18 மே, 2011

கல்பாக்கம் – ஒரு செய்தியாளனின் அனுபவம் (மீள் பதிவு)

திருச்சியில் நாளேடு ஒன்றில் சுறுசுறுப்பான செய்தியாளனாக ஊர்சுற்றி வேலை செய்த அனுபவத்தில், சென்னைக்கு வந்து தொலைக்காட்சி ஒன்றில் பணிக்கு சேர்ந்தால், துணை ஆசிரியராக டெஸ்க்கில் உட்கார வைத்தார்கள்.

ஓடிப்பழகிய கால் நிற்பதற்கு சங்கடப்படவே மூத்த உதவி ஆசிரியர் ஒருவரிடம் புலம்பியதில், கல்பாக்கம் அணு உலையின் ஆபத்துகள் குறித்து ஒரு செய்தி தயாரிக்க முடியுமா? என்று கேட்டார்.
சென்னைக்கு வந்து சில நாட்களே ஆன நிலையில், கல்பாக்கம் எங்கிருக்கிறது என்பதுகூட தெரியாதபோதும், அணுசக்தி மீதும், அதன் தேவை என்று அரசு கூறிய கருத்துகள் மீதும் நான் கொண்டிருந்த சந்தேகம் ஒன்றை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு என் தேடலை தொடங்கினேன்.
இறுதியில் அணுமின் நிலையத்தில் சாதாரண தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றிய ஒருவர் மூலம் சில விஞ்ஞானிகளின் அறிமுகம் கிடைத்தது. அணுசக்தி விவகாரத்தில் உலக அளவில் நடைபெறும் விவகாரங்களை கூறிய அவர்கள், அணு ஆற்றல் என்பது மலிவானதோ, நம்பகமானதோ அல்ல என்று உறுதியாக கூறினார்கள். வேறு நோக்கங்களுக்காகவே அணு ஆற்றல் பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் கூறினர். அந்த விஞ்ஞானிகள் பேசியது எனக்கு முழுமையாக புரியாவிட்டாலும், அணுசக்தி குறித்த என் சந்தேகங்கள் நியாயமானவை என்பது மட்டும் புரிந்தது.
அணுசக்தி குறித்து எனது அறிவின்மையையும், ஆர்வத்தையும் பார்த்து பரிதாபப்பட்ட அந்த விஞ்ஞானிகள், என்னை அப்பகுதியில் மருத்துவத்தை உண்மையாகவே சேவையாக செய்து வந்த மருத்துவர் புகழேந்தியிடம் அறிமுகம் செய்து வைத்தனர். 
மருத்துவர் புகழேந்தி அவருடைய சக்திக்கேற்ற வகையில் எனக்கு அணுசக்தி குறித்த புரிதலை ஏற்படுத்த முயற்சித்தார். அவர் கூறுவதைப் புரிந்துகொள்ள நான் தடுமாறுவதைப் பார்த்து வெறுத்துப்போன மற்றொரு நண்பர், எழுத்தாளர்ஸ்வகோஷ் (தற்போதைய ராசேந்திர சோழன்) எழுதிய அணு சக்தி மர்மம் என்ற எளிமையான தமிழில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான புத்தகத்தை கொடுத்தார். அந்தப் புத்தகம் எனக்கு அணுசக்தி குறித்த புரிதலை ஓரளவு ஏற்படுத்தியது.

இதற்கிடையில் நான் சுமார் 10 முறை கல்பாக்கம் சென்று வந்திருப்பேன். அனைத்தும் எனது ஓய்வு நேரத்திலும், சொந்த செலவிலுமாக.

அப்போது நான் பணிபுரிந்த நிறுவனத்தின் ஆங்கில செய்திப்பிரிவின் தலைவராக இருந்த திரு. ஏ.எஸ். பன்னீர்செல்வம், அணுசக்திக்கு எதிராக பல கட்டுரைகளை அவர் முன்னர் பணியாற்றிய அவுட்லுக் இதழில் எழுதியதை படித்திருந்ததால் அவரிடமும் நேரில் விவாதித்தேன். அவரும் தேவையான விளக்கங்களை கொடுத்தார். பிறகு கல்பாக்கம் அணுமின் நிலையத்தை படம் எடுக்க சிறந்த வழி படகு மூலம் கடலில் சென்று எடுப்பதுதான் என்று வழியைக்கூறிய அவர், ஆனால் நான் பிடிபட்டு அணுசக்தி சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டால் ஆயுளுக்கும் வெளியே வர முடியாது என்றும் எச்சரித்தார்.

அப்போது மாலை நேர சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நான், என் சிலபஸில் இல்லாத அணுசக்தி சட்டத்தை முழுமையாக படித்தேன். அதன் பயனாக தேவையற்ற ரிஸ்க் எடுப்பதில்லை என்று முடிவெடுத்தேன்.

பலரிடமும் பேசிய தகவல்களை ஒரு செய்தியாக கொடுக்க முடியும் என்று நம்பிக்கை வந்த நிலையில் படபிடிப்புக்கு தயாரானேன். எனக்கு அதுவரை படபிடிப்பு விவகாரங்களில் அனுபவம் இல்லை என்பதால் பெண் செய்தியாளர் ஒருவர் எனக்கு உதவி செய்ய முன்வந்தார். ஒரு வழியாக இரு இரவுநேர பணிக்கு இடையேயான ஒரு பகல் நேரத்தில் படபிடிப்புக்கு கிளம்பினோம்.
ில சந்திப்புகளிலேயே நண்பராகிவிட்ட மருத்துவர் புகழேந்தி, கோவை மருத்துவர் ரமேஷையும் கல்பாக்கத்திற்கு வரவழைத்திருந்தார். அவர்கள் இருவரும் வைத்திருந்த லேப்-டாப்பில் அணுசக்தி குறித்த ஏராளமான தகவல்களை வைத்திருந்தனர்.

ஏதோ ஒரு கலர்ஃபுல்லான விழா அல்லது நிகழ்ச்சிக்கு செல்கிறோம் என்று நினைத்து என்னோடு வந்த ஒளிப்பதிவாளர், மக்களின்  (சுவாரசியமற்ற) பிரசினைகளைத்தான் பதிவு செய்யப்போகிறோம் என்று தெரிந்தவுடன் ஒளிப்பதிவு உதவியாளரிடம் கேமராவை ஒப்படைத்துவிட்டு, தம்மை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு தூங்க ஆரம்பித்தார்.

இதற்கிடையில் மருத்துவர்கள் புகழேந்தியும், ரமேஷும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் பாதிக்கக்கூடிய இடங்களை அவர்கள் வைத்திருந்த கம்ப்யூட்டரில் வரைபடமாகவும் காட்டினர். எனக்கு வயிற்றை கலக்கியது. காரணம், நான் பணியாற்றிய அலுவலகம் மற்றும் நான் தங்கியிருந்த திருவல்லிக்கேணி மேன்ஷன் அனைத்தும் அந்த அபாய வளையத்திற்குள் இருந்தது. அந்த தகவல்களையும், வரைபடங்களையும் எங்கள் கேமரா மூலம் படம் பிடித்துக்கொண்டு களப்பணிக்கு கிளம்பினோம்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தை படம் எடுக்க முடியாது என்பதால் அதன் பெயர்ப்பலகையை படம் எடுக்க முடிவு செய்தபோது காவலர் ஒருவர் ஓடிவந்து தடு்த்து விசாரித்தார். விபரம் சொன்னபிறகு உரிய முறையில் அனுமதி பெற்று வந்தால்தான் பெயர் பலகையைக்கூட படம் எடுக்க முடியும் என்று சொன்னார். அணுசக்தி சட்டத்தின் கீழ் சிறைபுகும் உத்தேசம் இல்லாததால் அந்த எண்ணத்தை கைவிட்டு வேறு பகுதிகளை பார்வையிட கிளம்பினோம்.

கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காண்பித்த மருத்துவ நண்பர்கள், அணுமின் உலை அமைந்துள்ள பகுதியிலும் கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பதையும், இதன்மூலம் அணுமின் உலையின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனர்.
அடுத்து மீனவ கிராமத்தில் உள்ள சிலரை பெயர் சொல்லி அழைத்த மருத்துவர் புகழேந்தி, மேலும் சிலரை அழைத்து வருமாறு கூறினார். அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் பெரும்பாலும் 10 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகளாக இருந்தனர். அவர்களுடைய கைகளிலும், கால்களிலும் 6 விரல்கள் இருந்தன. சிலருக்கு இரு விரல்களுக்கு இடையேயான பிளவு மிக அதிகமாகவும், சிலருக்கு இரண்டு அல்லது மூன்று விரல்கள் ஒட்டியும்கூட இருந்தன. அனைவருமே இயல்பாக இருப்பதில் சிரமம் இருப்பதாக கூறினர்.
ஏதாவது ஒரு கையிலோ, காலிலோ ஒரு விரல் மட்டுமே கூடுதலாக இருந்ததை ஏற்கனவே பார்த்திருந்தாலும், இரு கைகளிலும், கால்களிலும் கூடுதலாக ஒவ்வொரு விரல்கள் இருந்ததை பார்த்த எனக்கு இது இயல்பானதல்ல என்பது மட்டும் புரிந்தது.
பிறகு மருத்துவர் புகழேந்தி விளக்கினார். பாலிடாக்டிலி (POLYDACTYLY) என்ற நோய், குழந்தை கருவில் இருக்கும்போது ஏற்படும் சூழ்நிலைக் கோளாறுகளால் ஏற்படுவது என்றும், கதிரியக்க பாதிப்பு காரணமாக கல்பாக்கம் பகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு இந்த நோய் பாதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கதிரியக்க பாதிப்புகளால் ஏற்படும் பல்வேறு நோய்களில் இந்த நோய் மட்டுமே உடனடியாக அடையாளம் காணக்கூடிய நோய் என்றும், இது மட்டுமல்லாமல் புற்றுநோய், ஆண்மைக்குறைவு, கருச்சிதைவு உள்ளிட்ட பல நோய்கள் கதிரியக்க பாதிப்பால் ஏற்படும் என்றும் புகழேந்தி தெரிவித்தார்.

கல்பாக்கம் பகுதியில் மீன்வளம் குறைந்து விட்டதாகவும், அணுமின் நிலையத்திற்கு இடம் கொடுத்த பலருக்கும், அரசுத்தரப்பில் உறுதி அளித்தபடி வேலை வழங்காததால் அவர்களின் வாழ்வே கேள்விக்குறியாக இருப்பதாகவும் அப்பகுதி மீனவ மக்கள் தெரிவித்தனர்.

புற்றுநோய் காரணமாக மரணம் அடையும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஆனால் மரணத்திற்கான காரணம் புற்றுநோய் எனக் குறிப்பிடுவதை தவிர்த்தால் வாரிசுகளுக்கு வேலை உட்பட பல்வேறு உதவிகளை செய்வதால் பல பணியாளர்களின் மரணத்திற்கான உண்மையான காரணம் திட்டமிட்டு திரிக்கப்படுவதாக கல்பாக்கம் அணுமின் நிலைய பணியாளர்கள் தெரிவித்தனர்.
கல்பாக்கம் அருகே கடலில் கலக்கும் பாலாற்றை சுட்டிக்காட்டிய மருத்துவர்கள், பாலாற்று மணலிலும் கதிரியக்க பாதிப்புகள் இருக்கக்கூடும் என்றும், பாலாற்று மணலே சென்னை நகரத்தில் கட்டடம் கட்ட முதன்மையாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறினர். அதனால் என்ன பிரசினை என்ற என் கேள்விக்கு, அந்த கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறி மீண்டும் என் வயிற்றை கலக்கினார்.

அணுமின் உலையில் ஒப்பந்த அடிப்படையில், அருகே உள்ள பகுதிகளில் வசிக்கும் கல்வி அறிவற்ற மக்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதாகவும், அவர்களுக்கு புரியும்விதத்தில் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்காமலே அந்த சாமானியர்களை கதிரியக்கப் பொருட்களை கையாள அணுமின் உலை அனுமதிப்பதாகவும் அங்கு பணியாற்றுபவர்கள் தெரிவித்தனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அம்மக்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னர் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்படுவது நிச்சயம் என்றும், ஆனால் காரணம் தெரியாமலே அந்த மக்கள் இறந்துபோகும் நிலை உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

ஓரளவிற்கு படபிடிப்பை முடித்துக்கொண்ட நான் தேவையான சில பேட்டிகளையும் பதிவு செய்து கொண்டு நண்பர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றேன்.

மாலைவேளையில் திரும்பும்போது சதுரங்கப்பட்டினம் உட்பட பல பகுதிகளில் மின்விளக்குகள் மிகக்குறைந்த வெளிச்சத்துடன் அழுதுவடிந்து கொண்டிருந்தது. விசாரித்தபோது குறைந்த மின் அழுத்தம் காரணமாக டியூப் விளக்குகள் அப்பகுதியில் எரியாது என்றும், மற்ற பல்புகளும் மிகக்குறைவான வெளிச்சத்தையே தரும் என்றும் தெரிய வந்தது.

மின்தேவையை பூர்த்தி செய்வதற்காக இயங்கும் அணுமின் நிலையத்தின் அருகே வசிக்கும் மக்களுக்கே, தேவையான மின்சாரம் வழங்க முடியாத அரசுக் கொள்கைகளை நினைத்து வருந்திக்கொண்டே சென்னை திரும்பினோம்.
அலுவலகத்தில் நான் எடுத்து வந்திருந்த படக்காட்சிகளை பார்த்த தொழில் நுட்ப பணியாளர்கள், மிகவும் வறட்சியான ஒரு செய்தியை கொண்டு வந்திருப்பதாக அதிருப்தி தெரிவித்தனர்.

தனிப்பட்ட நட்பு மூலம் என்னை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்த ஒரு நண்பர் மட்டும் ஆதரவாக பேசி உதவி செய்ய முன் வந்தார். மேலும் கல்பாக்கம் அணுஉலை நிர்வாகத்தின் அனுமதியுடன் ஏற்கெனவே எடுக்கப்பட்டு இருந்த படக்கோப்புகளை (file-shot) தேடித்தந்தும் உதவினார்.

இதற்கிடையில் மீண்டும் திரு. ஏ.எஸ். பன்னீர்செல்வம் அவர்களிடம் ஆலோசித்துவிட்டு செய்திக்கான ஸ்கிரிப்டை எழுதி கொடுத்தேன். பல நாட்கள் ஆகியும் அது குறித்த முடிவு தெரியாத நிலையில், இந்த பணியை என்னிடம் கொடுத்த மூத்த துணை ஆசிரியரிடம் கேட்டபோது, மாநிலத்தில் நம் ஆட்சி நடக்கவில்லை என்றாலும் மத்திய ஆட்சியில் நம் நிறுவன அதிபர்தான் தொழில்துறை அமைச்சராக உள்ளார். எனவே அரசுக் கொள்கைகளை விமர்சிக்கும் விதமாக செய்தி வெளியிட முடியாது. அதே செய்தியை வேறு கோணத்தில் மாற்றிக்கொடுத்தால் வெளியிடுவது குறித்து யோசிக்கலாம் என்று கூறினார்.

உடனடியாக அணுசக்தியை விமர்சிக்காமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பார்வையில் அந்த செய்தியை திருத்தி எழுதினேன். அதற்கு தேவைப்பட்ட சில புதிய பேட்டிகளும் பல சிரமங்களுக்கு இடையில் பதிவு செய்தேன். அதை ஸ்கிரிப்டு எழுவதோடு நிறுத்தாமல் அதை குரல் மற்றும் படப்பதிவும் செய்து ஒலி/ளி பரப்புக்கு தயாரான நிலையில் அந்த மூத்த துணையாசிரியரிடம் சமர்ப்பித்தேன்.

புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்ட அவர், மேலும் சில நாட்களுக்கு அமைதி காத்தார். மீண்டும் விசாரித்தபோது இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் நம் கட்சி அமைச்சர்தான் இருப்பதால் இதை ஒலி/ளி பரப்ப முடியாது என்றும் எனவே வேறு ஏதேனும் புதிய கோணத்தில் இந்த செய்தியை தயாரித்தால் ஒலி/ளி பரப்புவது குறித்து ஆலோசிக்க முடியும் என்றும் உறுதி(!) கூறினார்.

அணுசக்தி பிரசினையை நாட்டின் அரசின் பெருமையாக கூறும் பக்குவம் எனக்கு இல்லாததால், அந்த செய்தியை முழுவதுமாக மறந்து விட்டேன்.

***********


சில வாரங்கள் சென்ற பின் கல்பாக்கத்திற்கு என்னுடன் வந்த பெண் செய்தியாளர், கல்பாக்கம் குறித்த செய்தி தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டதாகவும், அதை பார்த்த திரு.மாலன் மற்றும் அவருடன் அந்த செய்தி குறித்த விவாதத்தில் பங்கேற்ற மருத்துவர் செ. நெ. தெய்வநாயகம் ஆகியோர் தங்கள் பாராட்டுகளை தெரிவித்ததாகவும் கூறினார்.

அப்போது திரு. மாலன் அந்த தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராக பணி ஆற்றினார். மேலும் இரவு 8.30 மணிக்கு அன்றைய சிறப்பு செய்தி குறித்த ஒரு விவாதத்தையும் நடத்தி வந்தார். வேறு முக்கிய செய்திகள் இல்லாத நிலையில் என் தோழி, சாமர்த்தியமாக கல்பாக்கம் செய்தி குறித்து அவரிடம் எடுத்துக்கூறி அன்றைய செய்தியில் இடம்பெற வைத்தார் என்று பிறகு தெரிய வந்தது.

நான் பார்க்காத அந்த செய்தித்தொகுப்பை திரும்ப பார்க்க முடியுமா என்று என் தொழில் நுட்ப நண்பரை கேட்டபோது அவர் கம்யூட்டரில் புதைபொருள் ஆராய்ச்சி செய்து அந்த செய்தியை போட்டுக்காட்டினார்.

கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உருவம் சிதைந்து பிறந்திருப்பதை படங்கள் மூலம் அறிந்திருந்த நான், நான் எடுத்த செய்தியும் அதே போன்ற உருவமில்லா உருவத்துடன் வெளியானதை உணர்ந்தேன்.

எனினும் அதற்கு முயற்சி எடுத்து வெளியிட்ட அந்த தோழி, அந்த செய்தியை புரிந்து கொண்டதோடு மனம் திறந்து பாராட்டிய திரு. மாலன், மருத்துவர். செ. நெ. தெய்வநாயகம் ஆகியோருக்கு நன்றியும் கூறினேன், மானசீகமாக.ஆனால், அந்த செய்தியை எடுக்க உதவி செய்து, துரதிர்ஷ்டவசமாக அந்த செய்தியை பார்த்துத் தொலைத்துவிட்ட நண்பர்களை இப்போது எதிர்கொள்ளும்போதும் வெட்கமும், வேதனையும் வெளிப்படுகிறது, அவர்கள் என் நிலையை புரிந்துகொண்டு மன்னித்துவிட்ட போதிலும்...!

(2008 நவம்பர் மாதம் வெளியான பதிவு.  தேவை கருதி மீள் பதிவு செய்யப்படுகிறது )