18 அக்டோபர், 2009

தமிழ் மீடியா உலகம் – ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் (2)

(இக்கட்டுரை தொடரின் முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் இடையே பெரும் இடைவெளி விழுந்து விட்டது. இதற்குள் தமிழ் மீடியா உலகில் சில-பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மிகப்பெரும் முதலீட்டுடன் புதிதாக ஒரு இதழ் வெளியாகியுள்ளது. ஒரு புலனாய்வு இதழின் பொறுப்பாசிரியர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஒரு பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.)

மீடியாக்களில் வெளியாகும் செய்திகளின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் அளவில் வாசகர்-பார்வையாளர்களின் நிலை மேம்பட்டுள்ளது என்பதை பார்த்தோம். ஆனால் மீடியாவுடன் உறவு கொள்வதில் தமிழ் மீடியா வாசகர்-பார்வையாளர்கள் தேவையான அளவு செயல்படவில்லை என்றே கூற வேண்டும். மீடியா மீதான விமர்சனங்களை வைப்பதில் தமிழ் மக்கள் செயற்படுவதில்லை. குறிப்பாக குறைகளை சுட்டிக்காட்டுவதில் தமிழர்கள் மிகவும் சோர்ந்தே இருக்கின்றனர். பத்திரிகைகளில் தமது பெயர் அச்சாகி வருவதை பார்க்க விரும்பும் வாசகர்கள், பத்திரிகையை புகழ்ந்து எழுதுகின்றனர். ஆனால் விமர்சனம் செய்பவர்களோ அதை கடிதமாக எழுதி பதிவு செய்ய தயங்குகின்றனர்.

இந்நிலை மாற வேண்டும். உண்மையான விமர்சனக் கடிதங்கள் அச்சில் வராமல் போகலாம். ஆனால் அவை உரியவர்களின் கவனத்திற்கு நிச்சயம் சென்றுவிடும். இத்தகைய விமர்சனங்கள் அதிகரிக்கும்போது அவை மீடியாக்களின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவது உறுதி.

---

நடுநிலை ஊடகங்கள் என்ற சொல்லே மிகவும் நகைச்சுவையானது. ஏனெனில் நடுநிலை என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. ஒரு பிரசினையில் பாதிக்கப்பட்டவருக்கும், பாதிப்பை ஏற்படுத்தியவருக்கும் இடையில் நடுநிலை வகிக்க முடியாது. பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடும், பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு தண்டனையும் வழங்குவதே நீதியாகும். எனவே நடுநிலை என்பது பாதிக்கப்பட்டவருக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

---

மேற்கண்ட நிலைப்பாட்டின்படி தமிழ்நாட்டில் மக்களுக்கு நேர்மையாக நடந்துகொள்ளும் மீடியா நிறுவனங்களை பட்டியலிடும் பொறுப்பை இந்த பதிவை படிக்கும் உங்களிடமே ஒப்படைக்கிறேன்.

---

மீடியாக்கள் தவறு செய்யும்போது வாசகர்களின் கோபம் பத்திரிகையாளர்கள் மீதுதான் திரும்புகிறது. ஆனால், உண்மையில் அந்த கோபத்திற்கு உரியவர்கள் பத்திரிகையாளர்கள் மட்டும் அல்ல. மீடியா நிறுவன அதிபர்களுக்கு இந்த தவறுகளுக்கு கூடுதல் பொறுப்புகள் உள்ளன. ஏனெனில் மீடியா அதிபர்களின் கருத்துக்கு உடன்படாத எந்த கருத்தையும் எந்த பத்திரிகையாளனும் பதிவு செய்ய முடியாது.

எனவே மீடியாக்கள் தவறு செய்யும்போது அதன் அதிபர்கள்தான் அந்த தவறுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால் எந்த அதிகாரமும் இல்லாத பத்திரிகையாளனை தண்டிப்பதின் மூலம் பிரசினைக்கு தீர்வு காணப்படுகிறது.

அண்மையில் நடிகை புவனேஸ்வரி விவகாரத்தில் தினமலர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் உள்ள ஒருவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து பலவிதமான விவாதங்கள் நடந்தன. ஆனால் முக்கியமான ஒரு அம்சம் இந்த விவாதத்தில் இடம் பெறவில்லை.

சட்டப்படி ஒரு பத்திரிகையில் தவறான சமூகத்திற்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய கருத்தோ, செய்தியோ வெளியானால் அந்த பத்திரிகையின் அதிபரும், ஆசிரியரும்தான் பொறுப்பாக வேண்டும். அவர்கள் மீதுதான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தினமலர் விவகாரத்தில் ஆசிரியர் குழுவில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்திற்கு சட்டப்படி பொறுப்பேற்க வேண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து பத்திரிகையாளர்கள் சிலர் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். இந்த கிளர்ச்சிகளில் தினமலர் பத்திரிகையின் செய்தியாளர்களே சற்று ஒதுங்கி நின்றனர்.

---

பொதுப்பிரச்சினைகளை தமிழ் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் விதம் மிகவும் சுவாரசியமானது. இது மீடியா நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்த உளவியல் ஆய்வாக அமையும்.

ஒரு பத்திரிகையாளர் அவரது தொழில்ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளும்போது அவருக்கு பிரச்சினை ஏற்பட்டால் அவருக்கு மற்ற பத்திரிகையாளர்கள் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஆனால் அது நடப்பதில்லை.

பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் பணியாற்றும் நிறுவனத்தைப் பொறுத்தே மற்ற பத்திரிகையாளரின் ஆதரவு பாதிக்கப்பட்டவருக்கு கிடைக்கும். உதாரணமாக சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் நக்கீரன் பத்திரிகையாளர்கள் மீது அரசு நடவடிக்கை பாய்ந்தபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆதரவு கிடைக்கவில்லை.

ஆனால் வேறொரு விவகாரத்தில் சன் டிவியின் செய்தியாளர் கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிரான கிளர்ச்சிகளில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்த இரண்டு கிளர்ச்சிகளில் மட்டுமல்ல. வேறு எந்த பொதுப்பிரச்சினைகளிலும் தினத்தந்தியின் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டதில்லை. அந்த நிறுவனமும் அதை விரும்புவதில்லை. தினத்தந்தியின் செய்தியாளர்கள் பத்திரிகையாளர் அமைப்புகளில் உறுப்பினராகக்கூட இருப்பதில்லை. ஆனால் தினமலர் பத்திரிகையில் இருந்து சிலர் இந்த கிளர்ச்சிகளில் கலந்து கொண்டனர். அதற்கு பரிசாக அவர்களுக்கு, கிளர்ச்சியில் கலந்து கொண்டதற்கு விளக்கம் கேட்கும் மெமோக்கள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதுதான் பத்திரிகையாளர்கள் மற்றும் மீடியா நிறுவனங்களின் நிலை.

இத்தகைய சூழலில்தான் தினமலர் செய்தியாளரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சில பத்திரிகையாளர்கள் கிளர்ச்சி செய்தபோது, தினமலர் செய்தியாளர்களே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த கதை நடந்தது.


-தொடரும்...


தொடர்புடைய பதிவுகள்:

1. தமிழ் மீடியா உலகம் - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் (1)

8 கருத்துகள்:

வாசகன் சொன்னது…

ஆஹா. இத இத இதத்தான் எதிர்பார்த்தோம்.

பெயரில்லா சொன்னது…

//அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோருக்குத்தான் அவர்களின் பதவிக்காலம் முடிந்தபின்னர் மனசாட்சி விழிக்கும். பதவி வகித்த காலத்தில் அமைதி காத்ததன் மூலமாக ஆதரித்த விஷயங்களை பின்னர் எழுதுவதன் மூலம் நேர்மையாளர்கள் என்று பெயர் வாங்க முயற்சிப்பார்கள். அதன் மூலம் அவர்கள் பதவிக்காலத்தில் கள்ள மவுனம் சாதித்த மர்மத்தை விழுங்க முயற்சிப்பார்கள். நீங்களுமா...?//

Answer please!

சுந்தரராஜன் சொன்னது…

//அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோருக்குத்தான் அவர்களின் பதவிக்காலம் முடிந்தபின்னர் மனசாட்சி விழிக்கும். பதவி வகித்த காலத்தில் அமைதி காத்ததன் மூலமாக ஆதரித்த விஷயங்களை பின்னர் எழுதுவதன் மூலம் நேர்மையாளர்கள் என்று பெயர் வாங்க முயற்சிப்பார்கள். அதன் மூலம் அவர்கள் பதவிக்காலத்தில் கள்ள மவுனம் சாதித்த மர்மத்தை விழுங்க முயற்சிப்பார்கள். நீங்களுமா...?//

Answer please!


கேள்விகள் கேட்பதில் தவறில்லை. ஆனால் தமது பெயரைக்கூட தெரிவிக்க துணிவின்றி கேள்வி கேட்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா?

Thirumurugan. S. சொன்னது…

Wondeful concept.

It would be an eye-opener for the people who does not have contacts with media world, if it will be written in a neutral path.

However hats off to you for starting a himalayan venture.

பெயரில்லா சொன்னது…

//சுந்தரராஜன்... சொன்னது…
//அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோருக்குத்தான் அவர்களின் பதவிக்காலம் முடிந்தபின்னர் மனசாட்சி விழிக்கும். பதவி வகித்த காலத்தில் அமைதி காத்ததன் மூலமாக ஆதரித்த விஷயங்களை பின்னர் எழுதுவதன் மூலம் நேர்மையாளர்கள் என்று பெயர் வாங்க முயற்சிப்பார்கள். அதன் மூலம் அவர்கள் பதவிக்காலத்தில் கள்ள மவுனம் சாதித்த மர்மத்தை விழுங்க முயற்சிப்பார்கள். நீங்களுமா...?//

Answer please!


கேள்விகள் கேட்பதில் தவறில்லை. ஆனால் தமது பெயரைக்கூட தெரிவிக்க துணிவின்றி கேள்வி கேட்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா?//


நியாயத்தைப்பற்றி பேசுபவர்கள், பொதுத்தளத்தில் இயங்குபவர்கள் இது போன்ற கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். கேள்வி கேட்பவரின் பெயர் முக்கியமல்ல.

பி.கு.: இந்த கேள்வியை நான் கேட்கவில்லை. ஆனால் கேள்வியின் பின் உள்ள நியாயம் கருதி என் கருத்தை பதிவு செய்கிறேன்.

என் பெயரினை பதிவு செய்யவி்ல்லை. கேள்விக்கு பதில் அளித்தால் என் பெயர் மற்றும் ஐடியுடன் வருகிறேன், ஆட்டைக்கு.

சரவணகுமரன் சொன்னது…

இன்று தான் முதன்முதலில் இந்த வலைத்தளத்தை பார்த்தேன். உங்க கட்டுரைகள் அருமை.

சீ.பிரபாகரன் சொன்னது…

ஒரு சுயசிந்தனையாளன் எந்த நிறுவனத்தில் இயங்கினாலும் அந்த நிறுவனத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டியுள்ளது. மேலும் தனக்கு உடன்பாடு இல்லாதவற்றை கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி காலத்தை ஓட்ட வேண்டியுள்ளது.

ஒரு நிறுவனத்தில் இருந்துகொண்டே அதன் கருத்துக்கும் நோக்கத்திற்கும் எதிராக செயல்படமுடியாது. அப்படி செயல்பட முனைந்தால் முதலாளிகளின் ஈவுஇரக்கமற்ற எதிர்வினைக்கு ஆட்பட்டு நாம் சிதைந்துவிடுவோம்.

உள்ளிருந்து எதிர்த்து துரோகி பட்டம் வாங்குவதைவிட;
எதிர்த்து நின்று எதிரி பட்டம் வாங்குவது எவ்வளவோ மேல்.

பெயரில்லா சொன்னது…

காலத்திற்கேற்ற பதிவு இது. ஆனால் அடுத்த அத்தியாயம் வெளிவருவதற்கு நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது. என்ன காரணம்?

வேறு ஏதேனும் காரணங்களுக்காக தொடர் நிறுத்தப்பட்டுள்ளதா?

பதில் தெரிந்தால் வேறு வெப்சைட்டில் இதை தொடரை எழுத இருக்கிறோம்.

கருத்துரையிடுக