29 ஜனவரி, 2013

சட்டத்தின் முன் அனைவரும் சமம்!

புதுவை அரசுப் பேருந்து பாண்டிச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. கிழக்கு கடற்கரைச் சாலையில் அந்தப் பேருந்து வந்து கொண்டிருந்தபோது பனையூர் அருகே இளைஞர்கள் சிலர் அந்தப் பேருந்தில் ஏறியுள்ளனர். பயணச்சீட்டு வாங்குவதில் பேருந்தின் நடத்துனருக்கும், சில பயணிகளுக்கும் லேசான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. உடனே பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை நீலாங்கரை காவல் நிலையத்திற்கு செலுத்தியுள்ளார். பேருந்தின் நடத்துனர் காவல்துறை அதிகாரிகளை அணுகி பயணிகள் சிலர் தம்மிடம் தகராறு செய்வதாக புகார் செய்யவே, காவல்துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். பேருந்தின் நடத்துனரிடம் புகார் ஒன்றை எழுதி வாங்கிய காவலர்கள், புகாருக்குள்ளான இளைஞர்களிடமும் மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதி வாங்கியுள்ளனர். பிறகு அந்த இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் இதோடு முடிந்து விட்டதாக அனைவரும் அவரவர் வீடுகளுக்கு திரும்பி விட்டனர். 

இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையோர கிராமம் ஒன்றில் வசிக்கும் ஸ்ரீதர் என்பவருக்கு நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை ஒன்று சென்றுள்ளது. மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், இந்த தற்போது விசாரணைக்கு வருவதாகவும், விசாரணை நாளில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அந்த அழைப்பாணை தெரிவிக்கிறது. 

தற்போது விசாரணை துவங்கியுள்ள இந்த சம்பவம் எப்போது நடந்திருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? அதிகமில்லை ஜென்டில்மேன்! சுமார் 10 ஆண்டுகள். அவ்வளவே!

இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் சுருக்கத்தைப் பார்ப்போம். 

“நான் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டு இருந்தேன். மாலை சுமார் 5 மணியளவில் பனையூர் அருகே வரும்போது பின்னால் பெயர் தெரிந்த ஸ்ரீதர் என்ற பயணி என்னிடம் இரண்டு டிக்கெட் வாங்கியிருந்தார். அவர் மூன்று டிக்கெட் வாங்கியதாக என்னிடம் தகராறு செய்து என்னை வேலை செய்ய விடாமல் தடுத்தும் கையால் என் முகத்தில் அடித்து விட்டார். ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டு என்னிடம் வந்தபோது அவர் பேருந்திலிருந்து இறங்கிவிட்டார்”

இந்தப் புகாரையடுத்து புகாருக்குள்ளானவர்மீது, "பொது ஊழியரை அவரது கடமையிலிருந்து தடுக்க காயம் விளைவித்தல்" என்ற குற்றவியல் பிரிவினை பயன்படுத்தி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் புகார்தாரரான நடத்துனர் புதுவைக்காரர். சாட்சிகளில் ஒருவரான பேருந்து ஓட்டுனரும் புதுவைக்காரர். அந்த பேருந்தில் பயணம் செய்த இருவர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் புதுவைக்காரர். மற்றொருவர் சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர். இவர்கள் யாருக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்ரீதரை அடையாளம் தெரிவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் காவல் நிலையத்தில் அவர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குமூலத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. 

இந்த வழக்கின் விசாரணைக்கு எத்தனை சாட்சிகள் தற்போது நேரில் வருவார்கள் என்பது தெரியவில்லை. இந்த வழக்கின் போக்கு என்னவாகும் என்பதெல்லாம் இருக்கட்டும். 

இந்த வழக்கின் புகார்தாரரான நடத்துனரின் முகத்தில் (சட்ட மொழியில்) எதிரி அடித்து விட்டார் என்று கூறப்பட்டுள்ளது. காயத்தின் தன்மை குறிப்பிடப்படாததால், (இந்த சம்பவம் ஒரு வேளை உண்மையாகவே நடந்திருந்தாலும்கூட) காயம் ஏதும் ஏற்படவில்லை என்று கருதலாம்.

ஒரு வேளை இந்த வழக்கில் நடத்துனரை அடித்தவர் ஏதோ ஆயுதத்தால் தாக்கி, அந்த நடத்துனருக்கு காயமோ, அங்கவீனமோ ஏற்பட்டிருந்தால்கூட வழக்கு இதே வேகத்தில்தான் (சுமார் 10 ஆண்டுகள்) நடைபெறும். அப்படி நடந்தால் புகார்தாரரையும், சாட்சிகளையும் (ஒருவேளை அவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் வந்தால்) புகாருக்கு உள்ளானவரின் வழக்கறிஞர் கேள்விகளால் வறுத்தெடுத்து விடுவார். மேலும் 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் குறித்த நினைவுகளை மீட்டெடுத்து  நீதிமன்றத்தில் சாட்சி சொல்வது யாருக்கும் எளிதல்ல. 

மிகச்சாதாரணமான இந்த வழக்கை நடத்த 10 ஆண்டுகால தாமதம் ஏன்? அரசு வழக்கறிஞர்களுக்கு பஞ்சமா? இல்லை, வழக்கறிஞர்களுக்கே பஞ்சமா? நிச்சயமாக இது காரணமாக இருக்க முடியாது.

எனில் இந்த வழக்கு நடப்பதால் யாருக்கு லாபம்?

இது போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரை, அவர் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்திவிட்டு செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்துவது வழக்கம். அப்போதுதான் காவல்துறையினரின் பணிச்சுமை குறையும். ஆனால் ஒருமுறை குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டுவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் மீது அடுக்கடுக்காக வழக்குகளும் பாயலாம். இதெல்லாம் நடக்காவிட்டால்கூட இந்த வழக்குக்காக குற்றம் சாட்டப்பட்டவர் இழக்கும் நேரமும், பணமும் ஒரு சுமைதான்.

இதெல்லாம் இருக்கட்டும். மேற்கூறப்பட்ட புகாரில் கூறப்பட்ட சம்பவங்கள் உண்மையாகவே இருந்தாலும், இந்த (ஆமை) வேகத்தில் வழக்கு நடந்தால் குறிப்பிட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? அல்லது தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்? இதில் "தாமதமாக வழங்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம்!" என்ற வசன காவியங்கள் வேறு..!

இது ஒரு சிறிய உதாரணம்தான். நாட்டில் நடக்கும் கோடிக்கணக்கான வழக்குகள் இப்படித்தான் நடக்கின்றன.

சாமானியர்களின் வழக்குகள் இப்படி இருக்கையில், ரிலையன்ஸ் அம்பானி போன்ற தொழிலதிபர்களின் குடும்ப சச்சரவுகள் குறித்த வழக்குகளையும், கமலஹாசன் போன்ற திரையுலக பிரபலங்களின் வழக்குகளையும் நமது மாண்புமிகு நீதியரசர்கள் ஓவர்டைம் போட்டு விசாரித்து நீதி வழங்கும்போதுதான் “சட்டத்தின் முன் அனைவரும் சமம்!” என்ற சட்ட முதுமொழி நினைவில் வந்து தொலைக்கிறது..!

2 கருத்துகள்:

bandhu சொன்னது…

All are equal. Some are more equal. what to do?

vimal சொன்னது…

பணம் பாதாளம் வரை பாயும் என்பது இதுதானோ ? வசதியற்றவர்களின் வழக்கு வாதத்திற்கு வரும் ஆனா வராது . வருத்தமளிக்க கூடிய நிகழ்வுதான் .

கருத்துரையிடுக