01 ஆகஸ்ட், 2011

அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்காக பரிசோதனை எலிகளாகும் இந்திய ஏழைகள்


தனலட்சுமிக்கு அன்று வழக்கத்திற்கு அதிகமாக மூட்டுகள் வலித்தது. உடலின் சில பகுதிகள் உணர்ச்சியற்று மரத்துப்போக ஆரம்பித்தது. கடந்த சில மாதங்களாகவே உடலின் பல்வேறு பகுதிகளிலும் பல பிரசினைகள் ஆரம்பித்தாலும், அந்த ஜூன் 17ம் தேதி தனலட்சுமிக்கு ஏற்பட்ட பிரசினைகளை அவரை சற்று பயம் கொள்ள வைத்தது.

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஆதர்ஷ் நகர் குடிசைப்பகுதியில் வசித்து வந்த தனலட்சுமிக்கு வயது 40. கோவில்களில் நடனமாடுவது அவரது தொழில். ஆனால் ஆபாச நடனங்களுக்கு தடை என்ற பெயரில் அந்த தொழில் வாய்ப்பும் பறி போனது. அவரது கணவர் ஒரு லாரி டிரைவர். ஆனால் அவர் எப்போதாவதுதான் வேலைக்குப் போவார். இந்த நிலையில்தான் அவர்களது 10 வயது மகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகும் அந்த சிறுவனது உடல்நிலை சரியாகவில்லை. எனவே கடன் வாங்கி பெரிய மருத்துவமனை ஒன்றில் அவனை பரிசோதனை செய்தபோது, அச்சிறுவனின் இதயத்தில் ஒரு துளை இருப்பதாகவும், அறுவை சிகிச்சை மூலம் அதை சரிசெய்ய சுமார் 2 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் கூறப்பட்டது.

தனலட்சுமி என்று பெயர்தான் இருந்ததே தவிர, அந்த தாயிடம் மகனுக்கு சிகிச்சை பார்க்க எந்த வசதியும் இல்லை. அவரது உறவினர்களும், சுற்றத்தினரும்கூட அன்றாட தேவைகளுக்கு சம்பாதிக்கவே திணறிக் கொண்டிருந்தனர். அந்த நிலையில்தான் கருணம்மா என்பவர் தனலட்சுமியை அணுகினார். தனக்கு தெரிந்த சிலர் ஹைதராபாத்தில் இருப்பதாகவும், அவர்கள் சொல்லும் சில மாத்திரைகளை வேளாவேளைக்கு சாப்பிட்டு, அவர்கள் கேட்கும்போது சிறிதளவு ரத்தம் கொடுத்தால் பணம் கிடைக்கும் என்றும் கருணம்மா கூறினார். தனலட்சுமிக்கு அவரை பார்க்கும்போது கடவுளே கருணை கொண்டு கருணம்மா வடிவில் வந்ததாக தோன்றியது.

மியாபூர் என்ற இடத்தில் இருந்த ஒரு பரிசோதனைச் சாலையில் தனலட்சுமிக்கும், அவரது கணவருக்கும் சில பரிசோதனைகள் நடந்தன. பிறகு தனலட்சுமியிடம் பல படிவங்களில் கையெழுத்து போடும்படி கூறப்பட்டது. படிப்பறிவில்லாத தனலட்சுமி வெற்று முத்திரைத்தாள் உள்ளிட்ட பல்வேறு படிவங்களில் கைநாட்டு பதித்தார். அவருக்கு சில மாத்திரைகள் வழங்கப்பட்டு அவற்றை வேளாவேளைக்கு சரியாக சாப்பிடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் வெவ்வேறு தருணங்களில் சுமார் மூன்றுமுறை ரத்தம் எடுக்கப்பட்டது. அவருக்கு சுமார் 9 ஆயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டது.

அந்த பரிசோதனைச் சாலையில் கொடுக்கப்பட்ட மாத்திரைகள், மார்பகப் புற்று நோய்க்கானது என்று தனலட்சுமியிடம் கூறப்பட்டது. ஆனால் அந்த மாத்திரைகள் எதற்காக அவருக்கு கொடுக்கப்படுகிறது போன்ற விவரங்கள் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை.

இந்த மாத்திரையை சாப்பிட ஆரம்பித்த பின்னர் தனலட்சுமிக்கு கை,கால்களில் வலி,  உணர்ச்சியற்று மரத்துப்போதல் ஆகியவை ஆரம்பித்தன. எந்த சிகிச்சைக்கும் இந்த வலியோ, மரத்துப்போதலோ குணமாகவில்லை. இந்த நிலையில்தான் ஜூன் 17ம் தேதியன்று தாங்க முடியாத வலி காரணமாக தனலட்சுமி, குண்டூர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றார்.

அந்த மருத்துவமனையில் ஏற்கனவே இதே நோய்க்குறிகளுடன் சிலர் வந்திருந்தனர். சிலரால் சரிவர நடக்கக்கூட முடியவில்லை. குறிப்பாக ஆதர்ஷ் நகர் மற்றும் லெனின் நகர் பகுதிகளில் இருந்து மட்டும் இதுபோன்ற பிரசினைகளுடன் பெண்கள் வருவது அந்த மருத்துவமனை மருத்துவர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஆதர்ஷ் நகர் மற்றும் லெனின் நகர் ஆகியவற்றை உள்ளடக்கிய பிடுகுரல்லா நகரம் சுண்ணாம்பு வளம் நிரம்பியது. இதனால் இப்பகுதியில் சுமார் 300 சிமென்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் கூலிவேலை செய்யும் படிப்பறிவற்ற மக்களே ஆதர்ஷ் நகர் மற்றும் லெனின் நகர் ஆகிய குடிசைப்பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்களின் தினசரி வருமானம் நூறு ரூபாய்க்கும் குறைவே.

இவர்களின் வறுமையையும், கல்வியின்மையையும் பயன்படுத்தி இவர்கள் மீது ஒரு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

அமெரிக்காவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான ஃபைஸர், மார்பகப் புற்று நோய்க்கான அரோமாசின் என்ற மருந்தை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் ஏதோ ஒரு மருந்தை இந்திய சூழ்நிலையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறியும் சோதனையே இது. இதற்காக ஹைதராபாத் அருகே மியாபூரில் செயல்படும் ஆக்ஸிஸ் கிளினிக்கல் லேபரேட்டரி என்ற நிறுவனம் இந்த மக்களை ஆய்வுக்கூட எலிகளைப் போல பயன்படுத்தியுள்ளது.

தனலட்சுமி குண்டூர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்ற அதே நாளில் அவர் வசிக்கும் ஆதர்ஷ் நகர் குடிசைப்பகுதிகளில் இருந்து 9 பெண்களும், ஒரு ஆணும் மேற்கூறிய அதே பிரசினைகளுடன் மருத்துவமனைக்கு வந்தனர். அடுத்த நாளான ஜூன் 18ம் தேதி லெனின் நகர் குடிசைகளிலிருந்து நான்கு பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், அதே பகுதியில் வசித்த கருணம்மா மற்றும் ஷேக் ஜமீலா ஆகிய இரு புரோக்கர் பெண்கள் கைது செய்யப்பட்டனர். கல்வி அறிவு இல்லாத அந்த இரு பெண்களும், ஆயிரம் ரூபாய் கமிஷனுக்காக புரோக்கர் வேலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். ஆனால் இது சட்டப்படி தவறு என்பது அவர்களுக்கு தெரியாது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆக்ஸிஸ் கிளினிக்கல் லேபரேட்டரி என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்தப் பரிசோதனையில் பயன்படுத்தப்பட்டவர்களுக்கு என்ன மருந்துகள் கொடுக்கப்பட்டன என்பதற்கான தகவல் ஏதும் இல்லாததால், இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பிரசினைகள் இருப்பதாக குண்டூர் மாவட்ட மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் நடைபெறும் கிளினிக்கல் டிரையல் சோதனைகளில் பெரும்பகுதி ஹைதராபாத்தையே மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. கடந்த ஆண்டு கம்மம் பகுதியில் செர்விகல் கான்சர் நோய்க்கான தடுப்பு மருந்தை ஆய்வு செய்ததில் ஆறு ஆதிவாசிப் பெண்கள் மரணம் அடைந்தனர். இந்த சூடு தணியும் முன்னர் அடுத்த பிரசினை ஏற்பட்டுள்ளது.

இது போன்ற கிளினிக்கல் டிரையல் பரிசோதனைகளுக்கான நெறிமுறைகள், மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம், 1940-இன் படி வரையறுக்கப்படுகின்றன. இந்த சட்டத்தின்படி இந்த பரிசோதனையில் பங்கேற்கும் தன்னார்வலரிடம், குறிப்பிட்ட பரிசோதனைகள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்க வேண்டும். மேலும் இதுகுறித்த விளக்கக் கையேடுகளும் அளிக்கப்பட வேண்டும். ஆனால் தமது கையெழுத்தையே இடத்தெரியாக கல்வி அறிவில்லாத, ஏழை, எளிய மக்களே இதுபோன்ற கிளினிக்கல் டிரையல் பரிசோதனைகளில் அதிகமாக பயன்படுத்தப் படுகின்றனர்.

இது ஆந்திராவில் மட்டுமே நடக்கும் ஒரு பிரசினைதானே என்று நிம்மதி பெருமூச்சு விட வேண்டாம். லெனின் நகரைச் சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண் இது போன்ற ஒரு சோதனைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் வெளியே தெரிந்துள்ளது. தமிழகத்தின் நிலை இதுவரை தெரியவில்லை. நாம்தான் நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதா விவகாரத்தில் இருந்தே இன்னும் வெளியே வராமல் நமது ஊடகங்கள் மிகவும் கவனமாக பாதுகாத்து வருகின்றனவே!

நன்றி: டவுன் டு எர்த், ஜூலை 16-31, 2011

4 கருத்துகள்:

Balaji G சொன்னது…

// நாம்தான் நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதா விவகாரத்தில் இருந்தே இன்னும் வெளியே வராமல் நமது ஊடகங்கள் மிகவும் கவனமாக பாதுகாத்து வருகின்றனவே! //

உண்மை!

தங்கள் பதிவு அதிர்ச்சி அளிக்கிறது. ஊடகங்கள் இதற்க்கெல்லாம் எப்போது முக்கியத்துவம் தரும்?

இதை மையமாக வைத்து S P Jananathan இயக்கத்தில் ஈ என்றொரு படம் வந்தது.... ஞாபகம் இருக்கிறதா? அப்போது நினைத்தேன்... இப்படியெல்லாம் இங்கு நடக்கக்கூடாது என்று. ஆனால் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

பெயரில்லா சொன்னது…

I could not beleive this. Clinical trials are not new. None of the drug is released with out clinical trials. There is always side effects and benifits. Companies like Pifzer have very strict rules and regulations. They are much better than the 1940s Indian laws. I dont think the problem is by Pifzer. The problem may be with our own doctors who conducted the trials. Again, without clinical trials there is no good drug.

Unknown சொன்னது…

வணக்கம் நண்பா. உங்கள் பதுவு அருமை ..

என்னுடைய பக்கமும் வாருங்கள்..
http://desiyamdivyam.blogspot.com/

பெயரில்லா சொன்னது…

ரொம்ப அதிர்ச்சியான விஷயம். இதை பற்றிய விழிப்புணர்வை நாம்தான் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். நம்ம ஊடகங்கள் எல்லாம் ஒன்னாம் நம்பர் அயோக்கியர்கள்.

கருத்துரையிடுக