14 நவம்பர், 2012

நேருவுக்கும், கலாமுக்கும் குழந்தைகளை பிடிக்கும்! – சில குறிப்புகள், சில கேள்விகள்...!

(நேற்றைய, இன்றைய குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்!)

குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமியர்களுக்கும் கற்பனைகள் மிகவும் பிடிக்கும். யதார்த்த வாழ்வில் நினைத்துப்பார்க்க முடியாத பல ஆசைகள் கனவில் நிறைவேறுவதே அதற்கு காரணம்!

குழந்தைகளின் சூழலுக்கு ஏற்ப கனவுகள் வேறுபடலாம். ஏழைக் குழந்தைக்கு நல்ல தின்பண்டமும், நவீன உடைகளும் கனவாக இருக்கும். பணம் படைத்தவர்களின் வீட்டுக் குழந்தைகளுக்கு சூப்பர்மேனைப் போல பறப்பது கனவாக இருக்கும்.ஆனால் கனவு என்பது அனைத்துக் குழந்தைகளுக்கும் பொதுவான ஒரு அம்சமாக இருக்கும். குழந்தைகள் வளர்ந்து பெரிதாகும்போது, யதார்த்த வாழ்வின் முரண்கள் அந்த சிறுவர் - சிறுமியர்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கும்போது கனவுகள் மெல்லக் கரையும்.

இவ்வாறு கனவுகள் கரைவது தனிமனித வாழ்வில் நிகழ்ந்தாலும், சமூக வாழ்வில் நம்மை கனவிலேயே வைத்திருப்பதில் ஆளும் வர்க்கங்களும், அவற்றின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்களும் வெற்றி பெற்றே வந்துள்ளன. நம்மை கனவில் ஆழ்த்தும் கருவியாக குழந்தைகளையே ஆளும் வர்க்கங்களும், ஊடகங்களும் பயன்படுத்துகின்றன என்பது சுவாரசியமான தகவலாகும்.

ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமாகும். சுதந்திரத்திற்கு பின் பிறந்த பலருக்கும் நேரு என்றால் குழந்தைகளிடம் அன்பு செலுத்தியவர் என்ற பிம்பம் தொடக்கக் கல்வியின் மூலமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நேருவுக்கு மட்டும்தான் குழந்தைகளைப் பிடிக்குமா? என்ற கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் போன்றவர்கள் குழந்தைகளை வெறுத்தார்களா? என்பது போன்ற கேள்விகளை எழுப்ப நமது மூளை தயாராவதற்கு முன்னதாகவே இதுபோன்ற செய்திகள் நமது மூளைக்குள் திணிக்கப்படுகின்றன.

எனவே, நேரு என்றாலே கோட்டில் ரோஜா மலரை செருகியிருப்பார். புன்னகை தவழும் முகத்தோடு இருப்பார். அவருக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும்! என்ற பிம்பம் நமது மூளையில் தோன்றி விடுகிறது.

ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு அப்துல் கலாமுக்கும் குழந்தைகளை மிகவும் பிடிக்கும் என்ற கருத்து சமூகத்தில் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது. நேரு காலத்தில் அவர் பள்ளிக்கூடங்களுக்கு சென்று மாணவர்களோடு உரையாடினாரா? என்பது தெரியவில்லை. அப்துல் கலாம் எந்த ஊருக்கு சென்றாலும் அங்குள்ள பள்ளி மாணவர்களோடு உரையாடுவதும், அவர்களை கனவு காணுங்கள்! என்று ஊக்குவிப்பதும் மிகவும் கவனமாக புகைப்படத்துடன் கூடிய செய்தியாக்கப்படுகின்றன.

ஜவஹர்லால் நேருவுக்கும், அப்துல் கலாமுக்கும் குழந்தைகள் மிகவும் பிடிக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்களுக்கு எந்தக் குழந்தைகளைப் பிடித்திருந்தது? என்ற கேள்வி எழுப்பப் படுவதில்லை. நாம் பார்த்த செய்திகளிலும், புகைப்படங்களிலும் நேருவிடமும், கலாமிடமும் அளவளாவிக் கொண்டிருக்கும் குழந்தைகள் அனைவரும் உயர்தர பள்ளிகளில் படிக்கும் செல்வந்தர்களின் குழந்தைகளே!

பெற்றோரின் வறுமை காரணமாக குழந்தைத் தொழிலாளியாக வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளிடமோ, கிழிந்த சட்டையும் ஒழுகும் மூக்குமாக உடைந்த அரசுப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடமோ ஏன் இந்த தலைவர்கள் அளவளாவியதே இல்லை என்ற கேள்விகளை யாரும் கேட்பதில்லை.

நேருவும், கலாமும் குழந்தைகளின் காவலர்களைப் போல திட்டமிட்டு சித்தரிக்கப்படுவதன் நோக்கம் என்ன?

மேலை நாடுகளின் அரசியல் தலைவர்களின் நடை, உடை, பாவனைகளை தீர்மானிப்பவர்கள் அந்த தலைவர்களின் செய்தித் தொடர்புக்கு பொறுப்பேற்பவர்களே! அந்தத் தலைவர்கள் குறித்த பிம்பங்களை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தலில் மக்களின் வாக்குகளை கவரும் நோக்கத்திலேயே இவை நடைபெறுகின்றன.

இந்தியாவில் இந்த நடைமுறையை அனைத்து அரசியல்வாதிகளும் முழுமையாக பின்பற்றவில்லை என்றாலும், அந்தப்போக்கின் விளைவாகவே குழந்தைக் காவலர் பிம்பங்கள் திட்டமிட்டு கட்டமைக்கப் படுகின்றன.


சரி இதனால் நமக்கு என்ன பாதிப்பு என்ற கேள்வி எழலாம்!

இந்த பிம்பங்களுக்குள் நாம் சிக்குவதால் நாம் பல உண்மைகளை பார்க்கத்தவறி விடுகிறோம்.

சுதந்திர இந்தியாவின் இறப்பு வீதத்தை கணக்கிடும்போது அன்றாடம் உயிரிழக்கும் குழந்தைகளில் 50 சதவீதம் குழந்தைகள், பட்டினி மற்றும் ஊட்டச் சத்து குறைவு காரணமாக உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத் திட்டம் தயாரித்துள்ள அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு முப்பது நொடிக்கும் ஒரு குழந்தை உணவு கிடைக்காத காரணத்தால் உயிரிழப்பதாக மற்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது.சரி! ஜவஹர்லால் நேரு, அப்துல் கலாம் போன்ற குழந்தை நேசர்கள் இருக்கும் நாட்டில் குழந்தைகள் பசியாலும், பட்டினியாலும் இறப்பது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்படுவதில்லை. அதற்கு நாமே சமாதானமும் கூறிக்கொள்வோம்: ஊழல் மயமான இந்தியாவில் குழந்தைகளின் இறப்புக்கு இந்தத் தலைவர்கள் என்ன செய்யமுடியும் என்று!

ஆனால் இந்தத் தலைவர்களும் இந்திய அரசியலின் உச்ச பதவிகளை அனுபவித்தவர்கள் என்பதை மறந்துவிடுகிறோம். இவர்கள் ஆட்சியிலிருந்த போதும் ஏழைக் குழந்தைகளின் நிலை மிகவும் அவலமாகவே இருந்துள்ளது.


ஆனால் அந்த அவலத்தை பார்க்கும் விருப்பம் இல்லாமல் இந்தியாவின் உயர்குடி மக்களின் குழந்தைகளை மட்டுமே தேடிச் சந்தித்தவர்கள் இவர்கள். இந்தத் தலைவர்கள் பதவியில் இருந்தபோதும் இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர். அப்போதும் பட்டினியில் குழந்தைகள் செத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் பக்கமாக இவர்கள் பார்வையை செலுத்தியதே கிடையாது. அதனால்தான் சேரியில் வசிக்கும் எந்தக்குழந்தையுடனும் இவர்கள் விவாதிக்கும் புகைப்படங்கள் இதுவரை வெளியானதே கிடையாது.

இந்த உண்மைகளை நாம் கவனிக்கத் தவறி இருக்கிறோம். இது மட்டுமல்ல! நன்றாக உடையணிந்த, போஷாக்கான குழந்தைகள் மட்டுமே அழகானவை, புனிதமானவை என்ற கருத்து நமக்குள்ளேயே நம்மையறியாமல் விதைக்கப்பட்டு விட்டது. நம் வீட்டுக் குழந்தைகளைவிட செல்வந்தர் வீட்டுக்குழந்தைகள் நம்மை கவர்கின்றன. நாம் அனுப்பும் வாழ்த்து அட்டைகளில் நம் வீட்டுக்குழந்தைகளின் படங்கள் இடம் பெற்றதில்லை. பதிலாக யாரென்றே தெரியாத போஷாக்கான குழந்தைகளின் படங்களை நாம் வாழ்த்து அட்டைகளிலும், நாட்காட்டிகளிலும் பயன்படுத்தி வந்திருக்கிறோம்.

இந்த உளவியலை நமக்குள் ஏற்படுத்தியதில் குழந்தைகளுக்கான உணவை தயாரிக்கும் நிறுவனங்கள் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. நம் குழந்தைகளையும் அந்தக் குழந்தைகள் போல போஷாக்காக உருவாக்க முயற்சித்து தோற்றுப்போய், அந்த உணவு நிறுவனங்கள் மேல் கோபப்படுவதற்கு பதில் குழந்தைகள் மீது கோபப்படுவதற்கு நாம் பழகி இருக்கிறோம்.

இதன் விளைவுகள் என்ன?

நம் வீட்டுக்குழந்தைகள் பாதிக்கப்படும்போது நமக்கு அவ்வளவாக உறைப்பதில்லை. அதே போல நடுத்தர அல்லது ஏழை வீட்டுக்குழந்தைகள் பாதிக்கப்படும்போதும் அது நம்மை அவ்வளவாக பாதிப்பதில்லை. ஏனென்றால் அந்தக் குழந்தைகள் நம்மைப் போல சாதாரணமாகவே இருக்கின்றன. நாம் விரும்புவதைப் போல சிவப்பாக, போஷாக்காக இருப்பதில்லை. எனவே அக்குழந்தைகளின் சிரமம் நமக்கு ஒரு பொருட்டாக தெரிவதில்லை.

தமிழக கிராமத்தில் உயர்சாதி குழந்தைகளுக்காக வைத்த குடிநீரை குடித்த குற்றத்திற்காக  பள்ளிச்சிறுமியை அதன் ஆசிரியரே தாக்கி குருடாக்கினால் நாம் பதறுவதில்லை.

ஆந்திராவில் காவல்துறை நடத்திய கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகி இறப்பது ஒரு கொடூரமாக நமது கண்களுக்கு தோன்றுவதில்லை.

நம் வீட்டுக் குழந்தைகளே ஊட்டச்சத்துணவு, முறையான மருத்துவ உதவி கிடைக்காமல் அவதியுறும்போது நமக்கு கோபம் வருவதில்லை. ஆனால் பார்ப்பதற்கு அழகான வசதி படைத்த குழந்தைகளுக்கு இன்னல் ஏற்பட்டால் பதறிப்போய் விடுகிறோம். அந்தக் குழந்தைகளை கொலை செய்ததாக கூறப்படுபவனை காவல்துறையினர் விசாரணையின்றியே கொலை செய்தால் நாம் அதை தீபாவளியாக கொண்டாடுகிறோம்.

அதே நேரம் நமது குழந்தைகளை கொலை செய்பவர்களிடம் இலவச டிவி போன்றவற்றை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு  மீண்டும், மீண்டும் வாக்களித்து பதவியில் தொடர அனுமதிக்கிறோம்.

ஜவஹர்லால் நேருவையும், அப்துல் கலாமையும் கேவலப்படுத்துவது நமது நோக்கமில்லை. ஆனால் அந்த மாபெரும் தலைவர்கள் குழந்தைத் தொழிலாளர்களிடமும், ஏழைக் குழந்தைகளிடமும் ஏன் அன்பாக இல்லை: அந்த குழந்தைகளின் துயரங்களை துடைக்க அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 

ஏனென்றால் இவர்களின் வாரிசுகள் உருவாகி வருகிறார்கள். நானும் ஏழைப்பங்காளன் என்று கட்டடத்தொழிலாளிகளோடு இணைந்து வேலை செய்வதுபோன்ற புகைப்படங்களோடு இவர்கள் அரசியல் அரங்கிற்கு வருகின்றனர். இது போன்ற போலிகளிடம் மீண்டும், மீண்டும் ஏமாறாமல் இருக்க நமது சிந்தனை முறையையே மாற்றி அமைக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். சிந்திப்போமா?

(கடந்த 2010ஆம் ஆண்டு  குழந்தைகள் தினத்துக்காக எழுதப்பட்ட பதிவு. தேவை கருதி மீள்பதிவு செய்யப்படுகிறது)