நெருக்கடிகள் அதிகரிக்கும் போதெல்லாம் அந்த நெருக்கடியை முறியடிக்கும் வழிகளை உருவாக்குவதே மனிதகுல வரலாறு.
தற்போது தமிழ்நாட்டில் மக்கள் பிரசினைகளை பேசுவதற்கு நெருக்கடி நிலவுகிறது. மக்களின் அன்றாடப் பிரசினைகளை பேசினால்கூட “ஆட்சியை கலைக்க சதி!” என்று அஞ்சி - அலறுகிறது, அரசும் அதன் காவல்துறையும்.
நானும் பத்திரிகையாளன்தான் கூறிக்கொள்ளும் முதலமைச்சரின் ஆட்சியில் கருத்துரிமையை பறிக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் சப்தமின்றி செய்யப்படுகிறது. அறைக்கூட்டங்களுக்கும், சுவரொட்டிகள் – துண்டறிக்கைகள் அச்சிடவும், குறுஞ்செய்தி அனுப்பவும்கூட அறிவிக்கப்படாத தடைகள் அமலில் உள்ளன.
இந்த நிலையில்தான் இந்திய – தமிழ் மீனவர்கள் இலங்கையின் சிங்கள ராணுவத்தால் கொல்லப்படுவதை எதிர்த்து பேசியதாக நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் கைது செய்யப்பட்டு தேசப்பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
---
தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதியும்கூட இந்திய ராணுவத்தை விமர்சித்திருக்கிறார், இலங்கையில் அப்பாவித்தமிழர்களை கொன்றதாகக்கூறி! தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் நடந்தவற்றை முரசொலியில் பதிவு செய்ததை மீள்பதிவு செய்து தமிழர்களின் நினைவாற்றலை புதுப்பித்து அதனுடன் சீமான் பேசியதை ஒப்பு நோக்கியுள்ளது, “கல்லறையில் கருத்துரிமை” நூல்.
அன்று மனசாட்சியுடன் பேசினாலும், இன்று அரசியல் சூழ்நிலைகளுக்காக தமிழக முதலமைச்சர் மவுனம் சாதிக்கிறார். அரசியல் ஆசைகள் (தற்போது) இல்லாத சூழலில் நடுக்கடலில் கொல்லப்படும் – தாக்கப்படும் மீனவர்களுக்காக குரல் கொடுக்கிறார், சீமான்!
இதையும்கூட ஆட்சியை கவிழ்க்கும் சதியாக நினைக்கும் அரசு, அதை நேரடியாக கூறாமல் தேசப்பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் சீமானை பிணையில்லா சிறையில் அடைக்கிறது.
தமிழக முதலமைச்சரின் அன்றைய அரசியல் நிலைப்பாட்டையும், இன்றைய நிலைப்பாட்டையும் உணர்த்தும் வகையிலும் தமிழ்நாட்டில் கருத்துரிமைக்கு கல்லறை கட்டும் நிலை ஏற்பட்டுள்ளதையும் விவரிக்கும் வகையில் இலக்கியா, தியாகு ஆகியோர் எழுதிய கட்டுரைகளையும் இணைத்து "கல்லறையில் கருத்துரிமை" என்ற நூலாக வெளியிட்டுள்ளார், சமூக விழிப்புணர்வு பதிப்பகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் காமராஜ்.
தமிழ்நாட்டில் நிலவும் கருத்துரிமை கடிவாளத்திற்கு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அளவில் இந்த நூல் அமைந்துள்ளது. கருத்துரிமையில் நம்பிக்கையுள்ள அனைவரும் ஒரு முறை வாசிக்க வேண்டிய நூல் "கல்லறையில் கருத்துரிமை!"
சமூக விழிப்புணர்வு பதிப்பகும்,
68, எல்டாம்ஸ் சாலை,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018.
விலை: ரூ.50-00 (72 பக்கங்கள்)
அலைபேசி: 94885 76166