06 ஜூலை, 2011

சிறைக்கைதி கணவனை சூட்கேஸில் மீட்க முயன்ற மனைவி..!

காதல் எதையும் செய்யும்! என்பதை நிரூபிப்பதற்காக பல கதைகள் கூறப்படுகின்றன. பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. அவ்வாறான சம்பவம் ஒன்று...

வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் சாடேமால் என்ற பகுதியில் உள்ள சிறையில் ஜூவான் ராமிரெஸ் டிஜெரினா என்ற இளைஞர் அடைக்கபட்டிருக்கிறார். அனுமதி இன்றி ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2007ம் ஆண்டுமுதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குற்றமனம் கொண்ட மனிதர்கள் அடைக்கப்படும் அனைத்து சிறைகளிலும் சட்டங்களையும், விதிமுறைகளையும் வளைக்க தொடர்ந்து முயற்சி நடைபெறுவது போலவே இங்கும் அவ்வபோது அசம்பாவிதங்கள் நடப்பது உண்டு. அதற்காக சிறைக்கூடத்தை சித்திரவதைக்கூடமாக மாற்றாமல், குற்ற மனம் படைத்த மனிதர்களையும் திருத்துவதற்கும், நல்வழிப்படுத்துவதற்குமான முயற்சிகளில் உலகின் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பான ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.

சிறைப்பட்டோரின் விருப்பம்போல வெளியே திரியும் உரிமையைத்தவிர முடிந்த அளவில் மற்ற உரிமைகளை வழங்குவதில் முன்னேறிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஏனென்றால் ஒரு நாட்டில் மனித உரிமைகளின் அளவுகோலாக  அந்நாட்டு சிறைச்சாலைகளே கணிக்கப்படுகின்றன. இத்தகைய அம்சங்களில் இந்தியாவின் பயணம் முன்னேற்றத்துக்கு எதிர் திசையில் இருப்பது நம் சோகம்.

மெக்ஸிகோ உள்ளிட்ட பல நாடுகளில் நீண்ட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு சட்டபூர்வமான வாழ்க்கைத்துணைவருடன் இல்லற உறவு கொள்ளும் உரிமையும் வழங்கப்படுகிறது. இந்த விதியின்படி  இந்த சம்பவத்தின் நாயகன் ஜூவான் ராமிரெஸ் டிஜெரினா-வுக்கும் அந்த உரிமை வழங்கப்பட்டது.

அவரது மனைவி மரியா டெல் மார் அர்ஜோனா ரிவேரோ (வயது 19) வை சந்திக்கவும், இல்லற உறவு கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த சந்திப்புக்காக சிறைச்சாலைக்கு வந்த மரியா டெல் மார் அர்ஜோனா ரிவேரோ, கருப்பு நிறத்தில் சற்று பெரிய சூட்கேஸ் ஒன்றை இழுத்து வந்தார். விசாரித்தபோது கணவருக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்திருப்பதாக கூறினார்.

சிறை அதிகாரிகள் அனுமதித்த அறையில் தனிமைச் சந்திப்பு முடிந்து சிறையை விட்டு அவர் வெளியே சென்றபோது ஒரு சூட்கேஸ் ஒன்றை மிகவும் சிரமப்பட்டு இழுத்துக் கொண்டு போனார். சிறையின் உள்ளே வரும்போது கணவனுக்கு தேவையான நிறைய பொருட்களை கொண்டு வந்த காரணத்தால் சூட்கேஸ் பெருத்திருந்தது. வெளியே போகும் போது சூட்கேஸ் இளைத்திருக்க வேண்டும். ஆனால் சிறையை விட்டு வெளியேறும்போதும் சூட்கேஸ் பெருத்தே இருந்தது.  இதனால் சந்தேகம் அடைந்த சிறைக் காவலர்கள் அவரது சூட்கேஸை சோதனை இட்டனர். அந்த சூட்கேஸுக்குள் இருந்தது, அவரது கணவரும், சிறைக்கைதியுமான ஜூவான் ராமிரெஸ் டிஜெரினா!!

இதையடுத்து காதல் கணவனை சட்டவிரோதமாக சிறைச்சாலையிலிருந்து கடத்த முயன்ற குற்றத்திற்காக, அவரது மனைவி மரியா டெல் மார் அர்ஜோனா ரிவேரோ-வும் கைது செய்யப்பட்டார். இவர் மீதான விசாரணை முடிவடைந்தால் இவருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

சாதாரண வாசகருக்கு இது ஒரு காதல் கதையாகவோ, நகைச்சுவை கதையாகவோ தோன்றலாம். ஆனால் மனித உரிமைக் கோட்பாடுகளில் ஆர்வம் உள்ள நபர்களுக்கு இந்த சம்பவம் வேறு புதிய பரிமாணங்களையே காட்டும்.

இந்தியாவில் உள்ள சிறைக்கைதிகள், அவர்தம் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள வசதியாக சிறை நிர்வாகமே தொலைபேசி வசதி செய்து தரவேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள சிறைத்துறையும் இதுகுறித்து இதுவரை ஆலோசிக்கவே இல்லை.

தமிழ்நாட்டின் சிறைச்சாலைகளில் இந்த வசதி செய்துதரப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்தபோது, அரசுத்தரப்பு கருத்தை முழுமையாக கேட்பதற்கு கூட மனமின்றி அந்த வழக்கு தலைமை நீதிபதியால் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இதைவிட கவலைக்குரிய அம்சம் என்னவென்றால் சிறை என்பது சித்திரவதைக்கூடமாகத்தான் இருக்க வேண்டும் என்று பொதுமக்களில் பலரும் கருதுவதாக தெரிகிறது. சிறையில் இருப்பவர்கள் அனைவருமே குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு உயிர்வாழும் உரிமையைக்கூட உத்தரவாதம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதுமே பொதுக்கருத்தாக இருக்கிறது. இந்த மனநிலையை மேலும் செழுமைப்படுத்துவதில் நம் ஊடகங்கள் செவ்வனே செயல்படுகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள சிறையாளிகளுக்கும் இல்லற உறவு உரிமையை நடைமுறைபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புவதற்கே மனித உரிமை ஆர்வலர்கள் தயங்கும் நிலையே நீடிக்கிறது.

ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் என்பது வெறுமனே பார்த்து ரசிப்பதற்கோ, சிரிப்பதற்கோ மட்டும் அல்ல. அந்த செய்தியுடன் நம் நிலையை ஒப்பிட்டு பார்த்து நம் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், நிறைகளை மேலும் செப்பனிட்டு கொள்வதற்கும்தான்.

அப்படிப் பார்த்தால் மேற்கூறிய இந்த செய்தியிலும் நாம் சிந்திக்கவும், செயல்படவும் ஒரு அம்சம் இருக்கிறது. புரிந்து கொள்வோமாபி.கு.: உலக நாடுகளில் சிறையாளிக்களுக்கான இல்லற உறவு உரிமை குறித்து அறிந்து கொள்ள இந்த விக்கிபீடியா இணைப்பை சொடுக்கவும். 

5 கருத்துகள்:

Niroo சொன்னது…

i agree

Niroo சொன்னது…

i agree மை லார்ட்

பாகிஸ்தான்காரன் சொன்னது…

அண்ணே. நீங்கள் சொல்வதெல்லாம் வழர்ச்சியடைந்த நாடுகளுக்குத்தான் பொருந்தும். வழர்ச்சியடைந்துவரும் நாடுகளுக்கு சற்றும் பொருந்தாது. அங்கே நூற்றுக்கு 2 பேர்தான் இப்படி கள்ளத்தனமாக் வெளியேற முயலுவார்கள். ஆனால் இங்கே நூற்றுக்கு ஒருவர்தான் கள்லத்தனமாக் வெளியேறாமல் இருப்பார்காள். இருந்தாலும் நீங்கள் இப்படி சிந்திப்பது வரவேற்கத்தக்கதே.

பாகிஸ்தான்காரன் சொன்னது…

பாஸ் . இப்பதான் உங்களுடய பிளாக்கின் உபதலைப்புவரிகளை கவனித்தேன். உங்களின் உபதலைப்பிற்கும் உங்களின் கடைசி கட்டுரைக்கும் சம்மந்தமில்லை. சமூகவிரோத செயல்களை செய்பவர்களின் உரிமைகளை காக்க எழுதும் நீங்கள் பூந்தமல்லி சிறையில் பலகாலமாக சரியான் உணவுகூட இல்லாமலிருக்கும் இலங்கை கைதிகளை பற்றியும் சிறிது எழுதியுருக்காலாம்.

Sathish K Ramadoss சொன்னது…

Sir, whatever you said may apply for the people who did crime without any purpose or intension,

but the jails what we have in india only has the idiots and culprits who grabbed everyone's wealth for their selfish. let them be there as the way it is... no harm in it...

கருத்துரையிடுக