28 டிசம்பர், 2010

வல்லரசுக் கனவுகளும், விவசாயிகளின் தற்கொலையும்..!


தற்கொலை என்பதை ஒரு உளவியல் சிக்கலாகவே மருத்துவ உலகம் பார்க்கிறது. ஆனால் ஒரு நாட்டில் நிலவும் மனித உரிமைகளின் அளவுகோலாக தற்கொலைச் சம்பவங்களை பார்க்கலாம் என்று நவீன சமூகவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.  உலகின் பல்வேறு பகுதிகளிலும் மன அழுத்தம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பொருளாதாரச் சிக்கல்கள் போன்ற பல காரணங்களால் தற்கொலைகள் நடக்கின்றன. இந்தியாவிலும் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலைகள் நடப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த புள்ளிவிவரங்களை மத்திய அரசின் தேசிய குற்ற ஆவண மையம் தொகுத்து வருகிறது.

கடந்த 2008ம் ஆண்டில் மட்டும் இந்தியா முழுதும் 1 இலட்சத்து 25 ஆயிரத்து 17 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  பொற்கால ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டிலும்கூட 14 ஆயிரத்து 425 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலை என்பதை பொதுவாக ஏற்கமுடியாது என்ற நிலையில் தற்கொலை செய்து கொள்பவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விவசாயிகள் இடம்பெறுவது மிகவும் கவலையூட்டும் அம்சமாகும்.

1997ஆம் ஆண்டு முதல் 2003அம் ஆண்டு வரை ஆண்டொன்றுக்கு சராசரியாக 16,267 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது இந்த 7 ஆண்டுகளில் 1,13,782 விவசாயிகள் தற்கொலை புரிந்துள்ளனர்.


அடுத்த 6ஆண்டுகளில் 1,02,628 விவசாயிகள் தற்கொலை புரிந்துள்ளனர். அதாவது ஆண்டொன்றுக்கு இந்த 6 ஆண்டுகளில் சுமார் 17,100 விவசாயிகள் தற்கொலை புரிந்துள்ளனர்.

2009ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் 17,368 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதன் மூலம் 1997ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 2,16,500 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டிலும் கடந்த 2009ஆம் ஆண்டு 1060 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2008ஆம் ஆண்டு நிலவரத்தைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகரித்துள்ளது.

விவசாயிகள் தற்கொலை குறித்த புள்ளிவிவரங்கள் சரிவர கணக்கிடப்படுவது இல்லை என்றும் கூறப்படுகிறது. சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் செய்பவர்கள் தற்கொலை செய்து கொண்டால் மட்டுமே அது விவசாயி தற்கொலை என்று பதிவு செய்யப்படுவதாகவும், விவசாயக் கூலிவேலை செய்பவர்கள் தற்கொலை செய்து கொண்டால் அவர்கள் விவசாயிகளாக அடையாளம் காணப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த அடிப்படையில் அரசு புள்ளி விவரங்களில் இருப்பதுபோல் சுமார் ஐந்து மடங்கு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் பள்ளியிறுதிக் கல்வி பயிலாதவர்கள். சுமார் 40 சதவீதம் பேர் சுயவேலைவாய்ப்பு மேற்கொள்பவர்கள், சுமார் 20 சதவீதம் பேர் இல்லத்தரசிகள், சுமார் 7 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள். அரசு புள்ளிவிவரங்களில் இவ்வாறு கூறப்பட்டிருந்தாலும் இவர்களில் பெரும்பான்மையினர் விவசாயிகளாக இருப்பதற்கான வாய்ப்பே அதிகம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த அடிப்படையில் பார்த்தால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிக எண்ணிக்கையில் இருக்கலாம். இந்த ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் முழுமையாக தெரியவரலாம்.


ஒரு நாட்டில் இத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சூழலில் நாட்டை ஆட்சி செய்பவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

இந்திய அரசின் தவறான கொள்கைகளாலேயே விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் நிலவுகிறது. இந்தியாவின் பாரம்பரிய வேளாண் முறைகள் நவீன வேளாண் அறிஞர்களாலும், அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. அதற்கு பதிலாக பன்னாட்டு நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கு உதவும் விதத்தில் அயல்நாட்டு விதைகள், பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள், தொழில் நுட்பங்கள், மரபணுத் தொழில்நுட்பம் ஆகியவை விவசாயிகளிடம் திணிக்கப்பட்டது. இவற்றின் விலை அதிகமாக இருந்ததால் கடன் வாங்கி இந்த செலவுகளை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். ஆனால் விளைச்சல் பொய்த்துப் போதல், விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது போன்ற சூழ்நிலைகளால் விவசாயிகளின் கடன்சுமை அதிகரித்து, அவர்கள் தற்கொலைக்கு தூண்டப்பட்டனர்.

இந்த நிலையில்தான் இந்தியாவும், அமெரிக்காவும் சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அதே 2005 நவம்பர் 12ம் தேதி,  மற்றொரு ஒப்பந்தத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் கையொப்பமிட்டனர். இந்திய அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், உலக வர்த்தக கழகத்தில் இந்தியா இணைந்ததை தொடர்ந்து ஏற்பட்டதாகும்.

இந்திய - அமெரிக்க வேளாண்மைக் கல்வி, ஆராய்ச்சி, சேவை மற்றும் வணிகத் தொடர்பிற்கான அறிவு முனைப்பு(India - United States Knowledge Initiative on Agricultural Education, Research, Service and Commercial Linkages) என்கிற இந்த ஒப்பந்தம் முதலாம் பசுமைப் புரட்சியை (Green Revolution) தொடர்ந்து என்றென்றும் பசுமைப்புரட்சியை (Evergreen Revolution) ஏற்படுத்துவதற்காக வரையப்பட்டுள்ளது.

ஆனால் பழைய பசுமைப் புரட்சி போல முற்றிலும் அரசே ஏற்று நடத்தாமல், இந்தப்புதியஎன்றென்றும் பசுமைப்புரட்சியானது தனியாருக்கும் இடம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் வால்மார்ட் (Wal Mart), மான்சான்டோ (Mon Santo) போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் முதல், நம்நாட்டு ரிலையன்ஸ் (Reliance) நிறுவனம் வரை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.

விவசாயத்தோடு மட்டும் நில்லாமல் மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்றவற்றிலும் தொடரும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகளாக இரண்டு அம்சங்களைக் கூறலாம்:
 
· மரபணுமாற்று தொழில்நுட்பத்தின் (Genetic Engineering) பயன்பாட்டை விவசாயம், மீன் வளர்ப்பு, கால் நடை வளர்ப்பு போன்ற துறைகளில் அதிகப்படுத்துதல்

·
வேளாண்மையில் அறிவுசார் சொத்துரிமையை அதிகப்படுத்துதல்.

இவற்றை நடைமுறைப் படுத்துவதற்காக தாவர வகைகள் பாதுகாப்பு மற்றும் உழவர்களின் உரிமைக்கான சட்டம் (Protection for Plant Varieties and Farmers Rights Act) 2001 போன்ற புதிய சட்டங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன. காப்புரிமைச் சட்டம், விதைச்சட்டம் (Seed Act) 1966 உள்ளிட்ட சில பழைய சட்டங்கள் உலகமயமாக்கல் திட்டத்திற்கேற்ப மாற்றி அமைக்கப்படுகின்றன.  இவை அனைத்தும் விவசாயிகளின் உரிமைகளை புறக்கணித்துவிட்டு வேளாண் தொழிலில் ஈடுபடும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் நலன்களை காக்கவே கொண்டு வரப்படுகிறது.

இது குறித்து அரசுக்கும் அரசு சார்பு அமைப்புகளுக்கும் மிகவும் நன்றாகவே தெரியும். இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்டது "இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம்". இப்பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவுச் சொத்துரிமை ஆட்சியில் மனித உரிமை, வேளாண் சட்டம் போன்ற பாடங்களில் முதுகலை படிப்புகள் (Post Graduate Diploma in Intellectual Property Rights Regime and Human Rights; Post Graduate Diploma in Agricultural Law)  தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும் இந்த படிப்பு தொடங்கப்படவே இல்லை. தற்போது அந்த அறிவிப்புகளும் கூட அகற்றப்பட்டுவிட்டன. அதற்குப் பதிலாக அறிவுச்சொத்துரிமை குறித்து பல்வேறு மட்டங்களில் பல வகையான படிப்புகள் நடத்தப்படுகின்றன. இன்று இந்தியாவில் அறிவுச் சொத்துரிமை குறித்த படிப்பு இல்லாத பல்கலைக்கழகமே இல்லை என்றும் சொல்லலாம். ஆனால் அறிவுச் சொத்துரிமையால் ஏற்படும் சமூகத் தாக்கங்கள் குறித்தோ, அறிவுச் சொத்துரிமையின் அறம் சார்ந்த அம்சங்கள் குறித்தோ எந்த விவாதமும் நடைபெறுவதில்லை.

வேளாண்மை குறித்த சட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தோ, சட்டக்கல்வியில் நடைபெறும் சதித்திட்டங்கள் குறித்தோ பெரும்பாலான வழக்கறிஞர்களுக்கு எதுவுமே தெரியாது. அறிவுச் சொத்துரிமை சட்டம் குறித்த உயர்கல்வி பயிலும் மாணவர்களும், இந்த துறையால் சமூகத்திற்கு ஏற்பட வாய்ப்புள்ள விளைவுகள் குறித்து எந்த விமர்சனமும் இல்லாமல் தமக்கு பொருளீட்டும் வாய்ப்புகளை மட்டுமே தேடி வருகின்றனர்.

வேளாண்மை கல்வியோ, விவசாயிகளின் பாரம்பரிய அறிவை புறக்கணிப்பதிலும், பன்னாட்டு நிறுவனங்களின் ஆளுமைக்குள் இந்திய விவசாயத்தை அடக்கும் நோக்கத்திலுமே இருக்கின்றன.

அரசியல்வாதிகளை பொறுத்தவரை விவசாயிகள் தேர்தல் நேரத்தில் ஓட்டு வங்கியாகவும், மற்ற நேரங்களில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும் தெரிகின்றனர். தமிழகத்தில் விவசாயிகள் அனைத்துப் பிரிவினராலும் கைவிடப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.

தமிழக அரசோ, மக்களை சீரழிக்கும் திரைப்படத்துறைக்கு கொடுக்கும் கவனத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட விவசாயிகளுக்கு தர மறுக்கிறது. வேளாண்மையை நவீனப்படுத்தல் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அதன் கையாள்களுக்கும் மட்டுமே லாபத்தை தரக்கூடிய திட்டங்களை அமல்படுத்த முயல்கின்றன. அதற்கேற்ப தமிழ்நாடு வேளாண் மன்றச் சட்டம் போன்ற சதித்திட்டங்களையும் அறிமுகப்படுத்த முனைகின்றன.

விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை உண்டு உயிர்வாழும் மற்றதுறை சார்ந்த மக்களோ, விவசாயிகள் என்றோர் இனம் இருப்பதையை மறந்துவிட்டு பெரிய மற்றும் சின்னத்திரை கேளிக்கைகளில் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.

வேளாண் நிலங்களும், இந்த நிலங்களுக்கு நீர் வசதியை அளிக்க வேண்டிய நீர்நிலைகளும் பல்வேறு பயன்பாடுகளுக்காக மாற்றப்படுவது யாருடைய கவனத்தையும் கவர்வதில்லை.

நம் வீட்டில் ஒருவர் காலமானால் ஒரு வருட காலத்திற்கு பண்டிகைகளை தவிர்ப்பது நமது வழக்கம். ஆனால் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழலிலும் உழவர் திருநாளை புதிய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளோடு கொண்டாடுவதற்கு நாம் தவறுவதில்லை. இதில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி உச்சநீதிமன்றம்வரை சென்று வழக்கு வேறு!

மனிதர்களான நாம் உண்ணும் உணவை மண்ணிலிருந்து விவசாயிகளின் உதவியுடன் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். பெரிய ஆலைகளிலோ, கம்ப்யூட்டர் மென்பொருட்கள் மூலமோ உணவை உற்பத்தி செய்ய முடியாது. விவசாய நிலங்களின் பரப்பளவு ஆண்டுதோறும் குறைந்து வருவது குறித்தோ, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது குறித்தோ, அந்த விவசாயிகளின் வாரிசுகள் விவசாயத்தை விட்டு வெளியேறி வேறுதொழிலுக்கு செல்வது குறித்தோ சிந்திக்கக்கூட நமக்கும் நேரம் இருப்பதில்லை. இது குறித்து விவாதங்களை நடத்தவும், தீர்வுகளை தேடவும் வணிக ஊடகங்களுக்கும் தேவை ஏற்படுவதில்லை.

நாடுமுழுவதும் அரசின் ஆயுதப்படையினர் நடத்தும் போலி என்கவுண்டர் வழ்ககுகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை, தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையைவிட மிகவும் குறைவே. ஆனால் அரசே செய்யும் படுகொலையான என்கவுண்டர்கள் குறித்து சமூகத்திலும், மீடியாக்களிலும் நடக்கும் விவாதங்கள், விவசாயிகளின் தற்கொலைகள் நடக்காதது மிகவும் கவலைக்குரிய அம்சமாகும்.

இவ்வாறாக விவசாயிகளின் தற்கொலைக்கு நாமும் உடந்தையாகிறோம். இந்திய தண்டனை சட்டத்தின்படி தற்கொலைக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கலாம். ஆனால் நாம் அந்த தண்டனையில் சிக்காமல் தப்பிவிடுவோம். ஆனால் நமது விவசாயிகளை காப்பாற்றத்தவறும் குற்றத்திற்காக எதிர்காலம் நம்மை தண்டிக்காமல் விடாது. நமது உணவுத் தேவைகளுக்காக பன்னாட்டு வணிக நிறுவனங்களை மட்டுமே சார்ந்து வாழும் அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். 

இந்தியா வல்லரசாகி கொண்டிருப்பதாக நம்மில் பலரும் கனவு கண்டுக் கொண்டிருக்கிறோம். வல்லரசு என்பதற்கான பொருள் மிகவும் சர்ச்சைக்குரிய வகையிலேயே இருக்கிறது. ஆனால் நல்லரசு என்பது, அனைத்து தரப்பு மக்களையும் சமமாக நடத்தும் நல்ல அரசாகவே பொருள் கொள்ளப்படுகிறது. எனவே வல்லசரசாகி ஆசிய பிராந்தியத்தின் பெரிய அண்ணனாக விளங்குவதைவிட, நல்லரசாகி அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்வதற்கான உரிமையை உத்தரவாதப்படுத்தும் அரசே இந்தியாவின் இன்றைய தேவை!

இப்போதாவது விழிப்படைவோமா...?

8 கருத்துகள்:

அ.வெற்றிவேல் சொன்னது…

இன்னுமொரு அற்புதமான கட்டுரை..தொடரட்டும் தங்கள் பணி

தமிழ்மலர் சொன்னது…

திரு. வழக்கறிஞர் அவர்களுக்கு...

இந்த நாட்டை ஊழல் மோசடி அரசியல்வாதிகளிடம், அதிகாரிகளிடம், வியாபாரிகளிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டியகட்டாயத்தில் இருக்கிறோம்.

வாக்குவங்கி அரசியலில் பழம்திண்று கொட்டை போட்டுவிட்ட தற்போது உள்ள 2000 அரசியல்வாதிகளை தாண்டி இந்தியாவை மீட்டெடுக்க நம்மால் முடியாது.

இந்த நாட்டை திருத்த, சமுதாய பொதுபிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண, நேர்மையான ஆக்கப்பூர்வமான சட்டங்களை வகுக்க அரசியல் அல்லாமல் மாற்று வழி இருக்கிறதா? இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

இது குறித்து நானும் பலரிடம் விசாரித்து வருகிறேன். சில வழிமுறைகள் கிடைத்துள்ளன. ஆனால் அதில் எவ்வளவு தூரம் வெற்றிபெறமுடியும் என்று தெரியவில்லை.

உங்களது ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன். நன்றி.

K.R.அதியமான் சொன்னது…

பார்க்கவும் :

http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_21.html
விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்

பி.டி காட்டன் வகைகளை பயிருடுவதால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் பி.டி காட்டன் விவசாயிகள் நல்லா தான் இருக்காக. தற்கொலைக்கு பல லோக்கல்
காரணிகளும் உண்டு.

பார்க்கவும் :

http://www.ifpri.org/publication/bt-cotton-and-farmer-suicides-india

K.R.அதியமான் சொன்னது…

இதையும் பார்க்கவும் :

http://www.thehindubusinessline.com/2010/12/27/stories/2010122751600100.htm
Farm output bounces back

///Part of the overall improved agricultural performance is explained by higher yields. This is particularly apparent in cotton and maize, where Bt technology and increased penetration of hybrids have made a difference.////

சுந்தரராஜன் சொன்னது…

திரு. அதியமான் அவர்களுக்கு,

"பசுமைப் புரட்சியின் கதை" என்றொரு கட்டுரைத் தொடர் காலச்சுவடில் வெளியாகிறது. அதன் கடைசி அத்தியாயத்தின் இணைப்பு இதோ: http://kalachuvadu.com/issue-132/page68.asp

மேற்கூறிய விவகாரங்களில் உங்கள் நண்பர் ஞாநியின் கருத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

பிறகு உங்களுடன் விவாதிப்பது குறித்து யோசிக்கிறேன்.

K.R.அதியமான் சொன்னது…

As i am typing from a browsing centre with no tamil fonts, pls excuse this english comment :

This post is about the causes and effects of farmers suicide. IS 'Green revolution' responsible for this ? How ? If it is true, then why after 40 years of GR ?

I read thru the Kaalachuvadu article. full of shallow cliches and lacks authentic data and analysis. sure there are unwanted side effects of using chemical fertilisers and pesticides. Esp in India, where usage is in a 'unscientific' and excess manner.

But the situation in the 60s was grim and near famine. India was living on a ship-to-mouth basis, surviving on wheat imports from US. It was a national crisis and there was no option except Green revolution. All these myths about US MNCS dumping their technology are just myths. Indian fertiliser industry uses the same tech as the rest of the world. and we are importing more.

and the BT cotton is giving excellemt yield and postive results. (but for a stray incidents of crop failures). IF not, farmers would not be continuing this till date.

And what solution do you provide to stop farmers sucides ? roll back the green revolution and ban BT cotton ? will it work ?

சுந்தரராஜன் சொன்னது…

அதியமான்,

நீங்கள் 60க்கு பின்னர் பிறந்தவர் என்றே நினைக்கிறேன். எனவே அந்த காலத்திய நிகழ்வுகளை நீங்கள் விரும்பும் ஊடகங்களிலிருந்து காட்டுகிறீர்கள்.

60களில் வாழ்ந்தவர்களும், அந்த காலகட்டத்தில் நீங்கள் ஆதரிக்கும் பசுமைப்புரட்சியை அரசு சார்பாக நின்று பரப்பியவர்களும் இன்று அதை எதிர்க்கின்றனர். (உ-ம்: நம்மாழ்வார்)

நீங்கள் காட்டும் மேற்கோள்கள் எல்லாம் நம்பகத்தன்மை வாய்ந்தவை, நாங்கள் கூறுபவை நம்பகத்தன்மை இல்லாதவை என்று கருதும் உங்களோடு வாதம் செய்ய எமக்கு விருப்பம் இல்லை.

இந்த விவகாரங்களில் உங்கள் நண்பர் ஞாநியின் கருத்தை கேட்குமாறு கூறியிருந்தேன். அது உங்களுக்கு எதிரானது என்று தெரிவதால் அதை கவனமாக தவிர்க்கிறீர்கள்.

K.R.அதியமான் சொன்னது…

ஞாநி எம் நண்பர் என்பதால் அவருடன் 100 சத கருத்து ஒற்றுமை இல்லை. இன்னும் சொல்லப்போனால் பல விசிய்ங்களில் கருத்து வேறுபாடுகள். இந்திய விவசாயம் பற்றி அவர் ஒரு நிபுணர் அல்ல.

நான் எழுப்பிய அடிப்படை கேள்விகளுக்கு பதில் சொல்ல முயல்க. முக்கியமாக மாற்று வழிக்கு.

விவசாயிகள் தற்கொலைக்கு காரணிகள் பற்றி எமதி பதிவில் அலசியிருக்கிறேன். பி.டி காட்டன் இன்று வெற்றிகரமாக சேலம் மாவட்டத்தில் பயிரடப்படுவதை பார்க்கிறேன். இவை பற்றி சொல்லுங்களேன்.

நாம் இருவருமே 1968இல் பிறந்தவர்கள் தாம். அன்று நிலவிய கடும் பற்றாக்குறை மற்றும் இறக்குமதி பற்றி படித்து தெரிந்து கொள்ள முடியாதா என்ன ? அல்லது விசாரித்து தெரிந்து கொள்ள முடியாதா ?

இயற்க்கை விவசாயம் பற்றி ஆர்வம் உண்டு. அதை எதிர்க்கவில்லை. ஆனால் நடைமுறை சாத்தியம் மற்றும் அன்று இருந்த சூழல் பற்றி மாற்று கருத்துக்கள் உள்ளன். மேலும்...

கருத்துரையிடுக