29 மார்ச், 2009

தினமலர் வாரமலரின் தமிழ்ப்பற்று!

தினமலர் நாளிதழுக்கும் தமிழ் மொழிக்கும் இடையே உள்ள உறவு மிகவும் விந்தையானது. தமிழ்நாட்டில், தமிழர்களின் ஆதரவால் வாழ்க்கை நடத்தும் தினமலர் நாளிதழ், தமிழர்களுக்கு எந்த அளவிற்கு நேர்மையாக இருக்கிறது என்பது பெரும் விவாதத்திற்குரியது.

தினமலர், தமிழ் மொழிக்காவது நேர்மையாக இருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். உதாரணமாக கமா எனப்படும் காற்புள்ளியை எங்கே, எதற்காக, எப்படி பயன்படு்த்த வேண்டும் என்பதுகூட தினமலருக்கு தெரியாது.

ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்ச்சொற்கள் தொடர்ச்சியாக வரும்போது அவற்றுக்கு இடையே காற்புள்ளி போடுவது இயல்பு. ஆனால் தினமலரோ, அரசியல் தலைவர்களின் பெயரையோ, கட்சிகளின் பெயரையோ சுருக்கமாக முதலெழுத்துகளில் குறிப்பிடும்போது இந்த காற்புள்ளிகளை தேவையின்றி பயன்படுத்தும். இந்த பெயர்ச்சொற்கள் தொடர்ச்சியாக வரவேண்டும் என்றில்லை: தனியாக பிரசுரிக்கும்போதே காற்புள்ளிகளை தவறாக பயன்படுத்தும். [உதாரணம்: மு.க., - ஜெ., - தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - ம.தி.மு.க,] இவை தொடர்ச்சியாக வரும்போது காற்புள்ளி கட்டாயமாக போடவேண்டும். தனித்தனியாக பிரசுரிக்கும்போது காற்புள்ளி போடுவது இலக்கணப்படி தவறு. ஆனால் இந்த தவறை தொடர்ந்து செய்துவருகிறது. தினமலர்.

இந்த தினமலரின் 29-03-2009 தேதிய வாரமலர் (சென்னை, மதுரை, கோவை, பாண்டி) இதழ்களில் இது உங்கள் இடம் என்ற பெயரில் வெளியாகும் வாசகர் கடிதம் பகுதியில் ஆயிரம் ரூபாய் பரிசு பெற்ற கடிதம் ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த கடிதத்தை படிக்காதவர்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வில் இடம் பெற்ற திரைப்பட பாடல்

ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படும் தனியார் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக பணியாற்றுகிறேன். நான் நடத்திய மாதிரி தேர்வில், “தமிழ் எத்தனை வகைப்படும்” என்ற வினாவுக்கு மாணவி ஒருத்தி, “முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ் என மூவகைப்படும்...” என விடையளித்தாள்.

பிற வினாக்களுக்கு தப்பும், தவறுமாக விடையளித்திருந்த அம்மாணவி, இந்த வினாவுக்கு மட்டும் எப்படி சரியாக விடையளித்தாள் என வியந்த நான், அவளிடம் இது பற்றி விசாரித்தேன்.


அவளோ, தான் நடிகர் விஜயின் ரசிகை என்றும், விஜய் படத்தின் பாடல்கள் அனைத்தும் தனக்கு மனப்பாடமாகத் தெரியும் என்று கூறியதோடு, விஜய் நடித்த திரைப்பட பாடலான, “நீ முத்தமொன்று தந்தால் முத்தமிழ், வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்... நீ பேசிடும் வார்த்தைகள் பைந்தமிழ்...” என்ற பாடலைக் கொண்டு தமிழின் வகைகளை எழுதியதாகவும் கூறினாள்.

படிக்கும் பிள்ளைகள் திரைப்பட பாடல்களை மனப்பாடம் செய்து, “உரு” போடும் நேரத்தை, தமிழ்ப்பாடச் செய்யுள்களை உருப்போடுவதில் செலவிட்டால் அதிக மதிப்பெண்களை பெறலாமே!

- அ. லக்குமதி, தென்காசி


தமிழின் வகைகள் என்பது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்று மூன்று பிரிவாக முன்னர் பிரிக்கப்பட்டிருந்தது. தற்போது காலத்தின் மாற்றத்தில் அறிவியல் தமிழ், சட்டத்தமிழ் போன்ற நவீன பிரிவுகளும் உருவாகி இருப்பது தமிழர்களுக்கு தெரியும். ஆனால் விஜய் படத்தின் பாடலில் இருப்பது போல் முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ் என்ற அடிப்படையில் தமிழை, திரைப்பட பாடலாசிரியர்கள் உட்பட, தமிழ் அறிஞர்கள் யாரும் பிரிக்கவில்லை.

இது மாணவ-மாணவிகளுக்கு தெரியாமல் இருந்தால், அது மாணவப்பருவம் என்பதால் மன்னி்க்கக்கூடிய குற்றமே.

ஆனால் ஒரு ஆசிரியைக்கு தெரியவில்லை என்பது வெட்கக்கேடு.

இந்த உண்மை தினமலர் ஆசிரியர் குழுவினருக்கும் தெரியவில்லை என்பதை எப்படி விமர்சிப்பது எனறு தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இந்த கடிதத்திற்கு 1,000 ரூபாய் பரிசு வேறு.

தமிழர்களின் வாழ்நிலை, அரசியல் குறி்த்து, உள்நோக்கத்தோடு தப்பும்-தவறுமாகவும், திரித்தும் செய்திகளை வெளியிடும் தினமலர், இப்போது தமிழோடும் விளையாடுகிறது. தமிழ்ச் சமூகம் என்ன செய்யப்போகிறது?