26 டிசம்பர், 2012

சுனாமி: சில நினைவலைகள்

2004ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள். காலை 6 முதல் மதியம் 2 மணிவரை எனக்குப் பணி. பனியும், குளிரும் நிறைந்த அதிகாலையில் கிளம்பி அலுவலகம் வந்தேன். தீவுத்திடல் அருகே உள்ள ராணுவ மைதானத்தில் நடக்கும் ஒரு விளையாட்டு விழாவை செய்திக்காக கவர் செய்ய வேண்டும். 


அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்த கழிப்பறையில் சிறுநீரைக் கழிப்பதற்காக பேண்ட்டின் ஜிப்பை திறந்தபோது நான் நின்ற அலுவலகத்தின் சுவர்கள் சிறிது குலுங்குவதாக தோன்றியது. அது உண்மைதானா என்று சுதாரிப்பதற்குள் அருகே இருந்த காமெரா அறையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடுவது தெரிந்தது. நான் செல்லும் செய்திக்கான காமெரா நண்பரை தேடினேன். அவர் தொலைபேசி மூலம் என்னை அழைத்து அலுவலகத்திற்கு வெளியே காத்திருப்பதாக கூறினார். 


லிப்டிற்கு விரைந்தேன். அனைவரும் படிக்கட்டு மூலம் இறங்கிக் கொண்டிருந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டால் லிப்ட் பழுதாகி விடுமாம். அவர்களின் புத்திசாலித்தனத்தை கண்டு வியந்து கொண்டே படிமூலம் கீழே இறங்கினேன். என்னுடன் வரவேண்டிய காமெரா நண்பர், அலுவலகக் கட்டிடத்திலிருந்து சற்று விலகி நின்று அலுவலகக் கட்டிடத்தை படம் பிடிக்க ஃபோகஸ் செய்து கொண்டிருந்தார். ஏன் என்று கேட்டபோது, “நிலநடுக்கத்தில் அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்தால் அதை பதிவு செய்ய வேண்டாமா?” என்று அப்பாவியாய் கேட்டார். 


அவரை வாகனத்தில் இழுத்துப்போட்டுக் கொண்டு ராணுவ மைதானத்திற்கு சென்றேன். அங்கிருந்த வாயிற்காப்போன் இந்தியில் ஏதேதோ கேட்க, எனக்கு தெரிந்த அரைகுறை ஹிந்தியில், “முஜே ஹிந்தி பில்குல் நை மாலும்!” என்று சொல்ல, பாகிஸ்தான் தீவிரவாதியை கண்ட விஜயகாந்த் போல் கண்சிவந்து மேலும் கத்தினார், அந்த ராணுவ வீரர்! 


இது ஆகாது என்று முடிவு செய்து, வண்டியை திருப்பியபோது அலுவலகத்தில் இருந்து மற்றொரு செய்தியாளர் காயத்ரி அழைத்தார். பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் கொந்தளித்து பெரும் பிரசினையாகி இருப்பதாகவும், இருக்கும் ஒரே காமெரா நிபுணரை நான் அழைத்துவந்து விட்டேன்: எனவே உடனடியாக அலுவலகம் வந்து அவரையும் அழைத்துக் கொண்டு பட்டினப்பாக்கம் செல்லவேண்டும் என்றும் வழக்கம்போல அவசரப்பட்டார். 


ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசலற்ற சாலையில் ராக்கெட் வேகத்தில் அலுவலகம் சென்று செய்தியாளர் காயத்ரியை வாகனத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு பட்டினப்பாக்கம் சென்றேன். 


பட்டினப்பாக்கம் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கும்போதே, அந்த சாலை வரை கடல்நீர் வந்ததற்கான அறிகுறிகள் தெரிந்தன. உள்ளே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வீடுகளை கடந்து சென்றோம். திரைப்பட காட்சிகளில் வருவதுபோல மக்கள் ஊரை காலி செய்து வெளியேறிக் கொண்டிருந்தனர். அம்மக்கள் தலையில் வைத்து சுமந்து வந்த சொத்துகளில் முக்கிய இடம் வகித்தது, தொலைக்காட்சி பெட்டி! 

ஆனால் அம்மக்களில் சிலருக்கோ எங்கள் குழுவினர் மேல் காரணமற்ற கோபமும் வந்தது. இந்த .....டிவிக்காரன் இங்கேயும் வந்துட்டானுங்க.. அடிங்கடா.. என்ற குரல் வந்தது. மைக்கில் இருந்த தொலைக்காட்சி சின்னத்தை கழட்டி மறைத்துக் கொண்டு முன்னேறினோம். கால்களில் ஏதேதோ இடறின. சாலை ஓரங்களில் வயதான மனிதர்களின் பிணங்கள் கூட இருந்தது. 


தமிழ்நாட்டு வீட்டுவசதி வாரியத்தின் வீடுகளில் தரைத்தளத்தில் இருந்த வீடுகளில் கடல்நீர் தாக்குதல் நடத்தியிருந்தது. அந்த கட்டிடங்களின் மேல் மாடிகளில் ஏராளமானவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்பகுதியை தாண்டினோம். அங்கேதான் அந்த பேரவலத்தைக் கண்டேன்.
.
மீனவர்கள் வசிக்கும் குடிசைப்பகுதிகளை முற்றிலுமாக அழித்திருந்தது, கடல். சிறுவர்களும், வயதானவர்களும், நோயாளிகளும் ஏராளமான எண்ணிக்கையில் உயிரை பலி கொடுத்திருந்தனர். கீற்றினால் வேயப்பட்ட குடிசைகள் சின்னாபின்னமாகி இருந்தன. 


அந்தப்பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த தனியார் கல்லூரி ஒன்றின் பேருந்துகள், கடல் அலைகளால் அலேக்காக தூக்கி பல மீட்டர் தூரம் தாண்டி போட்டிருந்தன. அப்பகுதியில் இருந்த கோவில் ஒன்றின் வாசலுக்குள் பாதி புகுந்த நிலையில் ஒரு பேருந்து இருந்தது. 


அந்த பேருந்தின் மேல் ஏறி சுனாமி பாதித்த அவலக் காட்சிகளை படம் பிடித்தோம். 


அத்தனை சடலங்களை ஒரே நேரத்தில் பார்த்து அனுபவமில்லாத சக செய்தியாளர் காயத்ரி மன உளைச்சல் தாங்காமல் புலம்ப ஆரம்பித்தார். சுமார் ஒரு மணி நேரம் செலவழித்து ஏராளமான காட்சிகளை படம் பிடித்துக்கொண்டு அலுவலகம் திரும்ப திட்டமிட்டோம். அதுவரை எனக்கு சுனாமி என்ற சொல் அறிமுகமே கிடையாது. தொலைபேசி தொடர்புகள் அனைத்தும் ஏறத்தாழ முடங்கியிருந்த அந்த நிலையிலும் என் நண்பர் சுஜித் பிரபு, தொலைபேசி மூலம் எனக்கு சுனாமி என்றால் என்ன என்றும், அதன் காரணங்கள், அதன் பாதிப்புகள் குறித்தும் ஒரு வகுப்பு எடுத்தார். அவருக்கு நன்றி கூறிவிட்டு அலுவலகம் திரும்ப முயற்சித்தபோது, சாலைகளில் பெரும் நெருக்கடி. 


சுனாமியை வேடிக்கை பார்ப்பதற்காக மக்கள் பெரும் திரளாக கடற்கரைப்பகுதியை முற்றுகை இட்டதால் சாலைகள் அனைத்தும் போக்குவரத்துக்கு இடையூறாக முடங்கின. மிகுந்த சிரமத்திற்கு இடையில் எங்கள் அலுவலகத்தை அடைந்து அவசர அவசரமாக செய்திகளை தயாரித்தோம். நாங்கள் தயாரித்த செய்திகள் வெளியாகத் தொடங்கின. 


விஜய் டிவிக்காக என்டிடிவி செய்தி தயாரித்து கொடுத்து வந்தது. திடீரென விஜய் டிவி நிர்வாகம் செய்தி தேவையில்லை என்று முடிவு செய்யவே, அங்கு பணியாற்றிய சிலர் ஒரு குழுவாக நான் பணியாற்றிய தொலைகாட்சியில் சேர்ந்தனர். புதிதாக பணியில் சேர்ந்திருந்த அவர்கள், பழைய பணியாளர்களைவிட தொழில்நுட்பத்தில் தேர்ந்து இருந்தனர்.

தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்தி வழங்கத் தொடங்கிய அவர்கள், ஒரு இயற்கை பேரிடரை அரசியலாக்கினர். சுனாமி என்ற பெயரை இந்தியர்கள் முதன் முதலில் அறிமுகம் செய்து கொண்ட அன்றைய சூழலில், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எதையுமே செய்யவில்லை என்ற பாட்டை பாட ஆரம்பித்தனர். நான் பணியாற்றிய நிறுவனமும், அதை விரும்பி ஊக்குவித்தது. 

அலுவலகம் சென்றபோது, உடனடியாக நாகப்பட்டினம் செல்லமுடியுமா? என்று கேட்டனர். நிர்வாகம் விரும்பியவாறு செய்திகளை திரித்துக்கூற விரும்பாததால், உடனடியாக மறுத்தேன். எனினும் சுனாமி பாதித்த கடலோர பகுதிகளில் இருக்கும் வெளியூர் செய்தியாளர்களை தொடர்பு கொண்டு, செய்தி ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டேன். 


+++


னைத்து அவலங்களையும் போல சுனாமியும் சில நாட்களில் மீடியாவிடம் முக்கியத்துவத்தை இழந்தது. எனவே என் வழக்கமான பணியிடமான சென்னை உயர்நீதிமன்றத்தை சரண் அடைந்தேன். ஒரு நாள் அலுவலகத்திலிருந்து நண்பர்கள் தொலைபேசி மூலம் அழைத்தனர். செய்திப்பிரிவில் பணியாற்றும் அனைவரையும் நிறுவனத்தலைவர் நேரில் பார்க்க இருப்பதாகவும், எனவே மதியம் இரண்டு மணிக்கு அலுவலகம் வருமாறும் கூறினர். அலுவலகம் சென்றபோது நண்பர்களில் சிலர் மகிழ்ச்சியாக இருந்தனர். விசாரித்தேன். 
.
சுனாமி அவலத்தின்போது எங்கள் செய்திச்சானல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்ததாகவும், எனவே செய்திப்பிரிவு பணியாளர்கள் அனைவருக்கும் அரை மாத சம்பளத்தை, சிறப்புப்பரிசாக நிர்வாகம் வழங்குவதாகவும் தெரிந்தது. நிறுவனத்தலைவரே அனைத்து பணியாளர்களுக்கும் நேரடியாக அன்பளிப்புத் தொகையை அளித்தார். 


ஒரு ஊடக முதலாளியின் தொழில்ரீதியான மகிழ்ச்சி எவ்வளவு கொடூரமானது என்பது புரிந்தது. எனக்கு கிடைத்த சுனாமிப் பரிசை அரசின் சுனாமி நிவாரண நிதிக்கு அளித்தேன். 


இந்த பரிசுத்தொகை வாகன ஓட்டுனர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் செய்திப்பிரிவு பணியாளர்கள் கிடையாது! வாகன ஓட்டுனர்கள் இல்லாமல் செய்திப்பிரிவு எப்படி இயங்கும் என்றெல்லாம் முட்டாள்தனமாகவோ, புத்திசாலித்தனமாகவோ கேட்கக்கூடாது. அதுதான் பிழைக்கும் வழி!


+++


சியக் கண்டத்தை உலுக்கிய இந்த சுனாமி குறித்து ஏறக்குறைய அனைத்து உலகமும் அக்கறையுடன் கவனம் செலுத்திய அந்த (26-12-2004) நாளில் டெல்லியில் மத்திய அரசு சத்தமின்றி ஒரு காரியம் செய்தது. 


உலக வங்கியின் உத்தரவுப்படி, Patent Act எனப்படும் காப்புரிமை சட்டத்தில் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு ஆதரவான – மக்களுக்கு எதிரான மாற்றத்தை ஏற்படுத்தும் அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இதற்கான கையொப்பத்தை இட்டவர் பெரும்பாலான இந்தியர்களால் விவரம் புரியாமலே பாராட்டப்படும் அன்றைய குடியரசுத்தலைவர் "கனவு நாயகன்" அப்துல் கலாம். 


+++


சுனாமியால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டாலும், சுனாமியால் பலன் அடைந்த ஒரே துறை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்தான். சுனாமி நிவாரணத்துக்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பல ஆயிரம் கோடி ரூபாய்கள் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகத்தான் விநியோகிக்கப்பட்டது. அல்லது அவ்வாறு கணக்கெழுதப்பட்டது.


அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மிஞ்சும்வகையில் ஊழல்மயமான பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த சுனாமி நிவாரணத்தில் ஒரு கை பார்த்தன. மிகச்சிறிய அளவில் இயங்கி வந்த பல நிறுவனங்கள் இந்த சுனாமி காரணமாக கோடிஸ்வர நிறுவனங்களாக வளர்ந்தன.


+++


ந்த சுனாமி குறித்து மத்திய அரசுக்கு முன்கூட்டியே தகவல் வந்தது: அது உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இருக்கட்டும். 


இன்றைய நிலையில் மீண்டும் ஒரு சுனாமி வந்தால் அதை சமாளிக்க இந்தியாவோ, தமிழ்நாடோ தயாராக இருக்கிறதா என்று எண்ணிப்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். 


+++
சுனாமியில் மனிதர்களுக்கு பேரழிவுகள் ஏற்பட்டாலும், பெரும்பாலான விலங்குகள் தப்பித்தன. அடைத்து வைக்கப்பட்ட மற்றும் கட்டிப்போடப்பட்டிருந்த கால்நடைகள் உயிரிழந்திருக்கலாம். அவ்வாறில்லாத விலங்குகள் அனைத்தும் தப்பிவிட்டன. 


ஐந்தறிவு கொண்ட விலங்குகளுக்கு இயற்கையின் மொழி புரிகிறது. ஆறாம் அறிவு கொண்டுள்ளதாக நம்பப்படும் மனித இனத்திற்கு இயற்கையின் மொழி புரியவில்லை. 


+++ 


நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்தாலே வெள்ளம் பெருக்கெடுத்தோடி மனித உயிர்கள் பலிவாங்கப்படும் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முற்றிலுமாக புறந்தள்ளி, முழுப்பொய்களைக் கொண்டு அணுமின் உலைகள் உருவாக்கப்படுகின்றன. 


ஆனால் வெள்ளம், புயல், சுனாமி போன்ற அழிவுகளுக்குப் பின்னாலும் பலர் இருந்து சிரமப்படக்கூடும். ஆனால் அணுமின் உலைகளில் அதுபோன்ற அவலங்கள் நேராது என்று நம்பலாம். ஏனென்றால் இங்கே உள்ள அணுமின் உலைகளில் பெரிய விபத்துகள் ஏதும் நேரிட்டால் புலம்புவதற்கு யாரும் மிஞ்சப்போவதில்லை...!


14 நவம்பர், 2012

நேருவுக்கும், கலாமுக்கும் குழந்தைகளை பிடிக்கும்! – சில குறிப்புகள், சில கேள்விகள்...!

(நேற்றைய, இன்றைய குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்!)

குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமியர்களுக்கும் கற்பனைகள் மிகவும் பிடிக்கும். யதார்த்த வாழ்வில் நினைத்துப்பார்க்க முடியாத பல ஆசைகள் கனவில் நிறைவேறுவதே அதற்கு காரணம்!

குழந்தைகளின் சூழலுக்கு ஏற்ப கனவுகள் வேறுபடலாம். ஏழைக் குழந்தைக்கு நல்ல தின்பண்டமும், நவீன உடைகளும் கனவாக இருக்கும். பணம் படைத்தவர்களின் வீட்டுக் குழந்தைகளுக்கு சூப்பர்மேனைப் போல பறப்பது கனவாக இருக்கும்.ஆனால் கனவு என்பது அனைத்துக் குழந்தைகளுக்கும் பொதுவான ஒரு அம்சமாக இருக்கும். குழந்தைகள் வளர்ந்து பெரிதாகும்போது, யதார்த்த வாழ்வின் முரண்கள் அந்த சிறுவர் - சிறுமியர்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கும்போது கனவுகள் மெல்லக் கரையும்.

இவ்வாறு கனவுகள் கரைவது தனிமனித வாழ்வில் நிகழ்ந்தாலும், சமூக வாழ்வில் நம்மை கனவிலேயே வைத்திருப்பதில் ஆளும் வர்க்கங்களும், அவற்றின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்களும் வெற்றி பெற்றே வந்துள்ளன. நம்மை கனவில் ஆழ்த்தும் கருவியாக குழந்தைகளையே ஆளும் வர்க்கங்களும், ஊடகங்களும் பயன்படுத்துகின்றன என்பது சுவாரசியமான தகவலாகும்.

ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமாகும். சுதந்திரத்திற்கு பின் பிறந்த பலருக்கும் நேரு என்றால் குழந்தைகளிடம் அன்பு செலுத்தியவர் என்ற பிம்பம் தொடக்கக் கல்வியின் மூலமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நேருவுக்கு மட்டும்தான் குழந்தைகளைப் பிடிக்குமா? என்ற கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் போன்றவர்கள் குழந்தைகளை வெறுத்தார்களா? என்பது போன்ற கேள்விகளை எழுப்ப நமது மூளை தயாராவதற்கு முன்னதாகவே இதுபோன்ற செய்திகள் நமது மூளைக்குள் திணிக்கப்படுகின்றன.

எனவே, நேரு என்றாலே கோட்டில் ரோஜா மலரை செருகியிருப்பார். புன்னகை தவழும் முகத்தோடு இருப்பார். அவருக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும்! என்ற பிம்பம் நமது மூளையில் தோன்றி விடுகிறது.

ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு அப்துல் கலாமுக்கும் குழந்தைகளை மிகவும் பிடிக்கும் என்ற கருத்து சமூகத்தில் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது. நேரு காலத்தில் அவர் பள்ளிக்கூடங்களுக்கு சென்று மாணவர்களோடு உரையாடினாரா? என்பது தெரியவில்லை. அப்துல் கலாம் எந்த ஊருக்கு சென்றாலும் அங்குள்ள பள்ளி மாணவர்களோடு உரையாடுவதும், அவர்களை கனவு காணுங்கள்! என்று ஊக்குவிப்பதும் மிகவும் கவனமாக புகைப்படத்துடன் கூடிய செய்தியாக்கப்படுகின்றன.

ஜவஹர்லால் நேருவுக்கும், அப்துல் கலாமுக்கும் குழந்தைகள் மிகவும் பிடிக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்களுக்கு எந்தக் குழந்தைகளைப் பிடித்திருந்தது? என்ற கேள்வி எழுப்பப் படுவதில்லை. நாம் பார்த்த செய்திகளிலும், புகைப்படங்களிலும் நேருவிடமும், கலாமிடமும் அளவளாவிக் கொண்டிருக்கும் குழந்தைகள் அனைவரும் உயர்தர பள்ளிகளில் படிக்கும் செல்வந்தர்களின் குழந்தைகளே!

பெற்றோரின் வறுமை காரணமாக குழந்தைத் தொழிலாளியாக வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளிடமோ, கிழிந்த சட்டையும் ஒழுகும் மூக்குமாக உடைந்த அரசுப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடமோ ஏன் இந்த தலைவர்கள் அளவளாவியதே இல்லை என்ற கேள்விகளை யாரும் கேட்பதில்லை.

நேருவும், கலாமும் குழந்தைகளின் காவலர்களைப் போல திட்டமிட்டு சித்தரிக்கப்படுவதன் நோக்கம் என்ன?

மேலை நாடுகளின் அரசியல் தலைவர்களின் நடை, உடை, பாவனைகளை தீர்மானிப்பவர்கள் அந்த தலைவர்களின் செய்தித் தொடர்புக்கு பொறுப்பேற்பவர்களே! அந்தத் தலைவர்கள் குறித்த பிம்பங்களை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தலில் மக்களின் வாக்குகளை கவரும் நோக்கத்திலேயே இவை நடைபெறுகின்றன.

இந்தியாவில் இந்த நடைமுறையை அனைத்து அரசியல்வாதிகளும் முழுமையாக பின்பற்றவில்லை என்றாலும், அந்தப்போக்கின் விளைவாகவே குழந்தைக் காவலர் பிம்பங்கள் திட்டமிட்டு கட்டமைக்கப் படுகின்றன.


சரி இதனால் நமக்கு என்ன பாதிப்பு என்ற கேள்வி எழலாம்!

இந்த பிம்பங்களுக்குள் நாம் சிக்குவதால் நாம் பல உண்மைகளை பார்க்கத்தவறி விடுகிறோம்.

சுதந்திர இந்தியாவின் இறப்பு வீதத்தை கணக்கிடும்போது அன்றாடம் உயிரிழக்கும் குழந்தைகளில் 50 சதவீதம் குழந்தைகள், பட்டினி மற்றும் ஊட்டச் சத்து குறைவு காரணமாக உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத் திட்டம் தயாரித்துள்ள அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு முப்பது நொடிக்கும் ஒரு குழந்தை உணவு கிடைக்காத காரணத்தால் உயிரிழப்பதாக மற்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது.சரி! ஜவஹர்லால் நேரு, அப்துல் கலாம் போன்ற குழந்தை நேசர்கள் இருக்கும் நாட்டில் குழந்தைகள் பசியாலும், பட்டினியாலும் இறப்பது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்படுவதில்லை. அதற்கு நாமே சமாதானமும் கூறிக்கொள்வோம்: ஊழல் மயமான இந்தியாவில் குழந்தைகளின் இறப்புக்கு இந்தத் தலைவர்கள் என்ன செய்யமுடியும் என்று!

ஆனால் இந்தத் தலைவர்களும் இந்திய அரசியலின் உச்ச பதவிகளை அனுபவித்தவர்கள் என்பதை மறந்துவிடுகிறோம். இவர்கள் ஆட்சியிலிருந்த போதும் ஏழைக் குழந்தைகளின் நிலை மிகவும் அவலமாகவே இருந்துள்ளது.


ஆனால் அந்த அவலத்தை பார்க்கும் விருப்பம் இல்லாமல் இந்தியாவின் உயர்குடி மக்களின் குழந்தைகளை மட்டுமே தேடிச் சந்தித்தவர்கள் இவர்கள். இந்தத் தலைவர்கள் பதவியில் இருந்தபோதும் இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர். அப்போதும் பட்டினியில் குழந்தைகள் செத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் பக்கமாக இவர்கள் பார்வையை செலுத்தியதே கிடையாது. அதனால்தான் சேரியில் வசிக்கும் எந்தக்குழந்தையுடனும் இவர்கள் விவாதிக்கும் புகைப்படங்கள் இதுவரை வெளியானதே கிடையாது.

இந்த உண்மைகளை நாம் கவனிக்கத் தவறி இருக்கிறோம். இது மட்டுமல்ல! நன்றாக உடையணிந்த, போஷாக்கான குழந்தைகள் மட்டுமே அழகானவை, புனிதமானவை என்ற கருத்து நமக்குள்ளேயே நம்மையறியாமல் விதைக்கப்பட்டு விட்டது. நம் வீட்டுக் குழந்தைகளைவிட செல்வந்தர் வீட்டுக்குழந்தைகள் நம்மை கவர்கின்றன. நாம் அனுப்பும் வாழ்த்து அட்டைகளில் நம் வீட்டுக்குழந்தைகளின் படங்கள் இடம் பெற்றதில்லை. பதிலாக யாரென்றே தெரியாத போஷாக்கான குழந்தைகளின் படங்களை நாம் வாழ்த்து அட்டைகளிலும், நாட்காட்டிகளிலும் பயன்படுத்தி வந்திருக்கிறோம்.

இந்த உளவியலை நமக்குள் ஏற்படுத்தியதில் குழந்தைகளுக்கான உணவை தயாரிக்கும் நிறுவனங்கள் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. நம் குழந்தைகளையும் அந்தக் குழந்தைகள் போல போஷாக்காக உருவாக்க முயற்சித்து தோற்றுப்போய், அந்த உணவு நிறுவனங்கள் மேல் கோபப்படுவதற்கு பதில் குழந்தைகள் மீது கோபப்படுவதற்கு நாம் பழகி இருக்கிறோம்.

இதன் விளைவுகள் என்ன?

நம் வீட்டுக்குழந்தைகள் பாதிக்கப்படும்போது நமக்கு அவ்வளவாக உறைப்பதில்லை. அதே போல நடுத்தர அல்லது ஏழை வீட்டுக்குழந்தைகள் பாதிக்கப்படும்போதும் அது நம்மை அவ்வளவாக பாதிப்பதில்லை. ஏனென்றால் அந்தக் குழந்தைகள் நம்மைப் போல சாதாரணமாகவே இருக்கின்றன. நாம் விரும்புவதைப் போல சிவப்பாக, போஷாக்காக இருப்பதில்லை. எனவே அக்குழந்தைகளின் சிரமம் நமக்கு ஒரு பொருட்டாக தெரிவதில்லை.

தமிழக கிராமத்தில் உயர்சாதி குழந்தைகளுக்காக வைத்த குடிநீரை குடித்த குற்றத்திற்காக  பள்ளிச்சிறுமியை அதன் ஆசிரியரே தாக்கி குருடாக்கினால் நாம் பதறுவதில்லை.

ஆந்திராவில் காவல்துறை நடத்திய கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகி இறப்பது ஒரு கொடூரமாக நமது கண்களுக்கு தோன்றுவதில்லை.

நம் வீட்டுக் குழந்தைகளே ஊட்டச்சத்துணவு, முறையான மருத்துவ உதவி கிடைக்காமல் அவதியுறும்போது நமக்கு கோபம் வருவதில்லை. ஆனால் பார்ப்பதற்கு அழகான வசதி படைத்த குழந்தைகளுக்கு இன்னல் ஏற்பட்டால் பதறிப்போய் விடுகிறோம். அந்தக் குழந்தைகளை கொலை செய்ததாக கூறப்படுபவனை காவல்துறையினர் விசாரணையின்றியே கொலை செய்தால் நாம் அதை தீபாவளியாக கொண்டாடுகிறோம்.

அதே நேரம் நமது குழந்தைகளை கொலை செய்பவர்களிடம் இலவச டிவி போன்றவற்றை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு  மீண்டும், மீண்டும் வாக்களித்து பதவியில் தொடர அனுமதிக்கிறோம்.

ஜவஹர்லால் நேருவையும், அப்துல் கலாமையும் கேவலப்படுத்துவது நமது நோக்கமில்லை. ஆனால் அந்த மாபெரும் தலைவர்கள் குழந்தைத் தொழிலாளர்களிடமும், ஏழைக் குழந்தைகளிடமும் ஏன் அன்பாக இல்லை: அந்த குழந்தைகளின் துயரங்களை துடைக்க அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 

ஏனென்றால் இவர்களின் வாரிசுகள் உருவாகி வருகிறார்கள். நானும் ஏழைப்பங்காளன் என்று கட்டடத்தொழிலாளிகளோடு இணைந்து வேலை செய்வதுபோன்ற புகைப்படங்களோடு இவர்கள் அரசியல் அரங்கிற்கு வருகின்றனர். இது போன்ற போலிகளிடம் மீண்டும், மீண்டும் ஏமாறாமல் இருக்க நமது சிந்தனை முறையையே மாற்றி அமைக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். சிந்திப்போமா?

(கடந்த 2010ஆம் ஆண்டு  குழந்தைகள் தினத்துக்காக எழுதப்பட்ட பதிவு. தேவை கருதி மீள்பதிவு செய்யப்படுகிறது)

10 ஆகஸ்ட், 2012

கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!

இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை.

இந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிறுவனங்களுக்கோ, தொழி்ல் நிறுவனங்களுக்கோ மின்சாரம் எப்போது வரும் - எப்போது போகும் என்பது யாருக்கும் தெரியாது. இதே நிலைதான் அத்தியாவசிய தேவைகளான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும்.

ஆனால் நோக்கியா, ஹூன்டாய், போர்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரத்தை மிகக்குறைந்த சலுகை விலையில் வழங்கி தன் இறையாண்மையை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.

இந்நிலையில் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசுக்கு பாராட்டும், ஆதரவும் அளிக்கும் விதத்தில் இலங்கைக்கு மின்சாரம் வழங்கவும் இறையாண்மை மிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதோ ஆதாரம்...
(படத்தை சொடுக்கினால் பெரிதாகும்)

இணையத் தொடுப்பு: http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=75546

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இரண்டு இடங்களில் அணுஉலை (பூங்காக்)கள் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும் இரண்டாவது அணுஉலை (பூங்கா) அமைக்கப்படுகிறது.

இந்திய அரசின் வழக்கப்படி, இந்தியர்களுக்கு மின்சாரம் இல்லாவிட்டாலும் இலங்கைக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்காகவே கூடங்குளத்தில் அணுஉலை கட்டப்பட்டது போலும்.

வாழ்க இந்தியா!

வளர்க ஜனநாயகம்!!

(8 நவம்பர் 2011 அன்று முதலில் பதிவிடப்பட்டது. தற்போது கூடங்குளம் அணுமின் திட்டத்தின் முதல் அணு உலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மீள்பதிவு செய்யப்படுகிறது) 


14 பிப்ரவரி, 2012

மீண்டும் ஒரு காதல் கதை...!

காதல் என்பது கடவுளைப் போல. யாராலும் முழுமையாக நிர்ணயிக்கவோ, விவரிக்கவோ இயலாது. என்றாலும் அவரவர் ஆற்றலுக்கும், அனுபவத்திற்கும் ஏற்ப இந்தக் காதல் அழிக்க முடியாத ஒரு நம்பிக்கையாக  இருக்கிறது. 


கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இன்றைய தேதியிலிருந்து சுமார் 21 வருடங்களுக்கு முன், அதாவது 1990ம் ஆண்டில் உருவான அவரது காதலும் உறவினர் மற்றும் சுற்றத்தாரின் கடும் எதிர்ப்புக்கு ஆளானது. காரணம் பொதுவானதுதான். கவுண்டர் இனத்தில் பிறந்து விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட சுப்ரமணியன் காதல் வயப்பட்டதோ "பக்கா" என்ற இஸ்லாமிய பெண்ணுடன். அதிலும் அந்த பக்காவின் தொழிலோ நாட்டியம் ஆடுதல், அதுவும் மேடைகளில் அல்ல -வீதிகளில்.


எனினும் அவர்களின் காதல் வென்றது. சுப்ரமணியன் (கவுண்டர்) சொந்தங்களையும், சுற்றத்தையும், சொத்தையும் துறந்து காதலி பக்காவின் கையைப் பற்றினார். திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடும் பக்காவுக்கு, ரசிகர்கள் உச்சரிக்க வசதியாக விஜயா என்ற பெயரும் உண்டு. (நடிகை கே.ஆர். விஜயாவின் பாதிப்பாகக்கூட இருக்கலாம்). சொந்தபந்தங்களை துறந்து வந்த காதல் கணவருக்கு ஊக்கமாக இருந்தார், பக்கா @ விஜயா. கணவருக்கு மாற்றுத் தொழில் அமையும் வரை நடனத்தொழிலை தொடர்வதாகவும் எனவே குடும்பச் செலவு குறித்து கவலை கொள்ளாமல், மாற்றுத் தொழிலுக்கான முயற்சிகளில் ஈடுபடுமாறும் காதல் கணவருக்கு உறுதியும் அளித்தார். 


காதலுடன் கூடிய அவர்களின் கலைப்பயணம் சிறிது காலத்திற்கு மட்டுமே இனிமையாக இருந்தது. கோவை அருகே ஒரு கிராமத்தில் நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவில் பங்கேற்று நடனமாட விஜயாவிற்கு அழைப்பு வந்தது. கணவருடனும், கலைக்குழுவுடனும் சென்று கலந்து கொண்டு நடனமாடினார் விஜயா. நடனநிகழ்ச்சி முடிந்து ஊருக்கு திரும்பும் நிலையில், அந்த ஊரிலிருந்து கிளம்பும் கடைசிப் பேருந்து முன்பே புறப்பட்டு போயிருந்தது. 


எனவே வேறு வழியின்றி கோவிலின் ஒரு மூலையிலேயே படுத்துறங்க முயற்சித்தனர் சுப்ரமணியனும், அவர் மனைவி பக்கா @ விஜயாவும். இவர்களின் காதலை அறியாத அந்த ஊரின் மைனர் ஒருவர் விஜயாவை வென்றெடுக்க முயற்சித்தார். இதனால் தூக்கம் கலைந்த அவர்கள், அந்த மைனரிடமிருந்து தப்பி ஊருக்கு வெளியே ஓரிடத்தில் தங்க முயற்சித்தனர். 


ஊரின் பிரபல மைனரான தனக்கு, ஒரு ஆட்டக்காரி உடன்பட மறுப்பதா என்று கிளர்ந்தெழுந்த அந்த மைனர், ஊருக்கு வெளியிலும் சென்று விஜயாவிடம் வீரத்தைக் காட்ட முனைந்தார். விஜயாவின் கோரிக்கைகளோ, எச்சரிக்கைகளோ மைனரின் போதையில் கரைந்ததால், அவரின் காதுகளில் விழவில்லை. விஜயாவிற்கு பாதுகாப்பாக வந்த அவரது கணவர் சுப்ரமணியனும் மைனரால் தாக்கப்படவே, தங்கள் உயிருக்கும், மானத்திற்கும் ஏற்படும் ஆபத்தை எதிர்கொள்ள அந்த தம்பதியினர் தயாராயினர். 


போதையின் பாதிப்பால் மிருகமாகியிருந்த மைனரை கையால் தடுக்கமுடியாததால் அருகிருந்த கல்லைக் கொண்டு தாக்கி தங்களை பாதுகாத்துக் கொள்ள அந்த தம்பதியினர் முயற்சித்தனர். அந்தக் கல்லின் தாக்குதல் சற்றே ஆற்றல் மிகுந்திருந்ததாலும், மைனரின் போதையால் அவரால் தப்ப முடியாததாலும் தலையில் பலத்த காயமடைந்த மைனர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். 


இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 96 முதல் 106 வரை உள்ள பிரிவுகளின்படி உள்ள அம்சங்களின் அடிப்படையில் நமது கதாநாயகன் சுப்ரமணியனும், அவரது காதல் மனைவி பக்கா @ விஜயாவும் செய்தது ஒரு குற்றமே அல்ல. ஆனாலும் இந்த விவரம் தெரியாத இவ்விருவரும், இறந்து கிடந்த மைனரின் பாக்கெட்டில் இருந்த ஒரு சிறு தொகையை எடுத்துச் சென்று விட்டனர். இதனால் தற்காப்புக்கு நடந்த ஒரு “கொலையாகாத மரணம் ஏற்படுத்தும் சம்பவம்” அதற்கு பதிலாக “பண லாபத்திற்காக நடந்த கொலை”யாக உருமாறி விட்டது.


குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்டத்தின் நுணுக்கங்கள் தெரியாததாலும், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் கிடைக்காததாலும், அவ்விருவருக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. 


கடந்த 21 வருடங்களாக அவ்விருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இடையில் என்ன காரணத்தாலோ பக்கா @ விஜயாவின் நாக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே அவரால் பேச இயலாது. மேலும் மனநிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. மாதத்தில் ஒரு முறையோ, இருமுறையோ சந்திக்கும் கணவனும், மனைவியும் வார்த்தைகளால் பேச முடியாது. எனவே சுப்ரமணியன் வாயாலும், விஜயா சைகையாலும் பேசிக் கொள்கிறார்கள். 


இத்தகைய சிறைக்கைதிகளை நன்னடத்தை காரணாகவோ, மருத்துவ காரணமாகவோ தலைவர்களின் பிறந்த நாள் போன்ற காலங்களில் வெளியில் விடுவது நாடு முழுதும் நடைமுறையில் உள்ள வழக்கம். தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் மட்டும் இதுபோன்ற எதுவும் நடக்காது. 


நமது கதாநாயகர்கள் சுப்ரமணியன் + விஜயா ஆகியோர் சுமார் 21 ஆண்டுகளை சிறையில் கழித்ததால் முன்விடுதலைக்கு முழுவதும் தகுதியானவர்கள். ஆனால் என்ன காரணத்தாலோ திமுக ஆட்சியிலும் கூட அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இவர்களின் கதை வெளியுலகிற்கும் தெரிய வாய்ப்பில்லை. 


இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினிக்கு, பக்கா @ விஜயாவின் கதை தெரிய வந்தது. நளினியை சிறையில் பார்க்கச்சென்ற அவரது வழக்கறிஞர் புகழேந்தியிடம் பக்கா @ விஜயாவின் கதையை கூறிய நளினி, விஜயாவிற்கு தேவையான உதவிகளை செய்ய முடியுமா என்று கோரிக்கை எழுப்பினார். 


இதையடுத்து பக்கா @ விஜயா தண்டனை அனுபவித்த காலத்தையும் அவரது உடல் மற்றும் மனநிலையையும் கணக்கில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் புகழேந்தி பதிவு செய்த வழக்கை வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதிட்டார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், பக்கா @ விஜயாவை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு மனநிலை சிகிச்சை அளிக்க வேண்டுமா என்பதை மனநல மருத்துவர் மூலம் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 


காதலுக்காக போராடி கொலை வழக்கில் சிக்கியுள்ள இந்த காதலர்களுக்கு அடுத்த காதலர் தினத்திற்குள்ளாக ஒரு தீர்வு கிடைக்குமா...?

13 ஜனவரி, 2012

தமிளர்ஸ் அனைவருக்கும் "ஹேப்பி பொங்கழ்!"

வாழ்த்துகளை தெரிவிக்க வார்த்தைகள் இல்லாததால் இந்த படம்...

( படத்தை சொடுக்கினால் பெரிதாகும் )