13 மே, 2009

இலங்கை: செய்தியாளர்களை கொலை செய்வது தீர்வல்ல! -சோனாலி (லசந்த) விக்ரமதுங்கே

யுனெஸ்கோ அமைப்பின் 2009ம் ஆண்டிற்கான உலக பத்திரிகை சுதந்திர விருதுக்காக பன்னாட்டு நடுவர் குழு, என் கணவர் லசந்த விக்ரமதுங்க-வை
தேர்ந்தெடுத்திருப்பது தெரிந்திருந்தால் அவர் மிகவும் பெருமைப்பட்டிருப்பார்.

மக்களுடைய சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக உயிரையும் பணயம் வைத்து உலகம் முழுவதும் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் துணிவிற்கான சாட்சியமாக இந்த விருது திகழ்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் உயிர்துறந்த பின் இந்த விருதைப் பெறும் இரண்டாவது பத்திரிகையாளராக 'லசந்த' இருக்கிறார்.

மாஸ்கோவில் நடைபெற்ற ராணுவ மற்றும் அரசியல் அத்துமீறல்களை விமர்சனம் செய்து எழுதியதற்காக கடந்த 2006ம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட அன்னா பொலிட்கோவ்ஸ்கயா என்பவருக்கு இந்த விருது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அன்னாவிற்கும், லசந்தவிற்கும் இடையே வினோதமான ஒற்றுமைகள் உள்ளன. இருவருமே 1958ம் வருடம் பிறந்தவர்கள்; அரச பயங்கரவாதத்தை துணிவுடன் விமர்சனம் செய்தவர்கள்; மனித உரிமைகளுக்காக அயராது குரல் கொடுத்தவர்கள்; கூடுதலாக கொலை மிரட்டலுக்கும் ஆளானவர்கள்; இவர்கள் இருவருமே தப்பியோட முயற்சித்ததில்லை; இருவருக்குமே, தங்கள் உயிரை விலையாக தரவேண்டிய நிலை வரும் என்பது தெரிந்திருந்தது; இருவருக்குமே, தங்களை யார் கொலை செய்வார்கள்? என்பதும் தெரிந்திருந்தது; ஆனால் இந்தக் கதை, அன்னா மற்றும் லசந்த-வுடன் முடியவில்லை.

இலங்கையில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது எழுதப்படாத விதிமுறை போன்று ஆக்கப்படுகிறது. அதிபராக மஹிந்த ராஜபக்சே பதவி ஏற்றதிலிருந்து இதுவரை 16 பத்திரிகையாளர்கள் ராணுவ பாணி தாக்குதலில் கொல்லப் பட்டுள்ளனர். நானும், லசந்தவும் ஆசிரியராக இருந்த பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதுபோல பல பத்திரிகை அலுவலகங்கள் தாக்கி அழிக்கப்படுகின்றன. பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வாடிக்கொண்டிருக்கின்றனர். லசந்தவைப் போல பல பத்திரிகையாளர்கள், அதிபர் ராஜபக்சேவினால் நேரடியாக மிரட்டப்படுகின்றனர். என்னைப் போன்ற பல பத்திரிகையாளர்கள் தப்பியோடுமாறு நிர்பந்திக்கப் பட்டிருக்கிறோம். நான் நாடு திரும்பினால் எனது நாட்கள் எண்ணப்படும் என்பது எனக்கு தெரியும்.


நான் பிறந்த சுதந்திரமான இலங்கை இப்போது இல்லை. எனது நாடு ஒரு இருட்டுப் பாதைக்குள் செல்கிறது. ஜனநாயக ரீதியான கருத்து வேறுபாடுகளை தேசத்துரோகம் என்று அரசு குற்றம் சாட்டுகிறது. தனக்கு எதிரானவர்கள் என்று அரசால் கருதப்படும் பத்திரியாளர்களும் மற்றவர்களும் பீதியூட்டும் வெள்ளை நிற வாகனம் மூலம் கடத்தப்படுகிறார்கள். இவர்களில் பலரையும் மீண்டும் உயிருடன் காணமுடிவதில்லை. இது வெளியில் சொல்லப்படாத பெருந்துயரமாக அமைகிறது. ஆனால் பத்திரிகையாளர்களுக்கு எதிரான இந்த வன்முறை என்பது மிகப்பெரிய கொடூரத்தினை அடையாளம் காட்டும் மிகச்சிறிய குறிப்புதான். பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் வெளியுலகின் கண்களில் படாமல், முள்வேலி கம்பிகளுக்கு பின்புறம், ராணுவ முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். டர்ஃபர் போன்ற இடங்களில் இருக்கும் வதைமுகாம்களைவிட கொடுமையாக இந்த முகாம்கள் இருக்கின்றன.

ஆனால் இந்த மக்கள் செய்த தவறுதான் என்ன? உலகின் மிகக்கொடுமையான பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் பரவியுள்ள இடங்களில் வசிக்கும் சிறுபான்மை தேசிய இனத்தில் பிறந்ததுதான இவர்கள் செய்த தவறு! இந்த தமிழ் மக்கள் ஒரு புறம் விடுதலைப்புலிகளிடமும், மறுபுறம் இலங்கை அரசின் பயங்கரவாதிகளிடமும் சிக்கிக் கொண்டுள்ளனர். (இந்த அரச பயங்கரவாதி என்ற வார்த்தையை நான் தெரிந்தே பயன்படுத்துகிறேன். எனென்றால் இந்த உலகிலேயே தனது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக வெடிகுண்டுகளை வீசி படுகொலை செய்யும் ஒரே நாடாக இலங்கை மட்டுமே இருக்கிறது)

இந்த இனரீதியான போர் ரகசியமான ஒன்றல்ல. அரசுத்தரப்பில் வைக்கப்படும் பதாகைகளில் ராணுவத்தை பாராட்டும் வார்த்தைகள் – நான் உட்பட மிகப்பெரும்பான்மை மக்கள் சார்ந்துள்ள – சிங்கள மொழியில், “ராணுவ வீரர்களே, நம் இனம் உங்களுக்கு மரியாதை செலுத்துகிறது” என்று எழுதப் பட்டுள்ளது. நாடோ, மக்களோ இல்லை. சிங்கள இனம் மரியாதை செலுத்துகிறது! இவை எதுவும் தமிழில் இல்லை. எந்த தமிழ் மக்களை விடுவிப்பதாக இலங்கை அரசு சொல்கிறதோ அந்த மக்களின் மொழியில் இல்லை.

இலங்கையில் என்ன நடக்கிறது? என்பதை உலகம் உடனடியாக உணர்ந்து கொள்ள வேண்டும். இது குறித்து நன்கு தெரிந்தவர்கள் அதை வெளியுலகுக்கு தெரிவிக்கவில்லை என்பது என்னை மிகவும் சலிப்புறச் செய்கிறது.

லசந்த கொல்லப்பட்ட சில நாட்களில் ஒரு பன்னாட்டு இதழில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “பயங்கரவாதத்திற்கு ராணுவ நடவடிக்கையின் மூலம் தீர்வு கிடையாது என்று வாதிடுபவர்களுக்கு நாம் கூறும் இரண்டு வார்த்தைகள்: சிறீ லங்கா!” பயங்கரவாதத்திற்கு பதிலாக அரச பயங்கரவாதமே சரியான தீர்வென்று அந்த பத்திரிகை கூறியுள்ளது. அதைத்தான் இலங்கை அரசாங்கமும் தேர்ந்தெடுத்துள்ளது. இது என்னை சினம் கொள்ள வைக்கிறது, லசந்தவை சினம் கொள்ள வைத்ததைப்போல! நாம் வரலாறிலிருந்து மிகச்சிறிய பாடத்தையே கற்றுக் கொண்டிருக்கிறோம்.

லசந்தவிற்கு வழங்கப்பட்ட இந்த விருது உலகம் முழுக்க உள்ள அதிகார வெறிகொண்ட ஆட்சியாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியைக் கூறுகிறது – செய்தியாளனை கொலை செய்வது தீர்வு அல்ல. மேலும் வன்முறை மூலம் மனித உணர்வுகளை நசுக்கிவிட முடியாது. லசந்தவின் மரணத்தின்போதுகூட அவரது பெயர்தான் கூகுளில் அதிகம் தேடப்படும் பெயரானது, இலங்கை அதிபரின் பெயரைவிட.

நானும் என் கணவரின் இறுதி வார்த்தைகளையைக் கூறி உங்களிடமிருந்து விடைபெற விரும்புகிறேன். “கேட்கப்படாத சிறுபான்மையினரின் நலன்களுக்காக, தங்களுக்காக குரல் எழுப்பக்கூட நாதியற்றவர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறோம்… இதற்கான விலையை ஒரு நாள் கொடுக்க வேண்டும் என்று எனக்கு எப்போதும் தெரியும். அதனை நானும் – என் குடும்பத்தினரும் தற்போது கொடுக்கிறோம். நான் அதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறேன். இதனை தடுக்க நான் எதையும் செய்யவில்லை: முன்னெச்சரிக்கையோ, பாதுகாப்போ இல்லை. ஆயிரக்கணக்கான படுகொலைகளை கண்டிக்கும்போது, மனித கேடயங்களின் பின் பதுங்கிக்கொள்ளும் எனது கொலையாளியைப்போல நான் கோழை இல்லை என்பதை அவன் உணர வேண்டும் என்று விரும்புகிறேன். படுகொலை செய்யப்படும் ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்தானே? எனது உயிர் கவரப்படும் என்பதும், அது யாரால் கவரப்படும் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அது எப்போது நடைபெறும்? என்பதுதான் மீதமுள்ள கேள்வி.“

9 கருத்துகள்:

Nivedita சொன்னது…

Good Post.

Even the sinhalese who have a heart are understanding the plight of Tamils in Srilanka. But the Government of India is not doing so.

The journalists in India should think over this. They need not sacrifice their lives not even shoes. But they should through the mind storming questions to the politicians.

Will they do?

ஈரோடு கதிர் சொன்னது…

நிரப்பமுடியாத வெற்றிடமும், நிவர்த்திக்க முடியாத வலியும் என லசந்த‍ மரணம் ஏற்படுத்திய வலி குறித்து என் வலைப்பதிவில் படிக்கவும்.
www.maaruthal.blogpsot.com

பெயரில்லா சொன்னது…

LASANTHA WAS A BRAVE & KIND JOURNALIST. HIS PARTNER ALSO IS A BRAVE & INSPIRING JOURNALIST. BOTH OF THEM ARE GUIDING LIGHTS FOR THE NEW GENERATION ENTERING THE MEDIA. IT NEEDS GREAT MATURITY & BOLDNESS TO FIGHT AGAINST MAJORITY ETHNIC FANATICISM, WHILE COMING FROM THE SAME MAJORITY GROUP. MR & MRS LASANTHA WE ARE REALLY PROUD OF U. THANKS SUNDARA RAJAN FOR THE MOVING TRANSLATION.

SUSI THIRUGNANAM

Dr.G.சிவராமன் சொன்னது…

தோழரே,
அருமை.நன்றாக இருக்கிறது.உங்கள் பதிவு, வெளிச்சம் காட்டும் உண்மைகளில் மானுடமும், சகோதரத்துவமும் மட்டுமே இன வெறியினை முறிக்கக் கூடியது என்பது உறுதியாகிறது

உண்மைத்தமிழன் சொன்னது…

விருதுக்கு தகுதியுள்ளவர் லசந்தா.

மரணத்தைத் தானே எதிர்நோக்கி, விரும்பிச் சென்றுள்ளாரே..

நான்காவது தூண்களின் பெருமை இவரைப் போன்றவர்களால்தான் உருவாகிறது..

மொழி பெயர்ப்புக்கு மிக்க நன்றி அண்ணே..!

Unknown சொன்னது…

நல்ல கட்டுரை. அதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு மனித உரிமைப் போராளியின் வார்த்தைகளுடன் வந்த லசந்தேவின் மரண சாசனமும், சில நாட்களில் தன்னை எரித்துக்கொண்டு செத்துப்போன முத்துக்குமாரின் மரண சாசனமும் சமகாலத்தில் வந்த கவனிக்கப்பட வேண்டிய எழுத்துக்கள்.

karthi சொன்னது…

மரணம் வரப்போகிறது என்று தெரிந்த பிறகும் துணிச்சலுடன் தனது கருத்துக்களை முன்வைத்து மறைந்த செய்தி உலகின் மாமனிதனுக்கு இந்த விருது மிக பொருத்தம். சிறந்த போராளியான நீங்கள் அது தொடர்பான கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிட்டது இன்னும் சிறப்பு.

பெயரில்லா சொன்னது…

தேவையான மொழி பெயர்ப்பு.

இது போன்ற விடயங்களை தேடிப்பிடித்து வெளியிடும் நீங்கள் மீடியா உலகத்தில் இருந்து வெளியேறியது ஏன்?

பொருள் தேவைக்காகவா?

நீங்கள் பணியாற்றிய நிறுவனம் சரி இல்லை என்றால் வேறு நல்ல நிறுவனத்திற்கு மாறி இருக்கலாமே?

உங்களால் முடியாத ஒன்றை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?

மவுனம் சாதிக்காமல் பதில் கூறவும்.

Rajendran சொன்னது…

இலங்கையில் தமிழர்கள் மட்டுமல்லாமல் மனிதத்தை பாதுகாக்க முயற்சி செய்யும் மனசாட்சி உள்ள சிங்களர்களும் கொல்லப்படுகிறார்கள் என்ற உண்மை ராஜபக்சேவின் கொடூர எண்ணத்தை காட்டுகிறது.

கருத்துரையிடுக