14 பிப்ரவரி, 2012

மீண்டும் ஒரு காதல் கதை...!

காதல் என்பது கடவுளைப் போல. யாராலும் முழுமையாக நிர்ணயிக்கவோ, விவரிக்கவோ இயலாது. என்றாலும் அவரவர் ஆற்றலுக்கும், அனுபவத்திற்கும் ஏற்ப இந்தக் காதல் அழிக்க முடியாத ஒரு நம்பிக்கையாக  இருக்கிறது. 


கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இன்றைய தேதியிலிருந்து சுமார் 21 வருடங்களுக்கு முன், அதாவது 1990ம் ஆண்டில் உருவான அவரது காதலும் உறவினர் மற்றும் சுற்றத்தாரின் கடும் எதிர்ப்புக்கு ஆளானது. காரணம் பொதுவானதுதான். கவுண்டர் இனத்தில் பிறந்து விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட சுப்ரமணியன் காதல் வயப்பட்டதோ "பக்கா" என்ற இஸ்லாமிய பெண்ணுடன். அதிலும் அந்த பக்காவின் தொழிலோ நாட்டியம் ஆடுதல், அதுவும் மேடைகளில் அல்ல -வீதிகளில்.


எனினும் அவர்களின் காதல் வென்றது. சுப்ரமணியன் (கவுண்டர்) சொந்தங்களையும், சுற்றத்தையும், சொத்தையும் துறந்து காதலி பக்காவின் கையைப் பற்றினார். திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடும் பக்காவுக்கு, ரசிகர்கள் உச்சரிக்க வசதியாக விஜயா என்ற பெயரும் உண்டு. (நடிகை கே.ஆர். விஜயாவின் பாதிப்பாகக்கூட இருக்கலாம்). சொந்தபந்தங்களை துறந்து வந்த காதல் கணவருக்கு ஊக்கமாக இருந்தார், பக்கா @ விஜயா. கணவருக்கு மாற்றுத் தொழில் அமையும் வரை நடனத்தொழிலை தொடர்வதாகவும் எனவே குடும்பச் செலவு குறித்து கவலை கொள்ளாமல், மாற்றுத் தொழிலுக்கான முயற்சிகளில் ஈடுபடுமாறும் காதல் கணவருக்கு உறுதியும் அளித்தார். 


காதலுடன் கூடிய அவர்களின் கலைப்பயணம் சிறிது காலத்திற்கு மட்டுமே இனிமையாக இருந்தது. கோவை அருகே ஒரு கிராமத்தில் நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவில் பங்கேற்று நடனமாட விஜயாவிற்கு அழைப்பு வந்தது. கணவருடனும், கலைக்குழுவுடனும் சென்று கலந்து கொண்டு நடனமாடினார் விஜயா. நடனநிகழ்ச்சி முடிந்து ஊருக்கு திரும்பும் நிலையில், அந்த ஊரிலிருந்து கிளம்பும் கடைசிப் பேருந்து முன்பே புறப்பட்டு போயிருந்தது. 


எனவே வேறு வழியின்றி கோவிலின் ஒரு மூலையிலேயே படுத்துறங்க முயற்சித்தனர் சுப்ரமணியனும், அவர் மனைவி பக்கா @ விஜயாவும். இவர்களின் காதலை அறியாத அந்த ஊரின் மைனர் ஒருவர் விஜயாவை வென்றெடுக்க முயற்சித்தார். இதனால் தூக்கம் கலைந்த அவர்கள், அந்த மைனரிடமிருந்து தப்பி ஊருக்கு வெளியே ஓரிடத்தில் தங்க முயற்சித்தனர். 


ஊரின் பிரபல மைனரான தனக்கு, ஒரு ஆட்டக்காரி உடன்பட மறுப்பதா என்று கிளர்ந்தெழுந்த அந்த மைனர், ஊருக்கு வெளியிலும் சென்று விஜயாவிடம் வீரத்தைக் காட்ட முனைந்தார். விஜயாவின் கோரிக்கைகளோ, எச்சரிக்கைகளோ மைனரின் போதையில் கரைந்ததால், அவரின் காதுகளில் விழவில்லை. விஜயாவிற்கு பாதுகாப்பாக வந்த அவரது கணவர் சுப்ரமணியனும் மைனரால் தாக்கப்படவே, தங்கள் உயிருக்கும், மானத்திற்கும் ஏற்படும் ஆபத்தை எதிர்கொள்ள அந்த தம்பதியினர் தயாராயினர். 


போதையின் பாதிப்பால் மிருகமாகியிருந்த மைனரை கையால் தடுக்கமுடியாததால் அருகிருந்த கல்லைக் கொண்டு தாக்கி தங்களை பாதுகாத்துக் கொள்ள அந்த தம்பதியினர் முயற்சித்தனர். அந்தக் கல்லின் தாக்குதல் சற்றே ஆற்றல் மிகுந்திருந்ததாலும், மைனரின் போதையால் அவரால் தப்ப முடியாததாலும் தலையில் பலத்த காயமடைந்த மைனர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். 


இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 96 முதல் 106 வரை உள்ள பிரிவுகளின்படி உள்ள அம்சங்களின் அடிப்படையில் நமது கதாநாயகன் சுப்ரமணியனும், அவரது காதல் மனைவி பக்கா @ விஜயாவும் செய்தது ஒரு குற்றமே அல்ல. ஆனாலும் இந்த விவரம் தெரியாத இவ்விருவரும், இறந்து கிடந்த மைனரின் பாக்கெட்டில் இருந்த ஒரு சிறு தொகையை எடுத்துச் சென்று விட்டனர். இதனால் தற்காப்புக்கு நடந்த ஒரு “கொலையாகாத மரணம் ஏற்படுத்தும் சம்பவம்” அதற்கு பதிலாக “பண லாபத்திற்காக நடந்த கொலை”யாக உருமாறி விட்டது.


குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்டத்தின் நுணுக்கங்கள் தெரியாததாலும், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் கிடைக்காததாலும், அவ்விருவருக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. 


கடந்த 21 வருடங்களாக அவ்விருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இடையில் என்ன காரணத்தாலோ பக்கா @ விஜயாவின் நாக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே அவரால் பேச இயலாது. மேலும் மனநிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. மாதத்தில் ஒரு முறையோ, இருமுறையோ சந்திக்கும் கணவனும், மனைவியும் வார்த்தைகளால் பேச முடியாது. எனவே சுப்ரமணியன் வாயாலும், விஜயா சைகையாலும் பேசிக் கொள்கிறார்கள். 


இத்தகைய சிறைக்கைதிகளை நன்னடத்தை காரணாகவோ, மருத்துவ காரணமாகவோ தலைவர்களின் பிறந்த நாள் போன்ற காலங்களில் வெளியில் விடுவது நாடு முழுதும் நடைமுறையில் உள்ள வழக்கம். தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் மட்டும் இதுபோன்ற எதுவும் நடக்காது. 


நமது கதாநாயகர்கள் சுப்ரமணியன் + விஜயா ஆகியோர் சுமார் 21 ஆண்டுகளை சிறையில் கழித்ததால் முன்விடுதலைக்கு முழுவதும் தகுதியானவர்கள். ஆனால் என்ன காரணத்தாலோ திமுக ஆட்சியிலும் கூட அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இவர்களின் கதை வெளியுலகிற்கும் தெரிய வாய்ப்பில்லை. 


இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினிக்கு, பக்கா @ விஜயாவின் கதை தெரிய வந்தது. நளினியை சிறையில் பார்க்கச்சென்ற அவரது வழக்கறிஞர் புகழேந்தியிடம் பக்கா @ விஜயாவின் கதையை கூறிய நளினி, விஜயாவிற்கு தேவையான உதவிகளை செய்ய முடியுமா என்று கோரிக்கை எழுப்பினார். 


இதையடுத்து பக்கா @ விஜயா தண்டனை அனுபவித்த காலத்தையும் அவரது உடல் மற்றும் மனநிலையையும் கணக்கில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் புகழேந்தி பதிவு செய்த வழக்கை வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதிட்டார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், பக்கா @ விஜயாவை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு மனநிலை சிகிச்சை அளிக்க வேண்டுமா என்பதை மனநல மருத்துவர் மூலம் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 


காதலுக்காக போராடி கொலை வழக்கில் சிக்கியுள்ள இந்த காதலர்களுக்கு அடுத்த காதலர் தினத்திற்குள்ளாக ஒரு தீர்வு கிடைக்குமா...?

2 கருத்துகள்:

@Ganshere சொன்னது…

இது போன்ற சூழ்நிழைகளை எவ்வாறு எதிர் கொள்வதென நீங்கள் சில பதிவுகளிடாமே!!!

யுவகிருஷ்ணா சொன்னது…

படுபயங்கரமாக இருக்கிறது :-(

வெளியே வந்தபிறகும் அவர்களுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

கருத்துரையிடுக