29 ஆகஸ்ட், 2011

ராஜீவ் காந்தி கொலை வழக்கு - மறைக்கப் பட்ட உண்மைகள்!


“குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு எதிரான குற்ற வழக்கில், அந்த நபரை அவருக்கு எதிராகச் சாட்சியாக இருக்குமாறு கட்டாயப்படுத்தல் கூடாது” என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 20(3) திட்டவட்டமாக கூறுகிறது. ஒரு அரசின் கட்டமைப்பை, செயல்பாட்டை விளக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரின் உரிமை குறித்து ஏன் பேச வேண்டும்?

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வரைந்த சட்டமேதை  அம்பேத்கார் தலைமையிலான குழுவின் மனித உரிமை தொடர்பான தொலைநோக்குப் பார்வையே இந்த அம்சத்தை சேர்த்தது. குற்றம் சாட்டப்பட்ட நபரை, அந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி காவல் நிலையங்களில் இன்று நடைபெறும் வன்முறைகளை அம்பேத்கார் அன்றே கணித்திருந்தார்.


ஆனால் அம்பேத்கார் மக்களுக்கு அளித்த பல்வேறு உரிமைகளை பொருளற்றதாக மாற்றுவதில் நமது அரசுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக மேலே குறிப்பிடப்பட்ட மனித உரிமை அம்சங்களை குப்பைத் தொட்டியில் போடும் விதமாக "தடா" என்ற கருப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரியிடம் கொடுக்கும் வாக்குமூலம் சட்டரீதியாக செல்லும் என்ற அம்சம், காவல்துறையில் நடக்கும் சித்ரவதைகளை அதன் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதற்கு உதாரணமாக ராஜீவ் காந்தி கொலை வழக்கை கூறலாம். இந்த கொலை வழக்கில் சிக்கவைக்கப்பட்டு, அரைகுறையான விசாரணைகளின் மூலம் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு இன்று மரணதண்டனை கொட்டடியில் இருக்கும் பேரறிவாளனின் வாக்குமூலமே இந்திய நீதித்துறை மற்றும் காவல்துறையின் கருப்புப் பக்கங்களை விளக்கும்.

இனி பேரறிவாளனின் வாக்குமூலம்….

1991ஆம் ஆண்டு சூன் மாதம் 11ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை, எழும்பூர், எண்.50. ஈவெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல் என்ற முகவரியில் எனது பெற்றோர் என்னை விசாரணைக்கென சிபிஐ அதிகாரிகள், ஆய்வாளர்கள் கங்காதரன், இராமசாமி மற்றும் ஒருவரிடம் ஒப்படைத்தனர்.

என்னை மல்லிகை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றபோது, நாளை காலை, அதாவது 12-6-1991 அன்று அனுப்பி வைப்பதாக வாக்குறுதி கூறியே அழைத்துச் சென்றனர்.

எனது கல்வித்தகுதி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் என்று கூறியவுடன், துணை தலைமை ஆய்வாளர் ராஜு கேட்டார். நீதான் வெடிகுண்டு செய்தவனா? நான் மிரண்டு விட்டேன். எனது படிப்போடு வெடிகுண்டு எந்தவகையில் தொடர்பு என்பது விளங்காமல் தவித்தேன். அப்போது நான் போட்டிருந்த சட்டையின் கீழ்ப்பக்கம் சிறிய துளை இருந்தது. அதைப் பார்த்தபடியே, “இந்தத் துளை ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ஏற்பட்டதுதானே?” என்று கூறினார். நான் மறுத்தேன். ஆனால் என்னை சரியான முறையில் கவனித்தால் ஒப்புக்கொள்வேன் என்று கூறி இரண்டு ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.

கீழ்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டேன். அப்போது ஆய்வாளர்கள் சுந்தரராசன் மற்றும் இருவர் (பெயர் நினைவில்லை) எனது வெற்றுடம்பில் உள்ளங்கையினால் அடித்தனர். ஒருவர் ஷீ காலால் எனது கால் விரல்களை மிதித்தார். திடீரென ஆய்வாளர் சுந்தரராசன் தனது முழங்கால்களால் எனது விதைப்பையில் கடுமையாகத் தாக்கினார். நான் வலியால் துடித்துக் கீழே விழுந்தேன். எனக்குத் தெரியாத, சம்பந்தமில்லாத பல சம்பவங்களைக் கேட்டு துன்புறுத்தினர்.

அடுத்த நாள் காலை, மல்லிகை அலுவலத்தின் சித்ரவதைக் கூடம் என அழைக்கப்படும் மேல் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆய்வாளர்கள் ரமேஷ், மாதவன், செல்லத்துரை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவாஜி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டேன். ஆய்வாளர்கள் மாதவன், ரமேஷ் ஆகியோர் முழங்காலை மடக்கியபடி கைகளை நீட்டியவாறு நிற்கச் சொல்வர். (அதாவது இருக்கையில் அமர்வது போன்ற பாவனையில்). அவ்வாறு நின்று கொண்டே இருக்க வேண்டும். அப்போது, எனது பின்னங்கால்களில் (ஆடுதசை) கழியால் அடிப்பார்கள். ஆய்வாளர்கள் செல்லத்துரை ஒரு பிவிசி பைப்பில் சிமெண்ட் அடைத்து, அதன் மூலம் எனது கை முட்டிகளை நீட்டச் சொல்லி அடிப்பார்.

காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருட்டிணமூர்த்தி என்றொருவர் இருந்தார். அவரும் என்னைத் துன்புறுத்தினார். அவரின் பாணி வேறுபட்டது. சுவர் ஓரமாக முதுகை சாய்த்து உட்காரச் சொல்வார். பின்னர் ஒரு காலை ஒரு பக்கச் சுவற்றுடன் ஒட்டினார்போல் ஒரு காவலரை பிடிக்கச் சொல்வார். மற்றொரு காலை மற்ற பக்கச் சுவற்றுக்கு அதாவது 180 பாகைக்கு விரிப்பார். அவ்வாறு விரியும்போது ஏற்படும் வேதனை அளவிடமுடியாததாக இருந்தது.

ஆய்வாளர் டி.என். வெங்கடேசுவரனும் என்னைத் துன்புறுத்தியவர். அவர் பென்சில் அல்லது சிறு கட்டைகளை விரல் இடுக்கில் வைத்து அழுத்திப் பிடித்துத் திருகுவார். ஊசிகளை விரல் நகங்களுக்கிடையே ஓட்டுவார். ஷீ கால்களால் எனது கால்களின் சுண்டு விரல்களில் ஏறி மிதிப்பார். இதுபோன்ற நுணுக்கமான கொடுமைகளைச் செய்வார்.

மல்லிகையின் கீழ் தளத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராசனின் அலுவலகம் இருந்தது. அவர் திடீரென இரவு 2 அல்லது 3 மணிக்குதான் அழைப்பார். எதையாவது கேட்பார். நாம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். தூங்கினால் அடிப்பார். இதுபோல உடல் ரீதியான, மன ரீதியான இன்னல்களைக் கொடுத்தனர்.

விசாரணைக்கென்று சட்டப்புறம்பாக அழைத்துச் சென்று நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்திய 19ஆம் தேதி வரை என்னைக் குளிக்கவும் பல் தேய்க்கவும் கூட அனுமதிக்கவில்லை. 19ஆம் தேதி ஆய்வாளர் ரமேஷ் என்னருகில் வரும்போது என்னிடமிருந்து வீசிய கெட்ட வாடையை பொறுக்க முடியாமலே குளிக்க அனுமதித்தார்.

குடிப்பதற்குத் தண்ணீர் தர மறுத்தனர், தாங்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்ளாதவரை குடிக்க நீர் தரமாட்டோம் என்று கூறுவார்கள். இரவுகளில் தூங்கவிட மாட்டார்கள். அவ்வாறு நான் தூங்காமல் இருக்க இரவுக் காவலர்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படும். தூங்கினால் முகத்தில் தண்ணீர் ஊற்றுவர். உணவையும் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தினர்.

இரவு, பகல் 24 மணி நேரமும், காலைக் கடன்களை முடிக்கும்போதும் கூட கைகளில் விலங்குகளோடுதான் வைக்கப்பட்டிருந்தேன். சாப்பிடும்போது மட்டும் ஒரு கையை தளர்த்தி விடுவர். படுக்கும்போதுகூட விலங்கு பூட்டியே இருக்கும். இவ்வாறான கொடுமைகள் புரிந்தனர்.

முதல் நீதிமன்ற ஆஜர் படுத்தல்

இவ்வாறு மறுநாள் காலை விசாரித்துவிட்டு அனுப்பிவிடுவோம் என்று பொய்கூறி அழைத்துவந்து எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு கடுமையான சித்ரவதைகளுக்குப் பின்னர் 19.6.1991 அன்று செங்கல்பட்டு நோக்கி என்னையும், எமது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை அனுபவிக்கும் இராபர்ட் பயஸு என்பவரையும் அழைத்துச் சென்றனர். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரகோத்தமன், இராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் இக்பால், ரமேஷ் மற்றும் சிலர் உடன் வந்தனர். அப்போது நான், இன்றுடன் என்னை விடுதலை செய்துவிடப் போகிறார்கள். தொல்லைகள், சித்ரவதைகள் முடிந்தன என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.

இந்த நிலையில் செங்கை நீதிமன்றத்தினுள் எமது வேன் நுழைந்தது. அப்போது மேற்சொன்ன அதிகாரிகள் நீதிமன்றத்தில் எங்களை வாய் திறக்கக்கூடாது என்றும் அவ்வாறு அமைதியாக இருந்தால் விட்டு விடுவதாகவும், இல்லையயன்றால் மீண்டும் மல்லிகை அழைத்துச் சென்று துன்புறுத்துவோம் என்றும் கூறி மிரட்டினர். எனவே நாங்கள் மிரண்ட நிலையில் இருந்தோம். பின்னர் உள்ளே அழைத்துச் சென்றனர். நீதிபதி எமது பெயர்களை கூறி அழைத்தார். பின்னர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமனிடம் ஏதோ கூறினார். எம்மை அங்கு இருந்த வேறு அறைக்குள் அனுப்பி விட்டனர். பின்னர் நீதிமன்ற கூண்டிலேறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஏதோ வாதம் புரிந்தார். பின்னர் மீண்டும் நீதிபதி முன்பு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். அப்போது அவர் எனக்கு 18.7.1991 வரை காவல் நீட்டிப்பு கொடுப்பதாகக் கூறினார் எனக்குக் காரணம் புரியவில்லை. மீண்டும் மல்லிகை சித்ரவதைக் கூடத்திற்கே அழைத்து வரப்பட்டோம்.

அந்த ஒரு மாத காலத்தில் தொடர்ச்சியாக அல்லாமல் விட்டுவிட்டு சித்ரவதைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. காயம் ஏற்படாவண்ணம் உள்ளங்கால்களில் கம்பால் அடிப்பர் பின்னர் குதிக்கச் சொல்வர். இவ்வாறு சித்ரவதைகள் தொடர்ந்தன.

இரண்டாவது நீதிமன்ற ஆஜர்படுத்தல்

இரண்டாம் முறையாக உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருந்த தடா நீதிமன்றத்தில் நீதிபதி திரு. சித்திக் முன்பு நான், ராபர்ட் பயஸ், கோடியக்கரை சண்முகம் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டோம். அப்போது எனது உறவினர்கள் 200 பேர் அல்லது 300 பேர் வெளியே கூடியிருந்தனர். என் பெயர் கூறி அழைத்தனர். நீதிமன்றத்தில் நாங்கள் ஒவ்வொருவராக ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி 16.8.1991 வரை காவல் நீட்டிட்பு செய்திருப்பதாகக் கூறியதைக் கேட்டு அமைதியாக வெளியேறினோம்.

பின்னர் மல்லிகை அலுவலகம் அழைத்து வந்த பின்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் என்னிடம் நீதிமன்ற வளாகத்தின் வெளியே கூடியிருந்த கூட்டம் யார்? 200,300 பேர் இருந்தனரே, அவர்கள் யார்? நீ வரச் சொன்னாயா? என்றார். எனக்குத் தெரியாது என்றும் எனது உறவினர்களாக இருக்கலாம், என்னால் சரியாகப் பார்க்க அவகாசமில்லாததால் கூற முடியாது என்றும் சொன்னேன். மேலும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக என்னை உங்கள் காவலில் வைத்திருக்கும்போது நான் எவ்வாறு வரச் சொல்ல முடியும் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆத்திரமுற்று எனது கன்னத்தில் அறைந்தார். பக்கத்தில் இருந்த ஆய்வாளர்களிடம் என்னை அடிக்குமாறு கூறினார். எனது உறவினர்கள் எனக்கு ஆதரவாக வந்ததுகூட பொறுக்காமல் துன்புறுத்தினார்.

மூன்றாவது நீதிமன்ற ஆஜர் படுத்தல்

மூன்றாம் முறையாக நாங்கள் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையிலேயே நீதிமன்ற அமர்வு நடந்தது. அந்தக் கிளைச் சிறை வளாகம் சிபிஐ துறையினரால் தத்தெடுக்கப்பட்டு எங்களை அடைத்து வைத்துத் துன்புறுத்தப் பயன்படுத்தப்பட்டது. என்னை மல்லிகையிலிருந்து 3.8.1991 அன்று கொண்டு சென்று பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் அடைத்தனர். அன்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் இராமகிருஷ்ணன்தான் பொறுப்பிலிருந்தார். தினமும் அதிகாரிகள் முறைவைத்து துன்புறுத்துவர்.

அங்கிருந்த அலுவலகத்தில் (அப்போது அது சித்ரவதைக் கூடம்) வைத்துதான் சாட்சி 52 காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசன் என்னைத் துன்புறுத்தி எழுதிய பல பக்கங்களில், பல நாட்களைக் குறிப்பிட்டுக் கட்டாய கையயழுத்துகள் பெற்றார். அப்போது உடன் சில ஆய்வாளர்களும் துன்புறுத்தினர். அதில் என்ன இருக்கிறது எனப் படித்தறிய அனுமதிக்கவில்லை. கையெழுத்திட்டால் என்னை விட்டுவிடுவதாகவும் கூறினர். எனக்கும் தடா சட்டம் தெரியாது. எனக்கு மட்டுமன்று தமிழகத்திற்கே அன்று தடா சட்டம் புதிதானது. இந்த நிலையில் துன்புறுத்தல் தாங்காமல் எனது உயிரைக் காத்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் கூறியபடி கையொப்பமிட்டேன். ஆனால் பரிதாபம் என்னவெனில் அவருக்கும் தடா பற்றி ஏதும் தெரியாது. சாதாரண சட்டமுறைகளை அறிந்தவர் என்ற ரீதியிலேயே அவர் கூற்று இருந்தது.

எனவே, தடா சட்டம் தெரியாது; ஒப்புதல் வாக்குமூலம் தெரியாது; அதன் சட்ட ரீதியான தாக்கம் தெரியாது, என்றாலும் கையெழுத்திட்டு விட்டேன். கையெழுத்திடக் கட்டாயப்படுத்தப்பட்டேன்.

எந்த அறையில் என்னைத் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்றனரோ அதே அறையில் 16.8.1991 அன்று நீதிபதி அமர்வு நடத்தினார். முழுக்க முழுக்க சிபிஐ-யினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி அது. நீதிபதி முன்பு ஆஜர்படுத்துமுன் காவல் துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் மற்றும் அதிகாரிகள் இவ்வாறு என்னை எச்சரித்தனர்: நீ ஏதும் துன்புறுத்தியது பற்றிக் கூறினால், மீண்டும் உன்னைக் கொடுமைப்படுத்துவோம், சுட்டுக் கொன்றுவிட்டு, தப்பி ஓடியதால் சுட்டோம் என்று கூட கணக்குக் காட்டிவிடுவோம் என்று மிரட்டினர். இவ்வாறான மிரட்டல்களுக்கு அஞ்சியும், கிளைச்சிறை இருந்த சூழலும், அச்சமும், சட்ட அறியாமையும் எனது வாயை அடைத்து விட்டன.


அன்றே நானும், ராபர்ட்பயஸும் செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டோம். அங்கு தண்டனைச் சிறைவாசிகள் அணியும் வெள்ளுடை தரப்பட்டது. வேறு எந்த உடையும், பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை. ஓலைப் பாயும், தலையணையும், போர்வையும் மட்டுமே தரப்பட்டன. இவை அனைத்தும் ஒரு மரண தண்டனை சிறையாளிக்கான நடத்தை விதிகள் என்பதை பின்னரே அறிந்தோம். அப்போது எமக்கு சிறை விதிகள் தெரியாது.


சிறைத் துன்பங்கள்

எம்மைப் பொறுத்தளவில், சிறையில் நாம் சாதாரண சிறைவாசிகளாக பார்க்கப்படவில்லை. எமது சிறை நடவடிக்கைகள் எதுவும் கணக்கிலெடுக்காமல், வழக்கில் இறந்துபோன நபர்களின் சமூக அந்தஸ்து மட்டுமே கணக்கிலெடுக்கப்பட்டது. எமக்காக புதிய விதிகள் இயற்றப்பட்டன.

உதாரணமாக, இன்றளவும் நாம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது, ஒரு மரணதண்டனை சிறைவாசியைக் கூட தனிமைப்படுத்திவிடக் கூடாது என்று உச்சநீதிமன்ற ஆணைகள் இருந்தும்கூட, ஏற்கனவே தனிமைச் சிறையில் இருந்த ஒரே காரணத்தினால் மரணதண்டனை இரத்து செய்யப்பட்ட முன் உதாரணங்கள் உள்ள நிலையிலும் நாம் மட்டும் கடந்த எட்டரை ஆண்டுகளாக தனி அடைப்பில், தனிமைச் சிறையில் வதைக்கப்படுகிறோம். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு (எண் 13359/91) தாக்கல் செய்தோம். சில பரிகாரங்கள் கிடைத்தும் அவை நடைமுறையில் கிடைக்காவண்ணம் தடுக்கப்பட்டன.

என்னைப் பார்க்க எனது பெற்றோர், நெருங்கிய உறவினர்களே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கும் பாதுகாப்பு என்ற பெயரில் மிகுந்த தொல்லைகள் தரப்பட்டன. இந்த தொல்லைகளுக்கு அஞ்சியே பலரும் வருவதைத் தவிர்த்தனர். அவ்வாறு எனது பெற்றோர் என்னைப் பார்க்க வந்தாலும் கண்ணாடி கூண்டினுள்தான் பார்க்க வேண்டிய பரிதாப நிலை. காரணம் பார்வையாளர் அறை கண்ணாடி இழைத் தடுப்பால் தடுக்கப்பட்டிருந்தது. நேரடியாகப் பேச முடியாத நிலை. சைகையால் மட்டுமே பேச முடிந்தது. தனது மகனின் விரல்களைக் கூட தாயினால் அன்போடு தொட முடியாத கொடுமை.

இந்தக் கண்ணாடிக் கொடுமை எமது உறவினர்க்கு மட்டுமல்ல, எம்மைப் பார்க்க வரும் எமது வழக்குத் தொடர்பான வழக்கறிஞர்களுக்கும் இருந்தது. இதனால் எமது வழக்கை நாங்கள் விளக்க முடியாமல் தவித்தோம். இதுகுறித்து சிறப்பு நீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்தோம். எந்தஒரு சிறைவாசிக்கும் இந்த சட்டரீதியான அடிப்படை உரிமை, தனது வழக்கறிஞருடன் சுதந்திரமாக பேசும் உரிமை மறுக்கப்பட்டிருக்காது என்று என்னால் கூறமுடியும். உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் எமது வழக்கறிஞருடனான ஒருவருக்கொருவர் படித்துக் காட்டும் வசதி கடைசி வரை மறுக்கப்பட்டே வந்தது.
******

வ்வாறுதான் நாட்டின் மிகமுக்கியமான குற்ற வழக்கு அவசர, அவசரமாக முடிக்கப்பட்டது. விடை தெரியாத கேள்விகள் பல இன்னும் இருந்தாலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரணத்தின் வாயிலில் நின்று கொண்டிருக்கின்றனர்.

அவர்களில் ஒருவரான பேரறிவாளன் மேற்கொண்ட மேல்முறையீட்டு முயற்சிகள், “ தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்… (இராசீவ் கொலை – உண்மை பேசுகிறது) என்ற தலைப்பில் நூலாக மேம்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.
வெளியீடு: திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம்,
11, கே.கே. தங்கவேல் தெரு, பெரியார் நகர்,
ஜோலார்பேட்டை - 635 851
தொலைபேசி: 04179-241503

விலை: ரூ.60-00
இந்த நூலில் நம் சமூகத்திற்கான பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. ஏனெனில் இன்று பேரறிவாளன் இருக்கும் இடத்தில் நாளை நாம்கூட இருக்க நேரலாம்!

இந்நூலின் முத்தாய்ப்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி. ஆர். கிருஷ்ணய்யர், தமிழக முன்னாள் முதல் அமைச்சர் திரு. கருணாநிதிக்கு எழுதிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சில வரிகள்…

வணக்கத்திற்குரிய திரு. கருணாநிதி அவர்களுக்கு,

முதலமைச்சரின் பரிந்துரைப்படி மாநில ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சரின் பரிந்துரைப்படி குடியரசுத்தலைவரும் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் தண்டனையை குறைத்து அவரை விடுதலை செய்யலாம். இப்போது உங்கள் மாநிலத்தில் மரண தண்டனை கைதியாக இருந்து வரும் அ.ஞா. பேரறிவாளனுக்கு அரசமைப்புச் சட்டப்படியான கருணையை வழங்குமாறு உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

உணர்தலே மனிதம், கருணை காட்டுதலே “கருணா!”

-நீதியரசர் வி. ஆர். கிருஷ்ணய்யர்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் கருணை மனுவை குடியரசுத்தலைவர் நிராகரித்துள்ள நிலையில் நீதியரசர் வி. ஆர். கிருஷ்ணய்யர், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு வேண்டுகோள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு,

இந்தியாவின் தலைமை நீதிமன்றத்தால் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று இளைஞர்களும் தூக்கிலிடப்படப் போவதை அறிந்து மிகவும் மன வருந்தம் அடைந்தேன். அநியாயமாகக் கொல்லப்பட்ட திரு.இராசிவ்காந்தி அவர்களின் மனைவி சோனியா அவர்களும் இவர்களைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உடன்படுவதாகக் கூறினார். இவர்களின் உயிரைக் காக்க நான் மேற்கொண்ட அனைத்து முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டன.

அன்புள்ளம் கொண்ட அம்மையார் அவர்களே, இவர்களின் உயிரைக் காக்க தண்டனைக் குறைப்பு நடவடிக்கை எடுக்கத் தங்களை வேண்டுகிறேன். தங்களின் பரந்த மனத்தோடு, மனிதநேய அடிப்படையிலும் கருணை அடிப்படையிலும் இம்மூவர் உயிர் காக்க வேண்டுகிறேன். இந்த மனிதநேயச் செயலுக்கு வையம் முழுதும் பரவிக்கிடக்கும் தமிழர்கள் அனைவரும் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பர்.  தங்களின் நல்லாட்சி சிறக்கவும் தங்களின் புகழ் பரவவும் அந்தக் கடவுள் உங்களுக்கு அருள்வாராக !

வாழ்த்துகளுடன்

தங்கள் உண்மையுள்ள,

(வி.ஆர். கிருஷ்ண அய்யர்)

பெறுநர்
மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா
முதல் அமைச்சர், தமிழ்நாடு
போயஸ் தோட்டம்
சென்னை
தமிழ்நாடு

(21 ஜூன் 2010 அன்று முதலில் பதிவிடப்பட்டது. தற்போது தேவை கருதி மேம்படுத்தி மீள்பதிவாக இடப்படுகிறது) 

13 கருத்துகள்:

Joe சொன்னது…

என்ன கொடுமை!

இவ்வளவு கேவலமான காவல்துறை, நீதித்துறை கொண்ட நாட்டில் வாழ்கிறோம் என்று நினைத்துப் பார்க்கவே வேதனையாய் இருக்கிறது.

சுந்தரராஜன் சொன்னது…

கருத்துப் பகிர்வுக்கு நன்றி Joe!

உண்மைத்தமிழன் சொன்னது…

கொடுமையிலும் கொடுமை..!

இதற்குப் பரிகாரம் காணத்தான் உலகத் தமிழ் மாநாடு நடத்துகிறார் நம்பர் ஒன் தமிழினத் துரோகி..!

பெயரில்லா சொன்னது…

இந்திய காவல்துறையின் இருண்ட பக்கங்களை காட்டும் பதிவு. படிக்கப்படிக்க குலை நடுங்குகிறது.

காவல்துறையிடம் சிக்கும் எவரையும் குற்றவாளியாக்கும் இந்த நிலை மாறவேண்டும்.

பெயரில்லா சொன்னது…

இந்தியா ஒரு பயங்கரவாத நாடு.. நான் இந்தியன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறேன்.

வே.வெற்றிவேல்

ராம்ஜி_யாஹூ சொன்னது…

It is fair that you should add 18+ for this post.

1. What is the answer from Ragotthaman (who tried to make money from this tortures, books)

2. What did Vaiko do when he was in alliance with congress, DMK.

3. What did Vaiko do when his party had 2 central ministers (Kannappan & Chnejiyaar).

4. Why communists, ADMk, MDMK have not talked about this during their bandh (before MP election, after the 123 bill no confidence motion was defeated in parliment).

ராஜ நடராஜன் சொன்னது…

shocking!

பெயரில்லா சொன்னது…

Good Post. Keep writing.

Anand சொன்னது…

இழைக்கப்பட்ட அநீதிகளில் ஒரு சிறிய பகுதி

498ஏ அப்பாவி சொன்னது…

மதிப்பிற்குறிய வழக்குரைஞர் அவர்களுக்க,

தங்களடைய "ராஜீவ் காந்தி கொலை வழக்கு - மறைக்கப் பட்ட உண்மைகள்!" கட்டுரையை படித்து மனது மிக வலிக்கின்றது.. இதைபடிக்கும் அனைவர் கண்கலையும் கலக்கச்செய்யும் இந்தக்கட்டுரை...

நான்(ங்கள்) இவர் அளவிற்க்கு கொடுமைகளை பட்டதில்லை... நாம் காவல்நிலையங்களுக்கு செல்லும் பொழுது நாம் சனநாயக நாட்டில் தான் வாழ்கின்றோமா என்ற கேள்விக்குறி தனியாகவோ அல்லது ஆதரவற்றவன் காவல் நிலையம் செல்லும் பொழுது இந்த உண்மை விளங்கும்.

Unknown சொன்னது…

நான் ஏற்கனவே நளினி பற்றிய கட்டுரைக்காக எனது கருத்துகளை தங்களிடம் வெளியிட்டுள்ளேன்..நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும். குறிப்பாக இம்மாதிரியான இந்தியமிருகங்களின் அட்டூழியங்கள் பற்றி.. ரகோத்தமன் ஒரு மேல்நிலைசாதியை சார்ந்தவர் அவருக்கு இயல்பாகவே தமிழ்தேசியம் சார்ந்தவர்களை கொலைவெறியோடுதான் அணுகுவார். இந்த கொடுமைகளை நாம் எப்படி முடிவுக்கு கொண்டுவருவது.. என்னமாதிரியான செயல்பாடுகள் மூலம் இம்மாதிரியான அநாகரிகங்களை தடுத்து நிறுத்துவது.. ஆவணப்படங்கள் எடுக்கலாம் அதை முடிந்தவரை வெளிநாட்டுத்திரைப்படவிழாக்களுக்கு அனுப்புவித்து.. பரப்புரை செய்யலாம்.தொடர்ந்த இது பற்றிய கூட்டங்களை போடலாம். வழக்கறிஞராகிய நீங்கள்தான் மாற்று சிந்தனை உள்ளோரை சிதறாமல் திரட்டவேண்டும். நன்றி.

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

என்னாத்த எழுதுறது. கண்ணுல ரெத்தம் வருதய்யா.

மக்கா ஒங்களுக்கு மனசே கிடையாதா?...
14 வருஷம் போனாலே 2 ஆயுள் தண்டணை முடிந்து விடும். இப்ப 20 வருஷம் ஆகியிருச்சி.
மலமுழுங்கி மகாதேவன்கள்லாம் சொகுசா வெளியில இருக்கயில, பாவமுய்யா அந்த மூனு பேரும்.

பிதாவே! ”எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல் எங்கள் பாவங்களை பொறுத்தருளும்“......ன்னு சொல்லுறதில்லையா.

ஒரு விவாதத்திற்காக சொல்வதானால்-
சரி 20 வருஷம் போயிருச்சி, ஜெயில் அனுபவிச்சாச்சி. மன்னித்து விட்டுடா தான் என்ன?.. குடியா முழுகி போயிரும்.

பெயரில்லா சொன்னது…

சென்னை, ஆக.29,2011

மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா இன்று விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் இன்று 110-ன் கீழ் அவர் வெளியிட்ட அறிக்கையில், "மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை. ஜனாதிபதி நிராகரித்த மனுவை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது.

தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் முதல்வருக்கு இருப்பதாக தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் மீண்டும் ஜனாதிபதியைத் தான் அணுக வேண்டும்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.

கருத்துரையிடுக