தமிழக அரசால் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள தர்மபுரி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் தலித் குடும்பத்தில் பிறந்தவர் மாதேஷ். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்ற அவர் கல்லூரி பேராசிரியர் ஆக விரும்பி தேசிய தகுதிகாண் தேர்வு (National Eligibility Test) தேறியவர். பிறகு சில தனியார் கல்லூரிகளிலும், அரசு கல்லூரிகளிலும் மிகக்குறைந்த ஊதியத்திற்கு பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றினார். அப்போதே எம்.பில்., பிஹெச்.டி போன்ற ஆய்வுப் படிப்புகளையும் முடித்துவிட்டு டாக்டர் பட்டத்தையும் பெற்றார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு ஆணையம் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் பணிக்கான அறிவிப்பும் இருந்தது.
முனைவர் மாதேஷ் மிகுந்த நம்பிக்கையோடு உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தார். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு வந்தது. சென்னையில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சியில் இரண்டு தகுதிகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. விண்ணப்பதாரரின் கல்வித்தகுதிக்கும், அனுபவத்திற்கும் இந்த மதிப்பெண் வழங்கப்பட்டது. முதுநிலைப் பட்டமும் நெட் அல்லது ஸ்லெட் தேறியவர்களுக்கு 5 மதிப்பெண்கள் – முதுநிலைப் பட்டத்தோடு எம்.பில். பட்டமும் தேறி நெட் அல்லது ஸ்லெட் தேறியவர்களுக்கு 6 மதிப்பெண்கள் – முனைவர் பட்டம் (இவர்களுக்கு நெட் அல்லது ஸ்லெட் தேவையில்லை) 9 மதிப்பெண்கள்.
அடுத்து அனுபவத்திற்கான மதிப்பெண். ஒரு ஆண்டிற்கு இரண்டு மதிப்பெண். அதிகபட்சமாக 15 மதிப்பெண். அதாவது ஏழரை ஆண்டுகளுக்கு கீழே அனுபவம் பெற்றவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு மதிப்பெண். ஏழரை ஆண்டுகளுக்கு மேல் எத்தனை ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும் 15 மதிப்பெண்கள்.
நமது நண்பர் மாதேஷ் முனைவர் பட்டம் பெற்ற வகையில் 9 மதிப்பெண்களை பெற்றார். மேலும் 6 ஆண்டுகள் அனுபவத்திற்கு 12 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் அவருக்கு 21 மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு அவருடைய கையொப்பமும் பெறப்பட்டது.
சில மாதங்களில் இப்பணிக்கான நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு பலருக்கும் வந்தது. நண்பர் மாதேஷுக்கு வரவில்லை. அவர் ஆசிரியர் தேர்வாணையத்தை அணுகினார். அப்போது அவரது அனுபவத்திற்காக பெற்ற மதிப்பெண் 12 என்பதற்கு பதிலாக 2 என்று தவறுதலாக பதிவாகி இருந்தது தெரியவந்தது. எனவே அவர் பெற்ற மொத்த மதிப்பெண் 11 என்று ஆசிரியர் தேர்வாணைய கோப்பில் இருந்தது. அவருக்கு தேவையான கட்-ஆஃப் மதிப்பெண்:20. அவர் உண்மையில் பெற்றிருந்த மதிப்பெண்: 21. எனவே நேர்முகத்தேர்வுக்கு அவருக்கு அழைப்பு வந்திருக்க வேண்டும். ஆசிரியர் தேர்வாணைய எழுத்தர்கள் கவனக்குறைவாக அவரது மொத்த மதிப்பெண்ணில் 10 மதிப்பெண்ணை குறைத்துவிட்டதால் அவருக்கு நேர்முகத்தேர்விற்கான அழைப்பு வரவில்லை.
இதுகுறித்து முறையிடுவதற்காக ஆசிரியர் தேர்வாணையத் தலைவரை நேரடியாக சந்தித்து முறையிட்டார். அப்போது, “வெளியேப் போ!” என்ற பதிலே கிடைத்தது. மனம் வெறுத்த அவர், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையின்போது அரசுத்தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், மனுதாரர் மாதேஷ் மொத்தமாக 51 மாதங்கள் மட்டுமே பணியாற்றியுள்ளார். எனவே அவருக்கு 4 வருடங்களுக்கு 8 மதிப்பெண்களும், மீதமுள்ள 3 மாதங்களுக்கு 1 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டுள்ளது. முனைவர் பட்டத்திற்குரிய 9 மதிப்பெண்ணையும் கூட்டினால் 18 (9+9) மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார். அவருக்கு தேவையான கட்-ஆஃப் மதிப்பெண் 20. அதைப்பெற மனுதாரர் தவறிவிட்டதால் அவருக்கு நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்படவில்லை எனக்கூறினார்.
ஆசிரியராக பணியாற்றிய அனுபவத்திற்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண் என்று ஆசிரியர் தேர்வாணையம் இந்த ஆண்டில் வெளியிட்ட விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒரு ஆண்டு என்பது எவ்வளவு காலம் என்பது விளக்கப்படவில்லை. ஒரு ஆண்டில் 12 மாதமும் பணியாற்றும் எந்த ஒரு கல்வி நிறுவனமும் உலகிலேயே இல்லை.
மேலும் இதே தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு ஆணையம் கடந்த 2008ம் ஆண்டில் கல்லூரி ஆசிரியர் பணியிட நிரப்பலுக்காக வெளியிட்ட விளக்கக் குறிப்பில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவத்திற்கான மதிப்பெண்ணை எவ்வாறு கணக்கிட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, “ஒரு கல்வி ஆண்டில் 3 முதல் 6 மாதங்கள் வரை பணியாற்றிய ஒருவர் ஒரு மதிப்பெண் பெறமுடியும். 6 மாதங்களுக்கு மேல் பணியாற்றிய ஒருவர் இரண்டு மதிப்பெண்களை பெற முடியும்”
நம்முடைய மனுதாரர் ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் 8 முதல் 9 மாதங்கள் வரை பணியாற்றியுள்ளார். கல்லூரியில் தேர்வு நடக்கும் காலங்களிலும், விடுமுறைக்காலங்களிலும் அவர் கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவ்வாறுதான் அனைத்து பகுதி நேர விரிவுரையாளர்களும் நடத்தப்படுகின்றனர்.
இவை அனைத்தும் நீதிமன்றத்தில் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. எனினும் இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்ட விளக்கக்குறிப்பில் மதிப்பெண் கணக்கிடப்படும் முறை குறிப்பிடவில்லையே என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் பொறுப்பு ஏற்க முடியாது! என்று மனுதாரர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மேலும் எவ்வாறு மதிப்பெண் அளிக்கப்படுகிறது என்பதை வெளிப்படையாக கூறவேண்டிய கடமை ஆசிரியர் தேர்வு ஆணையத்திற்கே உள்ளது என்றும் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. கூடுதலாக மனுதாரருடன் இதேபோல பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றிய மற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்பட்டு அவர்களும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர் என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வளவு செய்தும் திருப்தி அடையாத நீதிபதி, மனுதாரரின் மனுவை கடந்த செவ்வாய் அன்று (08-02-2010) தள்ளுபடி செய்தார். உடனே மனுதாரர் சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும், எனவே தீர்ப்பின் நகலை அன்றே வழங்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவு இடவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. இதையும் நீதிபதி ஏற்க மறுத்தார். வெள்ளிக்கிழமை (11-02-2010) அன்று தீர்ப்பு நகல் வழங்கப்படும் என்று நீதிபதி கூறினார். ஆனால் வெள்ளியன்றும் தீர்ப்பின் நகல் தயாராகவில்லை.
---
தமிழ்நாடு அரசால் மிகவும் பின் தங்கிய பகுதி என்று அறிவிக்கப்பட்ட மாவட்டத்தில், ஒரு தலித் குடும்பத்தில் பிறந்து அரும்பாடுபட்டு படித்து முனைவர் பட்டம் பெற்ற ஒரு இளைஞருக்கு அரசும், நீதிமன்றமும் வழங்கும் பரிசு இதுதான்.
முனைவர் பட்டம் வென்ற அந்த இளைஞரின் எதிர்காலம், ஒரு அரசு அலுவலக எழுத்தரின் சிறுதவறால் இருண்டு போகிறது. அதை நிவர்த்திக்கக் கோரி உயர் அதிகாரியிடம் சென்றால் அவர், “வெளியே போ!” என்று விரட்டுகிறார்.
நீதித்துறையாவது நீதியைத்தரும் என்று நீதிமன்றத்தை அணுகினால், நீதிபதியும் ஏமாற்றுகிறார். மேல் முறையீடு செய்வதற்கும் உரிய காலத்தில் வாய்ப்பளிக்காமல் காலம் தாழ்த்தப்படுகிறது. இதற்கு இடையே அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும் வாய்ப்பும் உள்ளது. அவ்வாறு நடந்து நண்பர் மாதேஷுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் அதற்கான பொறுப்பை ஏற்கப்போவது அரசு அதிகாரிகளா? அல்லது நீதிபதியா? யாரிடமும் விடை கிடைக்காது! தீர்வும் கிடைக்காது!!
தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு ஆணையத்தின் மூலம் உதவிப் பேராசிரியர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதில் ஏராளமான குழப்பங்களும், முறைகேடுகளும் நடந்துள்ளதாக தெரிகிறது. இதில் நண்பர் மாதேஷின் அனுபவம் ஒரு உதாரணம்தான்!
நண்பர் மாதேஷின் பிரசினைக்கு உங்களிடம் தீர்வு எதுவும் உள்ளதா, நண்பர்களே?