“யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என அனைத்து உலகத்தையும் ஒன்றாய் கருதிய இனத்தின் ஒரு பகுதி மிகக்கொடுரமாய் அழிக்கப்பட்டது. ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியை காட்டியே இந்திய தேசப்பற்றை பள்ளி மாணவர்களின் மனதில் விதைக்கும் இந்தியச் சமூகம் அதைப்போல பல்லாயிரம் மடங்கு நடந்த இந்தக் கொடுமையைக் கண்டு கண்மூடவில்லை. தாம் கொடுத்த ஆயுதங்களும், தளவாடங்களும் சரியாக வேலை செய்கின்றனவா என்று சரிபார்த்து திருப்தி அடைந்தன.
தமிழகத்திலோ ஈழத்தின் மீதான அறமற்ற போர்கூட தேர்தல் அரசியலில் பகடைக்காயாக அனைத்து அரசியல் கட்சிகளாலும் நிறம் மாற்றப்பட்டது.
மக்களின் மனசாட்சியோ ஊடகங்களின் துரோகங்களால் மரத்துப்போக செய்யப்பட்டது. கொத்துக்குண்டுகளால் சொந்த இனம் அழிக்கப்பட்ட நிலையில் தாயகத் தமிழன் இலவச வண்ணத்தொலைக்காட்சியில் “மானாட, மயிலாட” பார்த்து தன்னிலை மறந்து கொண்டிருந்தான். மற்றொரு தொலைக்காட்சியோ ஆயிரமாயிரமாய் தமிழர்கள் கொல்லப்பட்டதை இருட்டடிப்பு செய்துவிட்டு, சென்னை நாய்க் கண்காட்சியில் சில நாய்கள் இறந்ததை தலைப்புச் செய்தியாக்கின.
பூணுல் அணிந்த பார்ப்பன ஊடகங்களின் தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகளும், பூணுல் அணியாத நவீன பார்ப்பனர்களின் துரோகச் செயல்பாடுகளும் போட்டி போட்டு ஒரு இனப்படுகொலை நிகழ்ச்சியை புறக்கணித்தபோது சில பத்திரிகையாளர்கள் மட்டும் உணர்வோடு செயல்பட்டனர். அவர்களில் பாலாவும் ஒருவர்!
மற்ற கலைஞர்களைப் போல அறையில் அமர்ந்து மற்ற ஊடகங்கள் வழியாக சமூகத்தை பார்க்காமல், அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்பதன் மூலம் மக்களுடன் நேரடியாக உறவு கொண்டவர்.
குமுதம் வார இதழிலும், குமுதம் இணையத்திலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும், ஈழத்தமிழரின் உரிமைப்போரை தமது சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொண்ட அனைத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் கார்ட்டூன் போரை நடத்தியவர்.
இந்த கார்ட்டூன்கள் "ஈழம்: ஆன்மாவின் மரணம்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்துள்ளது.
அவரது கார்ட்டூன்கள் மக்களுக்கு ரெளத்திரம் பழக்க முயற்சித்தன. அறச்சீற்றம் என்பதை அறிமுகப்படுத்த விழைந்தன. தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்களும் இவரது நெற்றிக்கண் பார்வையால் சுட்டெரிக்கப்பட்டார்கள்.
அசிங்கமான மனம் படைத்த அரசியல்வாதிகளைக்கூட மிகவும் அழகாக வரைந்து தனது விமர்சனம் அந்த தலைவர்களின் கொள்கை மீதுதான் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் கார்ட்டூனிஸ்ட் பாலா.
போரின் போக்குகளைவிட அதற்கு தமிழக மற்றும் இந்தியத் தலைவர்களின் எதிர்வினைகளே இந்த கார்ட்டூன்களாக உருமாறியுள்ளன.
குறிப்பாக உண்ணாவிரத நாடகமும், அதைத்தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் சரணடைந்த மக்கள் கொல்லப்பட்ட அவலமும் அவரை மிகவும் பாதித்துள்ளது.
இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் கருப்பு நாளாக அமைந்த 19-02-2008ம் கார்ட்டூனாக பதிவாகியுள்ளது.
போரின் முடிவு என்று கூறப்படும் முள்ளிவாய்க்கால் சம்பவங்களும், அதைத் தொடர்ந்து தமிழகத் தலைவர்களின் செயல்பாடுகளும் சக்தி மிக்க வரிகளால் வரையப் பட்டுள்ளது.
தமிழ்ச் செம்மொழி மாநாடும் பாலாவின் கார்ட்டூன் பார்வைக்கு தப்பவில்லை.
எஞ்சியுள்ள தமிழர்களின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலையில் அங்கு தேர்தல் நடந்ததும் அதில் பேரழிவுக்கு காரணமானவர்கள் வேடமிட்டதும்கூட நயம்பட பதிவாகியுள்ளது.
இது போன்ற இன்னும் ஏராளமான கருத்துப்படங்களோடு "ஈழம்: ஆன்மாவின் மரணம்" என்ற நூலாக பாலாவின் படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நூலில் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு எதிராக அதிகமான கார்ட்டூன்கள் இருப்பதாக சில "நடுநிலை" வாசகர்கள் விமர்சனம் செய்யக்கூடும். அவர்களுக்கு இலங்கைப் பத்திரிகையாளர் 'லசந்த விக்ரமதுங்க'வின் வரிகளைத்தான் பதிலாக தரவேண்டும். " எதிர்கட்சிகளை விமர்சனம் செய்வதைவிட தீவிரமாக அரசை விமரிசனம் செய்வது ஏனென்றால், கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேனை தவிர்த்து, பீல்டிங் பகுதியில் பந்து வீசுவதில்லையோ, அதேபோல் ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிராகத்தான் தீவிரமாக விமர்சனங்களை வைக்க முடியும்"
இந்நூலை வெளியிட்ட குமுதம் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்!
நூல் கிடைக்குமிடம்:
குமுதம் பு(து)த்தகம் வெளியீடு,
பழைய எண்: 151 புதிய எண்: 306 , புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை - 600 010
தொலைபேசி: 2642 2146, 4591 9141
நூலின் விலை: ரூ.65/= மட்டுமே
கார்ட்டூனிஸ்ட் பாலாவை தொடர்பு கொள்ள:
cartoonistbala@gmail.com
6 கருத்துகள்:
பாலாவின் இந்த இரண்டாவது புத்தகம் வெளிவருவதற்கு வாழ்த்துகள் தெரிவிப்பதா வருத்தம் தெரிவிப்பதா என்று புரியவில்லை :-(
பாலா மேன்மேலும் வளர வாழ்த்துகள்!
பாலாவின் முதல் புத்தகம் ஏற்கனவே நாட்டு நடப்பு என்ற பெயரில் வெளிவந்து விட்டது. இது குறித்து பதிவர் நர்சிம் எழுதிய பதிவு: http://www.narsim.in/2009/01/blog-post_22.html
இப்போது வெளிவந்துள்ள "ஈழம்: ஆன்மாவின் மரணம்" இரண்டாவது புத்தகம்தான்.
எனவே நண்பர் யுவகிருஷ்ணாவிற்கு குழப்பங்கள் தேவையில்லை.
அந்த குழப்பம் எனக்கில்லை லாயர் சார்! வேறு குழப்பம்.
முதல் புத்தகம் வந்தபோது 2008 பிப்ரவரியிலேயே அந்த புத்தகத்துக்கு நான் அறிமுகமும் கொடுத்திருக்கிறேன் http://www.luckylookonline.com/2008/08/blog-post_9622.html
என்னுடைய குழப்பம் என்னவென்றால் இரண்டாவது புத்தகம் வந்ததற்கு பாலாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதா? புத்தகத்துக்கு எடுத்துக்கொண்ட தலைப்புக்கு வருத்தம்தானே தெரிவிக்க முடியும். வாழ்த்து தெரிவித்தால் பொருந்துமா என்பதே குழப்பம்.
அதிருக்கட்டும். இந்த கமெண்டை முன்பு அனானியாக போட்டு, அதை அழித்துவிட்டு பிறகேன் ஒரிஜினல் பேரிலேயே போட்டிருக்கிறீர்கள். இது அடுத்த குழப்பம் :-)
லாக் இன் செய்வதில் குழப்பம் ஏற்பட்டதால் ஏற்பட்ட குழப்பம். இப்போது அனைத்துக் குழப்பங்களும் தீர்ந்தன.
நன்றி.
நல்ல நூலை அறிமுகம் செய்ததற்கு நன்றி, நண்பர் சுந்தரராஜன். :-)
அண்ணாவிற்கு வணக்கம்,
இன அழிப்புக்குத்துணை போன(போகும்)வர்களை ஆவணப்படுத்தும் நல்ல நூலை அறிமுகம் செய்வதற்கு வாழ்த்துகள் .
அதன் ஆசிரியர்க்கும் வாழ்த்துகளௌம், நன்றிகளும்.
நிகழ்வில் கலந்துக் கொள்ள முடியாததற்காக வருந்துகிறேன்.
கருத்துரையிடுக