14 அக்டோபர், 2011

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு – ஒரு “புதிய தலைமுறை” அனுபவம்


ஜப்பானின் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கல்பாக்கம் அணுஉலையின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய டாக்டர் எல். வி. கிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு அணுஉலைகளின் பாதுகாப்பு குறித்து விளக்கினார். அந்த நிகழ்ச்சிக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அணுசக்தி ஆய்வாளர் (பொறியாளர்) கோ. சுந்தர்ராஜனுடன் நான் சென்றிருந்தேன்.

நிகழ்வின் இறுதியில் டாக்டர் எல்.வி. கிருஷ்ணன் அவர்களிடம் சில கேள்விகளை நண்பர் கோ. சுந்தர்ராஜன் எழுப்பினார். தொடர் கேள்விகள் எழுப்பப்படுவதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு சுந்தர்ராஜன் அமைதியானார்.  அப்போது அங்கு பார்வையாளராக வந்திருந்த 'பொறியாளர் ஏழுமலை' என்பவர் அணுசக்திக்கு ஆதரவாக நம் நண்பர் சுந்தர்ராஜனிடம் வாதிட ஆரம்பித்தார். ஆனால் வாதிட்ட விதம் விரும்பத்தக்க விதத்தில் இல்லாததால் அவரை புறக்கணித்து வெளியேறினோம்.

இந்த பொறியாளர் ஏழுமலை அவர்களை சென்னையில் நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் பார்க்கலாம். மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றிருப்பதாக கூறும் அவர், எந்த கூட்டத்திலும் தனது கருத்தை எப்படியாவது பதிவு செய்வதில் விருப்பம் காட்டுபவர். 
 'பெரியார் திராவிடம் கழகம்' சார்பில் கடந்த வியாழன் (13-10-2010) அன்று அணு ஆற்றல் எதிர்ப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதிலும் அந்த பொறியாளர் பார்வையாளராக வந்திருந்தார். வழக்கம்போல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பேசி மைக்கை பிடித்தார். தாம் ஒரு காலத்தில் அணுசக்தி ஆதரவாளனாக இருந்ததாக உரையை துவங்கிய அவர், புகுஷிமா நிகழ்விற்கு பிறகு தனது நிலையை மாற்றிக் கொண்டதாக அறிவித்தார். தொடர்ந்து அணுஉலையின் பிரசினைகள் குறித்து சுமார் 15 நிமிடம் முழங்கிய அவர், பார்வையாளர்களின் கரவொலியுடன் தமது உரையை நிறைவு செய்தார்.

தனிநபர்கள் தங்கள் கருத்துகளை இவ்வாறு மாற்றிக் கொள்வதால் சமூகத்தில் பெரிய மாற்றங்கள் உடனடியாக ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றவர்கள், குறிப்பாக பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் தங்கள் நிலையை திடீரென மாற்றிக் கொண்டால்...

***

அண்மையில் புதிய தலைமுறை தொலைகாட்சி தனது அணுசக்தி கொள்கையை திடீரென மாற்றியுள்ளதாக தோன்றுகிறது.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தை மக்களுக்கு எடுத்துக் கூறியதில் புதிய தலைமுறை தொலைகாட்சியின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. சென்னையில் இருந்து நேரடி ஒளிபரப்பு சாதனத்தையும், சிறப்பு செய்தியாளர்களையும் அனுப்பி போராட்டக்காரர்களுக்கு உதவி செய்தது.

போராட்டக்காரர்கள் தமிழ்நாட்டு முதலமைச்சர், இந்தியப் பிரதமர் ஆகியோரை சந்திக்கும் வரை புதிய தலைமுறை தொலைகாட்சியின் செய்திகள் போராடிய மக்களுக்கு ஆதரவாகவே இருந்தது.

இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.

கல்பாக்கம் அணுஉலைகள் பாதுகாப்பாக உள்ளன. கல்பாக்கத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. கல்பாக்கம் மற்றும் அணுசக்தி குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. கூடங்குளம் போராட்டத்தால் அணு உலை பணியாளர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. கூடங்குளம் போராட்டத்தை யாரோ தூண்டி விடுகிறார்கள். அதில் அந்நிய சதி இருக்கிறது என்ற தொனியில் செய்திகள் வெளியாகின்றன.

புதிய தலைமுறை இதழோ மேலும் ஒருபடி சென்று தலையங்கமும், ஒரு கட்டுரையும் தீட்டியுள்ளது. புதிய தலைமுறை இதழின் ஆசிரியர் திரு.மாலன் முன்னொரு காலத்தில் அணுசக்தியின் விமர்சகராகவே இருந்ததாக எனக்கு நினைவு இருக்கிறது. நானும் அவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில்  உருவான புரிதல் அது. புதிய தலைமுறை ஆசிரியர் திரு. மாலனின் கருத்து தற்போது மாறியுள்ளதாக தோன்றுகிறது.

திரு. மாலன் போன்றவர்களுக்கு பல நேரங்களில் சிக்கல்கள் ஏற்படுவது உண்டு. அவர் குமுதம் இதழில் பணியாற்றியபோது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரது கழுத்திலும் தூக்குக்கயிறு மாட்டி, அதற்கான லீவர் இழுக்கப்படும் சப்தம் கேட்க வேண்டும்! என்று பொருள்பட அவர் எழுதியதாக நினைவு. நிச்சயம் அது அவரது கருத்தாக இருக்க முடியாது என்றே நான் இப்போதும் நம்புகிறேன்.

 பப்ளிக் சென்டிமென்ட்க்கு எதிராகவும், ஊடக நிறுவன அதிபர்களின் கருத்துக்கு எதிராகவும் எழுத முடியாத நிலையே அனைத்து பத்திரிகையாளருக்குமான பொது விதி! இதில் அடையாளங்கள் அற்ற சாமானிய பத்திரிகையாளர்கள் தப்பி விடுவார்கள். மாலன் போன்ற பிரபலமானவர்கள் மட்டும் மக்களின் கோபத்திற்கு ஆளாவார்கள்.

அணுஉலை விவகாரத்திலும் அப்படித்தானா என்பது தெரியவில்லை. அவரது கருத்து உண்மையிலேயே மாறியும் இருக்கலாம். மாறாமலும் இருக்கலாம். ஆனால் அதைவிட முக்கியமாக நான் கருதுவது, புதிய தலைமுறை ஊடகத்தை நடத்தும் எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத்தில் அணுசக்தி பொறியியல் பயிற்றுவிக்கப்படுகிறது. இளநிலை (B.Tech.) பட்டத்திலிருந்து, ஆய்வு முனைவர் (Ph.D) பட்டம்வரை இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது. அணுசக்தித் துறை உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுவருவதாகவும், அணுசக்தி பொறியியல் படிப்பவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் இணையதளம் கூறுகிறது.


இந்த நிலையில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை சிறப்பாக எடுத்துக்கூறும் விதத்தில் புதிய தலைமுறை தொலைகாட்சியில் வெளியான செய்திகள் எனக்கு துவக்கத்திலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

புதிய தலைமுறை தொலைகாட்சியின் தற்போதைய நிலை எனக்கு அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இந்திய-தமிழக ஊடக வரலாற்றில் இது புதிதான நிகழ்ச்சியோ, புதிரான நிகழ்ச்சியோ அல்ல!

புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் பலமுறை வாழ்த்து கூறியிருக்கிறேன். அந்த தொலைகாட்சியை விமர்சனம் செய்வதற்கு சற்றே பெரிய பதிவு தேவைப்படுகிறது, அவ்வளவுதான்!


பின்குறிப்பு: கூடங்குளத்தில் அணுஉலை கட்ட ஆரம்பித்து சுமார் 25 வருடங்களாக என்ன செய்தீர்கள் என்ற கேள்வி பரவலாக கேட்கப்படுகிறது. சுமார் 25 வருடங்களாக அதை எதிர்த்து போராட்டமும் நடைபெற்றே வருகிறது. 

பத்திரிகையாளர்கள் ஞாநி, ஏ.எஸ். பன்னீர்செல்வன், ரமேஷ் (நாகார்ஜூனன்) போன்றவர்கள் உட்பட பலரும் அதில் பங்கேற்றனர். 1989ம் ஆண்டிலேயே எழுத்தாளர் ராஜேந்திர சோழன் அவர்கள் அஸ்வகோஷ் என்ற புனைப் பெயரில் அணுசக்தி மர்மம்! தெரிந்ததும், தெரியாததும் என்று சுமார் 200 பக்க அளவில் விரிவான புத்தகம் எழுதியுள்ளார். அதனை தற்போது மறுபதிப்பு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. 

எனவே கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தின் வயது: சுமார் 25 ஆண்டுகள் !
தொடர்புடைய பதிவு:  கூடங்குளம் போராட்டம் – ஒரு அற்புத அனுபவம்

பின் குறிப்பு: இப்பதிவு குறித்து 'புதிய தலைமுறை' ஆசிரியர் திரு. மாலன் அவர்கள் கருத்து கருத்து தெரிவித்துள்ளார். அதை அப்படியே இங்கு தருகிறேன்...

அன்புள்ள சுந்தரராஜன்,


என்ன பிரச்சினை எனத் தெரியவில்லை. இத்துடன் உள்ள பின்னூட்டத்தை இரண்டு முறை  உங்கள் வலைப்பூவிற்கு அனுப்பினேன். ஆனால் அது அதை ஏற்க மறுத்துவிட்டது. 

எனவே மடலாக அனுப்புகிறேன்.

வெளியிடுவீர்களா?

அன்புடன்
மாலன் 


***

வெறும் யூகங்களின் அடிப்படையில் கற்பனை கலந்து சாமர்த்தியமாக உங்கள் பதிவு எழுதப்பட்டிருப்பதால் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்.

1. எந்த ஒரு விஷயமானாலும் எல்லாக் கோணங்களையும் அளிக்க வேண்டும் என்பதுதான் புதிய தலைமுறை வார இதழ், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கை. அதைத்தான் புதியதலைமுறை ஊடகங்கள் இப்போதும் எப்போதும் பின்பற்றிவருகின்றன. சிலவாரங்களுக்கு முன்பு கூடங்குளம் கொதிக்கிறதுஎன்ற தலைப்பில்  புதிய தலைமுறை வார இதழ் கவர் ஸ்டொரி வெளியிட்ட போது, அங்குள்ள மக்களின் கருத்துக்களை வெளியிட்டதைப் போலவே, அணு விஞ்ஞானி ஜெயபாரதனின் கருத்துக்களையும் வெளியிட்டோம். அதே போல போராட்ட செய்திகளை எப்படி போராட்டம் நடந்த இடத்திற்கே சென்று ஒளிபரப்பினோமோ அதே போல கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கும் சென்று அங்குள்ள நிலைமைகளையும் கருத்துக்களையும் ஒளிபரப்பினோம். ஒரே விவாத அரங்கில் அணு மின் நிலைய விஞ்ஞானிகள் மூவரையும், அணு உலைக்கு எதிர்ப்பானவர்கள் ஐவருக்கும் இடமளித்தோம்.

இன்னொரு உதாரணம், ராஜீவ் கொலையாளிகளுக்கான தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டம். அந்த விவாதத்தில் சுப. வீரபாண்டியனையும், சுப்ரமணிய சுவாமியையும் ஒரே நேரத்தில், கருத்துக்களை வெளியிட வாய்ப்பளித்தோம். பேரறிவாளனின் அம்மா, முருகனின் மகள் ஆகியோரது பேட்டிகளை ஒளிபரப்பியது போலவே கார்த்திகேயன், ரகோத்தமன் ஆகியோரின் கருத்துக்களையும் ஒளிபரப்பினோம்.

எனவே நாங்கள் நிலை மாறிவிட்டோம் அதுவும் எஸ்.ஆர்.எம் பலகலைக்கழகக்த்தின் காரணமாக எனச் சொல்வது, மென்மையாகச் சொன்னால் அபத்தமான பிதற்றல்

எஸ்.ஆர்.எம் பலகலைக்கழகம் எத்தனையோ பாடங்களை போதித்து வருகிறது. நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஆனால் புதிய தலைமுறை ஊடகங்கள் அவற்றுக்கு தகுதியற்ற முக்கியத்துவங்களை அளிப்பதில்லை. இதை புதிய தலைமுறை, புதிய தலைமுறைக் கல்வி ஆகியவற்றின் கடந்த இரண்டு இதழகளைப் புரட்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இரு தரப்புக்கும் இடமளிப்பது புதிய தலைமுறைக்குப் புதிதல்ல. ஆனால் அது போன்ற நடைமுறைகள் உங்களைப் போன்ற தமிழ்த் தொலைக்காட்சி நேயர்களுக்குப் புதிது.

2.நான் அணு ஆயுதங்களுக்கு எதிரானவன். இப்போதும் அதே நிலைதான். ஆனால் அணு சக்திக்கு எதிரானவன் அல்ல. இன்று பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் ஆகிய பிரசினைகள் நம் முன் பூதாகரமாக வளர்ந்து வரும் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது அணுமின்சாரம் பற்றிய மறு சிந்தனைகள் அவசியமாகிறது. அணு மின் நிலையங்களில் விபத்து என்பது ஒரு probabilityதான். ஆனால் பருவநிலை மாற்றம் என்பது ஒரு reality. இதைக் குறித்து இரண்டு மூன்ற் நாள்களுக்கு முன்தான் நாம் உங்கள் பேஸ்புக்கில் விவாதித்தோம்

3.“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரது கழுத்திலும் தூக்குக்கயிறு மாட்டி, அதற்கான லீவர் இழுக்கப்படும் சப்தம் கேட்க வேண்டும்!என்று பொருள்பட நான் எழுதியதாக ஒரு அவதூறுப் பிரசாரம் (smear campaign) நீண்ட நாள்களாக நடந்து கொண்டிருக்கிறது. அப்படி நான் எப்போதும் எழுதியதில்லை. அப்படி நான் எழுதியதாகச் சொல்பவர்கள் அதை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க வேண்டும். அதுதான் நாணயமானது.

நான் தூக்கு தண்டனையை ஆதரிப்பவன் இல்லை. கவிஞர் தாமரை நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கூட கையெழுத்திட்டிருக்கிறேன். அவரையே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 

4. நான் எத்தனையோ முறை எத்தனையோ விஷயங்களில் வெகுஜன கருத்திலிருந்து முரண்பட்டு என் கருத்துக்களை வைத்திருக்கிறேன். அதே நேரம் என் பொறுப்பில் உள்ள ஊடகங்களை அதற்கு மட்டுமே பயன்படுத்தியதில்லை. நம்  நாட்டில் ஒரு கலாசாரம் நெடு நாட்களாக இருக்கிறது. அது குறிப்பாக தமிழ் நாட்டில் சமூகப் போராளிகள் என்று தங்களை அறிவித்துக் கொள்கிறவர்களிடம் ஒரு இயல்பாக ஆகி விட்டதைக் காணமுடியும். கற்பு பற்றிய கருத்துக்காக குஷ்பூ மீது போடப்பட்ட வழக்குகள், சுப்ரமணியசுவாமி மீதான முட்டை வீச்சு. விடுதலைப்புலிகளுக்கு எதிரான படக்குழுவினரை சென்னையை விட்டுத் துரத்தியது, இப்படிப் பல. விவாதம் என்ற கலாசாரம் அருகி வருகிறது. கூடங்குளம் போராட்டக்காரர்கள் ஏன் பிரதமர் குழு அனுப்பும் வரை காத்திருந்து அவர்களிடம் விவாதித்துப் பார்த்து, அந்தக் குழுவின் கருத்துக்களை ஊடகங்கள் முன் வைத்துப் பின் அவசியமானால் போராட்டத்தை தொடர்ந்திருக்கக் கூடாது? அந்தக் குழுவிடம் பேசாமலே,வேலைக்குப் போகிறவர்களைத் தடுக்கிற, அவர்களை முற்றுகையிடுகிற போராட்டமாக ஏன் அதை மாற்ற வேண்டும்? அந்தப் பணியாளர்கள் என்ன செய்தார்கள், அவர்களைச் சிறை வைக்க?

நீங்கள் இந்தப் பதிவை எழுதும் முன் என்னிடம் தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டிருக்கலாம். இதே விளக்கங்களை உங்களுக்கு அளித்திருப்பேன்.

உங்களிடம் கற்பனை நிறையவே இருக்கிறது. வழக்க்றிஞர்களுக்குப் பொய்கள் கை கொடுக்கலாம். ஆனால் கற்பனை உதவாது.

***

மரியாதைக்குரிய ஆசிரியர் மாலன் அவர்களுக்கு,


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரது கழுத்திலும் தூக்குக்கயிறு மாட்டி, அதற்கான லீவர் இழுக்கப்படும் சப்தம் கேட்க வேண்டும்! என்று பொருள்படும் வாசகத்தை நீங்கள் எழுதவில்லை என்பதை நான் ஏற்கிறேன். 


ஒரு இதழின் ஆசிரியர் குழுவினர் சார்பில் வெளியாகும் அனைத்துக் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியர் பொறுப்பேற்க முடியாது என்ற நடைமுறை அம்சத்தை  உணர்கிறேன். 


தங்களை அவதூறு செய்யும் நோக்கத்துடன் இந்த விவகாரத்தை நான் வெளியிடவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் தங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். 


தங்கள் கருத்துரையில் உள்ள மற்ற அம்சங்கள் குறித்து தனியாக எழுதுகிறேன். 


நன்றி,


அன்புடன்
சுந்தரராஜன்

37 கருத்துகள்:

அரவிந்தன் சொன்னது…

88-வருடம் நாங்கள் நடத்திய மெழுகுவர்த்தி கையெழுத்து பத்த்ரிக்கையில்”தேவைதானா இந்த விபரீத விளையாட்டு” என்ற தலைப்பில் கூடங்குளம் அணு மின்நிலையம் குறித்து ஒரு கட்டுரை எழுதினோம்.

கல்வெட்டு சொன்னது…

//“பப்ளிக் சென்டிமென்ட்”க்கு எதிராகவும், ஊடக நிறுவன அதிபர்களின் கருத்துக்கு எதிராகவும் எழுத முடியாத நிலையே அனைத்து பத்திரிகையாளருக்குமான பொது விதி! இதில் அடையாளங்கள் அற்ற சாமானிய பத்திரிகையாளர்கள் தப்பி விடுவார்கள். மாலன் போன்ற பிரபலமானவர்கள் மட்டும் மக்களின் கோபத்திற்கு ஆளாவார்கள். //

100% true

Ramachandranwrites சொன்னது…

மாற்றம் என்பது மானுட தத்துவம். அதனால் மாலன் மாறியது ஒன்றும் தவறு என்று சொல்ல முடியாது.
இன்றைய நிலையில் வேறு என்ன விதத்தில் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்ற பதிலையும் உங்கள் இடம் இருந்து எதிர் பார்கிறேன்.

Prabu Krishna சொன்னது…

தகவலுக்கு நன்றி ஸார். கூடங்குளம் விஷயத்தில் சில நான் அறியாதது. "புதிய தலைமுறை" இங்கே (பெங்களூரு) வருவதில்லை.அதனால் விஷயங்கள் தெரியவில்லை.

சவுக்கு சொன்னது…

அன்பார்ந்த ராமச்சந்திரன், மாற்றம் இயல்பானதா அல்லது 'கிரியாஊக்கியால்' ஏற்பட்டதா என்பது ஆய்வுக்குறிய விஷயம் அல்லவா ?

பிரபாகரன் சொன்னது…

ஒரு பெரும் கல்வி வியாபாரியு்ம், சாதிகட்சி நடத்தும் அரசியல்வாதியுமான ஒருவரால் நடத்தப்படும் ஊடகங்கள் எப்படி முற்போக்கானதாகவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டதாக இருக்கமுடியும்.

சீனி மோகன் சொன்னது…

1991-இல் கூடங்குளத்தை மையமாக வைத்து எல்லா அணு உலைகளுக்கும் எதிராகவும் அவை வெறும் ஆயுத உற்பத்திக்கான தயாரிப்பு மையங்கள் என்பதையும் அம்பலப்படுத்துவதற்காக ‘இறுதி மனிதன்’ என்று ஒரு சிறுகதை எழுதி இருந்தேன். அது என்னுடைய ‘இரவுகள் உதிரும்’ தொகுப்பிலும், பிறகு 2003 இல் வெளிவந்த ’சீனி மோகன் சிறுகதைகள்’ தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கின்றன. இரண்டு புத்தகங்களும் எல்லா அரசு நூலகங்களிலும் கிடைக்கின்றன.

evilatheist சொன்னது…

koodankulam anu min nilayathai ethirkkum entha komaliyavathu current illanu sollunga, appa irukku kacheri,2004 tsunami vanthuthe athanala tamilnattukku erpadatha damagea? why not protest AGAINST tsunami?In what Siesmic zone is Koodankulam?

சக்தி சொன்னது…

அந்த செய்திகளை நானும் பார்த்தேன். இரு தரப்பு கருத்துக்களையும் வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் என்ன தவறு. ஒரு தலைப்பட்சமான கருத்துக்களையே...அதுவும் துண்டு துண்டாக...கத்தரித்து வெளியிடும் தொலைக்காட்சிகளைப் பார்த்து பார்த்து புளித்துப்போன என்னைப்போன்றவர்களுக்கு..இரு தரப்பு கருத்துக்களையும் எடுத்து முன்வைக்கும் அந்த தொலைக்காட்சியை நான் பாராட்டுகிறேன். மேலும் ...ஒவ்வொருவருக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும்...சுந்தரராஜன் போன்ற தனிநபர் அல்லது அவரது குழுவினரின் கருத்துக்களையே ஒரு ஊடகம் ஒத்து ஊத வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்???

சுந்தரராஜன் சொன்னது…

கருத்தளித்த அரவிந்தன், கல்வெட்டு, பிரபு கிருஷ்ணா, சவுக்கு, பிரபாகரன், சீனிமோகன் ஆகியோருக்கு நன்றி.

சுந்தரராஜன் சொன்னது…

அன்பு நண்பர் ராமசந்திரன் அவர்களுக்கு,

அறிவுத்திறனும், ஆங்கிலப்புலமையும் நிறைந்த நீங்கள் மாற்று எரிசக்தி குறித்து என்னிடம் கேட்பது வியப்பளிக்கிறது. நீங்கள் முயற்சித்தால் எனக்குத் தேவையான தகவல்களை திரட்டி வழங்கும் திறன் உங்களுக்கு உண்டு என்பது எனக்கு தெரியும்.

எனவே...

சுந்தரராஜன் சொன்னது…

அன்பார்ந்த momentumcalls,

சுனாமியின் நேரடி பாதிப்பு சுனாமி நீங்கிய உடனே விலகி விடும். அதனால் ஏற்படும் உயிர் மற்றும் பொருள் இழப்புகள் சில காலத்துக்கு நீடிக்கலாம்.

ஆனால் அணுஉலையின் - அணுக்கதிரியக்கத்தின் பாதிப்போ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதை அணு விஞ்ஞானிகளே மறுக்க மாட்டார்கள்.

எனவே இவை இரண்டையும் ஒப்பிட முடியாது.

சுந்தரராஜன் சொன்னது…

அன்பார்ந்த நண்பர் சக்தி அவர்களுக்கு,

அனைத்து தொலைகாட்சிகளையும் மேலும் சில காலத்திற்கு தொடர்ந்து பார்க்கவும்.

நாம் நிறைய பேச வேண்டி உள்ளது. அது குறித்து தனிப்பதிவு எழுதும் எண்ணமும் உள்ளது. பேசலாம். நன்றி!

பெயரில்லா சொன்னது…

http://www.timesnow.tv/Koodankulam-row-Kalam-backs-N-plant/articleshow/4386504.cms

அப்துல் கலாமை கொண்டாடிய தமிழர்களுக்கு இப்போது ஒரு சங்கடம்...

சுந்தரராஜன் சொன்னது…

அப்துல் கலாமை கொண்டாடிய தமிழர்களுக்கு இப்போது சங்கடம் ஏற்படலாம்.

எனக்கல்ல..

நான் அவரை எப்போதும் நம்பியதோ, கொண்டாடியதோ இல்லை!

பெயரில்லா சொன்னது…

// நான் அவரை எப்போதும் நம்பியதோ, கொண்டாடியதோ இல்லை! //
me too..

விடுதலை சொன்னது…

அமெரிக்காவுடன் அணுசக்தி ஓப்பந்தம் போட மண்மோகன்சிங் முயற்சித்தபோது அதை தடுக்க கடுமையான இன்னலுக்கும் பழிசொல்லுக்கும் ஆளாக்கப்பட்ட இடதுசாரிகட்சிகளை ஆதரிக்கவும் இல்லை அவர்கள் அணுசக்தி குறித்த முன்எச்சரிக்கைகளை கண்டுகொள்ளவும் இல்லை. அப்போது ஒரு நிலைப்பாடு இப்போது ஒருநிலைப்பாடு இது தான் நமது மக்களின் சாபகேடு

விடுதலை சொன்னது…

1270 ஏக்கர் பரப்பளவில் கடலூர் பவர் கார்பரேஷன் லிமிட்டெட் என்கிற அனல் மின்நிலையம் தியாகவெளி, நொச்சிகாடு, நடுதிட்டு, சித்திரப்பேட்டை ஆகிய கிராமங்களை உள்ளடக்கி வருகிறது. 1380 ஏக்கர் பரப்பளவில் எஸ்.ஆர்.எம் அனல் மின்நிலையம் பூவாலை, பால்வாத்துன்னான், வேலங்கிப்பட்டு, அலமேலுமங்காபுரம், மணிக்கொள்ளை ஆகிய கிராமங்களை உள்ளடக்கி வருகிறது.

அழிவு பேரழிவு இவை இரண்டையும் தமிழக கடற்கரையோரம் கொண்டுவர துடிக்கும் அனல்மின்நிலையங்களையும் தடுக்கவேண்டும் அதற்காகபோராடி வரும் கடலூர் மாவட்ட மக்களுக்கு அதரவாகவும் குரல் கொடுக்கவேண்டும்

che சொன்னது…

இது சுற்றுசூழல் பிரச்சணை மற்றுமின்றி இடிந்தகரை,கூத்தங்குளி,கூட்டபுளி,உவரி,விஜயநாராயணம் போன்ற பல நூற்றுகணக்கான மீனவமக்களின் வாழவாதாரம் இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது.சத்தீஸ்கர் தண்டகாரன்ய மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு துரத்தபடுவதுபோல் தான் இதுவும். பழங்குடிகளுக்கு காடுகள் போன்று தான் மீனவ மக்களுக்கு கடலும்... மீன்பிடி ஒழுங்காற்று சட்டம்,சிங்கள் கடற்படை,இயற்கை சீற்றங்கள்,இப்போது இந்த பாழாய்போன அனுமின் நிலையம் வேறு... இதில் கிடைக்கும் மின்சாரம் எப்படியும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் போக போகிறது.அதற்கு நாங்கள் ஏன் எங்கள் வாழ்வாதாரத்தை விட்டுகொடுக்கவேண்டும்

baskar சொன்னது…

கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டமாக உள்ளதை தமிழக,கேரள மக்களின் போராட்டமாக விரிவாக்கம் செய்வதின் அளவில்தான் போராட்டத்தின் வெற்றி அமையும் என்பதை போராட்டக்குழு கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும்.ஏனென்றால் போராட்டத்திற்கு இப்போதைக்கு ஜெயா ஏதும் இதுவரை இடையூறு செய்யாவிட்டாலும் அடிப்படையில் ஜெயாவின் கருத்து கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டம் தவறில்லை என்பதுதான் என்பதை போராட்டக்குழு மறந்துவிடக்கூடாது
http://suraavali.blogspot.com/2011/10/blog-post_15.html

suraavali சொன்னது…

கூடங்குளம்:இறுக்கம்+விரிவாக்கம்=வெற்றி.

கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டமாக உள்ளதை தமிழக,கேரள மக்களின் போராட்டமாக விரிவாக்கம் செய்வதின் அளவில்தான் போராட்டத்தின் வெற்றி அமையும் என்பதை போராட்டக்குழு கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும்.ஏனென்றால் போராட்டத்திற்கு இப்போதைக்கு ஜெயா ஏதும் இதுவரை இடையூறு செய்யாவிட்டாலும் அடிப்படையில் ஜெயாவின் கருத்து கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டம் தவறில்லை என்பதுதான் என்பதை போராட்டக்குழு மறந்துவிடக்கூடாது.
http://suraavali.blogspot.com/2011/10/blog-post_15.html

சுந்தரராஜன் சொன்னது…

புதிய தலைமுறை ஆசிரியர் திரு மாலன் அவர்கள் இட விரும்பிய பின்னூட்டம் என்ன காரணத்தாலோ பிளாக்கர் ஏற்க மறுத்துவிட்டது. எனவே எனக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதனை இங்கு அப்படியே கீழே தருகிறேன்.

-சுந்தரராஜன்.

***வெறும் யூகங்களின் அடிப்படையில் கற்பனை கலந்து சாமர்த்தியமாக உங்கள் பதிவு எழுதப்பட்டிருப்பதால் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்.

1.எந்த ஒரு விஷயமானாலும் எல்லாக் கோணங்களையும் அளிக்க வேண்டும் என்பதுதான் புதிய தலைமுறை வார இதழ், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கை. அதைத்தான் புதியதலைமுறை ஊடகங்கள் இப்போதும் எப்போதும் பின்பற்றிவருகின்றன. சிலவாரங்களுக்கு முன்பு “கூடங்குளம் கொதிக்கிறது” என்ற தலைப்பில் புதிய தலைமுறை வார இதழ் கவர் ஸ்டொரி வெளியிட்ட போது, அங்குள்ள மக்களின் கருத்துக்களை வெளியிட்டதைப் போலவே, அணு விஞ்ஞானி ஜெயபாரதனின் கருத்துக்களையும் வெளியிட்டோம். அதே போல போராட்ட செய்திகளை எப்படி போராட்டம் நடந்த இடத்திற்கே சென்று ஒளிபரப்பினோமோ அதே போல கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கும் சென்று அங்குள்ள நிலைமைகளையும் கருத்துக்களையும் ஒளிபரப்பினோம். ஒரே விவாத அரங்கில் அணு மின் நிலைய விஞ்ஞானிகள் மூவரையும், அணு உலைக்கு எதிர்ப்பானவர்கள் ஐவருக்கும் இடமளித்தோம்.

இன்னொரு உதாரணம், ராஜீவ் கொலையாளிகளுக்கான தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டம். அந்த விவாதத்தில் சுப. வீரபாண்டியனையும், சுப்ரமணிய சுவாமியையும் ஒரே நேரத்தில், கருத்துக்களை வெளியிட வாய்ப்பளித்தோம். பேரறிவாளனின் அம்மா, முருகனின் மகள் ஆகியோரது பேட்டிகளை ஒளிபரப்பியது போலவே கார்த்திகேயன், ரகோத்தமன் ஆகியோரின் கருத்துக்களையும் ஒளிபரப்பினோம்.

எனவே நாங்கள் நிலை மாறிவிட்டோம் அதுவும் எஸ்.ஆர்.எம் பலகலைக்கழகக்த்தின் காரணமாக எனச் சொல்வது, மென்மையாகச் சொன்னால் அபத்தமான பிதற்றல்.
எஸ்.ஆர்.எம் பலகலைக்கழகம் எத்தனையோ பாடங்களை போதித்து வருகிறது . நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஆனால் புதிய தலைமுறை ஊடகங்கள் அவற்றுக்கு தகுதியற்ற முக்கியத்துவங்களை அளிப்பதில்லை. இதை புதிய தலைமுறை, புதிய தலைமுறைக் கல்வி ஆகியவற்றின் கடந்த இரண்டு இதழகளைப் புரட்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இரு தரப்புக்கும் இடமளிப்பது புதிய தலைமுறைக்குப் புதிதல்ல. ஆனால் அது போன்ற நடைமுறைகள் உங்களைப் போன்ற தமிழ்த் தொலைக்காட்சி நேயர்களுக்குப் புதிது.

...தொடரும்

சுந்தரராஜன் சொன்னது…

திரு. மாலன் அவர்களின் பின்னூட்டம் 2ம் பகுதி...

2.நான் அணு ஆயுதங்களுக்கு எதிரானவன். இப்போதும் அதே நிலைதான். ஆனால் அணு சக்திக்கு எதிரானவன் அல்ல. இன்று பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் ஆகிய பிரசினைகள் நம் முன் பூதாகரமாக வளர்ந்து வரும் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது அணுமின்சாரம் பற்றிய மறு சிந்தனைகள் அவசியமாகிறது. அணு மின் நிலையங்களில் விபத்து என்பது ஒரு probabilityதான். ஆனால் பருவநிலை மாற்றம் என்பது ஒரு reality. இதைக் குறித்து இரண்டு மூன்ற் நாள்களுக்கு முன்தான் நாம் உங்கள் பேஸ்புக்கில் விவாதித்தோம்

3."“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரது கழுத்திலும் தூக்குக்கயிறு மாட்டி, அதற்கான லீவர் இழுக்கப்படும் சப்தம் கேட்க வேண்டும்!” என்று பொருள்பட நான் எழுதியதாக ஒரு அவதூறுப் பிரசாரம் (smear campaign) நீண்ட நாள்களாக நடந்து கொண்டிருக்கிறது. அப்படி நான் எப்போதும் எழுதியதில்லை. அப்படி நான் எழுதியதாகச் சொல்பவர்கள் அதை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க வேண்டும். அதுதான் நாணயமானது.
நான் தூக்கு தண்டனையை ஆதரிப்பவன் இல்லை. கவிஞர் தாமரை நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கூட கையெழுத்திட்டிருக்கிறேன். அவரையே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
4. நான் எத்தனையோ முறை எத்தனையோ விஷயங்களில் வெகுஜன கருத்திலிருந்து முரண்பட்டு என் கருத்துக்களை வைத்திருக்கிறேன். அதே நேரம் என் பொறுப்பில் உள்ள ஊடகங்களை அதற்கு மட்டுமே பயன்படுத்தியதில்லை. நம் நாட்டில் ஒரு கலாசாரம் நெடு நாட்களாக இருக்கிறது. அது குறிப்பாக தமிழ் நாட்டில் சமூகப் போராளிகள் என்று தங்களை அறிவித்துக் கொள்கிறவர்களிடம் ஒரு இயல்பாக ஆகி விட்டதைக் காணமுடியும். கற்பு பற்றிய கருத்துக்காக குஷ்பூ மீது போடப்பட்ட வழக்குகள், சுப்ரமணியசுவாமி மீதான முட்டை வீச்சு. விடுதலைப்புலிகளுக்கு எதிரான படக்குழுவினரை சென்னையை விட்டுத் துரத்தியது, இப்படிப் பல. விவாதம் என்ற கலாசாரம் அருகி வருகிறது. கூடங்குளம் போராட்டக்காரர்கள் ஏன் பிரதமர் குழு அனுப்பும் வரை காத்திருந்து அவர்களிடம் விவாதித்துப் பார்த்து, அந்தக் குழுவின் கருத்துக்களை ஊடகங்கள் முன் வைத்துப் பின் அவசியமானால் போராட்டத்தை தொடர்ந்திருக்கக் கூடாது? அந்தக் குழுவிடம் பேசாமலே,வேலைக்குப் போகிறவர்களைத் தடுக்கிற, அவர்களை முற்றுகையிடுகிற போராட்டமாக ஏன் அதை மாற்ற வேண்டும்? அந்தப் பணியாளர்கள் என்ன செய்தார்கள், அவர்களைச் சிறை வைக்க?

நீங்கள் இந்தப் பதிவை எழுதும் முன் என்னிடம் தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டிருக்கலாம். இதே விளக்கங்களை உங்களுக்கு அளித்திருப்பேன்.

உங்களிடம் கற்பனை நிறையவே இருக்கிறது. வழக்க்றிஞர்களுக்குப் பொய்கள் கை கொடுக்கலாம். ஆனால் கற்பனை உதவாது.

...முற்றும்

மாரிராஜன் சொன்னது…

மதுரையை சேர்ந்த தமிழகத்தின் மூத்த சமூக செயல்பாட்டாளர் ஒய். டேவிட் அவர்கள் 1984 லிருந்து போராடுகிறார். 1984 கன்னியாகுமரியில் துவங்கி சென்னை வரை 100 நாள் நடைபயணம் மேற்கொண்டார்.


2004 ளில் 10000 பேரை கொண்ட மாபெரும் மாநாடு நடத்தினார்.

அதனை தொடர்ந்து உதயகுமாரை அமைப்பாளராக கொண்ட அணு உலை எதிர்ப்பு இயக்கம் துவக்கப்பட்டு தொடர் போராட்டங்கள் நடந்து வந்துள்ளன. தற்போது எழுச்சி பெற்றுள்ளது.

பெருமாள் தேவன் செய்திகள் சொன்னது…

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகத்தில் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. ஆனால் இதுபோன்ற கருத்து தாவல்கள் ஏற்பட்டால் அந்த நம்பிக்கை பொய்யாக்கப்படும்.

வேங்கடப்பிரகாஷ் சொன்னது…

புதிய தலைமுறை, ஊதியத்திற்காகப் பணிசெய்வோரால் நிரம்பியதல்ல. நடுநிலை தவறினாலோ, நிர்ப்பந்தங்கள் எழுந்தாலோ உடனடியாக வெளியேறிவிடும் திண்மை பெற்றவர்களால் நிரம்பியது. கடைநிலை ஊழியர்கள் வரை மிகுந்த மதிப்புடன் நடத்தப்படும் நிறுவனம் இது. இங்கு தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள் தங்களைத் தனித்து இருத்திக்கொள்பவர்கள் அல்ல. ஆரோக்கியமான விவாதங்கள் தினமும் அரங்கேறும் களம் இது. அதனால் யாரும் வருந்தவேண்டாம். தமிழ் ஊடக வரலாற்றில் வாராது வந்த புதிய தலைமுறையை நேர்மை தவறியதாய் ஒருபோதும் பார்க்கும் காலம் வராது. கூடங்குளம் பிரச்னையைப் பொறுத்தமட்டிலும் ஏராளமான பொருட்செலவில் இரு தரப்பு நிலையையும் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் பணியை எங்கள் குழுவினர் அயராமல் செய்து வருகின்றனர். மும்பை , டெல்லி, சென்னை, கூடங்குளம் என்று இரவு பகல் பாராமல் குழுவினர் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். ஒரு பக்கம் மட்டுமே சரி என்று ஊடகத்தினர் எப்படி இருக்கமுடியும்? போராட்டக்குழுவினரின் உடல்நிலை குறித்த பதிவும் வந்தது. மின்சாரத்தின் தேவை குறித்த பதிவும் வந்தது. தமிழக அரசின் நிலைப்பாடும் வந்தது. டெல்லியின் அரசியல் நிர்பந்தமும் மக்களிடம் கொண்டுசேர்க்கப்பட்டது. மீண்டும் போராட்டம் தொடங்கியபோது அதுவும் வந்தது. அணுவுலை பாதுகாப்பாயிருக்கிறது என்று வல்லுநர் திரையில் விளக்கிய நேரத்தில் கல்பாக்கம் பகுதி மக்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் பதிவும் வந்தது. திரு.மாலன் அவர்கள் சொன்னதுபோல அங்கிருந்து மூன்று அதிகாரிகள் நிலையத்திற்கு வந்தபோது ஐந்துபேர் எதிர்தரப்பில் வந்தனர். இருதரப்பிற்கும் உரிய நேரம் தரவேண்டும் என்பதற்காக அரை மணி நேரம் ஒருமணிநேரமாக நீட்டிக்கப்பட்டது. மக்கள் மன்றத்திற்கு அதிகாரிகளைக் கொண்டுவந்து பதில் பெற வைக்கும் முயற்சியின் தொடக்கம்தானே அது! அதிகாரிகளின் உறவினர்களும் போராட்டக்களத்திலிருப்பது போன்ற விநோத நிலை இப்போது. போராடுவதும் மக்களே. அணுமின்நிலையத்தின் முதலாளிகளும் மக்களே. இதில் ஒருபக்கச் சார்பெடுப்பது யாருக்காக? சொல்வது எளிது. செய்வது கடினம் நண்பர்களே. தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் மாற்றுக்கருத்துக்கள் உண்டு. ஆனால் புதிய தலைமுறை ஊடகவியலாளர்களாக எங்களுக்கு ஒரே ஒரு கருத்துமட்டும்தான் உண்டு. அது இந்தப் புதிய தலைமுறைக் குழந்தையை நல்ல முறையில் ஆரோக்கியமாய் வளர்க்க வேண்டும் என்பதுதான். இப்போதே இதன் தொடர்ச்சியாக மேலும் சில ஊடகங்கள் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியிருக்கின்றன. தொடர்ந்து ஆதரவளியுங்கள். மதிப்பு மிக்கவர்கள், தவறாகப் புரிந்துகொள்வதோடு மேலும் பலர் தவறாகப் புரிந்துகொள்ள அனுமதித்துவிடாதீர்கள். இருதரப்புக் கருத்துக்களையும் மக்கள் முன் கொண்டுசேர்ப்பது ஒன்றே ஊடகத்தின் பணி. இந்த வாரம் இப்படி நினைப்பதும், அடுத்த வாரம் அப்படி நினைப்பதும் மேம்போக்காகப் பார்ப்பவர் சொல்வது. எங்கள் பணி பாடம் நடத்துவதோ , கருத்தைத் திணிப்பதோ அல்ல. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.உள்ளது உள்ளபடி காட்டினால் போதும். அதைத்தான் , அதை மட்டும்தான் தொடர்ந்து செய்யவிருக்கிறோம். எங்கள் நிறுவனத்திலேயே பொறுப்பிலிருக்கும் திரு.மாலன் அவர்களை நான் இதுவரைத் தனித்துப் பார்த்துப் பேசியதில்லை என்றபோதும் என்னால் சொல்ல முடியும் அவர் கருத்தும் என் கருத்தும் இங்கு அனைவர் கருத்தும் ஒன்றுதான். அது நேர்படப்பேசுவதுதான். எந்தச் செய்தியும் , எந்த நிறுவனம் குறித்த செய்தியும், யார் குறித்த செய்தியும் இங்கு நேர்மையற்ற முறையில் நுழைந்துவிடமுடியாது. அது எங்கள் முதலாளியினுடையதாயிருந்தாலும் கூட! நன்றி.. நண்பர்களே..

பரங்கியன் சொன்னது…

மாலன் அவர்களின் விளக்கங்களுக்கு,
வழக்கறிஞரின் பதிலை எதிர்பார்கிறேன்.

சுந்தரராஜன் சொன்னது…

கருத்து கூறிய நண்பர்கள் பெயரில்லா, சே, பாஸ்கர், விடுதலை, சூறாவளி, தேவன், மாரிராஜன், பரங்கியன் ஆகிய அனைவருக்கும் நன்றி.

நண்பர் பரங்கியன்,

உங்கள் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும்.

சுந்தரராஜன் சொன்னது…

அன்பு நண்பர் வேங்கடப்பிரகாஷ் அவர்களுக்கு,

உங்கள் ஊடக கனவுகள் நனவாக வாழ்த்துகள்.

நானும் கூட தங்களைப்போலவே ஏராளமான கனவுகளுடன் ஊடகத்தில் சிலகாலம் வாழ்ந்தவன்தான்.

எனவேதான் என் கனவுகள் நிறைவேறாவிட்டாலும், உங்களைப் போன்ற நல்லிதயங்களின் கனவுகள் நிறைவேற வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன்.

இரு தரப்பு செய்திகளை வெளியிட்டதாக கூறுகிறீர்கள். நாங்கள் தங்கள் நிறுவன செய்திகளை முழுவதுமாக பார்க்கவில்லை. நான் பார்த்த செய்திகளின் அடிப்படையிலேயே என் பதிவு அமைந்துள்ளது.

அணு உலை எதிர்ப்பாளர்கள் உலகம் முழுவதுமே கேட்கும் முக்கிய கேள்வி: அணுக்கரு கழிவுகள் குறித்துத்தான்.

இது குறித்து தங்கள் நிறுவனம், எந்த அணு ஆதரவாளர்களிடம் என்ன பதிலை பெற்று வெளியிட்டது என்பது இதுவரை என் கவனத்திற்கு வரவில்லை.

அணு ஆற்றல் சூழலுக்கு கேடு விளைவிக்காதது - சிக்கனமானது போன்ற கூற்றுக்களின் நம்பகத்தன்மையை, அணுஉலைக் கழிவுகள் குறித்து பேசாமலேயே தீர்மானிக்க முடியாது.

எனவே அணுஉலைக் கழிவுகள் குறித்த விபரங்களை பெற்றுத்தருமாறு அன்புடன் கோருகிறேன்.

ஊடகங்களின் அரசியல் குறித்து பிறிதொரு சமயத்தில் விரிவாக பேசுவோம். ஏனெனில் ஊடகம் சாராத நண்பர்களுக்கு இது திசைதிருப்பும் செயலாக அமைந்துவிடலாம்.

மீண்டும் வாழ்த்துகளுடன்,

-சுந்தரராஜன்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தகுந்த நேரத்தில் சரியான பதிவு, நன்றி சுந்தர்ராஜன் நன்றி...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்னுடைய பேஸ்புக், டுவிட்டர், பஸ் எல்லாத்துலையும் உங்கள் பதிவை ஷேர் பண்ணிவிட்டேன் நண்பரே...

சுந்தரராஜன் சொன்னது…

மிக்க நன்றி நண்பர், MANO நாஞ்சில் மனோ அவர்களே!

விஸ்வநாத் சொன்னது…

பூவுலகின் நண்பர் சுந்தரராஜனுக்கு...

தமிழகத்தில் இதுவரை நிலவி வந்த ஊடக கலாச்சாரத்தினால் விரக்தி அடைந்துள்ள நிலையில் உள்ளது உங்கள் கருத்து. எதிர்மறையாகவே சிந்திப்பதால் நேர்மறை எண்ணம் உருவாகி விடாது என்பது தங்களுக்கு தெரியாதது அல்ல.

புதிய தலைமுறை தொலைக்காட்சியை தொடர்ந்து பாருங்கள். ஊடகங்களின் மீதான உங்கள் எதிர்மறை எண்ணங்கள் மாறும். புதிய முயற்சிகளை துணிச்சலோடு முன்னெடுத்துச் செல்லும் ஊடகத்தை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்த வேண்டுமே ஒழிய..போகிற போக்கில் ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிடுவது சரியானதாக இருக்காது.

ஒரு செய்தி அல்லது இரண்டு செய்தித் தொகுப்பை மட்டுமே பார்த்து ஒரு தொலைக்காட்சியின் ஒட்டு மொத்த நிலைப்பாட்டை கணிப்பதும் ...அதுவும் 24 மணி நேர செய்திச் சேனலை கணிப்பது ...ஒரு தலைப்பட்சமான எண்ணத்திற்கு இட்டுச் சென்று விடும்...பரந்த மனதோடு ஆக்கப்பூர்வ, விமர்சனங்களை முன்வையுங்கள். அது நீங்கள் விரும்பும் நாகரிக ஊடக கலாச்சாரத்திற்கு மேலும் பக்கபலமாக இருக்கும்.

நன்றியுடன்

விஸ்வநாத்

சுந்தரராஜன் சொன்னது…

நண்பர் விஸ்வநாத் அவர்களுக்கு,

நீங்கள் குறிப்பிட்டதுபோல இதுவரை நாம் சந்தித்த அனுபவங்களே நம் சிந்தனைகளை தீர்மானிக்கும் என்பதே ஏற்கிறேன்.

புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு பலமுறை ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களில் நான் பாராட்டும், நன்றியும் தெரிவித்திருக்கிறேன். புதிய தலைமுறை இணையதளத்திலும் என் பாராட்டுகளை தெரிவித்திருக்கிறேன். அதற்கு மின்னஞ்சல் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

நிறை என்று உணர்ந்ததை பாராட்டிய நான், குறை என்று உணர்ந்ததால் அதையும் சுட்டிக்காட்ட துணிந்தேன்.

அதற்காக ஒரு 24 மணிநேர சேனலை 24 மணிநேரமும் பார்த்துவிட்டுதான் விமர்சனம் செய்யவேண்டும் என்று கூற முடியாது என்பதே என் தாழ்மையான எண்ணம்.

போகிற போக்கில் எதையும் நான் கூறவில்லை என்பதை நானும் முன்னாள் செய்தியாளன் என்ற அடிப்படையில் உறுதியாக நம்புகிறேன்.

நட்புடன்,
சுந்தரராஜன்

rajanparthipan சொன்னது…

Set back like this automatically will come when a struggle pass to next stage!

வேங்கடப்பிரகாஷ் சொன்னது…

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி திரு.சுந்தர்ராஜன்.
கழிவுகள் குறித்த கேள்விகள் மட்டுமல்ல இன்னும் நிறையக் கேள்விகள் மிச்சமிருக்கின்றன. அனைத்தும் கேட்கப்படும். நான் விட்டுவிட்ட கேள்விகளை எனக்கு அனுப்புங்கள். நான் வேறு நீங்கள் வேறல்ல. நான் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்குப் பின்னாலும் இலட்சம் பேர் இருப்பர். உங்கள் கேள்விகளை என் மூலமாகத் தொடுங்கள். இதைப்படிக்கும் மற்ற நண்பர்களும் எத்தலைப்பாயினும் கேள்விகளை அனுப்புங்கள். நீங்களும் பல முறை விவாத்தில் பங்குபெற அழைக்கப்படுவீர்கள்.. ஊர்கூடித் தேரிழுப்போம். கூடங்குளம் ஒரு உதாரணம்தான். மக்கள் பிரச்னைகளுக்குப் பஞ்சமில்லை. நான் நடுநிலை ஊடகக் கனவுகளைத் தொடரலாம்தானே! ஏனென்றால் கனவில்கூட செய்ய இயலவில்லையென்றால் நனவில் எப்படி முடியும்! நன்றி

சீனி மோகன் சொன்னது…

1991 - இல் நான் எழுதிய இந்தச் சிறுகதையை நண்பர்கள் சற்று நேரம் ஒதுக்கி படியுங்கள்.

http://seenimohan.blogspot.com/2011/11/blog-post_13.html

கருத்துரையிடுக