29 அக்டோபர், 2009

சந்தன வீரப்பனை தேடிப்போன செய்தியாளனின் கதை...

கன்னட நடிகரான ராஜ்குமாரை, தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் உள்ள அவரது பங்களாவிலிருந்து 2000ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி சந்தனக்கடத்தல் வீரப்பன் கடத்தியிருந்தார். இது இரு மாநில அரசியலிலும் அதிர்வலைகளை எழுப்பியிருந்தது.

அப்போது நான் திருச்சியில் ஒரு நாளிதழில் செய்தியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். நடிகர் ராஜ்குமார் கடத்தல் குறித்து திருச்சியிலிருந்து செய்தியாளர்களை அனுப்புவதற்கு நான் பணியாற்றிய நிறுவனம் ஏற்பாடுகளை செய்தது. நிறுவனத்திற்கும், நிர்வாகத்திற்கும் மிகவும் வேண்டப்பட்ட ஒரு நிருபர் அந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டார். நான் எதிர்பாராதவிதமாக நானும் அவருடன் செல்லவேண்டும் என்று கூறப்பட்டது.

ஹிந்து நாளிதழில் மதுரை, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குனரும், வழக்கறிஞருமான ஹென்றி திஃபேனின் பேட்டியை படித்ததன் மூலமும், அதைத் தொடர்ந்து மதுரையில் அவரை நேரில் சந்தித்து உரையாடியதன் மூலமும், பிறகு மேட்டூர்-கொளத்தூர்-சின்ன தண்டா-பெரிய தண்டா போன்ற பகுதிகளில் நான் சுற்றி விசாரித்ததையும் அடு்த்து வீரப்பனை தேடுவதாகக்கூறி சென்ற கர்நாடக-தமிழ்நாடு கூட்டு அதிரடிப்படையின் அராஜக செயல்பாடுகள் குறித்து ஓரளவு அறிந்திருந்தேன்.


எனவே வீரப்பன் பகுதிக்கு செல்வதற்கு நானும் ஆர்வத்துடன் சம்மதித்தேன். பேஜர் என்ற தகவல் தொழி்ல்நுட்ப கருவி விடைபெற்று செல்போன்கள் அறிமுகம் ஆகியிருந்த காலம் அது. செல்போனில் இன்கமிங் காலுக்கே 4 ரூபாய் வரை கட்டணம் செலுத்திய காலம்!

இரண்டு செய்தியாளர்கள் மற்றும் ஒரு புகைப்படக்காரர் ஒரு குழுவாக வாடகைக்கார் ஒன்றில் வீரப்பனை தேடிச்சென்றோம்.
அப்போது வீரப்பனை சந்திக்கும் வாய்ப்பு நக்கீரன் குழுவினருக்கு மட்டுமே இருந்தது. நான் பணியாற்றும் நிறுவனத்தின் பெயரைச் சொன்னால் எங்களை சந்திக்க வீரப்பன் நிச்சயமாக சம்மதிக்க மாட்டார் என்பது தெரிந்தாலும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட நாங்கள் தயங்கவில்லை.


சத்தியமங்கலம் பகுதியில் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டுவிட்டு, இரவு-பகலாக வனப்பகுதிகளில் காரில் சுற்றி்த் திரிந்தோம். திம்பம், தாளவாடி, பவானி சாகர், தெங்கு மராடா, தொட்டகாஜனூர் உள்ளிட்ட பல இடங்களில் சுற்றினோம். ஊட்டியை மிஞ்சும் குளிரையும், மாசுபடாத காற்றையும் அனுபவித்தோம். சாதாரண காலத்தில் எளிதாக போகமுடியாத வனப்பகுதிகளில் மிக எளிதாக சுற்றினோம்.

தாளவாடியில் இருந்த பாழடைந்த சுற்றுலா மாளிகையில் அறை போட்டுவிட்டு அங்கிருந்த மதுபானக்கடையில் (செய்திக்காக) சுற்றித் திரிந்தோம். அப்போது ஏராளமான தாடியுடன் இருந்த ஒரு நபர் எங்களை அணுகினார். இரு தரப்பிலும் மிகவும் கண்காணிப்புடன் எதிர்தரப்பினரை ஆழம் பார்த்தோம். பிறகு அவர் க்யூ பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி என்பதை தெரிந்து கொண்டோம். அவரது பெயர் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒருவருடைய பெயர் என்று நினைவு. நாங்கள் யார் என்பதையும் அவர் தெரிந்து கொள்ளவே தேவையற்ற ஒரு நெருக்கம் உருவாகியது.

என்னுடன் வந்திருந்த மூத்த நிருபர் க்ரைம் பீட் என்ற குற்றம் சார்ந்த செய்திகளை சேகரிக்கும் பணியில் இருந்தவர். எனவே காவல்துறை அதிகாரி ஒருவருடன் தொடர்பில் இருப்பது அவருடைய பார்வையில் நன்மையாகவே தோன்றியது. ஆனால், நான் அப்போது சட்டத்தில் இளநிலையும் மற்றும் மனித உரிமைகளில் முதுநிலை பட்டப்படிப்பும் படித்துக்கொண்டிருந்ததால் காவல்துறையினருக்கு எதிரான கருத்துகளை கொண்டிருந்தேன். மேலும் காவல்துறை அதிகாரியின் தொடர்பு என்பது செய்தி சேகரிக்கும் வேலைக்கு எந்த விதத்திலும் உதவாது என்பதுடன், எங்கள் பணிக்கு எதிரான விளைவுகளைத் தரலாம் என்றும் நினைத்தேன்.

எதிரெதிர் கருத்துகளை கொண்ட நிருபர்கள் இருவரும் நடத்திய பனிப்போரை எங்களுடன் வந்த புகைப்படக்காரர் ரசித்துக் கொண்டிருந்தார். இதற்குள் அந்த காவல்துறை அதிகாரி அவர் செல்ல வேண்டிய பகுதிகளுக்குள் எங்களை திணித்துக்கொண்டு அவரும் உடன் வந்து கொண்டிருந்தார்.

இதற்கிடையில் நாங்கள் பவானி சாகர் காவல்நிலையத்தில் வீரப்பனின் கூட்டாளியான சந்திர கவுடா என்பவரின் புகைப்படத்தை கண்டெடுத்தோம். அங்கு பெற்றுக்கொண்ட சில தகவல்களின் மூலம் சந்திர கவுடாவின் சொந்த ஊரையும் தெரிந்து கொண்டோம். அடுத்த நாள் அங்கிருந்தோம்.


அந்த ஊரில் ஒரு கோவில் இருந்தது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கூரை வீடு. அதில் ஒரு மூதாட்டி. அவர்தான் சந்திர கவுடாவின் தாயார்!

எங்கள் கேள்விகளுக்கு விட்டேத்தியாக பதில் சொன்னார். சந்திர கவுடா வீட்டைவிட்டு வெளியேறி விட்டதாகவும், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாதென்றும் கூறினார். மேலும், சந்தன வீரப்பனின் கூட்டத்தில் சேர்ந்து விட்டதாக காவல்துறை கூறித்தான் தனக்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.

எங்களுடன் வந்திருந்த காவல்துறை அதிகாரிக்கோ சந்திர கவுடா அந்த கூரை வீட்டுக்குள் ஒளிந்திருக்கலாம் என்று சந்தேகம். எனவே அந்த மூதாட்டியிடம் பல்வேறு விதமாக பேச்சுக்கொடு்த்து வீட்டுக்குள் நோட்டம் விட்டார். சந்திர கவுடா இருந்தால் அவரை சுட்டாவது பிடிக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அது நடந்துவிட்டால் ஒரு எக்ஸ்க்ளூசிவ் செய்தி கிடைக்குமே என்பது என்னுடன் வந்த நிருபரின் எண்ணம். ஆனால் காவல்துறையின் ஆட்காட்டியாக செய்தியாளர்கள் மாறிவிடக்கூடாது என்று நான் விரும்பினேன். எனவே எங்களால் சந்திரகவுடா சிக்கக்கூடாது: அதை தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று முடிவெடுத்தேன். அதை உணர்ந்து கொண்ட புகைப்படக்காரர் நெளியத் தொடங்கினார். என்னிடம் சாடையில் எதையோ உணர்த்த முயன்றார். ஆனால் நான் அதை கேட்கும் நிலையிலோ, பரிசீலிக்கும் நிலையிலோ இல்லை. என் முடிவில் உறுதியாக இருந்தேன். எனவே புகைப்படக்காரரை பார்ப்பதையே தவிர்த்துவிட்டேன். அன்றைய நிலையில் நான் உயிர் விளையாட்டுக்கே தயாராக இருந்தேன் என்றே சொல்லலாம்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நாங்கள் அப்பகுதியில் இருந்தாலும், அந்த குடிசை வீட்டினுள் நுழைய சந்திர கவுடாவின் தாய் இடம் கொடுக்கவில்லை. வீட்டினுள் வேறு யாரும் இருப்பதற்கான வாய்ப்பும் இல்லை எனத் தெரிந்தது. காவல்துறை அதிகாரியும், என் சக நிருபரும் ஏமாற்றத்துடனும், நான் மகிழ்ச்சியுடனும், புகைப்படக்காரர் நிம்மதியுடனும் அங்கிருந்து கிளம்பினோம்.

என் மனநிலையை புரிந்து கொண்ட காவல்துறை அதிகாரி என்னிடம் பேசத்தொடங்கினார். வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் சட்டத்தின் முன் குற்றவாளிகள் என்றும் அவர்களை பிடிக்க உதவி செய்வதுதான் ஒரு சட்டம் படிக்கும் குடிமகனின் கடமை என்றும் கூறினார்.

அதை ஏற்றுக்கொண்ட நான், செய்தியாளர்களுக்கு என்று தொழில் சார்ந்த அறங்கள் உள்ளன: அதன்படி காவல்துறையினருக்கு ஆட்காட்டியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றேன். இந்த வீரப்பன் தனியாக சந்தன மரங்களையும், யானைத்தந்தங்களையும் கடத்தியிருக்க முடியாது. காட்டில் இருக்கும் வீரப்பனுக்கு நாட்டில் இருக்கும் பலர் உதவி இருப்பார்கள். அவர்களில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நிச்சயம் இருப்பார்கள். அவர்கள் குறித்து நீங்கள் என்ன விசாரணை நடத்தினீர்கள். அவர்களையும் சுட்டுத்தள்ளுவீர்களா? என கேள்வி எழுப்பினேன்.

என்னுடன் வந்த நிருபரும், புகைப்படக்காரரும் இந்த விவாதம் மேலும் சூடுபிடிக்காமல் திசை திருப்பினர். பிறகு நடந்த பேச்சில் அந்த காவல்துறை அதிகாரி நேர்மையானவர் என்று புரிந்து கொள்ள முடிந்தது. அவரது உயிரை பணயம் வைத்த கதையொன்றை அவர் சொன்னார்.

...தொடரும்

தொடர்புடைய பதிவுகள்:

சந்தன வீரப்பனை பிடிப்பதற்காக உயிரை பணயம் வைத்த அதிகாரி!

12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

super

நிகழ்காலத்தில்... சொன்னது…

நன்றாக எழுதி உள்ளீர்கள்

மனதில் எழுந்த உணர்வுகளை உள்ளது உள்ளவாறே எழுத்தாகி உள்ளது

வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை சொன்னது…

நன்றாக இருக்கிறது...தொடர்ந்து எழுதுங்கள்!!

Jennifer John சொன்னது…

Is this post reflects your past experience or its a continuance of your past postings?

Because it can be interpreted in both ways.

However it is nice. Keep writing.

சுந்தரராஜன் சொன்னது…

கருத்துரைத்த பெயரில்லா நண்பர், நிகழ் காலத்தில்... , சந்தனமுல்லை, Jennifer John ஆகியோருக்கு நன்றி.

தமிழ்மணம் பதிவுப்பட்டை, தமிழிஷ் ஆகியவற்றில் வாக்களித்தவர்களுக்கும் நன்றி.

சரவணகுமரன் சொன்னது…

நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். ஆவலுடன் இருக்கிறேன்.

யுவகிருஷ்ணா சொன்னது…

எந்தப் பத்திரிகையாளரும் எழுதத் தயங்கும் கோணம். தொடர்ச்சியாக வாசிக்க ஆவலோடு இருக்கிறேன்

True Patriotic Indian சொன்னது…

//இந்த வீரப்பன் தனியாக சந்தன மரங்களையும், யானைத்தந்தங்களையும் கடத்தியிருக்க முடியாது. காட்டில் இருக்கும் வீரப்பனுக்கு நாட்டில் இருக்கும் பலர் உதவி இருப்பார்கள். அவர்களில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நிச்சயம் இருப்பார்கள். அவர்கள் குறித்து நீங்கள் என்ன விசாரணை நடத்தினீர்கள். அவர்களையும் சுட்டுத்தள்ளுவீர்களா?//

What do you mean?

Our judicial system may not that much efficient to bring the politicians and authorities to book, for that it is fair to let the brigands free?

Its good news that, you crooked people has left the media. So the poisonous ideologies are quarantined.

Ever you think about the human rights of patriotic persons who are serving in police and armed forces?

You, persons like arguing this way should not be permitted to live in this country!

ரவி சொன்னது…

தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.........

சுந்தரராஜன் சொன்னது…

சரவணகுமரன், யுவகிருஷ்ணா... நன்றி!

True Patriotic Indian...

//Our judicial system may not that much efficient to bring the politicians and authorities to book, for that it is fair to let the brigands free?//

இல்லை. தவறிழைக்கும் எளிய மக்களுக்கு விசாரணை இன்றியே தண்டனையும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தவறுக்கு பரிசாக பதவியையும், மேலும் அதிகாரத்தையும் வழங்குவதுதான் நியாயமா என்று கேள்வி எழுப்புகிறேன்.

//Its good news that, you crooked people has left the media. So the poisonous ideologies are quarantined.//

நான் மீடியாவில் இருந்தபோதும் இதை வெளிப்படுத்த முடியவில்லை. அதனால்தான் நான் வெளியேறினேன் என்றுகூட சொல்லலாம். ஆனால் கருத்துகளை பரப்ப வெகுமக்கள் மீடியாக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று தவறாக நம்பி மகிழ்ச்சி அடைய வேண்டாம்.

Ever you think about the human rights of patriotic persons who are serving in police and armed forces?

நிச்சயமாக. மனசாட்சியுடன் நேர்மையாக வாழும், வாழ விரும்பும் அதிகாரிகளை ஊழல்மயமான ஆட்சியதிகாரத்தின் கொடுங்கரங்களில் இருந்து காப்பாற்றுவதை முடிந்த அளவு எந்த நாளும் செய்து வருகிறோம்.

காவல்துறையினரும், ராணுவப்படையினரும் தொழில்ரீதியான ஆபத்துகளை புரிந்துகொண்டே அந்த பணியில் சேருகின்றனர். அந்த ஆபத்துகளுக்காக கூடுதல் சலுகைகளை அனுபவிக்கின்றனர். மேலும் அவர்களது உரிமைகளை பாதுகாக்க அரசு அமைப்புகள் எந்த எல்லைக்கும் செல்கின்றன. இந்த ஆயுதம் தரித்த காவல் மற்றும் ராணுவப்படையினரின் அத்துமீறல்களுக்கு பலியாவோருக்குதான் மனித உரிமை அமைப்புகள் உதவி செய்கின்றன. இது சட்டரீதியானது.

காவல்துறை, ராணுவப்படையினரின் மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் முன்னர், உங்கள் உண்மையான அடையாளத்தோடு வெளிவருவதற்கான துணிவைப் பெறுங்கள். அதன் பிறகு என்னை நாட்டுக்குள் வாழ அனுமதிப்பதா, இல்லையா என்பதை விவாதிப்போம்.

மா.குருபரன் சொன்னது…

மனதில் பட்டதையும் அனுபவத்தையும் நன்றாக எழுதியுள்ளீர்கள்.

மோகனரூபன் சொன்னது…

ஆகா,அற்புதமானத் தொடக்கம். நல்ல எழுத்து நடை. பிரமாதம். தொடர்ந்து எழுதுங்கள்.

கருத்துரையிடுக