18 நவம்பர், 2010

தாய், தந்தையை கொல்லும் தமிழர்கள்!

தலைக்கு ஊத்தல்! சாவகாசமாக ஒரு எண்ணெய்க் குளியல்.  புதிதாகப்  பிறந்த குழந்தைக்கு அன்பும், நலமும் வேண்டி செய்யப்படும் ஒரு சடங்கு... விழாக்காலங்களின் தொடக்க நிகழ்வாக... கோடையின் வெப்பத்தை எதிர்கொள்ள உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒரு வழக்கம்...! தமிழ்நாட்டின் விருதுநகர் பகுதியிலோ இது மெதுவாக நடைபெறும் ஒரு கொலை. வறுமையின் கொடுமை தாங்காமல் வயதான தாயை பெற்ற மகனே கொலை செய்யும் கொடூரத்தின் அடையாளம்!

தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் வயதான முதியவர்களை பராமரிக்க இயலாமல் அவர்கள் வீட்டு இளைய தலைமுறையே இவ்வாறு செய்யும் நிலைக்கு தள்ளப் படுகின்றனர். 65 வயதான மாரியம்மாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கும் இது நடக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அவர் மகன் வீட்டை விட்டு வெளியேறினார். நான் என் காலில் நிற்குமளவுக்கு உறுதியாக இல்லை: ஆனால் என் குழந்தைகளால் கொல்லப்படுவதைவிட இது மேலானது! 
அவர் குரலில் கோபமோ, கசப்புணர்வோ இல்லை. அவர்களுடைய குழந்தைகளை பராமரிக்கவே அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்! என மகன்களைப் பற்றி அவர் கூறுகிறார். அவருடைய இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் விவசாயக்கூலி வேலை செய்கின்றனர். ஒவ்வொரு நடவுக்கும், அறுவடைக்கும் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று கூலிவேலை செய்வது அவர்களின் தொழில். அவரது பிள்ளைகள் குடும்பத்தை நடத்தவும், பேரக்குழந்தைகளை படிக்கவைத்து பராமரிக்கவும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது மாரியம்மாவிற்கு தெரியும். அதில் தானும் அவர்களோடு  இருப்பது அவர்களுக்கு கூடுதல் சுமை என்பதும் புரிந்தது. எனவே அவர்களை விட்டுவிலகாவிட்டால் அது எங்கு போய் முடியும்? என்பது மாரியம்மாவிற்கு தெரிந்திருந்தது.

மாரியம்மாவின் வயதை ஒத்த மற்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் நடந்ததை அவர் பார்த்தார். அவரது அண்டை வீட்டிலிருந்த 76 வயதான பார்வதிக்கு பக்கவாத நோய் இருந்தது. பார்வதிக்கு ஒரே மகன். சென்னையில் கூலிவேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் எப்படி படுத்தப்படுக்கையாக இருக்கும் அவனுடைய தாயை பார்த்துக் கொள்ள முடியும்?” என்கிறார் மாரியம்மா. ஒரு நாள் பார்வதியின் மகன் சென்னையிலிருந்து வந்து, அதைச் செய்துவிட்டு சென்றுவிட்டான். அவனால் வேறு என்ன செய்யமுடியும்?” என்று கேட்கிறார், மாரியம்மா. அந்தக் குரலில் கோபமோ, பயமோ இல்லை: உதவி செய்ய யாருமற்ற நிர்க்கதியான உணர்வே அந்தக் குரலில் இருக்கிறது. கொலையை திட்டமிட்டு செய்பவர்கள் மீது பச்சாதாபம்!

இருள் விலகி பொழுது புலரும் முன்பே அந்த முதியவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கப்படுகின்றனர். பின்னர் நாள் முழுதும் குளிர்ந்த இளநீர் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே முதியவர்கள் தங்கள் குழந்தைகளிடம் எண்ணெய் தேய்த்துக் குளித்தவுடன் குளிர்ச்சியாக எதையும் சாப்பிடக்கூடாது என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியிருப்பார்கள் என்பது கொடுமை. எண்ணெய்க்குளியல் மற்றும் இளநீரின் குளிர்ச்சி தாங்காமல் வயது முதிர்ந்த பெரியவரோ, மூதாட்டியோ காய்ச்சல் வந்து ஓரிரு நாளில் உயிரை துறப்பார்கள்.

காலப்போக்கில் இவ்வாறான கொலைகளை செய்வதில் பல புதிய  முறைகள் உருவாகிவிட்டன. வயதானவர்களின் வாயில் சேற்றைத் திணிப்பது இவற்றில் ஒன்று. மண் பாசம் காரணமாக உயிர் பிரிய மறுப்பதாகக் கூறி இந்த முறை கையாளப்படுகிறது. ஆனால் உண்மையில் மண்ணை செரிக்க முடியாமல் மரணம் ஏற்படும்.

சாத்தூரைச் சேர்ந்த துரைராஜ் என்ற விவசாயி, அவருக்கு தூரத்து உறவினரான முனியம்மாள் வேறோரு முறையில் கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டார். 78 வயதான முனியம்மாள் தனக்கு தேவையானதை தானே சம்பாதிக்க முடியாத அளவிற்கு பலவீனம் அடைந்தார். அவருக்கும் தலைக்கு ஊத்தல் நடந்தது. ஆனால் அதிலும் அவர் உயிர் பிரியவில்லை. சில நாட்களில் அவருக்கு பால் ஊற்றப்பட்டது. இந்த பால் ஊற்றப்படுவதற்கு முன்னதாக அந்த முதியவர்களுக்கு திட உணவு கொடுப்பது நிறுத்தப்படும். பின்னர் அவர்களுக்கு பால் ஊற்றும்போது அவர்களின் மூக்கை யாராவது ஒருவர் மூச்சுவிட முடியாதவகையில் அழுந்தப்பிடித்துக் கொள்வார்கள். பசியால் தவிக்கும் ஒருவருக்கு தொடர்ச்சியாக பால் ஊற்றப்படும்போது, மூக்கையும் மூச்சுவிடமுடியாமல் பிடித்தால், ஊற்றப்படும் பால் அவர்களின் மூச்சுக்குழலில் இறங்கும். சில மணித்துளிகளில் உயிரிழப்பது உறுதி!

சில இடங்களில் விஷம் கொடுப்பதும் நடக்கிறது. பரமக்குடியில் கணேசனுக்கு அதுதான் தொழில்! மருத்துவராக பணியாற்றுவதாகக் கூறும் கணேசன் ஒரு மரணதேவன். தேவைப்படுபவர்களுக்கு விஷமருந்தை ஊசிமூலம் செலுத்துகிறார். வாழவேண்டிய வயதில் உள்ள யாரையும் நான் கொல்லவில்லை. ஒருவரின் இறுதிக்காலத்தில் அவர் வறுமையில் வாடாமல் இருக்கவே நான் இதைச் செய்கிறேன்! என்கிறார் கணேசன்.

இவ்விதமான பழக்கங்கள் நடைமுறையில் இருந்தாலும் விருதுநகர், ராமசாமிபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற 60 வயது முதியவர் இறந்தபோது இது விவாதத்திற்கு வந்தது. சாலை விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்த செல்வராஜ் மரணம் அடைந்தபோது அவரது உறவினரான அசோகன் கொடுத்த புகாரின் பேரில் செல்வராஜுக்கு விஷ ஊசி போட்டதாக ஜீனத் என்ற பெண் கைது செய்யப்பட்டார். ஆனால் இறந்துபோன செல்வராஜின் உடல் தகனம் செய்யப்பட்டிருந்ததால் புகாரை நிரூபிக்க முடியவில்லை. ஜீனத் இப்போது பிணையில் இருக்கிறார்.

இந்த செய்தி தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.கே. சண்முகம் கூறுகிறார். இதுபோன்ற சமூக அவலங்களை எதிர்கொள்ள அரசு வழக்கமாக மேற்கொள்ளும் கைது, எச்சரிக்கை, விசாரணை போன்ற நடைமுறைகள் உதவாது என்பது அவரது கருத்து.

தலைக்கு ஊத்தல்! இந்த செயலை குற்றச்செயலா அல்லது வறுமையின் கோரத்தால் நடைபெறும் செயலா என்று தீர்மானிக்க முடியாத ஒரு செயல். இது ஒரு சமூகத்தின் வழக்கமாக இருந்துள்ளது. குடும்பத்தினர் கூடி எடுக்கும் முடிவு. அன்பிற்குரியவர்களை வழியனுப்பி வைக்கும் ஒரு சடங்கு. சில நேரங்களில் பலியாகும் முதியவர்களின் விருப்பம். வறுமையிலிருந்து விடுபட்டு நிரந்தர அமைதிக்கான பாதையாகவும் இது இருப்பதாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகம் கூறுகிறார். இதை சட்டம் மற்றும் குற்றச்செயலாக மட்டுமே பார்ப்பது சிரமம் என்றும் அவர் கூறுகிறார்.

தலைக்கு ஊத்தலை குற்றச் செயலாக கருதினால் முழு கிராமமே அதற்கு உடந்தை! கிராமத்தினரும், உறவினர்களும் இதை ஆதரிப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை. தலைக்கு ஊத்தும் நாளுக்கு ஓரிரு நாள் முன்னதாக வந்து அந்த முதியவரையோ, மூதாட்டியையோ கடைசியாக ஒரு முறை பார்த்துச் செல்வதும் உண்டு. அந்த முதியவரோ, மூதாட்டியோ இறக்கப்போகிறார் என்பது அனைருக்கும் தெரியும்.

இந்த தலைக்கு ஊத்தும் பழக்கம் எந்த ஜாதிக்கோ, சமூகத்துக்கோ தனி உரிமையானது அல்ல. வறுமையில் வாழும் அனைத்து சமூகத்தினரும், ஜாதியினரும் இதைச் செய்கின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் கூலி விவசாயிகளாகவோ, ஆடு மேய்ப்பவர்களாகவோ, சிறு தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களாகவோ இருக்கின்றனர். அவர்களினஅ வாழ்க்கை நிலை, வயது முதிர்ந்த பெற்றோர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் அளவிற்கு இல்லை.

வறுமை காரணமாக முதியவர்களை கொலை செய்வது கொடுமையான தீர்வுதான், ஆனாலும் அதைத்தவிர வேறு வழியில்லை என்பதே இப்பகுதி மக்களின் கருத்து.

காசியின் வயது அறுபதா அல்லது எழுபதா என்பது அவருக்கே தெரியாது. மனைவி இறந்தபின் மகனின் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். அவரது நிறைந்த வாழ்க்கையின் அடையாளமாக நரைத்த தலைமயிரும், மீசைகளும், சுருக்கம் விழுந்த தோலும் இருக்கின்றன. தனக்கு தேவையானதை செய்வதற்கு தன் பிள்ளைகள் கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இல்லாவிட்டால் அவருக்கும் இந்நேரம் தலைக்கு ஊத்தப்பட்டிருக்கலாம்.

விருதுநகரில் பரவலாக முதியவர்களும், மூதாட்டிகளும் வீட்டிலிருந்து விலகி இருக்கின்றனர். என் மகன் அவன் வாழ்க்கைக்கே கஷ்டப்படுகிறான் என்கிறார் காசி. நான் ரேஷன் கடையில் கிடைக்கும் அரிசியால் நன்றாகவே இருக்கிறேன் என்கிறார் மாரியம்மா.  அவர்கள் பட்டினி கிடக்கின்றனர். கஷ்டப்படுகின்றனர். ஆனால் புகார் கூறவில்லை.  தலைக்கு ஊத்தல் என்பது கோழைத்தனமான கொலையாக அவர்கள் பார்க்கவில்லை. வீரமான பிரிவுபசாரமாகவே பார்க்கின்றனர். காசிக்கும், மாரியம்மாவிற்கும் இது கொடுமையான விஷயம் இல்லை. மிஞ்சியுள்ளவர்கள் உயிர் வாழ்தலுக்கான நடைமுறை அன்பாகவே இருக்கிறது.

நன்றி: ஷகினா, டெஹல்கா வார இதழ் - 20.11.2010 

(டெஹல்கா வார இதழி்ல் வெளி வந்ததைப் போல இது வறட்சியான விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் நடைபெறும் ஒரு வழக்கமில்லை. வளமையான தஞ்சை மாவட்டத்திலும் சாதாரணமாக நடைபெறுகிறது. 

நிலத்தின் வளமையோ, வறுமையோ சாதாரண உழைப்பாளிகளிடம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. எங்கிருந்தாலும் அவர்களுக்கு வறுமை மட்டுமே வாழ்க்கை என்றால் இந்தப் போக்குதான் பரவும். 

இந்தியாவின் சுதந்திரம் 63 ஆண்டுகளில் மக்களுக்கு அளித்த கொடைதான், "பெற்ற பிள்ளைகளே தாயையும், தந்தையையும் அன்போடு கொலை செய்யும் நிலை!" 
.
இதற்காக யாரை என்கவுண்டர் செய்வது?

-சுந்தரராஜன்)
9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//இதற்காக யாரை என்கவுண்டர் செய்வது?//

Good question! We should kill ourselves.

மாசிலா சொன்னது…

என்ன அநியாயம் இது? இன்னும் சில காலங்களில் இக்கொலைகளை 'கருணை கொலைகள்' என பெயர் மாற்றி நவீன முறையில் செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. என்னதான் வறுமை என்றாலும், இப்படி பகிரங்கமாக பட்டப்பகலில் கும்பல் கூடி முதியோர்களை கொலை செய்வதை எந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளாது.

அரசாங்கம் முதியோர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் கொடுத்து தகுந்த பாதுகாப்பு அளித்தால் இவைகளை தடுக்கலாம்.

வரவர மனிதனின் வாழ்க்கைக்கே அர்த்தமில்லாமல் போய்விட்டது.

விழிப்புணர்வூட்டும் இக்கட்டுரையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

raja சொன்னது…

தமிழ் சமூகம் மிகவும் தொன்மையான சமூகம்... அல்லாவிடில் அவ்வை எனும் ஆளுமை தோன்றியிருக்க வாய்ப்பில்லை.முதுமைக்கு கொடுக்கவேண்டிய பெரும் மரியாதைகள் கொடுக்கபட்டிருக்கின்றன. நமது தத்துவங்கள், காவியங்கள்,இலக்கியங்கள் யாவும் முதியவர்களிடமிருந்தே வந்திருக்கின்றன. தவறு எங்கு நடந்ததென்றால் தமிழ்சமுகம் இந்திய சமுகத்தின் எடுபிடியாக மாறியப்பொழுதுதான்.. மொத்தவிழுமியங்களையும் பிராமணர்கள் தங்களுடையதாக மாற்றி இந்திய அரசியலமைப்பையே தங்களது ஆதிக்கத்தில் கொண்டு வருகிறார்கள். இங்கு தமிழ் சிந்தனக்கே இடமில்லை.. மீண்டும் இந்தியாவை ராஜவம்சத்தினரே ஆள....(நேரு குடும்பம்,கருணாநிதி குடும்பம்) அவர்கள் சந்தை முதலாளிகளிடம் நம்மை விற்றுவிடுகிறார்கள். முதலாளிகளுக்கு என்றும் கவலை கிடையாது.. பணமே ஒரே குறிக்கோள்... இப்படியாக அழுகல் விரவிக்கிடக்க... ஏழையானவன் ஒருவேளை பெற்றவர்களுக்கு ஊத்த வக்கில்லாதவனுக்கு வேறு வழியல்லை..பிள்ளைகளே பெற்றோர்களை கொடும் செயல்.நடக்கிறது.. இவ்விஷயத்தில் ஜரோப்பிய சமுகத்திடம் நாம் நிறைய பாடம் படிக்கவேண்டியிருக்கிறது

அய்.ஜெயச்சந்திரன் சொன்னது…

நண்பர் சுந்தர்,
முதலில் ஒரு விஷயம். தலைப்பில் எனக்கு உடன்பாடில்லை. இந்தக் கொலைகளுடன் ஒட்டுமொத்தமாகத் தமிழர்கள் என அடையாளப்படுத்துவதை என்னால் ஏற்க இயலாது.
'பெரிசுகளுக்கு தலைமுழுக்குப் போடுதல்' என்பது தெஹல்காவில் இப்போது வேண்டுமானால் செய்தியாக வந்து இருக்கலாம். ஆனால் என்னைப் போன்றவர்களைப் பொருத்தவரை இந்தத் -தலை முழுக்காடு- ஒரு வரலாறு.
பழைய மதுரை-ராமநாதபுரம் ஜில்லா பூர்வீகத்தாருக்கு இந்த முறையில் உயிர்களைப் பறிப்பது, குறிப்பாக, இழுத்துக்கோ பறிச்சுக்கோ எனத் துன்பப்படும் வயதானவர்களுக்குத் தலைமுழுக்காடு என்பது நீண்ட நெடுங்காலமாக செய்துவிக்கப்பட்டுவந்த ஒருவிதமான விமோசனச் சடங்கு என்பது நன்றாகத் தெரியும்.
அந்த ஜில்லாக்காரன் என்ற முறையில் மட்டுமே சொல்கிறேன். தெஹல்கா கட்டுரையில் இடம்பெற்ற விருதுநகர் சுற்றுப்புற பகுதிகள் பழைய மதுரை ஜில்லாவுக்குள் அடக்கம்.
கிட்டத்தட்ட 100 வயதை நெருங்கி படுத்தப்படுக்கையாக இரு மாமாங்கமாகக் கிடந்து உயிர்பிரியவில்லையே என்று விசனத்துடன் இருந்த என் அம்மாச்சியின் மாமியாரை (எனக்கு எள்ளுப்பாட்டி) விளக்கெண்ணெய் தலைமுழுக்காடு செய்துதான் உயிர் பிரித்தார்கள் என எனக்கு விவரம் தெரிந்தகாலத்தில் புரிந்துகொண்டேன். ஒருவகையில் கருணைக்கொலை!
நிற்க.
நான் ஏதோ இந்தக் கொலைகளுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்துவிடவேண்டாம். இந்த கொடிய சடங்கின் சமூக, வரலாற்றுப் பின்னணியை சற்று மக்கள் புரிந்து கொள்வதற்கான விளக்கமாக இருக்கட்டும் என்ற தகவலுக்காக மட்டுமே எழுதுகின்றேன்.
எனது அம்மாச்சி வழி பூர்வீகம் பழைய ராமநாதபுரம் ஜில்லா. காரியாபட்டியில் இருந்து 22 கி.மீ. தூரத்தில் உள்ள இணக்கநேரி கிராமம். இன்றைக்கும் அந்த கிராமத்துக்கு அருகாமை பஸ் ஸ்டாப்பிலிருந்து 3 கி.மீ. நடந்துதான் செல்லவேண்டும். மதுரையில் இருந்து 41 கி.மீட்டரில் இப்படியொரு அவலம்.
தமிழக அரசு வெப்சைட்டில் பலமுறைத் தேடிப்பார்த்தும் கிராமத்துவரிசையில் இணக்கநேரி பெயர் இல்லை. அத்திப்பட்டி கேஸ் போல ஆக்கிவிட்டார்கள்போல.
இணக்கநேரி கிராமம் வானம் பார்த்த பூமி. 1959ல் வைகை அணை கட்டியதோடு எங்கள் பூமியில் விவசாயம் வேரோடு கருவறுக்கப்பட்டது.
மழைபெய்தால் நடவு. இல்லையேல் சடவு.
ஆகவே, கண்ணுக்கெட்டாத அளவுக்கு பல நூறு ஏக்கர் நிலங்கள் (நஞ்சையாக இருந்து புஞ்சையாகிப்போனவை), ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் என் அம்மாச்சிக்கு சொந்தம்,
திடீரென கள் இறக்க அரசு விதித்த தடையால் அந்த வருமானமும் அம்போ. எங்கள் குடும்பத்துக்குத் தனிப்பட்ட பொருளாதார இழப்பு என்பது வேறு விஷயம். ஆனால் எனது அம்மாச்சியின் நிலங்கள், பனை மரங்களை அண்டியிருந்த பல குடும்பங்கள் வேறுபிழைப்புக்கு வழியில்லாமல் கண்ணுக்கு முன்னால் சிதறிப்போனதாக என் அம்மா சொல்லிசொல்லி வருத்தப்படுவார்கள்.

சுந்தரராஜன் சொன்னது…

தலைப்பில் உடன்பாடு இல்லை எனக்கூறினாலும் கருத்தில் உடன்பாடு கொண்டுள்ள நண்பர் ஜெயசந்திரனுக்கு,

வறுமை காரணமாகவே இந்த "கருணை"க்கொலைகள் நடக்கின்றன என்பதை தாங்கள் ஏற்பதாகவே நான் புரிந்து கொள்கிறேன்.

இந்த வறுமைக்கு காரணம் யார் என்பதே என் கேள்வி.

நாட்டின் சிறுபான்மையினரிடம் கோடிக்கணக்கான ரூபாய்கள் தஞ்சமடைவதும், பெரும்பான்மை மக்களிடம் உணவுக்கும், மருந்துக்கும்கூட பஞ்சம் நிலவுவதும் ஏன் என்பது அடுத்த கேள்வி.

முன்னாள் பத்திரிகையாளர்களான நாம் இருவரும் பதில் கண்டுபிடிக்க முடியாத கேள்வி.

K.R.அதியமான் சொன்னது…

///இந்த வறுமைக்கு காரணம் யார் என்பதே என் கேள்வி///

pls see :

வறுமைக்கு காரணமும், விளைவுகளும்
http://nellikkani.blogspot.com/2007/09/blog-post.html

சிவானந்தம் சொன்னது…

``இன்றுதான் இந்தப் பதிவை பார்க்க நேர்ந்தது.
நிறைய எதிர்பார்க்கிறேன்.``


வழக்கறிஞர்களை நான் விமர்சித்திருந்தேன். அதை பொருட்படுத்தாமல் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள். நன்றி

எனது பதிவில் ஆதாரமற்ற செய்திகள் வந்தால் உங்கள் கருத்தை மறக்காமல் பதிவு செய்யவும். .

Josephine Baba சொன்னது…

என் தோழி ஒருவர் மூலம் தென்காசி ஆலன்குளம் பகுதியிலும் இவ்விதமாக அதாவது உயிருடன் பானைக்குள் வைத்து அடக்கம் செய்யும் வழக்கம் இருந்ததாக கேள்வி பட்டுள்ளேன். வறுமை என்பதை விட தன்னலம், சார்ந்த மனமே. உபயோகம் அற்றதை குப்பையில் போடுவது போல். தமிழர்கள் இரக்கம் அற்றவர்கள் தான். முதிர்ந்தவர்களை எள்ளி நகையாடுவதை பேருந்து பயணத்திலும் மற்றும் கவனித்துள்ளேன்.

J.P Josephine Baba சொன்னது…

கொடுமை! நம் அரசு ஊழல் ஆட்சி மக்களை வறுமை பட்டிணி மட்டுமல்ல கொலைகாரர்களாகவும் மாற்றுகின்றது. நெஞ்சில் ஈரமில்லாத தமிழ் மனவும் ஒரு காரணம் தான் என்று எனக்கு தோன்றுகின்றது!

கருத்துரையிடுக