01 மார்ச், 2010

அழகு நிலையம் – காவல்துறை – பத்திரிகையாளர்

சிறைச்சாலைக்கும், கோட்டைக்கும், தங்கக் கோவிலுக்கும் பெயர் பெற்ற ஊர் (என்று எழுதினால் அது எந்த ஊர் என்று புரிந்து கொள்வீர்கள்தானே? ஆனால் இனி வரும் சங்கேதப் பெயர்களை புரிந்து கொள்ளக்கூடாது. என்ன சரியா!) அது! அங்கு கடந்த ஜனவரி 17ம் நாள் காணும் பொங்கலன்று ஒரு சம்பவம் நடந்தது.

தங்கமயமான அழகு நிலையம் ஒன்று அந்நகர மக்களை அழகிகள் ஆக்கியே தீருவது என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த நகரத்தின் அறிவும், செல்வமும் மிக்க காவல்துறை உயர் அதிகாரி ஒருவரின் மனைவி அந்த அழகு நிலையத்தின் வாடிக்கையாளர்! அவர் அந்த நிலையத்தின் பங்குதாரரும்கூட என்றும் சிலர் கூறுகின்றனர்.
பெண்களுக்கு அழகூட்டுவதுடன், துணைத்தொழிலாக அழகிய இளம்பெண்களை, பணம் படைத்த இளைஞர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் சமூக சேவையிலும் இந்த அழகு நிலையம் ஈடுபட்டு வருகிறது. இந்த அழகு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அனைவருக்கும் தெரிந்தாலும், காவல்துறைக்கு மட்டும் இந்த அழகு நிலையத்தின் சேவைகள் குறித்து தெரியாமலே இருந்தது.

காவல்துறையின் உயர் அதிகாரியின் மனைவியே இந்த அழகு நிலையத்துக்கு அடிக்கடி வந்துபோவதால் அந்த அழகு நிலையம் காவல்துறையின் அதிகார எல்லைக்கு அப்பாலேயே இருந்தது.

இந்த வரலாறு தெரிந்தோ, தெரியாமலோ மற்றொரு இளைய அதிகாரி அந்த அழகு நிலையத்தின்மீது நடவடிக்கை எடுக்கத் துணிந்தார். அதற்காக உலக குமாரன்”  பெயர் கொண்ட உதவி ஆய்வாளரை, வாடிக்கையாளர் போல அனுப்பி வைத்தார். வாடிக்கையாளர் போல சென்ற உதவி ஆய்வாளர், அழகிகளின் அடையாள அணிவகுப்பை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு புரோக்கர் மூலமாக, வாடிக்கையாளர் போல் வந்திருப்பது காவல்துறை உதவி ஆய்வாளர்தான் என்ற உண்மை அழகு நிலையத்தின் உரிமையாளினிக்கு தெரிந்துவிட்டது.

அவரது கோபத்தில் கண்கள் சிவக்க, உதவி ஆய்வாளரின் கன்னத்தில் படுவேகமான அறை இடியாக இறங்கியது.  இந்த அறையில் பொறிகலங்கிப்போன அந்த உதவி ஆய்வாளர், தம்மை அழகு நிலையத்துக்கு அனுப்பிவைத்த அந்த  இளைய உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.


உதவி ஆய்வாளருக்கு விழுந்த அறையை, தமக்கு விழுந்த அறையாக கருதிய அந்த "இளைய" அதிகாரி காவல்துறை படை ஒன்றை அனுப்பி அழகு நிலையத்தில் இருக்கும் அனைவரையும் கைது செய்து அள்ளிவர உத்தரவிட்டார்.

இதற்குள் அழகு நிலையத்தின் ஆதரவாளரான காவல்துறை உயர் அதிகாரியின் மனைவிக்கு தகவல் சென்றுவிடவே, காவல்துறையின் உயர்மட்டங்களிலிருந்து இளைய அதிகாரிக்கு ஏகப்பட்ட பிரஷர்.

இதற்குள் அழகுநிலையத்திலிருந்த அனைவரும் காவல்நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தனர். காவல் நிலையத்தில் இருந்தவாறே அழகு நிலையத்தின் உரிமையாளினி பலருக்கும் தொலைபேசினார். அதன் பயனாக இளைய அதிகாரிக்கும் ஏராளமான தொலைபேசி உத்தரவுகள். அந்த உத்தரவுகளை மறுக்க முடியாத "இளைய" அதிகாரி, அழகு நிலையத்தினர் மீது மிகவும் எளிமையான வழக்கைப் பதிவு செய்து உடனடியாக பிணையிலும் விடுவித்தார்.

இதற்குள் இந்த விவகாரம் நான்காவது தூணாக நின்று இந்திய ஜனநாயகத்தை கட்டிக்காக்கும் ஊடகத்துறையினரிடம் பரவியது. எனினும் இந்த செய்தியை வெளிப்படையாக வெளியிடுவதற்கு எந்த ஊடக நிறுவனமும் தயாராக இல்லை.

இந்நிலையில் சக்திமிக்க பிரபல நாளேடு ஒன்றில் அந்த செய்தி பூடகமாக வெளியானது.


அழகு நிலையத்தோடு தொடர்பிலிருந்த அம்மணியின் கணவரான அந்த அதிகாரி, நாளேட்டின் பொறுப்பாசிரியருக்கு தொலைபேசியில் பேசினார். தவறான செய்தி வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாளேட்டின் பொறுப்பாசிரியரோ, செய்தி உறுதி செய்யப்பட்டே வெளியிடப்பட்டதாக கூறினார். மேலும், மறுப்பு செய்தி கொடுத்தால் வெளியிடுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து  அந்த காவல்துறை உயர் அதிகாரி, தொடர்புடைய நாளேட்டின் சென்னை நிர்வாகிகளுக்கு இது குறித்து புகார் செய்தார். நாளேடு நிர்வாகம் விசாரணை ஒன்றை நடத்தியது. அதிகாரிகளை பகைத்துக்கொள்ளாமல் செய்தி வெளியிட வேண்டும் என்று அந்த பத்திரிகையாளருக்கு அறிவுரை கூறப்பட்டது.  மேலும் அந்த பொறுப்பாசிரியரை காலை நாளேட்டிலிருந்து மாலை நாளேட்டிற்கு மாற்றம் செய்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

மாலை நாளேட்டில் பணியேற்ற அந்த பொறுப்பாசிரியர், சாதாரண புகைப்படத்திற்கு கருத்து எழுதினால்கூட அதற்கு உள்ளர்த்தம் கற்பித்து நிர்வாகம் கேள்விகளை எழுப்பியது. ஒரு கட்டத்தில் இதுபோன்ற செயல்களை தாக்குப்பிடிக்க முடியாத அந்த பொறுப்பாசிரியர் வேலையைவிட்டு விலகிவிட்டு, தற்போது வேறு வேலை தேடிக்கொண்டிருக்கிறார்.

வாழ்க ஜனநாயகம்! வளர்க பத்திரிகை சுதந்திரம்!!

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

:(

S. M. Krishnamoorthy சொன்னது…

Every media has its own agenda. No media is fair to common public, who are feeding the media's life. Nowadays media has become a arm-twister and causing many unwarranted trouble to the society. In same time the media neglects to do the needful.

அப்பாவித் தமிழன் சொன்னது…

சமூக விரோதிகளும், காவல்துறையும் கைகோர்த்துக் கொள்ளும். அதை பத்திரிகைகளும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும். நல்ல நாடு!

எதிர்காலம் குறித்து நம்பிக்கை தருவதுபோல் எதுவும் இல்லையா?

அண்ணாமலையான் சொன்னது…

நல்ல பதிவு

சுந்தரராஜன் சொன்னது…

நன்றி பெயரில்லா, S.M.Krishnamoorthy, அப்பாவித்தமிழன் & அண்ணாமலையார்.

பெயரில்லா சொன்னது…

சிறப்பு பகுதிகள் : டீ கடை பெஞ்ச்

""ரெய்டுக்கு போன இடத்துல, எஸ்.ஐ.,க்கு, "பளார்' கிடைச்சுதாம் பா...'' என விவாதத்தை துவக்கினார் அன்வர்பாய்.


""போகக்கூடாத இடத்துக்கு போயிட்டாராங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.


""வேலூரில் உள்ள பியூட்டி பார்லரில், "பலான' சமாச்சாரம் நடக்கிறதா, போலீசுக்கு புகார் வந்திருக்கு பா... இந்த விவகாரத்தை கையும் களவுமா பிடிக்க, முடிவு செஞ்ச போலீசார், எஸ்.ஐ., ஒருத்தரை, "கஸ்டமர்' போல் அனுப்பி வைச்சிருக்காங்க...


""போன இடத்துல அவர், "கஸ்டமர்' இல்லைன்னு அம்பலமாகியிருக்கு... உடனே, பியூட்டி பார்லர் நடத்தறவர், எல்லார் முன்னிலையில் எஸ்.ஐ.,க்கு, "பளார்' கொடுத்திருக்கார் பா... அடிபட்ட எஸ்.ஐ., தன்னை ரெய்டுக்கு அனுப்பிய அதிகாரிக்கு, தகவல் சொல்லியிருக்கார்... கோபமான அதிகாரி, எல்லாரையும் ஸ்டேஷனுக்கு பிடிச்சுட்டு வந்து, எப்.ஐ.ஆர்., போட்டுட்டார் பா...'' என்றார் அன்வர்பாய்.


""சபாஷ்... சரியான நடவடிக்கை தானுங்க...'' என்றார் அந்தோணிசாமி.


""இனி தான் விவகாரமே இருக்கு பா... வேலூரைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியின் மனைவி, பியூட்டி பார்லரின் ரெகுலர் கஸ்டமராம்... எப்.ஐ.ஆர்., போட்ட தகவல், உயர்
அதிகாரியின் கவனத்துக்கு, அவரது மனைவி மூலம் போயிருக்கு பா...


""உடனே அவங்களை வெளியே விடச் சொல்லி உயர் அதிகாரி உத்தரவிட்டிருக்கார் பா... அவரிடம் எப்.ஐ.ஆர்., போட்ட விவரத்தை சொல்லியிருக்காங்க.. உடனே, அனைவரையும் சொந்த ஜாமீனில் விடச்சொல்லி, உயர் அதிகாரி உத்தரவு போட்டிருக்கார்...


வேறவழியில்லாமல் அனைவருக்கும், "சல்யூட்' போட்டு போலீசார் அனுப்பி
வைச்சிருக்காங்க...'' எனச் சொல்லி முடித்தார் அன்வர்பாய்.

நன்றி: தினமலர் சென்னை பதிப்பு, 02-03-2010

கருத்துரையிடுக