25 ஆகஸ்ட், 2009

தமிழ் மீடியா உலகம் – ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் (பகுதி 1)


காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீ தான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணில்
பாய்ந்திடும் எழுச்சி நீ தான்!
ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில்பிறந்த பத்திரிகைப் பெண்ணே

என்று பாவேந்தர் பாரதிதாசனால் பாடப்பட்டதும், ஜனநாயக அமைப்பின் நான்காவது தூண் என்றும் சித்தரிக்கப்படும் பத்திரிகை உள்ளிட்ட மீடியா உலகம் இன்று எவ்வாறு உள்ளது?

மீடியாவின் நிலை என்பது நான்கு கீழ்க்கண்ட முக்கிய அம்சங்களை பொறுத்தே அமையும்.

அவை 1) மீடியா நிர்வாகம்,

2) செய்தியாளர்,

3) செய்தியாளர்களின் சங்கங்கள்,

4) வாசகன் பார்வையாளன்.

இன்றைய தமிழ் மீடியாவின் நிலையை புரிந்து கொள்ள ஒவ்வொன்றாக அலசலாம்.

முதலில் மீடியா நிர்வாகம்.

முன்பு ஒரு காலத்தில் பத்திரிகைகளில் செய்தி வந்தால் அது நூறுசதவீதம் உண்மை என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். பாமரர்களுக்கு தினத்தந்தியின் செய்திகள் வேதவாக்காக இருந்தது.

ஆங்கிலம் அறிந்தவர்களுக்கோ ஹிந்து-லயே வந்துருக்கு என்பது நம்பிக்கையின் உரைகல்லாக இருந்தது. இவை இரண்டும் அரசு சார்பு நிலையிலேயே இருந்தன.

தினமணி பத்திரிகை தலையங்கம் என்று சமூகத்தின் நிகழ்வுகள் குறித்த தனது கருத்தை வெளியிட்டது. தினமலர், தினகரன் போன்ற பத்திரிகைகள் அனைத்து செய்திகளிலுமே தங்கள் பார்வையை திணித்து கொடுத்தன. பத்திரிகைகளின் இந்த போக்கு சாதாரண மக்களை தேவையான அளவில் சென்றடையவில்லை. அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகள், சமூகத்தில் அதிக செல்வாக்கை பெற்றிருக்கவில்லை.

அரசியல் புலனாய்வு இதழ்கள் வாசகனை வேறு ஒரு தளத்தி்ற்கு அழைத்துச் சென்றன. அதுவரை செய்திக்கான மதிப்பை பெறாத பல விவகாரங்கள் இந்த இதழ்களில் இடம் பெற்றன. எழுத்துத் திறமை மற்றும் பத்திரிகை நிறுவனத்தின் பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த செய்திகள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கின. அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடும் இந்த புலனாய்வு பத்திரிகைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது.

இந்த சூழலில் பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கிடைத்த மிகைமதிப்பை பார்த்த ஏராளமானவர்கள் புலனாய்வு பத்திரிகைகளை தொடங்கினர். ஒரே நேரத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட புலனாய்வு பத்திரிகைகள் வெளிவந்தன. எனினும் எழுதுவதற்கான விஷயங்கள் இல்லாத நிலையில் கற்பனைகளையும், மிகைப்படுத்தல்களையும் இந்த இதழ்கள் வெளியிடவே வாசகனுக்கு திகட்டத்தொடங்கி இந்த பத்திரிகைளில் பலவும் சரிவை சந்தித்தன.

இந்த இடைவெளியில் தொலைக்காட்சிகள் வந்தன. இந்த தொலைக்காட்சிகளே மீடியா உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. முதலில் அரசு சார்பில் வெளிவந்த தூர்தர்சன், மீடியா உலகின் அடுத்த பாய்ச்சலுக்கு மக்களை தயார் படுத்தியது. அதனை தொடர்ந்து வந்த தனியார் தொலைக்காட்சிகளே செய்தியின் பரிணாம (Dimension) ங்களில் புதிய பல பரிமாண(Evolution) வளர்ச்சிகளை ஏற்படுத்தின.

தமிழ் நாட்டின் முதல் தனியார் தொலைக்காட்சியான சன் டிவி அரசியல் பின்புலத்துடன் அரங்குக்கு வந்தது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் முழுமையான வணிக நோக்குடன் இயங்கிய இந்த டிவி, செய்திகளில் அரசியல் தன்மையுடன் இயங்கியது. இந்த அரசியலுக்கு நடுவே பல புதிய முயற்சிகளையும் மேற்கொண்டதை மறந்துவிட முடியாது. பல புலனாய்வு செய்திகள் மற்றும் ரசிக்கக்கூடிய காட்சி அமைப்புகளுடன் கூடிய உலகச்செய்திகள், விளையாட்டுச் செய்திகளை டிவி மீடியாவில் கொடுத்து பார்வையாளனின் சிந்தனையை தன்வயப்படுத்தியது. இவ்வாறு தன்வயப்படுத்தப்பட்ட சிந்தனையில் தனது அரசியல் கருத்துகளை திணிப்பதில் வெற்றியும் கண்டது.

இந்த வெற்றியை கண்டவுடன் மீடியா உலகில் தவிர்க்க முடியாமல் ஜெயா டிவி உருவானது. சன் டிவியின் பார்முலாவையே பின்பற்றி சன் டிவிக்கு பதிலடி கொடுக்க ஜெயா டிவி முயற்சித்தாலும் அது இன்று வரை பலிக்கவில்லை. அதைவிட முதன்மையாக தமிழக பார்வையாளர்களை அரசியல் ரீதியாக தன்வயப்படுத்துவதில் ஜெயா டிவி மாபெரும் தோல்வியை சந்தித்தது.

எனினும் இந்த இரு தொலைக்காட்சிகளும் செய்திகளை ஒலி பரப்பும் நேர்த்தியை பார்த்த நடுவிலை பார்வையாளர்கள், இந்த இரு சேனல்களும் ஒலி பரப்பும் செய்திகளுக்கு நடுவே வேறு எங்கோ செய்தி இருப்பதை உணர்ந்து கொண்டனர். இந்த இரு ஊடகங்களும் செய்திகளை தங்கள் பார்வையில், தங்களுக்கு சாதமானதை கூறுவதையும், மற்றவற்றை இருட்டடிப்பு செய்வதையும் புரிந்து கொண்டனர்.

தமிழ்நாட்டு மீடியா உலகின் வாசகர்-பார்வையாளர்களிடம் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், திட்டமிடாமலே சன் டிவியும், ஜெயா டிவியும் முக்கிய பங்காற்றின.


(தொடரும்)

9 கருத்துகள்:

யுவகிருஷ்ணா சொன்னது…

மிகமுக்கியமான, அவசியமான தொடர். அருமையாக வந்திருக்கிறது. தொடரவும்.

யுவகிருஷ்ணா சொன்னது…

இந்த வலைப்பூவின் டெம்ப்ளேட்டும் சூப்பராக இருக்கிறது என்பதை சொல்ல மறந்துவிட்டேன்!

தோழமை - உரிமைக்கான வளம் சொன்னது…

EXCELLENT ARTICLE, NEED OF THE HOUR DEVANEYAN

சுந்தரராஜன் சொன்னது…

நன்றி யுவகிருஷ்ணா மற்றும் தேவநேயன்.

பெயரில்லா சொன்னது…

அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோருக்குத்தான் அவர்களின் பதவிக்காலம் முடிந்தபின்னர் மனசாட்சி விழிக்கும். பதவி வகித்த காலத்தில் அமைதி காத்ததன் மூலமாக ஆதரித்த விஷயங்களை பின்னர் எழுதுவதன் மூலம் நேர்மையாளர்கள் என்று பெயர் வாங்க முயற்சிப்பார்கள். அதன் மூலம் அவர்கள் பதவிக்காலத்தில் கள்ள மவுனம் சாதித்த மர்மத்தை விழுங்க முயற்சிப்பார்கள். நீங்களுமா...?

பெயரில்லா சொன்னது…

adutha pakuthiyai seekiram ezuthunga sir.

சவுக்கு சொன்னது…

அற்புதமான பதிவு. பத்திரிக்கை உலகில் நிலவி வரும் பல மாயைகளையும், மர்மங்களையும், இத்தொடர் விலக்கி புதிய ஒளியைப் பாய்ச்சும் என்று நம்புகிறேன். யாரும் தொடாத பொருளைப் பற்றி எழுதத் தொடங்கியதற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள்.

சிவக்குமரன் சொன்னது…

.

பெயரில்லா சொன்னது…

//அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோருக்குத்தான் அவர்களின் பதவிக்காலம் முடிந்தபின்னர் மனசாட்சி விழிக்கும். பதவி வகித்த காலத்தில் அமைதி காத்ததன் மூலமாக ஆதரித்த விஷயங்களை பின்னர் எழுதுவதன் மூலம் நேர்மையாளர்கள் என்று பெயர் வாங்க முயற்சிப்பார்கள். அதன் மூலம் அவர்கள் பதவிக்காலத்தில் கள்ள மவுனம் சாதித்த மர்மத்தை விழுங்க முயற்சிப்பார்கள். நீங்களுமா...?//

Hi..HI..HHII..!

கருத்துரையிடுக