01 ஏப்ரல், 2010

ராஜீவ் கொலை – நளினி விடுதலை – தடை என்ன?

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க வேண்டும் என்ற சட்ட நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான இந்தியர்கள், நளினியை விடுதலை செய்யக்கூடாது என்ற கருத்துடையவர்கள் என்று மீடியாக்கள் கூறுகின்றன.
நளினியை விடுவிப்பதில் அரசியல் ரீதியான தடையைவிட, சட்டரீதியான தடையைவிட உளவியல் ரீதியான தடையே மிகுந்த முக்கியத்துவம் வகிக்கிறது. நளினியை விடுதலை செய்யவேண்டும் என்று கருத்து தெரிவிப்பவர்களுக்கு தேசவிரோதி, தீவிரவாதி என்பது போன்ற முத்திரைகள் குத்தப்படலாம் என்பதாலேயே இந்த பிரசினையில் கருத்துக்கூறுவதற்கு பலரும் தயங்குகின்றனர்.

ராஜீவ் காந்தியை கொலை செய்ததை நியாயப்படுத்தியும், நளினியை தண்டித்தது தவறு என்றும் நாம் வாதிடுவதாக பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்கவே கூடாது என்று கருதுவதிலும், அக்கருத்தை பரப்புவதிலும் உளவியல் ரீதியான சிக்கல்கள் இருக்கின்றன.

இந்த உளவியல் ராஜீவ் காந்தி கொலை வழக்கு மற்றும் நளினி ஆகியோர் மட்டுமே தொடர்புடையது அல்ல. இந்த உளவியல் சமூகத்தின் அனைத்து பிரசினைகளிலும் பிரதிபலிக்கும்போது அது அனைத்து இந்தியர்களின் மனித உரிமைகளுக்கும் எதிராக செயல்படுகிறது. அதாவது பொதுமக்களின் நலன்களுக்கு எதிரான உளவியல் பொதுமக்களிடமே இருக்கிறது என்பது சுவாரசியமான ஆனால் கவலைக்குரிய உண்மை.

விரிவாகப் பார்ப்போம்.

நளினி விடுதலை குறித்து கருத்து சொல்ல விரும்பும் அரசியல் சாராத பொதுமக்கள், இந்த பிரசினை குறித்து ஆழ்ந்து யோசித்து முடிவுகளையும், கருத்துகளையும் சொல்வதில்லை. அதற்கு பதிலாக சமூகத்தில் பிரபல மனிதர்கள் மீது மீடியாக்கள் கட்டமைக்கும் பிம்பங்களை உண்மையென்று நம்பி, அதன் அடிப்படையில்தான் பொதுமக்களின் கருத்துகள் உருவாக்கப்படுகின்றன. தங்களுக்கு சாதகமான இந்த நிலை நீடித்திருப்பதையே ஆதிக்க சக்திகளும், மீடியாக்களும் விரும்புகின்றன.


இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ராஜீவ் காந்தி விவகாரம்தான். ராஜீவ் காந்தி குறிந்து இந்திய மீடியாக்கள் கட்டமைக்க விரும்பும் பிம்பம் இதுதான்! அவர் மலிவான அரசியலுக்கும், ஊழல் கலாசாரத்திற்கும் அப்பாற்பட்டவர்... இளமைத் துடிப்பு மிக்கவர்... அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தியா மிக எளிதில் வல்லரசாகி இருக்கும்... என்பது போன்ற கருத்துகளையே மீடியாக்கள் மக்கள் மனத்தில் உளவியல் ரீதியாக நிறுவ விரும்புகின்றன. தற்போது ராஜீவ் காந்தி இல்லாததால்தான் இந்தியா இத்தகைய முன்னேற்றங்களை அடையமுடியவில்லை என்று மக்கள் எண்ணுவதற்கு மீடியாவின் இத்தகைய திட்டமிட்ட செயல்பாடுகளே காரணம்.

ஆனால் உண்மைகளோ வேறு விதமாக இருந்ததை வரலாறு உணர்த்துகிறது. மிக இளம் வயதில் பிரதமர் பதவியை ராஜீவ் காந்தி ஏற்றதற்கு, அன்றைய காலக்கட்டத்தில் நிலவிய அரசியல் சூழலே காரணம். உண்மையில் ராஜீவ் காந்தியே அதை அன்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.


இந்திரா காந்தி கொலை சம்பவத்தை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை பீடத்தை அலங்கரிக்க அனைத்து மாநில மக்களின் ஆதரவு பெற்ற கவர்ச்சியான தலைவர்கள் யாரும் இல்லை. எனவே நேரு குடும்பம் மற்றும் காந்தி என்ற பெயர் ஆகியவற்றுக்கு மக்களிடையே இருந்த நல்லெண்ணத்தை கொள்முதல் செய்யும் வகையிலும், காங்கிரஸின் வாரிசு அரசியல் பாரம்பரியத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராஜீவ் காந்தி தேர்வு செய்யப்பட்டார். அதோடு பிரதமர் பதவியையும் ஏற்றார்.


காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை ஏற்று, பல்வேறு பணிகளை செய்த தலைவர்களும், இளைஞர்களும் ஏராளமானோர் இருந்தபோதிலும், நேரு குடும்பத்து வாரிசு என்ற ஒற்றைத் தகுதியின் அடிப்படையிலேயே அவரிடம் அதிகாரமும், பதவியும் போய்ச் சேர்ந்தது. சீமான் வீட்டு வாரிசாக, சாதாரண மக்களின் எந்த பிரசினை குறித்தும் உரிய அறிவோ, தெளிவோ இல்லாத நிலையில் மிகப்பெரும் செல்வந்தர்களின் பொழுதுபோக்கான விமானம் ஓட்டுதலில் ஆர்வம் செலுத்திவந்த ராஜீவ் காந்தியிடம் பதவி வந்து சேர்ந்தது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ராஜீவ் காந்தி அவரது இயல்புக்கு ஏற்ற ஆட்சியையே நடத்தினார்.

உதாரணமாக, இந்திரா காந்தி கொலையைத் தொடர்ந்து சீக்கியர்களை அழித்தொழிப்பதை ஒரு பிரிவு காங்கிரஸ் கட்சியினர் ஒரு வேலைத்திட்டமாகவே நிறைவேற்றினர். இந்த சம்பவத்தில் சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இந்தப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீதான விசாரணை இதுவரை முழுமையாக முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த திருவாளர் ராஜீவ் காந்தி, ஒரு பெரிய ஆலமரம் வீழும்போது, அருகிலிருக்கும் நிலம் அதிரத்தான் செய்யும், அந்த அதிர்வில் புல், பூண்டுகள் பாதிப்படைவதை தவிர்க்க முடியாது! என்று கூறினார். அதாவது இந்திரா காந்தி ஆலமரமாம். அவரது மரணத்தைத் தொடர்ந்து கொல்லப்பட்ட சீக்கியர்கள் அனைவரும் புல், பூண்டுகள்! ராஜீவ் காந்தியின் இந்த கருத்து அகில உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத ராஜீவ் காந்தி தமது கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரி அக்கருத்தை திரும்பப் பெற்றார்.


ஆனாலும், சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இதுவரை ஒருவர்கூட இந்த வழக்கில் தண்டிக்கப்படவில்லை. இந்த சம்பவங்கள் குறித்து எந்த சான்றுகளும், ஆதாரங்களும் இல்லாதவகையில் திட்டமிட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த கயமைக்கு அப்போதைய இந்திய அரசின் தலைவரான ராஜீவ் காந்தியும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்து விட முடியாது.


இத்தகைய சிந்தனையோட்டம் கொண்ட ராஜீவ் காந்தி இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவை தாரை வார்க்கும் இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு செயல்பட்டிருப்பார் என்பதை கணிக்க முடியவில்லை. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தாது மற்றும் இயற்கை வளத்திற்காக அப்பகுதியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களை கொன்றும், பாலியல் உள்ளிட்ட பலவகை வன்முறைகளை செய்தும் அகற்றி, அப்பகுதிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கையளிக்கும் ஆபரேஷன் கிரீன்ஹன்ட் என்ற அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு சிதம்பரத்திற்கு பதிலாக ராஜீவ்காந்தியே தலைமை ஏற்று செயல்பட்டிருப்பார்.

ராஜீவின் சகோதரர் சஞ்சய் காந்தி நெருக்கடி நிலை காலத்தில் அறிவிக்கப்படாத அதிகார மையமாக செயல்பட்டதும், ஏராளமான ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு கட்டாய கருத்தடை செய்து, வறுமை ஒழிப்பு திட்டங்களை அமல்படுத்தியதும் இளைய தலைமுறைக்கு தெரியாது. மூத்த தலைமுறையோ இதுபோன்ற அராஜகங்களை திட்டமிட்டு மறைத்து வருகிறது.

ஈழத் தமிழர் பிரசினையிலும் ராஜீவ் காந்தியின் போக்கு அவரது இயல்புக்கு ஏற்றதாகவே இருந்தது. பிராந்திய மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்தில், பிரச்சினை தொடர்பானவர்களை ஆலோசிக்காமலே ஒப்பந்தங்களை தீட்டி அந்த ஒப்பந்தத்தை ஈழத்தமிழர் மீது திணித்ததில், தமது அரசியல் திறனின்மையை ராஜீவ் காந்தி வெளிக்காட்டினார்.


இதையடுத்து ஏற்பட்ட அரசியல் சூழல்களில் இந்திய ராணுவம் இலங்கையின் அரசியலில் நேரடியாக தலையிடும் சூழல் ஏற்பட்டது. அமைதி காப்பதற்காக போன ராணுவம், அங்கே செய்த காரியங்கள் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியையும் பெருத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இலங்கைக்கு சென்ற ராணுவம் திரும்பிவந்தபோது அந்த ராணுவத்தை வரவேற்க முதலமைச்சர் கருணாநிதி செல்லவில்லை என்பது வரலாறு!

இதற்கிடையில் போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் என்ற குற்றச்சாட்டில் ராஜீவ் காந்தியின் புகழ் மங்கத் தொடங்கியது. இந்த நேரத்தில் சமூக நீதி என்ற புதிய ஆயுதத்தோடு களம் இறங்கிய வி.பி. சிங்-கின் வீச்சால் காங்கிரஸ் ஆட்சியையும் இழந்திருந்தது. கூட்டணி ஆட்சியின் பிரதமராக வி.பி. சிங் பதவியேற்று, பல ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சி கிடப்பில் போட்டிருந்த மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல் செய்து பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்தார். வி.பி. சிங்கின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி, ராமர் கோவில் பிரசினையை கையில் எடுத்து வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தது.

மீண்டும் தேர்தல்! நாட்டின் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவு பெற்ற வி.பி.சிங், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உகந்த சூழ்நிலை நிலவியது.

தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான ராஜீவ் காந்தி சென்னை அருகே திருபெரும்புதூர் அருகே பொதுக்கூட்டம் ஒன்றிற்கு வந்தபோது மனிதவெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் வேறெந்த காங்கிரஸ் கட்சித்தலைவரோ, காவல்துறை உயர் அதிகாரிகளோ பாதிக்கப்படவில்லை என்ற உண்மை உலகத்தினரை வியப்பில் ஆழ்த்தியது.

இதையடுத்து நடந்த விசாரணையில் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதன்படி கடந்த 19 ஆண்டுகளாக நளினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை என்பதன் பொருள் இந்திய சட்டங்களில் சரியான வரையறை செய்யப்படாத நிலையில், நீண்ட நாட்களாக சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்க பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி வருகின்றன.

தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளை சிறையில் கழித்த ஒரு சிறைவாசி, அவர் மீது வேறு எந்தப் புகார்களும் இல்லாத நிலையில் (ஆயுள் தண்டனை என்பதற்கான கால அளவு சரியாக நிர்ணயிக்கபடாததால்) முன் விடுதலைக்கு பரிசீலிக்கப்படுகிறார். இவ்வாறான முன் விடுதலைக்கு தம்மை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்கும் உரிமை ஒவ்வொரு சிறைவாசிக்கும் உண்டு. இந்த உரிமையை நளினியும் பயன்படுத்துகிறார். ஆனால் மற்றக்கைதிகளை விடுதலை செய்வதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, நளினி விவகாரத்தில் மட்டும் ஏனோ தயங்குகிறது. இந்த தயக்கத்திற்கு நளினி விடுதலை குறித்து சமூகத்தில் நிலவும் பொதுகருத்தும் ஒரு காரணமாக அமைகிறது.


நளினியை தூக்கில் போட வேண்டும்: நளினியின் கை மற்றும் கால்களை செயல் இழக்கச் செய்துவிட்டு அவரை விடுதலை செய்யலாம் என்பது போன்ற பல்வேறு கருத்துகள் செய்திநிறுவனங்களின் இணையதளங்களில் பொதுமக்கள் கருத்தாக சேர்கிறது. ஏன் இந்த நிலை?

தங்கள் உரிமைகள் மிதிக்கப்படும் போதெல்லாம் விலங்குகள் கூட எதிர்ப்பை தெரிவிக்கும். ஆனால் எந்த உரிமை பறிக்கப்படும்போதும் அதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் தியாக உள்ளம் கொண்டவர் சராசரி இந்தியர். சராசரி இந்தியனின் உளவியல் என்பது ஆன்மிகத்தின் அடிப்படையில் அமைந்தது. அடையாளமே தெரியாத கடவுளை, அனைத்தும் அறிந்தவன் அனைத்தையும் இயக்குபவன் என்று நம்பும் இந்த உளவியலின் மறுபக்கமோ, தன்னை மிகவும் வலிமை இல்லாதவனாக, எதற்கும் பயனற்றவனாக, மிகவும் எளிமையானவனாக உருவகப்படுத்துகிறது.


கடவுளை, எல்லாம் வல்லவனாக பார்த்துப் பழகிய இந்த உளவியலின் நீட்சியே, ஆட்சித் தலைமைகளை அது மன்னனாக இருந்தாலும் சரி: மக்களாட்சி முறையில் மந்திரியாக இருந்தாலும் சரி மிகவும் உயர்ந்தவனாக பார்க்கிறது. அதன் மறுபக்கமாக தம்மை எளியேனுக்கும், எளியேனுமாக உருவகிக்கிறது. இதனால்தான் தனக்கு நடக்கும் எந்த அநீதிகளையும் உணரவே மறுக்கும் இந்தியனின் மனசாட்சி, அரசியல் தலைவர்களுக்கு ஒரு சாதாரண பிரசினை என்றால்கூட தீக்குளிக்குமளவுக்கு துணிகிறது. சாமானிய மனிதர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டால்கூட எந்த அதிர்ச்சியையும் அடையாத இந்தியனின் மனசாட்சி, ஒரு அரசியல் கட்சியின் தலைவன் இறந்த 20 ஆண்டுகள் கழிந்த பின்னரும் துக்கம் அனுஷ்டிக்கிறது.

இதன் காரணமாக பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்தியனின் மனசாட்சிக்கு எட்டாமல் போகிறது. இந்திய கடல் எல்லைக்கருகில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கையின் கடற்படைதான் காரணம் என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும் இந்தியனின் மனசாட்சி அதை இயல்பாக ஏற்றுக்கொள்கிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்திகள் வந்தாலும், ஏதோ ஒரு சாமியாரின் படுக்கை அறையுள்ளேயை இந்தியனின் மனசாட்சி சிக்கிக் கொள்கிறது.

இந்திய கடல் எல்லையை தாண்டிய மீனவர்களுக்கு இந்திய அரசு எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது: சாதாரண மீனவர்களை கொன்றதற்காக இலங்கை மீது போர் தொடுக்கமுடியுமா? என்று மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பும்போது இந்தியனின் மனசாட்சி இலவசத் தொலைகாட்சியிலிருந்து திரும்ப மறுக்கிறது. அதேபோல் பாதிக்கப்பட்ட இனத்தின்மீது போர் தொடுத்த ஒரு நபர் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் விதத்தில் அந்த இனத்தை சார்ந்த பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டபோதும்கூட இந்தியனின் மனசாட்சி மானாட, மயிலாட நிகழ்ச்சியிலேயே மூழ்கி இருக்கிறது. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினியை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்படும்போதுமட்டும் இந்தியனின் மனசாட்சி துயிலெழுந்து துள்ளி குதிக்கிறது, நளினியை தூக்கில் போடவேண்டும் என்று கூக்குரல் எழுப்புகிறது!

ஆனால் சட்டத்தின் நிலையோ வேறாகத்தான் இருக்கிறது. சட்டம் என்ற கருத்தியலின் முன் அனைவரும் சமமே. ராஜீவ் காந்தியை கொன்றவருக்கு கடும் தண்டனை: நடைபாதையில் படுத்துறங்கும் அன்றாடங்காய்ச்சியை கொன்றவருக்கு வேறு சாதாரண தண்டனை என்ற பேதமெல்லாம் சட்டத்திற்கு கிடையாது. சட்டத்தைப் பொறுத்தவரை அது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 302ன் கீழ் ஒரு குற்றம். அந்த குற்றத்தில் பலியானவரின் சமூக முக்கியத்துவம் குறித்து ஒரு நீதிமன்றம் கவலை கொள்ளக்கூடாது.


ஆனால் நடைமுறையில் இது வேறாக இருக்கிறது. சாமானிய இந்தியனுக்கு நடக்கும் எந்த தீவிரமான மனித உரிமை மீறலையும் மிக எளிதாகவும், இயல்பானதாகவும் பார்க்கும் அமைப்புகள், சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் பிரபலமடைந்தவர்களின் சிறு பிரசினைகளைக்கூட மிகுந்த அக்கறையோடு கவனிக்கிறது. எத்தனையோ தொழில் சார்ந்தவர்கள் பல்வேறு பிரசினைகளுக்கு போராடினாலும் திரும்பி பார்க்காத தமிழ்நாடு அரசு, திரைப்படத்துறையினரின் மிகவும் சாதாரண பிரசினைகளைக்கூட அதிகபட்ச கரிசனத்தோடு பரிசீலிப்பதை ஒரு உதாரணமாக கூறலாம். இதை எதிர்த்துப் போராட வேண்டிய இந்தியனின் மனசாட்சி அதற்கு பதிலாக இது போன்ற அநீதிகளையும், முறைகேடுகளையும் இயல்பாக ஏற்க பழகிவிடுகிறது.

இதன் விளைவாகவே தமது உண்மையான பிரசினைகளை உணரவும், அதை எதிர்த்து போராடவும் தயங்கும் இந்தியனின் மனசாட்சி அரசியல் தலைவர்களின் இழப்புகளை மட்டும் பிரமாண்டமாக்கி பார்க்கிறது. தன்னிச்சையாக செயல்பட்டு மக்களுக்கு பணியாற்ற வேண்டிய மீடியா, நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசு சார்பு அமைப்புகளாக செயல்பட்டு வருகின்றன.


எனவேதான் அரசின் பார்வையிலேயே, அதாவது மக்களுக்கு எதிரான பார்வையிலேயே மீடியாக்கள் இயங்குகின்றன. அதாவது மக்களின் நலன்களுக்கு எதிரானவற்றை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் வகையில் மக்களை மீடியாக்கள் மூளைச்சலவை செய்கின்றன. இவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டு உருவாக்கப்படும் பொதுக்கருத்துகளுக்கு எதிரான முடிவை மேற்கொள்ள நீதிமன்றங்கள் தயங்குகின்றன.

இவ்வாறு ஆளும் வர்க்கங்களால் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் பொதுக்கருத்துகளுக்கு எதிராக ஒரு நீதிபதி தீர்ப்பளித்துவிட்டால், அந்த நீதிபதிக்கு எதிரான பிரச்சாரத்தில் மீடியாக்கள் இறங்கிவிடும். இதனால் அந்த நீதிபதியின் எதிர்கால பதவி உயர்வுகளோ, வேறு வாய்ப்புகளோ பாதிக்கப்படலாம் என்ற நிலை காரணமாகவே இதுபோன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு மிக அதிக தண்டனை வழங்கப்படுகிறது.

உண்மையிலேயே சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்றால் இந்த நிலை மாற வேண்டும். எந்த விவகாரத்திலும் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதைவிட, அறிவு பூர்வமாக சிந்தித்து செயல்படுவதற்கு மக்கள் பழக வேண்டும். ஆனால் இதற்கு ஆளும் வர்க்கமோ, ஆதிக்க சக்திகளின் மீடியாக்களோ உதவி செய்யாது என்பதுடன், இடையூறும் செய்யும். இதையெல்லாம் மீறினால்தான் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் அரசை அமைக்கமுடியும். இதற்கான பணிகளில் மக்கள் இயக்கங்களும், மாற்று ஊடகங்களும் தொடர்ந்து செயல்பட்டால்தான் மனித உரிமைகளை மதிக்கும் சமூகத்தை அமைக்க முடியும்.

39 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ம்ம். யோசிக்க வேண்டிய விவகாரம்தான்.

Packiarajan Sethuramalingam சொன்னது…

Miga miga sariyaana katturai... nandrigal pala...

பாக்கியராசன் சொன்னது…

இந்திய அளவில் அனைத்து மட்டத்திலும் அதிகாரத்திற்கு எதிராக இருக்க கூடாது என்ற மனநிலையில் இருக்கின்றனர்... அதுவும் நளினி விடுதலைக்கு கருத்து சொல்லாததற்கு காரணாமாக இருக்கும்...

சுந்தரராஜன் சொன்னது…

நன்றி பாக்கியராசன் மற்றும் பெயரில்லா.

(பெயருடன் வரலாமே பெயரில்லா)

பெயரில்லா சொன்னது…

Best wishes for Sunday Seminar.

Maha சொன்னது…

Yes you are right.

Every saint has a past; Every sinner will have a future!

ashraf ali சொன்னது…

நல்ல பதிவு நண்பரே.

மக்களின் மனப்பாங்கை விவரித்துவிட்டீர்கள்.

ஆனால் நாட்டின் முக்கியஸ்தர்களை கொலை செய்தவர்களுக்கே பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டால் சாமானியர்களுக்கு பாதுகாப்பு உண்டா?

அவ்வளவு பெரிய ஆட்களை கொலை செய்தவர்களே விடுதலையாகிவிட்டார்கள் என்ற எண்ணமே மேலும் குற்றங்களை வளர்க்காதா?

chandran சொன்னது…

tappu saithavan enraovthu oru nal tirunthuvan sir.nan nattin arasilvathikalivida NALINI saiuthathu onnum tappu illai sir.Nerya arasiyal vathikalum ithil samnthapattu irukanga. so avangalaukku enna tandanai sir?

R. Kamalakannan சொன்னது…

அன்பு நண்பருக்கு,

சர்ச்சைக்குரிய தங்கள் பதிவைப் படித்தேன். விவாதத்துக்குரியது.

இந்தப் பதிவை சுமார் 750 பேர் படித்திருப்பதாக "விசிட் கவுன்டர்கள்" சொல்கின்றன. ஆனால் மறுமொழி இட்டவர்கள் 10க்கும் கீழ். தமிழ்மணத்திலோ, தமிழிஷிலோ வாக்களித்தவர்கள் 3 பேர்.

தமிழர்களுக்கு விவாதத்தில் பங்கெடுக்கும் திறன் இல்லையா? அல்லது இதுபோன்ற சிக்கலான விஷயங்களை தவிர்க்கிறார்களா?

பொது மக்களின் பங்களிப்பு அனைத்து விவகாரங்களிலும் வேண்டும் என்று வலியுறுத்தும் நீங்கள், இந்த பிரசினையையும் உளவியல் ரீதியில் ஆய்வு செய்து ஒரு பதிவு இட வேண்டும்.

இரா. கமலக்கண்ணன்
உளவியல் ஆய்வு மாணவர்.

ராஜ நடராஜன் சொன்னது…

ஆழ்ந்த அலசலுடன் கூடிய இடுகை.கூடவே
//இத்தகைய சிந்தனையோட்டம் கொண்ட ராஜீவ் காந்தி இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவை தாரை வார்க்கும் இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு செயல்பட்டிருப்பார் என்பதை கணிக்க முடியவில்லை.//

அடைப்பான் வரிகளுக்கு எதிர்வினை செய்வதுடன்,நளினியை விடுதலை செய்வதில் உடன்பாடில்லை என்ற தமிழக அரசு தரப்பின் வாதத்திலும் நியாயமில்லை.மீண்டும் மேல் முறையிடூம்,இன்னும் நீளும் நாட்களை நகர்த்த வேண்டியது தவிர தற்போது வழியில்லை தற்போதைய தீர்ப்பின் மூலம்.

சவுக்கு சொன்னது…

தமிழ்நாட்டில் பெரும்பாலும் பேசப்படாத ஒரு பொருள். இறந்து போனவர் அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும், அவரைப் பற்றி விமர்சனம் செய்யாமல் இருப்பது. இது என்ன லாஜிக் என்ற புரியவில்லை. மருதையனுக்கு அடுத்து, தாங்கள்தான் ராஜீவ் காந்தியின் மறுபக்கத்தை, தயங்காமல் விமர்சித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பொதுவாக, தோற்றத்தைப் பார்த்து, இவர் இப்படித்தான் என்று கற்பனை செய்யும் மனது நம் அனைவருக்குமே உண்டு. அதுபோல, அமுல்பேபி போல உள்ள ராஜீவ் காந்தியின் முகத்தை பார்த்ததும், ‘இவர் ரொம்ப நல்லவர்‘ என்று வட இந்தியாவைச் சேர்ந்த ஊடகங்களும், இளைஞர்களும் கருதுவது இயல்பே. ஆனால், ராஜீவ் இன்று இருந்திருந்தால், தாங்கள் சொல்வது போல, மிக மிக மோசமான அரசியல் சூழலில் இந்தியா தள்ளப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. சிறையில் 19 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காலம். அதிலும், இக்கொலைக்கு நளினி மட்டுமே காரணமா என்றால், அதுவும் இல்லை. இக்கொலைக்கு உண்மையில் யார் காரணம் என்பது தெரியாததால்தான் இன்னும், சிபிஐ, MDMA (Multi Disciplinary Monitoring Agency) என்ற அமைப்பின் மூலம் ராஜீவ் கொலையை இன்னும் (இன்னுமா) புலனாய்வு செய்து வருகிறது. ஆக, நளினியின் தண்டனையோடு, இக்கொலை வழக்கின் புலனாய்வு முடிவுக்க வந்து விடவில்லை என்பது தெளிவு. அப்படியிருக்க, நளினியிடம் மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்பதுதான் கேள்வி.
அருமையான கட்டுரை நண்பரே. வாழ்த்துக்கள். தொடர்ந் எழுதுங்கள்.

சுந்தரராஜன் சொன்னது…

நன்றி Maha.

அன்பின் ashraf ali,

பெரிய ஆட்களை கொலை செய்தவர்களை ஆயுள் முழுவதும் சிறையில் அடைப்பதால் குற்றங்களே நடக்காது என்று யாரேனும் உத்தரவாதம் அளிக்க முடியுமா

சுந்தரராஜன் சொன்னது…

நன்றி chandran.

அன்பின் கமலக்கண்ணன்,

நான் உளவியல் மாணவன்தான். நீங்கள்தான் ஆய்வாளர். எனவே நீங்கள் குறிப்பிட்ட ஆய்வை செய்வதற்கு நீங்களே மிகவும் தகுதியானவர்.

பல்வேறு பணிகளுக்கு இடையிலும் என் பதிவை படித்து கருத்து கூறிய உங்களுக்கு நன்றிகள் பல.

(பிளாக் ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னீர்களே எப்போது சந்திக்கலாம்?)

சுந்தரராஜன் சொன்னது…

நன்றி ராஜநடராஜன், சவுக்கு.

ஞாயிறு மாலை சென்னையில் இருந்தால் தி.நகர் நிகழ்ச்சிக்கு வாருங்கள். நம்மால் இயன்றைதைச் செய்வோம்.

சுந்தரராஜன் சொன்னது…

நளினி விடுதலை: அரசியல் சிக்கலும், சட்டச் சிக்கலும்! ஒரு விவாதம்
நாள் நேரம்: 04-04-10 (ஞாயிறு) மாலை 5 மணி

இடம்: தெய்வநாயகம் பள்ளி, தி.நகர், சென்னை.

கருத்துரை

பூங்குழலி

அருள் எழிலன்

பாரதி கிருஷ்ணகுமார்

தாமரை

விடுதலை இராசேந்திரன்

சுந்தரராஜன்

பாண்டிமாதேவி

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: www.keetru.com

பெயரில்லா சொன்னது…

அன்பு நண்பருக்கு,

நீங்கள் ஊடகத்துறையை விட்டுச் சென்றபின்னர் இந்தத் துறையில் நுழைந்தவன் நான்.

இன்று செய்தியாளர்கள் சிலர் இருந்த இடத்தில் உங்களைப் பற்றியும், உங்கள் இந்தப் பதிவைப் பற்றியும் பேச்சு எழுந்தது. உங்கள் கருத்துகளை அங்கிருந்த பலர் ஏற்றுக்கொண்டாலும், அதை வெளிப்படுத்துவதற்கான தைரியம்தான் இல்லை.


அப்போது உங்கள் இந்தப்பதிவை நான் படித்திருக்கவில்லை. இப்போதுதான் படித்தேன். நோம் சாம்ஸ்கியின் மேனுஃபாக்சரிங் கான்சென்ட்-டை தமிழில் விளக்க முயல்கிறீர்கள் என்று தோன்றுகிறது.

ஊடகங்களுக்கான நெறிகள் குறித்து இந்தத்துறையை நம்பி வாழும் யாரும் பேசமுடியாத நிலையை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். எனினும் மிகவும் அத்தியாவசியான ஊடக நெறிகள் குறித்து யாரேனும் பேசியே ஆக வேண்டும்.

நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன். செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கென பெயர் இருந்தும் இந்த இடத்தில் அதை வெளிப்படுத்திக் கொள்ளும் தைரியம் இல்லாத...

உங்கள் நண்பன்.

பெயரில்லா சொன்னது…

நளினி விடுதலை பெறுவதிலுள்ள தடையாக நான் கருதுவது மத்திய அரசை அண்டிப்பிழைக்கும் மாநில அரசின் அடிவருடித்தனம் ஒன்றையே .உச்சநீதிமன்றம் நளினியை குற்றவாளியாக முடிவுசெய்திருக்கிறது, ஆயுள்தண்டனை என்பதற்கு எந்தவொரு கால அளவும் வரையறுக்கப்படவில்லை என்றபோதும் அவரது தண்டனைக்காலத்தை குறைப்பதற்கு மாநில அரசுக்கு உரிமையிருக்கிறது. அதில் சுப்ரமண்யம் சுவாமிகளும் சுப்ரீம்கோர்ட் சுவாமிகளும் தலையிடுவதும்கூட மாநில அரசின் அதிகார வரம்பை கேள்விக்கு ஆளாக்குவதாகத்தான் அர்த்தம். இதர வழக்குகளில் தண்டிக்கப்பட்டு ஆயுள்தண்டனை அனுபவித்து வந்தவர்கள் விடுதலை செய்யயப்பட்டபோது தமது தீர்ப்புகள் மீறப்பட்டது என்று எந்த நீதிமன்றமும் அதை மறுக்கவில்லையே? நளினி வழக்கில் நீதிமன்றங்கள் அவ்வாறு நடந்துகொள்ளுமெனின், அதுவே நீதிபதிகளின் மனச்சாய்வுகளுக்கும் சரியான உதாரணமாக அமையக்கூடும். இந்திய அரசியல் சட்டத்தின்படி, சிறைத்துறை முற்றிலும் மாநில அரசுப்பட்டியலின்கீழாகத்தான் வருகிறது. அப்புறம் என்ன தயக்கம்? மாநில அரசுகள் இருக்கிற உரிமைகளையும் இழக்கத் தயாராகிறது என்றால் சுயாட்சி என்பதெல்லாம் சும்மா மேடைப்பேச்சு மட்டும்தான் அல்லவா?

seethag சொன்னது…

ரஜீவ் காந்தியையைப்பற்றி எதுவும் கூறமலெ நளினியின் விடுதலையைகுறித்து வாதிட்லாம்.

சட்டப்படி அவர் விடுதலை சரியனது என்றான பின் இன்னும் அடைத்து வைத்து அவரை துக்கத்துள் வைப்பது என்ன தர்மம்?அவரை அடைத்து வைத்திருப்பது மனித உரிமையின் மீறலின் உச்சகத்தம். இந்தியா ஒரு குடியரசு என்பது கேலியானதே.

bandhu சொன்னது…

//மீண்டும் தேர்தல்! நாட்டின் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவு பெற்ற வி.பி.சிங், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உகந்த சூழ்நிலை நிலவியது.
// I think different opinion polls predicted a win for Rajiv. India Today placed Rajiv in their front page as projected winner BEFORE the assassination

Dr. Thangavel, www.puliamaram.blogspot.com சொன்னது…

சார்,

இவ்வளவு நாட்களாக நான் ஆயுள் தண்டனை என்றால் 14 வருடங்கள் என்றுதான் நினைத்திருந்தேன். அதற்கு கால அளவு நிர்ணயிக்கப்படவில்லை என்பதை உங்கள் கட்டுரையைப் படித்துதான் தெரிந்துகொண்டேன்.

மற்றபடி ராஜீவ் காந்தி குறித்து உங்களது கட்டுரையில் நீங்கள் சொல்வதில்லாம் எனக்கு உடன்பாடில்லை - குறிப்பாக அவர் இருந்திருந்தால் இப்போது இதையெல்லாம் செய்திருப்பார் என்ற ஊகத்தினடிப்படையில் நீங்கள் எழுதியிருப்பதில். நளினி விடுதலைக்கு நீங்கள் ராஜீவ் காந்தியைக் குறித்து அளவுக்கதிகமான எதிர்மறைக் கருத்துக்கள் சொல்லியிருப்பதாகவே எனக்குப் படுகிறது. அதற்காக நான் ராஜீவ் அல்லது இ.காங்கிரஸ் ரசிகரில்லை. எனக்கும் அவர்மேல் விமரிசனம் உண்டு. அதுபோல் இந்திய சமுக மனக் கட்டமைப்பு குறித்து - //தங்கள் உரிமைகள் மிதிக்கப்படும் போதெல்லாம் விலங்குகள் கூட எதிர்ப்பை தெரிவிக்கும். ஆனால் எந்த உரிமை பறிக்கப்படும்போதும் அதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் தியாக உள்ளம் கொண்டவர் சராசரி இந்தியர். சராசரி இந்தியனின் உளவியல் என்பது ஆன்மிகத்தின் அடிப்படையில் அமைந்தது. அடையாளமே தெரியாத கடவுளை, அனைத்தும் அறிந்தவன் – அனைத்தையும் இயக்குபவன் என்று நம்பும் இந்த உளவியலின் மறுபக்கமோ, தன்னை மிகவும் வலிமை இல்லாதவனாக, எதற்கும் பயனற்றவனாக, மிகவும் எளிமையானவனாக உருவகப்படுத்துகிறது. கடவுளை, எல்லாம் வல்லவனாக பார்த்துப் பழகிய இந்த உளவியலின் நீட்சியே, ஆட்சித் தலைமைகளை – அது மன்னனாக இருந்தாலும் சரி: மக்களாட்சி முறையில் மந்திரியாக இருந்தாலும் சரி – மிகவும் உயர்ந்தவனாக பார்க்கிறது. அதன் மறுபக்கமாக தம்மை எளியேனுக்கும், எளியேனுமாக உருவகிக்கிறது. இதனால்தான் தனக்கு நடக்கும் எந்த அநீதிகளையும் உணரவே மறுக்கும் இந்தியனின் மனசாட்சி, அரசியல் தலைவர்களுக்கு ஒரு சாதாரண பிரசினை என்றால்கூட தீக்குளிக்குமளவுக்கு துணிகிறது. சாமானிய மனிதர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டால்கூட எந்த அதிர்ச்சியையும் அடையாத இந்தியனின் மனசாட்சி, ஒரு அரசியல் கட்சியின் தலைவன் இறந்த 20 ஆண்டுகள் கழிந்த பின்னரும் துக்கம் அனுஷ்டிக்கிறது.// தாங்கள் கூறுவதிலும் எனக்கு மாற்றுக் கருத்துண்டு.

எனக்கு சட்டச் சிக்கல் எல்லாம் தெரியாது. சட்டதிட்டங்கள் பற்றிய எனது அறிவு சுழியம். ஆயினும் நளினி விடுதலை சட்டத்திற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் தாமதமாகிறது என்றால் அதில் எனக்கு உடன்பாடில்லை.

சுந்தரராஜன் சொன்னது…

பெயர் சொல்ல விரும்பாத ஊடக நண்பருக்கு,
நன்றி: முயற்சிக்கிறேன்!

சட்டவியல்,
விவாதத்தில் புதிய ஒளியை பாய்ச்சுகிறீர்கள். நன்றி.

seetha
//ரஜீவ் காந்தியையைப்பற்றி எதுவும் கூறமலெ நளினியின் விடுதலையைகுறித்து வாதிட்லாம்.//

லாம். ஆனால் ராஜீவ் குறித்த பொதுமக்களின் மிகைமதிப்பீடே நளினியின் விடுதலைக்கு எதிராக இருக்கும்போது, வேறு வழியில்லை.

ரவி,

பத்திரிகைகளின் கருத்துக் கணிப்புகள் பலமுறை பொய்த்துப்போய், அந்த கருத்துகள் பத்திரிகை அதிபர்களின் விருப்பங்களே என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

அன்புக்குரிய மரு. தங்கவேல்,

என் கருத்துகளோடு முரண்படும் உரிமை அனைவருக்கும் உள்ளது. ஆனால் வெறுமனே முரண்படுகிறேன் என்று சொல்வதைவிட உங்கள் மாற்றுக்கருத்துகளை பதிவு செய்தால் இதைப்படிக்கும் நண்பர்கள் சரியான கருத்தை தேர்வு செய்ய முடியுமே.

K.R.அதியமான் சொன்னது…

நண்பர் சுந்தர்ராஜன்,

உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்றேன் கருதுகிறேன். 19 ஆண்டுகள் சிறைவாசம் மிக அதிகம். தமிழக அரசு விடுதலை செய்ய மறுப்பது ஏன் என்று புரியவில்லை.

//// நளினியை தூக்கில் போட வேண்டும்: நளினியின் கை மற்றும் கால்களை செயல் இழக்கச் செய்துவிட்டு அவரை விடுதலை செய்யலாம் என்பது போன்ற பல்வேறு கருத்துகள் செய்திநிறுவனங்களின் இணையதளங்களில் பொதுமக்கள் கருத்தாக சேர்கிறது. ஏன் இந்த நிலை?///

நான் அப்படி எதையும் பார்க்கவில்லையே. அவை பொதுமக்களின் கருத்து என்று சொல்வதை விட ஒரு சிலரின் கருத்து என்று கொள்ளலாம். பெருவாரியானவர்களுக்கு இந்த விசியம் பற்றி கருத்து எதுவும் இருப்பதாக தெரியவில்லை. Indifferent or apathy தான் அதிகம் என்று படுகிறது.

///// //இத்தகைய சிந்தனையோட்டம் கொண்ட ராஜீவ் காந்தி இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவை தாரை வார்க்கும் இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு செயல்பட்டிருப்பார் என்பதை கணிக்க முடியவில்லை./////

தாரளமயமாக்கலை ராஜ்வ் மிக சிறிய அளவில் முயன்றுபார்த்தார். ஆனால் மன்மோகன் சிங் அளவிற்க்கு செயலாக்கவில்லை. 1991இல் நம் நிதி நிலை மிக மிக அபாயகரமாக இருந்தது. ராஜ்வ் கொலையால் ஏற்பட்ட ஒரே மறைமுக நன்மை மன்மோகன் சிங்யை நிதியமைச்சராக்கிய நரசிம்மராவ் மிக critical ஆன சமயத்தில் பிரதமரானது. அன்று 1991இல் மன்மோகன் சிங் துரிதமாகவும், துணிச்சலாகவும் செயல்படாமல் இருந்திருந்தால் இந்தியா திவாலாகியிருக்கும். கடுமையான சீரழவு, கொடூர வறுமை, மற்றும் total anarchy உருவாகியிருக்கும். 1991இல் இந்தியாவில் இருந்த மிக குழுப்பமான, political unstablitiy and economic crisisகளை தீர்க்க ராஜிவ் கொலை வழி செய்தது. இல்லாவிட்டால் காங்கிரஸ் ஆட்சியமைத்திருக்க சாத்தியம் குறைவு. மன்மோகன் சிங் நிதியமைச்சராகி, அவருக்கு free hand அளிக்கப்பட்டிருக்காது.

சுந்தரராஜன் சொன்னது…

நன்றி அதியமான்.

//1991இல் இந்தியாவில் இருந்த மிக குழுப்பமான, political unstablitiy and economic crisisகளை தீர்க்க ராஜிவ் கொலை வழி செய்தது. இல்லாவிட்டால் காங்கிரஸ் ஆட்சியமைத்திருக்க சாத்தியம் குறைவு.//

மீண்டும் நன்றி.

K.R.அதியமான் சொன்னது…

ராஜிவ் கொலை சதியில் காங்கிரஸ் தலைவர்களுக்கு பங்கில்லை. அக்கொலையில் தலைவர்கள் வேறு யாரும் பலியாகாதது தற்செயலகாக நடந்தது. திரு.ரகோத்தமன் சமீபத்தில் எழுதிய ‘ராஜிவ் கொலை வழக்கு’ பற்றிய நூலில் மிக விரிவாக விவரித்துள்ளார். மேடையில் ராஜிவ் ஏறிய பிறகே குண்டை வெடிக்க திட்டம் ; நிகழ்சி தாமதமானததால், பதற்றத்தில் மாறியதால் விளைவுகளும் மாறின. மேடையில் வெடித்திருந்தால், பல காங்கிரஸ் தலைவர்களும் கொல்லப்படிருப்பர். Black tigers wing மிக மிக ரகசியமாக செயல்படக் கூடியது. இடது கை செய்வதை வலது கை அறியாது. வெறும் ஊகங்கள், வதந்திகள் தான் அதிகம். அந்த நூலை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

1991இல் நம் பொருளாதார நிலை பற்றிய எமது பழைய பதிவு : http://nellikkani.blogspot.com/2008/05/1991.html 1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?

பெயரில்லா சொன்னது…

ஐயா உங்கல் வாத திறன் அற்புதம். ராஜீவ் காந்தி புனிதர் அல்ல என்ற உங்கள் வாதத்தை ஏற்று கொண்டாலும்கூட, ராஜீவ் கந்தியுடன் இறந்த மக்களுக்கு யார் பதில் சொல்வது.

உங்கள் வாதபடியே அதிகாரியோ, கட்சிகாரரோ சாகவில்லை. சாதாரணமானவர்கலே செத்திருக்காங்க.

அதற்காவது நளினியை தண்டிக்கனுமில்லையா.

பெயரில்லா சொன்னது…

Best wishes for great success in today's seminar.

raja சொன்னது…

மிக அற்புதமான ஆழமான கட்டுரை, நிச்சியம் இது போன்ற கட்டுரைகள் பெரும் வணிக,சிறுபத்திரிகைகளில் கூட நான் படித்ததில்லை வாழ்த்துகள் திரு சுந்தரராஜன் அவர்களே ஆயிரம் புத்தகம் படித்த அறிவை,ஆழத்தை, உணர்வை தங்களது ஒரு கட்டுரை கொடுத்தது என்றால் அது மிகையில்லை உங்கள் கருத்தோடு முழுவதுமாக உடன்படுகிறேன்.. வணக்கத்துடன். க.இராஜா.

தங்கள் கட்டுரைகள் அடுத்து எழுதினால் எனது மின்னஞ்சலுக்கு தயை கூரந்து தெரியப்படுத்தவும்.rajaframes@gmail.com

R. Sureshkumar சொன்னது…

அன்பு நண்பருக்கு,

தங்கள் பதிவை சற்று தாமதமாகவே படித்தேன். நல்ல கருத்துகளை திறம்பட கூறியுள்ளீர்கள். புகைப்படங்களும் பொருத்தமானவையே. உங்களுக்கேற்ற மீடியா இல்லை என்பது வருத்தம் அளிக்கும் செய்தியே.

கீற்று இணையதளம் நடத்திய கூட்டத்திற்கும் வரமுடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தேன். ஆனால் அதன் ஒலிப்பதிவை கேட்கும் வாய்ப்பை பெற்றேன். மிகச்சிறந்த வழக்குரைஞராக பரணமிக்கும் நிலையை எட்டி வருகிறீ்ர்கள் என்று புரிகிறது.

குறிப்பாக நளினியின் உளவியல் பாங்கையும், ராஜீவ்காந்தியின் உளவியல் பாங்கையும் ஒப்பிட்டு பேசியது மிகவும் அறிவு பூர்வமானது. மக்களின் இதயங்களை வெல்லக்கூடியது.

தொடர்ந்து எழுதவும், இயங்கவும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

தமிழ்நதி சொன்னது…

இந்தக் கட்டுரையை கீற்று இணையத்தளத்திலேயே வாசித்திருந்தேன். அன்று கூட்டத்திற்குத் தாமதமாக வந்தபடியால் உங்கள் உரையைக் கேட்கமுடியவில்லை. நளினியின் விடுதலை குறித்து உங்களைப் போன்றவர்களாவது பேசுவது ஆறுதலளிக்கிறது. 'வெளியில் வந்து ஒரு தாயாக மட்டும் வாழ விரும்புகிறேன்'என்ற அந்தப் பெண்ணின் துயரம்... என்ன சொல்வது...? அரசுகள் வைத்ததே சட்டம்.

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு.பல விடயங்களளை அறிய தந்துள்ளீர்கள் கடவுளை எல்லாம் வல்லவனாக பார்த்துப் பழகிய உளவியல் பற்றி உங்கள் விளக்கம் சிறப்பாக இருந்தது. இது இந்தியருக்கு மட்டுமல்ல பின்தங்கிய நாட்டவர்களுக்கும் பொருந்தும். ஈழதமிழர்களில் பலர் பிரபாகரனை எல்லாம் வல்லவனாக நம்பினார்கள்.

கோ. பரந்தாமன் சொன்னது…

காங்கிரஸ் கழிசடைகளின் உண்மை முகத்தையும், ராஜீவ் காந்தியின் கோர முகத்தையும் திரை விலக்கி காட்டியுள்ளீர்கள்.

கருணாநிதியின் உண்மை முகத்தை மக்கள் அறிவார்கள்.

ஆனாலும் இலவச டி.வி., பணம் ஆகியவ்ற்றுக்காக ஓட்டுகளை மட்டுமல்லாமல் தங்களையே விற்றுக்கொள்ளும் மக்கள் இருக்கும்வரை இது போன்ற பிரசினைகளுக்கு தீர்வு என்பதே இல்லை.

இந்த அரசியல்வாதிகளுக்கு மாற்றாக நேர்மையான அரசியல் தலைவர்களே நாட்டில் இல்லை என்பது காலம் நம்மீது இட்ட சாபம்.

கோ. பரந்தாமன் சொன்னது…

காங்கிரஸை அழிப்பதே என் வேலை என்று செயல்பட்ட பெரியாரின் சொத்துகளை அனுபவித்துக் கொண்டே பெரியார் கொள்கைகளுக்கு துரோகம் செய்யும் வீரமணி,
திருமாவளவன், சுப.வீரபாண்டியன் ஆகியோரை அடையாளம் காண்போம்.

தெம்மாங்குப் பாட்டு....!! சொன்னது…

enakku intha vivagaaram patri miga athigam theriyavillai. eninum, miga sameebathiya nigalvugalinbadi, siraikkul nalini tholaippesi vaithu irunthathaip patri neengal enna solveergal?

Avar Penn enraalum kutravaali.. nichayam thandikkappada vendum. Ennai poruthavarai, Oruvarathu uyirai edukkum urimai avarukke illai enkinra pothu, Aduthavargalai evvaaru mannippathu? Nalini sattathin munbu nichayam thandikkappada vendiyavare... ethenum thavaraaga therinthaal mannikkavum...Nanri.

C/O TAMILEEZHAM சொன்னது…

காங்கிரஸ் கழிசடைகளின் உண்மை முகத்தையும், ராஜீவ் காந்தியின் கோர முகத்தையும் திரை விலக்கி காட்டியுள்ளீர்கள்.

ம.தி.சுதா சொன்னது…

neenka solvathu sari than...
ithatkkave tamilmanam vote iddullen.. aanal nalini thavirntha mattavarukkakavum oru thadavai kurar koduththirakkalame.....

பெயரில்லா சொன்னது…

wow. am speechless.

Unknown சொன்னது…

நல்ல பதிவு..நல்ல கருத்துக்கள்..உண்மைதான் ராஜீவ் ஒன்றும் மீட்பர் இல்லையே அவரை குறைசொல்லாதிருக்க!! பத்திரிக்கை ஊடங்கள்தான் அப்படிப்பட்ட பிம்பத்தை கட்டமைக்கின்றன..

baskar சொன்னது…

மக்களின் இந்த உளவியலை, உருவாகும் அதிகார வர்க்கம், ஊடகங்கள் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி மாற்ற வேண்டியதன் அவசியத்தை கட்டுரை தெளிவாக உணர்த்துகிறது. அனைவரும் சிந்தித்து செயல்படவும், சிந்திப்பவர்கள் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் செய்வதே இந்நிலை மாற உதவும்.

கருத்துரையிடுக