ஈழப்போரின் உக்கிர நிலையில் மற்றவர்களைப்போலவே உள்ளம் கொதித்தவர்களில் சில பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் துரோகம் குறித்து பேசுவதற்கு ஆயிரம் சங்கதிகள் இருந்தும், அதற்கான களம் அமையாத நிலை. தமிழ்நாட்டின் அரசியல் சூழல், அதை அனுசரித்து இருக்கவேண்டிய ஊடகச்சூழல் காரணமாக பல செய்திகள் பதிவு செய்யப்படாமல் மரித்துப் போயின.

செய்தியாளர்களில் சிலர், பணியாற்றும் ஊடகங்களில் பகிர முடியாத சங்கதிகளை மின்-ஊடகங்களில் பகிர்ந்தனர். போருக்கு முன்னதாகவும், பின்னரும் இது குறித்து அக்கறையும், ஆர்வமும் கொண்ட பல பத்திரிகையாளர்கள் “ஏதாவது செய்ய வேண்டும்” என்ற எண்ணம் கொண்டிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக “போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அமைப்பு” என்ற பெயரில் கூட்டுச்செயல்பாடுகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. பிறகு தமிழர்களுககே உரிய ஒற்றுமை காரணமாக இந்தப் பெயரில் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
இதற்கிடையே விகடன் குழுமத்தில் பணியாற்றிய திரு. த. செ. ஞானவேல் மற்றும் சில நண்பர்கள் ஈழப்போர் குறித்த புகைப்படங்களையும், அந்தப் படங்கள் குறித்த பிரபலங்களின் கருத்துகளையும் திரட்டி வெளியிடுவதற்கு திட்டமிடுவதாக தெரிந்தது.
ஒரு நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த தொகுப்பில் இடம் பெறும் ஜகதீஷ் என்ற ஜக்கி வாசுதேவ், நடிகை நந்திதா தாஸ், மு. அனந்தகிருஷ்ணன் ஆகியோரின் கருத்துகளை தமிழாக்கி கொடுக்கும் வேலையும் செய்தேன்.
இந்தப் பணியில் ஈடுபட்ட அனைவருமே ஈழப்பிரசினையில் உண்மையான அக்கறையும், ஈடுபாடும் கொண்டவர்கள் என்பதில் எனக்கு எள் முனையளவும் ஐயமில்லை. இவர்களில் நான் நன்கறிந்த அனைவரும் பெரியாரிய மற்றும் பொதுவுடைமை கருத்துடையவர்கள்.
-----
"ஈழம்: மெளனத்தின் வலி" என்ற நூல் இறுதி வடிவம் பெற்று, வெளியீட்டுக்கான நாள் குறிக்கப்பட்டு எனக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பிதழும் வந்தது. “நாம்” என்ற அமைப்பும், நல்லேர் பதிப்பகமும் இணைந்து அந்த நூலை வெளியிடுவதாக நான் புரிந்து கொண்டேன்.
14-11-09 சனிக்கிழமை! சில நாட்களாக விட்டிருந்த மழை மீண்டும் அடித்துப் பெய்தது. ரெயின் கோட் சகிதமாக அரங்கிற்கு சென்றேன். அரங்கு ஏறக்குறைய நிறைந்திருந்தது. ஈழப்பிரசினை குறித்த நிகழ்ச்சிக்கு வழக்கமாக வருபவர்களை காணோம். அதற்கு பதிலாக உயர்நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களும், பெண்களும், ஆண்களும் அரங்கை ஆக்கிரமித்திருந்தனர்.
அரங்கின் வெளியே நக்கீரன் பத்திரிகையில் இலங்கைப் பிரசினை குறி்த்து தொடர்ந்து எழுதும் ஜகத் கஸ்பார் நின்று கொண்டு விஐபிக்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். ஜகதீஷ் என்ற ஜக்கி வாசுதேவ், நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் வரவே நிகழ்ச்சி தொடங்கியது. அரங்கின் முதல் தளத்தில் பத்திரிகை நண்பர்கள் இருவருடன் அமர்ந்திருந்தேன். ஏராளமான கூட்டம் சேர்ந்திருந்தது.
நிகழ்ச்சி தொடங்கியது.
"ஈழம்: மெளனத்தின் வலி" தொகுப்பிலிருந்து சில கவிதைகளை நடிகர் சிவகுமார் வாசித்தார். தொடர்ந்து திரைப்பட இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ், நடிகர் பிரகாஷ் ராஜ், பாதிரியார் சின்னப்பா ஆகியோர் பேசினர்.
"சத்குரு"வின் பெயர் உச்சரிக்கப்பட்டபோதெல்லாம் அரங்கில் இருந்த அவரது ரசிகர்கள் (அல்லது) பக்தர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஈழப்பிரசினை குறித்து சென்னையிலேயே பல நிகழ்ச்சிகள் நடந்தபோதெல்லாம் திரும்பிக்கூட பார்த்திராத உயர்நடுத்தர வர்க்க மக்கள் அனைவரும் சத்குருவின் சீடர்கள் என்பது அப்போதுதான் புரிந்தது. ரஜினிகாந்த், அப்துல் கலாம் ஆகியோரைவிட பிரபலமாக ஜக்கி இருப்பது தெரிந்தது.

தொடர்ந்து நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பேசினார். அவரது பேச்சு வழக்கம்போல, ஈழப்பிரசினை குறித்த மக்களின் உணர்வுகள் திமுகவிற்கு எதிராக திரும்பிவிடாமல் திசைதிருப்பும் நோக்கிலேயே இருந்தது. ஈழத்தில் கொல்லப்பட்டது தமிழர்கள் என்பதால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். (மத்திய அரசில் இடம் பெற்ற தமிழக அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்று சொல்லவில்லை) தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கு ஆதரவளித்த தமிழக அரசியல் தலைவர்களை கிண்டல் செய்தார். குறைந்தபட்சமாக இந்த கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அனைத்திந்திய ஊடகங்கள் ஈழச்செய்திகளை இருட்டடிப்பு செய்ததை வருத்தத்தோடும், கோபத்தோடும் பதிவு செய்தார். (தமிழகத்தின் பிரதான தொலைக்காட்சிகளும் அந்த நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்ததை குறிப்பிட அவர் மறந்து விட்டார்).
இறுதியாக ஜகதீஷ் என்ற “சத்குரு” ஜக்கி வாசுதேவ் சுமார் 40 நிமிடங்கள் அருள்வாக்கு வழங்கினார். அனைவரும் பேசிய இடத்திலிருந்து, (அந்த இடம் தீட்டாகி இருக்கும் போலிருக்கிறது) மைக்கை வேறு இடத்திற்கு மாற்றிப்போட்டு பேச்சைத் தொடங்கினார். ஈழத்துப் பிரசினைகளை குறிப்பிட்டு பேச்சைத் தொடங்கிய அவர் என்னென்னவோ பேசினார்.

போராட்ட உணர்வே மக்களுடைய அமைதிக்கு எதிராக இருப்பதாக கூறினார். போராடுவது என்று முடிவெடுத்தால், போராட்டங்களுக்கு முடிவே இருக்காது. இதனால் மனிதனின் வாழ்வு பெரும் சோகமாகவே இருக்கும். ஒரு பிரசினையால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு எதிராக போராடும்போது, மற்றொரு தரப்பு பாதிக்கப்படும். பிறகு அந்த தரப்பு போராடும். எனவே போராடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
அநீதிக்கு எதிராக உன் ரத்தம் கொதி்த்தால் நீயும் நானும் சகோதரர்கள் என்று “சே குவேரா” கூறியதாக குறி்ப்பிட்ட “சத்குரு”, இது மிகவும் தவறான கருத்து என்று குறிப்பிட்டார்.

சே குவேராவின் கூற்றிற்கு எதிராக இருத்தலே நல்லது என்று கூறிய சத்குரு, சே குவேராவின் கருத்திற்கு எதிரான கருத்து கொண்டவர்கள் தமது சகோதரர்கள் என்று பிரகடனம் செய்தார்.
சத்குருவின் இந்த வார்த்தைகள் ஏதும் அவரது ரசிகர்கள் (அல்லது) பக்தர்களின் காதுகளில் விழுந்ததா என்பதே தெரியவில்லை. ஏறக்குறைய அவர்கள் அனைவருமே பரவச நிலையில் இருந்தனர்.

பலர் வாய் கொள்ளாத சிரிப்பு அல்லது தாளமுடியாத அழுகையில் இருந்தனர். அவர்களது மனநிலை குறித்து ஆராய்வதற்கு மனநிலை மருத்துவர்கள் யாரும் இல்லாததால் மேற்கொண்டு வர்ணிக்க முடியவில்லை.
நல்லவேளையாக ஜகதீஷ் என்ற “சத்குரு” ஜக்கி வாசுதேவ், வழக்கமாக புகைப்படத்தில் காட்சியளிப்பதுபோல நடனம் அல்லது வேறு செயல்பாடுகளில் ஈடுபடாமல் அமைதியாக அமர்ந்தார்.
சே குவேரா குறித்த “சத்குரு”வின் கருத்திற்கு மேடையில் இருந்த இன உணர்வாளர்கள் ஏதாவது எதிர்வினை ஆற்றுவார்கள் என்று அரங்கில் இருந்த மிகச்சில இன உணர்வாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மேடையில் இருந்த உணர்வாளர்களும் பரவச நிலையில் இருந்திருக்க வேண்டும் அல்லது அவர்களும் சே குவேரா குறித்த “சத்குரு”வின் கருத்தை ஏற்றிருக்க வேண்டும்.

யாரும் எதுவும் கேட்கவில்லை. மருத்துவர் எழிலனின் நன்றியுரையோடு நிகழ்வு நிறைவடைந்தது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், பக்தர்களுமாய் “சத்குரு” ஜக்கியை வழியனுப்ப காத்திருந்தனர். அழுகையும், சிரிப்புமாய் காத்திருந்த பக்தர்களிடம் விடைபெற்ற ஜக்கியின் கார் விரைந்து வெளியேறியது.
எனினும் ஜக்கியின் தொண்டர்கள் சத்குரு நடத்தும் சில ஆயிரங்கள் கட்டணம் செலுத்தி படிக்கவேண்டிய யோகா வகுப்பு குறித்த விளம்பர துண்டறிக்கைகளை கொடுத்த பின்னரே சென்றனர்.
-----
நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர்கள் சிலரிடம் பேசினேன். நல்ல எண்ணத்தில்தான் இந்த பணியை துவங்கினோம். ஆனால் இந்த அளவுக்கு விமர்சனம் வரும் என்று நினைக்கவில்லை என்றனர்.
நல்ல செயல்களை செய்வதற்கு நல்ல எண்ணங்கள் மட்டும் போதாது என்பது புரிந்தது.