09 பிப்ரவரி, 2011

கடலில் கொல்லப்படும் தமிழக மீனவர்களும், காற்றில் கரையும் இந்திய இறையாண்மையும்!

இந்தியாவில் அரசுக்கெதிரான நியாயமான விமர்சனங்களை முன்வைப்பவர்களை முடக்க அரசு அமைப்புகள் கையில் எடுக்கும்  ஆயுதம், “இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்தினார்!”, “தேசப்பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தினார்!” என்ற குற்றச்சாட்டு!

ஆங்கிலேயருக்கு அடிமையாக இந்தியா இருந்த காலத்தில், “யங் இந்தியா” என்ற பத்திரிகையில் பிரிட்டிஷ் அரசை விமர்சித்து எழுதிய கட்டுரைக்காக 1922ம் மார்ச் 23ம் தேதி ஒருவர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர், “உங்கள் சட்டத்தின்படி இது குற்றமாக இருக்கலாம்; ஆனால் மக்களுக்கு எதிராக செயல்படும் அரசை விமர்சிப்பது ஒரு குடிமகனின் மிக உயர்ந்த கடமையாக தோன்றுகிறது!” என்று பதில் அளித்தார். அதைத் தொடர்ந்து அவர் சிறையும் சென்றார். இந்திய தேசத்தின் பிதா என்று குறிப்பிடப்படும் மோகன்தாஸ் கரம் சந்த் காந்திதான் அந்த நபர்.

வெள்ளையர்கள் ஆட்சியில் அடிமையாக இருந்த இந்தியர்களை அடக்கி ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட அந்த கருப்புச்சட்டம் இன்றும் நீக்கப்படவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் வெள்ளைக்காரர்களை விட மிகக்கொடூரமாக அந்த சட்டத்தை பயன்படுத்துவதில் இந்திய ஆட்சியாளர்கள் தேர்ந்து விட்டனர். இந்த சட்டத்திற்கு அண்மையில் பலியானவர், மக்கள் மருத்துவர் பினாயக் சென்!

இந்திய அரசியல் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள மக்கள் நலக்கொள்கைகளுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் செயல்படுவத்துவதை அம்பலப்படுத்திய அவருக்கு மத்திய, மாநில அரசுகள் கொடுத்த விருது: இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவித்ததாக குற்றச்சாட்டு மற்றும் ஆயுள் தண்டனை!

இவ்வாறு அரசின் இறையாண்மையைக் குறித்து கவலை கொள்ளும் ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் மனித உரிமைகள் குறித்த அக்கறையோ, பொறுப்புணர்வோ இருக்கிறதா என்று பார்த்தால் வேதனையே மிஞ்சுகிறது.

இறையாண்மை கொண்டுள்ளதாக கூறிக்கொள்ளும் ஒரு நாட்டின் குடிமக்களை அண்டை நாட்டு ராணுவம் தொடர்ந்து படுகொலை செய்தாலும் அது குறித்து மயிரளவும் சிந்திக்காமல் செயலற்று இருக்கும் ஒரு அரசு, தன்னை விமரிசிப்போரை மட்டும் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டுவது குரூரமான நகைச்சுவையாகும்.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் அருகே கடல் பகுதியில் இந்த கட்டுரை எழுதப்படும் தினம் வரை கொல்லப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை: 539. இலங்கையின் இனவெறி சிங்கள ராணுவத்தால் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் 1975ம் ஆண்டு முதலே நடந்து வருகின்றன. 1983ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டுவரை 378 தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் உரிமைச் சட்டத்தின்படி கேட்டபோது தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தை சேர்ந்த மீனவர் நடுக்கடலில் கொல்லப்பட்டவுடன், கடலோர மாவட்டங்களிலுள்ள காவல் நிலையங்கள் முதல் தகவல் அறிக்கையைப்  (எஃப்.அய்.ஆர்.) பதிவு செய்கின்றன. இந்திய ஆயுதச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 307வது பிரிவின் கீழ் இலங்கை கப்பல் படையினருக்கு எதிராகவே பதிவு செய்யப்படுகின்றன. சம்பவம் நடந்த இடமும், கச்சத் தீவு அருகே உள்ள இந்திய கடல் பகுதி என்றே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படுகிறது.
.
இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளி, சம்பவம் நடந்த இடம் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த அடுத்த சில மாதங்களிலேயே குற்றம் சாட்டப்பட்டவரை கண்டறிய முடியவில்லை என்று கூறி “நடவடிக்கை கைவிடப்படுகிறது”  என்ற குறிப்புடன் வழக்குகள் முடிக்கப்பட்டுவிடுகின்றன.

நடுக்கடலில் நடக்கும் படுகொலைகள் குறித்து புகார் அளித்தவருக்கே தகவல் அளிக்காமல் வழக்கை முடிக்க அனுமதிப்பது நீதித்துறை நடத்தும் படுகொலை.

இது குறித்து கேள்வி எழுப்பினால் மத்திய, மாநில அரசுகளை சேர்ந்தவர்கள் “தமிழக மீனவர்கள் பேராசை காரணமாக இந்திய கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன் பிடிக்கின்றனர்” என்று கூறுகின்றனர்.

தமிழக மீனவர்கள் இந்திய எல்லையை தாண்டிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளே முக்கிய இடம் வகிக்கின்றன. இந்திய கடல் எல்லைப்பகுதியில் சர்ச்சைக்குரிய சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட தொழிற்திட்டங்களால் ஏற்படும் சூழல் சீரழிவுகளால் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மீன் வளம் குறைகிறது. மேலும் இப்பகுதியில் அதிக முதலீடு பிடிக்கக்கூடிய மீன்பிடி கப்பல்களை அனுமதிப்பதால்  கட்டுமரத்திலும், சிறுவிசைப்படகுகளிலும் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மீன் கிடைக்காமல் அவர்கள் பிழைப்புக்காக இந்திய கடல் எல்லையை தாண்டும் நிர்பந்தம் ஏற்படுகிறது.

அவ்வாறே தமிழ்நாட்டு மீனவர்கள் நாட்டின் கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன் பிடித்தாலும்கூட  அந்த மீனவர்களை சுட்டுக்கொல்லலாம் என்று இலங்கை உட்பட எந்த ஒரு நாட்டின் சட்டமும் சொல்லவில்லை. சர்வதேச சட்டமும் அதை அங்கீகரிக்கவில்லை என்பதை மத்திய மாநில அரசு சார்ந்தவர்கள் கூறுவதில்லை.
.
இந்தப் பிரசினை குறித்து  இந்திய தேசிய பாதுகாப்புக் குழுவின் முன்னாள் ஆலோசகரான  திரு. சூரிய நாராயணன் , “உலகம் முழுதும் மீனவர்கள் கடல் எல்லைகள் பற்றி கவலைப்படுவதில்லை. இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பரப்புக்குள்ளும் மாலத்தீவு கடல்பரப்புக்குள்ளும் மீன் பிடிக்கிறார்கள். இந்திய மீனவர்கள் இலங்கை, பாகிஸ்தான், கடல்பரப்புக்குள் நுழைகிறார்கள். வங்கதேச மீனவர்கள் மியான்மார் கடல் பரப்புக்குள் நுழைகிறார்கள். சர்வதேச கடல் எல்லைகளுக்கான அய்.நா. சட்டத்தின் 73 மற்றும் 145 வது பிரிவுகள் இப்படி எல்லை தாண்டுவதை சிவில் குற்றம் என்றே கூறுகின்றன. கிரிமினல் குற்றமாகக் கூறவில்லை” என்று தெளிவாக கூறுகிறார்.
.
இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தானை எதிரி நாடாகவும், இலங்கையை நட்பு நாடாகவும் கருதுகிறது. எதிரி நாடாக கருதப்படும் பாகிஸ்தானின் கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பதற்காக செல்லும் எந்த மீனவரும் இதுவரை கொல்லப்பட்டதில்லை. ஆனால் நட்பு நாடான இலங்கை ராணுவமோ தமிழ்நாட்டு மீனவர்களை கொன்று குவிக்கிறது.

இந்தப்படுகொலைகள் குறித்து சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேட்ட கேள்வி இதுதான்: “இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்கிறது என்பது உண்மைதான். இதற்காக இலங்கை மீது இந்தியா போர் தொடுக்க முடியுமா?” இந்த கேள்வி மத்திய அரசு வழக்கறிஞரின் கேள்வி மட்டுமல்ல! இந்திய அரசும் இதைத்தான் கேட்கிறது. இதுதான் இன்றைய நிலையில் இந்தியாவின் இறையாண்மை!


இலங்கை போன்ற அண்டை நாடுகளிடமும், அமெரிக்கா போன்ற ஆதிக்க நாடுகளிடமும், உலக வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் போடப்பட்ட அடிமைச் சாசனத்தின்படி பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களிடமும் நிலைநாட்ட முடியாத இந்தியாவின் இறையாண்மையை, மக்கள் உரிமைகளுக்காக போராடும் இந்தியாவின் குடிமக்கள் சிலர் அழிக்கப் பார்க்கிறார்கள் என்று வழக்கு தொடுக்கப்படுகிறது. நீதிமன்றங்களும் அதற்கு துணை போகின்றன.

குடிமக்களை பாதுகாப்பதற்குதான் அரசு என்ற அமைப்பு: அரசு செயல்படுவதை கண்காணிக்கவும், செயல்படாத அரசை செயல்படுமாறு உத்தரவிடவும்தான் நீதிமன்றங்கள்.
.
குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கவியலாத அரசுக்கு இறையாண்மை குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அதேபோல அரசு இயற்றிய சட்டத்தை அந்த அரசே பின்பற்ற மறுப்பதை தட்டிக்கேட்காத நீதித்துறை மக்களின் நம்பிக்கையை இழப்பதும் இயல்பானதே! இத்தகைய நாடுகளை சர்வாதிகார, மக்கள் விரோத நாடு என்றே வரலாறு பதிவு செய்யும்.
.
அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்கவேண்டிய முதன்மை கடமை அரசுக்கே உள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்துகொள்ளும் ஒரு நாடு, மக்கள் மட்டும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
.
“சமூக – பொருளாதார சமத்துவம் தொடர்ந்து மறுக்கப்பட்டால், அதனால் பாதிக்கப்படுபவர்கள் செயலற்று, சும்மா இருந்து விட மாட்டார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்த அரசியல் ஜனநாயக அமைப்பை, இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சுக்குநூறாக தகர்த்து எறிவார்கள்!” என்ற இந்த வாசகம் நக்ஸல்பாரி அமைப்பைச் சேர்ந்த வெளியீடுகளில் இருந்து எடுக்கப்பட்டதல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவராக பணியாற்றிய மேதை பி. ஆர். அம்பேத்கர், இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் கூட்டத்தில் 1949ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி உரையாற்றியபோது இவ்வாறு கூறியுள்ளார்.
.
தங்களது தேவைகளுக்கு மட்டும் அம்பேத்கரை பயன்படுத்திக்கொள்ளும் இன்றைய அரசு அமைப்புகள் அம்பேத்கரின் மேற்கூறிய வாசகத்தை மறந்து விடலாம். ஆனால் இந்த அரசால் வஞ்சிக்கப்படும் மக்கள் அம்பேத்கரையோ, அவரது வாசகங்களையோ மறந்துவிட மாட்டார்கள்.

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

சட்ட நுணுக்கங்களோடு விரிவாகக் கொடுத்ததற்கு நன்றி. மீனவர்களின் அவலம் பற்றிய என் பதிவிலிருந்து இதற்கு சுட்டி கொடுக்கிறேன்... அத்தோடு, ட்வீட்டும் செய்கிறேன். நன்றி.

பெயரில்லா சொன்னது…

அய்யா மீனவர்களின் படுகொலை பற்றி உங்களது கட்டுரையை மிக நீண்டகாலமாக எதிர்பார்த்தேன். காலதாமதமாக எழுதியிருந்தாலும் ஆழமான பொருள் கொண்டு எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. இந்த இந்திய அரசியலமைப்பு தமிழர்களை மூன்றாம் தர பிரஜைகளாகத்தான் நடத்துகிறது. தீவிரமாக போரடலாம் என்றால் தமிழ்நாட்டின் ஓட்டு பொறுக்கி கட்சிகள். நம்மை காட்டி கொடுப்பதில் முதல் ஆளாக இருந்து அவர்கள் தரும் எச்சிலை தின்கிறார்கள். உங்களை பொது நல வழக்கறிஞரே தொடர்ந்து எழுதி இந்தியாவின் சீர்கெட்ட போக்கை அம்பலப்படுத்தவேண்டும்.

Unknown சொன்னது…

இத்தகைய நாடுகளை சர்வாதிகார, மக்கள் விரோத நாடு என்றே வரலாறு பதிவு செய்யும்.---
இனி என்ன பதிவது? ஏற்கனவே விஷயம் புரிந்த, குவாட்டருக்கும் பிரியானிக்கும், பணத்துக்கும் இன்னமும் சோடை போகாத விபசாரம் புரியாத இந்தியர்கள் இதை ஏற்கனவே பதிந்துவிட்டார்கள் நமது கேடுகெட்ட ஒன்றுக்கும் உதவாத ஜன நாயகம் எகிப்து போன்ற புரட்சிகளுக்கும் வழி வகுக்கவில்லை. இது போன்ற நிகழ்வுகளின் போது (மிகப் பெரும் ஊழல்கள், உயிர் நாசம் போன்ற) தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுகளை திரும்பழைக்கும் உரிமை இந்தியனுக்கு இருந்தால்தான் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுகள் கொஞ்சமாவது பயத்துடன் செயல் படும்.

பொன் மாலை பொழுது சொன்னது…

///தங்களது தேவைகளுக்கு மட்டும் அம்பேத்கரை பயன்படுத்திக்கொள்ளும் இன்றைய அரசு அமைப்புகள் அம்பேத்கரின் மேற்கூறிய வாசகத்தை மறந்து விடலாம். ஆனால் இந்த அரசால் வஞ்சிக்கப்படும் மக்கள் அம்பேத்கரையோ, அவரது வாசகங்களையோ மறந்துவிட மாட்டார்கள்.//

இதனை இன்று இன்னமும் உரக்க சொல்ல வேண்டும்.


தங்களின் ஆக்கங்களை என்னுடைய பதிவுகளில் இணைப்பை தர விரும்புகிறேன்.தங்களைபோன்ற சமுதாய சித்தனை உடையவர்கள் இங்கு நிறைய வரவேண்டும் நிறைய எழுத வேண்டும்.பகிர்வுகளுக்கு நன்றி.

கருத்துரையிடுக