19 மே, 2010

இந்தியா டுடே-வை மிரட்டும் ஜாதிப்பேய்!

சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து தமிழ்நாட்டில் பேச வேண்டியவர்கள் தேவையான அளவு பேசாது இருக்கும் நிலையில், “இந்தியா டுடே” இதழ் இந்த பிரசினை குறித்து அட்டைப்பட கட்டுரை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த 2008ம் ஆண்டு அமரர் வி.பி. சிங் இறந்தபோது, “மண்டல் நாயகனான இவர் இந்தியாவின் அரசியலில் மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவர்” என்று எழுதி தனது வக்கிரபுத்தியை காட்டியுள்ளது.

தற்போதைய விவகாரத்திலும் இந்தியா டுடேவின் ஒரே கவலை: சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு மண்டல் கமிஷன்-2 ஆகிவிடும் என்பதே! இதை இந்தியா டுடே மிகவும் வெளிப்படையாக பதிவு செய்துள்ளது. லாலூ, முலாயம், ராமதாஸ் போன்றவர்களின் நிர்பந்தத்திற்கு காங்கிரஸ் கட்சி அடிபணிவதாக இந்தியா டுடே மிகவும் வருந்துகிறது.

ஏற்கனவே இந்திய சமூகத்தில் இருக்கும் சாதியப் பிளவுகளை, இம்மாதிரியான சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலும் அதிகரிக்கும் என்று இந்தியா ரத்தக் கண்ணீர் வடிக்கிறது.

வர்ணாசிரம அடிப்படையில் மனிதனை மனிதன் சாதியின் பெயரால் சுரண்டுவதை எதிர்த்து எதையும் செய்யாத "இந்தியா டுடே"வின் வருத்தம் நமக்குப் புரியாமல் இல்லை. சாதியப் பிளவுகள் இல்லாத சமத்துவ சமூகம்தான் நமது விருப்பமும்! இதன் முன்னோட்டமாகவே மார்க்சிய-லெனினிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது "இடஒதுக்கீட்டு சலுகைகள் கிடைக்காது!" என்று தெரிந்தும் தங்களுக்கு சாதி இல்லை என்று பதிவு செய்கிறார்கள்.

ஆனால் இப்போது நடைமுறையில் இருக்கும் சாதியப் பிளவுகளை ஒழிக்க இந்தியா டுடே என்ன பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது? என்பதே நமது கேள்வி.

இஸ்லாமியர்களை குறிவைக்கும்போது "பொது சிவில் சட்ட"த்தை கையிலெடுக்கும் யுக்தி இது! பொது சிவில் சட்டத்துக்கு நாமும் எதிரிகள் கிடையாது. ஆனால் அதற்கு முன் "பொது இந்து சட்ட"த்தை அமல் படுத்த வேண்டும். சிதம்பரம் கோவிலில் தமிழில் பாட அனுமதித்தது போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் தமிழிலும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலும் பாடுவதை கட்டாயமாக்கும், கருவறைக்குள் அனைத்து இந்துக்களையும் அனுமதிக்கும் பொது இந்துச் சட்டம் அமலாக்கப்பட்டப் பின்னர் பொது சிவில் சட்டம் குறித்தும் அவசியம் ஆலோசித்தே ஆக வேண்டும்.

இதேபோல சாதியக் கட்டுமானங்களால் சீர்குலைந்து படிப்பறிவு முன்பொரு காலத்தில் மறுக்கப்பட்டதால் ஆதிவாசிகளாகவும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களாகவும் பன்னெடுங்காலமாக வாழ்ந்து அதனால் கற்றல் திறனில் இயல்பாகவே பின்தங்கியுள்ள மக்களுக்கு சிறப்பு வாய்ப்புகளை ஏற்படுத்தி, சமூகத்தில் அனைத்துத் தரப்பினரும் சமநிலையில் உள்ளபோது இந்தியா டுடேவின் பரிந்துரை இல்லாமலே சாதியப் பாகுபாடுகள் உலர்ந்து, உதிர்ந்து விடும்.

அதற்கான முன் தயாரிப்பு வேலைகளுக்காகத்தான் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

#அப்போதுதான் மக்களின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் மீடியாத்துறையில் சிறுபான்மையினரும், ஆதிவாசிகளும், தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் அதிக அளவில் சுதந்திரமாக பணியாற்றும் நிலை வரும்.

#அப்போதுதான், முலாயம், லாலூ, ராமதாஸ் போன்றவர்களின் அரசியலை விமர்சிக்கும் போது அவர்களுடைய சாதி குறித்த விமர்சனங்களும் முன்வைக்கப்படுவதுபோல ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங், சிதம்பரம், வாஜ்பாய், அத்வானி போன்றவர்களின் அரசியல் விமர்சிக்கப்படும்போது அவர்கள் சார்ந்த சாதியும் விமர்சிக்கப்படும்.

#அப்போதுதான், இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக இந்தியாவின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் செயலில் பழங்குடியினர், ஆதிவாசிகள், தாழ்த்தப் பட்டவர்கள் ஆகியவர்களின் வாழ்வாதாரங்களை ஆயுதமுனையில் பறிமுதல் செய்து அம்மக்களை அநாதைகளாக்கும் அரச பயங்கரவாதம் வெளியாகும்.

#அப்போதுதான், ஐபிஎல் மோசடி, இந்திய மருத்துவ கவுன்சில் மோசடி போன்றவற்றில் சிக்கும் பெருந்தலைகளின் சாதிய அடையாளங்கள் திட்டமிட்டு மறைக்கப்படும் அராஜகங்கள் வெளிவரும்.

#அப்போதுதான் மனித உரிமைகளை மீறும் சட்டங்களை அமல் படுத்துவதற்காகவே ஆயுதப்படைகளில் உள்ள சாமானிய வீரர்கள் ஆபத்தான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு களப்பலியாக்கப்படுவது அம்பலப்படுத்தப்படும்.

#அப்போதுதான் இந்த ஊடகங்கள் ஆளும் வர்க்கங்களுடனும், வர்த்தக புள்ளிகளுடன் கூட்டு சதியில் ஈடுபட்டு மக்களுக்கு எதிராக செயல்படுவது வெளியாகும்.

மண்டல் கமிஷன் பரிந்துரைக்கு எதிராக மருத்துவர்கள் போர்க்கொடி தூக்கியதை சமூக நீதிப் போராட்டமாக சித்தரிக்கும் இந்தியா டுடே, மருத்துவத்துறையில் பெருகி வரும் ஊழல்களுக்கு எதிராக அதே மருத்துவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுப்பவில்லை. அப்படி கேள்வி எழுப்பினால் “மாற்று மருத்துவ டாக்டர் படிப்பு!” என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கும் போலி மருத்துவக் கல்லூரிகளுக்கு விளம்பரம் செய்து கல்லாவை நிரப்பும் “இந்தியா டுடே”வை அதே மருத்துவர்கள் செருப்பால் அடிப்பார்கள்.

---
போபால் விஷவாயு விபத்து ஏற்பட்டு 25 ஆண்டுகள் கழிந்தபின்னரும் அந்த விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காததை கண்டிப்பதற்காகவோ,

இந்தியாவின் வேளாண்மையையே பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைப்பதற்காக கொண்டுவரப்படும் இந்திய மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தையோ,

இந்தியாவின் பாதுகாப்புக்கே உலைவைக்கும் “சிவில் லையபிளிட்டி ஃபார் நியூக்ளியர் டேமேஜ் பில்” குறித்தோ

அட்டைப்பட சிறப்புக் கட்டுரை எழுதாத, இன்னும் சொல்லப்போனால் மேற்கண்டவற்றை வரவேற்கும் “இந்தியா டுடே”, சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு எதிராக மட்டும் உரத்துக் குரல் எழுப்புகிறது, சாதிப்பேயை விரட்ட வேண்டும் என்று!


எந்த ஒரு அம்சத்திலும் நல்லது, கெட்டது என்ற இரண்டும் இருக்கவே செய்யும். சிலருக்கு சில அம்சங்கள் நல்லதாகவும், வேறு சிலருக்கு அதை அம்சங்கள் கெட்டதாகவும் இருக்கும். இதுவரை இருந்த சமூக அமைப்பு இந்தியா டுடே சார்ந்த சிறுபான்மையினருக்கு நல்லதாக இருந்தது. ஏனெனில் தகுதி, திறமை என்ற பெயர்களில் இந்த சமூகத்தின் பெரும் பகுதியை அவர்களே ஆக்கிரமித்து இருந்தனர்.

இப்போது அந்த நிலை தகர்ந்து வருகிறது. பெரும்பான்மை மக்களின் நிலை வெளியானால் சிறுபான்மையினரின் வாய்ப்புகள் குறுகுவது இயல்பானதே. இதை ஏற்கவியலாமல் கூக்குரல் இடுகிறது, இந்தியா டுடே!

சாதியின் பெயரால் பெரும்பான்மையினரை ஆதி்க்கம் செய்துவந்தபோது தேவதையாக தெரிந்த சாதி, இப்போது ஆதிக்கம் தகர்ந்த நிலையில் அன்றாட வாழ்வுக்கே ஆபத்து வரும்போது பேயாகத் தெரிந்தால் அது பார்வைக் கோளாறுதான்!

ஆனால் இந்த சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து பெரும்பான்மை மக்களிடம் தேவையான விவாதங்களோ, விழிப்புணர்வோ இல்லை. சமூக நீதிக்காக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் சாதிவாரியான புள்ளிவிவரங்கள் இல்லை என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதை சரியாக புரிந்துகொண்டாலே சாதிவாரியான கணக்கெடுப்பின் தேவை புரியும்.

எனவே சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விவாதங்களை எழுப்பி இந்த கணக்கெடுப்பை முறையாக மக்கள் பயன்படுத்தும்படி செய்யவேண்டியதே சமூகநீதியின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் தற்போதைய முக்கிய பணி!

17 மே, 2010

ஈழம்: ஆன்மாவின் மரணம் – கார்ட்டூன்களாய் ஒரு பதிவு!

“யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என அனைத்து உலகத்தையும் ஒன்றாய் கருதிய இனத்தின் ஒரு பகுதி மிகக்கொடுரமாய் அழிக்கப்பட்டது. ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியை காட்டியே இந்திய தேசப்பற்றை பள்ளி மாணவர்களின் மனதில் விதைக்கும் இந்தியச் சமூகம் அதைப்போல பல்லாயிரம் மடங்கு நடந்த இந்தக் கொடுமையைக் கண்டு கண்மூடவில்லை. தாம் கொடுத்த ஆயுதங்களும், தளவாடங்களும் சரியாக வேலை செய்கின்றனவா என்று சரிபார்த்து திருப்தி அடைந்தன.

தமிழகத்திலோ ஈழத்தின் மீதான அறமற்ற போர்கூட தேர்தல் அரசியலில் பகடைக்காயாக அனைத்து அரசியல் கட்சிகளாலும் நிறம் மாற்றப்பட்டது.

மக்களின் மனசாட்சியோ ஊடகங்களின் துரோகங்களால் மரத்துப்போக செய்யப்பட்டது. கொத்துக்குண்டுகளால் சொந்த இனம் அழிக்கப்பட்ட நிலையில் தாயகத் தமிழன் இலவச வண்ணத்தொலைக்காட்சியில் “மானாட, மயிலாட” பார்த்து தன்னிலை மறந்து கொண்டிருந்தான். மற்றொரு தொலைக்காட்சியோ ஆயிரமாயிரமாய் தமிழர்கள் கொல்லப்பட்டதை இருட்டடிப்பு செய்துவிட்டு, சென்னை நாய்க் கண்காட்சியில் சில நாய்கள் இறந்ததை தலைப்புச் செய்தியாக்கின.

பூணுல் அணிந்த பார்ப்பன ஊடகங்களின் தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகளும், பூணுல் அணியாத நவீன பார்ப்பனர்களின் துரோகச் செயல்பாடுகளும் போட்டி போட்டு ஒரு இனப்படுகொலை நிகழ்ச்சியை புறக்கணித்தபோது சில பத்திரிகையாளர்கள் மட்டும் உணர்வோடு செயல்பட்டனர். அவர்களில் பாலாவும் ஒருவர்!

மற்ற கலைஞர்களைப் போல அறையில் அமர்ந்து மற்ற ஊடகங்கள் வழியாக சமூகத்தை பார்க்காமல், அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்பதன் மூலம் மக்களுடன் நேரடியாக உறவு கொண்டவர். 

குமுதம் வார இதழிலும், குமுதம் இணையத்திலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும், ஈழத்தமிழரின் உரிமைப்போரை தமது சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொண்ட அனைத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் கார்ட்டூன் போரை நடத்தியவர்.  

இந்த கார்ட்டூன்கள் "ஈழம்: ஆன்மாவின் மரணம்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

அவரது கார்ட்டூன்கள் மக்களுக்கு ரெளத்திரம் பழக்க முயற்சித்தன. அறச்சீற்றம் என்பதை அறிமுகப்படுத்த விழைந்தன. தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்களும் இவரது நெற்றிக்கண் பார்வையால் சுட்டெரிக்கப்பட்டார்கள். 
அசிங்கமான மனம் படைத்த அரசியல்வாதிகளைக்கூட மிகவும் அழகாக வரைந்து தனது விமர்சனம் அந்த தலைவர்களின் கொள்கை மீதுதான் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் கார்ட்டூனிஸ்ட் பாலா.
போரின் போக்குகளைவிட அதற்கு தமிழக மற்றும் இந்தியத் தலைவர்களின் எதிர்வினைகளே இந்த கார்ட்டூன்களாக உருமாறியுள்ளன. 
குறிப்பாக உண்ணாவிரத நாடகமும், அதைத்தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் சரணடைந்த மக்கள் கொல்லப்பட்ட அவலமும் அவரை மிகவும் பாதித்துள்ளது. 
இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் கருப்பு நாளாக அமைந்த 19-02-2008ம் கார்ட்டூனாக பதிவாகியுள்ளது. 
போரின் முடிவு என்று கூறப்படும் முள்ளிவாய்க்கால் சம்பவங்களும், அதைத் தொடர்ந்து தமிழகத் தலைவர்களின் செயல்பாடுகளும் சக்தி மிக்க வரிகளால் வரையப் பட்டுள்ளது. 
தமிழ்ச் செம்மொழி மாநாடும் பாலாவின் கார்ட்டூன் பார்வைக்கு தப்பவில்லை.
எஞ்சியுள்ள தமிழர்களின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலையில் அங்கு தேர்தல் நடந்ததும் அதில் பேரழிவுக்கு காரணமானவர்கள் வேடமிட்டதும்கூட நயம்பட பதிவாகியுள்ளது.
இது போன்ற இன்னும் ஏராளமான கருத்துப்படங்களோடு "ஈழம்: ஆன்மாவின் மரணம்" என்ற நூலாக பாலாவின் படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இந்த நூலில் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு எதிராக அதிகமான கார்ட்டூன்கள் இருப்பதாக சில "நடுநிலை" வாசகர்கள் விமர்சனம் செய்யக்கூடும். அவர்களுக்கு இலங்கைப் பத்திரிகையாளர் 'லசந்த விக்ரமதுங்க'வின் வரிகளைத்தான் பதிலாக தரவேண்டும். " எதிர்கட்சிகளை விமர்சனம் செய்வதைவிட தீவிரமாக அரசை விமரிசனம் செய்வது ஏனென்றால், கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேனை தவிர்த்து, பீல்டிங் பகுதியில் பந்து வீசுவதில்லையோ, அதேபோல் ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிராகத்தான் தீவிரமாக விமர்சனங்களை வைக்க முடியும்"

இந்நூலை வெளியிட்ட குமுதம் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்!

நூல் கிடைக்குமிடம்: 
குமுதம் பு(து)த்தகம் வெளியீடு,
பழைய எண்: 151 புதிய எண்: 306 , புரசைவாக்கம் நெடுஞ்சாலை, 
சென்னை - 600 010

தொலைபேசி: 2642 2146, 4591 9141

நூலின் விலை: ரூ.65/= மட்டுமே

கார்ட்டூனிஸ்ட் பாலாவை தொடர்பு கொள்ள: 
cartoonistbala@gmail.com

12 மே, 2010

வேலூர் சிறையில் நளினியால் உயிர் பிழைத்தேன்!

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் வசிக்கும் சாரதாவுக்கு, வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே உள்ள மருதாசலம்தான் சொந்த ஊர். ஆனால் சாரதாவுக்கு இப்போது சொந்த ஊர் பெயரைக் கேட்டாலே உடல் நடுங்கும் அளவுக்கு ஏராளமான மோசமான அனுபவங்களை பெற்றுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சாரதாவுடைய தாயாரின் உடல்நிலை மோசமானது. இந்த தகவல் கிடைத்த சாரதா ரயிலில் வேலூருக்கு பயணப்பட்டார். தாயாரின் மோசமான உடல்நிலை, இரவுப் பயணம் தந்த களைப்பு காரணமான பதட்டத்தில் அவரது பெட்டியை போலிருந்த மற்றொரு பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

பெட்டியை தவறவிட்டவர் கொடுத்த புகாரை அடுத்து ரயில்வே போலிஸார் விசாரணையை தொடங்கினர். ரயிலில் கேட்பாரற்று கிடந்த சாரதாவின் பெட்டியை கண்ட போலிஸார் அதிலிருந்த முகவரியை தேடி சாரதாவை கண்டடைந்தனர். அவசரத்தில் பெட்டியை மாற்றி எடுத்து வந்ததை ஒப்புக் கொண்ட சாரதா, அந்த பெட்டியை காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறார்.

அந்த பெட்டியை திருடும் நோக்கம் சாரதாவுக்கு எந்த நிலையிலும் இருந்ததில்லை. அவரது கல்வியறிவின்மை மற்றும் தாயாரின் மோசமான உடல்நிலை காரணமாக அவரது பெட்டி காணாமல் போனது குறித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த உண்மைகள் தெரிந்திருந்தும் சாரதா மீது திருட்டுவழக்கு புனையப்பட்டு சாரதா வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் பணத்தை வைத்திருப்பது குற்றம். ஆனால் அந்தக் குற்றத்தை செய்யாத கைதிகள் மிகவும் குறைவு. சிறை அதிகாரிகளுக்கும் இது தெரியும். ஆனால் அந்த பணத்தில் கணிசமான அளவு அதிகாரிகளுக்கு செல்வதால் யாரும் இதுகுறித்து கவலைப்படுவதில்லை.

சாரதாவிடமும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் இருந்திருக்கிறது. அதை வைத்திருப்பது குற்றம் என்பது சாரதாவுக்கு அப்போது தெரியாது. அவரை சோதித்த அதிகாரிகளும் சரியாக சோதிக்காத நிலையில் சாரதா பணத்துடன் சிறைக்குள் சென்றுவிட்டார். உள்ளே சென்றவுடன் இதைக் கண்டுபிடித்த ம்ற்றொரு கைதியான சின்னப்பாப்பா அந்த பணத்தை  தாம் பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறி வாங்கிக் கொண்டார்.

சில நாட்களில் சிறை வாழ்க்கையை பழகிக்கொண்ட சாரதா, சின்னப்பாப்பாவிடம் தமது பணத்தை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். "பணமா! எப்ப கொடுத்தே?" என்று சின்னப்பாப்பா கேட்கவும், இது குறித்து ஜெயிலரிடம் புகார் கொடுக்கப் போவதாக சாரதா எச்சரித்துள்ளார். இதையடுத்து சாரதாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக ஒரு கதை உருவாக்கப்பட்டது. உணவு குறைக்கப்பட்டது. சில நேரங்களில் முழு உணவும் மறுக்கப்பட்டது. பொறுமை இழந்த சாரதா இந்த பிரசினைகள் குறித்து ஜெயிலரிடம் புகார் அளிக்க முடிவு செய்தார்.


இதையடுத்து சாரதா, கான்விக்ட் வார்டர்கள் எனப்படும் மூத்த சிறைக்கைதிகளின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு ஆளானார். முழுமையாக நிர்வாணப்படுத்தி தலைமயிர், கை மற்றும் கால்களை ஜன்னல் கம்பிகளில் கட்டிப்போட்டுவிட்டு உடலின் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் ஊற்றிவிட்டு கையில் கிடைத்த பொருட்களால் தாக்கியுள்ளனர்.

அப்போதுதான் அந்த குரல் கேட்டுள்ளது: சிறைக்குள் யாரையும் தாக்குறதுக்கு யாருக்கும் உரிமை இல்லை! அவங்களை ஏன் சித்ரவதை பண்றீங்க? ஈவு இரக்கமே இல்லையா?” என்ற குரலை எழுப்பியவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 ஆண்டுகளாக சிறைவாசம் செய்து வரும் நளினி! இதையடுத்து அன்றைய கொடுமை முடிவுக்கு வந்தது. ஆனாலும் அடுத்த நாட்களில் அந்த கொடுமை தொடரவே செய்தது.

இந்த நிலையில் நளினியை பார்ப்பதற்காக சிறைக்கு சென்றார், அவருடைய வழக்கறிஞர் புகழேந்தி. சாரதாவுக்கு ஏற்பட்ட அவலநிலை குறி்த்து வழக்கறிஞர் புகழேந்தியிடம் வருத்தத்துடன் கூறிய நளினி, சாரதாவை காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். உடனடியாக உள்துறை செயலாளருக்கும், சிறைத்துறை தலைவருக்கும் இந்த கொடுமை குறித்து தந்தி அனுப்பிய வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவையும் பதிவு செய்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எலிப்பே தர்மாராவ், சாரதாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்குமாறு உத்தரவிட்டார். அரசுத் தரப்பிலோ சாரதாவுக்கு மனநிலைப்பிறழ்வு ஏற்பட்டுள்ளாக கூறப்பட்டது. இதை ஏற்காத நீதிபதி எலிப்பே தர்மாராவ், மாவட்ட நீதிபதி இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிபதியின் விசாரணையில் சாரதாவுக்கு ஆதரவாக இருந்த ஒரே சாட்சி நளினி மட்டும்தான். சாரதாவுக்கு மருத்துவம் செய்த வேலூர் சிஎம்சி மருத்துவர்களும், சாரதாவின் மனநிலை நல்ல நிலையில் இருப்பதை உறுதிப் படுத்தினர்.  சாரதா சட்டத்துக்கு புறம்பாக தாக்கப்பட்டதை உணர்ந்த மாவட்ட நீதிபதி அதை அறிக்கையாக உயர்நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி எலிப்பே தர்மாராவ், சாரதாவை விசாரிப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

இதற்குள் சாரதாவின் சிறைத்தண்டனை முடிவடைந்து அவர் விடுதலை பெற்றிருந்தார்.  பெங்களூருவில் இருந்து சென்னை வந்து நீதிமன்றத்தில் ஆஜரான சாரதா, நளினி மட்டும் இந்தப் பிரசினையில் தலையிடாதிருந்தால் வேலூர் சிறையில் உறுதியாக நான் கொலை  செய்யப்பட்டிருப்பேன்! என்று சாட்சியம் அளித்தார். இதை தமது தீர்ப்பில் பதிவு செய்துள்ள நீதிபதி எலிப்பே தர்மாராவ், சிறைக்கொடுமைக்கு ஆளான சாரதாவுக்கு சிறை நிர்வாகம் ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று உத்தவிட்டார். மேலும் சாரதாவை தாக்கிய சிறை அதிகாரிகள் மூதும் கான்விக்ட் வார்டர்கள் மீதும்  உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார். (அந்த உத்தரவு இன்று வரை நிறைவேற்றப்படவில்லை!)

சிறையில் தமது உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலையிலும்கூட சக கைதியின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த நளினியைத்தான் சிறையிலிருந்து முன் விடுதலை பெறுவதற்கான பக்குவத்தை பெறவில்லை என்று சான்றிதழ் அளித்திருக்கிறது சிறை அறிவுரைக் கழகம். இதை ஏற்று நளினியை முன்விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசும் கூறி வருகிறது.

தமிழக சிறைத்துறையின் மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்ந்ததை தொடர்ந்து நளினிக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தனிக்கதை...!

தொடர்புடையவை...

ராஜீவ் கொலை – நளினி விடுதலை – தடை என்ன?

இதை பெண்கள் சிறை என்று சொல்வதை விட எமக்கான கல்லறை எனலாம் - நளினி