01 அக்டோபர், 2010

அஃறிணைகள்...? - திருநங்கைகளின் ரத்த சரித்திரம்!

திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தும் பணி பல தரப்புகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மேலும் ஒரு பங்களிப்பாக அஃறிணைகள் என்ற குறும்படம் (29 நிமிடங்கள்) அண்மையில் வெளியாகி இருக்கிறது.  

பிரபல வலைபதிவர் லிவிங்ஸ்மைல் வித்யா, ஏஞ்சல் கிளாடி ஆகிய இரு திருநங்கைகளின் உண்மைக்கதையே அஃறிணைகளாக உருவாகி இருக்கிறது. இருவருமே முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள்! இருவருமே நாகரீகமாகவும், சுயமரியாதையுடனும் வாழவிரும்புபவர்கள்! இவர்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ்வதற்கு இவ்விருவரும் படும்பாடு ஒரு குறுங்காவியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநங்கைகளின் ரத்தத்தால் ஆன ஒரு சரித்திரத்தை குழந்தைகள் முதல் அனைவரும் பார்க்கும்படி மிகவும் நயமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

ஏஞ்சல் கிளாடியின் பாலினத்திரிபு சிக்கலோடு ஆரம்பிக்கும் இப்படம் கதைநாயகிகள் இருவருடைய வாழ்க்கையையும் மாற்றி மாற்றி கூறிச்செல்கிறது. வித்யாவின் வாழ்வில் அவர் சந்தித்த சோக சம்பவங்களையும், அதை தவிர்த்து ஏஞ்சல் வாழும் திறனையும் தொழில் நுட்பத்தின் துணை கொண்டு பதிவு செய்துள்ளார் இயக்குனர்.

ஆவணப்படத்துக்கு உரிய இயல்புகள் இல்லாமல் வணிக சினிமாவின் நவீன யுக்திகளையும், விளம்பர படங்களின் நேர்த்தியையும் ஒரு சேர கையாண்டு மிக யதார்த்தமாக இந்த கதை கூறப்பட்டுள்ளது.

உண்மையில் படிப்பறிவில்லா, வறுமையில் வாடும் திருநங்கைகளின் வாழ்க்கை என்பது தலித் மக்களின் வாழ்க்கையைவிட மிகவும் கொடூரமானது. திருநங்கைகளில் கல்வி அறிவு பெற்றவர்களின் பங்களிப்பால் படிப்பறிவில்லா திருநங்கைகளின் வாழ்விலும் நம்பிக்கை ஒளி பிறந்து வருகிறது.  

நேரம் கருதி அந்த விவகாரம் எல்லாம் இந்தப்படத்தில் கூறப்படவில்லை. எனினும் தேர்ந்தெடுத்த கதையை மிக தெளிவாகவும், எளிமையாகவும், கவர்ச்சியாகவும் படைத்துள்ளார் இயக்குனர்.
ஏஞ்சல் கிளாடி

பால் கிளாடி படிப்படியாக ஏஞ்சல் கிளாடியாக உருமாறும் காட்சிகளும், இதற்கிடையே அவர் சந்திக்கும் உளவியல், சமூகவியல் சிக்கல்களும் மிக நேர்த்தியாக கூறப்பட்டுள்ளது. இடையிடையே லிவிங்ஸ்மைல் வித்யாவின் வாழ்வும் அவருடைய வாய்மொழியிலேயே பதிவு செய்யப்படுகிறது. உணர்வுகளை பதிவு செய்வதற்கு லிவிங்ஸ்மைல் வித்யாவின் கவிதைகளும் துணை நிற்கின்றன. திருநங்கைகள் குறித்த அறிவியல்ரீதியான புரிதலுக்கு தேவையான விளக்கங்களை மனநல மருத்துவர் ஷாலினி வழங்கியுள்ளார்.

திருநங்கைகளின் மேம்பாட்டில் செல்ல வேண்டிய தூரம் ஏராளம் இருக்கிறது. எனினும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் திருநங்கைகள் குறித்து அரசே பல திட்டங்களை அறிவித்துள்ளது. (திருநங்கைகளின் வாக்குவங்கி குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்ற போதிலும்கூட திருநங்கைகள் மீது அக்கறை காட்டும் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியன!) திருநங்கைகள் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சிறு முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றுள்ளனர் இப்படத்தின் தயாரிப்பாளரான திருமதி கீதாவும், இயக்குனரான திரு. இளங்கோவனும்! இவர்கள் இருவரும் அரசுத்துறைகளில் உயர்பதவி வகிப்பவர்கள் என்பது கூடுதல் தகவல்.

திருநங்கைகள் விவகாரத்தில் மட்டுமல்லாமல் ஏனைய விவகாரங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அம்சங்கள் ஏராளம் உள்ளன. அதனை செய்வதற்கு தங்களுக்கு திறன் உள்ளது என்பதை இந்த படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் நிரூபித்துள்ளனர்.
இயக்குனரும், இயக்குனரின் இயக்குனரும்

இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பே, அவ்விணையரின் மற்ற முயற்சிகளை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும்.

அதேபோல என் தோழி வித்யாவும், ஏஞ்சலும்கூட அவர்கள் சொந்த வாழ்க்கையை காட்சிப்படிமமாக பதிவு செய்ய முழுமையாக ஒத்துழைத்துள்ளனர். அவ்விருவரின் கலையார்வமும் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட மற்றவர்களின் பங்களிப்பும் சிறப்பாகவே உள்ளது.

சமூக மாற்றத்தில் இதுபோன்ற கலைப்படைப்புகள் சிறு எறும்புகள்தான். ஆனால் இந்த எறும்புகள் ஊற, ஊற பாறைகளும் தேயும். தேய வேண்டும். அதில் நமது பங்களிப்பும் இருக்கிறது.

தொடர்புகளுக்கு:  ilangovaniras@yahoo.co.uk 

பின் குறிப்பு: குறும்பட டிவிடியின் மதிப்பு ரூ. 100-00


7 கருத்துகள்:

சுந்தரராஜன் சொன்னது…

தமிழ்மணத்திற்காக... சும்மா டெஸ்ட்!

பெயரில்லா சொன்னது…

//திருநங்கைகளின் வாக்குவங்கி குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்ற போதிலும்கூட திருநங்கைகள் மீது அக்கறை காட்டும் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியன//

I think this is the first time, you are approving a state activity, obviously. I think its your duty and responsibility to approve the state's positive and pro-people attitude and activities. Then only persons like you can have the locus standi to criticise the state. However you have made good comment. Keep it up.

பெயரில்லா சொன்னது…

அயோத்தி தீர்ப்பு குறித்து ஊரே விவாதிக்கும்போது ஒரு வழக்கறிஞர் அது குறித்து எதுவும் பேசாமல் திரைப்பட விமர்சனம் எழுதுவது சரிதானா, ஐயா?

Unknown சொன்னது…

//சமூக மாற்றத்தில் இதுபோன்ற கலைப்படைப்புகள் சிறு எறும்புகள்தான். ஆனால் இந்த எறும்புகள் ஊற, ஊற பாறைகளும் தேயும். தேய வேண்டும்.//
//திருநங்கைகளின் வாக்குவங்கி குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்ற போதிலும்கூட திருநங்கைகள் மீது அக்கறை காட்டும் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியன//

Unknown சொன்னது…

//உண்மையில் படிப்பறிவில்லா, வறுமையில் வாடும் திருநங்கைகளின் வாழ்க்கை என்பது தலித் மக்களின் வாழ்க்கையை மிகவும் கொடூரமானது.//

அய்யா .. இதில் விட என்னும் விடுபட்டுள்ளதாகத் தோன்றுகிறது.


அருமையான பதிவு. தங்களின் பணி தொடரட்டும்.

சுந்தரராஜன் சொன்னது…

//உண்மையில் படிப்பறிவில்லா, வறுமையில் வாடும் திருநங்கைகளின் வாழ்க்கை என்பது தலித் மக்களின் வாழ்க்கையை மிகவும் கொடூரமானது.//

அய்யா .. இதில் விட என்னும் விடுபட்டுள்ளதாகத் தோன்றுகிறது.
...
திருத்திவிட்டேன் நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

ஐயா!
எறும்புகள் ஊர ஊர எனத் திருத்தவும்.
நல்ல முயற்சி. வெளிநாட்டுக்கும் அனுப்புவார்களா?

கருத்துரையிடுக