15 ஏப்ரல், 2010

விஜய் டிவியின் “நீயா? நானா?” – ஒரு கசப்பான அனுபவம்!

டகங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். மக்கள் பிரசினைகளுக்கு மக்களே தீர்வு காண்பதற்கு மீடியாக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இதற்காக குறிப்பிட்ட அம்சம் குறித்த பலதரப்பட்ட கருத்துகளையும் மக்களிடம் நேர்மையாக எடுத்துக்கூறி, சரியான கருத்துகளை மக்கள் தெரிவு செய்ய மீடியாக்கள் துணை செய்ய வேண்டும். ஆனால் நடைமுறையிலோ மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும் நோக்கத்திலேயே திட்டமிட்டு மீடியாக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொலைக்காட்சி மீடியாக்கள் முதலிடம் வகிக்கிறது. 

என்னிடம் தொலைக்காட்சி இல்லை, தொலைக்காட்சி ஊடகத்தில் நான் முழுநேர பணியாளனாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியிருந்தபோதும்!  இப்போதும் அந்த தொந்தரவு இல்லாமல் சுகமாகவே வாழ்கிறேன். அவ்வப்போது நண்பர்களின் வீடுகளுக்கு போகும்போது மட்டும் முட்டாள்தனமான நகைச்சுவை காட்சிகளையும், செய்தி என்ற பெயரில் ஒலி/ளி பரப்பாகும் குரூர நகைச்சுவை காட்சிகளையும் பார்ப்பது உண்டு.


அவ்வாறான சில நேரங்களில் விஜய் டிவியில் ஒலி/ளி பரப்பப்படும் நீயா? நானா?” நிகழ்ச்சியையும் பார்த்திருக்கிறேன். பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?”, பெண்களின் கூந்தலில் இருப்பது உண்மையான மயிரா?, போலி மயிரா?” என்பது போன்ற பொருள் பொதிந்த மயிர் பிளக்கும் விவாதங்களே அதிகம் ஒலி/ளி பரப்பியிருப்பதாக அறிகிறேன். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் முன்னொரு காலத்தில் செய்தியாளராக களத்தில் பணியாற்றியவர். அந்தக் காலங்களில் அவர் மற்ற சில செய்தியாளர்களைப் போல வீண் பந்தா செய்யாமல் மிகவும் எளிமையாகவே இருந்தார். தற்போது அவருக்கு ஒரு திரைப்பட நடிகருக்கு அல்லது பெண் தொகுப்பாளினிகளுக்குச் சமமான பிரபலத்தன்மை கிடைப்பதில் எனக்கு மகிழ்ச்சியே!


இந்த நீயா? நானா?” நிகழ்ச்சியில் பங்கேற்க முடியுமா? என்று என்னிடம் கேட்கப்பட்டபோது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லையே! என்று தோன்றியது. ஆனால் விவாதம், விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலை குறித்தது என்றும், இவற்றில் உள்ள சட்டப்பிரசினைகளை குறித்து விவாதிக்கவே நான் அழைக்கப்படுவதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் தலைப்பு: நாட்டின் முன்னேற்றத்துக்கு தேவை இயற்கை விவசாயமா? அல்லது தொழில்நுட்பம் சார்ந்த நவீன விவசாயமா?” என்றும், இயற்கை வேளாண்மை அறிஞர் நம்மாழ்வார் உட்பட பல அறிஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. எனவே இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தேன். இந்த சம்மதம் இருமுறை உறுதி செய்யப்பட்டது. ஒரு திங்கள் கிழமை மதியம் 2 மணிக்கு படபிடிப்பு என்று கூறப்பட்டது.

தொலைக்காட்சி படப்பிடிப்பு குறித்து ஏற்கனவே எனக்கு ஓரளவு அறிவும், அனுபவமும் இருந்ததால் சுமார் 3 மணியளவில் படப்பிடிப்பு அரங்கிற்கு சென்றேன். அரங்கின் வெளியில் நம்மாழ்வார், உயிரித்தொழி்ல்நுட்பத்துறை அறிஞர் பேராசிரியர் டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் உட்பட பலர் படபிடிப்பு அரங்கின் வெளியே காத்திருந்தனர். அவர்கள் அனைவரும் 2 மணிக்கே வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். படப்பிடிப்பு அரங்கில் வேறொரு தலைப்பில் நீயா-நானா விவாதத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. சுமார் 3-45 மணியளவில் அந்தப் படபிடிப்பு முடிந்தது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வெளியேற, அடுத்த விவாதத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் உள்ளே அழைக்கப்பட்டனர். முதலில் தொழில்நுட்பம் சார்ந்த விவசாயத்தின் ஆதரவாளர்கள் அவர்களது இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். அவர்களில் விவசாயிகள் யாரும் இருந்ததற்கான அறிகுறியே தெரியவில்லை.

அடுத்து இயற்கை விவசாயத்தின் ஆதரவு அணியிலிருந்த நாங்கள் இருக்கையில் அமர்த்தப்பட்டோம். கீழ் வரிசையில் அமர்த்தப்பட்ட யாரும் விவசாயிகள் இல்லை. ஆனால் விவசாயத்தின் பல்வேறு முக்கிய கூறுகளை விவாதிக்கக்கூடியவர்கள் அமர வைக்கப்பட்டனர். குறிப்பாக உயிரித்தொழில்நுட்பத்தில் ஆய்வுப்பட்டம் பெற்றாலும் மண்புழு உரமே நமது மண்ணுக்கு நல்லது என்று நிரூபித்து வரும் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் துறைத்தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது இயற்கை விவசாயமே நம்நாட்டுக்கு நல்லது என்று செயல்பட்டு வரும் மற்றொரு பேராசிரியர், இயற்கை வேளாண்மையின் மருத்துவ சிறப்புகளை பேசுவதற்காக மருத்துவர் ஒருவர், நவீன வேளாண்மையை பாதுகாக்க வரும் சட்டங்கள் விவசாயிகளை எவ்வாறு பாதிக்கும் என்று எடுத்துக்கூறுவதற்காக வழக்கறிஞர் என்று பார்த்துப்பார்த்து அமரவைத்தனர். அடுத்த இருவரிசைகளிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருந்த விவசாயிகள் அமரவைக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வரும்வரையில் ஒரு டம்மி தொகுப்பாளர் மேடையில் தோன்றினார். அனைவரையும் கை தட்டச்சொல்லி, சிரிக்கச்சொல்லி பல்வேறு காட்சிகள் பதிவு செய்யப்பட்டன.

நிறைந்த ஒப்பனையோடு நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் அரங்கிற்கு வந்தார். குறைந்தபட்சம்  பரஸ்பர அறிமுகம் நடக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனேன். என் அணியில் இருப்பவர்கள் பலரை எனக்குத் தெரியாது. எதிர் அணியில் இருக்கும் ஒருவரைக்கூட எனக்குத் தெரியாது.

படபிடிப்பு தொடங்கியது. எதிரணியில் இருந்த அனைவரையும் அவரவர் கருத்துகளைக் கூறுமாறு தொகுப்பாளர் கேட்டுக்கொண்டார். தொழில்நுட்பம் சார்ந்த வேளாண்மையின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் அவரவர் கருத்துகளை பதிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அடுத்து இயற்கை வேளாண்மை ஆதரவாளர்களின் முறை. எதி்ர் அணியில் கொடு்த்தது போல இயற்கை வேளாண்மை ஆதரவாளர்கள் அனைவருடைய கருத்துகளையும் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாக இயற்கை வேளாண்மையை வலியுறுத்தியவர்களின் முதல் கருத்துக்கே எதிர்த் தரப்பில் பதில் கருத்து கேட்கப்பட்டது. எதிர் தரப்பில் இருந்த பலரும் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், உரம் மற்றும் பூச்சி மருந்து வியாபாரிகள், நவீன வேளாண்மையை ஆதரித்து பத்திரிகை நடத்தும் வேளாண்மை பட்டதாரிகள். இவர்களில் யாரும் நடைமுறையில் விவசாயிகள் இல்லை என்பது தெரிந்தது. ஆனாலும் தாங்கள் படித்த விஷயங்களை தெளிவாக விவாதித்தனர். அவர்களின் வாதத்தின் மையப்பொருள் ஒன்றே: பெருகி வரும் மக்கள் தொகைக்கு இயற்கை வேளாண்மையின் மூலம் உணவு அளிக்க முடியாது.

இந்தக் கருத்திற்கு உரிய எதிர்க்கருத்துகள் முறையாக எடுத்து வைக்கப்பட்டன. ஆனால் இதுபோன்ற விவாதங்களில் அவ்வளவாக பயிற்சி இல்லாத விவசாயிகள் மிகவும் தடுமாறியே தங்கள் தரப்பு வாதங்களை அடுக்கினர். இவர்களுக்கு துணையாக இயற்கை வேளாண்மையை ஆதரிக்கும் பேராசிரியர்கள், மருத்துவர் ஆகியோர் தொழில்நுட்பம் சார்ந்த விவசாய அணியை எதிர்கொண்டனர்.

ஆனால் எதிர்த்தரப்பிலோ ஆசிரியர்களும், வியாபாரிகளும், பத்திரிகையாளர்களும் நிறைந்திருந்தனர்!  பேச்சையே மூலதனமாகக் கொண்ட அவர்களின் குரல் ஓங்கி ஒலித்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ஆண்டனியின்  மைக் படுவேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது. இந்திய விவசாயிகளுக்கு ஆதரவான கேள்விகள் அடுக்கடுக்காக வந்து விழுந்தன. அவை நிகழ்ச்சி தொகுப்பாளரின் காதில் பொருத்தப்பட்டிருந்த டாக்பேக் சாதனத்தில் மட்டுமே கேட்கக்கூடியதாக பொருத்தப்பட்டிருந்தது.

விவசாயிகள் கடன் படுவது ஏன்? தற்கொலை செய்து கொள்வது ஏன்? என்பன போன்ற கேள்விகள் சரமாரியாக தொடுக்கப்பட்டன. அவை அனைத்தையும் கேமரா முன்பாக கோபிநாத் மிக ஆவேசமாக கேட்டார். சரியாகவும் தவறாகவும் பல பதில்கள் பெறப்பட்டன.

ஆனால் மிக கவனமாக விவசாயிகளுக்கான வாய்ப்பு தவிர்க்கப்பட்டது. விவசாயிகள் சார்பிலான கேள்விகளை நிகழ்ச்சியின் இயக்குனர் ஆன்டனி எடுத்துக்கொடுக்க நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத்தே ஆவேசமாக கேட்டார்.

இந்தக் கோழிச்சண்டையில் தொழில்நுட்பம் சார்ந்த வேளாண்மையில் சுரண்டப்படும் விவசாயிகளின் வாழ்வுரிமை, தேர்வு செய்யும் உரிமை, காப்புரிமை என்ற பெயரில் பறிக்கப்படும் விதை மீதான உரிமைகள் குறித்து பேசுவதற்கான நேரமே இல்லாமல் போய்விட்டது.

என்றாலும்கூட இந்திய விவசாயிகள் மேல் நீயா நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆண்டனியும், தொகுப்பாளர் கோபிநாத்தும் காட்டிய ஆர்வமும், அக்கறையும் மகிழ்ச்சி அளித்தது.

நிகழ்ச்சி நிறைவடையும் நேரத்தில் சிறப்பு விருந்தினர்களாக இயற்கை வேளாண்மை நிபுணர் நம்மாழ்வாரும், தொழில்நுட்ப வேளாண்மை ஆதரவாளர் ஒருவரும் சிறப்பு இருக்கைகளில் அமரவைக்கப் பட்டனர். இந்த இடைவேளையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத்திடம், நவீன வேளாண்மை ஆத்ரவாளர்கள் குறிப்பிட்ட சில அம்சங்களுக்கு பதில் அளிக்க மேலும் சில நிமிடங்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று இயற்கை விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியை நிறைவு செய்வதற்கான நேரம் நெருங்கிவிட்டது என்று கூறி அந்த கோரிக்கையை நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் தள்ளுபடி செய்தார்.

அடுத்து சிறப்பு விருந்தினர்களின் கருத்துக்களை பதிவு செய்யும் நேரம். இருவரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

இறுதியாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் தனது நிறைவுரையை ஆரம்பித்தார். அதுவரை விவசாயிகளுக்கு ஆதரவான தொனியில் பேசிய அவர் திடீரென திசை மாறினார். விவசாயிகளுக்கு நவீன விவசாயம் குறித்து அறிவு கிடையாது என்ற தொனியில் பேசிய அவர், அந்த விவசாயிகளை ஆதரித்து அவர்களுக்கு அறிவு புகட்ட வேண்டியது தொழில்நுட்பவாதிகளின் கடமை என்று கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

இயற்கை விவசாயத்தை பிரச்சாரம் செய்துவரும் நம்மாழ்வார் ஒரு வேளாண்மை பட்டதாரி. தமிழக அரசின் வேளாண்மைத்துறையில் பணியாற்றி அந்தப்பணி மக்களுக்கு பயன்தராது என்பதால் அந்தப்பணியிலிருந்து வெளியேறியவர். இயற்கை வேளாண்மையை ஆதரிக்கும் அணியில் இருந்தவர்களில் இரண்டுபேர் பேராசிரியர்கள். மூன்று பேர் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். ஆனால் இவர்கள் அனைவரையும் கல்வி அறிவு இல்லாதவர்கள் என்ற தொனியில் கோபிநாத் பேசினார். இவர்களுக்கான அறிவை உரம் மற்றும் பூச்சி மருந்து வியாபாரிகளும், நடைமுறை வேளாண்மைக்கு நேரடித் தொடர்பே இல்லாமல் ஏட்டுக்கல்வியாக அதை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் விவசாயிகளுக்கு அறிவொளி ஏற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

----

க்கள் யாரும் சொந்தமாக யோசிக்க வேண்டாம்: மக்கள் சார்பாக மீடியா எடுக்கும் முடிவுகளை மக்கள் எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்! என்பதே தற்போதைய கார்பரேட் மீடியாக்களின் போக்கு. இதுதான் பாசிஸம்! இதற்கு நீயா? நானா?” குழுவும் விதிவிலக்கு அல்ல என்பது புரிந்தது.

இந்த நிகழ்ச்சிக்கான தலைப்பை உறுதி செய்தவுடன் விவசாயம் தொடர்புடைய பத்திரிகை ஒன்றின் அலுவலகத்திற்கே சென்று பழைய இதழ்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பெற்றுள்ளனர்.

நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை பல்வேறு துறை சார்ந்து தேர்வு செய்துள்ளனர். இவை பாராட்டப்பட வேண்டியது. ஆனால் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களை ஒரு அறையில் அமர்த்தி பரஸ்பரம் அறிமுகம் செய்து, விவாதிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்று குறிப்பெடுத்திருக்கலாம்.

பேரா. சுல்தான் இஸ்மாயில் 
ஒருவேளை அவ்வாறு செய்திருந்தால் வேளாண் அறிவியலில் முனைவர் பட்டம் உட்பட பல்வேறு உயர்கல்விகளை பயின்று, வேளாண்மை பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்று இன்று இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை முறையாக அறிமுகம் செய்திருக்கலாம். ரசாயன உரங்களின் கேடுகளை எடுத்துக்கூறுவதுடன், இயற்கையான மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்வதுடன் அதை மக்களிடம் பரப்பி வரும் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் அவர்களை முறையாக அறிமுகம் செய்திருக்கலாம். அவ்வாறெல்லாம் செய்யாமல் அவர்கள் யாரென்பதே பார்வையாளனுக்கு தெரியாமல் யாரோ பேண்ட் போட்ட சிலர் இயற்கை வேளாண்மையை பற்றி பேச வந்துவிட்டார்கள் என்று பார்வையாளனுக்கு சலிப்பூட்டும் விதத்தில் நிகழ்ச்சி தொகுக்கப்பட்டது எந்த விதத்திலும் நம்பிக்கை அளிக்கவில்லை.

நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் சமூகநிலை, சமூகச் செயல்பாடு குறித்து தொகுப்பாளருக்கு அறிமுகம் செய்திருக்கலாம். இவ்வாறு செய்திருந்தால் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு பல்வேறு தரப்பு பார்வைகளை எடுத்துக்கூறி சொந்தமாக யோசித்து மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவையான விவசாயக் கொள்கைகள் குறித்து சொந்தமாக முடுவெடுக்கத் தூண்டியிருக்கும்.

இதற்கான தூண்டுகோலாக இருப்பதுதான் மீடியாவின் வேலை. ஆனால் தற்போதைய மீடியாக்கள் மக்களை வெறும் பார்வையாளர்களாக்கி விடுகின்றன. நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் என்பவர் பல்வேறு கருத்துகள் மக்களை சென்றடைய செய்யும் திறன் வாய்ந்தவராக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களோ மக்களை மடையர்களாகவும், தங்களை நாயகர்களாகவும் நினைக்கின்றனர்.

மக்களின் சிந்தனையை தூண்டிவிடுவதற்கு பதிலாக, தங்கள் நிகழ்ச்சிகள் மூலமாக மக்களின் சிந்தனைத் திறனை மழுங்கடித்து தாங்கள் எடுக்கும் ஒருதரப்பு சார்பான முடிவுகளை மக்களிடம் திணிக்கும் அராஜகவாதிகளாக இருக்கின்றனர்.


நீயா? நானா?” குழுவினர் மக்களுக்காக, மக்கள் நலன் சார்ந்து இயங்க வேண்டும் என்றெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் விவசாயிகளின் வாழ்க்கை போன்ற முக்கியமான பிரசினைகளை உங்கள் நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்து மக்களுக்கு தவறான தகவல்களை தருவதற்கு பதில், உங்கள் வழக்கமான பாணியில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா?” கூந்தல் இயற்கையானதுதானா?” என்பது போன்ற தலைப்புகளிலேயே விவாதம் நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்!

54 கருத்துகள்:

Sabarinathan Arthanari சொன்னது…

:)சரியான கோரிக்கை தான்

பெயரில்லா சொன்னது…

In my limited experience in watching the show, I have seen that only idiots seem to participate in them. Gopinath of course is biggest idiot of all. He seems to be in love with his own voice and seems to get off hearing himself talk non-stop nonsense.

பெயரில்லா சொன்னது…

Very bad and very sad!

பெயரில்லா சொன்னது…

Miga arumaiyana pathivu , ettu surakkai karikku uthavathu , makkal 6 vathu arivai vittu pala natkal agi vittathu.

பெயரில்லா சொன்னது…

வக்கீல் சார். ஒரிஜினல் ஐடியில் கமென்ட் போடறமாதிரி சாதாரண பதிவுகளை போடுங்க சார்.

தொட்டாலே தீப்பிடிக்கிற மாதிரி பதிவுகளைப் போட்டால் கமென்ட் போட பயமா இருக்கு. நீங்க வக்கீல் தப்பிச்சுடுவீங்க. எங்க நிலைமையை யோசிச்சு பாருங்க.

அதனால் தமிழ்மணத்திலயும், தமிழிஷ்-லயும் ஓட்டு போட்டுட்டேன்.

smart சொன்னது…

Good article

Unknown சொன்னது…

நீயா? நானா? மாதிரி மட்டரகமான நிகழ்சிகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
இயற்கை விவசாயம் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்.
கோபிநாத் விகடன்ல ஒரு கட்டுரை தொடர் எழுதுகிறார் வெறும் பிதற்றல்கள் ...

ரவி சொன்னது…

super,,,,

செங்கதிரோன் சொன்னது…

very nice article ...

பெயரில்லா சொன்னது…

we once met Gopinath in US. My friend used to say he is giant mass of meat only. Gopinath never get prepare for the topics ,he just say what he got from the writer. I don't know how the people are so patient to watch the show.
Thanks
Sangamithra

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//உங்கள் வழக்கமான பாணியில் “பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா?” “கூந்தல் இயற்கையானதுதானா?” என்பது போன்ற தலைப்புகளிலேயே விவாதம் நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்//

நல்ல அறிவுரை!

குலவுசனப்பிரியன் சொன்னது…

நல்ல இடுகை. விரிவாக எழுதி இருக்கிறீர்கள்.
//என்னிடம் தொலைக்காட்சி இல்லை, தொலைக்காட்சி ஊடகத்தில் நான் முழுநேர பணியாளனாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியிருந்தபோதும்! இப்போதும் அந்த தொந்தரவு இல்லாமல் சுகமாகவே வாழ்கிறேன்.// இதற்காகவே உங்களைப் பாராட்டலாம்.
அமேரிக்காவின் PBS, இங்கிலாந்தின் BBC முதலான அரசு உதவியில் இயங்கினாலும் அரசையும் விமரிசிக்க முடிகிற, மக்களுக்கு பயன் தரும் தரமான நிகழ்ச்சிகள் தரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் போல் இந்தியாவிலும் வரும் நாள் என்னாளோ?

பெயரில்லா சொன்னது…

Eat 'Gelusil'.

காரணம் ஆயிரம்™ சொன்னது…

//விவசாயிகளின் வாழ்க்கை போன்ற முக்கியமான பிரசினைகளை உங்கள் நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்து மக்களுக்கு தவறான தகவல்களை தருவதற்கு பதில், உங்கள் வழக்கமான பாணியில் “பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா?” “கூந்தல் இயற்கையானதுதானா?”

முற்றிலும் சரி!

ஒரு விஷயத்திற்காக விட்டுவிடுவோம். மற்ற சானல்களில், ரியாலிட்டி டான்ஸ் ஷோ, காமெடிக்காட்சிகள், போனில் பாடல் கேட்டு வழிவது போலல்லாமல், அந்தப்பிரச்சினையை, அதன் தீவிரத்தை பொது ஊடகத்தில் சொல்கிறார்களே!

//நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் சமூகநிலை, சமூகச் செயல்பாடு குறித்து தொகுப்பாளருக்கு அறிமுகம் செய்திருக்கலாம். இவ்வாறு செய்திருந்தால் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு பல்வேறு தரப்பு பார்வைகளை எடுத்துக்கூறி சொந்தமாக யோசித்து மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவையான விவசாயக் கொள்கைகள் குறித்து சொந்தமாக முடுவெடுக்கத் தூண்டியிருக்கும்.

ஒரொரு வார்த்தையில் சுய அறிமுகம் கண்டிப்பாக தேவை.

கோபிநாத் முன்னொருமுறை ’இந்த நிகழ்ச்சியில் பட்டிமன்றம் போல நான் தீர்ப்பெதுவும் சொல்வதில்லை. மக்களை தாங்களாகவே தகுந்த தீர்ப்பை எடுத்துக்கொள்ள செய்கிறோம்’ என்று சொன்னார். இப்பொழுது அதெல்லாம் இல்லை போலிருக்கு! மக்களை சிந்திக்கவிட்டால், நீயா நானா கூட பார்க்கமாட்டார்களே! ஆளேயில்லாத கடையில் டீ ஆற்ற வேண்டியிருக்கும்!

அன்புடன்
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com

பெயரில்லா சொன்னது…

நீயா நானா நிகழ்ச்சி பல்வேறு சமூக விசயங்களை விவாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு ஆனால் விவசாயிகள் பிரச்சனையை விவாதிக்கும் அளவுக்கு நீயா நானா ஒரு தகுதியுடைய முதிரச்சியான நிகழ்ச்சியாக நிச்சயம் இல்லை. சப்பை தலைப்புகளோடு நின்றுகொள்வது நல்லது.

Jackiesekar சொன்னது…

சில நேரத்துல பல முடிவுகள் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் எடுத்து நிகழ்ச்சியை முடித்து வைத்ததை நானே பார்த்து இருக்கின்றேன்...

துளசி கோபால் சொன்னது…

கடைசி வரி 'நச்'

நானும் அவ்வண்ணமே கோருகின்றேன்.

உண்மையைச் சொன்னால்..... நான் தொலைக்காட்சி பார்க்கறதே இல்லை. அந்த நேரத்தை வேற எதாவது வேலையில் அல்லது வாசிப்பில் செலவு செய்கிறேன்.

தப்பித்தவறி பார்த்த ஒன்னுரெண்டு நிகழ்ச்சிகளும் போதுண்டா சாமின்னு இருக்கு.

இராம.கி சொன்னது…

”சுருக்”கென்று சொல்லியிருக்கிறீர்கள். இதெல்லாம் அவர்களுக்குப் படுமா, இல்லையா என்பது என்று தெரியவில்லை. ஆனால் ”நீயா நானா” என்ற நிகழ்ச்சியின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

சாருமதி சொன்னது…

நண்பரே உங்கள் வலையை இன்றுதான் பார்த்தேன். மற்ற சில பதிவுகளையும் ஒரு பருந்துப் பார்வையில் படித்தேன். சுவாரசியமாகவும், சிந்திக்க வேண்டிய வகையிலும் உள்ளன.

வாழ்த்துக்கள். மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன்.

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

கடைசி பத்தி நச்!

ஊடகங்களைப் பொருத்த அளவில்.. எட்டு நிமிடங்களுக்கு ஒரு பிரேக் வேண்டும்... அந்த எட்டு நிமிடங்களின் கடைசி வினாடி.. ஒரு தூண்டில் தேவை, அப்போதான் பிரேக் முடிந்தும் நிகழ்ச்சியை பார்க்க வைக்க முடியும்.

மற்றபடி அனேகம் ஹம்பக் தான்! :(

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

தல.. தேர்தலில் போடுறோமோ இல்லையோ.. இங்கே வோட்டு போட்டாச்சு..! :)

சவுக்கு சொன்னது…

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே, மணம் உண்டா இல்லையா, இளமையான அம்மா Vs இளமையான மகள் போன்ற தலைப்புகளில் நிகழ்ச்சி நடத்தும் இடத்துக்கு நீங்கள் சென்றது பொருத்தமா, நம்மாழ்வார் போன்ற நம்பிக்கைக்கு உரியவர்கள் சென்றது சரியா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும் அல்லவா. நீயா நானா நிகழ்ச்சி, அழகில் சிறந்தவர்கள் வட இந்தியப் பெண்களா, தென் இந்தியப் பெண்களா என்பது போன்ற அறிவு பூர்வமான நிகழ்ச்சிகளை நடத்தும் இடம். அங்கே சென்று, உங்களைப் போன்ற வழக்கறிஞர்களும், நம்மாழ்வார் போன்ற விஞ்ஞானிகளும், உங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறீர்கள்.

Athisha சொன்னது…

:-)

Thamiz Priyan சொன்னது…

மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய பதிவு! இது போன்ற டாக் ஷோக்கள் எல்லாம் பம்மாத்துக்களாக மாறி விட்டன.. :(

கிரி சொன்னது…

அனைத்து தலைப்பையுமே நாட்டிற்கு முக்கியத்துவம் தரும் தலைப்பாகவும் பயனுள்ள தலைப்பாகவும் வைப்பது இயலாத காரியம்.

நீங்கள் கூறுவது போல இதைப்போல முக்கியமான தலைப்புகளை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம் தான். நல்ல பதிவு.

ILLUMINATI சொன்னது…

‘இளமையான மகள் vs இளமையான அம்மா’ வா?
உங்கள மாதிரியே நானும் டிவி பாக்குறது இல்ல.இதப் பத்தி கேள்விப்பட்டு இருக்கேன்.உருப்படாத ஷோ ன்னு.ஆனா,இது இவ்ளோ கேவலமா இருக்கும்னு எனக்கு தெரியாது. நம்ம டிவி ஷோல எது உருப்படி சொல்லுங்க....... மானாட மாராட,சுயம்வரம்,ராணி ஆறு,ராஜா யாரு.....(புரோக்கர் நாங்க,மூனா.கூனா நீங்க).....
இவனுங்க திருந்த மாட்டானுங்க பாஸ்......நாம தான் புறக்கணிக்கணும்.ஆனா,பாட்டு போடா சொல்லி வழியிற இந்த ஜென்மங்களப் பாத்தா எனக்கு நம்பிக்க வரல.....

butterfly Surya சொன்னது…

அருமையாக எழுதி இருக்கிறீர்கள். பகிர்விற்கு நன்றி.

யுவகிருஷ்ணா சொன்னது…

:-)

எப்பவுமே ஊடகங்களுக்கும் உங்களுக்கும் ஆகவே ஆகாது போலிருக்கே?

satheshpandian சொன்னது…

இங்கே நீங்கள் பதிந்தவைகளில் பல உண்மைகள் இருக்கின்றன. மக்களின் பிரச்சினைகளில் இந்த நிகழ்ச்சி நல்ல பங்கு வகிப்பதாக நான் முன்பு நினைத்தேன் அதனை எனது நண்பர் பங்கேற்ற நிகழ்ச்சி மூலம் நான் முன்னரே தெரிந்து கொண்டேன். அதனை அவர் இணையத்தில் அப்போதே வெளியிட்டு இருந்தால் இப்படி நம்பி ஏமாறுவதை தவிர்த்து இருக்கலாம். நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கபட்ட சிறப்பு விருந்தினரான அவர் தன் கருத்துக்களை வெளியிட முயன்று அதனை கோபிநாத் எதிர்த்ததால் வெளியேறி வந்து விட்டார்.

இவர்களால் இலங்கை பிரச்சினையை பற்றி பேச முடியும் என்றால் நான் இவர்கள் உண்மையிலே மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசும் தைரியம் உள்ளவர்கள் என்பதை ஒப்பு கொள்கிறேன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

மிக அருமையான பகிர்வு.

நீங்கள் கூறுவது உண்மை தான். நம் முடிவுகளை, புரிதல்களை மாற்றுவதே ஊடகங்களின் வேலையாக மாறிவிட்டது.

பெயரில்லா சொன்னது…

aru

யூர்கன் க்ருகியர் சொன்னது…

super article sir.

virutcham சொன்னது…

மிகச் சரி. எதோ முடிவெடுத்துவிட்டே நிகழ்ச்சி நடத்துவது போல் தோன்றும். நானும் ஒரு பதிவை இதை குறித்து பதிந்து வைத்து இருக்கிறேன்.

http://www.virutcham.com/?p=113 (Neeya Nana , seems to be a predetermined judgement show)

http//:www.virutcham.com

Sanjai Gandhi சொன்னது…

விவாத மேடைகள் அனைத்தும் முன் முடிவுகளுடன் செயல்படுவது தான்.. நடுநிலையான நீதிபதி என்று யாரும் இங்கில்லை..

என் ஆதரவு நவீன விவசாயத்திற்கே.. இயற்கை வேளாண்மை என்பது ஏட்டுச் சுரைக்காய்.. நம்மாழ்வார் , இயற்கை உரம் தயாரிப்பாளர்களின் ஏஜெண்டாகத்தான் செயல்படுகிறார்.. ப்ராக்டிகலாக யோசிக்க அவர் விரும்புவதே இல்லை..

கல்வெட்டு சொன்னது…

.


//நீயா நானா நிகழ்ச்சி, அழகில் சிறந்தவர்கள் வட இந்தியப் பெண்களா, தென் இந்தியப் பெண்களா என்பது போன்ற அறிவு பூர்வமான நிகழ்ச்சிகளை நடத்தும் இடம். அங்கே சென்று, உங்களைப் போன்ற வழக்கறிஞர்களும், நம்மாழ்வார் போன்ற விஞ்ஞானிகளும், உங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறீர்கள்..//

இதுதான் சரி.

இதைவிட கேவலம் இந்த ஆளைக் கூப்பிட்டு வெளிநாட்டுவாழ் மக்கள் ஜல்லி அடிப்பது. சமீபத்தில் ஆசிப் அண்ணாச்சி தலைமயில் காமெடி செய்தார்கள்.

கோபிநாத்துடன் ஒரு இனிய மாலை பொழுது
http://kusumbuonly.blogspot.com/2010/02/blog-post_23.html

அதற்குமுன் பெட்னா காமெடி.

*
கோபிக்கு அது தொழில் அவர் என்ன ஆக்டிவிஸ்டா? ஜஸ்ட் தொழில்.

எங்கே ஒரு கக்கூஸ் அள்ளும் தொழில், அல்லது சாக்கடை அடைப்பை சரி செய்யும் மாநகராட்சி கடை மட்ட ஊழியரை ஸ்பான்சர் செய்து "எப்படி பீ அள்ளுகிறீர்கள்? உங்களுக்கு நாங்கள் என்ன செய்யமுடியும்" என்று ஆசிப் அண்ணாச்சியோ அல்லது பெட்னாவோ கூட்டம் நடத்துமா?

இவர்களுக்கு சொரிந்துகொள்ள ஒரு பிரபலசுவர் வேண்டும். அதற்கு யாரவது நடிகை/நடிகன் / இப்படி கோபி போன்ற சிலர்.

:-(((

**

Guru.Radhakrishnan சொன்னது…

Mr.Gopinath is not a man of knowle3dge of the topics discussed in the programme o0f NEEYA NAANA.As such Then Professors and Stalwart Mr. Nammalwar would have been avoded to participate in ViJay T.V I think They are wasting their valuable time.

பெயரில்லா சொன்னது…

ஊடகங்களில் தலைகாட்டும் வாய்ப்பு கிடைப்பதை, உலகமே தங்களை அங்கீகரித்துவிட்டதைப் போல நினைத்து மகிழ்ந்து, மீடியாவுக்கு ஏற்ப பேசும் மனிதர்கள் நிறைந்துள்ள இந்த காலத்தில் மீடியாக்கள் இப்படி அராஜகமாக செயல்படுவதை தவிர்க்க முடியாது.

kavin சொன்னது…

நான் ஒரு ஷோ பார்த்தேன். எவனோ ஞானியாம் ஒரு முட்டாள் வந்து முட்டாள்தனமான முடிவை சொல்கிரான், கோபிக்கும் அது தப்புனு தெரிந்தும். அதை முடிவாகா அறிவிக்கிறான்

Ahamed irshad சொன்னது…

மிகச் சரியாக அலசி இருக்கிறீர்கள். அருமையான பகிர்வு.

தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற போக்கில் பேசும் கோபிநாத் தான் "அதிமேதாவி" என நினைக்கிறாரோ. வியாபார நோக்கில் தலைப்பு வைப்பது அவர்களுக்கென்று ஒன்றும் புதிது அல்லவே. டி.ஆர்.பி ரேட்டிங் உயர்வதற்கு அவர்கள் எப்படி வேண்டுமானாலும் தலைப்பு வைப்பார்கள்..

thoaranam சொன்னது…

சிறந்ததொரு பதிவு. இன்றைய உலகின் போக்கில் இயைந்து பிழைப்பு நடாத்தும் கார்ப்பிரட் நிறுவனங்களின் நேசத்தை விரும்பும் ஊடகங்களின் நிலையை தோலுரித்துக்காட்டியுள்ளீர்கள்.

இப்போதெல்லாம் ஐரோப்பாவில் பயோ(Bio)-உயிரி விளைபொருட்களுக்கான சந்தை மெளனமாக அதிகரித்து வருகிறது. மக்களது அறிவுத்தேடல் எல்லாப் போலிகளையும் தகர்த்தே பயணிக்கும்!!
இதுதான் அன்றே வள்ளுவர் சொல்லிச் சென்றுள்ளார்..
"எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் -அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு!
அறிவுக் கண்ணைத்திறக்க விழிப்படையைவைக்கும் தங்களது ஆக்கங்கள் தொடர வாழ்த்துகள்
-முகிலன் தோரணம்

பெயரில்லா சொன்னது…

//நண்பர்களின் வீடுகளுக்கு போகும்போது மட்டும் முட்டாள்தனமான நகைச்சுவை காட்சிகளையும், செய்தி என்ற பெயரில் ஒலி/ளி பரப்பாகும் குரூர நகைச்சுவை காட்சிகளையும் பார்ப்பது உண்டு.//

?????

பெயரில்லா சொன்னது…

http://www.youtube.com/watch?v=5wgxPc8WW8Y
http://www.youtube.com/watch?v=tke5fQllAqs
http://www.youtube.com/watch?v=eZz0SV45g50
http://www.youtube.com/watch?v=lTb2Hzs1VJE
http://www.youtube.com/watch?v=1rwsrT1B_g8
http://www.youtube.com/watch?v=E1ilzDw8UQg
http://www.youtube.com/watch?v=3BcJl7LyNmI
http://www.youtube.com/watch?v=2paBQShqXlA
http://www.youtube.com/watch?v=boeN2qFSXhM

ரவி சொன்னது…

இந்த நிகழ்ச்சியையும் பார்த்தேன். விவசாயிகளின் கருத்துக்கள் மட்டம் தட்டப்பட்டு, வியாபாரிகளின் குரல் நீங்கள் சொல்வதைப்போல ஓங்கித்தான் ஒலித்தது. அதிலும் அந்த புள்ளிவிவர கனேசன். அதிலும் சேலஞ்சு கருப்பன். ஆஹா..

என்னைப்பொறுத்தவரை நவீன விவசாயத்தில் உள்ள சொட்டுநீர்பாசனம், ட்ராக்டர் போன்றவைகளை ஏற்றுக்கொள்ளலாம். உரம்,விஷம்,அம்மோனியா டிஏபி மட்டும் அய்யோ வேண்டாம்

"உழவன்" "Uzhavan" சொன்னது…

பெரும்பாலும் கேவலமான தலைப்புகளில்தான் விவாதம் நடைபெறுகிறது.

மயிலாடுதுறை சிவா சொன்னது…

இந்த பதிவை படிக்கும் பொழுது மனம் மிகவும் வேதனையாக உள்ளது.

நீயா நானா மேல் இருந்து மதிப்பு சுத்தமாக குறைந்து விட்டது.

மயிலாடுதுறை சிவா...

senkandan சொன்னது…

நானும் கலந்துகொண்டேன் மிகவும் வருத்தப்படுகிறேன் என் நேரத்தை வீனடிததற்குகாக

Unknown சொன்னது…

தொலைக்காட்சிகளையே பார்க்காதால்தான் தங்களின் சுயசிந்தனை சரியான திசைவழியில் ப்யணிக்கின்றது. "டெலிவிஷம்" கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் நஞ்சு என்பதை நிரூபணமாக்கி இருக்கின்றீர்கள். மறுபக்கம் தெரியும்பொழுதுதானே உண்மை வெளிச்சத்திற்கு வருகின்றது.

velubaai சொன்னது…

makin sense or nonsense ??

velubaai சொன்னது…

im so ashamed i cant type in tamil

velubaai சொன்னது…

nallavayum kettavayum kettu varuvathillai

velubaai சொன்னது…

mudivu???.... survival of tha fittest all say but..................it becomes tha shittest

@Ganshere சொன்னது…

நான் ஆரம்ப காலங்களில் மட்டுமே இந்நகள்ச்சியை (oops) நிகழ்ச்சியைப் பார்த்தேன். சலிப்பூட்டுவதாக இருந்ததால் பிறகு பார்ப்பதில்லை

பெயரில்லா சொன்னது…

உங்கட்இந்த சப்புக்கொட்டுற - இத்துப்போன நிகழ்ச்சி நீயா நானா வுக்குப் பதிலாக ஒரு நல்ல கருத்துள்ள, இலக்கிய கதைகள் கொண்ட திரைப்படத்தைப் போட்டால் எவ்வளவு மக்களுக்குப் பிரயோசனமாக இருக்கும். விஜய் நீ வீக்காரருக்கு பறோக்கிராம் செய்ய வேற ஆளே கிடைக்கேல்லையா

பெயரில்லா சொன்னது…

விஜய் ரீவீ யை சிறீலங்கா அரசிடம் அடகுவைத்துவிட்ட நீயா - நானா தயாரி;பாளர் கோபிநாத் ஓர் தமிழினத் துரோகி! அவரை தமிழ் மக்களும், தமிழ் ஊடகங்களும் இனம் கண்டு ஓரம் கட்ட வேண்டும். துரோகிகள் இனித் தமிழரிடையே தோன்றக்கூடாது,

கருத்துரையிடுக