29 டிசம்பர், 2010

ஐந்திணையை மறக்கலாமோ, முத்தமிழ் அறிஞரே!

தமிழர்களின் பாரம்பரியமும், பண்பாட்டு வரலாறும் இயற்கையை ஆதாரமாக கொண்டதே! இயற்கையை போற்றாத இலக்கியமே தமிழில் இல்லை எனலாம். உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் வாழும் இடங்களின் தன்மைக்கு ஏற்ப மக்களை பட்டியலிட்ட இனம் தமிழினமே!
இயற்கையை பாடிய வள்ளுவனுக்கு ஏரியை தூர்த்து நினைவுக்கோட்டம்
தமிழர்கள் வாழும் நிலப்பகுதிகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகைகளாக பிரிக்கப்பட்டிருந்ததை நாம் அனைவரும் பள்ளிக்காலத்திலேயே படித்திருப்போம்.

மலையும் மலைசார்ந்த இடங்களும் குறிஞ்சி: காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை; வயலும் வயல் சார்ந்த இடங்களும் மருதம்; கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல்; குறிஞ்சியும், முல்லையும் வெம்மை காரணமாக இயல்பு மாறினால் வறட்சியானால் பாலையாகும்.

வாழும் சூழலுக்கேற்பவே மனிதர்களின் மனம் சார்ந்த இயல்புகள் உருவாகும் என்பதே மானுடவியல் தத்துவம். இதை நிரூபிப்பதுபோலவே தமிழ்நிலத்தில் நம் முன்னோடிகளும் வாழ்ந்துள்ளனர்.

மலையும், மலை சார்ந்த இடங்களான குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தவர்கள் மலை நெல் விதைத்தல், தேன் சேகரித்தல் போன்ற தொழில்களை மேற்கொண்டனர். காடும் காடு சார்ந்த இடங்களான முல்லை நிலத்தில் வாழ்ந்தவர்கள் வரகு, சாமை விதைத்தல், கால்நடை மேய்த்தல் உள்ளிட்ட தொழிலை செய்து வந்தனர். வயலும் வயல் சார்ந்த இடங்களுமான மருத நிலத்தில் வாழ்ந்தவர்கள் வேளாண் தொழில் வல்லுனர்களாக வாழ்ந்துள்ளனர். வேளாண்மைக்கு அத்தியாவசியமான நீர்நிலைகளை பாதுகாப்பதும் இவர்களின் தொழிலாக இருந்துள்ளது. கடலும் கடல் சார்ந்த இடங்களுமான நெய்த நிலத்தில் வாழ்ந்தவர்களோ மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கூறியவற்றில் மருத நிலமும், நெய்தல் நிலமும் அனைத்து காலங்களிலும் வளமாக இருந்துள்ளது. குறிஞ்சி, முல்லை ஆகிய பகுதிகள் வறட்சியாக இருந்தபோது பாலைப் பகுதியாக இயல்பு மாறியுள்ளது.

பாலைப்பகுதியில் வசித்தவர்கள் வேறெந்த தொழிலுக்கும் வழியற்ற நிலையில் களவு, வழிப்பறி, கொள்ளை, கொலை போன்ற குற்றங்களை தொழிலாக செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தமிழ்நாட்டில் பாலை நிலங்கள் நிரந்தரமாக இருந்ததில்லை. இயற்கைச்சீற்றத்தினால் வறட்சி ஏற்படும் காலங்களில் மட்டும் குறிஞ்சிப் பகுதியும், முல்லைப் பகுதியும் சில காலத்திற்கு பாலைகளாக தோற்றம் அளித்திருக்கின்றன, அந்நாளில்!

எனவே மனிதர்கள் வாழும் இயற்கைச்சூழலே அவர்களுடைய வாழ்க்கை நெறிகளையும், வழிமுறைகளையும் தீர்மானிக்கின்றன என்பது உறுதியாகிறது. இந்த வாழ்க்கை நெறிமுறைகள் என்பது உளவியல் சார்ந்த ஒரு அம்சமாகும். வளமையான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கலை, அறிவியல் உள்ளிட்ட அம்சங்களில் சிறந்து விளங்குவதும், வறுமையான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அறிவார்ந்த அம்சங்களில் பின்தங்கியிருப்பதும் மானுடவியல் பார்வையில் மறுக்கவியலா உண்மைகளே.

இன்றைய தமிழகத்தில் இந்த திணை சார்ந்த நிலங்கள் எப்படி இருக்கின்றன என்று பார்க்கலாமா?

முதலில் குறிஞ்சி!

தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலை, கிழக்குத்தொடர்ச்சி மலை ஆகிய இரு மலைத்தொடர்களும் சங்மிக்கின்றன. ஆனால் இவை இரண்டும் இயல்பு நிலையை நாளும் தொலைத்த வண்ணம் இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையை சீரழிக்கும் செயல்பாடுகள் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கிவிட்டன. இயற்கையான காடுகளை அழித்து தேயிலைத்தோட்டங்கள் அமைத்ததில் ஏற்பட்ட இயற்கை இழப்புகளை கணக்கிடவே முடியாது. 

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகும் நிலைமையில் மாற்றமில்லை. மற்ற மலைப்பகுதிகளும் பல்வேறு காரணங்களால் அவற்றின் இயல்பு நிலை மாற்றப்பட்டு வருகிறது. சேலத்தில் உள்ள கஞ்சமலை, திருவண்ணாமலை பகுதியில் உள்ள கவுத்திமலை, வேடியப்பன் மலை போன்றவை அங்குள்ள கனிம வளங்களுக்காக ஜிண்டால் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு கைமாறும் அபாயத்தில் உள்ளன. யாரோ சில முதலாளிகளும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பொருள் ஈட்டுவதற்காக அப்பகுதியின் சுற்றுச்சூழலும், மக்களின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இயற்கையில் அமையாத பல்வேறு மனிதத்தவறுகளின் காரணமாக இப்பகுதிகளில் இருந்த ஏராளமான தாவரங்களும், விலங்குகளும், பறவைகளும் ஏற்கனவே அழிந்துவிட்டன.

முல்லை!

தமிழ்நாட்டில் உள்ள காடுகளை அழிப்பதில் சமூக விரோதிகள் என்று கூறப்படுபவர்களைவிட அதிகமாக ஆர்வம் காட்டுவது அரசுத்துறையாகவே தோன்றுகிறது. அரசியல்வாதிகளும், ஆன்மிகவாதிகளும், தொழில்துறையினரும் காடுகளை அழிப்பதில் போட்டிபோடும்போது அதை தடுக்கவேண்டிய வனத்துறை, காடுகளை அழிப்போருக்கே துணைபோகின்றது. 

தேர்தலை சந்திக்கும்போது கட்சி ரீதியாக பிரிந்து நிற்கும் அரசியல்வாதிகள் காடுகளை அழித்து தமக்கு உடமையாக்கிக்கொள்ளும்போதுமட்டும் ஒற்றுமையாக இருக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்த காடுகளின் பரப்பு நாளுக்குநாள் குறைந்து வருவதையே உதாரணமாக கூறலாம்.

அடுத்து மருதம்!

மருதம் நம் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கிறது. நம் உணவுத் தேவைகளுக்கு நாம் மருதநிலத்தையே முழுமையாக நம்பி இருக்கிறோம். அதே நேரத்தில் மருதநிலப் பரப்பை அழிப்பதிலும் நாம் முனைப்பாக இருக்கிறோம். அண்டை மாநிலமான கேரளா விவசாயம் செய்ய வாய்ப்புள்ள துளி நிலத்தைக்கூட வேறு பயன்பாட்டுக்காக மாற்றக்கூடாது என்று கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது. தமிழ்நாட்டிலோ விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதில் அரசுத்துறைகளும், தனியார்துறைகளும், தனிநபர்களும் போட்டி போடுகின்றனர்.

வேளாண்மைக்கு முக்கியத்தேவையான நீர்நிலைகளை அழித்து அதன் சுவடுகூட தெரியாமல் செய்வதிலும் நாமே வல்லவர்கள்! மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்என்ற திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு ஒரு ஏரியை அழித்து அதில் வள்ளுவர் கோட்டம் கட்டும் திறமை நமக்கு மட்டுமே உண்டு. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை, டைடல் பார்க், பல ஊர்களில் உள்ள பேருந்து நிலையங்கள் ஆகிய அனைத்தும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டியவையே!

ஒரு மன்னனை சகல வசதிகளோடும் வாழ்வாயாக என்பதை சுருக்கமாக வரப்புயர! என்று வாழ்த்திய தமிழ்ப்புலவர்கள் இன்று இருந்தால் தமிழினம் அழிய வேண்டும் அறம் பாடியிருப்பார்கள்.

நெய்தல்!

நெய்தல் நிலத்தில் வாழ்ந்த தமிழர்கள், தமிழர்களின் கலைப்படைப்புகளை உலகெங்கிலும் எடுத்துச் சென்றவர்கள். இன்றோ அந்த கடற்கரையோர தமிழர்கள் அனைவராலும் கைவிடப்பட்டுள்ளனர். கடலாடச் சென்றால் அங்கே அவர்கள் உயிர்குடிக்கும் தாகத்துடன் நேச(!)நாட்டின் ராணுவம் ஆயுதத்தோடு நிற்கிறது.

கடற்கரைப் பகுதிகளோ நவீன இறால் வளர்ப்பு போன்ற சூழலை மாசுபடுத்தும் செயற்பாடுகளால் நஞ்சாகி உள்ளன.

கடற்கரையிலிருந்து இந்த மக்களை துரத்திவிட்டு அங்கே தொழிற்சாலைகளையும் கேளிக்கை விடுதிகளையும் கட்ட உள்நாட்டு அரசுகள் விரதம் பூண்டுள்ளன. கரையிலும், கடலிலும் வாழும் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது திரைகடலோடி திரவியம் தேட காரணாயிருந்த இனம்!

பாலை!!

தமிழ்நாட்டில் பாலை நிலமென்று நிரந்தமான நிலப்பரப்பு இல்லை என்பதை வரலாறு. குறிஞ்சியோ, முல்லையோ திரிந்தால்தான் பாலையாக மாறும். அதுவும் தற்காலிகமான நிகழ்வுதான்!

ஆனால் இன்றோ உலகமயமாக்கலின் இயக்கத்தாலும், உள்நாட்டு ஆட்சியாளர்களின் துரோகத்தாலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய அனைத்துப்பகுதிகளுமே பாலையாகிக் கொண்டிருக்கின்றன.

நிலங்கள் பாலையானால் மக்களின் மனம் என்ன ஆகும்?

பாலை நிலத்திற்குரிய களவு, கொள்ளை, வழிப்பறி, கொலை ஆகியவைதான் தமிழனின் எதிர்காலமா...?

---


தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் இலக்கிய பேரார்வம் அனைவரும் அறிந்ததே! ஆனால் அவரது ஆட்சியிலும் சூழலை காக்கும் கடமைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவரது ஆட்சிக்காலத்தில் இயற்கையை சூறையாடும் வேலைகள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது அவர் கட்சி சார்ந்த அமைச்சர்களால் இந்தியா முழுமையும் நடந்துள்ளதாக தெரிகிறது. 

சூழலை பாதுகாக்க வேண்டிய நீதிமன்றத்திற்கும் ஏரியை தூர்த்து கட்டிடம்!
 
தனக்குப் பிறகு தனது வாரிசுகளும் தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே முதல் அமைச்சர் கருணாநிதியின் விருப்பம். ஒரு ஆட்சி நிலையாக நடக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் குடிமக்கள் அரசுக்கு வரி செலுத்தும் அளவுக்கு வளமாக இருக்க வேண்டும்.

அனைத்து தொழில் சார்ந்த இயற்கை வளங்களையும் பாலையாக்கி, மக்களை எந்தத் தொழிலும் செய்ய வாய்ப்பில்லாத நிலையில் அவர்களை திருடர்களாக, வழிப்பறிக்காரர்களாக, கொலைகாரர்களாக, கொள்ளைக்காரர்களாக ஆக்கிவிட்டால் அம்மக்கள் எப்படி வரி செலுத்துவார்கள்? ஆட்சி எப்படி நடக்கும்?

எனவே தமிழ் மக்களின் நலனுக்காக அல்லாவிட்டாலும், உங்கள் வாரிசுகளின் நலன்களுக்காக மட்டுமாவது தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலப்பகுதிகளை மேலும் பாலையாக்காமல் விட்டு வையுங்கள் முதல் அமைச்சர் அவர்களே!

6 கருத்துகள்:

sivakumar சொன்னது…

சுற்றுச்சூழல் அழிவு குறித்து மிக எளிதான விளக்கம். தலைவரின் இலக்கிய தாகத்துடன் பொருத்தி எழுதியிருப்பது சிறப்பு. அவர் அகில இந்திய முதலாளியாகி விட்டவர், இனியெப்படி இயற்கைக்கெல்லாம் கவலைப்படுவது ? இனம் அழியும்போதே கவலைப் படாதவர் வனம் அழியும்போதா கவலை கொள்ளப்போகிறார்? இளைஞன் படம் வெளியாவதற்கு ஏதேனும் தடையிருந்தால் மட்டும் தலைவரிடம் சொல்லுங்கள்.
//கருணாநிதியின் இலக்கிய பேரார்வம் அனைவரும் அறிந்ததே!// அதனால் யாருக்கேனும் ஏதாவது நன்மையுண்டா பாராட்டிப் பரிசில் பெறும் கவிஞரகள் தவிர்த்து.
//அந்நாட்டின் குடிமக்கள் அரசுக்கு வரி செலுத்தும் அளவுக்கு வளமாக இருக்க வேண்டும்.// அவரது மகனிடம் தேர்தல் காலங்களில் வீடுவீடாகச் சென்று பணத்தை அள்ளி வீசும் அள்விற்கு இருக்கிறதே அது போதாதா?

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்பதில் பெருமைப்பட்டுக்கொள்ளும் கழகம் இயற்கையழித்து நகரமயமாக்கி தமிழ்நாட்டை நரகமாக்குவதிலும் முன்னணியில் இருக்கிறது என்பதிலும் பெருமை கொள்ளலாம். தமிழ்நாடு பாலையான பின்பு ஏதாவது மரம் நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்து ஐந்திணையைக் காத்த ஐந்தமிழறிஞர் என்று பாராட்டு விழாவை நடத்தி விட்டால் போச்சு!

Unknown சொன்னது…

எனவே தமிழ் மக்களின் நலனுக்காக அல்லாவிட்டாலும், உங்கள் வாரிசுகளின் நலன்களுக்காக மட்டுமாவது தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலப்பகுதிகளை மேலும் பாலையாக்காமல் விட்டு வையுங்கள் முதல் அமைச்சர் அவர்களே!............அய்யா.. நீங்கள் நட்சத்திர எழுத்தாளராக தேர்ந்தெடுக்கபட்டதில்... உண்மையின் சில கதவுகள் திறக்கபடக்கூடும் என்பது எனக்கு முன்பே தெரியும்...அவர், மக்கள் இருக்கவேகூடாது.. அவர்கள் எல்லாம் செத்தொழியட்டும் என்றுதான் நிணைப்பார். தன்குடும்ப நலனே பிரதானம் என்று நிணைக்கும் ஒரு தலைவர் மக்களை காப்பற்றுவார் என்று நிணைப்பது அபத்தத்தில் தான் முடியும் உ.ம்.தனி ஈழ படுகொலைகள். நம இயற்கை வளங்களை நாசம் செய்யும் சக்திகள், நம் மொழியையும் மக்களையும் கொல்லும் சக்திகளே.

சண்முககுமார் சொன்னது…

அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

mariathasan சொன்னது…

இனம் அழியும்போதே கவலைப் படாதவர் வனம் அழியும்போதா கவலை கொள்ளப்போகிறார்?
nanri தமிழ் வினை

பெயரில்லா சொன்னது…

மனித நேயத்தை அழித்து சாதி வளர்த்த பகுத்தறிவும்,சமூகத்தை கெடுத்த,இயற்கையை கெடுத்த பகுத்தறிவும் எங்கள் இயக்கத்திற்கு உண்டு தம்பி.

பெயரில்லா சொன்னது…

குறிஞ்சி நிலம் மொட்டையடிக்கப்பட்டு, மக்கள் தொகைப் பெருகி குப்பையாக காட்சித் தரும் ....

முல்லை நிலம் என்றெல்லாம் ஒன்னியும் இப்போது இல்லை.. இருப்பவை எல்லாம் குப்பைகள் கொட்டும் பள்ளிகரணைகளாகவும், எஞ்சினியரிங்க் கல்லூரிகளாகவும், பல்கலைக் கழகங்களாகவும் மாறுகின்றன...

மருதம் நிலத்தில் எலிகள் தான் ஓடுகின்றன, பாசனம் செய்ய குளம் மறைந்துவிட்டது, கால்வாய் எல்லாம் தூர்வாறவில்லை, வாறினாலும் காவிரி, வைகை எல்லாம் வற்றித் தானே இருக்கு ... அணைகள் கட்ட நாதியில்லை...

நெய்தல் என்றெல்லாம் ஒன்னியும் இல்லை, சுனாமி பாதி, அரசியல் பினாமி பாதினு கொள்ளையடிக்குது, மீனவரை விரட்டி விட்டு ரிசார்ட், ஐடிக் கம்பெனி, காலேஜ், அந்தக் கம்பெனி இந்த கம்பெனி, ஐயருங்க கூட வச்சிருக்காங்க இறால் கம்பெனி... மிஞ்சுர இடமெல்லாம் பீச்சாகுது...

பாலை -நல்ல எதிர்காலம் உண்டு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எல்லாம் பாலையாக மாறும். அங்கு வசித்தவர்கள் எல்லாரும் வழிப்பறி செய்து தான் பிழைக்க வேண்டிய நிலை வரலாம் .. வழிப்பறி பொருளாக இருக்கப் போவது உணவும், தண்ணீரும்.. ஆனால் அனைவருக்கும் ஒரு இலவச டிவி, மிக்சி, க்ரைண்டர், லேப்டோப் எல்லாம் கிடைச்சிடும்....

கருத்துரையிடுக