டது என்று இந்தியா டுடே கூறுகிறது, என்றால் அவர் அந்த போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும் என்று அந்த பத்திரிகை தன் வக்கிர எண்ணத்தை வெளிப்படுத்துகிறதா?

அவ்வாறெனில் கட்டுரையை எழுதியவர் மீதும், பத்திரிகை ஆசிரியர் மீதும் - மக்களிடையே தற்கொலையை புனிதப்படுத்தி, அதை செய்துகொள்ள தூண்டுவதாக வழக்கிட்டால் என்ன?

பத்திரிகை அனாதையான இந்தியா டுடே அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு விளம்பரம் தேடுவது ஒன்றும் புதிதல்ல.

K.R.அதியமான் சொன்னது…

//அவ்வையார் சொன்னது…
//அனைத்து இடங்களிலுன் கிரிமி லெயர்களுக்கு ஆப்பு காத்திருக்கிறது. வரட்டம் அந்த பொன்னாள். //

அது சரி அதியமான் அவர்களே.

அப்படி என்றால் இடப்பங்கீடு வேண்டும் என்று நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா
////

yes. but creamy layers should be excluded at all levels. only then real social justice will be delivered. pls read my mail to Ki.Veeranamni..

பெயரில்லா சொன்னது…

வி.பி சிங் போன்ற நல்ல மனிதர்களை நாம் இழந்துவிட்ட துயரத்தில் இருக்கும் நேரத்தில் இந்தியா டுடேயின் கீழ் தரமான செயல் மிகவும் கண்டிக்கதக்கது.

பெயரில்லா சொன்னது…

//வி.பி.சிங், ஜாதியை முன்னிறுத்தி, தகுதியை புறந்தள்ளிய மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் சமூக அடுக்கு முறையை குலைத்தார்.//

சமூக அடுக்குமுறை என்றால் வர்ணாசிரம அ-தர்மப்படியான அடுக்குமுறையை சொல்கிறதா இந்தியா டுடே?

மேல்சாதியில் பிறந்தவர்கள் ஆண்டுகொண்டும், மற்றவர்கள் அடிமைகளாகவும் இருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறதா இந்தியா டுடே?

ஆமெனில் இந்தியா டுடே-க்கு செருப்படி மட்டும் போதுமா?

பெயரில்லா சொன்னது…

டோண்டு எங்கே? பதில் கூறாமல் ஒளித்துக்கிடக்காமல் கருத்துக்கூற வா!

பெயரில்லா சொன்னது…

பாமரன் தான் ஒன்றும் புடுங்கவில்லை
இரணியன் என்ற முற்ப்போக்கு முகமூடியும் அவனை ஏவிவிட்டு கொண்டு இருக்கும் மதிமாறன் என்ற ஒரு ஜோசியக்கார பத்திரிக்கையில் வேலை செய்த அந்த முற்ப்போக்கு முகமூடியும் சண்டே இந்தியன் இட ஒதுக்கீடு மலர் வந்தபோது அப்போது என்ன புடிங்கினார்கள் என்றால் சொன்னால் சும்மா அடிக்கலாமா அல்லது எதையாவது தொட்டு அடிக்கலாமா என்று முடிவு செய்யலாம்

பெயரில்லா சொன்னது…

இந்த ரணியனே ஒரு மயிலாப்பூர் பார்ப்பான் தான்
அங்காங்கே வலைபூக்களிலும், ஆர்குட் குழுமங்களிலும்
அறிவழகன் (tamilarivu.wordpress) போன்றோர் இவன் முகமுடியை கிழித்து ஓடவிட்டனர்
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாத ஜந்து தான் அது முழுக்க முழுக்க மதிமாறனின் வாந்தி தான் அது

சுந்தரராஜன் சொன்னது…

அன்பு நண்பர்களுக்கு,

பொது எதிரியை அடையாளம் கண்டறிந்து போராடிய வேண்டிய தருணத்தில், நமக்குள்ளே உள்ள சிறுசிறு கருத்து வேற்றுமைகளை பெரிதுபடுத்தி ஒருவரை ஒருவர் கீழ்த்தரமாக தாக்கிக்கொள்வதன்மூலம் பொது எதிரிக்கு மறைமுகமாக உதவி செய்கிறோம்.

இது தேவைதானா? சிந்திப்பீர்! செயல்படுவீர்!!

பெயரில்லா சொன்னது…

“இந்தியா டுடே”-விற்கு எதிரான கருத்தை பதிவு செய்வதை விட்டுவிட்டு பிற பதிவர்களை வசைபாடுவது அழகல்ல. பிற பதிவர்கள் மீது குற்றம் சாட்டுவதில் ஆர்வமாக உள்ளவர்கள் அவர்களை எதிர்த்து தனியாக பதிவு வெளியிடவும். அதற்கு அவர்கள் பதில் சொல்வார்கள்.

இந்தியா டுடேவின் கருத்து தங்களுக்கு ஏற்புடையதா? இல்லையா? அதை பற்றி மட்டும் எழுத்தினால் நல்லது.

பெயரில்லா சொன்னது…

புரச்சிக்கார்...இரணியணுக்கு,நான் அம்பேத்காரை பற்றி பதிந்த கட்டுரையை இங்கே மீள்பதிவு செய்கிறேன்....

ஒரு காலத்தில் ஒடுக்கபட்ட கிடந்து பேச்சு உரிமையும் மறுக்கப்பட்டு இருந்த காலத்தில் கலககுரலாய் ஒலித்தது தான் அம்பேத்கர் உடையது...தாழ்த்தபட்ட சாதியில் இருந்து வந்ததாலே..வகுப்பறையில் அனுமதி மறுக்கப்பட்டு தொலைவில் அமர்ந்து படித்தவர்...ஏன் குடி தண்ணீர் கூட மறுக்கப்பட்டது (1898)..பின்பு bombay universityல் கலவிகற்று தேர்ந்தார் (1907 )
பரோடாவில் வேலை செய்யும் பொழுது பாதுகாப்பு செயலாளராக அங்கு ஒடுக்கபட்ட மக்களின் பிள்ளைகளுக்காக / கல்வி மறுக்கபட்டவர்களுக்காக அவர் தனியே வகுப்புகள் எடுத்து பாடங்களை சொல்லிக்கொடுத்தார் (1913) தன்னுடைய சமூகம் மட்டுமன்றி எந்த ஒரு தாழ்த்தபட்ட சமூகமும் தீண்டபடாத சமூகம் அல்ல என்று உளவியல்ரீதியாகவும், சமூகரீதியாகவும் தன் விவாதங்கள் மூலமாக...நேரு...காந்தி.....போன்றோருக்கு புரியவைத்தார்..புத்தமதத்தின் போதனைகளை மேற்கொண்டார்..
( புத்தம் ..கடவுள்..ஆத்மா...அடிமை...மூன்றையும் மறுத்தது )..பின்பு சுதந்திர தொழிற்சங்கம் ஆரமித்து அரசியலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது...காங்கிரசில் அப்போது ஒலித்த ஹரிஜன் ( கடவுளின் குழந்தைகள்) வார்த்தையை நிறுத்த அரும்பாடுபட்டார்.பட்டேல், காந்தி போன்ற ராமராஜ்ய கனவுகளை சுமந்து திரிந்தவர்களை தன் விவாதங்கள் மூலம் தகர்த்து எரிந்தார்..அதே சமயம் தன் மக்களை காந்தியம் எவ்வாறு புறம் தள்ளுகின்றது, காந்தியம் தன் மக்களை எப்போதும் விடுவிக்காது என்பதையும் எடுத்துரைத்தார்..

தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளிகளுக்கும் இடையில் உருவாகும் பிரச்சினைகளில் காந்தி முற்றாக முதலாளிகளின் தரப்பிலேயே இருக்கிறார் என்பது காந்தியத்துக்கு எதிராக அம்பேத்கர் முன்வைக்கும் விமர்சனம். பம்பாயில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, கூலி உயர்வுக்காகத் தொழிலாளர்கள் வன்முறையின் மொழியில் பேசுவது உசிதமான வழியல்ல என்றே காந்தி குறிப்பிட்டார். "ஐரோப்பாவைப் பாருங்கள், அங்குள்ள யாரும் திருப்தியாக இல்லை. தொழிலாளிகள் முதலாளிகளை நம்புவதில்லை. முதலாளிகளுக்கும் தொழிலாளிகள் மீது நம்பிக்கையில்லை" எனச் சுட்டிக்காட்டிவிட்டு "தொழிலாளர்கள் தொழிலாளர்களாக இல்லாமல் போனால் முதலாளிகள் புத்தியையும் தந்திரத்தையும் பயன்படுத்துவார்கள்" என்றும் குறிப்பிடுகிறார். இது தொடர்பான காந்தியின் சொற்பொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர் இவ்வாறு எழுதுகிறார்:

"சொத்துடைமை வர்க்கத்துக்குக் கீறல் ஏற்பட்டுவிடக் கூடாது என்றே மிஸ்டர். காந்தி விரும்புகிறார். அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதையும் அவர் எதிர்க்கிறார். பொருளாதாரச் சமத்துவம் என்னும் உணர்வு அவருக்கில்லை. பொன்முட்டையிடும் வாத்தைக் கொல்லத் தான் விரும்பவில்லை என்று பணக்கார வர்க்கத்தை முன்னிறுத்தி இருக்கிறார் காந்தி என்றும் சாடியுள்ளார்..

வெவ்வேறு சாதியினர் ஒன்றாக அமர்ந்து உண்ணும் சமபந்தி விருந்தைக் கூட்டு மலங்கழிப்பு என்று உவமித்த காந்தியின் வாதம் பைத்தியக்காரத்தனம் என்று கண்டிக்கிறார்.

ஜனநாயகத்துக்கு ஆதரவாகவோ முதலாளித்துவத்துக்கு எதிராகவோ காந்தி ஒருபோதும் பேசியதில்லை. வெளிநாட்டவரிடம் சுதந்திரத்துக்காக வாதாடும்போதே சமுதாயத் தாழ்வுகள் பிறப்பிலேயே உள்ளவை எனச் சொன்னது காந்தியத்தின் முரண்பாடு.


இருப்பவரை இருப்பவராகவும் இல்லாதவரை இல்லாதவராகவும் நிலைநிறுத்துவதுதான் காந்தியத் தத்துவம் என்பது அம்பேத்கரின் கருத்து. இல்லாதவன் அவனுடைய உரிமையைக் கேட்டுப் பெறுவதைக் காந்தியம் தடைசெய்கிறது. 'சொத்துக்கு ஆசைப்படாதே' என்பதுதான் சூத்திரனுக்குக் காந்தி வழங்கும் உபதேசம். தோட்டிகள் தொடர்ந்து அதே தொழிலைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே காந்தி அந்தத் தொழிலுக்கு மகத்துவம் கற்பித்தார் என்று அம்பேத்கர் வாதாடுகிறார்.

சாதி இந்துத்துவத்தின் விழுமியங்களையே காந்தியம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. கர்மா கோட்பாடு, பசு வழிபாடு, அவதாரங்கள் பற்றிய நம்பிக்கை, விக்கிரக வழிபாடு இவையெல்லாம் காந்தியத்தின் தவிர்க்க முடியாத அம்சங்கள். அதனால் காந்தியம் தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்கான வழியல்ல என்னும் கண்ணோட்டத்தை அடைகிறார் அம்பேத்கர்.

நான் இங்கு குறிபிட்டவை சில மட்டுமே....

தன் வாழ்ந்த காலகட்டங்களில் கலக்குரலாய் மட்டுமே ஒலித்து ஒடுக்கபட்ட மக்களின் விடுதலையை மட்டுமே சிந்தித்து வாழ்ந்த
அந்த மாபெரும் புரட்சியாளனை தயவு செய்து...
தேசதந்தை, வள்ளலே...ரத்தமே...இந்திய திருமகனே..உடன்பிறப்பே ..போன்ற வார்த்தைகளில் அடைக்கவேண்டாம்...
அக்குரல் கலககுரலாய் ஒலிக்கும் நேரத்தில் தான் ஆதிக்க சாதியின் குரல்வளை அறுக்கப்படும் என்பதை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்...

---------------------
எனவே இங்கு வி.பி. சிங் அல்லது மண்டல் அல்லது இடஒதுக்கீடு பற்றி மட்டுமே பேசலாமே..குழாயடியை சண்டையை வேறுபக்கம் வைத்துகொள்வோம்....

நன்றி
யுவன்பிரபாகரன்

பெயரில்லா சொன்னது…

இந்தா பிடியுங்கள் இந்தியா டுடே (கழிப்பறையில் தண்ணீரை மிச்சம் பிடிக்க)இந்தியா டுடே இதழின் உள்ளடக்கத்திற்கு எதிர்வினையாக அதைக் கிழித்து மலம் துடைத்து அதன் பொறுப்பாசிரியருக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது நினைவிருக்கிறதா? நல்லமாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனுசனுக்கு ஒரு சொல். ஆனால் இந்தியா டுடே மாடுமல்ல மனுசனுமல்ல திருந்துவதற்கு. எனவே அது முன்னிலும் திசைகெட்டு துடைக்கவும் அருகதையற்றதாய் வந்துகொண்டிருக்கிறது.

இவ்விதழின் கட்டுரையாளர்கள் காலையில் டீ காபிக்குப் பதிலாக புஷ்ஷின் மூத்திரத்தைக் குடித்துவிட்டு எழுத உட்காருவார்கள் போலும், இந்தியாவில் நடக்கும் எதுவுமே அவர்களுக்கு உவப்பாயிருப்பதில்லை. எனவே எப்போதும் அமெரிக்காவப் பாரு, அவுத்துப்போட்டு ஆடு என்கிற ரீதியில் எதையாச்சும் எழுதிக்குமிப்பார்கள். முதலாளித்துவ லாபவெறிக்குத் தடையாக இருக்கிற சட்டதிட்டங்களை உடைத்து நொறுக்கவேண்டும், அரசியல் பொருளாதாரத் தளங்களில் நிலவும் கட்டுப்பெட்டித் தனங்களை மீறிப் பாயவேண்டும் என்பார்கள். அதற்கிசைவான நுகர்வுவெறியை உருவாக்க பக்கம்பக்கமாக எழுதுவார்கள். அதேநேரத்தில் பண்பாட்டுத்தளத்தில் நிலவும் கட்டுப்பாடுகளாலும் பழமைவாதத்தாலும் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் சமூகத்தை விடுவிக்கும் முயற்சிகள் ஏதேனும் நடப்பதுபோல் தெரிந்தால் இந்தியாவின் மரபுக்கும் பாரம்பரியத்திற்கும் ஆபத்து வந்துவிட்டதாக அலறிக் கொதிப்பார்கள். ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மனங்களைத் தகவமைக்கவும் சாதியத்தின் பிடியிலேயே சமூகம் தொடர்ந்து கட்டுப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் தேவையான தலைப்புகளில் அவ்வப்போது கருத்துக்கணிப்புகளை நடத்தி தமது கைச்சரக்குகளை அவிழ்த்துவிடுவார்கள்.

பத்திரிகைச் சுதந்திரம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு வெளியாகும் இந்தியா டுடேயின் எழுத்துக்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்கு எதிராக தொடர்ந்து விஷம் கக்குவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்துத்துவ வெறியர்கள் நிகழ்த்தும் கருத்தியல் வன்முறையின் கெடுவிளைவுகளை இவ்விதழின் எந்தவொரு வரியிலிருந்தும் நம்மால் உணரமுடியும். இங்குள்ள சிறுபான்மையினர் அனைவரையும் தேசவிரோதிகளாக- தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்துத்துவ நிலைபாட்டை தன் மொழிநடையில் வெளியிட்டு இந்தியா டுடே, இந்துத்துவ டுடேவாக மாறுவது தற்செயலானதல்ல.

என்னதான் ஒருவர் தேசம், மக்கள் ஒற்றுமை, நாட்டின் வளர்ச்சி, கட்டற்ற சுதந்திரம் என்ற பொதுப்பதங்களில் பதுங்கித் திரிந்தாலும் இடஒதுக்கீடு குறித்துப் பேசும்போது அவரது எல்லா வேஷங்களும் கலைந்து அப்பட்டமான பார்ப்பனராக மாறிவிடுகிறார் என்பது இந்தியா டுடே பத்திரிகைக்கும் பொருந்தும். இடஒதுக்கீடு பற்றி எழுதும் போதெல்லாம் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுவிடுவதற்கும் இவங்கப்பன் வூட்டு சொத்தில் பங்கு கேட்க வந்ததைப்போல பதறுவதற்கும் இது துளிகூட வெட்கப்பட்டதில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் தமது விஷமத்தனமான கருத்துகளை வெளிப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் இடஒதுக்கீட்டுக்கு எதிராக எவ்வளவு அவதூறுகள் முன்வைக்கப்பட்டாலும் அதை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க இடஒதுக்கீட்டின் ஆதரவாளர்களும் பயனாளிகளும் முன்வரமாட்டார்கள் என்ற தைரியத்திலேயே இந்தியா டுடே இவ்வாறு எழுதுகிறது.

( இந்துத்துவ/ பார்ப்பன சங்கத்தின் செய்திமடல்போல வெளியாகும் இந்தியா டுடே மாதிரியான பத்திரிகைகள் அதன் நேரடிப் பயனாளிகளான குறிப்பிட்ட அந்த சாதியினருக்குள் மட்டுமே புழங்கித் தொலைப்பதில்லை. தமக்கு எதிரான துவேஷங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தினாலும் தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் இந்துத்துவ எதிர்ப்பாளர்களும் இவற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு கூருணர்வற்று மொன்னையாகக் கிடக்கிறார்கள் என்ற பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டே கடைவிரிக்கப் படுகின்றன. கருத்துச் சுதந்திரத்தையும் கொழுப்புச் சுதந்திரத்தையும் ஒன்றெனக் குழப்பி நடத்துகிற இந்த செய்தி வியாபாரத்தில் கைவைக்கிற முடிவை தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் மேற்கொள்வதும்கூட இந்தியா டுடே போன்றவற்றின் கொட்டத்தை அடக்கும் வழிகளில் ஒன்றென வலியுறுத்த வேண்டியுள்ளது. எவ்வளவுதான் எதிர்ப்புக் கருத்தை வெளியிட்டாலும் ஒரு பத்திரிகையைப் புறக்கணிப்பது எப்படி சரியாகும் என்று குழப்பமடைகிற பெருந்தன்மைக்காரர்கள், குறைந்தபட்சம் அவற்றில் வரும் விஷமங்களுக்கு எதிர்வினை புரியவும் முன்வருவதில்லை. )

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் அறிக்கையை அமல்படுத்தியதற்காக மறைந்த பிரதமர் வி.பி.சிங் மீது பார்ப்பனக்கூட்டம் இன்றளவும் பகையுணர்வு கொண்டிருக்கிறது என்பதைத்தான் அவருக்கான அஞ்சலிக்குறிப்பில் இந்தியா டுடே வெளிப்படுத்தியுள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீடு வழங்கி சமூகத்தை சீரழித்தவர் என்றும் சமூக அடுக்குமுறையைக் குலைத்தவர் என்றும் அது வி.பி.சிங்கை வசைபாடியிருக்கிறது. இடஒதுக்கீட்டால் எதுவும் நடக்கவில்லை என்று சிலர் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு திரிந்தாலும், இந்தியா டுடேவுக்குத் தெரிந்திருக்கிறது- தமது எந்த நரம்பை அறுத்தெடுத்திருக்கிறது இடஒதுக்கீடு என்று.

மும்பை ஓட்டல்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நாடு திணறிக்கொண்டிருந்தபோது வி.பி.சிங் மரணமடைந்ததால், அவரது மரணத்தை ஊடகங்களால் பொருட்படுத்தவியலாமல் போய்விட்டதாக ஒரு அங்கலாய்ப்பு இருக்கிறது. தப்பு நண்பர்களே தப்பு. யாதொரு பிரச்னையும் இல்லாத காலத்தில் வி.பி.சிங் இறந்திருந்தாலும்கூட இதேயளவில்தான் ஊடகங்கள் பேசியிருக்கும் என்பதை கவனத்தில் வையுங்கள். ஊடகங்களுக்குள் ஆதிக்கம் செலுத்தும் ஒற்றைச்சாதியின் மனநிலையில் வி.பி.சிங் திட்டவட்டமான எதிரியாகவே பதித்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். எனவே நடுநிலை என்கிற ஜிகினாப்பூச்சுகளை உதிர்த்துவிட்டு அப்பட்டமாக விரோத குரோதங்களை வெளியிட்டு வி.பி.சிங்கின் மரணத்தை அவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. தலித்துகளைத் திரட்டி பார்ப்பன மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரப் போராடிய அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளுக்கும், தனக்குக் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு பிற்படுத்தப்பட்டவர்களை மேலெடுக்கத் துணிந்த வி.பி.சிங்கின் நினைவுநாளுக்கும் உரிய முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ள உதவியமைக்காக இந்த ஊடகங்கள் பயங்கரவாதிகளுக்கு ரகசியமாய் நன்றி சொல்லவும்கூடும்.

எனவே, வி.பி.சிங்கின் மரணம்கூட இந்தியா டுடே போன்ற பத்திரிகைக்கு நிம்மதியைத் தராமல் போனதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அதனால்தான் இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் தன்னைத்தானே கொளுத்திக்கொண்ட ராஜீவ் கோஸ்வாமி என்கிற சாதிக் கொழுப்பேறியவனின் உடலில் படர்ந்த தீயின் எச்சமே, 2008 நவம்பர் 29 அன்று கங்கைக்கரையில் வி.பி.சிங்கின் சிதையை எரித்ததாக எழுதி ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முயன்றிருக்கிறது அது. வி.பி.சிங்குக்கு கொள்ளிவைத்தான் என்றால், ராஜீவ் கோஸ்வாமி அவருக்குப் பிறந்தவனா என்றெல்லாம் கேட்டு கொச்சைப்படுத்த நாம் விரும்பவிலை. ஆனால் எவ்வளவு ஆங்காரமிருந்தால் இப்படி எழுதுவதற்கு இ.டு துணியும் என்பதுதான் இங்கு கண்டனத்துக்குரியது.

ராஜீவ் கோஸ்வாமி எதற்காக தன்னைத்தானே கொளுத்திக்கொண்டான்? அவனும் அவன் பரம்பரையும் ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்ட அவமானம் தாங்காமலா? அல்லது அதிகாலையில் எழுந்து ஊரான் பேண்டதையும் மோண்டதையும் அள்ளிச் சுமக்க வேண்டியிருக்கிறதே என்ற அருவருப்பினாலா? அழுக்குத் துணியை வெளுக்கணுமே அல்லது அக்குளிலும் அடியிலும் சவரம் செய்து தொலைக்கணுமே என்ற உளைச்சலிலா? காலத்துக்கும் இப்படி சேற்றில் உழன்று மாய வேண்டியிருக்கிறதே என்கிற வெறுப்பிலா...? அவன் வீட்டுப் பெண்டு பிள்ளைகள் யாருடைய பிறப்புறுப்பிலாவது தீப்பந்தம் சொருகப்பட்டிருக்கிறதா? இத்தனை வகையான கொடுமைகளுக்கும் ஆளாகிற நாங்களே சகித்துக் கொண்டு உயிரோடிருக்கும்போது, தீவைத்துக்கொண்டு சாகுமளவுக்கு உனக்கென்னடாப்பா குறை வச்சோம்.... இந்த நாட்டோட நிலம் நீச்சு, ஆஸ்தி பாஸ்தி, கோயில் குளம் எல்லாத்தையும் கொடுத்தோம். எங்க ஊரு ராஜாவே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ராணியை கன்னி கழிக்கும் உரிமையை உங்களுக்குக் கொடுத்தோம். நாலு குதிரையோடும் நாலு வேதசுலோகத்தோடும் வந்த உங்களுக்கு இவ்வளவையும் கொடுத்தப்புறமும் உனக்கு என்னடாப்பா மனக்குறை... ஒருவேளை உங்க தாயாதிகளும் பாட்டன்மார்களும் சொல்கிற அகண்ட பாரதம் உருவாக லேட்டாகும் போல என்று அவசரப்பட்டு கொளுத்திக்கிட்டாயா என்று கேட்பதற்கு அவன் உயிரோடு இல்லை இப்போது.

எதை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு என்ற மோசடி வாசகத்தை ஊரெல்லாம் ஸ்டிக்கர் போட்டு ஒட்டிவைத்துவிட்டு விதி, வினைப்பயன், யாகம், பூசை, புனஸ்காரம் என்பதன் பெயரால் தன் சாதி மட்டுமே சுகித்துவந்த இந்த நாட்டின் வளங்களிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்டு தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் வருகிறார்கள் என்றதுமே பதறிப்போய் கொளுத்திக் கொண்ட அவன், இந்தியா டுடேவுக்கு வேண்டுமானால் தியாகியாகத் தெரியலாம். ஆனால் அந்த ராஜீவ் கோஸ்வாமியை மசுருக்கு சமானமாகக்கூட நாங்கள் கருதமுடியாது. ஒரு சூத்திரனோ அவர்ணனோ சுவாசித்து வெளியேற்றியக் காற்றை சுவாசிக்க விரும்பாது மூக்கைப் பிடித்துக்கொண்டு செத்துப் போகிறவனை எப்படி தியாகியாகக் கருதமுடியும்?

மண்டல் அறிக்கை அமலாக்கத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களிடம் தங்களது இடங்களை இழக்கவேண்டி வருமே என்ற பயத்தில் எப்பாடு பட்டேனும் அதைத் தடுத்து நிறுத்த ஆதிக்கசாதியினர் இறக்கிய துருப்புச்சீட்டுகளில் ஒன்றுதான் ராஜீவ் கோஸ்வாமி. பார்ப்பன மேலாதிக்க கருத்தியலை உள்வாங்கி வளர்ந்த அவனது சாவு பொதுநலன் பொருட்டானதல்ல. அவன் தானாக நெருப்பிட்டுக் கொள்ளவில்லை என்றும், கொளுத்தப்பட்டானென்றும் உலவுகிற கதைகூட உண்மையாக இருக்கலாம். தமது சுயநலத்துக்காக யாரை வேண்டுமானாலும் கொளுத்துகிற நெடிய வரலாறு இந்நாட்டின் பார்ப்பனர்களுக்கு உண்டு. அதோடு அதற்கான பழியை பிறர்மீது சுமத்திவிடுகிற சாமர்த்தியமும் அவர்களுக்கு எப்போதுமுண்டு.

இந்தியா டுடே சொல்வதுபோல வி.பி.சிங்கை எரித்த நெருப்பு ராஜீவ் கோஸ்வாமியுடையதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த மண்ணின் வேளாண்குடிகளது கால்நடைகளை, நந்தனை, வள்ளலாரை, விதவைகளை, கலைஇலக்கியங்களை யாகமென்றும் ஜோதியென்றும் சதியென்றும் அனல்வாதமென்றும் எரித்துப் பொசுக்கினீர்களே அந்த நெருப்பிலும் கருகாது கனன்று கனன்று காலம்தாவி வந்த எங்கள் கோபம்தான் தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் மனநெருக்கடிக்குள் ராஜீவ் கோஸ்வாமியை நெட்டித் தள்ளியிருக்கும் என்ற உண்மையை உணர்வதற்கு இந்தியா டுடேவுக்கு திறந்த மனமும் சாதிப்புரையேறாத கண்ணும் தேவை.

ஹோமத்தில் உடைத்துப்போடும் மாங்குச்சியைப்போல முகூர்த்த நேரம் முடிந்ததும் அணைந்துவிடும் என்ற நினைப்பில் இந்துத்வம் கொளுத்திப்போட்டு விசிறி விட்ட நெருப்பு இந்த நாட்டின் நாலாதிசைகளிலும் எமது மகவுகளை பொசுக்கித் தின்றுவிட்டு ரத்தக் கவுச்சியோடு அலைந்து கொண்டிருக்கும்போது ராஜீவ் கோஸ்வாமியின் தற்கொலை மட்டும் இந்தியா டுடேவுக்கு இழப்பாகத் தெரிவதில் நியாயமென்று ஒரு வெங்காயமும் இல்லை- சாதிப்புத்தியைத் தவிர.

மண்டலுக்கு எதிராக மாணவர் போராட்டம் என்ற பெயரில் பார்ப்பனர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையிலிருந்து சில ஆதிக்க சாதியினரும் நடத்திக் கொண்டிருந்த அட்டூழியங்களை கல்விநிலையங்களுக்கும் வெளியே பரப்பும் நோக்கத்தோடு ரதயாத்திரை கிளம்பினார் அத்வானி- ராமனையும் கூட்டிக்கொண்டு. நாடு முழுவதும் கலவரங்கள்.... கொலைகள்... கொள்ளைகள்... பாலியல் வன்கொடுமைகள்.... காமிக்ஸ் கதைகளில் வருகிற அ.கொ.தீ.கவிடம் மாட்டிக் கொள்கிற ஒரு சிறுமியைப் போல இந்த சமூகம் இந்துத்வாவினால் அடைந்த இழப்புகள் சொல்லி மாளாதவை. பார்ப்பன மேலாதிக்கத்தை இந்த மண்ணில் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவ கும்பல் நிகழ்த்திய இத்தனை அட்டூழியங்களுக்கும் வி.பி.சிங்கை பொறுப்பாளியாக்க தனது அஞ்சலிக்குறிப்பை பயன்படுத்தப் பார்க்கிறது இந்தியா டுடே. எனவே அது ‘மண்டல் நாயகரான இவர் இந்திய அரசியலில் மாபெரும் சமூகச் சீரழிவைக் கொண்டுவந்தவர்’ என்ற தலைப்பின் கீழ் அஞ்சலி செலுத்துவதாய் கூறிக்கொண்டு அவதூறு செய்திருக்கிறது.

மண்டல் அறிக்கையின் வழியாக ஜாதியை முன்வைத்து தகுதியைப் பின்னுக்குத் தள்ளி சமூக அடுக்குமுறையை சீர்குலைத்தவர் என்று இந்தியா டுடே வி.பி.சிங் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் ஒளிவுமறைவு எதுவுமில்லை. ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் இந்த சாதியமைப்பு பார்ப்பனர்களுக்குத் தேவையாயிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி அது வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை போட்டியிட வாய்ப்புப்பெறாத சாதியினர், இடஒதுக்கீட்டினால் தங்களைப் பின்னுக்குத்தள்ளி முன்னேறிவிடக்கூடும் என்ற கையாலாகாத்தனத்திலிருந்து அது இவ்வாறு பிதற்றுகிறது. திருடிக்கொண்டு ஓடுகிறவன் துரத்திக்கொண்டு வருகிறவனை திருடன் என்று சொல்லி திசைதிருப்பும் மோசடியைப்போல, தகுதியையும் திறமையையும் நிரூபித்துக் காட்டாமலே சாதியின் பெயரால் எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்ட கூட்டம், சாதிரீதியான இடஒதுக்கீடு தகுதி திறமையை பின்னுக்குத் தள்ளிவிடும் என்று கதைவிடுகிறது.

இடஒதுக்கீடு கூடாது, தகுதியும் திறமையும் உள்ளவர்கள் போட்டியில் வெற்றிபெற்று வரட்டும் என்கிற வாதத்தில் பெரிய நியாயம் இருப்பதுபோல தோன்றும். அப்படியொரு புண்ணாக்கும் இல்லை. போட்டியிட வருவதற்கே இடஒதுக்கீடு தேவையாயிருக்கிறது. அவ்வளவு மறிப்புகள், தடைகள். சரி, தகுதியும் திறமையும் தங்களிடம் உச்சி முதல் பொ... வரை நிரம்பிக்கிடப்பதாய் அலட்டிக் கொள்கிறார்களே போட்டியிலாவது நேர்மையாக பங்கேற்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. போட்டித்தேர்வுகளில் பங்கேற்று முன்னேறிய சாதியினரை விடவும் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிடுகிற ஓபிசி, தலித் மாணவர்களை பொதுப் பட்டியலுக்குள் கொண்டுவராமல் அவரவர் சாதிக்கான ஒதுக்கீட்டு இடத்தில் (கோட்டாவுக்குள்) தள்ளி நிரப்பிவிட்டு, பொதுப்பட்டியலுக்கான 50.5 சதவீதத்தையும் முன்னேறிய சாதிக்கான தனிஒதுக்கீடாக அபகரித்துக் கொள்கிற இந்தியா டுடேயின் சொந்தக்காரர்கள் மானவெட்கமற்று தகுதி திறமை பற்றிப் பேசுகிறார்கள். யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்று தேர்ச்சிபெற்ற 474 பேரில், அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற முத்தியால் ராஜூ ரேவு என்ற ஓபிசியை கோட்டாவுக்கு தள்ளியதன் மூலம், பட்டியலில் 474வது இடத்தில் இருந்த பார்ப்பனர் ஒருவரை மெரீட்வாலாவாக மாற்றி பொதுப்பட்டியலுக்குள் இழுத்துக்கொண்ட மோசடி இன்று நீதிமன்றத்தில் இழுபட்டு நாறிக்கொண்டிருக்கிறது.

Mandal vs Kamandal என்ற இந்துத்துவாவின் உத்தி கடைசியில் வி.பி.சிங் தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டது. ஆட்சியை இழந்தாலும் தமது வாழ்வில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்தவர் என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்கள், சமூகநீதி ஆர்வலர்கள் அனைவரின் மனதிலும் என்றென்றைக்கும் தன்னிகரற்ற இடத்தைப் பெற்றிருப்பவர் வி.பி.சிங். ஆகவே, இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சமூக அடுக்குமுறையை குலைத்தவர் என்ற இந்தியா டுடேயின் குற்றம்சாட்டுக்கு முழுப்பொருத்தம் பெற்றவர் அவர். பிரதமர் பதவியிலிருந்து வெளியேறியதும் பென்ஷனை வாங்கிக்கொண்டு பேரப்பிள்ளைகளோடு பினாத்திக் கொண்டிருக்காமல் நாட்டின் அரசியல் நிகழ்வுகளில் குறுக்கிட்டு கருத்து சொல்கிறவராகவும் களத்தில் நிற்பவராகவும் அவர் கடைசிவரை இருந்தார் என்பதும்கூட இந்தியாடுடேவுக்கு எரிச்சலூட்டும் விசயம்தான். எனவேதான் மதச்சார்பின்மையின் இஷ்டதெய்வமாக இருந்தார் என்று கிண்டலடிக்கிறது. நடக்கமுடியாமல் நகர்கிற வயதிலும் மதவெறி கொண்டலைகிற வாஜ்பாய் போன்றவர்கள் இருக்கும் நாட்டில், மதச்சார்பின்மை என்ற உயரிய கோட்பாட்டிற்காக தனது மரணம் வரையிலும் ஒருவர் வாழ்ந்தார் என்பது பெருமைக்குரிய செய்திதானே.


****டி.சே தமிழன்******

aara kavingan சொன்னது…

ஒரு மனிதர் மரணமடைந்த பின் அவரது குற்றங்களைக் கூட நளினமாக மிருதுவாக அவரை மதிப்பவர்கள் புண்படும்படாமல் சொல்வதுதான் மனித மாண்பு.தனி மனிதனுக்கே இத்தகைய பண்பு இருக்கிறபபோது ஒரு சமூகத்தை பிரதிபலிக்கவேண்டிய பொறுப்பு இருக்கவேண்டிய ஒரு பத்திரிகை திரு.வி.பி.சிங்குக்கு 'அழுதிருக்கும்" அஞ்சலி அதன் நெஞ்சு சளியைக் காட்டுகிறது.
அந்த மாமனிதர் உயிருடன் இருக்கும்போது இந்த விமர்சனங்களை இவ்வளவு வெளிப்படையாக வைக்காத அந்த டுடேயின் பூணுல் புத்தியை எண்ணி சிரிக்கலாம். காரித்துப்பிக் கொண்டே சிரிக்கலாம். ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள எத்தனையோ பேரின் கால்பிடிக்கும் அரசியல் உலகில் ரத்தயாத்திரையை தடுத்து நிறுத்தியதற்காக பதவியைத் துறந்த வி.பி.சிங்கின் சாதனை மகுடம்தான் மண்டல் கமிஷன் அமல். இது தெரிந்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தா ங்கள் தரித்திந்த பீதாம்பரத்தில் சற்று கிழித்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கொடுத்ததை தாங்க முடியாமல் 'மனுமென்டல்கள்" போடும் கூச்சலின் குறிப்புதான் டுடேவின் அலறல்.

aara kavingan சொன்னது…

ஒரு மனிதர் மரணமடைந்த பின் அவரது குற்றங்களைக் கூட நளினமாக மிருதுவாக அவரை மதிப்பவர்கள் புண்படும்படாமல் சொல்வதுதான் மனித மாண்பு.தனி மனிதனுக்கே இத்தகைய பண்பு இருக்கிறபபோது ஒரு சமூகத்தை பிரதிபலிக்கவேண்டிய பொறுப்பு இருக்கவேண்டிய ஒரு பத்திரிகை திரு.வி.பி.சிங்குக்கு 'அழுதிருக்கும்" அஞ்சலி அதன் நெஞ்சு சளியைக் காட்டுகிறது.
அந்த மாமனிதர் உயிருடன் இருக்கும்போது இந்த விமர்சனங்களை இவ்வளவு வெளிப்படையாக வைக்காத அந்த டுடேயின் பூணுல் புத்தியை எண்ணி சிரிக்கலாம். காரித்துப்பிக் கொண்டே சிரிக்கலாம். ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள எத்தனையோ பேரின் கால்பிடிக்கும் அரசியல் உலகில் ரத்தயாத்திரையை தடுத்து நிறுத்தியதற்காக பதவியைத் துறந்த வி.பி.சிங்கின் சாதனை மகுடம்தான் மண்டல் கமிஷன் அமல். இது தெரிந்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தா ங்கள் தரித்திந்த பீதாம்பரத்தில் சற்று கிழித்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கொடுத்ததை தாங்க முடியாமல் 'மனுமென்டல்கள்" போடும் கூச்சலின் குறிப்புதான் டுடேவின் அலறல்.

jayakaarthi சொன்னது…

I strongly condemn India Today for that article.

Tech Shankar சொன்னது…

நல்ல விரிவான அலசல். படங்களையும் போட்டு அசத்தலாகத் தந்துள்ளீர்கள்


வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

வெண்காட்டான் சொன்னது…

மிக்க நன்றி. ஒப்பற்ற தலைவர்களின் ஒருவரான வி.பி.சிங் பற்றி அறியவைத்தற்கு..வர்த்தக வலையம் பற்றி அப்போதே தெளிவாக விளங்கி வதை்துள்ள மனிதர். இன்னும் எம் மக்களுக்கு இதைப்பற்றி விளங்கவில்லை. வருத்தத்திற்குரிய விடயம்.

கருத்துரையிடுக