09 நவம்பர், 2009

(சந்தன) வீரப்பன் ஆரண்யத்தில் வாரண நர்த்தனம்!

சுற்றிலும் மலைத்தொடர்கள். ஆங்காங்கே ஆள் நடமாட்டம் இருப்பதாய் ஓர் உணர்வு. குடிசை போன்றிருந்த கோயிலருகே யாரோ(!) ஏற்றிய கற்பூர தீபம். எங்கிருந்தோ சில ஜோடி கண்களும், துப்பாக்கி முனைகளும் எங்களை குறிபார்ப்பதாய் ஒரு உணர்வு.


[தொடர்புடைய பதிவுகள்:

வந்த வழியே திரும்ப வரும்போது, எங்களை வழி நடத்திய சோர்ஸ் எதனையோ கண்டு மிரள, எங்களையும் பயம் கவ்வியது. அந்த கானகப்பகுதிக்குள் நாங்கள் வந்தபோது, ஒரு இடத்தில் நீர் தேங்கியிருந்தது. அதில் யாரோ புழங்கியிருந்ததும், அவர்களின் காலடித்தடங்ளையும் பார்த்தவாறே நாங்கள் கடந்து போயிருந்தோம். இப்போது அந்த காலடித்தடங்கள் எதுவுமில்லை. அவற்றிற்கு பதிலாக ஏராளமான யானைகளின் காலடித்தடங்கள். பெரிதும் சிறிதுமாக சுமார் 20-25 யானைகள் அங்கு இருந்தன.
நாங்கள் அருகே இருந்த ஒரு மரத்தில் பதுங்கினோம். நான் ஒரு மரத்தின் மீதேற முயற்சித்தேன்.


அந்த யானைகளின் உல்லாசம் நியாயமாக எங்களையும் பற்றியிருக்க வேண்டும். ஆனால், எங்களை வழி நடத்திய சோர்ஸின் அச்சம் எங்களையும் பற்றியது.


யானைக்குட்டிகளோ மிகுந்த கும்மாளத்துடன் விளையாடிக் கொண்டிருந்தன. பெரிய யானைகளும்கூட மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடியதாகவே தோன்றியது. வெங்கலக்கடையில் யானை புகுந்தாற்போல என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த கற்பனை அமர்க்களத்தை யானைகள் அன்று நேரில் செய்து காண்பித்துக் கொண்டிருந்தன.
அங்கிருந்த தண்ணீரை சில குட்டிகள் உறிஞ்சி, மற்ற குட்டிகள் மீது பாய்ச்சின. பெரிய யானைகளோ கையில் கிடைத்த மரக்கிளைகளை உடைத்து விளையாடின. அந்த இடமே புழுதி பறந்து ஒரு வித்தியாசமான சூழலை உருவாக்கி இருந்தது.


அதுவரை யானைகளை பாகன்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே பார்த்து பழகியிருந்த எங்களுக்கு அது புதிய ஒரு அனுபவமாக இருந்தது. யானைகளின் நர்த்தனமும், அவை எழுப்பிய ஒலியும் (அதை எப்படி சொல்ல வேண்டும்? பிளிறியது என்றா?) சற்று பயமாகவும், சற்று ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் எங்களுடன் வந்திருந்த சோர்ஸின் முகத்தை பார்க்கும்போதெல்லாம் அவருடைய பயம் எங்களையும் பற்றியது.

யானைகள் கூட்டமாக வரும்போது, யாரையும் தொந்தரவு செய்யாது என்றும், தனியாக வரும் யானைதான் மனிதர்களை துரத்தும் என்றும் எங்கோ படித்திருந்தேன். ஆனாலும், கும்பலாக இருந்த அந்த யானைகள் அமைதியாக இல்லாமல் மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் இருந்ததால் பயத்தை தொலைக்க முடியவில்லை.


இதற்கிடையில் நாங்கள் பதுங்கியிருந்த மரத்தின் பக்கம் சில யானை குட்டிகள் விளையாடியபடியே வர எங்கள் பயம் உச்சத்திற்கு சென்றது. நான் மரத்தின் மேலேற முயற்சிக்க, எங்கள் வழிகாட்டியோ மரத்தின் மேலே ஏற வேண்டாம் என்றார்.


உயிரைக் கையில் பிடித்தபடி... என்பார்களே! அது வெறும் வர்ணனைதான், நிஜத்தில் உயிரைக் கையில் பிடிக்கமுடியாது என்று அன்று தெரிந்து கொண்டோம். ஆனால் எங்கள் உயிரை யானைகள் வேண்டுமானால் அவற்றின் கையில் பிடிக்கலாம் என்று தோன்றியது.
எங்களது சோர்ஸ் கையிலிருந்த ஏதோ ஒரு மூலிகையை வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தார். அவரது உதடுகள் எதையோ முணுமுணுக்க ஆரம்பித்தன. அந்த மூலிகையின் செயல்பாட்டால் அவர் திடீரென்று மறைந்து விடுவாரோ என்றுகூட தோன்றியது. அல்லது வேறு என்ன நடக்கும் என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தபோது என்னுடன் வந்திருந்த மற்றொரு நிருபரையும், புகைப்படக் காரரையும் திடீரென காணவில்லை. சோர்ஸ் என்னை கையைப் பிடித்து இழுத்தார். என்னை தரையில் தள்ளி புரட்டினார். உடையெல்லாம் புழுதியானது. மேலும் மண்ணை எடுத்து என் மீது வீசினார்.


இவருக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? என்று சந்தேகம் வந்தது. அவர் மென்ற மூலிகை கஞ்சாவா? என்ற சந்தேகமும் ஏற்பட்டது. அவரது நோக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. மற்றவர்களையும் காணவில்லை. போலிஸ் என்கவுண்டரைப்போல இந்த சோர்ஸ் என்னை தீர்த்துக்கட்டப் போகிறாரா? அப்படியானால் இவர் உண்மையிலேயே வீரப்பன் ஆள்தானா? ஆனாலும் நான் காவல்துறையின் ஆதரவாளன் இல்லையே? எனது முடிவை நெருங்கிவிட்டேனோ? என்ற எண்ணம் தோன்றியது. வீட்டில் வெளியூர் போவதாக சொல்லியிருந்தேனே தவிர, வீரப்பன் காட்டிற்கு போவதாக சொல்லவில்லை.
எண்ணங்கள் சுழல்வதற்குள் என் கையைப் பற்றிய சோர்ஸ், என்னை இழுத்துக் கொண்டு நகர்ந்தார். குட்டையான, ஆனால் அடர்த்தியான மரங்களின் பின்னாலேயே நான் நகர்வதை உணர முடிந்தது. அவ்வாறு நகர்ந்து செல்ல, செல்ல யானைகளின் ஒலி சற்று தொலைவில் ஒலிப்பதை உணர்ந்தேன். இருவரும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். யானைகளிடம் இருந்து தப்பியது புரிந்தது. ஆனால் சோர்ஸ் என்னை வினோதமாக பார்த்ததுபோல் தெரிந்தது. அவர் ஏதோ பேசினாற்போல் இருந்தது. ஆனால் என்ன பேசினார் என்பது புரியவில்லை. அவரது கண்கள் சொருகின. உடல் விரைத்தது போல் இருந்தது. பார்ப்பதற்கு அச்சம் தரும் தோற்றத்திற்கு அவர் மாறினார். அவரது மூளை இயல்பு நிலையில் இல்லை என்பது புரிந்தது. அந்த நிலையில் அவரை கட்டுப்படுத்துவது முடியாது என்பதையும் உணர்ந்தேன். அவர் ஏதோ சொல்ல முயல்கிறார் என்பது மட்டும் புரிந்தது. ஆனால் எதைச்சொல்ல ஆசைப்படுகிறார் என்பது புரியவில்லை.


அது தகவலா? மிரட்டலா? கெஞ்சலா? எனப்புரியவில்லை. அவரை எழுப்பவும் முயற்சிக்கவில்லை. எழுப்பினால் அது நல்லதா? கெட்டதா? என்ற குழப்பத்தில் இருந்தேன்.
சிறிது நேரத்தில் நாங்கள் இருந்த பகுதிக்கு, என் சக நிருபரும், புகைப்படக்காரரும், காரோட்டியும் வந்தபோதுதான் எனக்கு என் உயிர் குறித்த அச்சம் நீங்கியது. யானைகள் களேபரம் செய்தபோது அவர்களிடம் ஒரு பாதையை காண்பித்து அந்தப்பகுதியில் போகுமாறு சோர்ஸ் சொன்னதாகவும், அதன்படியே சென்று நான் இருந்த பகுதிக்கு வந்ததாகவும் அவர்கள் கூறினர். இதற்குள் கண்விழித்த சோர்ஸ், அவர்களை பார்த்து நிம்மதி அடைந்தார். பிறகு அவர் என்னிடம் வினோதமாக நடந்து கொண்டதற்கான காரணத்தையும் கூறினார்.


நான் அணிந்திருந்த சட்டையின் நிறமும், நான் பயன்படுத்திய சோப் மற்றும் பவுடரின் மணமும் அந்த காட்டிற்கு தொடர்பில்லாமல் இருந்ததை சுட்டிக்காட்டிய சோர்ஸ், அவற்றை யானைகள் கண்டுபிடித்துவிடும் என்று கூறினார். அதனால்தான் என்னை தனியாகப் பிரித்து என்மீது மண்ணைப்பூசி சோப் மற்றும் பவுடர் மணத்தை மறைத்ததாகவும் கூறினார்.


சூரியன் மறைந்து இருள் கவ்வும் நேரத்தில் ஒரு வழியாக எங்கள் காரை கண்டுபிடித்து அறைக்கு வந்து சேர்ந்தோம்.

குளித்துவிட்டு, வழக்கமாக சோர்ஸ்களை சந்திக்கும் / குளிர்விக்கும் மதுபானக்கடையில் சந்தித்தோம்.


அடுத்த நாள் நாங்கள் சந்தித்த ஆபத்துகளுக்கான விதை அங்கே விழுந்தது.


(தொடரும்...)

7 கருத்துகள்:

யுவகிருஷ்ணா சொன்னது…

வாவ்... அத்தியாயத்துக்கு அத்தியாயம் விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகிறது. நீங்கள் வீரப்பரை சந்தித்தீர்களா இல்லையா என்ற சஸ்பென்ஸ் தாங்கலை.. சீக்கிரம் சஸ்பென்ஸை உடையுங்கள்!

வேண்டாம்! சொன்னா வம்பாயிடும்... சொன்னது…

வீரப்பனை பார்த்தீங்களா? இல்லையா?

எவ்வளவு சந்தனகட்டை, எத்தனை யானைத்தந்தம் வச்சிருக்கீங்க?

தமிழ் மீடியா உலகம் - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்டை சீக்கிரம் தொடருங்க தல!

சுந்தரராஜன் சொன்னது…

நன்றி யுவகிருஷ்ணா.

//வேண்டாம்! சொன்னா வம்பாயிடும்... சொன்னது…

வீரப்பனை பார்த்தீங்களா? இல்லையா?

எவ்வளவு சந்தனகட்டை, எத்தனை யானைத்தந்தம் வச்சிருக்கீங்க?

தமிழ் மீடியா உலகம் - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்டை சீக்கிரம் தொடருங்க தல!//

யாருப்பா அது.

ஸ்கேன் ரிப்போர்ட் விரைவில் வரும்.

இளங்கோவன், மதுரை சொன்னது…

இன்றுதான் உங்கள் வலைபதிவை படிக்க நேர்ந்தது. LinkWithin இணைப்புகளில் உள்ள மற்ற பதிவுகளையும் படித்தேன். சுவாரசியமாகவே உள்ளன.

நீர்த்துப்போகாமல் எழுதுங்கள்.

அகராதி சொன்னது…

சீரியஸான விசயங்களையே எழுதிய உங்களிடம் சுவாரசியமான இந்த தொடரை எதிர்பார்க்கவில்லை.

சற்று முயற்சித்தால் நகைச்சுவைகூட உங்களுக்கு வர வாய்ப்புண்டு.

புகைப்படங்களை தெரிவு செய்வதில் உங்களுக்குள் இருக்கும் செய்தியாளர் தெரிகிறார்.

jayakaarthi சொன்னது…

விறுவிறுப்பாக உள்ளது. எந்த இடத்திலும் படிக்கும் ஆர்வம் குறையவில்லை. அற்புதமான எழுத்து. நடை.

jayakarthi

Cable சங்கர் சொன்னது…

படு சுவாரஸ்யமாய் இருக்கிறது..

கருத்துரையிடுக