இந்தியாவின் நீதித்துறை அதன் தோற்றம், இயல்பு, நோக்கம், செயல்பாடுகள் ஆகிய அனைத்திலும் மக்களாட்சி நடைபெறும் ஒரு நாட்டிற்கேற்றதாக இல்லாமல் அந்நியத்தன்மையோடுதான் செயல்படுகிறது.
முதலில் வழக்கறிஞர்கள் அணியும் உடையைக் கூறலாம். ஒரு வருடத்தில் சுமார் 10 மாதங்கள் வெப்பம் நிலவும் நாட்டில் நமது தட்பவெப்ப நிலைக்கு சிறிதுகூட பொருத்தமற்ற ஒரு சீருடை என்பதே குரூர நகைச்சுவை!
கிரிக்கெட் விளையாட்டைப் போல இந்த சீருடையும் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுகிடந்த நாடுகளில் மட்டுமே வழக்கறிஞர்களால் பின்பற்றப்படுகிறது. குளிர் தேசமான இங்கிலாந்திற்கு பொருத்தமான உடை எங்களுக்குத் தேவையில்லை என்று சொல்வதற்கான சிந்தனைத் திறனோ, செயல்திறனோ இல்லாமல்தான் பெரும்பாலான வழக்கறிஞர்கள் இருக்கின்றனர்.
கி.பி. 16ம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆட்சி செய்த அரசிக்கு துக்கம் அனுஷ்டிக்க அந்நாட்டு வழக்கறிஞர்கள் அணிந்த கருப்புச்சீருடையில் இன்றும் சிறைப்பட்டிருக்கும் இந்திய நீதித்துறையிடம் சுதந்திர இந்தியாவின் குடிமக்கள் நீதியை எதிர்பார்க்கவேண்டிய சூழல் ஒரு அதிசயம்தான்!
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை கோரும் ஒரு குடிமகன் அதை உரிமையாக கோரமுடிவதில்லை. அரசு மற்றும் நீதித்துறை பெருந்தன்மையோடு வழங்கும் சலுகைக்காக பிரார்த்தித்து வேண்டுவது போலத்தான் நீதிமன்ற மனுக்கள் தயாரிக்கப்படுகின்றன.
சுதந்திர இந்தியாவின் நீதிபதிகளை, ஆங்கிலேய நீதிபதிகளை அழைத்ததைப்போல “மை லார்ட்!” என்று அழைக்க வேண்டாம் என்று வழக்கறிஞர் மன்றம் தீர்மானம் இயற்றவே ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் ஆயிற்று. ஆனாலும் இந்த தீர்மானம் பெரும்பாலான வழக்கறிஞர்களாலேயே நீதிமன்றத்துக்குள் தோற்கடிக்கப்படுவது நிதர்சனம்! அடிமைப் புத்தியின் பாதிப்பு அந்த அளவிற்கு ஊடுருவி இருக்கிறது.
---
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தவிர இந்தியாவில் தற்போது பின்பற்றப்படும் பல சட்டங்கள் ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்தபோது உருவாக்கப்பட்டவை. தற்போது புதிதாக உருவாக்கப்படும் சட்டங்களும் இந்தியர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு பதிலாக உலக வர்த்தகக் கழகம், அமெரிக்க நிர்பந்தம், தனியார் நிறுவனங்களின் செல்வாக்கு காரணமாகவே உருவாக்கப்படுகின்றன.
ஏற்கனவே இந்தியாவில் உள்ள சட்டங்களில் இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) 1860ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியர்களை இங்கிலாந்தின் குமாஸ்தாக்களாக உருவாக்கிய அதே மெக்காலே பிரபுதான் இந்திய தண்டனைச் சட்டத்தையும் உருவாக்கினார்.
இந்திய சாட்சியச் சட்டம் (Indian Evidence Act) 1872ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவின் உரிமையியல் நடைமுறைச் சட்டம் (Civil Procedure Code) 1908ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின்படியே இந்தியாவில் உள்ள கீழ்நிலை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை இயங்குகிறது. குற்றவியல் நீதிமன்றங்கள் அனைத்தும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன.
இதைத்தவிரவும் ஏராளமான சட்டங்கள் இந்தியாவில் அமலில் உள்ளன. இந்தியாவில் இந்த நிமிடத்தில் எத்தனைச் சட்டங்கள் அமலில் உள்ளன என்பதை யாரும் சரியாக கணிக்க முடியாது. மேலும் குறிப்பிட்ட சட்டத்தில் ஏற்படும் கேள்வி ஒன்றுக்கு நீதிமன்றம் கொடுக்கும் விளக்கம் முன் மாதிரிச் சட்டமாக கருதப்படுகிறது. எனவே சட்டம் என்ற துறை நாளும் மாறும், வளரும் துறையாக உள்ளது.
ஆனால் இந்தச் சட்டங்கள் இந்தியக் குடிமகனுக்கு உதவி செய்கிறதா? பாதுகாப்பு அளிக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பினால், “இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் இந்தியச் சட்டங்கள் பாதுகாப்பு அளிக்கவில்லை!” என உறுதியாக கூறலாம்.
குற்றவியல் தன்மை வாய்ந்த அனைத்து சட்டங்களும் குற்றம் சாட்டும் அதிகாரிகளுக்கான ஒரு பாதுகாப்பு அம்சத்தோடு விளங்குகின்றன. அதாவது ஒரு குற்றத்தை ஒரு நபர் செய்திருக்கலாம் என ஒரு காவல்துறை அதிகாரியோ அல்லது அதிகாரம் உள்ள வேறெந்த நபரோ நியாயமாக நம்பினால், குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் மீது கைது உள்ளிட்ட அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்க முடியும். பின்னர் விசாரணையில் சந்தேகத்திற்கு உள்ளான நபர் அந்த குற்றத்தை செய்யவில்லை என நிரூபிக்கப்பட்டாலும் அந்த குற்றச்சாட்டை பதிவு செய்த அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் சட்டரீதியாக எடுக்க முடியாது.
அதாவது ஒரு குற்றம் தொடர்பாக எந்த நபர் மீதும் எந்தவிதமான சாட்சிகளோ, சான்று ஆதாரங்களோ இல்லாவிட்டாலும்கூட, அந்த நபர் குறிப்பிட்ட குற்றத்தை செய்திருக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரி நினைத்தாலே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த நடைமுறை இயற்கை நீதிக்கு எதிரானது! இந்தியாவின் நீதிக்கொள்கைக்கும் எதிரானதுதான்! ஆனால் காலங்காலமாக இம்முறையே பின்பற்றப்படுகிறது. அதாவது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், அடிமைகளாக இருந்த இந்தியர்களை துன்புறுத்துவதற்காக கொண்டுவந்த சட்டங்களும், நடைமுறைகளும் எந்த விமர்சனமும் இன்றி இன்றும் அப்படியே கடைபிடிக்கப்படுகிறது.
ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் உரிய ஆதாரங்கள் இன்றி ஒருவர் மீது விசாரணையோ, கைது போன்ற நடவடிக்கைகளோ எடுக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது அந்தக் குற்றம் நிரூபிக்க முடியவில்லை என்றால் உரிய ஆதாரம் இன்றி அவரை அலைக்கழித்த குற்றத்திற்கு இழப்பீடு கேட்டு காவல்துறை அல்லது உரிய துறை சார்ந்த அதிகாரி மீது பாதிக்கப்பட்டவர் நேரடியாக வழக்கு தொடுக்க முடியும். எனவே அமெரிக்கா போன்ற நாடுகளில் அமெரிக்க குடிமக்களின் மனித உரிமைகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுகிறது.
ஒரு நீதிமன்றத்தில் தவறான தகவலை தருவது தண்டனைக்குரிய குற்றம்.
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பல வழக்குகளை அரசு தொடுக்கிறது. அவற்றுள் பல வழக்குகள் அரசுக்கு எதிராக முடிகிறது. குறிப்பாக குற்றவியல் வழக்குகளில் அரசுத்தரப்பு சாட்சியங்கள் அனைத்தும் பொய் சாட்சியங்கள் என்று நிரூபிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.
குறிப்பாக விருதுநகர் வாய்ப்பூட்டாம்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாளை கொலை செய்ததாக அவரது கணவர் வேலுச்சாமி, ராமநாதபுரம் உப்புக்கோட்டையைச் சேர்ந்த சுஜாதா போன்றவர்களை கொலை செய்ததாக கார்மேகம் ஆகியோர் ஸ்காட்லாந்து யார்ட் போலிஸுக்கு இணையான தமிழ்நாட்டு காவல்துறையின் புலனாய்வால் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனர். இந்த வழக்குகளில் தீர்ப்பு நாளன்று கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட இரண்டு பெண்களும் நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலையானதால் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் தலைகளும் தப்பின. இந்த அதிர்ஷ்டம் இல்லாத எத்தனை பேர் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் வாடிக்கொண்டிருக்கின்றனரோ!
மேற்கூறிய இரு வழக்குகளிலும் உயிரோடு இருக்கும் இரண்டு பெண்களை கொலை செய்யப்பட்டதாக தவறான தகவல்களையும், அதை நிரூபிப்பதற்காக ஏராளமான பொய் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த காவல்துறையும் தண்டனைக்குரிய குற்றவாளிகளே!
ஆனால் "ஒரு நீதிமன்றத்தில் தவறான தகவலை தருவது தண்டனைக்குரிய குற்றம்" என்ற பார்வையில் இந்த வழக்குகள் பரிசீலிக்கப்படவில்லை. அவ்வாறு பரிசீலிக்கப்பட்டால் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த காவல்துறையும் சிறையில்தான் இருக்க வேண்டும். மேலும் இதுபோன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேர்மையாளர்கள் (Honorary Acquittal) என்பதற்காக விடுவிக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக அரசுத்தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்பதால் சந்தேகத்தின் பலனை (Benefit of Doubt) குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கியே விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு நீதிமன்றங்கள் என்பதை சுயேட்சையானவை என்ற கருத்து மறைந்து அரசின் ஒரு பகுதியாகவே விசாரணை நீதிமன்றங்கள் இயங்குகின்றன. பல நேரங்களில் கைதிகளுக்கான உரிமைகளை திட்டமிட்டு மறைப்பதில் காவல்துறையும், நீதித்துறையும் போட்டி போடுகின்றன.
---
புதிதாக உருவாகும் சட்டங்களோ உலக வங்கி, அமெரிக்கா, வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் நிர்பந்தங்கள் காரணமாகவே உருவாக்கப்படுகின்றன.
சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், வெளிநாட்டு முதலீட்டு தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்நலக் கொள்கைகளை காற்றில் பறக்க விடுவது, விதைகள் மீதான உரிமைகளை விவசாயிகளிடம் இருந்து பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது, நுகர்வோர் நீதிமன்றத்தை செயலிழக்கச் செய்துவிட்டு சட்டரீதியான கட்டைப்பஞ்சாயத்துகளை ஊக்குவிப்பது போன்ற தேசப்பற்றான நடவடிக்கைகளில் அரசும், சட்டம் மற்றும் நீதித்துறையும் தீவிரமாக இயங்கி வருகின்றன. இதை எதிர்த்து கேள்வி கேட்போரை டாக்டர் பினாயக் சென்னை தண்டித்தது போல தண்டிக்கின்றன.
இதற்கிடையில் "நீதிமன்ற அவமதிப்பு" என்ற காலத்திற்கு ஒவ்வாத ஒரு கருத்தைப் பிடித்துக் கொண்டு நீதிமன்றங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை போல பாவனை செய்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் நிலவும் தேவையற்ற பயம் நீதித்துறையின் முறைகேடுகளை தட்டிக்கேட்கும் வழியினை மூடுகின்றன. பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அமைப்பு குறித்து அந்த அமைப்பு இயங்குவதற்கு மூலகாரணமாக இருக்கும் மக்களின் விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட அமைப்பாக இருக்க முடியுமா? உண்மையில் நீதிமன்றங்கள் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காத வகையி்ல் இயங்கவேண்டும். ஆனால் இந்திய நீதித்துறை எவ்வாறு இயங்குகிறது என்பது பத்திரிகைகளை படிக்கும் பாமரருக்கும்கூட தெரியும்.
இதற்கிடையில் "நீதிமன்ற அவமதிப்பு" என்ற காலத்திற்கு ஒவ்வாத ஒரு கருத்தைப் பிடித்துக் கொண்டு நீதிமன்றங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை போல பாவனை செய்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் நிலவும் தேவையற்ற பயம் நீதித்துறையின் முறைகேடுகளை தட்டிக்கேட்கும் வழியினை மூடுகின்றன. பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அமைப்பு குறித்து அந்த அமைப்பு இயங்குவதற்கு மூலகாரணமாக இருக்கும் மக்களின் விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட அமைப்பாக இருக்க முடியுமா? உண்மையில் நீதிமன்றங்கள் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காத வகையி்ல் இயங்கவேண்டும். ஆனால் இந்திய நீதித்துறை எவ்வாறு இயங்குகிறது என்பது பத்திரிகைகளை படிக்கும் பாமரருக்கும்கூட தெரியும்.
---
இது போன்ற பிரசினைகளால் பாதிக்கப்படும் நாமோ, இந்த செயல்பாடுகளுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் நம்மை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த சட்டங்கள் அனைத்தும் நாம் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் “மக்கள் பிரதிநிதிகள்” மூலம் நம்முடைய பேரில்தான் உருவாக்கப்படுகிறது.
ஆனால் நாமோ திரைப்படங்கள் குறித்தும், திரைப்பட நடிகர்களின் சொந்த வாழ்க்கை குறித்தும் சிந்திப்பதில் கோடியில் ஒரு பங்குகூட நமது சமூகப் பிரசினைகள் குறித்து சிந்திக்கவோ, செயல்படவோ மறுக்கிறோம்.
நம்முடைய பெயரால் உருவாக்கப்படும் சட்டங்கள் நம்மை பாதுகாப்பதற்கா? நம்மை அடிமைப்படுத்துவதற்கா? என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது!