10 மார்ச், 2010

நித்தியானந்தன் - ரஞ்சிதா ஆபாசக் காட்சிகள்: சட்டம் என்ன சொல்கிறது?


திருவண்ணாமலை ராஜசேகர் என்ற நித்தியானந்தனும், ரஞ்சிதா என்ற திரைப்பட நடிகையும் பங்கேற்ற காட்சித் தொகுப்புகள் பலதரப்பிலும் பலத்த பரபரப்பை ஏற்படுத்தினாலும் முக்கியமான சில பார்வைகள் தவறிப்போயின.

அந்தக்காட்சியில் இடம் பெற்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் குரல்கள் ஓங்கி ஒலித்தன. ஆனால் வயது வந்த இருவரது சொந்த வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் அதிகாரத்தை சட்டம் யாருக்கும் வழங்கவில்லை என்பதை பலரும் உணரவில்லை.

ஆபாசம் நிறைந்த அந்தக் காட்சிகளை தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவருடைய வீட்டிற்கும் அனுப்பிய ஊடகங்கள் குறித்து தேவையான அளவில் விவாதங்கள் நடைபெறவில்லை. இளவயதுடையோர் உள்ளிட்ட பார்வையாளர்களின் மனதை பாதிக்கக்கூடிய அந்த காட்சிகளை ஒலி-ஒளிபரப்புவதற்கு சட்டம் அனுமதிக்கிறதா? என்ற கேள்வி பரவலாக விவாதிக்கப்படவில்லை.


தற்போது, காலம் கடந்தேனும் இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வழக்கின் விவரங்கள் முழுமையாக தெரியவில்லை.

எனினும், இந்த விவரம் குறித்து சில சட்டப்பார்வைகளை பரிசீலிப்போம்.

இந்திய தண்டனைச் சட்ட(Indian Penal Code)த்தின் பிரிவு 292 என்ன சொல்கிறதென்று பார்ப்போம்:
ஆபாச புத்தகம், துண்டு வெளியீடு, தாள், சித்திரம், ஓவியம், உருவமைப்பு அல்லது உருவம், அல்லது வேறு ஆபாசப்பொருள் எதையாகிலும் விற்கிற, வாடகைக்கு விடுகிற, விநியோகம் செய்கிற பொதுமக்களுக்குக்க காட்சியாக வைக்கிற, அல்லது வேறெந்த முறையிலேனும் புழக்கத்திற்கு விடுகிற, அல்லது விற்பனை, வாடகை, விநியோகம், பொதுக்காட்சி, அல்லது புழக்கத்தின் பொருட்டுச் செய்கிற ...
...எந்தச் செய்கையையும் செய்கின்ற, செய்ய முனைகின்ற எவருக்கும் மூன்றுமாதங்கள் வரை சிறைக்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும்.

இ.த.ச. பிரிவு 509ன் படி:

ஒரு பெண்ணின் கண்ணியத்தை குலைக்கும் விதத்தில் பேசுபவர்களை, ஒலி எழுப்புபவர்களை, சைகை செய்பவர்களை, அல்லது ஏதேனும் பொருளை காட்டுபவர்களை பெண்களின் அந்தரங்கத்துக்குள் அத்துமீறி பிரவேசிப்பவர்களை ஓராண்டு சிறைத்தண்டனைக்கோ அல்லது அபராதத்திற்கோ அல்லது இவை இரண்டுக்குமோ ஆட்படுத்தலாம்.

பெண்களை அநாகரீகமாக சித்தரித்தல் (தடைசெய்யும்) சட்டம், 1986 (Indecent Representation of Women (Prohibition) Act, 1986) பிரிவு 6 மற்றும் 7 ஆகியவற்றின்கீழ், ஒரு பெண்ணை உடல்ரீதியாகவோ, வேறு ரீதியாகவோ கண்ணியக்குறைவாக சித்தரிக்கும் காட்சிகள் உள்ளிட்ட எதையும், அந்த பெண்ணை சிறுமைப்படுத்தும் நோக்கில் வெளியிடுவோருக்கு அவர் அக்குற்றத்தை முதல் தடவையாக செய்தால் இரண்டு ஆண்டுகளும், மறுமுறையும் அதே குற்றத்தில் அவர் ஈடுபட்டால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், கூடுதலாக இரண்டாயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கலாம்.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (Information Technology Act, 2000) -இன் பிரிவு 67 இவ்வாறு கூறுகிறது:

பாலுறவு தொடர்பான காட்சிகளை எலக்ட்ரானிக் வடிவத்தில் வெளியிடுவோரை முதல் தடவை தண்டிக்கும்போது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மறுமுறை இதே தவறை மீண்டும் செய்தால் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இவற்றோடு இரண்டு லட்ச ரூபாய்வரை அபராதமும் விதிக்கலாம்.

பொதுவாக (தமிழ்) கலாச்சாரத்தின் காவலர்களாக தங்களை கருதிக்கொள்பவர்கள் பெண்களையும் அதிலும் குறிப்பாக தமிழரல்லாத பெண்களையும், பிற மொழியினரையுமே குறிவைத்து தம் அரசியலை நிர்ணயிக்கின்றனர். ஆனால் தமிழ் மக்களின் அறம் சார்ந்த உளவியலுக்கு பெரும் ஆபத்து விளைவிக்கும் பணியில் தமிழர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். இப்போது அவர்களை ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கு தேவையான சட்டப்பிரிவுகளும் குறித்து தரப்பட்டுள்ளது!

கலாச்சாரக் காவலர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?


(கார்ட்டூன்: நன்றி - தினமணி)

01 மார்ச், 2010

அழகு நிலையம் – காவல்துறை – பத்திரிகையாளர்

சிறைச்சாலைக்கும், கோட்டைக்கும், தங்கக் கோவிலுக்கும் பெயர் பெற்ற ஊர் (என்று எழுதினால் அது எந்த ஊர் என்று புரிந்து கொள்வீர்கள்தானே? ஆனால் இனி வரும் சங்கேதப் பெயர்களை புரிந்து கொள்ளக்கூடாது. என்ன சரியா!) அது! அங்கு கடந்த ஜனவரி 17ம் நாள் காணும் பொங்கலன்று ஒரு சம்பவம் நடந்தது.

தங்கமயமான அழகு நிலையம் ஒன்று அந்நகர மக்களை அழகிகள் ஆக்கியே தீருவது என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த நகரத்தின் அறிவும், செல்வமும் மிக்க காவல்துறை உயர் அதிகாரி ஒருவரின் மனைவி அந்த அழகு நிலையத்தின் வாடிக்கையாளர்! அவர் அந்த நிலையத்தின் பங்குதாரரும்கூட என்றும் சிலர் கூறுகின்றனர்.
பெண்களுக்கு அழகூட்டுவதுடன், துணைத்தொழிலாக அழகிய இளம்பெண்களை, பணம் படைத்த இளைஞர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் சமூக சேவையிலும் இந்த அழகு நிலையம் ஈடுபட்டு வருகிறது. இந்த அழகு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அனைவருக்கும் தெரிந்தாலும், காவல்துறைக்கு மட்டும் இந்த அழகு நிலையத்தின் சேவைகள் குறித்து தெரியாமலே இருந்தது.

காவல்துறையின் உயர் அதிகாரியின் மனைவியே இந்த அழகு நிலையத்துக்கு அடிக்கடி வந்துபோவதால் அந்த அழகு நிலையம் காவல்துறையின் அதிகார எல்லைக்கு அப்பாலேயே இருந்தது.

இந்த வரலாறு தெரிந்தோ, தெரியாமலோ மற்றொரு இளைய அதிகாரி அந்த அழகு நிலையத்தின்மீது நடவடிக்கை எடுக்கத் துணிந்தார். அதற்காக உலக குமாரன்”  பெயர் கொண்ட உதவி ஆய்வாளரை, வாடிக்கையாளர் போல அனுப்பி வைத்தார். வாடிக்கையாளர் போல சென்ற உதவி ஆய்வாளர், அழகிகளின் அடையாள அணிவகுப்பை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு புரோக்கர் மூலமாக, வாடிக்கையாளர் போல் வந்திருப்பது காவல்துறை உதவி ஆய்வாளர்தான் என்ற உண்மை அழகு நிலையத்தின் உரிமையாளினிக்கு தெரிந்துவிட்டது.

அவரது கோபத்தில் கண்கள் சிவக்க, உதவி ஆய்வாளரின் கன்னத்தில் படுவேகமான அறை இடியாக இறங்கியது.  இந்த அறையில் பொறிகலங்கிப்போன அந்த உதவி ஆய்வாளர், தம்மை அழகு நிலையத்துக்கு அனுப்பிவைத்த அந்த  இளைய உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.


உதவி ஆய்வாளருக்கு விழுந்த அறையை, தமக்கு விழுந்த அறையாக கருதிய அந்த "இளைய" அதிகாரி காவல்துறை படை ஒன்றை அனுப்பி அழகு நிலையத்தில் இருக்கும் அனைவரையும் கைது செய்து அள்ளிவர உத்தரவிட்டார்.

இதற்குள் அழகு நிலையத்தின் ஆதரவாளரான காவல்துறை உயர் அதிகாரியின் மனைவிக்கு தகவல் சென்றுவிடவே, காவல்துறையின் உயர்மட்டங்களிலிருந்து இளைய அதிகாரிக்கு ஏகப்பட்ட பிரஷர்.

இதற்குள் அழகுநிலையத்திலிருந்த அனைவரும் காவல்நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தனர். காவல் நிலையத்தில் இருந்தவாறே அழகு நிலையத்தின் உரிமையாளினி பலருக்கும் தொலைபேசினார். அதன் பயனாக இளைய அதிகாரிக்கும் ஏராளமான தொலைபேசி உத்தரவுகள். அந்த உத்தரவுகளை மறுக்க முடியாத "இளைய" அதிகாரி, அழகு நிலையத்தினர் மீது மிகவும் எளிமையான வழக்கைப் பதிவு செய்து உடனடியாக பிணையிலும் விடுவித்தார்.

இதற்குள் இந்த விவகாரம் நான்காவது தூணாக நின்று இந்திய ஜனநாயகத்தை கட்டிக்காக்கும் ஊடகத்துறையினரிடம் பரவியது. எனினும் இந்த செய்தியை வெளிப்படையாக வெளியிடுவதற்கு எந்த ஊடக நிறுவனமும் தயாராக இல்லை.

இந்நிலையில் சக்திமிக்க பிரபல நாளேடு ஒன்றில் அந்த செய்தி பூடகமாக வெளியானது.


அழகு நிலையத்தோடு தொடர்பிலிருந்த அம்மணியின் கணவரான அந்த அதிகாரி, நாளேட்டின் பொறுப்பாசிரியருக்கு தொலைபேசியில் பேசினார். தவறான செய்தி வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாளேட்டின் பொறுப்பாசிரியரோ, செய்தி உறுதி செய்யப்பட்டே வெளியிடப்பட்டதாக கூறினார். மேலும், மறுப்பு செய்தி கொடுத்தால் வெளியிடுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து  அந்த காவல்துறை உயர் அதிகாரி, தொடர்புடைய நாளேட்டின் சென்னை நிர்வாகிகளுக்கு இது குறித்து புகார் செய்தார். நாளேடு நிர்வாகம் விசாரணை ஒன்றை நடத்தியது. அதிகாரிகளை பகைத்துக்கொள்ளாமல் செய்தி வெளியிட வேண்டும் என்று அந்த பத்திரிகையாளருக்கு அறிவுரை கூறப்பட்டது.  மேலும் அந்த பொறுப்பாசிரியரை காலை நாளேட்டிலிருந்து மாலை நாளேட்டிற்கு மாற்றம் செய்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

மாலை நாளேட்டில் பணியேற்ற அந்த பொறுப்பாசிரியர், சாதாரண புகைப்படத்திற்கு கருத்து எழுதினால்கூட அதற்கு உள்ளர்த்தம் கற்பித்து நிர்வாகம் கேள்விகளை எழுப்பியது. ஒரு கட்டத்தில் இதுபோன்ற செயல்களை தாக்குப்பிடிக்க முடியாத அந்த பொறுப்பாசிரியர் வேலையைவிட்டு விலகிவிட்டு, தற்போது வேறு வேலை தேடிக்கொண்டிருக்கிறார்.

வாழ்க ஜனநாயகம்! வளர்க பத்திரிகை சுதந்திரம்!!