19 மே, 2010

இந்தியா டுடே-வை மிரட்டும் ஜாதிப்பேய்!

சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து தமிழ்நாட்டில் பேச வேண்டியவர்கள் தேவையான அளவு பேசாது இருக்கும் நிலையில், “இந்தியா டுடே” இதழ் இந்த பிரசினை குறித்து அட்டைப்பட கட்டுரை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த 2008ம் ஆண்டு அமரர் வி.பி. சிங் இறந்தபோது, “மண்டல் நாயகனான இவர் இந்தியாவின் அரசியலில் மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவர்” என்று எழுதி தனது வக்கிரபுத்தியை காட்டியுள்ளது.

தற்போதைய விவகாரத்திலும் இந்தியா டுடேவின் ஒரே கவலை: சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு மண்டல் கமிஷன்-2 ஆகிவிடும் என்பதே! இதை இந்தியா டுடே மிகவும் வெளிப்படையாக பதிவு செய்துள்ளது. லாலூ, முலாயம், ராமதாஸ் போன்றவர்களின் நிர்பந்தத்திற்கு காங்கிரஸ் கட்சி அடிபணிவதாக இந்தியா டுடே மிகவும் வருந்துகிறது.

ஏற்கனவே இந்திய சமூகத்தில் இருக்கும் சாதியப் பிளவுகளை, இம்மாதிரியான சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலும் அதிகரிக்கும் என்று இந்தியா ரத்தக் கண்ணீர் வடிக்கிறது.

வர்ணாசிரம அடிப்படையில் மனிதனை மனிதன் சாதியின் பெயரால் சுரண்டுவதை எதிர்த்து எதையும் செய்யாத "இந்தியா டுடே"வின் வருத்தம் நமக்குப் புரியாமல் இல்லை. சாதியப் பிளவுகள் இல்லாத சமத்துவ சமூகம்தான் நமது விருப்பமும்! இதன் முன்னோட்டமாகவே மார்க்சிய-லெனினிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது "இடஒதுக்கீட்டு சலுகைகள் கிடைக்காது!" என்று தெரிந்தும் தங்களுக்கு சாதி இல்லை என்று பதிவு செய்கிறார்கள்.

ஆனால் இப்போது நடைமுறையில் இருக்கும் சாதியப் பிளவுகளை ஒழிக்க இந்தியா டுடே என்ன பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது? என்பதே நமது கேள்வி.

இஸ்லாமியர்களை குறிவைக்கும்போது "பொது சிவில் சட்ட"த்தை கையிலெடுக்கும் யுக்தி இது! பொது சிவில் சட்டத்துக்கு நாமும் எதிரிகள் கிடையாது. ஆனால் அதற்கு முன் "பொது இந்து சட்ட"த்தை அமல் படுத்த வேண்டும். சிதம்பரம் கோவிலில் தமிழில் பாட அனுமதித்தது போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் தமிழிலும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலும் பாடுவதை கட்டாயமாக்கும், கருவறைக்குள் அனைத்து இந்துக்களையும் அனுமதிக்கும் பொது இந்துச் சட்டம் அமலாக்கப்பட்டப் பின்னர் பொது சிவில் சட்டம் குறித்தும் அவசியம் ஆலோசித்தே ஆக வேண்டும்.

இதேபோல சாதியக் கட்டுமானங்களால் சீர்குலைந்து படிப்பறிவு முன்பொரு காலத்தில் மறுக்கப்பட்டதால் ஆதிவாசிகளாகவும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களாகவும் பன்னெடுங்காலமாக வாழ்ந்து அதனால் கற்றல் திறனில் இயல்பாகவே பின்தங்கியுள்ள மக்களுக்கு சிறப்பு வாய்ப்புகளை ஏற்படுத்தி, சமூகத்தில் அனைத்துத் தரப்பினரும் சமநிலையில் உள்ளபோது இந்தியா டுடேவின் பரிந்துரை இல்லாமலே சாதியப் பாகுபாடுகள் உலர்ந்து, உதிர்ந்து விடும்.

அதற்கான முன் தயாரிப்பு வேலைகளுக்காகத்தான் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

#அப்போதுதான் மக்களின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் மீடியாத்துறையில் சிறுபான்மையினரும், ஆதிவாசிகளும், தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் அதிக அளவில் சுதந்திரமாக பணியாற்றும் நிலை வரும்.

#அப்போதுதான், முலாயம், லாலூ, ராமதாஸ் போன்றவர்களின் அரசியலை விமர்சிக்கும் போது அவர்களுடைய சாதி குறித்த விமர்சனங்களும் முன்வைக்கப்படுவதுபோல ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங், சிதம்பரம், வாஜ்பாய், அத்வானி போன்றவர்களின் அரசியல் விமர்சிக்கப்படும்போது அவர்கள் சார்ந்த சாதியும் விமர்சிக்கப்படும்.

#அப்போதுதான், இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக இந்தியாவின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் செயலில் பழங்குடியினர், ஆதிவாசிகள், தாழ்த்தப் பட்டவர்கள் ஆகியவர்களின் வாழ்வாதாரங்களை ஆயுதமுனையில் பறிமுதல் செய்து அம்மக்களை அநாதைகளாக்கும் அரச பயங்கரவாதம் வெளியாகும்.

#அப்போதுதான், ஐபிஎல் மோசடி, இந்திய மருத்துவ கவுன்சில் மோசடி போன்றவற்றில் சிக்கும் பெருந்தலைகளின் சாதிய அடையாளங்கள் திட்டமிட்டு மறைக்கப்படும் அராஜகங்கள் வெளிவரும்.

#அப்போதுதான் மனித உரிமைகளை மீறும் சட்டங்களை அமல் படுத்துவதற்காகவே ஆயுதப்படைகளில் உள்ள சாமானிய வீரர்கள் ஆபத்தான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு களப்பலியாக்கப்படுவது அம்பலப்படுத்தப்படும்.

#அப்போதுதான் இந்த ஊடகங்கள் ஆளும் வர்க்கங்களுடனும், வர்த்தக புள்ளிகளுடன் கூட்டு சதியில் ஈடுபட்டு மக்களுக்கு எதிராக செயல்படுவது வெளியாகும்.

மண்டல் கமிஷன் பரிந்துரைக்கு எதிராக மருத்துவர்கள் போர்க்கொடி தூக்கியதை சமூக நீதிப் போராட்டமாக சித்தரிக்கும் இந்தியா டுடே, மருத்துவத்துறையில் பெருகி வரும் ஊழல்களுக்கு எதிராக அதே மருத்துவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுப்பவில்லை. அப்படி கேள்வி எழுப்பினால் “மாற்று மருத்துவ டாக்டர் படிப்பு!” என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கும் போலி மருத்துவக் கல்லூரிகளுக்கு விளம்பரம் செய்து கல்லாவை நிரப்பும் “இந்தியா டுடே”வை அதே மருத்துவர்கள் செருப்பால் அடிப்பார்கள்.

---
போபால் விஷவாயு விபத்து ஏற்பட்டு 25 ஆண்டுகள் கழிந்தபின்னரும் அந்த விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காததை கண்டிப்பதற்காகவோ,

இந்தியாவின் வேளாண்மையையே பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைப்பதற்காக கொண்டுவரப்படும் இந்திய மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தையோ,

இந்தியாவின் பாதுகாப்புக்கே உலைவைக்கும் “சிவில் லையபிளிட்டி ஃபார் நியூக்ளியர் டேமேஜ் பில்” குறித்தோ

அட்டைப்பட சிறப்புக் கட்டுரை எழுதாத, இன்னும் சொல்லப்போனால் மேற்கண்டவற்றை வரவேற்கும் “இந்தியா டுடே”, சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு எதிராக மட்டும் உரத்துக் குரல் எழுப்புகிறது, சாதிப்பேயை விரட்ட வேண்டும் என்று!


எந்த ஒரு அம்சத்திலும் நல்லது, கெட்டது என்ற இரண்டும் இருக்கவே செய்யும். சிலருக்கு சில அம்சங்கள் நல்லதாகவும், வேறு சிலருக்கு அதை அம்சங்கள் கெட்டதாகவும் இருக்கும். இதுவரை இருந்த சமூக அமைப்பு இந்தியா டுடே சார்ந்த சிறுபான்மையினருக்கு நல்லதாக இருந்தது. ஏனெனில் தகுதி, திறமை என்ற பெயர்களில் இந்த சமூகத்தின் பெரும் பகுதியை அவர்களே ஆக்கிரமித்து இருந்தனர்.

இப்போது அந்த நிலை தகர்ந்து வருகிறது. பெரும்பான்மை மக்களின் நிலை வெளியானால் சிறுபான்மையினரின் வாய்ப்புகள் குறுகுவது இயல்பானதே. இதை ஏற்கவியலாமல் கூக்குரல் இடுகிறது, இந்தியா டுடே!

சாதியின் பெயரால் பெரும்பான்மையினரை ஆதி்க்கம் செய்துவந்தபோது தேவதையாக தெரிந்த சாதி, இப்போது ஆதிக்கம் தகர்ந்த நிலையில் அன்றாட வாழ்வுக்கே ஆபத்து வரும்போது பேயாகத் தெரிந்தால் அது பார்வைக் கோளாறுதான்!

ஆனால் இந்த சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து பெரும்பான்மை மக்களிடம் தேவையான விவாதங்களோ, விழிப்புணர்வோ இல்லை. சமூக நீதிக்காக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் சாதிவாரியான புள்ளிவிவரங்கள் இல்லை என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதை சரியாக புரிந்துகொண்டாலே சாதிவாரியான கணக்கெடுப்பின் தேவை புரியும்.

எனவே சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விவாதங்களை எழுப்பி இந்த கணக்கெடுப்பை முறையாக மக்கள் பயன்படுத்தும்படி செய்யவேண்டியதே சமூகநீதியின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் தற்போதைய முக்கிய பணி!

10 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

India today ippadi oru kattu kathai podavillai endral than aacharya padanum!

ரிஷபன்Meena சொன்னது…

இந்தியா டுடேக்கு கூட மக்கள் செல்வாக்கு இன்னுமா இருக்கு ?

பெயரில்லா சொன்னது…

//சாதியின் பெயரால் பெரும்பான்மையினரை ஆதி்க்கம் செய்துவந்தபோது தேவதையாக தெரிந்த சாதி, இப்போது ஆதிக்கம் தகர்ந்த நிலையில் அன்றாட வாழ்வுக்கே ஆபத்து வரும்போது பேயாகத் தெரிந்தால் அது பார்வைக் கோளாறுதான்!//

100% True!

சுந்தரராஜன் சொன்னது…

நன்றி வவ்வால், ரிஷபன் மற்றும் பெயரில்லா!

உண்மை இந்தியன் சொன்னது…

இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான உங்களைப் போன்றவர்களை நாட்டுக்குள் நடமாட விடுவதே தவறு.

தகுதி, திறமை வாய்ந்தவர்களுக்கு சமவாய்ப்பு அளிக்கக்கூடாது என்பதில் நீங்களும், உங்கள் தலைவர்களும் எவ்வளவுதான் தீவிரமாக இருந்தாலும் இன்றைய உலகில் தகுதியும், திறமையும் மிக்கவர்களே வாழ முடியும்.

இதைத்தான் நீங்களும் நம்பும் டார்வினிசம் கூறுகிறது.

யுவகிருஷ்ணா சொன்னது…

//தகுதி, திறமை வாய்ந்தவர்களுக்கு சமவாய்ப்பு அளிக்கக்கூடாது என்பதில் நீங்களும், உங்கள் தலைவர்களும் எவ்வளவுதான் தீவிரமாக இருந்தாலும் இன்றைய உலகில் தகுதியும், திறமையும் மிக்கவர்களே வாழ முடியும்.//

உண்மை இந்தியன் சார்! நீங்கள் குறிப்பிடும் தகுதியும் திறமையும் உங்கள் சாதிதானே? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார்.

பாரதி தம்பி சொன்னது…

சாதி வாரிக் கணக்கெடுப்பின் கால முக்கியத்துவம் குறித்தும் அவசியம் குறித்தும் எப்போதுமே சமூக நீதிப்போரில் ஓரளவுக்கு முன்னடி எடுத்து வைக்கும் தமிழ்நாட்டில் போதுமான அளவுக்கு பேசப்படவில்லை. இப்படி பேசப்படாத மௌனத்தின் அரசியலையும், பேச வேண்டியதன் தேவை குறித்தும் நாம் ஏதாவது செய்யலாமே? தொடர் கட்டுரைகள், ஒரு சிறப்பிதழ், கூட்டம் என ஏதோ ஒரு வரிவத்தில்...

பெயரில்லா சொன்னது…

யப்பா தம்பி. சுந்தர்ராஜா!

மழை அடிக்குது. ஏதோ லைலாவாம். இந்த லைலா யார் என்ன விவரம்ன்னு கவர்ச்சியா நாலு பதிவு போட்டா நம்ம மக்கள் வந்து படிப்பாங்க. இது எல்லாம் கதைக்காவாது ராஜா.

ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்கப்பா நீ டீ ஆத்துற.

Unknown சொன்னது…

இஸ்லாமியர்களை குறிவைக்கும்போது "பொது சிவில் சட்ட"த்தை கையிலெடுக்கும் யுக்தி இது! பொது சிவில் சட்டத்துக்கு நாமும் எதிரிகள் கிடையாது. ஆனால் அதற்கு முன் "பொது இந்து சட்ட"த்தை அமல் படுத்த வேண்டும். சிதம்பரம் கோவிலில் தமிழில் பாட அனுமதித்தது போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் தமிழிலும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலும் பாடுவதை கட்டாயமாக்கும், கருவறைக்குள் அனைத்து இந்துக்களையும் அனுமதிக்கும் பொது இந்துச் சட்டம் அமலாக்கப்பட்டப் பின்னர் பொது சிவில் சட்டம் குறித்தும் அவசியம் ஆலோசித்தே ஆக வேண்டும்.
There is no bar in signing in regional languages in any hindu temple.i can recite thevaram in kasi visalakshi temple, i can recite tiruppavai in birla mandir. entering into sanctum sanctorum - practice varies across states.temples where agama practices are followed there are restrictions and it has been upheld by the supreme court.
common civil code has nothing to do with worship.it is an issue of personal law-marriage, divorce,inheritance,rights in ancestral property.hindu law has been amended many times after 1956 and hindu women enjoy better rights.but christian and muslim women suffer as their laws dont grant them many rights that a hindu woman enjoys.mary roy,mother of arundati roy knocked the doors of the court.do you know why. you are mixing up both to show off your 'legal knowledge'.
சமூக நீதிக்காக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் சாதிவாரியான புள்ளிவிவரங்கள் இல்லை என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
Can you give details and prove this.i say that your claim is a lie.

Artist Ramki சொன்னது…

i criticize periyar அவர்கள் கட்டுரையின் மையக்கருத்து குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் அதில் உள்ள கிளைக்கதையாடல்களை மட்டுமே விமர்சிக்கிறார்.

i criticize periyar என்று பெயர் வைத்துக் கொண்டாலும்கூட இந்தியா டுடேவின் அயோக்கியத்தனங்களை நியாயப்படுத்த முடியவில்லை போலும்.

கருத்துரையிடுக