31 அக்டோபர், 2009

சந்தன வீரப்பனை பிடிப்பதற்காக உயிரை பணயம் வைத்த அதிகாரி!

[ இதற்கு முந்தைய பதிவு "சந்தன வீரப்பனை தேடிப்போன செய்தியாளனின் கதை..." படித்துவிட்டு இந்த பதிவை படித்தால் முழுமையாக புரியலாம். :) ]

வீரப்பனை தேடும் பணியில் செயல்பட்ட சிறப்பு அதிரடிப்படையில் பணியாற்றிய பலரும் இளைஞர்கள். திருமணம் ஆகாதவர்கள். கடும் பயிற்சி காரணமான உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளானவர்கள். இவர்களுக்கு வீரப்பனை தேடும் அதிரடிப்படையில் பணி என்பது மண்ணில் தோன்றிய சொர்க்கமாக இருந்தது. கடும் பயிற்சிகளுக்கு பதிலாக ஓரளவு ஓய்வு கிடைத்தது. மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படிந்தே பழகியவர்களுக்கு மலைவாழ் பழங்குடி மக்களையும், மற்றவர்களையும் அதிகாரம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. அப்பகுதியில் இருந்த அனைத்தும் மனிதர்கள் உட்பட அதிரடிப்படையினருக்கு உரியதானது.

எந்த வீட்டிலும் நுழையலாம். எதையும் எடுக்கலாம். எப்படியும் பயன்படுத்தலாம். பிறகு அழிக்கலாம். சின்னாபின்னப்படுத்தலாம். யாரும் கேட்க மாட்டார்கள். யாருக்கும், எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. (மேலும் விவரம் தேவைப்படுபவர்கள் வழக்கறிஞர் ச. பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி என்ற நாவல் வடிவிலான வரலாற்றுப் பதிவினை தேடிப்படிக்கலாம்)

குடும்பத்தை பிரிந்து, கடும் உடற்பயிற்சிகளிலும், மேலதிகாரிகளின் ஈவு, இரக்கமற்ற நடைமுறைகளிலும் உடலும், மனமும் முரடாகிப்போன அதிரடிப்படை இளைஞர்களின் வக்கிர உணர்வுகளுக்கு தீனிபோடும் இடமாக அந்த வனப்பகுதி மாறிப்போனது.

(இவர்கள் செய்த வன்முறைகள் குறித்து புகார்கள் இருந்தாலும் சாட்சியங்கள் இல்லாததால் யாருக்கும் தண்டனை கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக வீரப்பன் கொல்லப்பட்டபோது பதக்கங்களும் பரிசுகளும் கிடைத்தன. மனிதர்கள் உருவாக்கிய சட்டங்கள் இவர்களை தண்டிக்காவிட்டாலும், இயற்கை இவர்களில் சிலரை தண்டித்தது. எய்ட்ஸ் நோய் கடுமையாக நோக்கி உருக்குலைந்து, சீரழிந்து மறைந்து போனவர்களில் சிலர், இந்த அதிரடிப்படையில் பணியாற்றியவர்கள் என்று மருத்துவ நண்பர்கள் கூறியபோது அவர்களின் மறைவுக்கு நான் வருந்தவில்லை)

ஆனால், எங்களுடன் சுற்றிய க்யூ பிரிவு அதிகாரியோ முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார். இனி அவரை மிஸ்டர் எக்ஸ் என்று அழைப்போம். எங்கள் செலவில் தேநீர் குடிக்கக்கூட தயங்கினார். மேலும் மதுப்பழக்கம் அறவே இல்லாதவராகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாதவராகவும் தோன்றினார். உரிய கண்காணிப்புகள் இருக்கும் நிலையிலேயே கடமை தவறும் அதிகாரிகளை பார்த்துப்பழகிய எங்களுக்கு, கண்காணிப்பே இல்லாத நிலையிலும் உயிருக்கும் துணிந்து கடமை செய்த அவர் ஒரு அதிசயப்பிறவியாக அவர் தோன்றினார். எனினும், செய்தியாளர்கள் காவல்துறையின் ஆட்காட்டியாக மாறக்கூடாது என்ற எனது நிலைப்பாட்டில் சமரசம் செய்துகொள்ளாமல் அதை வெளிப்படையாக கூறிவிட்டு அவருடன் பழக ஆரம்பித்தேன்.

காவல்துறையினரின் மனிதத்தன்மையற்ற நடத்தைகளுக்கு காரணம் என்ன? என்று கேட்டபோது, கீழ்நிலைக் காவலர்களுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப்படுவதால் அவர்களுக்கு அடுத்தவர்களின் உரிமை குறித்த கவனமோ, கவலையோ இருப்பதில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிந்தே பழகிப்போன அவர்களுக்கு, அவர்களைவிட கீழான மக்களை பார்க்கும்போது, அதிகாரம் செய்துபார்க்க வேண்டும் என்ற ஆவல் அத்துமீறி ஏற்படுவதால் பல அத்துமீறல்கள் ஏற்படுகின்றன என்ற உளவியல் ரீதியான காரணத்தையும் கூறினார்.
வீரப்பனை தேடும் பணியில் அவருடைய வித்தியாசமான அனுபவங்களை கேட்டபோது பல அனுபவங்களை கூறினார். வீரப்பனின் கூட்டாளி சந்திர கவுடாவின் வீட்டருகே இருக்கும் கோவிலில் திருவிழா அந்தப் பகுதியில் மிகவும் முக்கியமானது. மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில் அந்தப் பகுதியே குலுங்கிப் போகும். அந்த விழா நாட்களில் வீரப்பன் அந்த கோவிலுக்கு வருவதாக இந்த மிஸ்டர் எக்ஸூக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

ஒற்றை ஆளாக அந்த திருவிழாவில் அன்னாசிப்பழ கடை வைத்திருக்கிறார் இவர். அந்த வேடத்திலேயே கோவிலுக்கு வந்து செல்லும் அனைவரையும் கண்காணிக்கவும் செய்திருக்கிறார். அவரிடம் இருந்த ஒரே ஆயுதம் கைத்துப்பாக்கி மட்டுமே. துணைக்கு யாரும் கிடையாது. சீருடை அணிந்த அதிரடிப் படையினருக்கும் இவர் யார்? என்பது தெரியாது.

திருவிழாவிற்கு வீரப்பன் வந்தாரா? என்பது தெரியவில்லை. ஆனால் வீரப்பனின் நண்பர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலர் வந்துள்ளனர். வீரப்பன் எப்படியும் வருவார் என்று சீருடை அணியாத ஏராளமான காவலர்கள் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர். அன்னாசிப்பழ வியாபாரி வேடத்தில் இருந்த மிஸ்டர் எக்ஸ்-ம் அமைதியாக உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கா காத்திருந்தார். இதற்கிடையில் சீருடை அணியாத ஆனால் காவல்துறை அடையாளத்தை மறைக்கமுடியாத காவலர்களால் வீரப்பன் எச்சரிக்கை அடைந்துவிட்டதாக கூறப்பட்டது. வீரப்பனின் ஆட்கள் என்று நம்பப்படும் சிலருக்கும், சீருடை அணியாத காவலர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரண்டு பக்கமும் இல்லாமல் தனியாக உளவு பார்த்த மிஸ்டர் எக்ஸ் மீது இரு தரப்புக்கும் சந்தேகம் ஏற்படவே உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பியோடும் நிலையும் ஏற்பட்டது.
இந்த ஆபத்தில் தப்பிய மிஸ்டர் எக்ஸ்-க்கு மற்றொரு மிகப்பெரிய ஆபத்தும் ஏற்பட்டது.

வீரப்பன் இருந்த காட்டின் பல பகுதிகள் மிகவும் அடர்த்தியானது. சுமார் 10 அடிகளுக்கு அப்பால் யாரும் இருந்தால் அது நமக்கு தெரியாது. அந்த அளவுக்கு அடர்த்தியானது.

மூலிகை ஆய்வாளர், துறவி, அன்னாசிப்பழ வியாபாரி போன்று பல்வேறு அவதாரங்களில் தோன்றி அவர் அப்பகுதியில் சுற்றித்திரிந்து துப்பு துலக்கியுள்ளார். அப்போது, வீரப்பன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாக மிஸ்டர் எக்ஸ்-க்கு தகவல் கிடைத்துள்ளது. வழக்கம்போல தன்னம்தனியாக இவர் கிளம்பிவிட்டார். அந்த தகவல் சரியோ, தவறோ இவரிடம் வீரப்பன் சிக்கவில்லை. ஆனால் இவர் வழி தவறிவிட்டார். பல மணி நேரம் நடந்த பிறகு, தாம் நடக்கும் பாதை சரிதானா? என்ற சந்தேகம் வந்து விட்டது. காட்டை விட்டு வெளியே வருவதாக நினைத்து, எதிர் திசையில் காட்டுக்குள் செல்கிறோமோ? என்ற ஐயம் வேறு. கையில் இருந்த உணவுப் பொருட்களான உலர் பழங்களும், குடிநீரும் வேறு தீர்ந்து விட்டது. உடலும், உள்ளமும் களைப்படைய தொடங்கியது. பசியும், தூக்கமும் கண்களை அடைக்கத் தொடங்கியிருக்கிறது.

வீட்டில் இருக்கும் மனைவியும், மக்களும் நினைவில் வரத்தொடங்க மிஸ்டர் எக்ஸ்க்கு, வாழ்வின் இறுதிக்காலத்தை எட்டிவிட்டோமோ? என்ற ஐயமும் எழ ஆரம்பித்திருக்கிறது. இவ்வாறான குழப்பநிலையில் மேலும் சில தினங்கள் கழிந்தன, உணவுக்கும்-குடிநீருக்கும் வழியின்றியே! மரண தேவன் அருகில் வருவதாக உணர்ந்த மிஸ்டர் எக்ஸ், உடல் சக்தியை சேமிப்பதற்காக தூரமாக நடப்பதை கைவிட்டிருக்கிறார்.

அப்போது அப்பகுதியில் மனித அரவம் கேட்கவே காதைத் தீட்டியிருக்கிறார். பழங்குடி இனத்தை சேர்ந்த ஒரு நபர் அந்த பக்கமாக வருவது தெரியவே, சக்தியை குவித்து அவரை அழைத்திருக்கிறார்.
அந்த பழங்குடியின நபரும் இவர் அருகே வந்து விசாரிக்க, தன்னை மூலிகை ஆராய்ச்சியாளன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வழி தவறி வந்துவிட்டதாக கூறுகிறார். மேலும் தன்னிடம் இருந்த உணவும், நீரும் தீர்ந்துவிட்டதாகவும், தன்னை காட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்ல முடியுமா என்றும் கேட்கிறார். அதற்கு, காட்டை விட்டு வெளியேற மேலும் சில நாட்கள் நடக்க வேண்டும் என பதில் வருகிறது. இதனால் மனம் உடைந்த மிஸ்டர் எக்ஸ், தனது உடல்நிலை அதைத்தாங்குமா? எனத் தெரியவில்லை என்றும், ஒரு வேளை தாம் இறந்துவிட்டால், உடலில் கயிறை கட்டி இழுத்தாவது சென்று அருகிலுள்ள காவல் நிலையம் எதிரே போட்டுவிடுமாறும் கேட்டுக் கொள்கிறார்.

அந்த பழங்குடி இன நபரோ, நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று கூறி, மிஸ்டர் எக்ஸ்-ஐ அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு சற்றுநேரம் சுற்றித்திரிந்து சில தாவர இலைகளோடு வருகிறார். கூடவே சிறிது தண்ணீரும். தாவர இலைகளை அங்கிருந்த பாறைகளில் வைத்து அரைக்கிறார். அது ஒரு லேகியம் போல திரள்கிறது. அதை உருண்டையாக உருட்டி மிஸ்டர் எக்ஸ்-இடம் கொடுத்து உண்ணச் சொல்கிறார். மிஸ்டர் எக்ஸ்-க்கோ, வீரப்பனே எதிரே வந்து நச்சுத் தாவரங்களை உருட்டித் தருவதாக தோன்றுகிறது. எனவே அதை உட்கொள்ள தயங்குகிறார். இந்த தயக்கத்தை புரிந்து கொண்ட பழங்குடி நபர் அந்த உருண்டயை பாதியாக பிரித்து தனது வாயில் போட்டுக்கொண்டு சிரிக்கிறார். அந்த சூழ்நிலையில் வேறு வழியின்றி மீதி உருண்டையை வாயில் போட்டு தண்ணீரை அருந்துகிறார், மிஸ்டர் எக்ஸ். சில நிமிடங்களில் அவர் உடலில் சக்தி ஏற்படுகிறது. நடக்கத் தொடங்குகின்றனர். மேலும் சில நாட்கள் நடந்த பின்னர் காட்டைவிட்டு வெளியேறுகின்றனர். அதுவரை மிஸ்டர் எக்ஸ்-க்கு தண்ணீர் தாகமோ, பசியோ, தூக்கமோ வரவில்லை. உடலின் சக்தி சற்றும் குறையவும் இல்லை. அந்த பழங்குடி நபர் கொடுத்த மூலிகையே அனைத்தையும் சமாளிக்கிறது.

காட்டை விட்டு வெளியே வந்த மிஸ்டர் எக்ஸ், பழங்குடி நபரிடம் விடை பெறுகிறார். அப்போது பழங்குடி நபர், விடை கொடுப்பதோடு குளிக்கும் வரை தூக்கமோ, பசியோ வராது. எனவே பசியாறவும், தூங்கவும் வாய்ப்பிருக்கும்போது மட்டும் குளிக்குமாறு கேட்டுக்கொள்கிறார். தமது அறைக்கு வந்த மிஸ்டர் எக்ஸ் குளித்த பின் உணவை உட்கொண்டு, தூங்கி எழவே அவரது உடல் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

அப்போதுதான் பழங்குடி இன மக்கள், காடுகளைப் பற்றியும், காட்டுத் தாவரங்களை பற்றியும் எவ்வளவு அறிவை பெற்றுள்ளனர் என்பதை குறித்து மிஸ்டர் எக்ஸ் சிந்திக்கிறார். சாதாரணமாக சுற்றித்திரியும் பழங்குடி மக்களுக்கே இந்த அறிவு இருந்தால், உயிரைக்காப்பாற்றிக் கொள்வதற்காக வனத்தில் மறைந்திருக்கும் வீரப்பனுக்கு காடுகளைப்பற்றி எவ்வளவு அறிவு இருக்கும்? என்ற ஐயமும் அவருக்கு ஏற்படுகிறது. தனக்கு வித்தியாசமான அனுபவம் ஒன்றைக்கொடுத்து, எதிரிகளை பார்க்காமலே மரண பயத்தை அனுபவிக்கவைத்த வீரப்பனுக்கு நன்றி சொல்லிவிட்டு தமது பணிகளை தொடர்ந்தார், மிஸ்டர் எக்ஸ்.
----
மது நேர்மையான வாழ்க்கையையும், சந்தித்த இக்கட்டான சூழ்நிலைகளையும் விவரித்த மிஸ்டர் எக்ஸ், எங்களிடமிருந்து பிரிந்து வேறு திசையில் செல்வதாகக் கூறினார்.

முதல்முறையாக அவரிடம் சிரித்து பேசி வழியனுப்பி வைத்தேன். என்னுடன் இருந்த நிருபருக்கோ க்யூ பிரிவு போலிஸ் அதிகாரியை பிரிவதில் பெரும் வருத்தம்.

அவரை பிரிந்த பின்னும் நாங்கள் வனப்பகுதிகளில் சுற்றுவதை நிறுத்தவில்லை. வீரப்பன் வழக்கமாக சாமி கும்பிடும் கோவிலை காட்டுவதாக எங்கள் சோர்ஸ் ஒருவர் கூறியதை அடுத்து நாங்கள் மேற்கொண்ட பயணம் எங்கள் குழுவினருக்கும் மரண பயம் என்றால் என்ன என்பதை அறிமுகப்படுத்தியது.

4 கருத்துகள்:

சுந்தரராஜன் சொன்னது…

இதற்கு முந்தைய பதிவை படித்துவிட்டு இந்த பதிவை படித்தால் முழுமையாக புரியலாம். :)

பெயரில்லா சொன்னது…

சென்ற பதிவில் இருந்த "பெப்" இதில் இல்லைபோல் தோன்றுகிறது. நீங்கள் ஏன் சட்டம், நீதிமன்றம் தொடர்பான அனுபவங்களை எழுதக்கூடாது? :))))

சுந்தரராஜன் சொன்னது…

//பெயரில்லா சொன்னது…
சென்ற பதிவில் இருந்த "பெப்" இதில் இல்லைபோல் தோன்றுகிறது. நீங்கள் ஏன் சட்டம், நீதிமன்றம் தொடர்பான அனுபவங்களை எழுதக்கூடாது? :))))//

அதை மக்கள் சட்டத்தில் எழுதலாம் என்பதால், இதில் வேறு விசயங்களை எழுத முயற்சித்தேன். மேலும் ஊடக விமர்சனங்கள் என்பது காலத்தின் கட்டாயமாக படுகிறது. எனவே மீடியாவின் இயங்கியல் தெரிந்த காரணத்தால், நானே வலையுலகத்தில் அதனை முன்மொழி்ந்து ஒரு விவாதத்தை தொடங்க உத்தேசம்.

அதற்கான ஆயத்தப்பணியாக அல்லது என்னை ஆசுவாசப்படு்த்தும் வகையில் கொஞ்சம் சொந்தக்கதையையும், கேட்ட கதையையும் எழுதிவிட்டேன்.

எனினும் உங்கள் கருத்துகளை பரிசீலிக்கிறேன்.
(ஒரு கோரிக்கை: தங்கள் பெயருடனே கருத்துரைக்கலாமே)

தமிழ். சரவணன் சொன்னது…

//குடும்பத்தை பிரிந்து, கடும் உடற்பயிற்சிகளிலும், மேலதிகாரிகளின் ஈவு, இரக்கமற்ற நடைமுறைகளிலும் உடலும், மனமும் முரடாகிப்போன அதிரடிப்படை இளைஞர்களின் வக்கிர உணர்வுகளுக்கு தீனிபோடும் இடமாக அந்த வனப்பகுதி மாறிப்போனது.//

ஆம் இவர்களிடம் மனித தன்மை என்ற உணர்வு அற்றுப்போனவர்கள்.. இவர்கள் தடியடிநடத்தும் பொழுது கர்பிணின்பெண்னோ அல்லது வயதான தாய்தந்தையர்களோ பார்த்தால் கூட சூரையாடுவார்கள். பாதுகாப்பு அளிக்கின்றோம் என்ற பெயரில் இதுபோல் இளைஞர்களை மனிததன்மை யற்றவர்களாக்கி மனிதம் சூரையாடுவார்கள்

//இவர்கள் செய்த வன்முறைகள் குறித்து புகார்கள் இருந்தாலும் சாட்சியங்கள் இல்லாததால் யாருக்கும் தண்டனை கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக வீரப்பன் கொல்லப்பட்டபோது பதக்கங்களும் பரிசுகளும் கிடைத்தன. மனிதர்கள் உருவாக்கிய சட்டங்கள் இவர்களை தண்டிக்காவிட்டாலும், இயற்கை இவர்களில் சிலரை தண்டித்தது. எய்ட்ஸ் நோய் கடுமையாக நோக்கி உருக்குலைந்து, சீரழிந்து மறைந்து போனவர்களில் சிலர்,//

ஆம் உண்மைதான் இதுபோல் தான் "முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்" என்ற பழமொழிகளுக்கு ஏற்ப அப்பாவிகளை மிரட்டி பிச்சையெடுத்து பிழைக்கும் குண்டர்கள், கட்டப்பஞ்சாயத்து நீதிபதிகளும் அவர்களுக்குள்ளாகவே அடித்துக்கொண்டு சாவர்கள் (உதாரணத்திற்கு புழல் சிறையில் நடத்த கொலை) அல்லது காவல்துறையினரால் சுட்டுக்கொள்ளப்படுவார்கள்...

//காவல்துறையினரின் மனிதத்தன்மையற்ற நடத்தைகளுக்கு காரணம் என்ன? என்று கேட்டபோது, கீழ்நிலைக் காவலர்களுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப்படுவதால் அவர்களுக்கு அடுத்தவர்களின் உரிமை குறித்த கவனமோ, கவலையோ இருப்பதில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.//

கருத்துரையிடுக