02 ஜூலை, 2010

பெரியார் எழுத்துகள் இணையத்தில் இலவசமாக... இப்போது யுனிகோடிலும்...

1925 முதல் 1938 வரை உள்ள குடி அரசு இதழ்களில் பெரியாரின் எழுத்தும் பேச்சும் 11,000 பக்கங்கள் கொண்ட 28 தொகுப்புகளாக புத்தகங்களாகவும், ரிவோல்ட் ஆங்கிலத் தொகுப்பு 622 பக்கம் கொண்ட புத்தகமாகவும் பெரியார் திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகங்களுக்கான குறுந்தகட்டுடன் புத்தகத்தின் விலை: ரூ.4,500-00. விபரங்கள் பெரியார் திராவிடர் கழகம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 
அம்பேத்கார் மற்றும் ஜின்னாவுடன் பெரியார்

அனைத்து குடிஅரசுத் தொகுப்புகளும் புத்தக வடிவத்திலேயே பெரியார் திராவிடர் கழகத்தின் இணையதளத்தில் (http://periyardk.org) பிடிஎஃப் கோப்பாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  தேவைப்படுபவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

பெரியார் குறித்த ஆய்வுகளுக்கும்  இணையதளங்களில் பெரியார் குறித்த விவாதங்களுக்கும் பெரியாரை இனிவரும் தலைமுறையினர் அறிந்துகொள்வதற்கும்  UNICODE எழுத்துருவிலும் குடி அரசுக் கட்டுரைகளை வெளியிடுவது அவசியம் என்பதால் 1925 முதல் 1930 வரையுள்ள கட்டுரைகள் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்டுளளது. 


இன்னும் சில நாட்களில் 1938 வரை முழுமையாக UNICODE எழுத்துருவில் குடிஅரசு பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும். 

சொந்தமாக இணையதளம் வைத்திருப்போர், வலைப்பூவில் எழுதுவோர் அனைவரும் தத்தம் தளங்களில் இவற்றைப் பயன்படுத்தலாம். 

முதலில் உடனே பதிவிறக்கம் செய்து பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள். 

01 ஜூலை, 2010

அணு உலை விபத்தும், நடிகை ரஞ்சிதா எழுதும் நூலும்...

இந்திய அரசு தற்போது மிகவும் வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்துள்ளது – தமது அக்கறை இந்தியாவின் குடிமக்கள் மீதல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கே என்பதை எந்த ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையாக செயல் படுத்த ஆரம்பித்துள்ளது.

தேசிய உயிரித்தொழில்நுட்ப நெறிப்படுத்தலுக்கான அமைப்புச் சட்டம், அணு அழிவு இழப்பீட்டு சட்டம் என்ற பெயர்களில் இந்திய மக்களுக்கு எதிராகவும், அமெரிக்கா போன்ற ஆதிக்க நாடுகளின் நலன்களை பேணுவதற்காகவும் சட்டங்களை இயற்றி வருகிறது. 

இந்தியா உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடல்லவா! அதனால் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஆலோசனைகளையும் நடத்திய பின்னர் முறைப்படியே இந்த சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.

இதோ இந்தியாவின் மின்தேவையை பூர்த்தி செய்வதற்காக அமெரிக்கா போன்ற நாடுகள் அக்கறையுடன் கொண்டுவரும் அணுமின் உலைகளில் ஏதேனும் சம்பவங்கள் (விபத்து என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட எஜமானர்கள் அனுமதிக்கவில்லை போலும்!) நடந்து அதனால் இழப்பு ஏற்பட்டால் இழப்பீடு கொடுப்பதற்கான சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கான திட்டத்தை அரசு தீட்டியுள்ளது.

இந்த சட்டம் குறித்து "இந்நாட்டின் மன்னர்"களான நீங்களும், நானும்கூட கருத்து தெரிவிக்கலாம். இதற்கான அறிவிப்பு கடந்த 24 ஜூன் 2010 அன்று சில ஆங்கிலப் பத்திரிகைகளில் வந்துள்ளது. 
 இந்த சட்ட முன்வடிவு மாநிலங்கள் அவையின் இணைய தளத்தில் உள்ளதாம். அதை குடிமக்கள் அனைவரும் படித்து விட்டு தங்கள் கருத்தை இதற்கென அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு முன்பாக சமர்ப்பிக்கலாமாம். இதற்கான கால அவகாசம்: இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து 15 நாட்கள்! அதாவது ஜூலை 9 வரை. மக்கள் கருத்தை எழுத்து மூலமாக மட்டுமே அளிக்கலாம்.

இந்திய மக்கள் அனைவருக்கும் ஆங்கிலம் தெரியுமா? அனைவரிடமும் இணையத் தொடர்புடன் கூடிய கம்ப்யூட்டர் இருக்கிறதா? என்பதெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் இந்தியா வல்லரசாக முடியுமா?

சரச்சைக்குரிய இந்த அணு விபத்து இழப்பீட்டு சட்டம் குறித்து நேரில்தான் டெல்லி வந்து சொல்வேன் என்று யாரேனும் கூறினால் அதற்கும் மனுச் செய்யலாம். ஆனால் டெல்லி சுல்தான்கள் அனுமதித்தால் நீங்கள் அவர்களை சந்திக்கலாம். இல்லாவிட்டால் உங்கள் தெருவின் முச்சந்தியில் நின்று ஒப்பாரி வைக்கலாம்.

இந்த சட்டத்திற்கு முன் தயாரிப்பாக 123 ஒப்பந்தம் என்ற பெயரில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த சமயத்தில் தமிழ் நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடு்க்கப்பட்ட வி.வி.ஐ.பி உறுப்பினர் தனது கன்னிப் பேச்சிலேயே அந்த ஒப்பந்தத்தை ஆதரித்து பேசினார். தற்போது இந்த சர்ச்சைக்குரிய சட்டம் குறித்து அவரிடமிருந்தோ, அவரது கட்சியினரிடமிருந்தோ எந்த சத்தத்தையும் காணோம். 

போபால் விஷவாயு விபத்து குறி்த்த நீதிமன்ற தீர்ப்பு குறித்து நாடு முழுவதும் விவாதம் நடந்து வரும் நிலையில் நாட்டிற்கும், மக்களுக்கும் அனைத்து விதத்திலும் பேரழிவை ஏற்படுத்தும் இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு மத்திய அரசு முயற்சித்து வருகிறது. தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளிடமோ, அறிவுஜீவிகளிடமோ தேவையான அளவிற்கு விவாதங்கள் நடக்கவில்லை. அதற்கு பதிலாக பல்வேறு பெயர்களில் திசை திருப்பும் திருவிழாக்கள் நடந்து மக்களின் கவனம் திட்டமிட்டு திசைதிருப்பப்படுகிறது.

நாம், “நித்யானந்தாவின் அக்னி வளைய பூஜை – ரஞ்சிதா எழுதப்போகும் புத்தகம்” போன்ற அதிமுக்கிய விவகாரங்களுக்குள்  நம் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்போம்!

மேரா பாரத் மஹான்!