25 ஆகஸ்ட், 2009

தமிழ் மீடியா உலகம் – ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் (பகுதி 1)


காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீ தான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணில்
பாய்ந்திடும் எழுச்சி நீ தான்!
ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில்பிறந்த பத்திரிகைப் பெண்ணே

என்று பாவேந்தர் பாரதிதாசனால் பாடப்பட்டதும், ஜனநாயக அமைப்பின் நான்காவது தூண் என்றும் சித்தரிக்கப்படும் பத்திரிகை உள்ளிட்ட மீடியா உலகம் இன்று எவ்வாறு உள்ளது?

மீடியாவின் நிலை என்பது நான்கு கீழ்க்கண்ட முக்கிய அம்சங்களை பொறுத்தே அமையும்.

அவை 1) மீடியா நிர்வாகம்,

2) செய்தியாளர்,

3) செய்தியாளர்களின் சங்கங்கள்,

4) வாசகன் பார்வையாளன்.

இன்றைய தமிழ் மீடியாவின் நிலையை புரிந்து கொள்ள ஒவ்வொன்றாக அலசலாம்.

முதலில் மீடியா நிர்வாகம்.

முன்பு ஒரு காலத்தில் பத்திரிகைகளில் செய்தி வந்தால் அது நூறுசதவீதம் உண்மை என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். பாமரர்களுக்கு தினத்தந்தியின் செய்திகள் வேதவாக்காக இருந்தது.

ஆங்கிலம் அறிந்தவர்களுக்கோ ஹிந்து-லயே வந்துருக்கு என்பது நம்பிக்கையின் உரைகல்லாக இருந்தது. இவை இரண்டும் அரசு சார்பு நிலையிலேயே இருந்தன.

தினமணி பத்திரிகை தலையங்கம் என்று சமூகத்தின் நிகழ்வுகள் குறித்த தனது கருத்தை வெளியிட்டது. தினமலர், தினகரன் போன்ற பத்திரிகைகள் அனைத்து செய்திகளிலுமே தங்கள் பார்வையை திணித்து கொடுத்தன. பத்திரிகைகளின் இந்த போக்கு சாதாரண மக்களை தேவையான அளவில் சென்றடையவில்லை. அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகள், சமூகத்தில் அதிக செல்வாக்கை பெற்றிருக்கவில்லை.

அரசியல் புலனாய்வு இதழ்கள் வாசகனை வேறு ஒரு தளத்தி்ற்கு அழைத்துச் சென்றன. அதுவரை செய்திக்கான மதிப்பை பெறாத பல விவகாரங்கள் இந்த இதழ்களில் இடம் பெற்றன. எழுத்துத் திறமை மற்றும் பத்திரிகை நிறுவனத்தின் பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த செய்திகள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கின. அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடும் இந்த புலனாய்வு பத்திரிகைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது.

இந்த சூழலில் பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கிடைத்த மிகைமதிப்பை பார்த்த ஏராளமானவர்கள் புலனாய்வு பத்திரிகைகளை தொடங்கினர். ஒரே நேரத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட புலனாய்வு பத்திரிகைகள் வெளிவந்தன. எனினும் எழுதுவதற்கான விஷயங்கள் இல்லாத நிலையில் கற்பனைகளையும், மிகைப்படுத்தல்களையும் இந்த இதழ்கள் வெளியிடவே வாசகனுக்கு திகட்டத்தொடங்கி இந்த பத்திரிகைளில் பலவும் சரிவை சந்தித்தன.

இந்த இடைவெளியில் தொலைக்காட்சிகள் வந்தன. இந்த தொலைக்காட்சிகளே மீடியா உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. முதலில் அரசு சார்பில் வெளிவந்த தூர்தர்சன், மீடியா உலகின் அடுத்த பாய்ச்சலுக்கு மக்களை தயார் படுத்தியது. அதனை தொடர்ந்து வந்த தனியார் தொலைக்காட்சிகளே செய்தியின் பரிணாம (Dimension) ங்களில் புதிய பல பரிமாண(Evolution) வளர்ச்சிகளை ஏற்படுத்தின.

தமிழ் நாட்டின் முதல் தனியார் தொலைக்காட்சியான சன் டிவி அரசியல் பின்புலத்துடன் அரங்குக்கு வந்தது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் முழுமையான வணிக நோக்குடன் இயங்கிய இந்த டிவி, செய்திகளில் அரசியல் தன்மையுடன் இயங்கியது. இந்த அரசியலுக்கு நடுவே பல புதிய முயற்சிகளையும் மேற்கொண்டதை மறந்துவிட முடியாது. பல புலனாய்வு செய்திகள் மற்றும் ரசிக்கக்கூடிய காட்சி அமைப்புகளுடன் கூடிய உலகச்செய்திகள், விளையாட்டுச் செய்திகளை டிவி மீடியாவில் கொடுத்து பார்வையாளனின் சிந்தனையை தன்வயப்படுத்தியது. இவ்வாறு தன்வயப்படுத்தப்பட்ட சிந்தனையில் தனது அரசியல் கருத்துகளை திணிப்பதில் வெற்றியும் கண்டது.

இந்த வெற்றியை கண்டவுடன் மீடியா உலகில் தவிர்க்க முடியாமல் ஜெயா டிவி உருவானது. சன் டிவியின் பார்முலாவையே பின்பற்றி சன் டிவிக்கு பதிலடி கொடுக்க ஜெயா டிவி முயற்சித்தாலும் அது இன்று வரை பலிக்கவில்லை. அதைவிட முதன்மையாக தமிழக பார்வையாளர்களை அரசியல் ரீதியாக தன்வயப்படுத்துவதில் ஜெயா டிவி மாபெரும் தோல்வியை சந்தித்தது.

எனினும் இந்த இரு தொலைக்காட்சிகளும் செய்திகளை ஒலி பரப்பும் நேர்த்தியை பார்த்த நடுவிலை பார்வையாளர்கள், இந்த இரு சேனல்களும் ஒலி பரப்பும் செய்திகளுக்கு நடுவே வேறு எங்கோ செய்தி இருப்பதை உணர்ந்து கொண்டனர். இந்த இரு ஊடகங்களும் செய்திகளை தங்கள் பார்வையில், தங்களுக்கு சாதமானதை கூறுவதையும், மற்றவற்றை இருட்டடிப்பு செய்வதையும் புரிந்து கொண்டனர்.

தமிழ்நாட்டு மீடியா உலகின் வாசகர்-பார்வையாளர்களிடம் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், திட்டமிடாமலே சன் டிவியும், ஜெயா டிவியும் முக்கிய பங்காற்றின.


(தொடரும்)

19 ஆகஸ்ட், 2009

நான், அனிதா, கடவுள்...!

விவசாயிகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் அனிதா என்ற இளம்பெண்ணை சந்தித்தேன். கிறித்தவ மதபோதகர்களுக்கான கல்வி பயில்வதாக தெரிவித்தார். மேலும் தனக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார். அதுவரை மதபோதகர்கள் அனைவரும் பிரம்மச்சரியம் கடைபிடிப்பவர்கள் என்று கருதிவந்த நான் என் கருத்துகளை அப்-டேட் செய்து கொண்டேன்.

அறிமுகங்கள் முடிந்த நிலையில் எங்கள் பேச்சு வேறு திசையில் சென்றது. இறையியல் பாடத்திட்டம் குறித்து தொடங்கிய விவாதம், கேரள மாநிலத்தில் உருவான விடுதலை இறையியல் (Liberation Theology) நோக்கி திரும்பியது.

அப்போது எனக்கு தோன்றிய ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்: கடவுள்தான் உலகையும், மற்ற அனைத்தையும் படைத்தார் என்றால் உலகில் உள்ள சமத்துவமற்ற நிலைக்கும் அவர்தான் பொறுப்பு! இந்த சமத்துவமற்ற நிலையே அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் காரணம் என்றால், இந்த சமத்துவமற்ற நிலையை உருவாக்கி, பாதுகாத்து வரும் கடவுளின் விருப்பம் அதுதான்!!இந்த நிலையில் மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஆதிக்கமற்ற சமூகத்தை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபடுவது கடவுளின் விருப்பத்திற்கு எதிரான செயல் அல்லவா? கடவுளுக்கே எதிரான செயல் அல்லவா?? கடவுளை ஏற்றுக்கொள்பவர்கள் எந்த நோக்கத்திற்காகவும் கடவுளை தொழலாம், பிரார்த்தனை செய்யலாம். ஆனால் நேரடி செயல்பாடுகளில் ஈடுபடுவது கடவுளின் விருப்பத்திற்கு எதிரானது அல்லவா? என்று கேட்டேன்.

இது போன்ற விவாதங்கள் தாம் பயிலும் கல்வி நிலையத்திலும் அவ்வபோது நடைபெறுவதாகவும், இதுவரை இந்த கேள்விக்கான பதில் கிடைக்கப்பெறவில்லை என்றும் தோழி அனிதா கூறினார். எனினும் இந்த கேள்விக்கான பதில் தெரிந்தால் உடன் தொடர்பு கொள்வதாகவும் அவர் உறுதி அளித்தார்.

-000-

லகம் முழுவதும் மனித உரிமைத்தளங்களில் மிக அதிக அளவில் செயல்படுவது கிறித்துவ மதம் சார்ந்த அமைப்புகளும், நபர்களுமே. மிகப்பெரிய மனித உரிமை அமைப்புகள் கிறித்தவ மத நிறுவனங்களின் நிதி உதவி மற்றும் ஆலோசனை அல்லது கட்டளைப்படிதான் நடக்கின்றன.

தற்போது இஸ்லாம் மதத்தினரும் மனித உரிமைகள் குறித்து பேசுகின்றனர். ஆனால் அது சற்று வேறு விதத்தில் அமைந்துள்ளது. கிறிஸ்தவர்கள் பேசும் மனித உரிமைகள், கடவுள் மறுப்பாளர்களின் உரிமையையும் உள்ளடக்கியதாக தோன்றுகிறது. உலக அரசியல் சூழலில் இந்த கருத்தே, ஐக்கிய நாடுகளின் கருத்தாகவும் உள்ளது. ஆனால், இஸ்லாமியர்கள் பேசும் மனித உரிமைகளோ மதம் சார்ந்த நபர்களின், மத நம்பிக்கையிலேயே அதிக கவனம் செலுத்துகிறது.

கிறித்தவ மதம் இந்தியாவில் ஊடுருவி பரவ ஆரம்பித்த நிலையில், விவேகானந்தர் போன்றவர்கள் இந்து மதத்திலும் சமூக நோக்கை சேர்த்து புதிய பரிமாணங்களை ஏற்படுத்த முயற்சித்தனர்.

ஆனால் அடிப்படையில் அனைத்து மதங்களுமே கடவுள்தான் இந்த உலகத்தையும், மனிதர்களையும் படைத்தார். அவரது விருப்பப்படியே இந்த உலகிலுள்ள அனைத்தும் நடந்தேறுகிறது. என்று நம்புகின்றனர்.

எனில் ஒடுக்குபவனை படைப்பவனும், ஒடுக்கப்படுபவனை படைப்பவனும் கடவள்தான். கடவுளின் சித்தப்படியே ஒடுக்கப்படுபவன் தலித்தாக, சிறுபான்மையினராக, ஏழையாக, படிப்பறிவற்றவனாக, திருநங்கையாக, கருப்பினத்தவராக பிறக்கின்றனர்.

அதேபோல கடவுள் சித்தப்படியே மற்றோர் பிரிவினர் உயர் குலத்தவராக, வெள்ளைத்தோல் படைத்தவராக, பெரும்பான்மையினராக, செல்வந்தராக, படிப்பறிவுள்ளவராக, ஆதிக்க சக்தியினராக பிறந்து மற்றவர்களை ஆதிக்கம் செய்கின்றனர். இவர்களே அரசையும், வணிக நிறுவனங்களையும் உருவாக்கி பயன்படுத்தி, நமது மதம் சார்ந்த சமூக சேவையாளர்கள் மனம் நோகும் செயற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஆக மொத்தத்தில் அனைத்தும் கடவுள் சித்தத்தாலேயே நடக்கிறது. இதனால் பாதிக்கப்படுவோருக்கு அது கடவுள் வைக்கும் சோதனை. அதனை மீறி அவர் கடவுளுக்கு விசுவாசமாக இருந்தால், அவர்களுக்கு கடவுள் முக்தியை கொடுப்பார்.

ஆனால், கடவுளின் சித்தத்தின்படி துன்பங்களை அனுபவிப்பவர்களை மனித உரிமைகள் என்ற பெயரில் அந்த துன்பங்களிலிருந்து விடுவிக்க முனைவது கடவுளின் சித்தத்திற்கு எதிரான செயல் அல்லவா? அல்லது கடவுளுக்கே எதிரான செயல் அல்லவா?

துன்பப்படு்ம் மனிதர்கள் மீது அக்கறை கொள்ளும் மத நம்பிக்கையாளர்கள், அந்த துன்பங்களை விலக்குமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்யலாம். அதற்கு பதிலாக நேரடி செயல்பாடுகளில் ஈடுபடுவது ஏற்புடையதுதானா?

-என்பன போன்ற கேள்விகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன. நன்கு அறிமுகமான சிலரிடம இது குறித்து கேட்டபோது, எனக்கு பைத்தியம் பிடித்திருக்குமோ??!! என்ற சந்தேகத்துடன் விலகி விட்டனர்.என் கேள்வியில் உள்ள நியாயத்தை தோழி அமுதா மன்னிக்கவும் அனிதா புரிந்து கொண்டார் என்று கருதுகிறேன். மேலும் இதுபோன்ற கேள்விகள், மதபோதகர்களுக்கான பள்ளி வரையிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது என்ற தகவலும் எனக்கு உற்சாகம் அளிக்கிறது.

-000-

என் கேள்விகளுக்கான பதில் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள், ப்ளீஸ்...!

16 ஆகஸ்ட், 2009

ரத்த தானம் – சில நினைவுகள், சில குறிப்புகள்

த்தம் சிந்துதல் என்பது எனக்கு சிறுவயதில் அவ்வபோது நடக்கும் நிகழ்ச்சிதான். அதற்காகநானும் ரவுடிதான் என்று கூறிக்கொண்டு அலைந்ததாக நினைக்க வேண்டாம். எண்ணங்கள் எங்கெங்கோ மிதக்க, கால் தடுக்கி விழுவதும், உயரம் காரணமாக ஆங்காங்கே இடித்துக்கொள்வதுமே ரத்தம் சிந்துதலுக்கு காரணமாயின. ஆனால் அதற்கு செவ்வாய் ஆதிக்கம், பிறந்த தேதி 9 என்பது உள்ளிட்ட பல காரணங்களை பெரியவர்கள் சொல்ல ஆரம்பித்த நேரத்தில்தேவையின்றி ரத்தம் சிந்துதல் குறைந்து விட்டது.

முதல் தடவையாக பயனுள்ள முறையில் ரத்ததானம் செய்தபோது எனக்கு 18 அல்லது 19 வயதிருக்கலாம். எனது நண்பனின் தந்தையார் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது நண்பன் வேலை தேடியோ, வேறு காரணங்களுக்காகவோ வெளியூர் சென்றிருந்தான். நண்பனின் தாயாருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் மருத்துவமனை சென்ற நான் ரத்தம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானேன்.

ரத்தம் எடுக்கும் பணியாளரிடம் நான் கேட்ட கேள்விகளால் நொந்துபோன அவர், உண்மையிலேயே ரத்தம் கொடுப்பதற்கு உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்டார். இருக்கிறது! ஆனால் நான் ரத்தம் கொடுப்பதால் நானும் பாதிக்கப்படக்கூடாது ரத்தம் பெற்றுக்கொள்ளும் என் நண்பனின் தந்தையாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற உண்மையான ஆர்வம் காரணமாகவே கேள்விகளை சற்று அதிகமாக கேட்டுவிட்டதாகக் கூறி படுக்கையில் படுத்து கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

ரத்தம் எடுத்தபின் எனக்கு சற்று அதிசயமாக இருந்தது. முன்பைவிட சுறுசுறுப்பாக இருப்பதாக தோன்றியது. எதையாவது உடனடியாக செய்யவேண்டும் என்றுகூட தோன்றியது. ரத்தம் எடுத்த மருத்துவமனை நண்பர், ரத்த தானம் செய்வதின் அவசியம் குறித்து ஒரு சிறு வகுப்பே எடுத்தார். மேலும் என் முகவரியையும் குறித்து வைத்துக்கொண்டார்.

அடுத்த ஒரு சில மாதங்களிலேயே என் சகோதரிக்கு ரத்தம் கொடுக்கவேண்டிய நிலை வந்தபோது நான் எந்த தயக்கமும் இல்லாமல், ஒருவிதமான மகிழ்ச்சியான மனநிலையில் ரத்தம் கொடுத்தேன். அதன் பிறகு அந்த மருத்துவமனையின் வாடிக்கையான ரத்தக்கொடையாளி ஆனேன். பல நாட்களில் நள்ளிரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் என்வீடு தேடிவந்து ரத்தம் கேட்டதும் உண்டு. நானும் சளைக்காமல் ஆனால் உரிய கால இடைவெளியுடன் ரத்தம் கொடுத்து வந்தேன். ஏழை நோயாளிகளுக்கு ரத்தம் கொடுத்ததுடன், அவர்களுக்கு பழம் உள்ளிட்ட அன்பளிப்புகள் அளித்ததும் உண்டு.

இதற்குள் என் நட்பு வட்டம் பெரிதாகி, ரத்தவங்கி நடத்துபவர்களும் எனக்கு நண்பர்கள் ஆனார்கள். ஆனாலும் ரத்தம் தேவைப்படும் ஒரு நோயாளிக்காக மட்டுமே ரத்தம் கொடுப்பது என்பதை கொள்கையாக வைத்திருந்தேன். ரத்த வங்கியின் கையிருப்புக்காக ரத்தம் கொடுப்பதில்லை. ஆனால் தேவைப்படும் ரத்தவகைக்கு ஈடுசெய்வதற்காக ரத்தம் கொடுக்க தயங்கியதும் இல்லை. இவ்வாறு சுமார் சுமார் 50 முறை ரத்தம் கொடுத்திருப்பேன்.

இப்போது சென்னை வந்து சுமார் 8 வருடங்கள் ஆனாலும், 5 அல்லது 6 முறை மட்டுமே ரத்தம் கொடுத்திருக்கிறேன். எனது ரத்த வகை: A1+. தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்.

-oOo-

அண்மையில் சேலத்திற்கு ஒரு விழாவிற்காக சென்றேன். அந்த விழாவை நடத்திய மருத்துவ நண்பர், ஒரு ரத்த வங்கியையும் நடத்தி வருகிறார். ரத்த வங்கி நடத்துவதில் உள்ள தொழில்நுட்ப சிரமங்களையும், மக்களின் மனநிலை கோளாறுகளையும் விளக்கினார். தொழில்நுட்ப சிரமங்களுக்கு நாம் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் மக்கள் மனநிலையை மாற்ற முயற்சிக்கலாம்.

ரத்தம் கேட்டு வருபவர்கள் யாரும் ரத்தம் கொடுக்கத் தயாராக இருப்பதில்லை. பணம் கொடுத்தால் ரத்தம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ரத்தத்தை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய முடியாது என்பதை யாரும் உணர்வதில்லை. இதில் படித்தவர்களும், பணம் படைத்தவர்களும் அதிகம் இடம் பெறுகின்றனர்.

இதனால் தொழிற்முறை ரத்தக்கொடையாளிகளை வேறுவழியின்றி ஆதரிக்க வேண்டியுள்ளது. உரிய வேலைவாய்ப்பற்றும், தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாகியும் உள்ள இவர்கள் பணத்திற்காக ரத்ததானம் செய்பவர்கள். இவர்களுடைய ரத்தம் போதுமான தரத்தில் இருப்பதாக கூற முடியாது.

எனவே ரத்தம் தேவைப்படுபவர்கள், இதுபோன்ற தொழிற்முறை கொடையாளிகளை தவிர்த்துவிட்டு மற்ற கொடையாளிகளை நாடுவதே நல்லது. அதற்கு அவ்வாறு ரத்தத்திற்காக நாடுபவர்களும் ரத்தக்கொடையாளிகளாக இருக்க வேண்டும். தனது ரத்தவகை என்ன என்பதே தெரியாமல், சொந்த தேவைக்காக மட்டும் ரத்தம் தேடுவது நேர்மையற்ற செயல் என்பதை உணர வேண்டும்.

-oOo-

தற்போது சில சமூக அமைப்புகள் (உ-ம்: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்) ரத்தக்கொடையை ஒரு முக்கியமாக சமூகசேவையாக செய்ய ஆரம்பித்துள்ளன. வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. ஆனால் விளம்பரத்திற்காகவும் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இந்த நல்லகாரியத்தை கொச்சைப்படுத்தி விடுகின்றனர்.

நமது சேலம் ரத்தவங்கி நண்பரின் அண்மைய அனுபவம் ஒன்று:

அரசியல் தலைவர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடத்த அந்த கட்சி முடிவு செய்தது. உள்ளூர் அமைச்சரின் வாரிசு தலைமையில் அந்த முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. நமது நண்பரும் ரத்ததான முகாம் நடத்த ஒப்புக்கொண்டார். குறிப்பிட்ட சில நாட்களுக்கு இரு தினங்கள் முன்பாகவே கட்சியின் குட்டித்தலைவர்கள் அந்த ரத்தவங்கியை முற்றுகையிட்டு விழா திட்டமிடலில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அந்த நாளும் வந்தது. கரைவேட்டிகள் அந்த பகுதியில் அலைகடலென குவிந்தனர். அமைச்சரின் வாரிசும் வந்தார். ரத்ததானம் செய்யவிருக்கும் தொண்டர்களை பாராட்டி பேசினார். பேசிய உடனே முக்கிய வேலை காரணமாக விரைந்து சென்றுவிட்டார். உடனே குட்டித்தலைவர்களும் கிளம்பினர். மெல்ல, மெல்ல மற்றவர்களும் புறப்பட்டனர். சற்று நேரத்தில் அந்த இடம் வெறிச்சோடியது. ஒருவர்கூட ரத்தம் தானம் செய்யவில்லை.

அடுத்தநாள் செய்தித்தாளில் கொட்டை எழுத்துகளில் செய்தி வந்திருந்தது: கட்சித் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு 300 தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர்.

-oOo-

இருக்கும்வரை தேவைப்படுவோருக்கு ரத்தம் கொடுப்போம். இறக்கும்போது அனைத்தையும் கொடுப்போம்!

11 ஆகஸ்ட், 2009

இப்படித்தான் நடக்கின்றன என்கவுன்டர்கள்! (நன்றி: டெஹல்கா)

சொங்காம் சஞ்சித் (Chongkham Sanjit) என்ற இளைஞரின் வயது 27. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மக்கள் விடுதலைப்படை என்ற இயக்கத்தில் சிறிது காலம் இருந்தார். 2000ஆவது ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார். 2006ஆம் ஆண்டில் உடல் நலம் குன்றியதால் மக்கள் விடுதலைப்படையிலிருந்து விலகினார். எனினும் 2007ம் ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டு தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், ஒரு தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 23ம் தேதி காலையில், இம்பால் நகரின் சட்டசபை வளாகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் க்வைரம்பான்ட் கெய்தல் கடைவீதிப்பகுதியில் மணிப்பூர் போலிஸ் கமாண்டோப் படை தீவிரவாதிகள் மீதான தேடுதல் வேட்டையை நடத்தியது. அப்போது அப்பகுதியில் சஞ்சித் இருந்துள்ளார்.கமாண்டோ படையினர் அவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.கமாண்டோ படையினருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் அவர் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.அவரிடம் ஆயுதங்கள் இருந்ததற்கான அறிகுறியே தெரியவில்லை.
அவர் முகம் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் மிகவும் இயல்பாக இருந்தது.திடீரென சஞ்சித்தை வளைத்துப்பிடித்தனர் கமாண்டோ படையினர்.


அவரை அருகிலிருந்த மைமு மருந்துக்கடையினுள் இழுத்துச் சென்றனர்.


எந்த ஆயுதமும் வைத்திருந்ததற்கான முகாந்திரமற்ற நிலையில், சஞ்சித்தை சுற்றி ஆயுதபாணிகளான கமாண்டோப் படையினர் சூழ்ந்தனர். சில விநாடிகளில்...


சஞ்சித்தின் சடலம் வெளியே இழுத்து வரப்பட்டது. அவரது உடல் ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டது அப்போது அவரது உடலின் அருகில் கமாண்டோ படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரபினா தேவி என்ற கர்ப்பிணி பெண்ணின் உடல் கிடந்தது.சஞ்சித்தை விசாரிக்க முனைந்தபோது அவர் 9எம்எம் கைத்துப்பாக்கியால் சுட முயற்சி செய்ததாகவும், எனவே வேறு வழியின்றி கமாண்டை படையினரின் தற்காப்புக்காக அவர் கொல்லப்பட்டார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.


ஆனால் சஞ்சித்தின் குடும்பத்தினரோ, நோயுற்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அவரது உறவினருக்கு மருந்து வாங்குவதற்காகவே சஞ்சித் அப்பகுதியில் இருந்ததாகவும், அவரிடம் ஆயுதங்கள் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் கூறுகின்றனர்.


இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரர், அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அச்சம் இருப்பதால் இந்த புகைப்படத்தை வெளியிட துணியவில்லை. ஆனால் டெஹல்கா பத்திரிகையின் செய்தியாளர் தெரசா ரஹ்மானுக்கு இந்த சம்பவம் குறித்தும், புகைப்படம் குறித்தும் தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிப்பூர் கமாண்டோ படையினரின் இந்த வீரசாகசம் டெஹல்கா, 8 ஆகஸ்ட் 2009 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டத்தின் ஆட்சி நடப்பதாக கூறும் இந்தியாவில் மணிப்பூரில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளே நடந்து வருகின்றன. ஆனால் இதுபோன்ற புகைப்பட ஆதாரங்கள்தான் சிக்குவதில்லை.