[முதல் இரண்டு பதிவுகளையும் படித்துவிட்டு இந்தப்பதிவை படித்தால் முழுமையாக புரியலாம்! :)
1. சந்தன வீரப்பனை தேடிப்போன செய்தியாளனின் கதை...
2. சந்தன வீரப்பனை பிடிப்பதற்காக உயிரை பணயம் வைத்த அதிகாரி!]
1. சந்தன வீரப்பனை தேடிப்போன செய்தியாளனின் கதை...
2. சந்தன வீரப்பனை பிடிப்பதற்காக உயிரை பணயம் வைத்த அதிகாரி!]
வீரப்பனை தேடி நாங்கள் அந்த வனப் பகுதியில் சுற்றியபோது பலரும் எங்களிடம் இயல்பாக பேசுவார்கள், நாங்கள் வீரப்பன் பேச்சை எடுக்காதவரை. வீரப்பனின் பெயரை நாங்கள் உச்சரித்துவிட்டால் அவர்கள் ஊமைகளாகி விடுவார்கள். என்னுடன் வந்த நிருபருக்கு இது எரிச்சலை ஏற்படுத்தினாலும், அதிரடிப்படையின் அட்டூழியங்களை அறிந்திருந்த எனக்கு அப்பகுதி மக்களின் போக்கை புரிந்து கொள்ளமுடிந்தது.

அப்பகுதியில் உள்ள மிகச்சிலர் வீரப்பன் குறித்து நாங்கள் விசாரிக்கும்போது, “பெரியவர்” இங்கெல்லாம் வர்றதே இல்லைங்க” என்றனர். அவர்களிடம் தொடர்ந்து பேச்சுக்கொடுத்தால் வீரப்பன் நடமாட்டம் இருக்கும் பகுதியாக சில பகுதிகளை சொல்வார்கள். எங்கள் காரில் எங்களுடன் வருவார்கள். அடர்ந்த காடுகளில் சில பகுதிகளை பார்ப்போம். நள்ளிரவில் சாலை வசதி உள்ள வனப்பகுதிகளில் இலக்கின்றி அலைந்ததும் உண்டு.
வீரப்பனை தேடுவதற்காக அப்பகுதியில் முகாமிட்டிருந்த க்யூ பிரிவு அதிகாரி எங்களுடன் இணைந்தபோது, எங்களுடன் தொடர்பில் இருந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் திடீரென்று காணாமல் போய்விட்டனர். ஆனால் அந்த காவல்துறை அதிகாரியுடன் சுற்றியதில் அந்த பழங்குடிகள் காணாமல் போயிருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை. இப்போது அந்த காவல்துறை அதிகாரி எங்களைவிட்டு பிரிந்து சென்றவுடன், காணாமல் போயிருந்த பழங்குடிகள் தாங்களாகவே எங்களைத் தேடி வந்தனர்.

மீண்டும் அவர்கள் மூலம் வீரப்பனை அணுக முயற்சித்தோம். அவர்களும் எங்களுக்கு ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு இடத்தினை சொல்லி, அப்பகுதியில் “பெரியவர்”நடமாட்டம் இருப்பதாக கூறினர். நாங்களும் சளைக்காமல் அப்பகுதியில் தனியாகவோ, அப்பகுதியைச் சேர்ந்தவர்களுடனோ சுற்றினோம்.
திடீரென ஒரு நாள், ஏதோ ஒரு ஊரில் வீரப்பன் இருப்பதாக ஒரு சோர்ஸ் தகவல் கொடுத்தார். மேலும் தானும் உடன் வருவதாகவும், வீரப்பன் அங்கு இருந்தால் சந்திக்க உதவி செய்வதாகவும் கூறினார். உடனே கிளம்பினோம்.
அனேகமாக அது பன்னாரி மாரியம்மன் கோவிலில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் மலைப்பாதையில் மேலே ஏறாமல், வலது புறம் செல்லும் பகுதியாக இருக்க வேண்டும். கார் செல்லக்கூடிய பாதை இல்லாததால், நடந்து செல்ல முடிவெடுத்தோம். ஒற்றையடிப்பாதையில் சில கிலோ மீட்டர்கள் சென்றபின் ஒரு இடத்தில் சற்று தண்ணீர் தேங்கியிருந்தது. முகம் கழுவச் சென்றோம். ஈரமான மனித காலடித்தடங்கள் தெரிந்தன.

மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு! ஒரு வேளை வீரப்பன்தானோ. திருச்சியில் இருந்து சென்றிருந்த டிரைவர் உட்பட நான்கு பேரும் ஓரளவு வாட்ட சாட்டமாக, ஏறக்குறைய காவல்துறையினர் போலவே இருப்போம். எனவே சந்தேகப்பட்டு வீரப்பன் சுடலாம். அல்லது அருகே சென்றதும் நாங்கள் பணியாற்றிய பத்திரிகையின் பெயரைக் கேட்டதும் வீரப்பன் சுடலாம் என்பது போன்ற குழப்பமான எண்ணங்கள் அலைமோத, தொடர்ந்து நடந்தோம்.
திடீரென ஒரு கட்டத்தில் எங்களைச் சுற்றி மலைகள் இருப்பதை உணர்ந்தோம். நடுவே பள்ளத்தாக்கு போன்ற பகுதியில் நாங்கள் நிற்பதை புரிந்தது. மேலும் சுற்றியுள்ள மலைகளில் மரங்களுக்கு இடையே சில அசைவுகள் இருப்பதாக உள்ளுணர்வு கூறியது. உடன் வந்த புகைப்படக்காரரிடம் அதை தெரிவித்தேன். அவருக்கும் அதே உணர்வு. அதை எங்களோடு வந்த அப்பகுதி நண்பரிடம் கூறியபோது, அவரும் கவனித்ததாக கூறினார். மேலும் ஏதோ நடமாட்டம் இருப்பதை உறுதியும் செய்தார்.
அப்போது வரக்கூடாத சில நினைவுகள் வந்தன. காவல்துறையினரையும், காவல்துறையினரின் உளவாளிகள் என்று சந்தேகப்படுவோரையும் வீரப்பன் இதுபோன்ற தனியான இடத்திற்கு வரச்சொல்லி தீர்த்துக்கட்டியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தது. எங்களோடு சுற்றிய அப்பகுதிவாசிகளும், வீரப்பன் காவல்துறையினரையும், உளவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்ட சிலரையும் இங்குதான் தீர்த்துக்கட்டினார் என்று கூறி சில இடங்களை காட்டுவதுண்டு. ஒரு வேளை எங்களையும் தீர்த்துக்கட்ட நடந்த சதியா?
நாளை வேறொருவரிடம் எங்களை தீர்த்துக்கட்டிய இடத்தையும் காட்டுவார்களா? எங்களோடு உடன்வந்தவர் உண்மையில் வீரப்பனின் நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்தவரா? போன்ற கேள்விகள் சரமாரியாக மண்டையை குடைய ஆரம்பித்தது. ஆனால் எங்களை வழிநடத்திச் சென்ற அப்பகுதி நண்பரோ எதுவுமே தெரியாதவர்போல தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்.

குழப்பத்தின் உச்சியில் தொடர்ந்து நடந்தோம். உடன் வந்த நிருபரும், புகைப்படக்கலைஞரும்கூட அதை நிலையில் இருப்பதாக உணர்ந்தேன். சற்று தூரத்தில் சில குடிசைகள் தெரிந்தன. அருகே சென்றோம்.
சுமார் 10 அல்லது 15 குடிசைகள் இருக்கலாம். பெரும்பாலான குடிசைகளில் யாரும் இல்லை. இரண்டு மூன்று குடிசைகளில் சில பெண்கள் இருந்தனர். எங்களோடு வந்த அப்பகுதி நண்பர் அவர்களோடு எங்களுக்கு புரியாத மொழியில் ஏதோ பேசினார். அந்தப் பெண்களோ, நாங்கள் அவர்களுடை கண்களுக்கே புலப்படாததைப்போல எங்களை புறக்கணித்துவிட்டு தங்கள் வேலையை தொடர்ந்தனர். லிங்காயத்து எனப்படும் பிரிவைச் சேர்ந்த மலையின மக்கள் யாரோடும் பேச மாட்டார்கள் என்று கூறிய நண்பர், அப்பகுதியை சுதந்திரமாக சுற்றினார். அந்தக் குடிசைகளின் நடுவே சென்ற அவர் எங்களை அவசரமாக அழைத்தார்.
அந்தக் குடிசைகளின் நடுவே உள்ள குடிசையின் முன்னே கற்பூரமும், ஊதுவத்திகளும் எரிந்துகொண்டிருந்தன. உள்ளே ஏதோ பெண் கடவுளின் உருவம் பொறித்த திரைச்சீலை தொங்கிக் கொண்டிருந்தது. வேறு யாரையும் காணோம். அந்தப்பெண்கள் கற்பூரம் ஏற்றியிருப்பார்களா? என்று கேட்டேன். அதற்கு வாய்ப்பில்லை! என்று அந்த நண்பர் சொன்னார். ஆனால் வேறு யார் அந்த கற்பூரத்தை எரித்து வழிபட்டிருக்கக்கூடும்? என்று அவர் சொல்லவில்லை. அதை கேட்கும் தைரியமும் யாருக்கும் இல்லை. உடன் வந்த நிருபரும், புகைப்படக்காரரும், காரோட்டியும் அந்த கோவிலில் ஒரு கும்பிடுபோட்டு விபூதி போன்று இருந்த மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டனர். ஒரு வேளை “வீரப்பனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்!” என்று திரைச்சீலையில் இருந்த கடவுளிடம் பிரார்த்தனை செய்திருக்கலாம். கடவுள் நம்பிக்கை இல்லாத நான் அதையும் செய்யவில்லை. வேறு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. மீண்டும் மவுனமாக நடக்கத்தொடங்கினோம். ஆனால் வந்த வழியில் நடப்பதுபோல் தோன்றியது. வழிகாட்டி வந்த அப்பகுதி நண்பரிடம் கேட்டபோது, சகுனம் சரியில்லை என்று சொன்னதாக நினைவு. (இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டது)

திரும்பி நடக்கும்போது, காரோட்டி என்னிடம் வந்து மலைப்பகுதிகளில் நடமாட்டம் அதிகரிப்பதாகவும், யாரோ கண்காணிப்பது போன்று தெரிவதாகவும் கூறி என் பயத்தை அதிகப்படுத்தினார். தேவையே இல்லாமல், காதலா-நட்பா என்று தெளிவில்லாமல் பழகிய பெண்களின் நினைவுகள் நிழலாடின.
அந்தச்சூழலில் நான் செய்யக்கூடிய செயல் ஒன்றுதான் இருந்தது. அப்பகுதி நண்பரை முன்னாள் நடக்கவிட்டு நாங்கள் பின்னால் நடப்பது! ஒருவேளை வீரப்பனோ, அவரது ஆட்களோ தொலைவிலிருந்து சுட்டால், அவரது ஆளை(??!!) சுடமாட்டார்கள் என்று நினைப்பு. அதையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத நிலை. எனவே அந்த நண்பரின் நிழலாக அவரைத் தொடர்ந்தேன். வழக்கத்தைவிட மிகவும் மெதுவாக அந்த நண்பர் நடந்து கொண்டிருந்தார். சற்று வேகமாக நடக்கச் சொன்னேன். சகுனம் சரியில்லை என்று மீண்டும் சொன்னார். அப்போது நான், எனக்கு சகுனம், சாமி இவற்றில் நம்பிக்கை இல்லை என்று சொன்னேன். கோவிலில் சாமி கும்பிடாமல் இருந்ததை கவனித்ததாக சொன்ன அவர், இந்த குற்றத்திற்காகவும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறினார். நல்லவேளையாக இந்த உரையாடல் எங்கள் இருவருக்குள்ளேயே இருந்தது.
எனக்கு தண்ணீர் தாகமும், பசியும் எடுப்பதாக தோன்றியது. ஆனால் கையில் தண்ணீரோ, உணவோ எதுவுமே கிடையாது. என்ன முட்டாள்தனம். தொடர்ந்து நடந்த நண்பர் திடீரென பம்மி பதுங்கினார். ஒரு வேளை வீரப்பன்தானா? அவரை நாங்கள் பேட்டி எடுக்கப்போகிறோமா? அல்லது அவர் எங்கள் உயிரை எடுக்கப்போகிறாரா?
10 கருத்துகள்:
முதல் இரண்டு பதிவுகளையும் படித்துவிட்டு இந்தப்பதிவை படித்தால் முழுமையாக புரியலாம்! :)
சீரியஸா மட்டும்தான் உங்களுக்கு எழுதத் தெரியும்ன்னு நினைச்சோம். ஜாலியா, த்ரில்லிங்கா, சஸ்பென்ஸ் வச்சுகூட எழுதத்தெரியும்ன்னு காட்டறீங்க.
வாழ்த்துகள்.
நல்ல சுவாரசியமான நடை. தொடருங்கள்.
superb!
நன்றி அகராதி மற்றும் பெயரிலி. பெயருடனேயே கருத்தை சொல்லலாமே!
//எனக்கு தண்ணீர் தாகமும், பசியும் எடுப்பதாக தோன்றியது. ஆனால் கையில் தண்ணீரோ, உணவோ எதுவுமே கிடையாது. என்ன முட்டாள்தனம். தொடர்ந்து நடந்த நண்பர் திடீரென பம்மி பதுங்கினார். ஒரு வேளை வீரப்பன்தானா? அவரை நாங்கள் பேட்டி எடுக்கப்போகிறோமா? அல்லது அவர் எங்கள் உயிரை எடுக்கப்போகிறாரா?//
Please continue.
தொடர் சூடு பிடித்துக்கொண்டே போகிறது. வாசிக்கிறவர்களுக்கும் உங்களுக்கிருந்த திக்.. திக்.. திக்.. அப்படியே டிரான்ஸ்ஃபர் ஆகிறது.
நன்றி B. Ramachandran & யுவகிருஷ்ணா!
நீங்கள் அளிக்கும் ஊக்கம், பணிச்சுமைகளுக்கும் இடையில் எழுதும் ஆர்வத்தை தூண்டுகிறது.
Hi Sundar,
A friend of mine sent me the link of your blog. I did not expect you here. Its a pleasant surprise to see your foto and writing.
Hey pal!
Your writing style is amazing. Thanks for not forgetting writing.
N.B. Sorry for typing in english. I don't know tamil typing.
//தேவையே இல்லாமல், காதலா-நட்பா என்று தெளிவில்லாமல் பழகிய பெண்களின் நினைவுகள் நிழலாடின. //
Super Comment. :)
கருத்துரையிடுக