02 ஜனவரி, 2011

ஜனநாயகத்தின் நான்காவது தூண் – சரிகிறதா?

மக்களாட்சி நடைமுறையின் மூன்று தூண்களான நாடாளுமன்றம் சட்டமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவை எப்படி இயங்குகின்றன? என்பது சராசரி இந்தியனுக்கு வெளிப்படையாகத் தெரியும். ஆனால் நான்காவது தூண் என்று கூறப்படும் ஊடகத்துறை எவ்வாறு இயங்குகிறது? என்பது சாமானியர்களின் கண்களுக்கு புலப்படுவதில்லை.

மக்களின் நம்பிக்கைகளையும், கருத்துகளையும் உளவியல் ரீதியாக உருவாக்கும் சக்தி ஊடகங்களுக்கு உள்ளது. உலகில் நடைபெற்ற எந்த அரசியல் மாற்றத்திலும் ஊடகங்களின் பங்கும் உரிய அளவில் இருக்கும்.

இந்திய சுதந்திரப்போரின்போது இந்தியாவுக்கான ஊடகங்கள் உருவாகின என்று சொல்லலாம். தமிழ்நாட்டிலும் ஈவெரா பெரியாரின் வரவையடுத்து ஊடகங்கள் முன்னின்று ஒரு கலாசார, பண்பாட்டு, மொழி்ப்புரட்சியை உருவாக்கின.

அந்தச் சூழ்நிலையில்தான் பாவேந்தர் பாரதிதாசன் ஊடகம் குறித்து,

காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீ தான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணில்
பாய்ந்திடும் எழுச்சி நீ தான்!
ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில்பிறந்த பத்திரிகைப் பெண்ணே

...என்று பாடினார்.

*****


பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண் தற்போதைய சூழலில், மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் அறிவை வளர்க்கிறாளா? அல்லது அந்த அறிவையும் அழிக்கிறாளா? என்ற கேள்வி கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

இந்நிலைக்கு ஊடக நிறுவனங்கள், செய்தியாளர்கள், செய்தியாளர் அமைப்புகள், வாசகர்கள் ஆகிய அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

ஊடக நிறுவனங்கள்

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் இந்திய ஊடகங்கள் அனைத்தும் வணிக நிறுவனங்களாயின. வணிக நிறுவனங்களுக்கே உரிய லாபநோக்குடன் அவை செயல்படத் தொடங்கின. எனவே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது போன்ற அறம் சார்ந்த கோட்பாடுகள் மறைந்து மக்களை எப்படியாவது கவர்ந்து விற்பனையை பெருக்கி லாபம் ஈட்ட வேண்டும் என்ற போக்கு ஏற்பட்டது. அப்போதும் சில பத்திரிகை அதிபர்கள் லாபத்தோடு, தங்கள் இனம் சார்ந்த நுண்ணரசியலுக்கும் இந்த பத்திரிகைகளை பயன்படுத்திக் கொண்டனர். பெரியார் மண் என்று கூறிக்கொள்ளும் தமிழ்நாட்டில் இந்தப்போக்கு சற்று குறைவு என்றாலும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் அரசியல் கட்சிகளே ஊடகங்களையும் ஆக்கிரமித்து மக்களுக்கு நடுநிலை செய்திகளே கிடைப்பதில்லை என்ற சூழல் நிலவுகிறது. நடுநிலை செய்திகளுக்கே பஞ்சம் என்றால் நாட்டு நடப்பு குறித்த நடுநிலையான விமர்சனங்களுக்கு இன்றைய ஊடகங்களில் இடமே இல்லை என்றும் சொல்லலாம். அனைத்து ஊடகங்களும் கண்களுக்கு தெரியாத சிலந்தி வலைகளில் மாட்டிக் கொண்டுள்ளன. அவை அரசியல் வலையாகவோ, வணிக வலையாகவோ, அல்லது வேறு வலையாகவோ இருக்கலாம். எனவே இந்த ஊடகங்களில் பணியாற்றும் மனசாட்சியும், செயல்திறனும் வாய்ந்த செய்தியாளர்கள்கூட ஒரு அம்சத்தை அலசும்போது, தாங்கள் சார்ந்த ஊடக நிறுவனத்தை அந்த விமர்சனம் எவ்வாறு பாதிக்கும் என்பதை கணித்துவிட்டே எழுத வேண்டிய நிலை உள்ளது.

பெரும்பாலான வணிக ஊடகங்கள் சுயமாக சிந்திக்கும் திறன்பெற்ற செய்தியாளர்களை பணிக்கு அமர்த்த விரும்புவதில்லை. தாம் சொல்லும் வேலையை செவ்வனே செய்யக்கூடிய திறன் பெற்றவர்களை மட்டுமே ஊடக நிறுவனங்கள் விரும்புகின்றன. எனவே சிந்திக்கத் தெரிந்தவர்கள்கூட ஒன்றும் தெரியாதவர்கள்போல நடிக்கும் சூழல் நிலவுகிறது. காலப்போக்கில் அவர்கள் சிந்தனைத்திறனும் மறைவது இயல்பானதே!

செய்தியாளர்கள்

செய்தியாளர்களை இருவகைகளாக பிரிக்கலாம். ஊடகத்துறையின் மகத்துவத்தை உணர்ந்து மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்று வருவது ஒரு வகை. ஊடகவியல் சார்ந்த படிப்புகளை படித்துவிட்டோ, அல்லது வேறு வகையிலோ ஊடகத்தை பிழைப்புக்கான ஒருவழி என நினைத்து இந்தத் துறையில் நுழைவது மற்றொருவகை.

முதல் வகையினருக்கு வாழ்க்கை சிறிது கடினமாகவே இருக்கும். ஏனெனில் அவர்கள் உருவாக்கும் செய்தியின் மறுபக்கம் என்ன என்பது அவர்களுக்கு தெரியும். உண்மையின் ஒரு பக்கத்தை மட்டுமே மக்களுக்கு கொடுக்கிறோம் என்ற குற்ற உணர்வுக்கு அவர்கள் ஆளாக நேரிடலாம். ஆனால் அதற்கு மாற்று வழியற்ற சூழலில், காலப்போக்கில் அந்த குற்ற உணர்வு அவர்களுக்கு மரத்துவிடும்.

இரண்டாம் வகையினருக்கோ இதுபோன்ற சிரமங்கள் இருக்காது. மேலும் ஊடகத்துறைக்கு மக்களிடம் இருக்கும் ஒரு போலித்தனமான, அர்த்தமற்ற மரியாதை இவர்களுக்கு போதையைத் தரும். இந்த போதையில் இவர்கள் சமூகத்தை கற்க தவறுவதும் இயல்பாக நடைபெறுகிறது. தொழில் நிமித்தமான அறிமுகங்கள் அதிகரிக்கும் நிலையில், அந்த அறிமுகத்தின் மூலம் சொந்த காரியங்களை சாதித்துக் கொள்ளும் கலையை இவர்கள் எளிதில் கற்றுக்கொள்வர். இந்த நிலையை எய்திய ஒரு செய்தியாளரிடம் எந்தவிதமான சமூக பொறுப்பையும் எதிர்பார்க்கமுடியாது.

ஆனால் இவர்கள் இவ்வாறு மாறுவதற்கு இந்த செய்தியாளர்கள் மட்டுமே காரணம் என்றும் சொல்லமுடியாது. மிகக்குறைந்த ஊதியத்தை வழங்கும் ஊடக நிர்வாகம், இதை கண்டும் காணாமல் இருக்கும் அரசு ஆகியவையும் இதுபோன்ற செய்தியாளர்கள் உருவாக முக்கிய காரணமாக இருக்கின்றன.

செய்தியாளர் அமைப்புகள்

செய்தியாளர்களுக்கு பாதுகாப்பும், பயிற்சியும் கொடுப்பது, அவர்களுக்கு சமூகம் சார்ந்த கல்வி அளிப்பது, ஊடகத்தை செம்மையாக பயன்படுத்தி சமூக மேம்பாட்டுக்கு உதவி செய்வது போன்றவற்றில் செய்தியாளர் அமைப்புகள் ஈடுபடவேண்டும்.

ஆனால் செய்தியாளர் அமைப்புகளின் செயல்பாடுகளோ மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவே இருக்கின்றன. பத்திரிகையாளர் சங்கத்தை பிழைப்பதற்கான வழியாக நடத்துவது: சரியான கொள்கைகளோ, பார்வைகளோ இல்லாமல் தனிநபர் கருத்து சார்ந்து அமைப்புகளை நடத்துவது: தனிநபர் ஈகோ மோதல்களால் அமைப்புகளை முடக்குவது, பிளப்பது போன்ற நடவடிக்கைகளே அதிக அளவில் நடைபெறுகின்றன.

இதையெல்லாம் மீறி யாராவது முறையான அமைப்புகளை நடத்தினால் அதை ஊடக நிர்வாகங்கள் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது சுவாரசியமான கற்பனையாக அமையும்.

வாசகர்கள்

ஊடக வாசகர்களின் மனநிலை என்பது சராசரி வாக்காளரின் மனநிலையே! நாட்டில் நடப்பவை தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், தம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்ற முன்முடிவோடு ஒருவிதமான மோனநிலையில் ஆழ்ந்துவிடுவது.

ஊடகங்களில் நல்ல அம்சங்கள் வரும்போது பாராட்டுவதும் கிடையாது. தீய அம்சங்கள் வரும்போது கண்டிப்பதும் கிடையாது. (விதிவிலக்குகள் தவிர!)

*****

மரபு சார்ந்த இந்த ஊடகத்திற்கு வெளியே மரபு சாராத புதிய ஊடகங்களாக இணையங்கள் செயல்படுகின்றன. மரபு சார்ந்த அச்சு ஊடகத்திற்கோ, காட்சி ஊடகத்திற்கோ தேவையான முதலீடுகள் தேவையில்லாததால் நவீன ஊடகங்களில் மாற்று முயற்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் இந்த நவீன இணைய ஊடகத்திற்கான வாசகப்பரப்பு மிகவும் குறைவு. மேலும் இந்த வாசகர்களும் மரபு சார்ந்த ஊடகங்கள் உருவாக்கிய வாசகத்தன்மையை கொண்டவர்கள். எனவே மாற்று அம்சங்கள் மற்றும் பார்வைகள் இங்கே கவனம் பெறுவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன.

இந்த இணையப் பெருவெளியில் ஒரு மாற்றுக் கருத்தை முன் வைத்து அதை பலரும் கவனிக்கச் செய்வதற்கே பெரும் முயற்சி தேவைப்படுகிறது. அந்த முயற்சியில் ஆள்பலம், பணபலம் ஆகிய அனைத்தும் இடம் பெறுகின்றன.

*****


இந்நிலையை மாற்றுவதில் மனசாட்சி உள்ள பத்திரிகையாளர்களும், சமூகப் பொறுப்பு உள்ள வாசகர்களும் இணைந்து செயல்பட்டால் வெற்றி காணமுடியும்.

ஊடகத்தில் வெளியாகும் அனைத்து செய்திகளுக்கும் பின்னால் இருக்கும் சொல்லப்படாத செய்திகளை மக்கள்முன் வைப்பதற்கு நவீன ஊடக வடிவங்களை மனசாட்சி உள்ள செய்தியாளர்கள் பயன்படுத்த வேண்டும். இதை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதில் சமூகப்பொறுப்புமிக்க வாசகர்கள் ஈடுபட வேண்டும்.

மேலும் குடிமக்கள் இதழியல் என்ற கருத்து பரவலாகி வரும் நேரம் இது! இதனை குடிமக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தும்வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

வணிகப்பத்திரிகைகளில் நல்ல அம்சங்கள் வெளியிடப்பட்டால் அதைப் பாராட்டவும், தவறான அம்சங்கள் வெளியிடப்பட்டால் அதை கண்டிக்கவும் மீடியா வாட்ச் போன்ற அமைப்புகள் உருவாக வேண்டும். 

தீயதை பார்க்காதே! தீயதை கேட்காதே! தீயதைப் பேசாதே! என்பதெல்லாம ஊடகங்களுக்கு பொருந்தாது. ஊடகங்கள் தீயதை பார்க்க வேண்டும்! தீயதை கேட்க வேண்டும்! தீயவை குறித்து உரக்கப் பேச வேண்டும்!

பின் மக்களோடு இணைந்து தீயவைக்கு எதிராக போராட வேண்டும்!

4 கருத்துகள்:

உண்மைத்தமிழன் சொன்னது…

முன்பு பத்திரிகைகள் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்று நினைத்துதான் உருவாகியிருந்தன. ஆனால் இப்போது சம்பாதிப்பதற்காக உருவாகியுள்ளன. ஏற்கெனவே இருந்தவைகளி்ன மூன்றாம் தலைமுறை வாரிசுகள் தற்போதைக்கு வசூலும் சொத்துக்களுமே முக்கியம் என்று நினைப்பதால் பத்திரிகைகளின் தரம் இன்றைக்கு தாழ்ந்து போயிருக்கிறது..!

தமிழ்மலர் சொன்னது…

// ஊடகத்தில் வெளியாகும் அனைத்து செய்திகளுக்கும் பின்னால் இருக்கும் சொல்லப்படாத செய்திகளை மக்கள்முன் வைப்பதற்கு நவீன ஊடக வடிவங்களை மனசாட்சி உள்ள செய்தியாளர்கள் பயன்படுத்த வேண்டும். இதை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதில் சமூகப்பொறுப்புமிக்க வாசகர்கள் ஈடுபட வேண்டும்.

மேலும் குடிமக்கள் இதழியல் என்ற கருத்து பரவலாகி வரும் நேரம் இது! இதனை குடிமக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தும்வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

வணிகப்பத்திரிகைகளில் நல்ல அம்சங்கள் வெளியிடப்பட்டால் அதைப் பாராட்டவும், தவறான அம்சங்கள் வெளியிடப்பட்டால் அதை கண்டிக்கவும் “மீடியா வாட்ச்” போன்ற அமைப்புகள் உருவாக வேண்டும்.//

அருமை

துடிமன்னன் சொன்னது…

மரபு சார் ஊடகங்களைக்காட்டிலும் இணையத்தில் செயல்படும் ஊடகத்திற்கு என சில வசதிகள் உள்ளன. அது வாசகர் - எழுத்தாளர் , வாசகர் - வாசகர் என்ற மும்முனைக் கருத்துப் பகிர்தல். தொலைக்கட்சியில் பார்த்த நிகழ்ச்சிக்கு / எழுத்துப் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரைக்கு உங்கள் எதிர்வினையை உடனே கொண்டு சேர்க்க முடியாது. அப்படியே கொண்டு சேர்த்தாலும் ஒரு வாசகருக்கும் மற்றொரு வாசகருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் சாத்தியமில்லை. இணையத்தில் கிடைக்கும் சுதந்திரமும், spontaneous - உடனடி எதிவினையாற்றும் வசதியுமே blog கள் பல்கிப் பெருகக் காரணம். எதிர்காலத்தில் இணையம் வழியான ஊடகம், மரபுசார் ஊடகத்தை மீறி மேலெழுந்து வரும் என்பதில் அய்யமில்லை. பணியின் பொருட்டு களத்தில் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் தனித்தனியாக blog எழுதுவது மட்டுமில்லாமல் ஒரு பொதுவான தளத்திலும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால் இது கைகூடும். உங்கள் பணி மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.
துடிமன்ன்ன் (http://odai.blogspot.com மற்றும் http://kelvikal.blogspot.com )

செங்கதிரோன் சொன்னது…

தற்போதைய தமிழ் பத்திரிக்கைகளின் செய்தி வெளியிடும் தரம் மிகவும் ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக இருக்கின்றது. தங்களின் சுய விருப்பு வெறுப்பின் அடிப்படையிலேயே செய்திகளை வெளியிடுகின்றனர்.

கருத்துரையிடுக