27 ஏப்ரல், 2010

சென்னை உயர்நீதிமன்றம் – அம்பேத்கர் சிலை – நடந்தது என்ன?

இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அம்பேத்கருக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திலோ, ஏனைய உயர்நீதிமன்றங்களிலோ சிலை இல்லை. ஆனாலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவ வேண்டும் என்று சுமார் 10 ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுப்பப்பட்டதன் விளைவாக அம்பேத்கரின் ஆளுயர சிலை கடந்த 25-04-2010 ஞாயிறு அன்று நிறுவப்பட்டது.

அம்பேத்கரின் சிலை நிறுவும் விழா குறித்து எந்த ஊடகத்திலும் அறிவிப்போ, விளம்பரமோ வெளியானதாக தெரியவில்லை. எனினும் இந்த விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்வதாக வெளிவந்த செய்திகள் வழக்கறிஞர்களிடம் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியது.

கடந்த 19-02-2009 அன்று நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் காவல்துறையினரால் தாக்கப்பட்டதும், இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட உயர் அதிகாரிகளுக்காக வாதாடுவதற்கு உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானை ஒரு நாளைக்கு ஐந்தரை லட்சம் ரூபாய் (5,50,000 -00) வீதம் 11 நாட்களுக்கான கட்டணம் கொடுத்து அழைத்து வந்தது, நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டதோடு, தண்டனை வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுத்தது ஆகியவை காரணமாக முதல் அமைச்சர் மீது வழக்கறிஞர்களிடம் இந்த அதிருப்தி நிலவியது.

இந்த அதிருப்தியை வெளிக்காட்டும் விதத்தில் கடந்த சில நாட்களாக துண்டு பிரசுரங்களை விநியோகித்தல், ஆர்ப்பாட்டம் நடத்துதல் போன்ற செயல்பாடுகளும் நடைபெற்றன.

இருந்தபோதிலும், விழா நடந்த 25-04-2010 அன்று வழக்கறிஞர்களின் அடையாள அட்டையைக்கூட பரிசோதிக்காமல் காவல்துறையினர் அமைதி காத்தனர். இதை பயன்படுத்தி வழக்கறிஞர் அல்லாத பலரும் நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்தனர்.

முதலமைச்சர் பேசத்தொடங்கியதை அடுத்து, மனித உரிமை பாதுகாப்பு குழு என்ற அமைப்பை சார்ந்த ஐந்தாறு வழக்கறிஞர்கள், அனுமதியோம்! அனுமதியோம்! என்று முழக்கத்தை தொடங்கவே, அதை எதிர்பார்த்திருந்ததைப்போல அந்த வழக்கறிஞர்கள் மீது கடும் தாக்குதல் தொடங்கியது. காவல்துறையினர் தேவைப்பட்ட அளவில் அங்கு இல்லாததால் இந்த தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை.
காவல்துறை வேடிக்கை பார்க்க நடந்த தாக்குதல்!
  
இந்த தாக்குதலை படம்பிடிக்க முயன்ற மீடியா காமெராக்கள் பறித்தெடுக்கப்பட்டு உடைக்கப்படடன.  காமெராமேன்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக வந்த செய்தியாளர்களும் தாக்கப்பட்டனர். காவல்துறை இதையும் வேடிக்கைப் பார்த்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டவர்கள் கண் முன்பே நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த வழக்கறிஞர்கள் மீதே கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்த காவல்துறையினர், தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளர்களின் புகாரைப் பதிவு செய்யவே மறுத்தனர்.

எழும்பூரில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் குழுமிய செய்தியாளர்கள் அங்கு பணியாற்றும் உயரதிகாரிகள் பலரையும் சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த அனைத்து முயற்சிகளும் பலனளிக்காமல் போகவே, உயர்நீதிமன்றம் அருகே உள்ள எஸ்பிளனேடு காவல்நிலையத்திற்கு வந்தனர். செய்தியாளர்கள் தாக்கப்பட்டது மிகவும் சிறிய சம்பவம்: இது குறித்து தனிப்புகாரோ, விசாரணையோ தேவையில்லை! என்பதையே அங்கிருந்த அனைத்து அதிகாரிகளும் வெவ்வேறு வார்த்தைகளில் கூறினர்.

என்டிடிவி-ஹிந்து தொலைக்காட்சியின் செய்தியாளர் பெர்டில்லாவின் கடும் போராட்டம் மற்றும் ஏனைய செய்தியாளர்கள் அணியாக திரண்டு முதல்வரின் இல்லத்திற்கு சென்று புகார் செய்வதாக முடிவெடுத்ததன் காரணமாக, காலை 11 மணியளவில் நடந்த சம்பவத்திற்கு மாலை ஆறு மணியளவில் புகார் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை நகல் வழங்கப்பட்டது.


நீதிமன்றத்தில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஆளுங்கட்சி சார்பான தொலைக்காட்சிகளிலோ, பத்திரிகைகளிலோ செய்தி வெளியாகவில்லை என்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நடுநிலை பத்திரிகைகளாக வேடம் தரிக்கும் மாலைமுரசு, மாலைமலர், தினத்தந்தி போன்ற பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகவில்லை.

செய்தியாளர்கள் கொடுத்தப்புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்தது குறித்தும் என்டிடிவி-ஹிந்து தொலைக்காட்சியைத் தவிர வேறு எந்த ஊடகத்திலும் செய்தி வெளியானதாக தெரியவில்லை.

செய்தியாளர்களுக்கு எந்த ஆட்சியிலும் உரிய பாதுகாப்பு இல்லை என்பது மறுபடியும் உறுதி செய்யப்படுகிறது. அரசின் சாதனைகளைக் கூறும் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு மட்டுமல்லாமல் அனைத்து வசதிகளும் கிடைக்கும். ஆனால் அரசை கேள்வி கேட்கும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தக்கூடிய செய்தியாளர்களின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை நிலை.

இந்த சம்பவம் குறித்து கடந்த 26-04-2010 அன்று சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்து பார்க்கலாம். 

(தொடரும்)

8 கருத்துகள்:

இளங்கோ சொன்னது…

அய்யா! நீதி மன்ற வளாகத்திற்குள் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது என்றும் சொல்லுகிறீர்கள்: நடவடிக்கை எடுத்தால்,ஏன் எடுத்தார்கள் என்றும் கேட்கிறீர்கள்.என்னதான் சொல்ல வருகிறீர்கள்.ஜம்மு காஷ்மீர் போல அந்த வளாகத்திற்கென்று ஏதேனும் சிறப்பு சட்டங்கள் உள்ளனவா? போலீஸ் அராஜகத்தை எதிர்ப்பது என்பது வேறு.

Dr.Rudhran சொன்னது…

ndtv தாக்கப்படாதிருந்தால், அதிலும் செய்தி வந்திருக்காது!

Mugundan | முகுந்தன் சொன்னது…

அய்யா,

காவல் துறை (போலிசு) ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தாலும்,
விபரீதமாகி இருக்கும்.
உண்மையை எடுத்து கூறுவதற்கு ஒரு ஆளாக இருந்தாலும்
ஒரு இயக்கமாக இருந்தாலும் ஒன்றுதான்.
கலைஞர் ஊடகங்களையும் தன் கைப்பாவையாக‌
வைத்திருக்க விரும்புகிறார்.

சுந்தரராஜன் சொன்னது…

கருத்துக்கு நன்றி இளங்கோ!
உங்கள் கேள்விகளுக்கான பதிலை அடுத்த பதிவில் தர முயற்சிக்கிறேன்.

நன்றி Dr.Rudhran !
நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம்.

நன்றி எண்ணத்துப்பூச்சி!

? சொன்னது…

மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த 6 வழக்கறிசஞர்கள் 2009 பிப்ரவரி 19 ல் நடந்த சென்னை உயர்நீதிமன்ற போலீசு கொலைவெறி தாக்குதலுக்காக தீர்ப்ப‍ளிக்கப்பட்ட 4 போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஞாயிறு அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் பேசத் துவங்கும் போது கறுப்புக் கொடி காட்டி எதிர்த்து முழக்கமும் இட்டனர். இது ஒரு ஜனநாயக நடவடிக்கைதானே.

ஆனால் மறுநாளாகிய நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் சிபிஎம் சட்டமன்ற கட்சி தலைவர் பாலபாரதி அவர்கள் இந்த நடவடிக்கையை முன் அனுமதி பெற்றுத்தான் செய்ய வேண்டும் என்றும், கறுப்பு கொடி காட்டியவர்களின் மீது ரவுடிகள் தாக்குதல் நடந்த போதும் பதட்டப்படாமல் சாதுரியமாக கையாண்டு தொடர்ந்து பேசியதை சரியான அணுகுமுறை என்றும் பாராட்டி இருக்கிறார். திமுக அனிச்ச மலர்கள் கூட நாணும் அளவுக்கு அவரது பேச்சு ஜனநாயக விரோதமாக இருப்பது பற்றி இடதுசாரிகளின் (என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களின்) கருத்து என்ன•.

மனித உரிமை பாதுகாப்பு மையம்தான் சிதம்பரம் நடராசர் கோவில் தீட்சிதர் உரிமையை சட்ட மற்றும் மக்கள்திரள் வழியில் போராடி மறுக்க செய்த அமைப்பு என்பது தாங்கள் அறிந்த ஒன்றுதான். இன்றும் கூட மக்களிடம் ரயிலிலும், பேருந்திலும் பேசி 5, 10 ரூபாய்களாக சேகரித்துதான் டெல்லி உச்சநீதி மன்றம் வரை தீட்சிதர்களை எதிர்த்து அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கலை இலக்கிய கழகம் இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு இணையாக பார்ப்பனீய எதிர்ப்பையும் தேவையான தருணங்களில் முன்வைக்கும் அமைப்பு. சாதி தீண்டாமை ஒழிப்பிற்காக பல்வேறுபட்ட இயக்கங்களை கண்ட இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசியின் எம்.எல்.ஏ வும் முன்னாள் நக்சல்பாரியுமான ரவிக்குமார் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். தீட்சிதர் போராட்டத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பிறகுதான் சிவனடியார் ஆறுமுகசாமியை யானை மீதேற்றி திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட வைத்தனர். கருணாநிதி அறியாத ஒன்றல்ல அது. காலம் தோறும் அழகிரிக்கு தாழ்த்தப்பட்டவர்களில் பெண் எடுத்த்தை சாரு நிவேதிதா ஒரு காலத்தில் ஒரு விதவையை திருமணம் செய்தவன் நான் என்று சொல்லிக் கொண்டு திரிந்த்தை போல அவரும் இதை சொல்லத்தான் செய்கிறார். தென்மாவட்ட கலவரத்தில் எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்ல்லாம் அவரது ஆட்சி இருந்தால் அவரது வாயில் இருந்து இதுதான் வருகிறது.

2006 ல் திருவரங்கம் அரங்கநாதன் கோவில் முன் உள்ள பெரியாரின் சிலை உடைக்கப்பட்ட போது ராமனை அந்த இடிந்த சிலை முன்னலே தீ வைத்து கொளுத்தி, வீதி முழுவதும் சங் பரிவார் நாயகனான ராமனை செருப்பால் அடித்து ஊர்வலம் வந்த இயக்கம் மக்கள் கலை இலக்கிய கழகம்தான். இதுவும் கருணாநிதி அறியாத்த‍ல்ல.

குஜராத் படுகொலை நடந்த பின் 2003 ல் பார்ப்பனீய பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடத்திய அமைப்பு ம•க•இ.க• அதில் குஜராத் முசுலீம் மக்களில் நேருரைகளும், அமைதி காத்த நடுநிலை இந்துக்களின் மீதான விமர்சனமும் வைக்கப்பட்டது. அந்த தருணங்களில் தங்களை இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்களது அரசியல் ஓட்டாண்டித்தனத்தின் காரணமாக நடுத்தர இந்துக்களின் கள்ள மவுனத்தை கேள்விக்குள்ளாக்காமல் கள்ள மவுனம் சாதித்தனர். சிதம்பரம் நடராசர் கோவிலை மீட்க தீட்சித பார்ப்பானை திட்டுவதற்கு பாப்பான்னு சொல்ல கூடாது பிராமணன்னு சொல்லணும் என்ற கொள்கை மாறுபட்டு போராட்ட ஐக்கிய முன்னணியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள் வேண்டியது. அந்தக் கூட்டத்தில் மீனாட்சி புரம் மக்கள் காசுக்காக மதம் மாறவில்லை என்று நேருரைகளை நிகழ்த்த வைத்தும், திண்ணியம் பிரச்சினை நேருரைகளை நிகழ்த்த வைத்தும் பார்ப்பனீயத்தை திரை கிழிக்கும் வேலையை செய்தனர்.

? சொன்னது…

Posted on 04/27/2010 at 10:31 am

தொன்னூறுகளின் பிற்பகுதியில் தனிக்குவளைக்கு எதிராக மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்கம் எடுத்தவர்கள் ம•க•இ.க வின் தோழமை அமைப்பான் விவசாயிகள் விடுதலை முன்னணியினர்தான். மதுரை போன்ற தேவர் சாதி ஆதிக்கம் நிலவுகின்ற பகுதிகளில் கூட தேவர் சாதி வெறியை கண்டித்து மக்களிடம் பேச முடிந்த அமைப்பும் ம.க•இ.க மற்றும் அவர்களது மாணவர் அமைப்பான பு.மா.இ.மு வும்தான். அந்த காலகட்டத்தில் நடந்த சாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் விழுப்புரம் பகுதிகளில் மாத்திரம் பல தோழர்களை மேடையில் வைத்து சாதி மறுப்பு திருமணம் செய்ய வைத்த்தும், சமீபத்தில் பார்ப்பன இந்து சாதி அமைப்பின் பெண்ண்டிமை சின்னமான தாலியை அறுப்பதற்கு விழா எடுத்து பரிவார கும்பலுடன் ஓசூர் பகுதியில் மோத நேர்ந்த்தும் அவர்களது தோழமை அமைப்பான பு.ஜ•தோ.மு வின் வேலைகளில் ஒன்றுதான்.

நாட்டில் இந்து மதவெறி அமைப்புகள் கொடி கட்டி பறக்க உதவிய பாபர் மசூதி இடிப்பில் தலித் மற்றும் பிற்பட்ட மக்களை அடியாள்படையாக இந்து மத வெறியர் கள் பயன்படுத்த முனைந்த போது, எல்லோரும் இந்து அல்ல என்பதை அம்பலப்படுத்துவதற்காக திருவரங்க நாதனை துயில் எழுப்பும் வேலைக்கு அம்பேத்கர் மற்றும் பெரியார் படங்களை கருவறைக்குள் கொண்டு சென்ற தோழர்கள் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர்தான்… இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். ஆண்ட பரம்பரையா அடிமை பரம்பரையா, காவி இருள், உரை வீச்சுக்கள் என இவர்களது கேசட்டுகள் கேட்காத மண் எது என்ற அளவில் வேலைகளை செய்து கொண்டு இருக்கும் தோழர்கள் இந்த நக்சல்பாரிகள்.

இது தெரிந்த போதும் பெரியாரை அவதூறு செய்யும் ரவிக்குமார் தனது பிழைப்புக்கு இவர்களை லீனா போலவே கண்டித்து சட்டப்படி தண்டிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பேசுகிறார். இடதுசாரிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களோ எதுனாச்சும் சட்டப்படிதான் நடக்க வேண்டும் என போலீசு வேலை பார்க்கிறார்கள். இந்த லட்சணத்தில் இருந்தால் நீதிமன்றம் ஏன் உங்களுக்கு தொழிற்சங்கம் கட்டுவதே சட்ட விரோதம் என்று அறிவிக்காமல் இருப்பான்.

அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குவதற்கான கருவி என கம்யூனிசத்தின் அரிச்சுவடி படித்தவர்களுக்கு கூட தெரியும். அரசின் வெளிப்படையான வடிவங்களில் நீதிமன்றமும், போலீசும் ஒன்றுதான். பொதுமக்களும், வக்கீல்களில் இளையோரும்தான் பெரும்பாலும் தாக்கப்பட்டார்கள் 2009 பிப். 19 ல். ஆளும்வர்க்கத்தின் இந்த அடியாள்படைக்கு எதிரான நடவடிக்கைக்கு வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட கருப்பு கொடியை முதல்வர் போராட்டத்தை திசைமாற்ற சட்டமன்றத்தில் முயன்ற போது அதனை யாரும எந்த இடது சாரியும் தடுக்கவோ எதிர்க்கவோ முன்வரவில்லை. மாறாக போராடியவர்களை விமர்சித்துதான் பேசியுள்ளனர். அதிமுக தன்னை ஒரு ஜனநாயகவாதி போல கருதிக் கொண்டு இதில் பேசுவதெல்லாம் வேடிக்கை.

பெயரில்லா சொன்னது…

தொடரும் போட்டுட்டு கம்முன்னு இருந்தா எப்பிடி?

பெயரில்லா சொன்னது…

தினமணியில் கே.எம்.விஜயன் எழுதியுள்ள கட்டுரை பற்றி உங்கள் கருத்து என்ன?. சிலை திறப்பு விழாவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து என்ன செய்ய முடியும்.வழக்கறிஞர் சங்கங்கள் சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்காத போது நாலைந்து பேர் கோஷமெழுப்பினால் அரசு பணிந்து விடுமா.செய்தியாளர்கள் மீதான தாக்குதலை கண்டிக்க வேண்டும்.

கருத்துரையிடுக