27 டிசம்பர், 2010

டாக்டர் பினாயக் சென் – ராஜத் துரோகியா? மக்கள் நேசனா?

ராய்ப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம். 24-12-2010, வெள்ளிக்கிழமை.  குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருக்கும் நபரிடம் நீதிபதி சொல்கிறார்: "உங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124-பி இன்படியான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக இந்த நீதிமன்றம் திருப்தி அடைகிறது!"

குற்றவாளிக்கூண்டில் நிற்கும் அந்த நபர் கேட்கிறார்: "124-பி என்றால்..?" 

நீதிபதி பதில் அளித்தார்: "ராஜத்துரோகம்!"

---

ங்கமொழியில் பினாயக் சென் என்று அழைக்கப்படும் இவரை நாம் விநாயக் சென் என்றும் அழைக்கலாம். இரண்டும் ஒன்றுதான்! இவரைப் பற்றி தெரியாதவர்கள் இந்தப்பக்கத்தை பார்க்கலாம்:  

வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரியில் படித்து தங்கப்பதக்கம் வென்ற டாக்டர் விநாயக் சென், சிறிது காலம் டெல்லியில் உள்ள உலகப்புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். அந்த பணியில் திருப்தி அடையாத அவர் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய பிரதேசத்தில் (அப்போது சட்டீஸ்கர் உருவாகியிருக்கவில்லை) கனிமச் சுரங்கங்கள் நிறைந்த தல்லி ராஜஹரா என்ற கிராமத்தில் சுரங்கத் தொழிலாளிகளுக்கு மருத்துவச் சேவை ஆற்ற ஆரம்பித்தார்.

குழந்தை மருத்துவ நிபுணரான அவர், அப்பகுதியில் ஊட்டச்சத்துணவு இல்லாத காரணத்தால் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதை உலகிற்கு எடுத்துச் சொன்னார். மேலும் சுரங்கத் தொழிலாளர்களின் உழைப்பு அரசின் ஆதரவுடன் சுரங்க அதிபர்களால் சுரண்டப்படுவது குறித்தும் பேசத் தொடங்கினார். அப்பகுதியில் இருந்த மாவோயிஸ்ட்களை ஒடுக்குவதற்காக சுரங்க அதிபர்கள் “சல்வா ஜுடும்” என்ற ஆயுதம் தாங்கிய கூலிப்படையை உருவாக்கி அப்பகுதி பூர்வகுடி மக்களை சித்ரவதை செய்வதையும் அம்பலப்படுத்த தொடங்கினார்.  மத்திய – மாநில அரசுப்படைகள் அப்பகுதியில் வசிக்கும் மக்களை போலி என்கவுண்டர் உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் துன்புறுத்தி வருவதையும் எதிர்த்து அவர் குரல் எழுப்பி வந்தார்.

மேலும் பல்வேறு மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு அந்த ஆய்வு முடிவுகள் காட்டும் அவல நிலையை உலகிற்கு எடுத்துக்கூறும் பணியில் ஈடுபட்டார்.  மேலும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் என்ற மனித உரிமை அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த நாராயண சன்யால் (வயது 70) என்பவருக்கும், பியுஷ் குஹா என்ற தொழில் அதிபருக்கும் இடையே இணைப்புப்பாலமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் விநாயக் சென் கடந்த 14-5-2007 அன்று சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் சட்டீஸ்கர் சிறப்பு மக்கள் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நாராயண் சன்யால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையிலிருக்கும் நாராயண் சன்யாலை, சிறை அதிகாரிகளின் வேண்டுகோள்படி சிகிச்சை அளிப்பதற்காகவே டாக்டர் விநாயக் சென் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புகள் அனைத்தும் சிறை அதிகாரிகளின் கண் முன்பே நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்புகளின்போதுதான் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நாராயண் சன்யாலுக்கும், தொழில் அதிபர் பியுஷ் குஹாவுக்கும் இடையே இணைப்புப் பாலமாக விநாயக் சென் செயல்பட்டு கடித பரிவர்த்தனை செய்தார் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.

டாக்டர் விநாயக் சென் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலக அளவில் எழுந்த குரல்களை அடுத்து கடந்த 2009 மே 25ம் தேதி அவருக்கு பிணை அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இவர் பிணையில் வந்த நிலையில் இவர் மீதான வழக்கு ராய்ப்பூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வெகுவிரைவாக நடத்தப்பட்டது. அரசுத் தரப்பு சார்பில் வாதாடிய  வழக்கறிஞர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான “ஐஎஸ்ஐ”க்கும் டாக்டர் விநாயக் சென்னுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக “திடுக்கிடும்” தகவலை வெளியிட்டார். விநாயக் சென் தரப்பில் இந்த ஐஎஸ்ஐ டெல்லியில் இருக்கும் இந்தியன் சோஷியல் இன்ஸ்டிடியூட் அமைப்பு என்று சுட்டிக்காட்டப்பட்டது. அரசுத் தரப்பு சான்றுகள் உண்மையானவை என்று நிரூபிக்கப்படவில்லை. அரசுத்தரப்பு சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக மாறினர்.

எனினும், டாக்டர் விநாயக் சென் மீதான ராஜத்துரோக குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனை அளித்து ராய்ப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

---

ந்த தீர்ப்பு பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் தீர்ப்பாக இருக்கலாம். ஆனால் சட்டத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும், இந்திய நீதித்துறையை கவனித்து வருபவர்களுக்கும் இந்த தீர்ப்பு எந்த அதிர்ச்சியையும் அளிக்காது.

ஏனெனில் இந்தியாவின் குற்றவியல் சட்டங்கள் அனைத்தும், இந்தியா பிரிட்டனுக்கு அடிமையாக இருந்த காலத்தில் ஆங்கில ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. ஆதிக்க நாடான இங்கிலாந்து, அடிமைகளான இந்தியர்களை அடக்கி ஆள்வதற்கு உருவாக்கப்பட்ட சட்டங்களே தொடர்ந்து அமலில் இருந்து வரும் சூழலில் இந்த தீர்ப்பு வராவிட்டால்தான் சட்டத்துறை சார்ந்தவர்கள் அதிர்ச்சி அடைய வேண்டும்.

இந்திய நீதித்துறையின் இந்த அவல நிலை குறித்து பின்னர் தனியாக பார்ப்போம். 

---


நேரு குடும்பத்தின் தற்போதைய வாரிசு ராகுல் காந்தி போகும் இடமெல்லாம், “இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன!” என்று கூறி வருகிறார். அதாவது ஒன்று சிறுபான்மையான வளமையான இந்தியாவாம்.. மற்றொன்று பெரும்பான்மையான வறுமையான இந்தியாவாம்! உண்மைதான்!!

சுதந்திர இந்தியாவை மிக அதிக காலம் ஆட்சி செய்த ராகுலின் கொள்ளுத் தாத்தாவும், பாட்டியும், தந்தையும், அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சிக்காரர்களும் ராகுல் காந்தி சுட்டிக் காட்டியபடி இந்தியாவை இரண்டு இந்தியாக்களாக பிரித்து வைத்துள்ளனர். இந்த இரண்டில் சிறுபான்மையான வளமையான இந்தியாவுக்கு காங்கிரஸ் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் விசுவாசிகளாக உள்ளனர். உதாரணமாக ப.சிதம்பரத்தைக் கூறலாம். பன்னாட்டு நிறுவனமான வேதாந்தாவிற்கு மத்திய அமைச்சராக இருக்கும்போது இந்தியாவின் வளங்களை தாரை வார்ப்பார். அதை எதிர்த்து மக்கள் போராடினால் பசுமை வேட்டையை ஏவுவார். ஆட்சியில் இல்லாதபோது அதே வேதாந்தா நிறுவனத்திற்கு இயக்குனராகவும், சட்ட ஆலோசகராகவும் பணியாற்றுவார். ஆக மொத்தத்தில் ராகுல் காந்தி கூறிய இரண்டு இந்தியாக்களில் ஒரு (வளமையான) இந்தியாவின் தேச பக்தர். மற்றவர்களுக்கும் இதேபோல் விளக்கவுரை  எழுதலாம். நேரம் காரணமாக நிறுத்திக் கொள்வோம்.

மற்றொரு இந்தியாவோ ராகுல் காந்தியே குறிப்பிடுவதுபோல வறுமையில் வாழும் பெரும்பான்மை கொண்ட மக்களைக் கொண்ட இந்தியா! ராகுல் காந்தியின் கொள்ளுத்தாத்தாவும், பாட்டியும். தந்தையும், தற்போதைய காங்கிரஸ் காரர்களும் செய்த துரோகத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட இந்தியா! இந்த மக்கள் மீது அன்பும் அக்கறையும் காட்டும் எத்தனையோ பேரில் டாக்டர் விநாயக் சென்னும் ஒருவர்.

ஏழை இந்தியா மீது டாக்டர் விநாயக் சென் அன்பு காட்டுவதும், அக்கறை செலுத்துவதும் காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வளமையான இந்தியாவிற்கு தேசத்துரோகமாக தெரிகிறது.
இந்தியாவில் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி என்று ஒருவர் இருந்தார்.  “யங் இந்தியா” என்ற பத்திரிகையில் பிரிட்டிஷ் அரசை விமர்சித்து அவர் எழுதிய கட்டுரைக்காக 1922ம் மார்ச் 23ம் தேதி அவர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டியது ஆங்கிலேய அரசு. அதைக் கேட்ட மோகன்தாஸுக்கு மார்பு வலி வரவில்லை. அவர் கூறினார்: “உங்கள் சட்டத்தின்படி இது குற்றமாக இருக்கலாம்; ஆனால் ஒரு குடிமகனின் மிக உயர்ந்த கடமையாக அது தோன்றுகிறது!” மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இன்றைக்கும் இந்தியாவில் அதே சட்டம்தான் அமலில் உள்ளது. அன்று மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட அதே சட்டப்பிரிவின் கீழ் இன்று டாக்டர் விநாயக் சென் மீது அதே தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு அதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி வர்ணித்தபடி, "எந்த இந்தியாவிற்கு டாக்டர் விநாயக் சென் விசுவாசமாக இருந்தார்? எந்த இந்தியாவிற்கு டாக்டர் விநாயக் சென் துரோகம் செய்தார்!" என்று முடிவு செய்ய வேண்டியுள்ளது.



கார்ட்டூன்: பாலா

15 கருத்துகள்:

seeprabagaran சொன்னது…

“திருடர்களும் அயோக்கியர்களும் ஆளும் நாட்டில் உண்மையானவர்கள் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்” என பிடல் காஸ்ட்ரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.

கபீஷ் சொன்னது…

Thanks for sharing. Very useful post. Hope Binayak Sen will be released soon

இனியவள் புனிதா சொன்னது…

:(

kama சொன்னது…

பினாயக் சென் பற்றிய கட்டுரையை உங்களைத்தவிர யாரும் எழுதமுடியாது. தங்களது கட்டுரைகளை தொடர்ந்து படித்துவரும் வாசகன் எனும் அடிப்படையில் எனக்கு இப்படி தோன்றியது. இந்தியா முதலாளிவர்க்கத்தின் திட்டமிட்ட சதியின் விளைவுதான் அந்த தண்டனையின் காரணம். அதற்கு இந்திய பார்ப்பன பனியா கட்சிகள் இரண்டும் உடந்தைகள் இந்திய ஏழைகள் அனைவரையும் கழுவில் ஏற்றிவிட்டுதான் மறுவேலையை பார்ப்பர்கள் என்று நிணைக்கிறேன்.

சிவா சொன்னது…

வாழ்த்துக்கள், சுந்தர் சார்.

நீதிமன்றங்களின் மீது வெளியே இருந்த போதே எனக்கு மரியாதை இல்லை. சிறைக்கு சென்று அதன் செயல்பாடுகளை மேலும் ஆழமாக கவனிக்கும் வாய்ப்பு கிடைத்த பிறகு அதன் மீது இருந்த கொஞ்சநஞ்சம் மரியாதையும் போய்விட்டது.

அருண்மொழிவர்மன் சொன்னது…

தமிழ்மண நட்சத்திர வாரத்தை நல்லதோர் பதிவுடன் தொடங்கி உள்ளீர்கள். இது போன்ற முக்கிய்மான பிரச்சனைகளை இந்த வாரம் அதிகம் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

அ.வெற்றிவேல் சொன்னது…

அய்யா..முதலில் நட்சத்திரப் பதிவருக்காக வாழ்த்துகள்.. அருமையான கட்டுரை மூலம் உங்கள் நட்சத்திர வாரத்தை ஆரம்பித்துள்ளீர்கள். இதன் மூலம் உங்கள் பழைய கட்டுரையும் படித்தேன்.இவ்வளவு நாள் ஏன் தவறவிட்டேன் எனத்தெரியவில்லை..அருமையான ஆரோக்கியமான பார்வையில் மிகவும் அவசியமான பதிவுகள்..இந்த வாரத்தின் மூலம் உங்கள் மீது நட்சத்திர வெளிச்ச்ம் வீழ்ந்து இன்னும் பலரைச் சென்றடைய வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துக்கள்

ஜோதிஜி சொன்னது…

உங்களை தொடர்ந்து வருபவன் என்ற முறையில் இந்த நட்சத்திர வாரத்தில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ்நதி சொன்னது…

அதிகார வர்க்கம் மக்களை எப்படி வேண்டுமானாலும் பிரித்து ஆளலாம். அதையே மக்கள் விடுதலைக்கான போராட்டங்கள் செய்யும்போது இந்திய இறையாண்மை, ஐக்கிய இலங்கை போன்ற பதங்கள் நினைவில் வருகின்றன.

நட்சத்திர வாரத்தை நியாயமான பதிவொன்றுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள். நன்றி.

தருமி சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்.

அரசும் அதன் அல்லக்கைகளும் இந்த வழக்கை நடத்தினார்கள் என்றாலும் நீதிபதிகளுக்காவது கொஞ்சமாவது மூளையும், மனசாட்சியும் இருக்கக்கூடாதா?!

Murasoli v maran சொன்னது…

ஆங்கிலேய சட்டங்கள் இன்னும் நடைமுறையில் இருந்தால் , நாம் சுதந்திரம் வாங்கியது பொய் தானே? சாவிகள் கைமாறின - கைகளுக்கு மட்டும் இருந்த விலங்கு கால்களுக்கும்,வாய்க்கும் சேர்த்து போடப்பட்டது.(1947 .ஆகஸ்ட்)

☀☃ கிறுக்கன்☁☂ சொன்னது…

ஆதிக்க சக்திகளை எதிர்த்தால் அவன் எவ்வளவுதான் பிரபலமான மனிதனாக இருந்தாலும் அரசு இயந்திர பேய்கள் அவர்களின் குரல்வளையை நெறிக்கும் என்பது பினாயக் சென் போன்ற மனித உரிமை போராளிகளின் சிறையே சாட்சி,காசுமீரில் நடந்த மனித உரிமை மீறலை வெளியிட்ட அப்சல் போன்றோருடைய வழக்கும் சாட்சி.மக்களை நேசிப்பவனுக்கு கொடும் சிறையும் வெண்ணிலா அறைகள்.... இந்த பிணம் தின்னும் கழுகுகளின் வார்த்தைகள் இவர்களின் மனவலிமையை உறுதி கொள்ள செய்யட்டும்..தேசியம் மாயை

muthu சொன்னது…

"சொந்த நட்டிலேயே பாதுகாப்பில்லை;20,25 வயதுகளில் உள்ள மகள்களைப் பற்றியே கவலை; ஏதெனும் ஜனநாயக நாட்டின் தூதரகத்தில் அடைக்கலம் கேட்பதுதான் எனக்கிருக்கும் ஒரேவழி:" -என்று பிநாயக் சென் மனைவி இலினா டெல்லியில் இன்று பத்திரிக்கைகளுக்குப் பேட்டி அளித்துள்ளார். மனிதநேயத்துடன் வாழ்க்கை நடத்தி வந்த மெய்யான மனிதனிரின் குடும்பம், காந்தி தேசத்தில், திண்டாடிக்கொண்டிருக்கிறது. வெறும் கண்டனங்களும், அனுதாபங்களும் சிக்கலைத் தீர்த்துவிடுமா? வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட இத்தகையவர்களுக்கு விடிவே இல்லையா? இந்தியாவில் இயங்கும் மனித உரிமைகள் இயக்கம் எந்த அளவிற்கு உதவ இயலும்?

பெயரில்லா சொன்னது…

இது போன்று ஆரோக்கியமான வேறு தளங்கள் உள்ளதா?சட்டத்தை இவ்வளவு எளிமையாக படம் போல் சொல்ல,எனக்கு மிக எளிதாக புரிகிறது.மிக்க நன்றி!!eg(124-பி)

கருத்துரையிடுக