31 டிசம்பர், 2010

இந்தியாவின் நீதிமன்றங்கள், இந்தியர்களுக்கான நீதிமன்றமாக மாறுவது எப்போது?

இந்தியாவின் நீதித்துறை அதன் தோற்றம், இயல்பு, நோக்கம், செயல்பாடுகள் ஆகிய அனைத்திலும் மக்களாட்சி நடைபெறும் ஒரு நாட்டிற்கேற்றதாக இல்லாமல் அந்நியத்தன்மையோடுதான் செயல்படுகிறது.

முதலில் வழக்கறிஞர்கள் அணியும் உடையைக் கூறலாம். ஒரு வருடத்தில் சுமார் 10 மாதங்கள் வெப்பம் நிலவும் நாட்டில் நமது தட்பவெப்ப நிலைக்கு சிறிதுகூட பொருத்தமற்ற ஒரு சீருடை என்பதே குரூர நகைச்சுவை!

கிரிக்கெட் விளையாட்டைப் போல இந்த சீருடையும் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுகிடந்த நாடுகளில் மட்டுமே வழக்கறிஞர்களால் பின்பற்றப்படுகிறது. குளிர் தேசமான இங்கிலாந்திற்கு பொருத்தமான உடை எங்களுக்குத் தேவையில்லை என்று சொல்வதற்கான சிந்தனைத் திறனோ, செயல்திறனோ இல்லாமல்தான் பெரும்பாலான வழக்கறிஞர்கள் இருக்கின்றனர்.

கி.பி. 16ம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆட்சி செய்த அரசிக்கு துக்கம் அனுஷ்டிக்க அந்நாட்டு வழக்கறிஞர்கள் அணிந்த கருப்புச்சீருடையில் இன்றும் சிறைப்பட்டிருக்கும் இந்திய நீதித்துறையிடம் சுதந்திர இந்தியாவின் குடிமக்கள் நீதியை எதிர்பார்க்கவேண்டிய சூழல் ஒரு அதிசயம்தான்!

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை கோரும் ஒரு குடிமகன் அதை உரிமையாக கோரமுடிவதில்லை. அரசு மற்றும் நீதித்துறை பெருந்தன்மையோடு வழங்கும் சலுகைக்காக பிரார்த்தித்து வேண்டுவது போலத்தான் நீதிமன்ற மனுக்கள் தயாரிக்கப்படுகின்றன.

சுதந்திர இந்தியாவின் நீதிபதிகளை, ஆங்கிலேய நீதிபதிகளை அழைத்ததைப்போல “மை லார்ட்!” என்று அழைக்க வேண்டாம் என்று வழக்கறிஞர் மன்றம் தீர்மானம் இயற்றவே ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் ஆயிற்று. ஆனாலும் இந்த தீர்மானம் பெரும்பாலான வழக்கறிஞர்களாலேயே நீதிமன்றத்துக்குள் தோற்கடிக்கப்படுவது நிதர்சனம்! அடிமைப் புத்தியின் பாதிப்பு அந்த அளவிற்கு ஊடுருவி இருக்கிறது.


---


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தவிர இந்தியாவில் தற்போது பின்பற்றப்படும் பல சட்டங்கள் ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்தபோது உருவாக்கப்பட்டவை. தற்போது புதிதாக உருவாக்கப்படும் சட்டங்களும் இந்தியர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு பதிலாக  உலக வர்த்தகக் கழகம், அமெரிக்க நிர்பந்தம், தனியார் நிறுவனங்களின் செல்வாக்கு காரணமாகவே உருவாக்கப்படுகின்றன.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள சட்டங்களில் இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) 1860ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.  இந்தியர்களை இங்கிலாந்தின் குமாஸ்தாக்களாக உருவாக்கிய அதே மெக்காலே பிரபுதான் இந்திய தண்டனைச் சட்டத்தையும் உருவாக்கினார்.   

இந்திய சாட்சியச் சட்டம் (Indian Evidence Act) 1872ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவின் உரிமையியல் நடைமுறைச் சட்டம் (Civil Procedure Code) 1908ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின்படியே இந்தியாவில் உள்ள கீழ்நிலை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை இயங்குகிறது. குற்றவியல் நீதிமன்றங்கள் அனைத்தும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன.

இதைத்தவிரவும் ஏராளமான சட்டங்கள் இந்தியாவில் அமலில் உள்ளன. இந்தியாவில் இந்த நிமிடத்தில் எத்தனைச் சட்டங்கள் அமலில் உள்ளன என்பதை யாரும் சரியாக கணிக்க முடியாது. மேலும் குறிப்பிட்ட சட்டத்தில் ஏற்படும் கேள்வி ஒன்றுக்கு நீதிமன்றம் கொடுக்கும் விளக்கம் முன் மாதிரிச் சட்டமாக கருதப்படுகிறது. எனவே சட்டம் என்ற துறை நாளும் மாறும், வளரும் துறையாக உள்ளது.

ஆனால் இந்தச் சட்டங்கள் இந்தியக் குடிமகனுக்கு உதவி செய்கிறதா?  பாதுகாப்பு அளிக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பினால், “இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் இந்தியச் சட்டங்கள் பாதுகாப்பு அளிக்கவில்லை!” என உறுதியாக கூறலாம்.

குற்றவியல் தன்மை வாய்ந்த அனைத்து சட்டங்களும் குற்றம் சாட்டும் அதிகாரிகளுக்கான ஒரு பாதுகாப்பு அம்சத்தோடு விளங்குகின்றன. அதாவது ஒரு குற்றத்தை ஒரு நபர் செய்திருக்கலாம் என ஒரு காவல்துறை அதிகாரியோ அல்லது அதிகாரம் உள்ள வேறெந்த நபரோ நியாயமாக நம்பினால், குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் மீது கைது உள்ளிட்ட அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்க முடியும். பின்னர் விசாரணையில் சந்தேகத்திற்கு உள்ளான நபர் அந்த குற்றத்தை செய்யவில்லை என நிரூபிக்கப்பட்டாலும் அந்த குற்றச்சாட்டை பதிவு செய்த அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் சட்டரீதியாக எடுக்க முடியாது.

அதாவது ஒரு குற்றம் தொடர்பாக எந்த நபர் மீதும் எந்தவிதமான சாட்சிகளோ, சான்று ஆதாரங்களோ இல்லாவிட்டாலும்கூட, அந்த நபர் குறிப்பிட்ட குற்றத்தை செய்திருக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரி நினைத்தாலே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்த நடைமுறை இயற்கை நீதிக்கு எதிரானது! இந்தியாவின் நீதிக்கொள்கைக்கும் எதிரானதுதான்! ஆனால் காலங்காலமாக இம்முறையே பின்பற்றப்படுகிறது. அதாவது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், அடிமைகளாக இருந்த இந்தியர்களை துன்புறுத்துவதற்காக கொண்டுவந்த சட்டங்களும், நடைமுறைகளும் எந்த விமர்சனமும் இன்றி இன்றும் அப்படியே கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் உரிய ஆதாரங்கள் இன்றி ஒருவர் மீது விசாரணையோ, கைது போன்ற நடவடிக்கைகளோ எடுக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது அந்தக் குற்றம் நிரூபிக்க முடியவில்லை என்றால் உரிய ஆதாரம் இன்றி அவரை அலைக்கழித்த குற்றத்திற்கு இழப்பீடு கேட்டு காவல்துறை அல்லது உரிய துறை சார்ந்த அதிகாரி மீது பாதிக்கப்பட்டவர் நேரடியாக வழக்கு தொடுக்க முடியும். எனவே அமெரிக்கா போன்ற நாடுகளில் அமெரிக்க குடிமக்களின் மனித உரிமைகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுகிறது.


ஒரு நீதிமன்றத்தில் தவறான தகவலை தருவது தண்டனைக்குரிய குற்றம்.

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பல வழக்குகளை அரசு தொடுக்கிறது. அவற்றுள் பல வழக்குகள் அரசுக்கு எதிராக முடிகிறது. குறிப்பாக குற்றவியல் வழக்குகளில் அரசுத்தரப்பு சாட்சியங்கள் அனைத்தும் பொய் சாட்சியங்கள் என்று நிரூபிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

குறிப்பாக விருதுநகர் வாய்ப்பூட்டாம்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாளை கொலை செய்ததாக அவரது கணவர் வேலுச்சாமி,  ராமநாதபுரம்  உப்புக்கோட்டையைச் சேர்ந்த சுஜாதா போன்றவர்களை கொலை செய்ததாக கார்மேகம் ஆகியோர் ஸ்காட்லாந்து யார்ட் போலிஸுக்கு இணையான தமிழ்நாட்டு காவல்துறையின் புலனாய்வால் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனர். இந்த வழக்குகளில் தீர்ப்பு நாளன்று கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட இரண்டு பெண்களும் நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலையானதால் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் தலைகளும் தப்பின. இந்த அதிர்ஷ்டம் இல்லாத எத்தனை பேர் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் வாடிக்கொண்டிருக்கின்றனரோ!

மேற்கூறிய இரு வழக்குகளிலும் உயிரோடு இருக்கும் இரண்டு பெண்களை கொலை செய்யப்பட்டதாக தவறான தகவல்களையும், அதை நிரூபிப்பதற்காக ஏராளமான பொய் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த காவல்துறையும் தண்டனைக்குரிய குற்றவாளிகளே!

ஆனால் "ஒரு நீதிமன்றத்தில் தவறான தகவலை தருவது தண்டனைக்குரிய குற்றம்" என்ற பார்வையில் இந்த வழக்குகள் பரிசீலிக்கப்படவில்லை. அவ்வாறு பரிசீலிக்கப்பட்டால் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த காவல்துறையும் சிறையில்தான் இருக்க வேண்டும். மேலும் இதுபோன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேர்மையாளர்கள்  (Honorary Acquittal) என்பதற்காக விடுவிக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக அரசுத்தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்பதால் சந்தேகத்தின் பலனை (Benefit of Doubt) குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கியே விடுதலை செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு நீதிமன்றங்கள் என்பதை சுயேட்சையானவை என்ற கருத்து மறைந்து அரசின் ஒரு பகுதியாகவே விசாரணை நீதிமன்றங்கள் இயங்குகின்றன. பல நேரங்களில் கைதிகளுக்கான உரிமைகளை திட்டமிட்டு மறைப்பதில் காவல்துறையும், நீதித்துறையும் போட்டி போடுகின்றன.

---

புதிதாக உருவாகும் சட்டங்களோ உலக வங்கி, அமெரிக்கா, வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் நிர்பந்தங்கள் காரணமாகவே உருவாக்கப்படுகின்றன.

சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், வெளிநாட்டு முதலீட்டு தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்நலக் கொள்கைகளை  காற்றில் பறக்க விடுவது, விதைகள் மீதான உரிமைகளை விவசாயிகளிடம் இருந்து பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது, நுகர்வோர் நீதிமன்றத்தை செயலிழக்கச் செய்துவிட்டு சட்டரீதியான கட்டைப்பஞ்சாயத்துகளை ஊக்குவிப்பது போன்ற தேசப்பற்றான நடவடிக்கைகளில் அரசும்,  சட்டம் மற்றும் நீதித்துறையும் தீவிரமாக இயங்கி வருகின்றன. இதை எதிர்த்து கேள்வி கேட்போரை டாக்டர் பினாயக் சென்னை தண்டித்தது போல தண்டிக்கின்றன.

இதற்கிடையில் "நீதிமன்ற அவமதிப்பு" என்ற காலத்திற்கு ஒவ்வாத ஒரு கருத்தைப் பிடித்துக் கொண்டு நீதிமன்றங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை போல பாவனை செய்து கொண்டிருக்கின்றன.  இதன் காரணமாக ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் நிலவும் தேவையற்ற பயம் நீதித்துறையின் முறைகேடுகளை தட்டிக்கேட்கும் வழியினை மூடுகின்றன. பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அமைப்பு குறித்து அந்த அமைப்பு இயங்குவதற்கு மூலகாரணமாக இருக்கும் மக்களின் விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட அமைப்பாக இருக்க முடியுமா? உண்மையில் நீதிமன்றங்கள் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காத வகையி்ல் இயங்கவேண்டும். ஆனால் இந்திய நீதித்துறை எவ்வாறு இயங்குகிறது என்பது பத்திரிகைகளை படிக்கும் பாமரருக்கும்கூட தெரியும்.


---


இது போன்ற பிரசினைகளால் பாதிக்கப்படும் நாமோ, இந்த செயல்பாடுகளுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் நம்மை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த சட்டங்கள் அனைத்தும் நாம் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் “மக்கள் பிரதிநிதிகள்” மூலம் நம்முடைய பேரில்தான் உருவாக்கப்படுகிறது.

ஆனால் நாமோ திரைப்படங்கள் குறித்தும், திரைப்பட நடிகர்களின் சொந்த வாழ்க்கை குறித்தும் சிந்திப்பதில்  கோடியில் ஒரு பங்குகூட நமது சமூகப் பிரசினைகள் குறித்து சிந்திக்கவோ, செயல்படவோ மறுக்கிறோம்.

நம்முடைய பெயரால் உருவாக்கப்படும் சட்டங்கள் நம்மை பாதுகாப்பதற்கா? நம்மை அடிமைப்படுத்துவதற்கா? என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது!

29 டிசம்பர், 2010

ஐந்திணையை மறக்கலாமோ, முத்தமிழ் அறிஞரே!

தமிழர்களின் பாரம்பரியமும், பண்பாட்டு வரலாறும் இயற்கையை ஆதாரமாக கொண்டதே! இயற்கையை போற்றாத இலக்கியமே தமிழில் இல்லை எனலாம். உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் வாழும் இடங்களின் தன்மைக்கு ஏற்ப மக்களை பட்டியலிட்ட இனம் தமிழினமே!
இயற்கையை பாடிய வள்ளுவனுக்கு ஏரியை தூர்த்து நினைவுக்கோட்டம்
தமிழர்கள் வாழும் நிலப்பகுதிகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகைகளாக பிரிக்கப்பட்டிருந்ததை நாம் அனைவரும் பள்ளிக்காலத்திலேயே படித்திருப்போம்.

மலையும் மலைசார்ந்த இடங்களும் குறிஞ்சி: காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை; வயலும் வயல் சார்ந்த இடங்களும் மருதம்; கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல்; குறிஞ்சியும், முல்லையும் வெம்மை காரணமாக இயல்பு மாறினால் வறட்சியானால் பாலையாகும்.

வாழும் சூழலுக்கேற்பவே மனிதர்களின் மனம் சார்ந்த இயல்புகள் உருவாகும் என்பதே மானுடவியல் தத்துவம். இதை நிரூபிப்பதுபோலவே தமிழ்நிலத்தில் நம் முன்னோடிகளும் வாழ்ந்துள்ளனர்.

மலையும், மலை சார்ந்த இடங்களான குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தவர்கள் மலை நெல் விதைத்தல், தேன் சேகரித்தல் போன்ற தொழில்களை மேற்கொண்டனர். காடும் காடு சார்ந்த இடங்களான முல்லை நிலத்தில் வாழ்ந்தவர்கள் வரகு, சாமை விதைத்தல், கால்நடை மேய்த்தல் உள்ளிட்ட தொழிலை செய்து வந்தனர். வயலும் வயல் சார்ந்த இடங்களுமான மருத நிலத்தில் வாழ்ந்தவர்கள் வேளாண் தொழில் வல்லுனர்களாக வாழ்ந்துள்ளனர். வேளாண்மைக்கு அத்தியாவசியமான நீர்நிலைகளை பாதுகாப்பதும் இவர்களின் தொழிலாக இருந்துள்ளது. கடலும் கடல் சார்ந்த இடங்களுமான நெய்த நிலத்தில் வாழ்ந்தவர்களோ மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கூறியவற்றில் மருத நிலமும், நெய்தல் நிலமும் அனைத்து காலங்களிலும் வளமாக இருந்துள்ளது. குறிஞ்சி, முல்லை ஆகிய பகுதிகள் வறட்சியாக இருந்தபோது பாலைப் பகுதியாக இயல்பு மாறியுள்ளது.

பாலைப்பகுதியில் வசித்தவர்கள் வேறெந்த தொழிலுக்கும் வழியற்ற நிலையில் களவு, வழிப்பறி, கொள்ளை, கொலை போன்ற குற்றங்களை தொழிலாக செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தமிழ்நாட்டில் பாலை நிலங்கள் நிரந்தரமாக இருந்ததில்லை. இயற்கைச்சீற்றத்தினால் வறட்சி ஏற்படும் காலங்களில் மட்டும் குறிஞ்சிப் பகுதியும், முல்லைப் பகுதியும் சில காலத்திற்கு பாலைகளாக தோற்றம் அளித்திருக்கின்றன, அந்நாளில்!

எனவே மனிதர்கள் வாழும் இயற்கைச்சூழலே அவர்களுடைய வாழ்க்கை நெறிகளையும், வழிமுறைகளையும் தீர்மானிக்கின்றன என்பது உறுதியாகிறது. இந்த வாழ்க்கை நெறிமுறைகள் என்பது உளவியல் சார்ந்த ஒரு அம்சமாகும். வளமையான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கலை, அறிவியல் உள்ளிட்ட அம்சங்களில் சிறந்து விளங்குவதும், வறுமையான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அறிவார்ந்த அம்சங்களில் பின்தங்கியிருப்பதும் மானுடவியல் பார்வையில் மறுக்கவியலா உண்மைகளே.

இன்றைய தமிழகத்தில் இந்த திணை சார்ந்த நிலங்கள் எப்படி இருக்கின்றன என்று பார்க்கலாமா?

முதலில் குறிஞ்சி!

தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலை, கிழக்குத்தொடர்ச்சி மலை ஆகிய இரு மலைத்தொடர்களும் சங்மிக்கின்றன. ஆனால் இவை இரண்டும் இயல்பு நிலையை நாளும் தொலைத்த வண்ணம் இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையை சீரழிக்கும் செயல்பாடுகள் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கிவிட்டன. இயற்கையான காடுகளை அழித்து தேயிலைத்தோட்டங்கள் அமைத்ததில் ஏற்பட்ட இயற்கை இழப்புகளை கணக்கிடவே முடியாது. 

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகும் நிலைமையில் மாற்றமில்லை. மற்ற மலைப்பகுதிகளும் பல்வேறு காரணங்களால் அவற்றின் இயல்பு நிலை மாற்றப்பட்டு வருகிறது. சேலத்தில் உள்ள கஞ்சமலை, திருவண்ணாமலை பகுதியில் உள்ள கவுத்திமலை, வேடியப்பன் மலை போன்றவை அங்குள்ள கனிம வளங்களுக்காக ஜிண்டால் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு கைமாறும் அபாயத்தில் உள்ளன. யாரோ சில முதலாளிகளும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பொருள் ஈட்டுவதற்காக அப்பகுதியின் சுற்றுச்சூழலும், மக்களின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இயற்கையில் அமையாத பல்வேறு மனிதத்தவறுகளின் காரணமாக இப்பகுதிகளில் இருந்த ஏராளமான தாவரங்களும், விலங்குகளும், பறவைகளும் ஏற்கனவே அழிந்துவிட்டன.

முல்லை!

தமிழ்நாட்டில் உள்ள காடுகளை அழிப்பதில் சமூக விரோதிகள் என்று கூறப்படுபவர்களைவிட அதிகமாக ஆர்வம் காட்டுவது அரசுத்துறையாகவே தோன்றுகிறது. அரசியல்வாதிகளும், ஆன்மிகவாதிகளும், தொழில்துறையினரும் காடுகளை அழிப்பதில் போட்டிபோடும்போது அதை தடுக்கவேண்டிய வனத்துறை, காடுகளை அழிப்போருக்கே துணைபோகின்றது. 

தேர்தலை சந்திக்கும்போது கட்சி ரீதியாக பிரிந்து நிற்கும் அரசியல்வாதிகள் காடுகளை அழித்து தமக்கு உடமையாக்கிக்கொள்ளும்போதுமட்டும் ஒற்றுமையாக இருக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்த காடுகளின் பரப்பு நாளுக்குநாள் குறைந்து வருவதையே உதாரணமாக கூறலாம்.

அடுத்து மருதம்!

மருதம் நம் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கிறது. நம் உணவுத் தேவைகளுக்கு நாம் மருதநிலத்தையே முழுமையாக நம்பி இருக்கிறோம். அதே நேரத்தில் மருதநிலப் பரப்பை அழிப்பதிலும் நாம் முனைப்பாக இருக்கிறோம். அண்டை மாநிலமான கேரளா விவசாயம் செய்ய வாய்ப்புள்ள துளி நிலத்தைக்கூட வேறு பயன்பாட்டுக்காக மாற்றக்கூடாது என்று கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது. தமிழ்நாட்டிலோ விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதில் அரசுத்துறைகளும், தனியார்துறைகளும், தனிநபர்களும் போட்டி போடுகின்றனர்.

வேளாண்மைக்கு முக்கியத்தேவையான நீர்நிலைகளை அழித்து அதன் சுவடுகூட தெரியாமல் செய்வதிலும் நாமே வல்லவர்கள்! மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்என்ற திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு ஒரு ஏரியை அழித்து அதில் வள்ளுவர் கோட்டம் கட்டும் திறமை நமக்கு மட்டுமே உண்டு. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை, டைடல் பார்க், பல ஊர்களில் உள்ள பேருந்து நிலையங்கள் ஆகிய அனைத்தும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டியவையே!

ஒரு மன்னனை சகல வசதிகளோடும் வாழ்வாயாக என்பதை சுருக்கமாக வரப்புயர! என்று வாழ்த்திய தமிழ்ப்புலவர்கள் இன்று இருந்தால் தமிழினம் அழிய வேண்டும் அறம் பாடியிருப்பார்கள்.

நெய்தல்!

நெய்தல் நிலத்தில் வாழ்ந்த தமிழர்கள், தமிழர்களின் கலைப்படைப்புகளை உலகெங்கிலும் எடுத்துச் சென்றவர்கள். இன்றோ அந்த கடற்கரையோர தமிழர்கள் அனைவராலும் கைவிடப்பட்டுள்ளனர். கடலாடச் சென்றால் அங்கே அவர்கள் உயிர்குடிக்கும் தாகத்துடன் நேச(!)நாட்டின் ராணுவம் ஆயுதத்தோடு நிற்கிறது.

கடற்கரைப் பகுதிகளோ நவீன இறால் வளர்ப்பு போன்ற சூழலை மாசுபடுத்தும் செயற்பாடுகளால் நஞ்சாகி உள்ளன.

கடற்கரையிலிருந்து இந்த மக்களை துரத்திவிட்டு அங்கே தொழிற்சாலைகளையும் கேளிக்கை விடுதிகளையும் கட்ட உள்நாட்டு அரசுகள் விரதம் பூண்டுள்ளன. கரையிலும், கடலிலும் வாழும் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது திரைகடலோடி திரவியம் தேட காரணாயிருந்த இனம்!

பாலை!!

தமிழ்நாட்டில் பாலை நிலமென்று நிரந்தமான நிலப்பரப்பு இல்லை என்பதை வரலாறு. குறிஞ்சியோ, முல்லையோ திரிந்தால்தான் பாலையாக மாறும். அதுவும் தற்காலிகமான நிகழ்வுதான்!

ஆனால் இன்றோ உலகமயமாக்கலின் இயக்கத்தாலும், உள்நாட்டு ஆட்சியாளர்களின் துரோகத்தாலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய அனைத்துப்பகுதிகளுமே பாலையாகிக் கொண்டிருக்கின்றன.

நிலங்கள் பாலையானால் மக்களின் மனம் என்ன ஆகும்?

பாலை நிலத்திற்குரிய களவு, கொள்ளை, வழிப்பறி, கொலை ஆகியவைதான் தமிழனின் எதிர்காலமா...?

---


தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் இலக்கிய பேரார்வம் அனைவரும் அறிந்ததே! ஆனால் அவரது ஆட்சியிலும் சூழலை காக்கும் கடமைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவரது ஆட்சிக்காலத்தில் இயற்கையை சூறையாடும் வேலைகள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது அவர் கட்சி சார்ந்த அமைச்சர்களால் இந்தியா முழுமையும் நடந்துள்ளதாக தெரிகிறது. 

சூழலை பாதுகாக்க வேண்டிய நீதிமன்றத்திற்கும் ஏரியை தூர்த்து கட்டிடம்!
 
தனக்குப் பிறகு தனது வாரிசுகளும் தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே முதல் அமைச்சர் கருணாநிதியின் விருப்பம். ஒரு ஆட்சி நிலையாக நடக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் குடிமக்கள் அரசுக்கு வரி செலுத்தும் அளவுக்கு வளமாக இருக்க வேண்டும்.

அனைத்து தொழில் சார்ந்த இயற்கை வளங்களையும் பாலையாக்கி, மக்களை எந்தத் தொழிலும் செய்ய வாய்ப்பில்லாத நிலையில் அவர்களை திருடர்களாக, வழிப்பறிக்காரர்களாக, கொலைகாரர்களாக, கொள்ளைக்காரர்களாக ஆக்கிவிட்டால் அம்மக்கள் எப்படி வரி செலுத்துவார்கள்? ஆட்சி எப்படி நடக்கும்?

எனவே தமிழ் மக்களின் நலனுக்காக அல்லாவிட்டாலும், உங்கள் வாரிசுகளின் நலன்களுக்காக மட்டுமாவது தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலப்பகுதிகளை மேலும் பாலையாக்காமல் விட்டு வையுங்கள் முதல் அமைச்சர் அவர்களே!

28 டிசம்பர், 2010

வல்லரசுக் கனவுகளும், விவசாயிகளின் தற்கொலையும்..!


தற்கொலை என்பதை ஒரு உளவியல் சிக்கலாகவே மருத்துவ உலகம் பார்க்கிறது. ஆனால் ஒரு நாட்டில் நிலவும் மனித உரிமைகளின் அளவுகோலாக தற்கொலைச் சம்பவங்களை பார்க்கலாம் என்று நவீன சமூகவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.  உலகின் பல்வேறு பகுதிகளிலும் மன அழுத்தம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பொருளாதாரச் சிக்கல்கள் போன்ற பல காரணங்களால் தற்கொலைகள் நடக்கின்றன. இந்தியாவிலும் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலைகள் நடப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த புள்ளிவிவரங்களை மத்திய அரசின் தேசிய குற்ற ஆவண மையம் தொகுத்து வருகிறது.

கடந்த 2008ம் ஆண்டில் மட்டும் இந்தியா முழுதும் 1 இலட்சத்து 25 ஆயிரத்து 17 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  பொற்கால ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டிலும்கூட 14 ஆயிரத்து 425 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலை என்பதை பொதுவாக ஏற்கமுடியாது என்ற நிலையில் தற்கொலை செய்து கொள்பவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விவசாயிகள் இடம்பெறுவது மிகவும் கவலையூட்டும் அம்சமாகும்.

1997ஆம் ஆண்டு முதல் 2003அம் ஆண்டு வரை ஆண்டொன்றுக்கு சராசரியாக 16,267 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது இந்த 7 ஆண்டுகளில் 1,13,782 விவசாயிகள் தற்கொலை புரிந்துள்ளனர்.


அடுத்த 6ஆண்டுகளில் 1,02,628 விவசாயிகள் தற்கொலை புரிந்துள்ளனர். அதாவது ஆண்டொன்றுக்கு இந்த 6 ஆண்டுகளில் சுமார் 17,100 விவசாயிகள் தற்கொலை புரிந்துள்ளனர்.

2009ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் 17,368 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதன் மூலம் 1997ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 2,16,500 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டிலும் கடந்த 2009ஆம் ஆண்டு 1060 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2008ஆம் ஆண்டு நிலவரத்தைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகரித்துள்ளது.

விவசாயிகள் தற்கொலை குறித்த புள்ளிவிவரங்கள் சரிவர கணக்கிடப்படுவது இல்லை என்றும் கூறப்படுகிறது. சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் செய்பவர்கள் தற்கொலை செய்து கொண்டால் மட்டுமே அது விவசாயி தற்கொலை என்று பதிவு செய்யப்படுவதாகவும், விவசாயக் கூலிவேலை செய்பவர்கள் தற்கொலை செய்து கொண்டால் அவர்கள் விவசாயிகளாக அடையாளம் காணப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த அடிப்படையில் அரசு புள்ளி விவரங்களில் இருப்பதுபோல் சுமார் ஐந்து மடங்கு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் பள்ளியிறுதிக் கல்வி பயிலாதவர்கள். சுமார் 40 சதவீதம் பேர் சுயவேலைவாய்ப்பு மேற்கொள்பவர்கள், சுமார் 20 சதவீதம் பேர் இல்லத்தரசிகள், சுமார் 7 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள். அரசு புள்ளிவிவரங்களில் இவ்வாறு கூறப்பட்டிருந்தாலும் இவர்களில் பெரும்பான்மையினர் விவசாயிகளாக இருப்பதற்கான வாய்ப்பே அதிகம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த அடிப்படையில் பார்த்தால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிக எண்ணிக்கையில் இருக்கலாம். இந்த ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் முழுமையாக தெரியவரலாம்.


ஒரு நாட்டில் இத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சூழலில் நாட்டை ஆட்சி செய்பவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

இந்திய அரசின் தவறான கொள்கைகளாலேயே விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் நிலவுகிறது. இந்தியாவின் பாரம்பரிய வேளாண் முறைகள் நவீன வேளாண் அறிஞர்களாலும், அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. அதற்கு பதிலாக பன்னாட்டு நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கு உதவும் விதத்தில் அயல்நாட்டு விதைகள், பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள், தொழில் நுட்பங்கள், மரபணுத் தொழில்நுட்பம் ஆகியவை விவசாயிகளிடம் திணிக்கப்பட்டது. இவற்றின் விலை அதிகமாக இருந்ததால் கடன் வாங்கி இந்த செலவுகளை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். ஆனால் விளைச்சல் பொய்த்துப் போதல், விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது போன்ற சூழ்நிலைகளால் விவசாயிகளின் கடன்சுமை அதிகரித்து, அவர்கள் தற்கொலைக்கு தூண்டப்பட்டனர்.

இந்த நிலையில்தான் இந்தியாவும், அமெரிக்காவும் சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அதே 2005 நவம்பர் 12ம் தேதி,  மற்றொரு ஒப்பந்தத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் கையொப்பமிட்டனர். இந்திய அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், உலக வர்த்தக கழகத்தில் இந்தியா இணைந்ததை தொடர்ந்து ஏற்பட்டதாகும்.

இந்திய - அமெரிக்க வேளாண்மைக் கல்வி, ஆராய்ச்சி, சேவை மற்றும் வணிகத் தொடர்பிற்கான அறிவு முனைப்பு(India - United States Knowledge Initiative on Agricultural Education, Research, Service and Commercial Linkages) என்கிற இந்த ஒப்பந்தம் முதலாம் பசுமைப் புரட்சியை (Green Revolution) தொடர்ந்து என்றென்றும் பசுமைப்புரட்சியை (Evergreen Revolution) ஏற்படுத்துவதற்காக வரையப்பட்டுள்ளது.

ஆனால் பழைய பசுமைப் புரட்சி போல முற்றிலும் அரசே ஏற்று நடத்தாமல், இந்தப்புதியஎன்றென்றும் பசுமைப்புரட்சியானது தனியாருக்கும் இடம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் வால்மார்ட் (Wal Mart), மான்சான்டோ (Mon Santo) போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் முதல், நம்நாட்டு ரிலையன்ஸ் (Reliance) நிறுவனம் வரை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.

விவசாயத்தோடு மட்டும் நில்லாமல் மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்றவற்றிலும் தொடரும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகளாக இரண்டு அம்சங்களைக் கூறலாம்:
 
· மரபணுமாற்று தொழில்நுட்பத்தின் (Genetic Engineering) பயன்பாட்டை விவசாயம், மீன் வளர்ப்பு, கால் நடை வளர்ப்பு போன்ற துறைகளில் அதிகப்படுத்துதல்

·
வேளாண்மையில் அறிவுசார் சொத்துரிமையை அதிகப்படுத்துதல்.

இவற்றை நடைமுறைப் படுத்துவதற்காக தாவர வகைகள் பாதுகாப்பு மற்றும் உழவர்களின் உரிமைக்கான சட்டம் (Protection for Plant Varieties and Farmers Rights Act) 2001 போன்ற புதிய சட்டங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன. காப்புரிமைச் சட்டம், விதைச்சட்டம் (Seed Act) 1966 உள்ளிட்ட சில பழைய சட்டங்கள் உலகமயமாக்கல் திட்டத்திற்கேற்ப மாற்றி அமைக்கப்படுகின்றன.  இவை அனைத்தும் விவசாயிகளின் உரிமைகளை புறக்கணித்துவிட்டு வேளாண் தொழிலில் ஈடுபடும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் நலன்களை காக்கவே கொண்டு வரப்படுகிறது.

இது குறித்து அரசுக்கும் அரசு சார்பு அமைப்புகளுக்கும் மிகவும் நன்றாகவே தெரியும். இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்டது "இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம்". இப்பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவுச் சொத்துரிமை ஆட்சியில் மனித உரிமை, வேளாண் சட்டம் போன்ற பாடங்களில் முதுகலை படிப்புகள் (Post Graduate Diploma in Intellectual Property Rights Regime and Human Rights; Post Graduate Diploma in Agricultural Law)  தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும் இந்த படிப்பு தொடங்கப்படவே இல்லை. தற்போது அந்த அறிவிப்புகளும் கூட அகற்றப்பட்டுவிட்டன. அதற்குப் பதிலாக அறிவுச்சொத்துரிமை குறித்து பல்வேறு மட்டங்களில் பல வகையான படிப்புகள் நடத்தப்படுகின்றன. இன்று இந்தியாவில் அறிவுச் சொத்துரிமை குறித்த படிப்பு இல்லாத பல்கலைக்கழகமே இல்லை என்றும் சொல்லலாம். ஆனால் அறிவுச் சொத்துரிமையால் ஏற்படும் சமூகத் தாக்கங்கள் குறித்தோ, அறிவுச் சொத்துரிமையின் அறம் சார்ந்த அம்சங்கள் குறித்தோ எந்த விவாதமும் நடைபெறுவதில்லை.

வேளாண்மை குறித்த சட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தோ, சட்டக்கல்வியில் நடைபெறும் சதித்திட்டங்கள் குறித்தோ பெரும்பாலான வழக்கறிஞர்களுக்கு எதுவுமே தெரியாது. அறிவுச் சொத்துரிமை சட்டம் குறித்த உயர்கல்வி பயிலும் மாணவர்களும், இந்த துறையால் சமூகத்திற்கு ஏற்பட வாய்ப்புள்ள விளைவுகள் குறித்து எந்த விமர்சனமும் இல்லாமல் தமக்கு பொருளீட்டும் வாய்ப்புகளை மட்டுமே தேடி வருகின்றனர்.

வேளாண்மை கல்வியோ, விவசாயிகளின் பாரம்பரிய அறிவை புறக்கணிப்பதிலும், பன்னாட்டு நிறுவனங்களின் ஆளுமைக்குள் இந்திய விவசாயத்தை அடக்கும் நோக்கத்திலுமே இருக்கின்றன.

அரசியல்வாதிகளை பொறுத்தவரை விவசாயிகள் தேர்தல் நேரத்தில் ஓட்டு வங்கியாகவும், மற்ற நேரங்களில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும் தெரிகின்றனர். தமிழகத்தில் விவசாயிகள் அனைத்துப் பிரிவினராலும் கைவிடப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.

தமிழக அரசோ, மக்களை சீரழிக்கும் திரைப்படத்துறைக்கு கொடுக்கும் கவனத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட விவசாயிகளுக்கு தர மறுக்கிறது. வேளாண்மையை நவீனப்படுத்தல் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அதன் கையாள்களுக்கும் மட்டுமே லாபத்தை தரக்கூடிய திட்டங்களை அமல்படுத்த முயல்கின்றன. அதற்கேற்ப தமிழ்நாடு வேளாண் மன்றச் சட்டம் போன்ற சதித்திட்டங்களையும் அறிமுகப்படுத்த முனைகின்றன.

விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை உண்டு உயிர்வாழும் மற்றதுறை சார்ந்த மக்களோ, விவசாயிகள் என்றோர் இனம் இருப்பதையை மறந்துவிட்டு பெரிய மற்றும் சின்னத்திரை கேளிக்கைகளில் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.

வேளாண் நிலங்களும், இந்த நிலங்களுக்கு நீர் வசதியை அளிக்க வேண்டிய நீர்நிலைகளும் பல்வேறு பயன்பாடுகளுக்காக மாற்றப்படுவது யாருடைய கவனத்தையும் கவர்வதில்லை.

நம் வீட்டில் ஒருவர் காலமானால் ஒரு வருட காலத்திற்கு பண்டிகைகளை தவிர்ப்பது நமது வழக்கம். ஆனால் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழலிலும் உழவர் திருநாளை புதிய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளோடு கொண்டாடுவதற்கு நாம் தவறுவதில்லை. இதில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி உச்சநீதிமன்றம்வரை சென்று வழக்கு வேறு!

மனிதர்களான நாம் உண்ணும் உணவை மண்ணிலிருந்து விவசாயிகளின் உதவியுடன் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். பெரிய ஆலைகளிலோ, கம்ப்யூட்டர் மென்பொருட்கள் மூலமோ உணவை உற்பத்தி செய்ய முடியாது. விவசாய நிலங்களின் பரப்பளவு ஆண்டுதோறும் குறைந்து வருவது குறித்தோ, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது குறித்தோ, அந்த விவசாயிகளின் வாரிசுகள் விவசாயத்தை விட்டு வெளியேறி வேறுதொழிலுக்கு செல்வது குறித்தோ சிந்திக்கக்கூட நமக்கும் நேரம் இருப்பதில்லை. இது குறித்து விவாதங்களை நடத்தவும், தீர்வுகளை தேடவும் வணிக ஊடகங்களுக்கும் தேவை ஏற்படுவதில்லை.

நாடுமுழுவதும் அரசின் ஆயுதப்படையினர் நடத்தும் போலி என்கவுண்டர் வழ்ககுகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை, தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையைவிட மிகவும் குறைவே. ஆனால் அரசே செய்யும் படுகொலையான என்கவுண்டர்கள் குறித்து சமூகத்திலும், மீடியாக்களிலும் நடக்கும் விவாதங்கள், விவசாயிகளின் தற்கொலைகள் நடக்காதது மிகவும் கவலைக்குரிய அம்சமாகும்.

இவ்வாறாக விவசாயிகளின் தற்கொலைக்கு நாமும் உடந்தையாகிறோம். இந்திய தண்டனை சட்டத்தின்படி தற்கொலைக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கலாம். ஆனால் நாம் அந்த தண்டனையில் சிக்காமல் தப்பிவிடுவோம். ஆனால் நமது விவசாயிகளை காப்பாற்றத்தவறும் குற்றத்திற்காக எதிர்காலம் நம்மை தண்டிக்காமல் விடாது. நமது உணவுத் தேவைகளுக்காக பன்னாட்டு வணிக நிறுவனங்களை மட்டுமே சார்ந்து வாழும் அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். 

இந்தியா வல்லரசாகி கொண்டிருப்பதாக நம்மில் பலரும் கனவு கண்டுக் கொண்டிருக்கிறோம். வல்லரசு என்பதற்கான பொருள் மிகவும் சர்ச்சைக்குரிய வகையிலேயே இருக்கிறது. ஆனால் நல்லரசு என்பது, அனைத்து தரப்பு மக்களையும் சமமாக நடத்தும் நல்ல அரசாகவே பொருள் கொள்ளப்படுகிறது. எனவே வல்லசரசாகி ஆசிய பிராந்தியத்தின் பெரிய அண்ணனாக விளங்குவதைவிட, நல்லரசாகி அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்வதற்கான உரிமையை உத்தரவாதப்படுத்தும் அரசே இந்தியாவின் இன்றைய தேவை!

இப்போதாவது விழிப்படைவோமா...?

27 டிசம்பர், 2010

டாக்டர் பினாயக் சென் – ராஜத் துரோகியா? மக்கள் நேசனா?

ராய்ப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம். 24-12-2010, வெள்ளிக்கிழமை.  குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருக்கும் நபரிடம் நீதிபதி சொல்கிறார்: "உங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124-பி இன்படியான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக இந்த நீதிமன்றம் திருப்தி அடைகிறது!"

குற்றவாளிக்கூண்டில் நிற்கும் அந்த நபர் கேட்கிறார்: "124-பி என்றால்..?" 

நீதிபதி பதில் அளித்தார்: "ராஜத்துரோகம்!"

---

ங்கமொழியில் பினாயக் சென் என்று அழைக்கப்படும் இவரை நாம் விநாயக் சென் என்றும் அழைக்கலாம். இரண்டும் ஒன்றுதான்! இவரைப் பற்றி தெரியாதவர்கள் இந்தப்பக்கத்தை பார்க்கலாம்:  

வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரியில் படித்து தங்கப்பதக்கம் வென்ற டாக்டர் விநாயக் சென், சிறிது காலம் டெல்லியில் உள்ள உலகப்புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். அந்த பணியில் திருப்தி அடையாத அவர் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய பிரதேசத்தில் (அப்போது சட்டீஸ்கர் உருவாகியிருக்கவில்லை) கனிமச் சுரங்கங்கள் நிறைந்த தல்லி ராஜஹரா என்ற கிராமத்தில் சுரங்கத் தொழிலாளிகளுக்கு மருத்துவச் சேவை ஆற்ற ஆரம்பித்தார்.

குழந்தை மருத்துவ நிபுணரான அவர், அப்பகுதியில் ஊட்டச்சத்துணவு இல்லாத காரணத்தால் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதை உலகிற்கு எடுத்துச் சொன்னார். மேலும் சுரங்கத் தொழிலாளர்களின் உழைப்பு அரசின் ஆதரவுடன் சுரங்க அதிபர்களால் சுரண்டப்படுவது குறித்தும் பேசத் தொடங்கினார். அப்பகுதியில் இருந்த மாவோயிஸ்ட்களை ஒடுக்குவதற்காக சுரங்க அதிபர்கள் “சல்வா ஜுடும்” என்ற ஆயுதம் தாங்கிய கூலிப்படையை உருவாக்கி அப்பகுதி பூர்வகுடி மக்களை சித்ரவதை செய்வதையும் அம்பலப்படுத்த தொடங்கினார்.  மத்திய – மாநில அரசுப்படைகள் அப்பகுதியில் வசிக்கும் மக்களை போலி என்கவுண்டர் உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் துன்புறுத்தி வருவதையும் எதிர்த்து அவர் குரல் எழுப்பி வந்தார்.

மேலும் பல்வேறு மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு அந்த ஆய்வு முடிவுகள் காட்டும் அவல நிலையை உலகிற்கு எடுத்துக்கூறும் பணியில் ஈடுபட்டார்.  மேலும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் என்ற மனித உரிமை அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த நாராயண சன்யால் (வயது 70) என்பவருக்கும், பியுஷ் குஹா என்ற தொழில் அதிபருக்கும் இடையே இணைப்புப்பாலமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் விநாயக் சென் கடந்த 14-5-2007 அன்று சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் சட்டீஸ்கர் சிறப்பு மக்கள் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நாராயண் சன்யால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையிலிருக்கும் நாராயண் சன்யாலை, சிறை அதிகாரிகளின் வேண்டுகோள்படி சிகிச்சை அளிப்பதற்காகவே டாக்டர் விநாயக் சென் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புகள் அனைத்தும் சிறை அதிகாரிகளின் கண் முன்பே நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்புகளின்போதுதான் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நாராயண் சன்யாலுக்கும், தொழில் அதிபர் பியுஷ் குஹாவுக்கும் இடையே இணைப்புப் பாலமாக விநாயக் சென் செயல்பட்டு கடித பரிவர்த்தனை செய்தார் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.

டாக்டர் விநாயக் சென் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலக அளவில் எழுந்த குரல்களை அடுத்து கடந்த 2009 மே 25ம் தேதி அவருக்கு பிணை அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இவர் பிணையில் வந்த நிலையில் இவர் மீதான வழக்கு ராய்ப்பூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வெகுவிரைவாக நடத்தப்பட்டது. அரசுத் தரப்பு சார்பில் வாதாடிய  வழக்கறிஞர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான “ஐஎஸ்ஐ”க்கும் டாக்டர் விநாயக் சென்னுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக “திடுக்கிடும்” தகவலை வெளியிட்டார். விநாயக் சென் தரப்பில் இந்த ஐஎஸ்ஐ டெல்லியில் இருக்கும் இந்தியன் சோஷியல் இன்ஸ்டிடியூட் அமைப்பு என்று சுட்டிக்காட்டப்பட்டது. அரசுத் தரப்பு சான்றுகள் உண்மையானவை என்று நிரூபிக்கப்படவில்லை. அரசுத்தரப்பு சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக மாறினர்.

எனினும், டாக்டர் விநாயக் சென் மீதான ராஜத்துரோக குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனை அளித்து ராய்ப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

---

ந்த தீர்ப்பு பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் தீர்ப்பாக இருக்கலாம். ஆனால் சட்டத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும், இந்திய நீதித்துறையை கவனித்து வருபவர்களுக்கும் இந்த தீர்ப்பு எந்த அதிர்ச்சியையும் அளிக்காது.

ஏனெனில் இந்தியாவின் குற்றவியல் சட்டங்கள் அனைத்தும், இந்தியா பிரிட்டனுக்கு அடிமையாக இருந்த காலத்தில் ஆங்கில ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. ஆதிக்க நாடான இங்கிலாந்து, அடிமைகளான இந்தியர்களை அடக்கி ஆள்வதற்கு உருவாக்கப்பட்ட சட்டங்களே தொடர்ந்து அமலில் இருந்து வரும் சூழலில் இந்த தீர்ப்பு வராவிட்டால்தான் சட்டத்துறை சார்ந்தவர்கள் அதிர்ச்சி அடைய வேண்டும்.

இந்திய நீதித்துறையின் இந்த அவல நிலை குறித்து பின்னர் தனியாக பார்ப்போம். 

---


நேரு குடும்பத்தின் தற்போதைய வாரிசு ராகுல் காந்தி போகும் இடமெல்லாம், “இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன!” என்று கூறி வருகிறார். அதாவது ஒன்று சிறுபான்மையான வளமையான இந்தியாவாம்.. மற்றொன்று பெரும்பான்மையான வறுமையான இந்தியாவாம்! உண்மைதான்!!

சுதந்திர இந்தியாவை மிக அதிக காலம் ஆட்சி செய்த ராகுலின் கொள்ளுத் தாத்தாவும், பாட்டியும், தந்தையும், அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சிக்காரர்களும் ராகுல் காந்தி சுட்டிக் காட்டியபடி இந்தியாவை இரண்டு இந்தியாக்களாக பிரித்து வைத்துள்ளனர். இந்த இரண்டில் சிறுபான்மையான வளமையான இந்தியாவுக்கு காங்கிரஸ் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் விசுவாசிகளாக உள்ளனர். உதாரணமாக ப.சிதம்பரத்தைக் கூறலாம். பன்னாட்டு நிறுவனமான வேதாந்தாவிற்கு மத்திய அமைச்சராக இருக்கும்போது இந்தியாவின் வளங்களை தாரை வார்ப்பார். அதை எதிர்த்து மக்கள் போராடினால் பசுமை வேட்டையை ஏவுவார். ஆட்சியில் இல்லாதபோது அதே வேதாந்தா நிறுவனத்திற்கு இயக்குனராகவும், சட்ட ஆலோசகராகவும் பணியாற்றுவார். ஆக மொத்தத்தில் ராகுல் காந்தி கூறிய இரண்டு இந்தியாக்களில் ஒரு (வளமையான) இந்தியாவின் தேச பக்தர். மற்றவர்களுக்கும் இதேபோல் விளக்கவுரை  எழுதலாம். நேரம் காரணமாக நிறுத்திக் கொள்வோம்.

மற்றொரு இந்தியாவோ ராகுல் காந்தியே குறிப்பிடுவதுபோல வறுமையில் வாழும் பெரும்பான்மை கொண்ட மக்களைக் கொண்ட இந்தியா! ராகுல் காந்தியின் கொள்ளுத்தாத்தாவும், பாட்டியும். தந்தையும், தற்போதைய காங்கிரஸ் காரர்களும் செய்த துரோகத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட இந்தியா! இந்த மக்கள் மீது அன்பும் அக்கறையும் காட்டும் எத்தனையோ பேரில் டாக்டர் விநாயக் சென்னும் ஒருவர்.

ஏழை இந்தியா மீது டாக்டர் விநாயக் சென் அன்பு காட்டுவதும், அக்கறை செலுத்துவதும் காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வளமையான இந்தியாவிற்கு தேசத்துரோகமாக தெரிகிறது.
இந்தியாவில் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி என்று ஒருவர் இருந்தார்.  “யங் இந்தியா” என்ற பத்திரிகையில் பிரிட்டிஷ் அரசை விமர்சித்து அவர் எழுதிய கட்டுரைக்காக 1922ம் மார்ச் 23ம் தேதி அவர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டியது ஆங்கிலேய அரசு. அதைக் கேட்ட மோகன்தாஸுக்கு மார்பு வலி வரவில்லை. அவர் கூறினார்: “உங்கள் சட்டத்தின்படி இது குற்றமாக இருக்கலாம்; ஆனால் ஒரு குடிமகனின் மிக உயர்ந்த கடமையாக அது தோன்றுகிறது!” மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இன்றைக்கும் இந்தியாவில் அதே சட்டம்தான் அமலில் உள்ளது. அன்று மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட அதே சட்டப்பிரிவின் கீழ் இன்று டாக்டர் விநாயக் சென் மீது அதே தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு அதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி வர்ணித்தபடி, "எந்த இந்தியாவிற்கு டாக்டர் விநாயக் சென் விசுவாசமாக இருந்தார்? எந்த இந்தியாவிற்கு டாக்டர் விநாயக் சென் துரோகம் செய்தார்!" என்று முடிவு செய்ய வேண்டியுள்ளது.கார்ட்டூன்: பாலா

03 டிசம்பர், 2010

ஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்!

(டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்)

திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்காலங்களையும் ஆக்கிரமித்து நிற்கும் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஊடகங்களாலும், மக்களாலும் பேசப்படும் நிலையில் மற்றொரு பிரமாண்ட ஊழலை மறைக்க முடிந்திருப்பது ஆச்சரியம்தான். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்களாக திமுகவைச் சேர்ந்த டி. ஆர். பாலுவும், ஆ. ராசாவும் பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கும், இயற்கை வளங்களுக்கும் கணக்கெடுக்கப்படாத மற்றும் சரிசெய்ய முடியாத பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இருவராலும் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுபடுத்தும் குற்றங்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில், டி.ஆர். பாலு கடந்த 1999 அக்டோபர் 13ம் தேதி முதல் 2003 டிசம்பர் 21 வரை சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்தார். பாலுவைத் தொடர்ந்து ஆ. ராசா 2004 மே 23 முதல் 2007 மே 17 வரை சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்தார். இதற்கிடையிலான 2006 ஜனவரி மாதத்தில் ஆ. ராசாவின் அறிமுகம், பிரபல தொழில் தரகர் நீரா ராடியாவுக்கு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நீரா ராடியாவிற்கு நெருக்கமான தொழிலதிபர்களின் பல திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி எளிதாக கிடைத்தது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நீரா ராடியாவிற்கு இருந்த செல்வாக்கு அனைவரும் அறிந்த ரகசியம். 

ஆ. ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்தபோது அவருக்கும்,  சுற்றுச்சூழல் அனுமதிக்காக அவரை அணுகிய நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்புகளே ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கான வேர்களாகும். சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைத்தல் பிரிவின் இயக்குனராக ஆர்.கே.சந்தோலியா இருந்தபோது நீரா ராடியாவிற்கு வேண்டப்பட்டவர்களுக்கு சுற்றுச்சூழல் தடைநீக்கச் சான்றிதழ்கள் அதிவேகத்தில் வழங்கப்பட்டன. (பின்னர் ஆ.ராசா தொலைத்தொடர்பு அமைச்சராக பதவியேற்றபோது அங்கேயும் ராசாவின் உதவியாளராக இருந்த ஆர்.கே. சந்தாலியாவிடம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அமலாக்கப்பிரிவு தற்போது விசாரணை நடத்துகிறது)


சுற்றுச்சூழல் அமைச்சராக ஆ.ராசா இருந்த காலத்தை சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இருண்ட காலம் என்றே சுற்றுச்சூழல் அமைப்புகள் குறிப்பிடுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் கீழ் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(Environment Impact Assessment)க்கான அறிக்கை1994ம் ஆண்டில் வெளியிடப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டான 1986 முதல் 2006 வரையிலான 20 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் அமைச்சகம் 4016 பெரும் தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பெரும் தொழில் திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படும்போதும், நவீனப்படுத்தப்படும்போதும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும் என்ற விதி சுற்றுச்சூழல் சட்டங்களில் இருந்தது.

திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது 2006ம் ஆண்டில் இந்த விதி திருத்தப்பட்டது.  இதன்படி விரிவாக்கம் அல்லது நவீனப்படுத்தப்படும் தொழிற்சாலை மத்திய அரசிடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டிய தேவையில்லை; அதற்கு பதிலாக தங்களுக்கு தாங்களே சான்றளித்துக் கொள்ளலாம்! என சுற்றுச்சூழல் சட்டங்கள் வீரியம் இழக்கச் செய்யப்பட்டன.

2006ம் ஆண்டில் திருத்தம் என்ற பெயரில் வீரியம் இழக்கப்பட்ட புதிய  சுற்றுச்சூழல் விதிகளின்படி 2006 2008 ஆண்டுகளில் மட்டும் 2016 திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது இந்தத் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழலிலும், சமூகத்திலும் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்து மாதம் ஒன்றுக்கு 80 முதல் 100 தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக நாளொன்றுக்கு நான்கு அனுமதிகள்! இந்த தொழிற்சாலைகளுக்கு எதன் அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டன என்பது போன்ற  எந்த விவரங்களும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இல்லை. இந்த அனைத்து தகவல்களும் கல்ப விருட்சம் என்ற சுற்றுச்சூழல் அமைப்பு 2009ம் ஆண்டு வெளியிட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கான நிபந்தனைகளை கண்காணித்தலும், பின்பற்றுதலும் மோசடி என்ற வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது. ஆ. ராசாவின் பதவிக்காலத்தில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட அனைத்து தொழில் திட்டங்களையும் தற்போது தீவிரமாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

2006ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (EIA Report) தயாரித்தல், பொதுமக்கள் கருத்தறியும் நிகழ்ச்சி (Public Hearing) ஆகியவற்றுக்கு பின் மதிப்பீட்டு நிபுணர் குழு(Expert Appraisal Committee)விற்கு அந்த அறிக்கைகள் அனுப்பப்படவேண்டும். குறிப்பாக நீர் மூலமான புனல் மின் உற்பத்தி, நிலக்கரி மூலமான அனல் மின் உற்பத்தி, சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்.  2005ம் ஆண்டில் பல்வேறு மதிப்பீட்டு நிபுணர் குழுக்களிலும் பங்கேற்ற 64 பேரில் மூன்றில் இரண்டு பங்கினர் டெல்லியை அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். திமுக அமைச்சரவை பொறுப்பில் இருக்கும் போது சுற்றுச்சூழல் குறித்த நிபுணர்களும்கூட திமுகவிற்கு ஆதரவானவர்களே!

ஆ. ராசாவால் 2007ம் ஆண்டில் நதிப்பள்ளதாக்கு மற்றும் நீர்மின்நிலையம் குறித்த மதிப்பீட்டு நிபுணர் குழுவின் தலைவராக பி. ஆப்ரஹாம் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த ஆப்ரஹாம் இதற்கு முன்பு மத்திய அரசின் ஆற்றல்துறை அமைச்சரகத்தில் மத்திய அரசுச் செயலாளராக இருந்தவர். மேலும் நீர்மின்நிலைய திட்டங்களின் ஆதரவாளராகவும் செயல்பட்டவர். எனவே இவரை சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழுவின் தலைவராக நியமனம் செய்ததற்கு சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இறுதியாக இன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பதவியேற்றபின் ஆபிரஹாம் தமது பதவியை விட்டு விலகுமாறு நிர்பந்திக்கப்பட்டார்.  ஆனால் அவர் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழுவின் தலைவராக இருந்தபோது அனுமதி அளித்த திட்டங்களை மறு விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.

சுற்றுச்சூழல் அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த காலம் நாட்டின் சுற்றுச்சூழலில் பேரழிவு ஏற்படுத்தியது என்றால், அவரது முன்னோடியான டி.ஆர். பாலுவின் பதவிக்காலமும்  இதற்கு சற்றும் சளைத்ததல்ல. தொழில் நிறுவனங்கள் செய்யும் சுற்றுச்சூழல் குற்றங்களுக்கு அந்த நிறுவனமே பொறுப்பாக்கப்படவேண்டும். ஆனால் டி.ஆர்.பாலு 2003 மார்ச் 13ம் தேதி சர்ச்சைக்குரிய வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு” (Government’s Charter on Corporate Responsibility for Environment Protection – CREP) ஒன்றை வெளியிட்டார்.  அதன்படி சுற்றுச்சூழலை மிக அதிகம் பாதிக்கக்கூடிய சிவப்பு பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த 64 தொழில்களிலிருந்து 17 தொழில்களுக்கு டி.ஆர்.பாலு விலக்களித்தார். (தொழிற்சாலைகள் சூழலை அதிகம் பாதித்தால் அது சிவப்புப் பிரிவிலும், நடுத்தரமாக பாதித்தால் ஆரஞ்சு பிரிவிலும், குறைந்த அளவு பாதித்தால் பச்சைப் பிரிவிலும் சேர்க்கப்படுகிறது) 2003ம் ஆண்டில் வரவிருந்த தேர்தலுக்கான நிதியை திரட்டுவதற்காக மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டதாக பெயர் தெரிவிக்க விரும்பாத சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னதாக 2002 டிசம்பர் 5 முதல் 2003 ஜனவரி 10ம் தேதிக்குள் 17 கூட்டங்கள் நடைபெற்றன. ஒரே நாளில் நான்கு கூட்டங்கள் வரை நடந்துள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரான இந்த ஆபத்தான அறிவிப்பு தொடர்பான பேரங்கள் 2003 மார்ச் 12ம் தேதி வரை நடந்துள்ளது. இதனை பெயர் குறிப்பிட விரும்பாத மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல், அதை கண்காணித்தல் குறித்த எந்த விவரமும் இல்லாத இந்த அறிக்கையை வெளியிட்ட டி. ஆர். பாலு, இந்த அறிக்கையின் அம்சங்கள் அனைத்தும் வணிக நிறுவனங்கள் தாமாகவே முன் வந்து செயல்படுத்த வேண்டியவை. அந்த நிறுவனங்கள் அவ்வாறு செய்யத்தவறினால் அதற்காக அந்த நிறுவனங்களை தண்டிக்க மாட்டோம் என்று மீடியாக்களிடம் கூறினார்.

இவ்வாறு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் எந்த பயனுமற்ற ஒரு அறிக்கையை வெளியிட்ட டி.ஆர்.பாலு, வணிக நிறுவனங்களிலிருந்து வெளியாகும் மாசு குறித்து ஆய்வு செய்வதில் அந்த நிறுவன அதிகாரிகளும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் இணைந்து செயல்படுவார்கள் என்று தெரிவித்தார்.

சுற்றுச்சூழலை மிகமோசமாக பாதிக்கக்கூடிய சிவப்பு பிரிவில் இருந்து விலக்களிக்கப்பட்ட 17 தொழில்களும் டி.ஆர். பாலு அறிவித்த  சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு திட்டத்தின் கீழ் வந்தன. இந்த 17 பிரிவுகளில் 2098 தொழிற்சாலைகள் இயங்கின. சுற்றுச்சூழலுக்கு பேராபத்து ஏற்படுத்தக்கூடிய 525 சர்க்கரை ஆலைகள், 397 மருந்து நிறுவனங்கள், 232 சாராய ஆலைகள், 150 தோல் தொழிற்சாலைகள், 150 பூச்சி மருந்து தொழிற்சாலைகள், 126 சிமென்ட் ஆலைகள், 111 ரசாயன உரத்தொழிற்சாலைகள், 100 சாயத் தொழிற்சாலைகள், 96 காகிதம் மற்றும் காகிதக்கூழ் தொழிற்சாலைகள், 83 அனல் மின் நிலையங்கள், 51 பெட்ரோலிய நிறுவனங்கள், 35 காஸ்டிக் சோடா நிறுவனங்கள், 17 எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், 8 இரும்பு ஆலைகள், 14 அலுமினிய ஆலைகள், 6 தாமிர ஆலைகள், 4 துத்தநாக ஆலைகள் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளிலிருந்து விலக்களிக்கப்பட்டன.  இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு அனைத்து கழிவுப் பொருட்களையும் எரிஉலைகளில் எரிக்கும் ஆபத்து மிகுந்த ஒரு வழிமுறையை பரிந்துரை செய்தது. கழிவுப்பொருட்கள் எரிஉலைகளில் எரிக்கப்படும்போது மிகுந்த நச்சுத்தன்மை வாய்ந்த டையாக்ஸின் வாயு வெளிப்படும் என்ற ஆபத்தை புறக்கணித்து, எரிஉலைகளை வரியின்றி இறக்குமதி செய்யவும் இந்த அறிவிப்பு வழி வகுத்தது.

இதற்கிடையில் சுமார் 150 பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் அவற்றின் கழிவுகளை பிரித்தெடுத்து, நச்சுப்பொருட்களை நீக்கும்  முறையை கையாள முன்வந்தன. இதுபோல சிமென்ட் தயாரிக்கும் ஆலைகளில் ஒரு பொதுக்கருத்து உருவாகவில்லை. சிமென்ட் ஆலைகள் மிகுந்த அளவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்த வல்லவை. ஒரு சிமென்ட் ஆலையால் ஏற்படும் சூழல் பாதிப்புக்கான எல்லை அந்த ஆலையிலிருந்து 3 கிலோ மீட்டரா அல்லது  7 கிலோ மீட்டரா என்ற பிரசினை எழுந்தபோது, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் விகே துக்கல் என்பவர் தமது தனிச்சிறப்பான கணித அறிவை பயன்படுத்தி அந்த அளவை 5 கிலோ மீட்டர் என்று நிர்ணயம் செய்தார்.

இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பால் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட மற்ற பிரசினைகளையும் களைவதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு எளிய வழியை கண்டுபிடித்தது தொல்லை தரும் அம்சங்களை அந்த அறிவிப்பிலிருந்து நீக்குவதே அந்த எளிய வழி!  தோல் தொழிற்சாலைகள் அனைத்தும் டிசம்பர் 2004க்குள் ஐஎஸ்ஓ 14000 தரச்சான்று பெறவேண்டும் என்று அந்த அறிவிப்பில் முதலில் கூறப்பட்டிருந்தது.  தோல் தொழில்அதிபர்களின் எதிர்ப்பையடுத்து இந்த அம்சம் பின்னர் நீக்கப்பட்டது. தோல் தொழிற்சாலை கழிவுகளில் இருந்து நச்சுப்பொருளான சல்பரை மறு பயன்பாட்டுக்காக பிரித்தெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டது. எனவே நச்சுப்பொருளான சல்பர் கழிவுகளுடன் கலந்து நீர், நிலம், காற்று ஆகிய அனைத்தையும் மாசுபடுத்த சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இதுபோன்ற செயல்பாடுகளால் குளோரின்-ஆல்கலி தொழில் நிறுவனங்களும் பெரும்பயன் அடைந்தன. இந்த ஆலைகள் அனைத்தும் நச்சுத்தன்மை அதிகம் உள்ள பாதரச செல் தொழில் நுட்பத்தில் இருந்து மெம்ப்ரேன் தொழில்நுட்பத்துக்கு 2005 டிசம்பருக்குள் மாற வேண்டும் என்று அரசு அறிவிப்பு கூறியது. தொழில் நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக இந்த கெடு தேதி நீக்கப்பட்டது. இந்த கெடு தொடர்ந்திருந்தால் மெம்ப்ரேன் தொழில்நுட்பத்திற்கு அனைவரும் மாறியிருப்பார்கள். இந்த மெம்பரேன் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளுக்கான இறக்குமதி வரியில் 10 சதவீதம் தள்ளுபடிகூட வழங்கப்பட்டது.

அரசு அறிவித்த சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு-இன் படி பாதரசம் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் 50 கிராமுக்கும் குறைவான பாதரசம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வரையறை நிர்ணயிக்கப்பட்டது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிக அதிக அளவாகும். நம் நாட்டில் 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை காஸ்டிக் சோடா தயாரிக்கும்போது சுமார் 25 முதல் 30 டன் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இதே அளவு காஸ்டிக் சோடா தயாரிக்கும்போது மேற்கொள்ளப்படும் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளால் நச்சுப்பொருளான பாதரசம் 9 டன்னைவிட குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு போன்ற அதிக சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தக்கூடிய தொழில்களும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் மிகவும் மென்மையாக நடத்தப்பட்டன. சுற்றுச்சூழலை சீரழிக்கும் தொழில்நிறுவனங்களை ஏன் தண்டிக்கவில்லை என அன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர். பாலுவிடம் கேட்டபோது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு, தொழில் நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை வலியுறுத்துகிறது. எனவே தொழிற்துறை தாமாகவே தன்னை சீரமைத்துக் கொள்ளும் என்று குறிப்பிட்டார்.

இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு-ஐ தயாரிப்பதில் சுற்றுச்சூழல் அமைப்புகளிடமோ,  மற்ற மக்கள் அமைப்புகளிடமோ எந்த வித கருத்தும் கோரப்படவில்லை.  இந்த அறிவிப்பை வெளியிடுவதற்காக டெல்லி அசோகா ஹோட்டலில் இரண்டு நாட்கள் நடந்த கருத்தரங்குகூட வணிக நிறுவனங்களின்  நிகழ்ச்சியாகவே நடந்தது.

2003ம் ஆண்டில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட 203 திட்டங்களில் சரிபாதிக்கும் குறைவான திட்டங்களுக்கே சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் சூழல் கண்காணிப்பு அறிக்கைகள் (Monitoring Reports) தயாரிக்கப்பட்டன. 150 திட்டங்களுக்கு மட்டுமே அத்திட்ட நிர்வாகிகளால் சுற்றுச்சூழல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அறிக்கைகள் (Compliance Report) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோரின் பதவிக்காலத்தில் சுற்றுச்சூழல் ஆய்வில் மண் அரிப்பு, நிலவளம் குறைதல் போன்ற அம்சங்கள் பரிசீலிக்கப்படாமலேயே புறக்கணிக்கப்பட்டன. இதனால் நாட்டில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பான 328.60 மில்லியன் ஹெக்டேரில் சுமார் 146.82 மில்லியன் ஹெக்டேர் நிலம் சீர்கேடு அடைந்தது. மேலும் இவர்களின் ஆட்சிக்காலத்தில் 4.4 மில்லியன் டன் அளவிற்கு ஆபத்துமிகுந்த கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. உணவுப் பொருட்கள் நஞ்சாயிற்று. பஞ்சாப் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கருவுற்ற தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு உணவு கொடுக்கும் தொப்பூள் கொடியில் 287 நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

திமுக அமைச்சர்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோரின் பொறுப்பற்ற மற்றும் ஊழல்படிந்த கொள்கை முடிவுகளால் மனிதர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை கணக்கிட்டால், ஸ்பெக்ட்ரம் ஊழலால் ஏற்பட்ட பொருளாதார ரீதியான இழப்பு மிகவும் சிறியதாகவே இருக்கும்.-சாந்தனு குஹா ரே
(டெஹல்கா இணையத்தில் வெளிவந்தது)(ஊழல்களின் தன்மையையும், சுமாரான எண்ணிக்கையையும் மட்டுமே கட்டுரை ஆசிரியரால் எழுத முடிந்திருக்கிறது. இந்த ஊழல்களில் கைமாறிய பணம் குறித்தோ, இந்த ஊழல் காரணமாக சுற்றுச்சூழலுக்கும், இந்தியர்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தோ கணக்கிடுவதற்கான சூப்பர் கம்ப்யூட்டர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை மொழிபெயர்ப்பாளர்)

தொடர்புடைய மற்றொரு (பழைய) கட்டுரை

சூழலைச் சூறையாடும் தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு அதிகாரக் குழு!