26 அக்டோபர், 2011

அணுஉலை ஒளி திருநாள் வாழ்த்துகள்!

பொங்கல் பண்டிகையின் முக்கிய காரணிகளான விவசாயிகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சிகளோடும், புதிய திரைப்படங்களோடும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது இங்கே யாருக்கும் உறுத்துவதில்லை. நாடு முழுதும் விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்துகொள்வதோ, மிஞ்சியிருப்போரும் உழவுத் தொழிலை புறக்கணித்து வேறு தொழில்களை தெரிவு செய்யும் அவலமோ யார் கண்ணிலும் படுவதில்லை.

இதேபோல்தான் தீபாவளி என்று அழைக்கப்படும் நாளின் உண்மையான அர்த்தம், அல்லது அதன் அனர்த்தம் குறித்து யாருக்கும் இங்கே அக்கறையில்லை. பகுத்தறிவு பேசும் தனியார் தொலைக்காட்சிகள்கூட தீபஒளித்திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி பொருளீட்ட தவறுவதில்லை, மார்க்சிஸ்ட் கட்சியின் தீக்கதிர் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுவதைப் போல!

எனவே நாமும் ஒரு முறை உரக்கச் சொல்வோம்... ஹேப்பி தீவாளி!

தீப ஒளித்திருநாளின் மத்தாப்புக்களைப்போல மின்சக்தியின் மூலங்களான நிலக்கரியும் மற்ற வளங்களும் விரைந்து தீர்வதால், அணுஉலை அவசியம் என்று அணுஉலை மஹாத்மியம் பாடுகின்றன பல ஊடகங்கள்...

அணுஉலை மஹாத்மியத்தைப்பாடும் இந்த ஊடகங்களில்தான் எத்தனை வகை?

பெரியார் விருது பெற்ற நக்கீரன் கோபாலின் பாலஜோதிடம், சமத்துவத்தை முழங்கும் தீக்கதிர், நடுநிலைமை இதழான புதிய தலைமுறை என்று ஊடக உலகின் எதிரெதிர் துருவங்கள் எல்லாம் அணுஉலைக்கு ஆதரவான கருத்துப் பரப்பலை செய்து வருகின்றன.

அணுவியல் மாற்றத்தை சீர்திருத்துவார் துலாச்சனி! என்ற தலைப்போடு அட்டைப்பட சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது பாலஜோதிடம்.

தற்போது கன்னி ராசியில் வாசம் செய்யும் சனிபகவான் விரைவில் துலாம் ராசியில் வாசம் செய்ய இருக்கிறாராம். அதற்கு முன்னோட்டமான் ஆறுமாத காலத்தில் அவரது செயல்பாடுகளால்தான், ஜப்பான் புகுஷிமா விபத்தும், அதைத் தொடர்ந்து உலக அளவில் அணுஉலைகள் குறித்த விவாதமும் நடந்து வருகிறதாம்.

உயர் தொழில்நுட்ப ரீதியான கிரகம் சுக்கிரனின் ராசியில் சனிவாசம் செய்யப்போவதால், பல்வேறு உயர்தொழில் நுட்ப முறைகள் அணு விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கப்படுமாம். இத்துறையில் முறைகேடுகள் களையப்பட்டு, முட்டுக்கட்டைகள் தகர்த்தெறியப்படுமாம்.

அணுஉலைகளுக்கான புதிய பாதுகாப்பு முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அணுஉலை எதிர்ப்புகளை மக்கள் விலக்கிக் கொள்வார்களாம்.

சர்வதேச அளவில் (செறிவூட்டப்பட்ட யூரேனியம்) அணுவிற்கான வர்த்தகத்தினால் தொழில்ரீதியான போட்டிகளில் இந்தியாவும் ஆதாயம் பெறுமாம்.

இதெல்லாம் நடந்து விட்டால் நல்லதுதானே என்று சற்று நிம்மதி பெருமூச்சு விட்டால், அடுத்தடுத்த பத்திகள் நம் தூக்கத்தை கலைக்கின்றன!

துலாச்சனியின் பார்வை வீடுகளான மகர ராசி (4ம் பார்வை பெற்றும்), மேஷ ராசி (7ம் பார்வை பெற்றும்), கடக ராசி (10ம் பார்வை பெற்றும்) உள்ளதால் அணுஉலை சம்மந்தமான உள்நாட்டு சர்ச்சைகள் சூடுபிடிக்குமாம்.

சில நாடுகளில் அணு உலைகளால் பேராபத்துகள் ஏற்பட்டு கடும் விளைவுகள் ஏற்படுமாம்.

அணுஉலைகளை இயக்க அணுத் தாது பொருட்களின் (செறிவூட்டப்பட்ட யூரேனியம்) தட்டுப்பாடு காரணமாக, அதிக அணுத்திறன் கொண்ட அணுசக்தி நாடுகள் வர்த்தக ரீதியான ஆதாயம் அடையுமாம். நில ஆர்ஜிதம் செய்வதில் அரசுக்கு பெரும் பின்னடைவும், பொருட்செலவும், காலதாமதமும் ஏற்படுமாம்.

இதெல்லாம் நடந்தாலும் அடுத்த இரண்டரை ஆண்டு காலத்தில் துலாச்சனியுடன் புதன் சேர்க்கை மற்றும் பார்வையின் காரணமாக அணுவியல் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுமாம்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட ஜோதிட சாத்திரத்தில் அணுஉலைகள் குறித்தும், செறிவூட்டப்பட்ட யூரேனியம் குறித்தும் எவ்வளவு தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதெல்லாம் புரியாமல் நாத்திகம் பேசும் அபிஷ்டுக்கள் இருந்தால் சோதிடர் முரளியை 91500 26954 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கலாம்.

பெரியார் விருது பெற்ற நக்கீரன் கோபால் இதுபோன்று ஜோதிடப்புரட்டுகளை பரப்பலாமா என்று யாரும் கேட்கக்கூடாது. அவர் நடுநிலையாளர். அவரது மற்றொரு புத்தகமான பொது அறிவில் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதா? என்ற அறிவியல் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. வாசகர்களுக்கு எதுதேவையோ? அதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்!


வணிக நிறுவனமான நக்கீரன் குழுமம்தான் இவ்வாறு மக்களை குழப்புகிறது என்றால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான தீக்கதிரோ அரசியல் ரீதியாக கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கிறது. மேலும் போராட்டத்திற்கு உள்நோக்கமும் கற்பிக்கிறது...


பொதுவாக இந்தப்போராட்டத்தை மக்கள் நடத்துவது போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங் கள் ஏற்படுத்துகின்றன. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து அந்தப்பகுதி மக்களிடம் அச்சம் பரப்பப்பட்டுள்ளது என்பது உண்மை. அந்த அச்சம் அகற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அணுசக்தி விஞ்ஞானிகள் கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து தொடர்ந்து உறுதியளித்து வருகின்றனர். ஆனால் சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்புவது வெளிப்படையாகத் தெரிகிறது. இவர்களது உள் நோக்கம் என்ன என்பது குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

குறிப்பாக மத்திய அரசுக்கு இதில் கூடுதல் பொறுப்பு உண்டு. ரூ.13 ஆயிரம் கோடி செலவில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் கூடங்குளம் அணுமின் திட்டம் துவக்கப்பட்டது. அது நிறை வடையும் நிலையை எட்டி மின் உற்பத்தியைத் துவங்கத் தயாராக உள்ளது. இந்நிலையில் திட்டத்தையே நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்று கூறுவது மிகவும் ஆபத்தானது.

இந்தியா அமெரிக்கா இடையேயான (123) அணுசக்தி ஒப்பந்தத்தை எந்த உள்நோக்கத்துடன் இதே கம்யூனிஸ்ட்(!) கட்சி எதிர்த்தது என்பதை சொல்லாமல் மக்களை குழப்புகிறது. மேலும் சோனியா காந்தி, ரஜினிகாந்த் போன்றவர்கள் இந்திய மருத்துவர்களை மயிரளவுகூட நம்பாமல் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு பறந்து செல்லும் நிலையில் மக்கள் மட்டும் இந்திய விஞ்ஞானிகளை நம்பவேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலை யத்தில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஜப்பானைப் போன்று இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் நிலநடுக்கம், சுனாமி போன்ற ஆபத்துக்களை கருத்தில் கொண்டு தேவையான கூடுதல் பாதுகாப்பு முற்றிலுமாக கூடங்குளத்தில் செய்யப்பட்டுள்ளது என்பதை அணு விஞ்ஞானிகள் உறுதிசெய்கின்றனர்.

மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையம் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டு, ஆபத்து ஏற்படுமானால் ஒட்டுமொத்த அணுஉலை அமைப்பும் தானியங்கி முறையில் குளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பிரபல அணு விஞ்ஞானி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் செயல்படும் அணு உலைகளில் தாராபூரில் மட்டும் கொதிநீர் அணு உலைகள் உள்ளன. கூடங்குளம் உட்பட ஏனைய அனைத்து அணு மின் நிலையங்களிலும் கடினநீர் அணு உலைகள் உள்ளன. இவை குளிர்ந்த நீரில் இயங்கக் கூடிய தன்மை கொண்டவை என்றும் மிகவும் பாதுகாப்பானவை என்றும் விஞ்ஞானிகள் உறுதியளிக்கின்றனர். அண்மையில் வந்த சுனாமியால் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


மாஸ்கோவில் மழை பெய்தால் மதுராந்தகத்தில் குடை பிடிக்கும் மார்க்சிஸ்டுகள்தான் இவ்வாறு சுயலாபத்திற்காக மக்களை குழப்புகிறார்கள் என்று பார்த்தால், நடுநிலை பத்திரிகையான புதிய தலைமுறையும் அணுஉலைக்கு ஆதரவான நிலையையே எடுத்துள்ளது.

கவித்துவ மொழிதலில் திறன் பெற்ற புதிய தலைமுறை பத்திரிகையின் ஆசிரியர் பாரதியின் வரிகளில் கட்டுரையை தொடங்குகிறார்....

.
இருள் என்பது குறைந்த ஒளி. மகாகவி பாரதியின் மாணிக்க வரிகளில் ஒன்று இது. வெளிச்சம் குறைந்தால் இருட்டு என்பது சின்னக் குழந்தைக்கும் தெரிந்த உணமை. அதைதான் சொல்கிறாரா பாரதி? இந்த எளிய கருத்தைச் சொல்ல மகாகவியா வர வேண்டும்? உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்ற அவரது வார்த்தைகளை அறிந்தவர்களுக்கு அவர் வேறு எதையோ உணர்த்த முற்படுகிறார் என்பது புரியும். அது என்ன? அது இதுதான்: அறிவில் ஒளி குறையுமானால் மனதில் இருள் தோன்றும்.

அணுசக்தி மீதான விமர்சனங்களை முன்வைப்பதுதான் அறிவின் ஒளி குறைவதாம். நல்லது. மேலும் படிப்போம்...


ஓடுகிற ஆறு, ஓசையிடும் கடல், வீசுகிற காற்று, அடுப்பில் எரியும் நெருப்பு, கண்ணுக்குத் தெரியாத மின்சாரம், அன்றாடம் புழங்கும் போக்குவரத்து, உறபத்திக்கு உழைக்கும் இயந்திரங்கள், ஏன் உணவில் கூட, விபத்துக்கான சாத்தியங்கள், பக்க விளைவுகள் உண்டு. அதற்காக அவையே வேண்டாம் எனச் சொல்லி விடுவோமா? தினம் சாலை விபத்துக்களைப் படிக்கிறோம். பயணங்களை நிறுத்தி விட்டோமா? ரயில்கள் விபத்திற்குள்ளாகின்றன எனத் தெரிந்தும் ஏன் முன்பதிவில் இத்தனை முண்டியடித்தல்


நல்ல கேள்விகள்தான்...! ஆனால் நாணயமான கேள்விகள்தானா...?
சாலை விபத்து அல்லது ரயில் விபத்தும் அணு உலை விபத்தும் ஒன்றுதானா?

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்ட நிலப்பகுதிகளை விபத்து நடந்து 25 ஆண்டுகள் கழிந்த பின்னரும் இதுவரை சுத்தம் செய்யவில்லை என்பது தெரியுமா?  யூனியன் கார்பைடு நிறுவனமோ, அதை விலைக்கு வாங்கிய டெள கெமிக்கல்ஸ் நிறுவனமோ அந்த நிலத்தை சுத்தப்படுத்தும் பணியை ஏற்காமல் டபாய்ப்பது தெரியுமா?
விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருட்களால் பாதிக்கப்பட்ட நிலத்தை சுத்தம் செய்யவே 25 ஆண்டுகளாக கையாலாகாமல் இருக்கும் இந்திய அரசுதான் அணுஉலை விபத்து வந்தால் மக்களை காப்பாற்றப் போகிறதா? இதெல்லாம் தெரியாமல்தான் புதிய தலைமுறை ஆசிரியர் மீண்டும், மீண்டும் அணுஉலைகளுக்கு ஆதரவான நிலையிலேயே பேசுகிறாரா?

மேற்கூறப்பட்ட மூன்று பத்திரிகை ஆசிரியர்களும் பாரதியை விமர்சனமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள் என்றே கருதுகிறேன். எனவே எனக்கு பாரதி மீது ஏராளமான விமரிசனம் இருந்தாலும் மேற்கூறப்பட்டவர்களின் விருப்பத்திற்குரிய பாரதியின் வரிகளையே நினைவு படுத்த விரும்புகிறேன்...
படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான்! ஐயோவென்று போவான்”.

14 அக்டோபர், 2011

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு – ஒரு “புதிய தலைமுறை” அனுபவம்


ஜப்பானின் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கல்பாக்கம் அணுஉலையின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய டாக்டர் எல். வி. கிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு அணுஉலைகளின் பாதுகாப்பு குறித்து விளக்கினார். அந்த நிகழ்ச்சிக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அணுசக்தி ஆய்வாளர் (பொறியாளர்) கோ. சுந்தர்ராஜனுடன் நான் சென்றிருந்தேன்.

நிகழ்வின் இறுதியில் டாக்டர் எல்.வி. கிருஷ்ணன் அவர்களிடம் சில கேள்விகளை நண்பர் கோ. சுந்தர்ராஜன் எழுப்பினார். தொடர் கேள்விகள் எழுப்பப்படுவதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு சுந்தர்ராஜன் அமைதியானார்.  அப்போது அங்கு பார்வையாளராக வந்திருந்த 'பொறியாளர் ஏழுமலை' என்பவர் அணுசக்திக்கு ஆதரவாக நம் நண்பர் சுந்தர்ராஜனிடம் வாதிட ஆரம்பித்தார். ஆனால் வாதிட்ட விதம் விரும்பத்தக்க விதத்தில் இல்லாததால் அவரை புறக்கணித்து வெளியேறினோம்.

இந்த பொறியாளர் ஏழுமலை அவர்களை சென்னையில் நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் பார்க்கலாம். மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றிருப்பதாக கூறும் அவர், எந்த கூட்டத்திலும் தனது கருத்தை எப்படியாவது பதிவு செய்வதில் விருப்பம் காட்டுபவர். 
 'பெரியார் திராவிடம் கழகம்' சார்பில் கடந்த வியாழன் (13-10-2010) அன்று அணு ஆற்றல் எதிர்ப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதிலும் அந்த பொறியாளர் பார்வையாளராக வந்திருந்தார். வழக்கம்போல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பேசி மைக்கை பிடித்தார். தாம் ஒரு காலத்தில் அணுசக்தி ஆதரவாளனாக இருந்ததாக உரையை துவங்கிய அவர், புகுஷிமா நிகழ்விற்கு பிறகு தனது நிலையை மாற்றிக் கொண்டதாக அறிவித்தார். தொடர்ந்து அணுஉலையின் பிரசினைகள் குறித்து சுமார் 15 நிமிடம் முழங்கிய அவர், பார்வையாளர்களின் கரவொலியுடன் தமது உரையை நிறைவு செய்தார்.

தனிநபர்கள் தங்கள் கருத்துகளை இவ்வாறு மாற்றிக் கொள்வதால் சமூகத்தில் பெரிய மாற்றங்கள் உடனடியாக ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றவர்கள், குறிப்பாக பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் தங்கள் நிலையை திடீரென மாற்றிக் கொண்டால்...

***

அண்மையில் புதிய தலைமுறை தொலைகாட்சி தனது அணுசக்தி கொள்கையை திடீரென மாற்றியுள்ளதாக தோன்றுகிறது.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தை மக்களுக்கு எடுத்துக் கூறியதில் புதிய தலைமுறை தொலைகாட்சியின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. சென்னையில் இருந்து நேரடி ஒளிபரப்பு சாதனத்தையும், சிறப்பு செய்தியாளர்களையும் அனுப்பி போராட்டக்காரர்களுக்கு உதவி செய்தது.

போராட்டக்காரர்கள் தமிழ்நாட்டு முதலமைச்சர், இந்தியப் பிரதமர் ஆகியோரை சந்திக்கும் வரை புதிய தலைமுறை தொலைகாட்சியின் செய்திகள் போராடிய மக்களுக்கு ஆதரவாகவே இருந்தது.

இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.

கல்பாக்கம் அணுஉலைகள் பாதுகாப்பாக உள்ளன. கல்பாக்கத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. கல்பாக்கம் மற்றும் அணுசக்தி குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. கூடங்குளம் போராட்டத்தால் அணு உலை பணியாளர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. கூடங்குளம் போராட்டத்தை யாரோ தூண்டி விடுகிறார்கள். அதில் அந்நிய சதி இருக்கிறது என்ற தொனியில் செய்திகள் வெளியாகின்றன.

புதிய தலைமுறை இதழோ மேலும் ஒருபடி சென்று தலையங்கமும், ஒரு கட்டுரையும் தீட்டியுள்ளது. புதிய தலைமுறை இதழின் ஆசிரியர் திரு.மாலன் முன்னொரு காலத்தில் அணுசக்தியின் விமர்சகராகவே இருந்ததாக எனக்கு நினைவு இருக்கிறது. நானும் அவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில்  உருவான புரிதல் அது. புதிய தலைமுறை ஆசிரியர் திரு. மாலனின் கருத்து தற்போது மாறியுள்ளதாக தோன்றுகிறது.

திரு. மாலன் போன்றவர்களுக்கு பல நேரங்களில் சிக்கல்கள் ஏற்படுவது உண்டு. அவர் குமுதம் இதழில் பணியாற்றியபோது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரது கழுத்திலும் தூக்குக்கயிறு மாட்டி, அதற்கான லீவர் இழுக்கப்படும் சப்தம் கேட்க வேண்டும்! என்று பொருள்பட அவர் எழுதியதாக நினைவு. நிச்சயம் அது அவரது கருத்தாக இருக்க முடியாது என்றே நான் இப்போதும் நம்புகிறேன்.

 பப்ளிக் சென்டிமென்ட்க்கு எதிராகவும், ஊடக நிறுவன அதிபர்களின் கருத்துக்கு எதிராகவும் எழுத முடியாத நிலையே அனைத்து பத்திரிகையாளருக்குமான பொது விதி! இதில் அடையாளங்கள் அற்ற சாமானிய பத்திரிகையாளர்கள் தப்பி விடுவார்கள். மாலன் போன்ற பிரபலமானவர்கள் மட்டும் மக்களின் கோபத்திற்கு ஆளாவார்கள்.

அணுஉலை விவகாரத்திலும் அப்படித்தானா என்பது தெரியவில்லை. அவரது கருத்து உண்மையிலேயே மாறியும் இருக்கலாம். மாறாமலும் இருக்கலாம். ஆனால் அதைவிட முக்கியமாக நான் கருதுவது, புதிய தலைமுறை ஊடகத்தை நடத்தும் எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத்தில் அணுசக்தி பொறியியல் பயிற்றுவிக்கப்படுகிறது. இளநிலை (B.Tech.) பட்டத்திலிருந்து, ஆய்வு முனைவர் (Ph.D) பட்டம்வரை இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது. அணுசக்தித் துறை உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுவருவதாகவும், அணுசக்தி பொறியியல் படிப்பவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் இணையதளம் கூறுகிறது.


இந்த நிலையில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை சிறப்பாக எடுத்துக்கூறும் விதத்தில் புதிய தலைமுறை தொலைகாட்சியில் வெளியான செய்திகள் எனக்கு துவக்கத்திலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

புதிய தலைமுறை தொலைகாட்சியின் தற்போதைய நிலை எனக்கு அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இந்திய-தமிழக ஊடக வரலாற்றில் இது புதிதான நிகழ்ச்சியோ, புதிரான நிகழ்ச்சியோ அல்ல!

புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் பலமுறை வாழ்த்து கூறியிருக்கிறேன். அந்த தொலைகாட்சியை விமர்சனம் செய்வதற்கு சற்றே பெரிய பதிவு தேவைப்படுகிறது, அவ்வளவுதான்!


பின்குறிப்பு: கூடங்குளத்தில் அணுஉலை கட்ட ஆரம்பித்து சுமார் 25 வருடங்களாக என்ன செய்தீர்கள் என்ற கேள்வி பரவலாக கேட்கப்படுகிறது. சுமார் 25 வருடங்களாக அதை எதிர்த்து போராட்டமும் நடைபெற்றே வருகிறது. 

பத்திரிகையாளர்கள் ஞாநி, ஏ.எஸ். பன்னீர்செல்வன், ரமேஷ் (நாகார்ஜூனன்) போன்றவர்கள் உட்பட பலரும் அதில் பங்கேற்றனர். 1989ம் ஆண்டிலேயே எழுத்தாளர் ராஜேந்திர சோழன் அவர்கள் அஸ்வகோஷ் என்ற புனைப் பெயரில் அணுசக்தி மர்மம்! தெரிந்ததும், தெரியாததும் என்று சுமார் 200 பக்க அளவில் விரிவான புத்தகம் எழுதியுள்ளார். அதனை தற்போது மறுபதிப்பு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. 

எனவே கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தின் வயது: சுமார் 25 ஆண்டுகள் !
தொடர்புடைய பதிவு:  கூடங்குளம் போராட்டம் – ஒரு அற்புத அனுபவம்

பின் குறிப்பு: இப்பதிவு குறித்து 'புதிய தலைமுறை' ஆசிரியர் திரு. மாலன் அவர்கள் கருத்து கருத்து தெரிவித்துள்ளார். அதை அப்படியே இங்கு தருகிறேன்...

அன்புள்ள சுந்தரராஜன்,


என்ன பிரச்சினை எனத் தெரியவில்லை. இத்துடன் உள்ள பின்னூட்டத்தை இரண்டு முறை  உங்கள் வலைப்பூவிற்கு அனுப்பினேன். ஆனால் அது அதை ஏற்க மறுத்துவிட்டது. 

எனவே மடலாக அனுப்புகிறேன்.

வெளியிடுவீர்களா?

அன்புடன்
மாலன் 


***

வெறும் யூகங்களின் அடிப்படையில் கற்பனை கலந்து சாமர்த்தியமாக உங்கள் பதிவு எழுதப்பட்டிருப்பதால் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்.

1. எந்த ஒரு விஷயமானாலும் எல்லாக் கோணங்களையும் அளிக்க வேண்டும் என்பதுதான் புதிய தலைமுறை வார இதழ், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கை. அதைத்தான் புதியதலைமுறை ஊடகங்கள் இப்போதும் எப்போதும் பின்பற்றிவருகின்றன. சிலவாரங்களுக்கு முன்பு கூடங்குளம் கொதிக்கிறதுஎன்ற தலைப்பில்  புதிய தலைமுறை வார இதழ் கவர் ஸ்டொரி வெளியிட்ட போது, அங்குள்ள மக்களின் கருத்துக்களை வெளியிட்டதைப் போலவே, அணு விஞ்ஞானி ஜெயபாரதனின் கருத்துக்களையும் வெளியிட்டோம். அதே போல போராட்ட செய்திகளை எப்படி போராட்டம் நடந்த இடத்திற்கே சென்று ஒளிபரப்பினோமோ அதே போல கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கும் சென்று அங்குள்ள நிலைமைகளையும் கருத்துக்களையும் ஒளிபரப்பினோம். ஒரே விவாத அரங்கில் அணு மின் நிலைய விஞ்ஞானிகள் மூவரையும், அணு உலைக்கு எதிர்ப்பானவர்கள் ஐவருக்கும் இடமளித்தோம்.

இன்னொரு உதாரணம், ராஜீவ் கொலையாளிகளுக்கான தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டம். அந்த விவாதத்தில் சுப. வீரபாண்டியனையும், சுப்ரமணிய சுவாமியையும் ஒரே நேரத்தில், கருத்துக்களை வெளியிட வாய்ப்பளித்தோம். பேரறிவாளனின் அம்மா, முருகனின் மகள் ஆகியோரது பேட்டிகளை ஒளிபரப்பியது போலவே கார்த்திகேயன், ரகோத்தமன் ஆகியோரின் கருத்துக்களையும் ஒளிபரப்பினோம்.

எனவே நாங்கள் நிலை மாறிவிட்டோம் அதுவும் எஸ்.ஆர்.எம் பலகலைக்கழகக்த்தின் காரணமாக எனச் சொல்வது, மென்மையாகச் சொன்னால் அபத்தமான பிதற்றல்

எஸ்.ஆர்.எம் பலகலைக்கழகம் எத்தனையோ பாடங்களை போதித்து வருகிறது. நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஆனால் புதிய தலைமுறை ஊடகங்கள் அவற்றுக்கு தகுதியற்ற முக்கியத்துவங்களை அளிப்பதில்லை. இதை புதிய தலைமுறை, புதிய தலைமுறைக் கல்வி ஆகியவற்றின் கடந்த இரண்டு இதழகளைப் புரட்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இரு தரப்புக்கும் இடமளிப்பது புதிய தலைமுறைக்குப் புதிதல்ல. ஆனால் அது போன்ற நடைமுறைகள் உங்களைப் போன்ற தமிழ்த் தொலைக்காட்சி நேயர்களுக்குப் புதிது.

2.நான் அணு ஆயுதங்களுக்கு எதிரானவன். இப்போதும் அதே நிலைதான். ஆனால் அணு சக்திக்கு எதிரானவன் அல்ல. இன்று பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் ஆகிய பிரசினைகள் நம் முன் பூதாகரமாக வளர்ந்து வரும் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது அணுமின்சாரம் பற்றிய மறு சிந்தனைகள் அவசியமாகிறது. அணு மின் நிலையங்களில் விபத்து என்பது ஒரு probabilityதான். ஆனால் பருவநிலை மாற்றம் என்பது ஒரு reality. இதைக் குறித்து இரண்டு மூன்ற் நாள்களுக்கு முன்தான் நாம் உங்கள் பேஸ்புக்கில் விவாதித்தோம்

3.“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரது கழுத்திலும் தூக்குக்கயிறு மாட்டி, அதற்கான லீவர் இழுக்கப்படும் சப்தம் கேட்க வேண்டும்!என்று பொருள்பட நான் எழுதியதாக ஒரு அவதூறுப் பிரசாரம் (smear campaign) நீண்ட நாள்களாக நடந்து கொண்டிருக்கிறது. அப்படி நான் எப்போதும் எழுதியதில்லை. அப்படி நான் எழுதியதாகச் சொல்பவர்கள் அதை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க வேண்டும். அதுதான் நாணயமானது.

நான் தூக்கு தண்டனையை ஆதரிப்பவன் இல்லை. கவிஞர் தாமரை நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கூட கையெழுத்திட்டிருக்கிறேன். அவரையே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 

4. நான் எத்தனையோ முறை எத்தனையோ விஷயங்களில் வெகுஜன கருத்திலிருந்து முரண்பட்டு என் கருத்துக்களை வைத்திருக்கிறேன். அதே நேரம் என் பொறுப்பில் உள்ள ஊடகங்களை அதற்கு மட்டுமே பயன்படுத்தியதில்லை. நம்  நாட்டில் ஒரு கலாசாரம் நெடு நாட்களாக இருக்கிறது. அது குறிப்பாக தமிழ் நாட்டில் சமூகப் போராளிகள் என்று தங்களை அறிவித்துக் கொள்கிறவர்களிடம் ஒரு இயல்பாக ஆகி விட்டதைக் காணமுடியும். கற்பு பற்றிய கருத்துக்காக குஷ்பூ மீது போடப்பட்ட வழக்குகள், சுப்ரமணியசுவாமி மீதான முட்டை வீச்சு. விடுதலைப்புலிகளுக்கு எதிரான படக்குழுவினரை சென்னையை விட்டுத் துரத்தியது, இப்படிப் பல. விவாதம் என்ற கலாசாரம் அருகி வருகிறது. கூடங்குளம் போராட்டக்காரர்கள் ஏன் பிரதமர் குழு அனுப்பும் வரை காத்திருந்து அவர்களிடம் விவாதித்துப் பார்த்து, அந்தக் குழுவின் கருத்துக்களை ஊடகங்கள் முன் வைத்துப் பின் அவசியமானால் போராட்டத்தை தொடர்ந்திருக்கக் கூடாது? அந்தக் குழுவிடம் பேசாமலே,வேலைக்குப் போகிறவர்களைத் தடுக்கிற, அவர்களை முற்றுகையிடுகிற போராட்டமாக ஏன் அதை மாற்ற வேண்டும்? அந்தப் பணியாளர்கள் என்ன செய்தார்கள், அவர்களைச் சிறை வைக்க?

நீங்கள் இந்தப் பதிவை எழுதும் முன் என்னிடம் தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டிருக்கலாம். இதே விளக்கங்களை உங்களுக்கு அளித்திருப்பேன்.

உங்களிடம் கற்பனை நிறையவே இருக்கிறது. வழக்க்றிஞர்களுக்குப் பொய்கள் கை கொடுக்கலாம். ஆனால் கற்பனை உதவாது.

***

மரியாதைக்குரிய ஆசிரியர் மாலன் அவர்களுக்கு,


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரது கழுத்திலும் தூக்குக்கயிறு மாட்டி, அதற்கான லீவர் இழுக்கப்படும் சப்தம் கேட்க வேண்டும்! என்று பொருள்படும் வாசகத்தை நீங்கள் எழுதவில்லை என்பதை நான் ஏற்கிறேன். 


ஒரு இதழின் ஆசிரியர் குழுவினர் சார்பில் வெளியாகும் அனைத்துக் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியர் பொறுப்பேற்க முடியாது என்ற நடைமுறை அம்சத்தை  உணர்கிறேன். 


தங்களை அவதூறு செய்யும் நோக்கத்துடன் இந்த விவகாரத்தை நான் வெளியிடவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் தங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். 


தங்கள் கருத்துரையில் உள்ள மற்ற அம்சங்கள் குறித்து தனியாக எழுதுகிறேன். 


நன்றி,


அன்புடன்
சுந்தரராஜன்