15 ஆகஸ்ட், 2011

வந்தே மாதரம்! வாழிய பாரத மணித்திருநாடு!!

மலைக்கோட்டை மாநகரில் தேசியமான நாளிதழ் ஒன்றில் செய்தியாளனாக இருந்த காலகட்டம். ஜனநாயகத்தின் நான்காவது தூணின் மர்மங்கள் என்னைப் பொறுத்தவரை உடைந்து போய்விட்ட நிலை. ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மரணத்திற்கு என்ன தலைப்புச் செய்தி போடலாம் என்று ஆசிரியர் குழு மண்டையை உடைத்துக் கொண்டிருந்தபோது, பா.ஜ.க. பிரார்த்தனை தோல்வி: ரங்கராஜன் குமாரமங்கலம் மரணம்! என்று ஆலோசனை கூறி ஆசிரியர் குழுவினரை கலாய்த்துக் கொண்டிருந்த நாட்கள்.
.
சுதந்திரதின சிறப்பு மலருக்காக அனைவரும் ஆளுக்கொரு கட்டுரை தந்தாக வேண்டும் என்ற அலுவலக நிர்பந்தம். கட்டுரை எழுதுவதில் பிரசினை இல்லை: ஆனால் அதை பிரசுரித்தால் தேசத்துரோக குற்றச்சாட்டில் அனைவரும் உள்ளே போக நேரலாம் என்று அதற்கும் கமென்ட் அடித்த அந்த நேரத்தில் ஒரு பெரியவர் அலுவலகத்திற்கு வந்தார்.
.
பழுப்பேறிய கதரில் வேட்டியும், சட்டையும் அணிந்து, கண்கள் பஞ்சடைத்து வந்த அவரை ஒரு பெண் கைபிடித்து அழைத்து வந்தார். வரவேற்பாளரின் விசாரணைக்குப் பிறகு தலைமை நிருபர் விசாரித்துவிட்டு அந்த பெரியவரை என்னிடம் ஒப்படைத்தார். அந்த பெரியவரை அழச்செய்யாமல் விசாரிப்பதே பெரிய காரியமாக இருந்தது.
.
அந்த பெரியவர் (பெயர் நினைவில்லை-மன்னிக்கவும்!) நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைத்தவர்.

சிறையில் சில ஆண்டுகளை கழித்துவிட்டு வந்து பார்த்தபோது சிறு குழந்தைகளாக இருந்த இரு பெண்களும் வயது வந்த நங்கைகளாக இருந்தனர். செய்து வந்த வியாபாரம், உரிய கவனிப்பாரின்றி உயிர் விட்டிருந்தது. இருந்த சொற்ப சொத்துகளை விற்று இரு குழந்தைகளையும், வாலிபப் பெண்களாக வளர்த்திருந்தார், அந்த பெரியவரின் மனைவி. மேலும் விற்பதற்கு சொத்துக்கள் இல்லாததால் வறுமை அவரது குடும்பத்தை சூழ்ந்தது. அந்த வறுமை பெரியவரின் மனைவியையும் பலி கொண்டது.

காலத்தின் ஓட்டத்தில் பெரியவர், எந்த தொழிலையும் செய்யமுடியாத நிலையை அடைந்தார். அவரது இரு பெண்களும் முதிர் கன்னிகளாக உருமாறினார்கள். அன்றாட பிழைப்புக்கே வழியற்ற நிலையில் அந்த பெண்களுக்கு திருமணச் சிந்தனைகள் கனவில்கூட வந்திருக்குமா என்பது சந்தேகமே!
.
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் கேட்டு அரசு அதிகாரிகளிடம் அலைந்ததில் அந்த பெரியவரின் வயோதிகம் அளவுக்கதிகமாகவே கூடியிருந்தது. 
.
கதையைக் கேட்ட எனக்கு, என்ன செய்வதென்று புரியவி்ல்லை. ஓரளவு அரசியல்வாதிகளிடம் பரிச்சயம் இருந்ததால், "காங்கிரஸ் தலைவர்களிடம் பேசினீர்களா?" என்று கேட்டேன். உள்ளூர் தலைவர்களை பார்க்கவே முடியாத அவர், பிசியான மத்திய அமைச்சரை மிகுந்த சிரமங்களுக்கு பிறகு சந்தித்து தனது குறைகளை எடுத்துக்கூறியதாக கூறினார். அதற்கு அந்த மத்திய அமைச்சர் ரகசியமாக கூறிய பதில்: விடுதலைப் போராட்டத்திற்காக வாழ்க்கை, சொத்து, சுகம் அனைத்தையும் தியாகம் செய்திருக்கிறீர்கள். இந்த ஓய்வூதியத்தையும் தியாகம் செய்து விடுங்களேன்! இந்த பதிலை கூறுமுன் தந்தையும், மகளும் கூனிக்குறுகி அழுத காட்சி இன்றும் என் கண்களில் நிழலாடுகிறது. 
.
இந்தியாவில் நிலவும் மக்களாட்சி முறை குறித்தும், காங்கிரஸ் கட்சி குறித்தும் நான் ஏற்கனவே வைத்திருந்த கருத்துகளால் எனக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை. எனினும் அந்த பெரியவரின் நிலையும், அவரது மகளின் கண்களில் இருந்த ஏமாற்றமும் என்னை நிறைய நாட்கள் கையாலாகாத குற்ற உணர்வில் உழல வைத்தது. 
.
அந்த பெரியவரை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, மீண்டும் தலைமை நிருபரை அணுகி அந்த பெரியவரின் கதையை சுருக்கமாக சொன்னேன். தலைமை நிருபருக்கு அவரது கதை ஏற்கனவே தெரிந்திருந்தது. என்ன செய்யலாம்?” என்றார். கோவில் விழாக்களுக்கு கொடையளிப்பதைவிட இதுபோன்றவர்களுக்கு கொடுப்பது நல்லது என்பதை நிர்வாகத்துக்கு சொல்லலாம் என்றேன். சிரித்தார்! பிறகு, அந்த பெரியவரின் கதையை ஒரு கட்டுரையாக்குமாறு கூறினார். 
.
அந்த பெரியவரின் கதை சுதந்திர தின மலரில் வெளியானது. 
ஆனால் அவருக்கு உதவிகள் ஏதும் கிடைத்ததா? என்பது தெரியவில்லை!
.
வந்தே மாதரம்! வாழிய பாரத மணித்திருநாடு!!

(15-8-09 அன்று முதலில் பதிவிடப்பட்டது. இப்போது மீள்பதிவு செய்யப்படுகிறது)

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அதெல்லாம் சரி அண்ணாச்சி. அந்த பெரியவரோட பிரசினையை தீர்க்க நீங்க என்ன செஞ்சீங்க?

பெயரில்லா சொன்னது…

// ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மரணத்திற்கு என்ன தலைப்புச் செய்தி போடலாம் என்று ஆசிரியர் குழு மண்டையை உடைத்துக் கொண்டிருந்தபோது, “பா.ஜ.க. பிரார்த்தனை தோல்வி: ரங்கராஜன் குமாரமங்கலம் மரணம்!” என்று ஆலோசனை கூறி ஆசிரியர் குழுவினரை கலாய்த்துக் கொண்டிருந்த நாட்கள்//

ஓ! இந்த நக்கல் தொட்டில் பழக்கமா?

Anita சொன்னது…

Oh! Sundar! Still you are writing. Don't keep the negative ideas. There are positive things also exist in the earth. Be positive. Keep on writing, but in a positive approach.

Then, your photo drawing is nice.

சுந்தரராஜன் சொன்னது…

//பெயரில்லா சொன்னது…
அதெல்லாம் சரி அண்ணாச்சி. அந்த பெரியவரோட பிரசினையை தீர்க்க நீங்க என்ன செஞ்சீங்க?//

உருப்படியா ஏதாவது செஞ்சிருந்தா இந்த பதிவு தேவைப்பட்டிருக்காதே!

சுந்தரராஜன் சொன்னது…

// ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மரணத்திற்கு என்ன தலைப்புச் செய்தி போடலாம் என்று ஆசிரியர் குழு மண்டையை உடைத்துக் கொண்டிருந்தபோது, “பா.ஜ.க. பிரார்த்தனை தோல்வி: ரங்கராஜன் குமாரமங்கலம் மரணம்!” என்று ஆலோசனை கூறி ஆசிரியர் குழுவினரை கலாய்த்துக் கொண்டிருந்த நாட்கள்//

//ஓ! இந்த நக்கல் தொட்டில் பழக்கமா?//

தொட்டில் பழக்கமா என்பது தெரியவில்லை நண்பரே. ஆனால் மார்க் வாங்குவதற்கா எழுதியதைத் தவிர மற்றவை எல்லாவற்றிலும் சற்று மனசாட்சியுடன் எழுத முயற்சி செய்கிறேன்.

சுந்தரராஜன் சொன்னது…

//Anita சொன்னது…
Oh! Sundar! Still you are writing. Don't keep the negative ideas. There are positive things also exist in the earth. Be positive. Keep on writing, but in a positive approach.

Then, your photo drawing is nice.//

Hi,
If you are Psychologist Anita, I am searching you for a long time. Please contact me through mail. My mail id is given in my profile.

மோகனரூபன் சொன்னது…

நல்ல பதிவு நண்பர் சுந்தரராஜன் அவர்களே. நெகிழ வைத்தது.

கோ. பரந்தாமன் சொன்னது…

//ஓரளவு அரசியல்வாதிகளிடம் பரிச்சயம் இருந்ததால், "காங்கிரஸ் தலைவர்களிடம் பேசினீர்களா?" என்று கேட்டேன். உள்ளூர் தலைவர்களை பார்க்கவே முடியாத அவர், “பிசி”யான மத்திய அமைச்சரை மிகுந்த சிரமங்களுக்கு பிறகு சந்தித்து தனது குறைகளை எடுத்துக்கூறியதாக கூறினார். அதற்கு அந்த மத்திய அமைச்சர் “ரகசியமாக” கூறிய பதில்: “விடுதலைப் போராட்டத்திற்காக வாழ்க்கை, சொத்து, சுகம் அனைத்தையும் தியாகம் செய்திருக்கிறீர்கள். இந்த ஓய்வூதியத்தையும் தியாகம் செய்து விடுங்களேன்!” இந்த பதிலை கூறுமுன் தந்தையும், மகளும் கூனிக்குறுகி அழுத காட்சி இன்றும் என் கண்களில் நிழலாடுகிறது.//

அந்த பரதேசியை பெயர்கூறியே எழுத வேண்டியதுதானே, நண்பரே! ஏன் தயக்கம்?

கருத்துரையிடுக