14 நவம்பர், 2009

சே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்கி வாசுதேவ்!

ஈழப்போரின் உக்கிர நிலையில் மற்றவர்களைப்போலவே உள்ளம் கொதித்தவர்களில் சில பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் துரோகம் குறித்து பேசுவதற்கு ஆயிரம் சங்கதிகள் இருந்தும், அதற்கான களம் அமையாத நிலை. தமிழ்நாட்டின் அரசியல் சூழல், அதை அனுசரித்து இருக்கவேண்டிய ஊடகச்சூழல் காரணமாக பல செய்திகள் பதிவு செய்யப்படாமல் மரித்துப் போயின.

செய்தியாளர்களில் சிலர், பணியாற்றும் ஊடகங்களில் பகிர முடியாத சங்கதிகளை மின்-ஊடகங்களில் பகிர்ந்தனர். போருக்கு முன்னதாகவும், பின்னரும் இது குறித்து அக்கறையும், ஆர்வமும் கொண்ட பல பத்திரிகையாளர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அமைப்பு என்ற பெயரில் கூட்டுச்செயல்பாடுகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. பிறகு தமிழர்களுககே உரிய ஒற்றுமை காரணமாக இந்தப் பெயரில் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

இதற்கிடையே விகடன் குழுமத்தில் பணியாற்றிய திரு. த. செ. ஞானவேல் மற்றும் சில நண்பர்கள் ஈழப்போர் குறித்த புகைப்படங்களையும், அந்தப் படங்கள் குறித்த பிரபலங்களின் கருத்துகளையும் திரட்டி வெளியிடுவதற்கு திட்டமிடுவதாக தெரிந்தது.

ஒரு நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த தொகுப்பில் இடம் பெறும் ஜகதீஷ் என்ற ஜக்கி வாசுதேவ், நடிகை நந்திதா தாஸ், மு. அனந்தகிருஷ்ணன் ஆகியோரின் கருத்துகளை தமிழாக்கி கொடுக்கும் வேலையும் செய்தேன்.

இந்தப் பணியில் ஈடுபட்ட அனைவருமே ஈழப்பிரசினையில் உண்மையான அக்கறையும், ஈடுபாடும் கொண்டவர்கள் என்பதில் எனக்கு எள் முனையளவும் ஐயமில்லை. இவர்களில் நான் நன்கறிந்த அனைவரும் பெரியாரிய மற்றும் பொதுவுடைமை கருத்துடையவர்கள்.

-----

"ஈழம்: மெளனத்தின் வலி" என்ற நூல் இறுதி வடிவம் பெற்று, வெளியீட்டுக்கான நாள் குறிக்கப்பட்டு எனக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பிதழும் வந்தது. நாம் என்ற அமைப்பும், நல்லேர் பதிப்பகமும் இணைந்து அந்த நூலை வெளியிடுவதாக நான் புரிந்து கொண்டேன்.

14-11-09 சனிக்கிழமை! சில நாட்களாக விட்டிருந்த மழை மீண்டும் அடித்துப் பெய்தது. ரெயின் கோட் சகிதமாக அரங்கிற்கு சென்றேன். அரங்கு ஏறக்குறைய நிறைந்திருந்தது. ஈழப்பிரசினை குறித்த நிகழ்ச்சிக்கு வழக்கமாக வருபவர்களை காணோம். அதற்கு பதிலாக உயர்நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களும், பெண்களும், ஆண்களும் அரங்கை ஆக்கிரமித்திருந்தனர்.

அரங்கின் வெளியே நக்கீரன் பத்திரிகையில் இலங்கைப் பிரசினை குறி்த்து தொடர்ந்து எழுதும் ஜகத் கஸ்பார் நின்று கொண்டு விஐபிக்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். ஜகதீஷ் என்ற ஜக்கி வாசுதேவ், நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் வரவே நிகழ்ச்சி தொடங்கியது. அரங்கின் முதல் தளத்தில் பத்திரிகை நண்பர்கள் இருவருடன் அமர்ந்திருந்தேன். ஏராளமான கூட்டம் சேர்ந்திருந்தது.

நிகழ்ச்சி தொடங்கியது.

"ஈழம்: மெளனத்தின் வலி" தொகுப்பிலிருந்து சில கவிதைகளை நடிகர் சிவகுமார் வாசித்தார். தொடர்ந்து திரைப்பட இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ், நடிகர் பிரகாஷ் ராஜ், பாதிரியார் சின்னப்பா ஆகியோர் பேசினர்.

"சத்குரு"வின் பெயர் உச்சரிக்கப்பட்டபோதெல்லாம் அரங்கில் இருந்த அவரது ரசிகர்கள் (அல்லது) பக்தர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஈழப்பிரசினை குறித்து சென்னையிலேயே பல நிகழ்ச்சிகள் நடந்தபோதெல்லாம் திரும்பிக்கூட பார்த்திராத உயர்நடுத்தர வர்க்க மக்கள் அனைவரும் சத்குருவின் சீடர்கள் என்பது அப்போதுதான் புரிந்தது. ரஜினிகாந்த், அப்துல் கலாம் ஆகியோரைவிட பிரபலமாக ஜக்கி இருப்பது தெரிந்தது.
தொடர்ந்து நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பேசினார். அவரது பேச்சு வழக்கம்போல, ஈழப்பிரசினை குறித்த மக்களின் உணர்வுகள் திமுகவிற்கு எதிராக திரும்பிவிடாமல் திசைதிருப்பும் நோக்கிலேயே இருந்தது. ஈழத்தில் கொல்லப்பட்டது தமிழர்கள் என்பதால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். (மத்திய அரசில் இடம் பெற்ற தமிழக அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்று சொல்லவில்லை) தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கு ஆதரவளித்த தமிழக அரசியல் தலைவர்களை கிண்டல் செய்தார். குறைந்தபட்சமாக இந்த கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அனைத்திந்திய ஊடகங்கள் ஈழச்செய்திகளை இருட்டடிப்பு செய்ததை வருத்தத்தோடும், கோபத்தோடும் பதிவு செய்தார். (தமிழகத்தின் பிரதான தொலைக்காட்சிகளும் அந்த நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்ததை குறிப்பிட அவர் மறந்து விட்டார்).

இறுதியாக ஜகதீஷ் என்ற சத்குரு ஜக்கி வாசுதேவ் சுமார் 40 நிமிடங்கள் அருள்வாக்கு வழங்கினார். அனைவரும் பேசிய இடத்திலிருந்து, (அந்த இடம் தீட்டாகி இருக்கும் போலிருக்கிறது) மைக்கை வேறு இடத்திற்கு மாற்றிப்போட்டு பேச்சைத் தொடங்கினார். ஈழத்துப் பிரசினைகளை குறிப்பிட்டு பேச்சைத் தொடங்கிய அவர் என்னென்னவோ பேசினார்.
போராட்ட உணர்வே மக்களுடைய அமைதிக்கு எதிராக இருப்பதாக கூறினார். போராடுவது என்று முடிவெடுத்தால், போராட்டங்களுக்கு முடிவே இருக்காது. இதனால் மனிதனின் வாழ்வு பெரும் சோகமாகவே இருக்கும். ஒரு பிரசினையால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு எதிராக போராடும்போது, மற்றொரு தரப்பு பாதிக்கப்படும். பிறகு அந்த தரப்பு போராடும். எனவே போராடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

அநீதிக்கு எதிராக உன் ரத்தம் கொதி்த்தால் நீயும் நானும் சகோதரர்கள் என்று சே குவேரா கூறியதாக குறி்ப்பிட்ட சத்குரு, இது மிகவும் தவறான கருத்து என்று குறிப்பிட்டார்.
சே குவேராவின் கூற்றிற்கு எதிராக இருத்தலே நல்லது என்று கூறிய சத்குரு, சே குவேராவின் கருத்திற்கு எதிரான கருத்து கொண்டவர்கள் தமது சகோதரர்கள் என்று பிரகடனம் செய்தார்.

சத்குருவின் இந்த வார்த்தைகள் ஏதும் அவரது ரசிகர்கள் (அல்லது) பக்தர்களின் காதுகளில் விழுந்ததா என்பதே தெரியவில்லை. ஏறக்குறைய அவர்கள் அனைவருமே பரவச நிலையில் இருந்தனர்.
பலர் வாய் கொள்ளாத சிரிப்பு அல்லது தாளமுடியாத அழுகையில் இருந்தனர். அவர்களது மனநிலை குறித்து ஆராய்வதற்கு மனநிலை மருத்துவர்கள் யாரும் இல்லாததால் மேற்கொண்டு வர்ணிக்க முடியவில்லை.

நல்லவேளையாக ஜகதீஷ் என்ற சத்குரு ஜக்கி வாசுதேவ், வழக்கமாக புகைப்படத்தில் காட்சியளிப்பதுபோல நடனம் அல்லது வேறு செயல்பாடுகளில் ஈடுபடாமல் அமைதியாக அமர்ந்தார்.

சே குவேரா குறித்த சத்குருவின் கருத்திற்கு மேடையில் இருந்த இன உணர்வாளர்கள் ஏதாவது எதிர்வினை ஆற்றுவார்கள் என்று அரங்கில் இருந்த மிகச்சில இன உணர்வாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மேடையில் இருந்த உணர்வாளர்களும் பரவச நிலையில் இருந்திருக்க வேண்டும் அல்லது அவர்களும் சே குவேரா குறித்த சத்குருவின் கருத்தை ஏற்றிருக்க வேண்டும்.
யாரும் எதுவும் கேட்கவில்லை. மருத்துவர் எழிலனின் நன்றியுரையோடு நிகழ்வு நிறைவடைந்தது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், பக்தர்களுமாய் சத்குரு ஜக்கியை வழியனுப்ப காத்திருந்தனர். அழுகையும், சிரிப்புமாய் காத்திருந்த பக்தர்களிடம் விடைபெற்ற ஜக்கியின் கார் விரைந்து வெளியேறியது.

எனினும் ஜக்கியின் தொண்டர்கள் சத்குரு நடத்தும் சில ஆயிரங்கள் கட்டணம் செலுத்தி படிக்கவேண்டிய யோகா வகுப்பு குறித்த விளம்பர துண்டறிக்கைகளை கொடுத்த பின்னரே சென்றனர்.

-----

நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர்கள் சிலரிடம் பேசினேன். நல்ல எண்ணத்தில்தான் இந்த பணியை துவங்கினோம். ஆனால் இந்த அளவுக்கு விமர்சனம் வரும் என்று நினைக்கவில்லை என்றனர்.

நல்ல செயல்களை செய்வதற்கு நல்ல எண்ணங்கள் மட்டும் போதாது என்பது புரிந்தது.

நமது கண்களே, நம்மை ஏமாற்றும்..! (அரசியல்வாதிகளுக்கு பயன்படும் தொழில்நுட்பம்)

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று கூறுவதுண்டு.

ஆனால் நமது கண்களை ஏமாற்றும் நோக்கத்துடனேயே பல படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. உளவியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்படும் சில படைப்புகள் இங்கே...

இவற்றை ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தினால் (மக்கள் அல்ல! அரசியல்வாதிகள்தான்!!) பெரும்பலன் அடையலாம்.

(படத்தை தரவிரக்கி பெரிதாக்கி பார்த்தால் மேலும் ரசிக்கலாம்)

எது தரைத்தளம்? எது மேல்தளம்? எங்கிருந்து எங்கே போவது??

(அரசும்கூட இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தலைமைச்செயலகம் உள்ளிட்ட கட்டடங்கள், மேம்பாலங்கள் அனைத்தும் கட்டினால் அனைவருக்கும் தலை சுற்றிவிடும். பின்னர் ஊழல் புகாரே வராது. எனவே ஆட்சி மாறியபின் கைதுகளும் இருக்காது. )மேலே உள்ள கருப்பு கட்டங்களின் நடுவே தெரியும் கருப்பு புள்ளிகளை சரியாக எண்ணுங்கள் பார்க்கலாம்.

(அரசின் நலத்திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு, செயல்பாடு குறித்து கேள்விகேட்கும் எதிர்கட்சி எம்எல்ஏக்களுக்கும், பத்திரிகைகளுக்கும், தகவல் உரிமைச்சட்ட ஆர்வலர்களுக்கும் இதுமாதிரி ஒரு தகவலைச் சொல்லி அவங்களை குழப்பி விடலாம்)


மேலே உள்ள படத்தில் படுக்கை வசத்தில் உள்ள கோடுகள் இணையாக இருக்கிறதா? அல்லது கோணலாக இருக்கிறதா?

(சபாஷ். சாலைகளில் போக்குவரத்து பிரசினையை சமாளிக்க இதுமாதிரி கோடுகளை சிக்னல் அருகில் வைத்துவிட வேண்டியதுதான். உடனே "கிராஃபிக் காமசாமி" ஒரு வழக்கு போடுவார். பிரசினையை நீதிமன்றத்தில் தள்ளிவிட்டு நிம்மதியாக இருக்கலாம்)


யானைக்கு எத்தனை கால்? என்று உங்கள் குழந்தைகள் கூட சொல்லிவிடும். ஆனால் இந்த யானைக்கு எத்தனை கால்கள்? என்று அவற்றின் கால்களை மட்டும் எண்ணி சொல்லுங்கள் பார்ப்போம்.

(காட்டில் உள்ள யானைகளுக்கு இலவச காலணி திட்டம் அறிவிக்கலாமா? யானைகளை எண்ணுவது தனி திட்டம்! அந்த யானைகளோட கால்களை எண்ணுவது தனி திட்டம்!! அந்த கால்களுக்கு காலணி கொடுப்பது தனி திட்டம்!!!)நடுவே உள்ள கருப்பு புள்ளியை மட்டும் சற்று நேரம் உற்றுப்பாருங்கள். அதை சுற்றி உள்ள சாம்பல் வண்ணப்பகுதி மறையத் தொடங்கும்.

(இது பழைய டெக்னிக்தான். சின்ன பிரசினை வரும்போது அதை விட பெரிய பிரசினை ஒன்றை உருவாக்கினால் சின்ன பிரசினைகள் மறந்துவிடும். வேற நல்ல யோசனை தேவை)நடுவே உள்ள கருப்பு புள்ளியை உற்றுப்பாருங்கள். தலையை முன்னேயும், பின்னேயும் மெல்ல அசையுங்கள். இரு வளையங்களும் எதிரெதிர் திசையில் சுழலும்.

(மக்களின் அறிவை வளர்ப்பதற்காக தமிழக அரசு கொடுத்த இலவச வண்ணத் தொலைக்காட்சியில் தமிழ்கூறும் நல்லுலகம் பார்த்து ரசிக்கும் 'மானாட மயிலாட" நிகழ்ச்சி முடிந்தவுடன் இந்த மாதிரி வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்று நடத்தச் சொல்லலாம்)
படத்தின் நடுவே உள்ள நான்கு புள்ளிகளையும் சுமார் ஒரு நிமிடத்திற்கு உற்றுப்பாருங்கள். பிறகு அப்படியே அருகே உள்ள சுவரைப்பாருங்கள். ஒரு சுவாரசியமான மனிதர் தெரிவார்.

(இது சூப்பர். இதை ஆதரித்து ரெண்டு பேர் அறிக்கை கொடுப்பாங்க. இது இந்துக்களுக்கு எதிரான சதின்னு எதிர்த்து ரெண்டுபேர் அறிக்கை கொடுப்பாங்க. மக்கள் அவங்க பிரசினையை மறந்துட்டு, இதை வேடிக்கை பார்ப்பாங்க)
படத்தை முழுதாக பார்த்தால் அனைத்து சக்கரங்களும் சுழல்வதுபோல் தெரியும். ஒரு சக்கரத்தை நிதானமாக பாருங்கள். எதுவும் சுழலாது.

(ஆஹா. அரசு இயந்திரத்தின் ப்ளூ பிரிண்ட்டே இதுதான். முழுமையாக செயல்படற மாதிரி தெரியணும். ஆனா நெருங்கி பார்த்தால் உண்மை வேறயா இருக்கணும்)எப்பூடி???

(இந்த டெக்னிக் குறி்த்து தமிழ் இலக்கியங்களில் எங்காவது இருக்கான்னு கவியரசு, கவிப்பேரரசு மாதிரி யார்கிட்டயாவது கேட்கலாம். சுஜாதா வேற இல்ல. அவர் இருந்தால் யாரும் கேட்காமலே ஏதாவது எழுதுவார். இந்த தொழில்நுட்பத்தையே அரசின் முதன்மையான தொழில்நுட்பமா அங்கீகரிக்க வேண்டியதுதான். )

09 நவம்பர், 2009

(சந்தன) வீரப்பன் ஆரண்யத்தில் வாரண நர்த்தனம்!

சுற்றிலும் மலைத்தொடர்கள். ஆங்காங்கே ஆள் நடமாட்டம் இருப்பதாய் ஓர் உணர்வு. குடிசை போன்றிருந்த கோயிலருகே யாரோ(!) ஏற்றிய கற்பூர தீபம். எங்கிருந்தோ சில ஜோடி கண்களும், துப்பாக்கி முனைகளும் எங்களை குறிபார்ப்பதாய் ஒரு உணர்வு.


[தொடர்புடைய பதிவுகள்:

வந்த வழியே திரும்ப வரும்போது, எங்களை வழி நடத்திய சோர்ஸ் எதனையோ கண்டு மிரள, எங்களையும் பயம் கவ்வியது. அந்த கானகப்பகுதிக்குள் நாங்கள் வந்தபோது, ஒரு இடத்தில் நீர் தேங்கியிருந்தது. அதில் யாரோ புழங்கியிருந்ததும், அவர்களின் காலடித்தடங்ளையும் பார்த்தவாறே நாங்கள் கடந்து போயிருந்தோம். இப்போது அந்த காலடித்தடங்கள் எதுவுமில்லை. அவற்றிற்கு பதிலாக ஏராளமான யானைகளின் காலடித்தடங்கள். பெரிதும் சிறிதுமாக சுமார் 20-25 யானைகள் அங்கு இருந்தன.
நாங்கள் அருகே இருந்த ஒரு மரத்தில் பதுங்கினோம். நான் ஒரு மரத்தின் மீதேற முயற்சித்தேன்.


அந்த யானைகளின் உல்லாசம் நியாயமாக எங்களையும் பற்றியிருக்க வேண்டும். ஆனால், எங்களை வழி நடத்திய சோர்ஸின் அச்சம் எங்களையும் பற்றியது.


யானைக்குட்டிகளோ மிகுந்த கும்மாளத்துடன் விளையாடிக் கொண்டிருந்தன. பெரிய யானைகளும்கூட மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடியதாகவே தோன்றியது. வெங்கலக்கடையில் யானை புகுந்தாற்போல என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த கற்பனை அமர்க்களத்தை யானைகள் அன்று நேரில் செய்து காண்பித்துக் கொண்டிருந்தன.
அங்கிருந்த தண்ணீரை சில குட்டிகள் உறிஞ்சி, மற்ற குட்டிகள் மீது பாய்ச்சின. பெரிய யானைகளோ கையில் கிடைத்த மரக்கிளைகளை உடைத்து விளையாடின. அந்த இடமே புழுதி பறந்து ஒரு வித்தியாசமான சூழலை உருவாக்கி இருந்தது.


அதுவரை யானைகளை பாகன்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே பார்த்து பழகியிருந்த எங்களுக்கு அது புதிய ஒரு அனுபவமாக இருந்தது. யானைகளின் நர்த்தனமும், அவை எழுப்பிய ஒலியும் (அதை எப்படி சொல்ல வேண்டும்? பிளிறியது என்றா?) சற்று பயமாகவும், சற்று ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் எங்களுடன் வந்திருந்த சோர்ஸின் முகத்தை பார்க்கும்போதெல்லாம் அவருடைய பயம் எங்களையும் பற்றியது.

யானைகள் கூட்டமாக வரும்போது, யாரையும் தொந்தரவு செய்யாது என்றும், தனியாக வரும் யானைதான் மனிதர்களை துரத்தும் என்றும் எங்கோ படித்திருந்தேன். ஆனாலும், கும்பலாக இருந்த அந்த யானைகள் அமைதியாக இல்லாமல் மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் இருந்ததால் பயத்தை தொலைக்க முடியவில்லை.


இதற்கிடையில் நாங்கள் பதுங்கியிருந்த மரத்தின் பக்கம் சில யானை குட்டிகள் விளையாடியபடியே வர எங்கள் பயம் உச்சத்திற்கு சென்றது. நான் மரத்தின் மேலேற முயற்சிக்க, எங்கள் வழிகாட்டியோ மரத்தின் மேலே ஏற வேண்டாம் என்றார்.


உயிரைக் கையில் பிடித்தபடி... என்பார்களே! அது வெறும் வர்ணனைதான், நிஜத்தில் உயிரைக் கையில் பிடிக்கமுடியாது என்று அன்று தெரிந்து கொண்டோம். ஆனால் எங்கள் உயிரை யானைகள் வேண்டுமானால் அவற்றின் கையில் பிடிக்கலாம் என்று தோன்றியது.
எங்களது சோர்ஸ் கையிலிருந்த ஏதோ ஒரு மூலிகையை வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தார். அவரது உதடுகள் எதையோ முணுமுணுக்க ஆரம்பித்தன. அந்த மூலிகையின் செயல்பாட்டால் அவர் திடீரென்று மறைந்து விடுவாரோ என்றுகூட தோன்றியது. அல்லது வேறு என்ன நடக்கும் என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தபோது என்னுடன் வந்திருந்த மற்றொரு நிருபரையும், புகைப்படக் காரரையும் திடீரென காணவில்லை. சோர்ஸ் என்னை கையைப் பிடித்து இழுத்தார். என்னை தரையில் தள்ளி புரட்டினார். உடையெல்லாம் புழுதியானது. மேலும் மண்ணை எடுத்து என் மீது வீசினார்.


இவருக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? என்று சந்தேகம் வந்தது. அவர் மென்ற மூலிகை கஞ்சாவா? என்ற சந்தேகமும் ஏற்பட்டது. அவரது நோக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. மற்றவர்களையும் காணவில்லை. போலிஸ் என்கவுண்டரைப்போல இந்த சோர்ஸ் என்னை தீர்த்துக்கட்டப் போகிறாரா? அப்படியானால் இவர் உண்மையிலேயே வீரப்பன் ஆள்தானா? ஆனாலும் நான் காவல்துறையின் ஆதரவாளன் இல்லையே? எனது முடிவை நெருங்கிவிட்டேனோ? என்ற எண்ணம் தோன்றியது. வீட்டில் வெளியூர் போவதாக சொல்லியிருந்தேனே தவிர, வீரப்பன் காட்டிற்கு போவதாக சொல்லவில்லை.
எண்ணங்கள் சுழல்வதற்குள் என் கையைப் பற்றிய சோர்ஸ், என்னை இழுத்துக் கொண்டு நகர்ந்தார். குட்டையான, ஆனால் அடர்த்தியான மரங்களின் பின்னாலேயே நான் நகர்வதை உணர முடிந்தது. அவ்வாறு நகர்ந்து செல்ல, செல்ல யானைகளின் ஒலி சற்று தொலைவில் ஒலிப்பதை உணர்ந்தேன். இருவரும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். யானைகளிடம் இருந்து தப்பியது புரிந்தது. ஆனால் சோர்ஸ் என்னை வினோதமாக பார்த்ததுபோல் தெரிந்தது. அவர் ஏதோ பேசினாற்போல் இருந்தது. ஆனால் என்ன பேசினார் என்பது புரியவில்லை. அவரது கண்கள் சொருகின. உடல் விரைத்தது போல் இருந்தது. பார்ப்பதற்கு அச்சம் தரும் தோற்றத்திற்கு அவர் மாறினார். அவரது மூளை இயல்பு நிலையில் இல்லை என்பது புரிந்தது. அந்த நிலையில் அவரை கட்டுப்படுத்துவது முடியாது என்பதையும் உணர்ந்தேன். அவர் ஏதோ சொல்ல முயல்கிறார் என்பது மட்டும் புரிந்தது. ஆனால் எதைச்சொல்ல ஆசைப்படுகிறார் என்பது புரியவில்லை.


அது தகவலா? மிரட்டலா? கெஞ்சலா? எனப்புரியவில்லை. அவரை எழுப்பவும் முயற்சிக்கவில்லை. எழுப்பினால் அது நல்லதா? கெட்டதா? என்ற குழப்பத்தில் இருந்தேன்.
சிறிது நேரத்தில் நாங்கள் இருந்த பகுதிக்கு, என் சக நிருபரும், புகைப்படக்காரரும், காரோட்டியும் வந்தபோதுதான் எனக்கு என் உயிர் குறித்த அச்சம் நீங்கியது. யானைகள் களேபரம் செய்தபோது அவர்களிடம் ஒரு பாதையை காண்பித்து அந்தப்பகுதியில் போகுமாறு சோர்ஸ் சொன்னதாகவும், அதன்படியே சென்று நான் இருந்த பகுதிக்கு வந்ததாகவும் அவர்கள் கூறினர். இதற்குள் கண்விழித்த சோர்ஸ், அவர்களை பார்த்து நிம்மதி அடைந்தார். பிறகு அவர் என்னிடம் வினோதமாக நடந்து கொண்டதற்கான காரணத்தையும் கூறினார்.


நான் அணிந்திருந்த சட்டையின் நிறமும், நான் பயன்படுத்திய சோப் மற்றும் பவுடரின் மணமும் அந்த காட்டிற்கு தொடர்பில்லாமல் இருந்ததை சுட்டிக்காட்டிய சோர்ஸ், அவற்றை யானைகள் கண்டுபிடித்துவிடும் என்று கூறினார். அதனால்தான் என்னை தனியாகப் பிரித்து என்மீது மண்ணைப்பூசி சோப் மற்றும் பவுடர் மணத்தை மறைத்ததாகவும் கூறினார்.


சூரியன் மறைந்து இருள் கவ்வும் நேரத்தில் ஒரு வழியாக எங்கள் காரை கண்டுபிடித்து அறைக்கு வந்து சேர்ந்தோம்.

குளித்துவிட்டு, வழக்கமாக சோர்ஸ்களை சந்திக்கும் / குளிர்விக்கும் மதுபானக்கடையில் சந்தித்தோம்.


அடுத்த நாள் நாங்கள் சந்தித்த ஆபத்துகளுக்கான விதை அங்கே விழுந்தது.


(தொடரும்...)

03 நவம்பர், 2009

தண்டத்தை தூக்கி எறிந்த நீதிபதிகள்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக வருபவர்களுக்கு ஒரு ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா? என்ற சந்தேகம் வருவதற்கு வாய்ப்புள்ளது.

நீதிபதிகள் அவர்களுடைய அறையிலிருந்து நீதிமன்ற அரங்கிற்கு வரும்போதும், திரும்பப் போகும்போதும் கையில் வெள்ளித் தண்டம் (செங்கோல்?) ஏந்திய நீதிமன்ற பணியாளர்களான தண்டாயுதபாணிகள்??!! உஸ்..உஸ்.. (இது வேறு உஸ்!) என்று ஒலியெழுப்பி நீதிபதிக்கு பாதை அமைத்து தருவதை பார்த்திருக்கலாம்.

இங்கிலாந்து நீதிமன்றங்களில் பல்லாண்டுகளாக இருந்துவரும் இந்த வழக்கம் சுதந்திர இந்தியாவின் நீதிமன்றங்களில் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஒருமனதாக இனி தண்டத்தை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தின் சின்னமான இந்த தண்டத்தை இனி தொடர்வதில் அர்த்தமில்லை என்று விளக்கம் நீதிபதிகள் விளக்கம் கூறியுள்ளனர். மேலும், வெள்ளியால் செய்யப்படும் ஒரு தண்டத்தின் விலை 34,000 ரூபாய் என்றும், சிக்கன நடவடிக்கை காரணமாக எதற்கும் பயன்படாத இந்த தண்டத்தை இனி பயன்படுத்துவதில்லை என்றும் கேரள நீதிபதிகள் முடிவெடுத்துள்ளனர்.

-oOo-


ர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி தினகரன், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேதற்கு முன் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் வலையுலக வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம்.

கேரள உயர்நீதிமன்ற நீதிபதி வி. கிரி, நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கூறி தலைமை நீதிபதியிடம் கடிதம் அளித்துள்ளார். இவரது தந்தையும், மனைவியும் வழக்கறிஞராக தொழில் புரிந்து வருகின்றனர்.
சொந்த விருப்பத்தின் பேரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்வதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி பணியிலிருந்து விலக விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். நீதிபதி கிரியின் பதவி விலகல் கடிதத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்புவதாகவும், இது குறித்த இறுதி முடிவை குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் அறிவிப்பார் எனவும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இன்னும் 15 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்ற வாய்ப்புள்ள ஒரு நீதிபதி, தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புள்ள நிலையிலும், நீதிபதி பதவியிலிருந்து விலகியிருப்பது, வழக்கறிஞர் தொழில்மீது அவருக்குள்ள காதலை காட்டுகிறது. ஆனால் நீதிபதி பதவிக்காக காத்திருக்கும் பலருக்கோ இது ஆச்சரியளிக்கும் செய்தியாக இருக்கிறது.

01 நவம்பர், 2009

(சந்தன) வீரப்பனோடு ஒரு கண்ணாமூச்சி!

[முதல் இரண்டு பதிவுகளையும் படித்துவிட்டு இந்தப்பதிவை படித்தால் முழுமையாக புரியலாம்! :)
1. சந்தன வீரப்பனை தேடிப்போன செய்தியாளனின் கதை...
2. சந்தன வீரப்பனை பிடிப்பதற்காக உயிரை பணயம் வைத்த அதிகாரி!]

வீரப்பனை தேடி நாங்கள் அந்த வனப் பகுதியில் சுற்றியபோது பலரும் எங்களிடம் இயல்பாக பேசுவார்கள், நாங்கள் வீரப்பன் பேச்சை எடுக்காதவரை. வீரப்பனின் பெயரை நாங்கள் உச்சரித்துவிட்டால் அவர்கள் ஊமைகளாகி விடுவார்கள். என்னுடன் வந்த நிருபருக்கு இது எரிச்சலை ஏற்படுத்தினாலும், அதிரடிப்படையின் அட்டூழியங்களை அறிந்திருந்த எனக்கு அப்பகுதி மக்களின் போக்கை புரிந்து கொள்ளமுடிந்தது.

அப்பகுதியில் உள்ள மிகச்சிலர் வீரப்பன் குறித்து நாங்கள் விசாரிக்கும்போது, பெரியவர் இங்கெல்லாம் வர்றதே இல்லைங்க என்றனர். அவர்களிடம் தொடர்ந்து பேச்சுக்கொடுத்தால் வீரப்பன் நடமாட்டம் இருக்கும் பகுதியாக சில பகுதிகளை சொல்வார்கள். எங்கள் காரில் எங்களுடன் வருவார்கள். அடர்ந்த காடுகளில் சில பகுதிகளை பார்ப்போம். நள்ளிரவில் சாலை வசதி உள்ள வனப்பகுதிகளில் இலக்கின்றி அலைந்ததும் உண்டு.

வீரப்பனை தேடுவதற்காக அப்பகுதியில் முகாமிட்டிருந்த க்யூ பிரிவு அதிகாரி எங்களுடன் இணைந்தபோது, எங்களுடன் தொடர்பில் இருந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் திடீரென்று காணாமல் போய்விட்டனர். ஆனால் அந்த காவல்துறை அதிகாரியுடன் சுற்றியதில் அந்த பழங்குடிகள் காணாமல் போயிருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை. இப்போது அந்த காவல்துறை அதிகாரி எங்களைவிட்டு பிரிந்து சென்றவுடன், காணாமல் போயிருந்த பழங்குடிகள் தாங்களாகவே எங்களைத் தேடி வந்தனர்.

மீண்டும் அவர்கள் மூலம் வீரப்பனை அணுக முயற்சித்தோம். அவர்களும் எங்களுக்கு ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு இடத்தினை சொல்லி, அப்பகுதியில் பெரியவர்நடமாட்டம் இருப்பதாக கூறினர். நாங்களும் சளைக்காமல் அப்பகுதியில் தனியாகவோ, அப்பகுதியைச் சேர்ந்தவர்களுடனோ சுற்றினோம்.

திடீரென ஒரு நாள், ஏதோ ஒரு ஊரில் வீரப்பன் இருப்பதாக ஒரு சோர்ஸ் தகவல் கொடுத்தார். மேலும் தானும் உடன் வருவதாகவும், வீரப்பன் அங்கு இருந்தால் சந்திக்க உதவி செய்வதாகவும் கூறினார். உடனே கிளம்பினோம். அனேகமாக அது பன்னாரி மாரியம்மன் கோவிலில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் மலைப்பாதையில் மேலே ஏறாமல், வலது புறம் செல்லும் பகுதியாக இருக்க வேண்டும். கார் செல்லக்கூடிய பாதை இல்லாததால், நடந்து செல்ல முடிவெடுத்தோம். ஒற்றையடிப்பாதையில் சில கிலோ மீட்டர்கள் சென்றபின் ஒரு இடத்தில் சற்று தண்ணீர் தேங்கியிருந்தது. முகம் கழுவச் சென்றோம். ஈரமான மனித காலடித்தடங்கள் தெரிந்தன.

மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு! ஒரு வேளை வீரப்பன்தானோ. திருச்சியில் இருந்து சென்றிருந்த டிரைவர் உட்பட நான்கு பேரும் ஓரளவு வாட்ட சாட்டமாக, ஏறக்குறைய காவல்துறையினர் போலவே இருப்போம். எனவே சந்தேகப்பட்டு வீரப்பன் சுடலாம். அல்லது அருகே சென்றதும் நாங்கள் பணியாற்றிய பத்திரிகையின் பெயரைக் கேட்டதும் வீரப்பன் சுடலாம் என்பது போன்ற குழப்பமான எண்ணங்கள் அலைமோத, தொடர்ந்து நடந்தோம்.

திடீரென ஒரு கட்டத்தில் எங்களைச் சுற்றி மலைகள் இருப்பதை உணர்ந்தோம். நடுவே பள்ளத்தாக்கு போன்ற பகுதியில் நாங்கள் நிற்பதை புரிந்தது. மேலும் சுற்றியுள்ள மலைகளில் மரங்களுக்கு இடையே சில அசைவுகள் இருப்பதாக உள்ளுணர்வு கூறியது. உடன் வந்த புகைப்படக்காரரிடம் அதை தெரிவித்தேன். அவருக்கும் அதே உணர்வு. அதை எங்களோடு வந்த அப்பகுதி நண்பரிடம் கூறியபோது, அவரும் கவனித்ததாக கூறினார். மேலும் ஏதோ நடமாட்டம் இருப்பதை உறுதியும் செய்தார்.

அப்போது வரக்கூடாத சில நினைவுகள் வந்தன. காவல்துறையினரையும், காவல்துறையினரின் உளவாளிகள் என்று சந்தேகப்படுவோரையும் வீரப்பன் இதுபோன்ற தனியான இடத்திற்கு வரச்சொல்லி தீர்த்துக்கட்டியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தது. எங்களோடு சுற்றிய அப்பகுதிவாசிகளும், வீரப்பன் காவல்துறையினரையும், உளவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்ட சிலரையும் இங்குதான் தீர்த்துக்கட்டினார் என்று கூறி சில இடங்களை காட்டுவதுண்டு. ஒரு வேளை எங்களையும் தீர்த்துக்கட்ட நடந்த சதியா?

நாளை வேறொருவரிடம் எங்களை தீர்த்துக்கட்டிய இடத்தையும் காட்டுவார்களா? எங்களோடு உடன்வந்தவர் உண்மையில் வீரப்பனின் நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்தவரா? போன்ற கேள்விகள் சரமாரியாக மண்டையை குடைய ஆரம்பித்தது. ஆனால் எங்களை வழிநடத்திச் சென்ற அப்பகுதி நண்பரோ எதுவுமே தெரியாதவர்போல தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்.
குழப்பத்தின் உச்சியில் தொடர்ந்து நடந்தோம். உடன் வந்த நிருபரும், புகைப்படக்கலைஞரும்கூட அதை நிலையில் இருப்பதாக உணர்ந்தேன். சற்று தூரத்தில் சில குடிசைகள் தெரிந்தன. அருகே சென்றோம்.

சுமார் 10 அல்லது 15 குடிசைகள் இருக்கலாம். பெரும்பாலான குடிசைகளில் யாரும் இல்லை. இரண்டு மூன்று குடிசைகளில் சில பெண்கள் இருந்தனர். எங்களோடு வந்த அப்பகுதி நண்பர் அவர்களோடு எங்களுக்கு புரியாத மொழியில் ஏதோ பேசினார். அந்தப் பெண்களோ, நாங்கள் அவர்களுடை கண்களுக்கே புலப்படாததைப்போல எங்களை புறக்கணித்துவிட்டு தங்கள் வேலையை தொடர்ந்தனர். லிங்காயத்து எனப்படும் பிரிவைச் சேர்ந்த மலையின மக்கள் யாரோடும் பேச மாட்டார்கள் என்று கூறிய நண்பர், அப்பகுதியை சுதந்திரமாக சுற்றினார். அந்தக் குடிசைகளின் நடுவே சென்ற அவர் எங்களை அவசரமாக அழைத்தார்.

அந்தக் குடிசைகளின் நடுவே உள்ள குடிசையின் முன்னே கற்பூரமும், ஊதுவத்திகளும் எரிந்துகொண்டிருந்தன. உள்ளே ஏதோ பெண் கடவுளின் உருவம் பொறித்த திரைச்சீலை தொங்கிக் கொண்டிருந்தது. வேறு யாரையும் காணோம். அந்தப்பெண்கள் கற்பூரம் ஏற்றியிருப்பார்களா? என்று கேட்டேன். அதற்கு வாய்ப்பில்லை! என்று அந்த நண்பர் சொன்னார். ஆனால் வேறு யார் அந்த கற்பூரத்தை எரித்து வழிபட்டிருக்கக்கூடும்? என்று அவர் சொல்லவில்லை. அதை கேட்கும் தைரியமும் யாருக்கும் இல்லை. உடன் வந்த நிருபரும், புகைப்படக்காரரும், காரோட்டியும் அந்த கோவிலில் ஒரு கும்பிடுபோட்டு விபூதி போன்று இருந்த மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டனர். ஒரு வேளை வீரப்பனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்!” என்று திரைச்சீலையில் இருந்த கடவுளிடம் பிரார்த்தனை செய்திருக்கலாம். கடவுள் நம்பிக்கை இல்லாத நான் அதையும் செய்யவில்லை. வேறு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. மீண்டும் மவுனமாக நடக்கத்தொடங்கினோம். ஆனால் வந்த வழியில் நடப்பதுபோல் தோன்றியது. வழிகாட்டி வந்த அப்பகுதி நண்பரிடம் கேட்டபோது, சகுனம் சரியில்லை என்று சொன்னதாக நினைவு. (இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டது)
திரும்பி நடக்கும்போது, காரோட்டி என்னிடம் வந்து மலைப்பகுதிகளில் நடமாட்டம் அதிகரிப்பதாகவும், யாரோ கண்காணிப்பது போன்று தெரிவதாகவும் கூறி என் பயத்தை அதிகப்படுத்தினார். தேவையே இல்லாமல், காதலா-நட்பா என்று தெளிவில்லாமல் பழகிய பெண்களின் நினைவுகள் நிழலாடின.

அந்தச்சூழலில் நான் செய்யக்கூடிய செயல் ஒன்றுதான் இருந்தது. அப்பகுதி நண்பரை முன்னாள் நடக்கவிட்டு நாங்கள் பின்னால் நடப்பது! ஒருவேளை வீரப்பனோ, அவரது ஆட்களோ தொலைவிலிருந்து சுட்டால், அவரது ஆளை(??!!) சுடமாட்டார்கள் என்று நினைப்பு. அதையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத நிலை. எனவே அந்த நண்பரின் நிழலாக அவரைத் தொடர்ந்தேன். வழக்கத்தைவிட மிகவும் மெதுவாக அந்த நண்பர் நடந்து கொண்டிருந்தார். சற்று வேகமாக நடக்கச் சொன்னேன். சகுனம் சரியில்லை என்று மீண்டும் சொன்னார். அப்போது நான், எனக்கு சகுனம், சாமி இவற்றில் நம்பிக்கை இல்லை என்று சொன்னேன். கோவிலில் சாமி கும்பிடாமல் இருந்ததை கவனித்ததாக சொன்ன அவர், இந்த குற்றத்திற்காகவும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறினார். நல்லவேளையாக இந்த உரையாடல் எங்கள் இருவருக்குள்ளேயே இருந்தது.
எனக்கு தண்ணீர் தாகமும், பசியும் எடுப்பதாக தோன்றியது. ஆனால் கையில் தண்ணீரோ, உணவோ எதுவுமே கிடையாது. என்ன முட்டாள்தனம். தொடர்ந்து நடந்த நண்பர் திடீரென பம்மி பதுங்கினார். ஒரு வேளை வீரப்பன்தானா? அவரை நாங்கள் பேட்டி எடுக்கப்போகிறோமா? அல்லது அவர் எங்கள் உயிரை எடுக்கப்போகிறாரா?

31 அக்டோபர், 2009

சந்தன வீரப்பனை பிடிப்பதற்காக உயிரை பணயம் வைத்த அதிகாரி!

[ இதற்கு முந்தைய பதிவு "சந்தன வீரப்பனை தேடிப்போன செய்தியாளனின் கதை..." படித்துவிட்டு இந்த பதிவை படித்தால் முழுமையாக புரியலாம். :) ]

வீரப்பனை தேடும் பணியில் செயல்பட்ட சிறப்பு அதிரடிப்படையில் பணியாற்றிய பலரும் இளைஞர்கள். திருமணம் ஆகாதவர்கள். கடும் பயிற்சி காரணமான உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளானவர்கள். இவர்களுக்கு வீரப்பனை தேடும் அதிரடிப்படையில் பணி என்பது மண்ணில் தோன்றிய சொர்க்கமாக இருந்தது. கடும் பயிற்சிகளுக்கு பதிலாக ஓரளவு ஓய்வு கிடைத்தது. மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படிந்தே பழகியவர்களுக்கு மலைவாழ் பழங்குடி மக்களையும், மற்றவர்களையும் அதிகாரம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. அப்பகுதியில் இருந்த அனைத்தும் மனிதர்கள் உட்பட அதிரடிப்படையினருக்கு உரியதானது.

எந்த வீட்டிலும் நுழையலாம். எதையும் எடுக்கலாம். எப்படியும் பயன்படுத்தலாம். பிறகு அழிக்கலாம். சின்னாபின்னப்படுத்தலாம். யாரும் கேட்க மாட்டார்கள். யாருக்கும், எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. (மேலும் விவரம் தேவைப்படுபவர்கள் வழக்கறிஞர் ச. பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி என்ற நாவல் வடிவிலான வரலாற்றுப் பதிவினை தேடிப்படிக்கலாம்)

குடும்பத்தை பிரிந்து, கடும் உடற்பயிற்சிகளிலும், மேலதிகாரிகளின் ஈவு, இரக்கமற்ற நடைமுறைகளிலும் உடலும், மனமும் முரடாகிப்போன அதிரடிப்படை இளைஞர்களின் வக்கிர உணர்வுகளுக்கு தீனிபோடும் இடமாக அந்த வனப்பகுதி மாறிப்போனது.

(இவர்கள் செய்த வன்முறைகள் குறித்து புகார்கள் இருந்தாலும் சாட்சியங்கள் இல்லாததால் யாருக்கும் தண்டனை கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக வீரப்பன் கொல்லப்பட்டபோது பதக்கங்களும் பரிசுகளும் கிடைத்தன. மனிதர்கள் உருவாக்கிய சட்டங்கள் இவர்களை தண்டிக்காவிட்டாலும், இயற்கை இவர்களில் சிலரை தண்டித்தது. எய்ட்ஸ் நோய் கடுமையாக நோக்கி உருக்குலைந்து, சீரழிந்து மறைந்து போனவர்களில் சிலர், இந்த அதிரடிப்படையில் பணியாற்றியவர்கள் என்று மருத்துவ நண்பர்கள் கூறியபோது அவர்களின் மறைவுக்கு நான் வருந்தவில்லை)

ஆனால், எங்களுடன் சுற்றிய க்யூ பிரிவு அதிகாரியோ முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார். இனி அவரை மிஸ்டர் எக்ஸ் என்று அழைப்போம். எங்கள் செலவில் தேநீர் குடிக்கக்கூட தயங்கினார். மேலும் மதுப்பழக்கம் அறவே இல்லாதவராகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாதவராகவும் தோன்றினார். உரிய கண்காணிப்புகள் இருக்கும் நிலையிலேயே கடமை தவறும் அதிகாரிகளை பார்த்துப்பழகிய எங்களுக்கு, கண்காணிப்பே இல்லாத நிலையிலும் உயிருக்கும் துணிந்து கடமை செய்த அவர் ஒரு அதிசயப்பிறவியாக அவர் தோன்றினார். எனினும், செய்தியாளர்கள் காவல்துறையின் ஆட்காட்டியாக மாறக்கூடாது என்ற எனது நிலைப்பாட்டில் சமரசம் செய்துகொள்ளாமல் அதை வெளிப்படையாக கூறிவிட்டு அவருடன் பழக ஆரம்பித்தேன்.

காவல்துறையினரின் மனிதத்தன்மையற்ற நடத்தைகளுக்கு காரணம் என்ன? என்று கேட்டபோது, கீழ்நிலைக் காவலர்களுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப்படுவதால் அவர்களுக்கு அடுத்தவர்களின் உரிமை குறித்த கவனமோ, கவலையோ இருப்பதில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிந்தே பழகிப்போன அவர்களுக்கு, அவர்களைவிட கீழான மக்களை பார்க்கும்போது, அதிகாரம் செய்துபார்க்க வேண்டும் என்ற ஆவல் அத்துமீறி ஏற்படுவதால் பல அத்துமீறல்கள் ஏற்படுகின்றன என்ற உளவியல் ரீதியான காரணத்தையும் கூறினார்.
வீரப்பனை தேடும் பணியில் அவருடைய வித்தியாசமான அனுபவங்களை கேட்டபோது பல அனுபவங்களை கூறினார். வீரப்பனின் கூட்டாளி சந்திர கவுடாவின் வீட்டருகே இருக்கும் கோவிலில் திருவிழா அந்தப் பகுதியில் மிகவும் முக்கியமானது. மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில் அந்தப் பகுதியே குலுங்கிப் போகும். அந்த விழா நாட்களில் வீரப்பன் அந்த கோவிலுக்கு வருவதாக இந்த மிஸ்டர் எக்ஸூக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

ஒற்றை ஆளாக அந்த திருவிழாவில் அன்னாசிப்பழ கடை வைத்திருக்கிறார் இவர். அந்த வேடத்திலேயே கோவிலுக்கு வந்து செல்லும் அனைவரையும் கண்காணிக்கவும் செய்திருக்கிறார். அவரிடம் இருந்த ஒரே ஆயுதம் கைத்துப்பாக்கி மட்டுமே. துணைக்கு யாரும் கிடையாது. சீருடை அணிந்த அதிரடிப் படையினருக்கும் இவர் யார்? என்பது தெரியாது.

திருவிழாவிற்கு வீரப்பன் வந்தாரா? என்பது தெரியவில்லை. ஆனால் வீரப்பனின் நண்பர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலர் வந்துள்ளனர். வீரப்பன் எப்படியும் வருவார் என்று சீருடை அணியாத ஏராளமான காவலர்கள் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர். அன்னாசிப்பழ வியாபாரி வேடத்தில் இருந்த மிஸ்டர் எக்ஸ்-ம் அமைதியாக உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கா காத்திருந்தார். இதற்கிடையில் சீருடை அணியாத ஆனால் காவல்துறை அடையாளத்தை மறைக்கமுடியாத காவலர்களால் வீரப்பன் எச்சரிக்கை அடைந்துவிட்டதாக கூறப்பட்டது. வீரப்பனின் ஆட்கள் என்று நம்பப்படும் சிலருக்கும், சீருடை அணியாத காவலர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரண்டு பக்கமும் இல்லாமல் தனியாக உளவு பார்த்த மிஸ்டர் எக்ஸ் மீது இரு தரப்புக்கும் சந்தேகம் ஏற்படவே உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பியோடும் நிலையும் ஏற்பட்டது.
இந்த ஆபத்தில் தப்பிய மிஸ்டர் எக்ஸ்-க்கு மற்றொரு மிகப்பெரிய ஆபத்தும் ஏற்பட்டது.

வீரப்பன் இருந்த காட்டின் பல பகுதிகள் மிகவும் அடர்த்தியானது. சுமார் 10 அடிகளுக்கு அப்பால் யாரும் இருந்தால் அது நமக்கு தெரியாது. அந்த அளவுக்கு அடர்த்தியானது.

மூலிகை ஆய்வாளர், துறவி, அன்னாசிப்பழ வியாபாரி போன்று பல்வேறு அவதாரங்களில் தோன்றி அவர் அப்பகுதியில் சுற்றித்திரிந்து துப்பு துலக்கியுள்ளார். அப்போது, வீரப்பன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாக மிஸ்டர் எக்ஸ்-க்கு தகவல் கிடைத்துள்ளது. வழக்கம்போல தன்னம்தனியாக இவர் கிளம்பிவிட்டார். அந்த தகவல் சரியோ, தவறோ இவரிடம் வீரப்பன் சிக்கவில்லை. ஆனால் இவர் வழி தவறிவிட்டார். பல மணி நேரம் நடந்த பிறகு, தாம் நடக்கும் பாதை சரிதானா? என்ற சந்தேகம் வந்து விட்டது. காட்டை விட்டு வெளியே வருவதாக நினைத்து, எதிர் திசையில் காட்டுக்குள் செல்கிறோமோ? என்ற ஐயம் வேறு. கையில் இருந்த உணவுப் பொருட்களான உலர் பழங்களும், குடிநீரும் வேறு தீர்ந்து விட்டது. உடலும், உள்ளமும் களைப்படைய தொடங்கியது. பசியும், தூக்கமும் கண்களை அடைக்கத் தொடங்கியிருக்கிறது.

வீட்டில் இருக்கும் மனைவியும், மக்களும் நினைவில் வரத்தொடங்க மிஸ்டர் எக்ஸ்க்கு, வாழ்வின் இறுதிக்காலத்தை எட்டிவிட்டோமோ? என்ற ஐயமும் எழ ஆரம்பித்திருக்கிறது. இவ்வாறான குழப்பநிலையில் மேலும் சில தினங்கள் கழிந்தன, உணவுக்கும்-குடிநீருக்கும் வழியின்றியே! மரண தேவன் அருகில் வருவதாக உணர்ந்த மிஸ்டர் எக்ஸ், உடல் சக்தியை சேமிப்பதற்காக தூரமாக நடப்பதை கைவிட்டிருக்கிறார்.

அப்போது அப்பகுதியில் மனித அரவம் கேட்கவே காதைத் தீட்டியிருக்கிறார். பழங்குடி இனத்தை சேர்ந்த ஒரு நபர் அந்த பக்கமாக வருவது தெரியவே, சக்தியை குவித்து அவரை அழைத்திருக்கிறார்.
அந்த பழங்குடியின நபரும் இவர் அருகே வந்து விசாரிக்க, தன்னை மூலிகை ஆராய்ச்சியாளன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வழி தவறி வந்துவிட்டதாக கூறுகிறார். மேலும் தன்னிடம் இருந்த உணவும், நீரும் தீர்ந்துவிட்டதாகவும், தன்னை காட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்ல முடியுமா என்றும் கேட்கிறார். அதற்கு, காட்டை விட்டு வெளியேற மேலும் சில நாட்கள் நடக்க வேண்டும் என பதில் வருகிறது. இதனால் மனம் உடைந்த மிஸ்டர் எக்ஸ், தனது உடல்நிலை அதைத்தாங்குமா? எனத் தெரியவில்லை என்றும், ஒரு வேளை தாம் இறந்துவிட்டால், உடலில் கயிறை கட்டி இழுத்தாவது சென்று அருகிலுள்ள காவல் நிலையம் எதிரே போட்டுவிடுமாறும் கேட்டுக் கொள்கிறார்.

அந்த பழங்குடி இன நபரோ, நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று கூறி, மிஸ்டர் எக்ஸ்-ஐ அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு சற்றுநேரம் சுற்றித்திரிந்து சில தாவர இலைகளோடு வருகிறார். கூடவே சிறிது தண்ணீரும். தாவர இலைகளை அங்கிருந்த பாறைகளில் வைத்து அரைக்கிறார். அது ஒரு லேகியம் போல திரள்கிறது. அதை உருண்டையாக உருட்டி மிஸ்டர் எக்ஸ்-இடம் கொடுத்து உண்ணச் சொல்கிறார். மிஸ்டர் எக்ஸ்-க்கோ, வீரப்பனே எதிரே வந்து நச்சுத் தாவரங்களை உருட்டித் தருவதாக தோன்றுகிறது. எனவே அதை உட்கொள்ள தயங்குகிறார். இந்த தயக்கத்தை புரிந்து கொண்ட பழங்குடி நபர் அந்த உருண்டயை பாதியாக பிரித்து தனது வாயில் போட்டுக்கொண்டு சிரிக்கிறார். அந்த சூழ்நிலையில் வேறு வழியின்றி மீதி உருண்டையை வாயில் போட்டு தண்ணீரை அருந்துகிறார், மிஸ்டர் எக்ஸ். சில நிமிடங்களில் அவர் உடலில் சக்தி ஏற்படுகிறது. நடக்கத் தொடங்குகின்றனர். மேலும் சில நாட்கள் நடந்த பின்னர் காட்டைவிட்டு வெளியேறுகின்றனர். அதுவரை மிஸ்டர் எக்ஸ்-க்கு தண்ணீர் தாகமோ, பசியோ, தூக்கமோ வரவில்லை. உடலின் சக்தி சற்றும் குறையவும் இல்லை. அந்த பழங்குடி நபர் கொடுத்த மூலிகையே அனைத்தையும் சமாளிக்கிறது.

காட்டை விட்டு வெளியே வந்த மிஸ்டர் எக்ஸ், பழங்குடி நபரிடம் விடை பெறுகிறார். அப்போது பழங்குடி நபர், விடை கொடுப்பதோடு குளிக்கும் வரை தூக்கமோ, பசியோ வராது. எனவே பசியாறவும், தூங்கவும் வாய்ப்பிருக்கும்போது மட்டும் குளிக்குமாறு கேட்டுக்கொள்கிறார். தமது அறைக்கு வந்த மிஸ்டர் எக்ஸ் குளித்த பின் உணவை உட்கொண்டு, தூங்கி எழவே அவரது உடல் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

அப்போதுதான் பழங்குடி இன மக்கள், காடுகளைப் பற்றியும், காட்டுத் தாவரங்களை பற்றியும் எவ்வளவு அறிவை பெற்றுள்ளனர் என்பதை குறித்து மிஸ்டர் எக்ஸ் சிந்திக்கிறார். சாதாரணமாக சுற்றித்திரியும் பழங்குடி மக்களுக்கே இந்த அறிவு இருந்தால், உயிரைக்காப்பாற்றிக் கொள்வதற்காக வனத்தில் மறைந்திருக்கும் வீரப்பனுக்கு காடுகளைப்பற்றி எவ்வளவு அறிவு இருக்கும்? என்ற ஐயமும் அவருக்கு ஏற்படுகிறது. தனக்கு வித்தியாசமான அனுபவம் ஒன்றைக்கொடுத்து, எதிரிகளை பார்க்காமலே மரண பயத்தை அனுபவிக்கவைத்த வீரப்பனுக்கு நன்றி சொல்லிவிட்டு தமது பணிகளை தொடர்ந்தார், மிஸ்டர் எக்ஸ்.
----
மது நேர்மையான வாழ்க்கையையும், சந்தித்த இக்கட்டான சூழ்நிலைகளையும் விவரித்த மிஸ்டர் எக்ஸ், எங்களிடமிருந்து பிரிந்து வேறு திசையில் செல்வதாகக் கூறினார்.

முதல்முறையாக அவரிடம் சிரித்து பேசி வழியனுப்பி வைத்தேன். என்னுடன் இருந்த நிருபருக்கோ க்யூ பிரிவு போலிஸ் அதிகாரியை பிரிவதில் பெரும் வருத்தம்.

அவரை பிரிந்த பின்னும் நாங்கள் வனப்பகுதிகளில் சுற்றுவதை நிறுத்தவில்லை. வீரப்பன் வழக்கமாக சாமி கும்பிடும் கோவிலை காட்டுவதாக எங்கள் சோர்ஸ் ஒருவர் கூறியதை அடுத்து நாங்கள் மேற்கொண்ட பயணம் எங்கள் குழுவினருக்கும் மரண பயம் என்றால் என்ன என்பதை அறிமுகப்படுத்தியது.